குழந்தையின் அழுகை நின்றது எப்படி?






மெடர்னிடி லீவு முடிந்து, அன்று ஆபிசுக்குப் புறப்பட்டாள் யசோ.

குழந்தையை எப்படி..?
சுரேஷுக்குக் கோபம் வந்தது. “என் குழந்தையைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியாதாக்கும்! நீ போ! நான் பார்த்துக்கறேன்,” என்று சவடாலாகப் பேசினான்.
வேலைக்குப் புறப்பட்டாள் யசோ. ஆறு வாரமாக வீடும், குழந்தையுமே கதி என்றிருந்தவளுக்கு வேலைக்குப் போகவே என்னவோபோல் இருந்தது.
நான்கு பாட்டில்கள் நிறைய பவுடர் பாலைக் கரைத்துத் தயாராக வைத்துவிட்டுப் புறப்பட்டாள்.
சரியாக இரண்டரை மணி நேரங் கழித்து குழந்தைக்குப் பசி வந்தது. அதன் தலையைச் சிறு தலையணையின்மேல் வைத்து, பாட்டிலை வாயில் வைக்கப் போனான்.
பாட்டிலின் காம்பு உதட்டில் பட்டதுமே நாக்கால் தள்ளிற்று குழந்தை.
சிணுங்கல் அழுகையாக மாறியது.
பால் சூடாக இருக்கவேண்டுமோ, என்னமோ!
பாட்டிலை சுடுநீரில் வைத்துச் சிறிது சூடாக்கினான்.
பலனில்லை. ‘குடிக்க மாட்டேன்’ என்று குழந்தை அடம் பிடித்தது.
கையில் பிடிபடாமல் அழும் குழந்தையைக் குலுக்கியபடி, குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தான்.
‘ஒருவேளை, பால் புளித்திருக்குமோ?’ என்று வேறொரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தான்.
ஊகும். குழந்தை விறைத்துவிடும்போல் அழுதது.
மனைவிக்குப் போன் பண்ணலாமா?
‘என்னமோ பீற்றிக்கொண்டீர்களே!’ என்று கேட்டுவிட்டால்?
திடீரெனப் பொறி தட்டியது.
சிங்கப்பூர் போய்விட்டுத் திரும்பி வந்த தம்பி தட்சிணாமூர்த்தி, ‘அங்கே எக்சிபிஷனில் பார்த்தேன். இந்தா!’ என்று கொண்டு வந்து தந்தானே..
எவர் கண்ணிலாவது பட்டுவிடப் போகிறதே என்று அதை எங்கேயோ ஒளித்து வைத்தோமே, எங்கு?
குழந்தைபாட்டுக்கு ஒரு புறம் அழ, பீரோ, ஸ்டோர் ரூம் எல்லாவற்றையும் குடைந்தபின், இறுதியாகத் தன் பெட்டிக்குள் அதைக் கண்டெடுத்தான்.
ஆ! குழந்தையின் கேவல் சிறிது சிறிதாக மட்டுப்பட்டது. மூச்சு விடும் சத்தம் மட்டும் மெல்லக் கேட்டது.
“என்ன கண்ராவி இது!” திடீரென்று ஆபீசிலிருந்து திரும்பி வந்துவிட்டாள் யசோ!
ஆனால், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சுரேஷ் அப்படி என்னதான் செய்தான்?
விடை:
சிங்கப்பூரில் ஓர் இளைஞர் கண்டுபிடித்த இந்த விசேடமான பிராவை ஆண்கள் மாட்டிக்கொண்டு, `கப்’பில் புட்டிப் பாலை ஊற்றிக் கொள்ளலாம். குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டால், அது தாய்ப்பால் என்றே நினைத்து சமர்த்தாகக் குடிக்கும். ஆதாரம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
– குமுதம்,11-01-1990.