குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 100 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

51 – 60 | 61 – 70 | 71 – 80

61. அமைதி

பரந்த, விரிந்த கண்டம் போன்ற, அமைதியான நாடு. சுபிட்சம் நிறைந்திருந்தது. மக்கள் தொகையோ ஏராளம். ‘அங்கு மட்டும் கடையை விரிக்கச் சந்தர்ப்பம் கிட்டினால்…’ 

வல்லரசு நாட்டிற்கு நாக்கில் நீர் சொட்டிற்று. 

‘உங்கள் நாட்டின் சுபிட்ச வாழ்வுக்கான சமூக உளவி யலை ஆராய வரும் எங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ – என்று கடிதம் அனுப்பியது. 

சில நாட்களின் பின் அந்தக்குழு வந்து போனபின் –

நாட்டில் கலகங்கள் ஆங்காங்கே தோன்றலாயின.

வல்லரசுகளின் ஆயுதங்கள் வெகு வேகமாக கள்ளச் சந் தையில் விற்பனையாகத் தொடங்கின 

62. அடையாளம்

‘கனகசபை அவர்களின் வீடு எது?’

‘கனகசபையா? அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லையே?’ 

‘பெரிய கல்வீடு… மேல்மாடியெல்லாமிருக்கு…’

‘இங்கினேக்க இப்ப எல்லாம் கல்வீடுதான். ஆனா…’.

‘அவர் றோட்டரி சங்கக் கவர்னரும் கூட…’

”றோட்டரியா?… கவர்னரா?… அப்படியெண்டா?…’

‘அவர் போன மாதம் கூட கோயிலொண்டுக்கு மண்டபம் கட்டிவிட்டவர்’

‘இப்ப கோயில்களில திருத்த வேலைகள் நடைபெறுது தான்… அதுகளை ஆர் ஆர் செய்யினம் எண்டு ஆருக்குத் தெரியும்…’ 

‘ரவுணில நாலைஞ்சு கடையளிருக்கு… மொத்த வியா பாரம் … அரிசி… மா…’ 

‘ஓ!… எட! உவன் கல்லரிசிக்காரன் வீடே ? இது தான் தம்பி… போ… நீ ஏதேதோ கேட்க பயந்து போனன்…’ 

63. சுதந்திரம்

அவர்கள் ஊர்சுற்றிகள் சுதந்திரக் காற்றைச் சுத்த மாகச் சுவாசிப்பவர்கள். திறந்த வெளியில் அவர்கள் கூடாரம். 

வானத்தில் வண்ணப்புறாக்கள் வட்டமிட்டன. 

‘ஆஹா! இறக்கைகள் எங்களுக்குமிருந்தால்… சுதந்தி ரத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவிக்கலாம்..’

மத்தியான வேளை, 

‘உணவுக்கு என்ன செய்வது?….’ 

‘துப்பாக்கியை எடு. அந்தப் புறாக்களை…” 

64. வெள்ளெலி

புதியதொரு மருந்து, ஏராளமான பொருட் செலவில் கண்டுபிடிக்கப்பட்டது. 

அற்புதமான மருந்து. நோய் மாறும். ஆனால் – 

பக்க விளைவுகள் காலம் செல்லச் செல்ல பயங்கர நோயாக மாறிவிடும் அபாயமுண்டு. 

அரசாங்கம் தடைசெய்தது. 

கம்பனி வர்த்தக ஏற்றுமதி இலாகா அமைச்சைச் சந்தித்தது. 

வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முதல் கப்பல் மூன்றாம் உலகநாடு நோக்கிச் சென்றது. 

65. ஆகாச இரக்கம்

காரிலிருந்து இறங்கி, காலைத் தடுமாற வைக்கும் நடை பாதை வாசிகளில் இடறி, அசுத்தங்களைக் கண்டு காறித்துப்பி, அருவருத்து ஒதுங்கி, ஆங்கிலத்தில் வசைமாரி பொழிந்து, எஸ்கலேட்டரில் ஏறி ஆகாசக் கடையின் உச்சியை அடைந்து 

ஸ்கொட்ச் விஸ்கியுடன், ஒம்லட்டுடன் அமர்கையில்… கடன் காற்று முகத்திலடித்து போதை ஏற்றுகையில் 

பிளாட்பார வாசிகளின் பசி அவன் கண்ணீரை வர வழைத்தது, 

66. முரண்

தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று புதையுண்ட நகரொன்றைக் கண்டுபிடித்தது. 

‘அதன் அமைப்பு… தொல்பொருட்கள் மூலம் அது ஒரு புனித நகராக இருக்க வேண்டும்… புராதன காலத்திலேயே அது மானிட நாகரிகம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்’ என்ற செய்தியை தினசரிகளுக்கு மிகுந்த பெருமையுடன் வழங்கியிருந்தது. 

அடுத்தநாள் செய்தித் தாளில்… 

அந்தப் பெருமை மிகுந்த தலைப்புச் செய்தியினருகேயே, கட்டமிட்ட இன்னொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது 

‘நேற்றைய இராணுவத் தாக்குதலில் சின்னஞ்சிறு சாயக் கிராமம் ஒன்று முற்றாக சிதையுண்டது.’ 

67. ஜாதி

நண்பளை வலுக்கட்டாயமாக அந்த “ரெஸ்ரோண்ட்”டுக்கு இழுத்துப் போய் ஒரு மேசையில் இடம் பிடித்து ‘பேரரு’க்கும் ‘ஓடர்’ கொடுத்து விட்டு நிமிர்ந்தபோதுதான், முன்னால் மேசையிலிருந்தவனைக் கண்டான். 

‘மச்சான்… வெரி சொரி… எழும்பு… வேறொரு நல்ல ரெஸ்ரோண்டிற்குப் போவம்’ என்றபோது ‘பேரர்’ டிரேயில் போத்தல்களும், கிளாஸ்களும் மோத, ‘உருளைக்கிழங்கு டெவில் பிறைற் எண்ணையில் மின்ன வைத்துப் போக, எல் லாம் நிலை குலைந்துவிட்டது.. 

‘என்னடா விசயம்… இங்க என்ன…?’

‘இல்ல மச்சான்… முன்னால் மேசையில இருந்து குடிக் கிறவன் எங்கட ஊர் குடிமகனின்ர மகன்… அவன் எனக்கு முன்னால சரிசமமாக இருந்து குடிக்கிறது தான்… நாளைக்கு ஊரில போய் என்னால தலைகாட்ட முடியுமே!’ 

‘நீ கொழும்புக்கு வந்தும்.. இவ்வளவு பேரோட பழகி யும் உன்ர பரம்பரைப் புத்தி போகேல்ல. எனக்கு உன்னை நண்பன் என்று சொல்ல வெட்கமாக இருக்கு…’ 

நண்பனின் கண்டிப் பு டனும், சாராயம் உள்ளே போன போதையுடனும் அவன் மௌனமாகி விட்டான். 

நீண்டநேரமாகிவிட்டது. 

எழுந்து எதிர் மேசைக்குப் போனான். 

அவன் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது.

‘ஹாய் பிறதர்…. நான் மிஸ்டர் கனகசபை… கிளாட்டு மீட் யூ… பேரர்! ரூ டிரிங்ஸ் கொண்டு வா… தோழர்’ நான் உம்மட ஊர் தான்… என்னைத் தெரிகிறதா?…’

68. கொடி

ஆறடி உயரப் பட்டம் அழகழகான வண்ணத் தான் களில் வண்ணங்கள். மின்சார வர்ண பல்புகள். 

கொடி ஏற்றப்பட, அது வட்டமடித்து மண்டையை உடைத்துக்கொண்டது. வால் எவ்வளவோ நீண்டும் பயன் இல்லை. 

முச்சை பிழை. 

முச்சைக் கயிறு அடிக்கடி அறுந்து திருத்தித்திருத்தி முண்டும் முடிச்சுமாக… 

கொடி ஏறியது. 

69. உழைப்பு

உழைப்பாளிகள் தேசத்திலிருந்து நாட்டிற்குச் சில தோழர்கள் விஜயம் செய்தனர். 

அரசாங்கம் நாட்டைச் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்திருந்தது. ‘ஏழு மாடி கொண்ட இது பராக்கிரமபாகுவின் ஆயிரம் அறை கொண்ட மாளிகை… இது சத்மல் பிரசதாய… சிகிரியா குன்று ஓவியம்… இன்று முனியா சிற்பங்கள் இது தாதுசேனன் கட்டிய குளம்… மகாசேனன் கட்டிய கால்வாய்… பராக்கிரமபாகு கட்டிய நீர்த் தேக்கம்” என்று காட்டிக் கொண்டு போனான் வழிகாட்டி. 

வந்தவர்கள் கேட்டார்கள். 

“எல்லாம் சரிதான்… இப்ப நீங்கள் கட்டிய குளம்.. கால்வாய் ஏதாவது இருந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் 
வாகனத்தைத் தங்குமிடம் திருப்புங்கள்” 

வாகனம் திரும்பியது. 

70. சர்வாதிகாரிகள்

சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. 

சர்வாதிகாரி ஏராளமான பணத்தை தங்கம், வைரம் ஆடம்பரப் பொருட்களாக… கலைப்பொருட்களாக மாற்றி அந்நிய நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பித் தப்பிவிட்டிருந்தான். 

நாட்டை மீட்ட மக்கள் அந்நிய நாட்டுடன் போராடி, அந்தச் செல்வங்களை மீட்டுவந்து ஒரு ‘அரும் பொருட்காட்சிக் கூடம்’ அமைத்தனர். 

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்துச் சென்றனர். ஒரு நாள் பாடசாலைச் சிறுவர்கள் அந்த இடத்திற்கு வந் தனர். எல்லாவற்றையும் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு வியப்புக்குப் பதிலாக ஆச்சரியமே ஏற்பட்டது. 

‘முன்னைய ஆட்சியிலும் இந்தச் செல்வங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. இந்நாள் ஆட்சியிலும் அப்படியே..’

‘யாரது மக்களாட்சியைப் பற்றி முணுமுணுப்பது!’ என்று கடுமையான குரல் ஒன்று எழுந்தது. 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *