குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 102 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

41 – 50 | 51 – 60 | 61 – 70

51. உண்மை

பாரபட்ச ஆட்சி. பிரிவினை உணர்வைத் தோற்றுவித்தது. 

‘அவர்களுக்கு நாடேது? எல்லாம் எம்மவருக்கே க சொந்தம். ஓரடி நிலம் கூடக் கொடுக்க முடியாது’ – என்று கொக்கரித்தார் அந்த மாண்பு மிகு. 

‘நாட்டில் இனக் கலவரம் தோன்றிவிட்டது. அவர் களை நம்மவர்கள் கண்டகண்ட இடங்களில் வெட்டிக் கொலை, கொள்ளை, தீவைப்பு செய்கிறார்கள். அவர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு எல்லாப் பாதைகளும் தகர்ந்து போயின…’ – தகவல் வந்தது. 

‘நன்று. நன்று. போரென்றால் போர். சமாதான மென்றால் சமாதானம்…’ – என்று மகிழ்ந்தார். 

‘ஆனால் உலக நாடுகள் இந்த இனப்படுகொலையைப் பற்றிக் கேள்வி கேட்டால்?… அவை போராயுதங்களையும் பிற உதவிகளையும் வழங்க மறுத்துவிட்டால்…’ 

‘ஆமாம்… ஆமாம். உண்மை… உண்மை. அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அழிக்கவேண்டும். மிஞ்சியவர் களைப் பத்திரமாகப் பாதுகாத்து, கப்பல் மூலம் அவர்கள் பகு தி்க்கு அனுப்பிவிடு…!’ – என்று கூறிச் சாய்மனையில் சாய்ந்தார். 

52. இரத்த அட்டை

தொழிலாளியின் காலிலேறிய அட்டை, வலியோ சப் தமோ அற்று வேகம் வேகமாக இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. 

முகத்தில் எரிச்சல், கோபம் தோன்ற மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இரத்தம் கொதித்தது. 

அவன் தோல்வி கண்டதாக எண்ணிய அட்டை வெற்றிக் களிப்புடன் மேலும் உறிஞ்ச உறிஞ்ச… 

‘படீர்!’

இரத்தத்துளிகள் சிதற அட்டை உருவழிந்தது. 

53. பயன்

விடை காண முடியாததாக விவாதம் வளர்ந்து கொண்டிருந்தது. 

‘எழுத்தால் என்ன பயன்? அதனால் யாராவது திருந் தீயிருக்கிறார்களா? திருந்தி இருந்தால் உலகில் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள், பசி, பட்டினி, வறுமை, ஏகாதி பத்தியங்கள் என்றோ இல்லாதழிந்திருக்கும் அல்லவா?’ 

அந்த விவாதத்தை நீண்ட நேரமாகக் கேட்டுக் கொண் டிருந்த ஒருவர் எழுந்து கூறினார் : 

”எழுத்தால் யார் திருந்துகிறார்களோ, இல்லையோ? எழுதுபவன் திருந்துகிறான். புத்தன்,யேசு, காந்தியால் மக்கள் திருந்தினார்களோ இல்லையோ, அவர்கள் திருந்தி னார்கள். மகான்களானார்கள் சொந்த முதுகின் தூசிகளைத் தட்டுவது தான் எழுத்தின் பயன்.’ 

விவாதகாரர் தம் சிந்தனை வழிகளைப் பற்றிச் சுய விமர்சனம் செய்யவேண்டுமேயென அயர்ந்தனர். 

54. கலையும் வயிறும்

காலைவேளை. விறாந்தையில் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். 

முன்னால் எலுமிச்சை பூத்துச் சிலிர்த்திருந்தது. 

சிட்டுக் குருவிகளும், பிலாக்கொட்டைக் கு ரு விகளும், கரிச்சான் குருவிகளுமாக ஒரே கிலுகிலுப்பு. கிளைக்குக் கிளை தாவுவதும், மண்ணில் குதிப்பதும், சொண்டினால் கிளறுவ தும்… மீண்டும் மரத்திற்குத் தாவுவதும்… தேடுவதும்… 

அவர் பரவசத்திலாழ்ந்திருந்தார். 

‘இயற்கை… அழகு… கலை…’

குழந்தை படீரெனக் கேட்டது 

‘அப்பா… குருவி அரிசி போட்டா சாப்பிடுமா…?’

குழந்தை ஏனோ கேட்டது. 

அப்பாவின் பரவசம் கலைந்து, நிதர்சனம் உதயமாக முகத்தில் கவலை ரேகைகள் படரலாயின. 

55. தரிசனம்

வயோதிபம் அவள் உடலில் தளர்ச்சியைத் தந்திருந் தது. பார்வை கிடையாது. செவிகள் அடைத்துப் போயின. நாக்குகள் தடம் புரண்டு மிகச் சிரமத்துடன் உருவழிந்த சொற்களைச் சிந்தும். எதிர்நின்று பேசுபவரின் உதடுகளில் தனது சுட்டு விரலை வைத்து, அவற்றின் அசைவினாலே பேச் சின் பொருளைப் புரிந்துகொள்வாள். 

ஆனாலும் பிடிவாதமாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலய பூஜைப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்து போவாள். 

எல்லோருமே வியந்து போவார்கள். 

ஒருநாள் உபதேசியாரே அவள் முன் வந்து நின்று கேட்டார்:  

‘தாயே! உனக்கு கண்ணால் எதனையும் பார்க்க முடி யாது. காதால் கேட்க முடியாது. ஆண்டவனின் திருநாமத் தைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியது. ஏன்? இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதனைக் கூடப் புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க நீ தவறாது இங்கே வருவதன் அர்த்தம் என்ன ?…’

‘கடவுளின் சந்நிதியில் நிற்கிறேன் என்ற நினைப்பும், அவன் புகழ் பாடப்படுகின்ற எண்ணமும், அந்த எண்ணத் தில் பிறக்கும் உதடுகளின் அசைவும் – எனக்கு விழிகளாக, சொற்களாக, குரல்களாகின்றன” எனப் பதில் சொன்னாள். 

உபதேசியார், புதிய பக்தி மார்க்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில் பிரமித்துப் போய் நின்றார். 

56. செர்னோபில்

சிவன் உணர்ச்சி மயமானவன். அனற்பிழம்பு. 

அவனே- 

தன்முன் தவக் கனலாகக் கொழுந்துவிட்டெரியும் அந்த அசுரனைக் கண்டு மனம் கசிந்து போனான். 

‘அன்பனே! நீ வேண்டும் வரம் யாது?’ 

‘சுவாமி! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்பமாகி விடவேண்டும்.’

‘தந்தோம் வரம்!’

‘சுவாமி… உன் வரத்தை உன் தலையிலேயே கை வைத்துப் பரீட்சிக்க…’ 

சிவன் ஓடத் தொடங்கினான். 

மக்கள் சிதறத் தொடங்கினர் 

57. ஏகமனம்

முப்பத்தாறு மணித்தியாலங்கன் தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் பின்பாதி, அங்கத்தவர்கள் செயற்குழுக் கூட் டத்தினின்றும் வெளிநடப்புச் செய்தபின்-

அடுத்த நாள் காலை. வானொலி அறிவித்தது: 

‘நேற்றைய விவாத முடிவில் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.’ 

58. தீர்ப்புகள்

நீண்ட நாட்களின் பின் நரியின் ஆசை நிறைவேறியது.

அதன் வாயில் சேவற்குஞ்சு ஒன்று படபடத்தது. 

சேவல் ஓடி வந்தது. 

‘அநியாயம்! அநியாயம்… கொலை செய்வது அக்கிரமம். என் குஞ்சு உனக்கு என்ன கெடுதல் செய்தது?’

‘எனக்கொரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் என் வயிற்றுப்பசிக்கு அதுதானே ஆகாரம். இறைவன் படைப்பில் இதுதானே நியதி.’

சேவல் மௌனமாகியது. 

நரித் தோலுக்காக வேடன் விரித்த வலையில் அது மாட்டிவது. 

‘என்னைக் கொல்லாதே!’ நரி கெஞ்சியது. 

‘எனக்கு உடையும் நீ… உணவும் நீ… எல்லாம் உன்னைக் கொன்றால் தான் எனக்குக் கிடைக்கும்…’

‘உலகில் அஹிம்சையே கிடையாது. கொலைகார உலகம் இது’ என்று நரி அலறியது. 

59. புலமைப்பரிசில்

மூன்றாம் அகில நாடுகளில் ஒன்று அது. 

இயற்கைவளம் அங்கு நிறைந்திருந்த பொழுதும், அங்குள்ள குறைபாடு போதிய கல்வியின்மையே. இதனால் அங்கு உழைப்பு, உற்பத்தி. சேமிப்பு, தொழில் வாய்ப்பு, மூலதனம் என்பன அறவே ஏற்படாதுபோக நித்திய வறுமையே நிலவியது.

இதனைப் போக்க அந்த நாட்டு அரசாங்கம், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகையைக் கல்வி வளர்ச்சிக்கென ஒதுக்கியது. 

நாட்டில் மக்கள் நன்கு கல்விகற்கத் தொடங்கினர். ஓரளவு முன்னேற்றமும் தென்படலாயிற்று அது 

முதலாம் அகில நாட்டின் கண்ணை உறுத்தியது 

‘அந்த நாடு இப்படியே வளர்ச்சிபெறுமானால், அந்நாட் டிலிருந்து நாம் மிகமிகக் குறைந்த விலைக்குப் பெறும் மூலப் பொருட்களை இழந்து விடுவோமே!’ – இதற்கு என்ன வழி? யோசித்தது. 

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தது. 

‘மேலதிகப் பட்டப்படிப்பிற்கும்… உயர் கல்விக்கும்… அறிவியல் ஆய்விற்கும் நாம் புலமைப்பரிசில்கள் வழங்குகிறோம்!’ – என அறிவித்தது. 

வறிய நாட்டிற்குப் பெருமகிழ்ச்சி, வளர்ச்சி பெற்ற நாட் டிலே பெறும் அறிவு தாய் நாட்டை வளர்க்கப் பெரும் உதவி, புரியும் என எண்ணியது. 

தன் நாட்டில் மேதைகளாக வரும் அறிகுறி கொண்டோ ரைத் தெரிந்து முதலாம் அகில நாட்டிற்கு அனுப்பியது. 

ஆனால்- 

அங்கு சென்ற திறம் மேதைகளின் ஆய்வுகளனைத்தும், முதலாம் அகில நாடுகளின் பொருளாதார, வைத்திய, தொழி னுட்ப மருத்துவ – அறிவியல் சார்ந்தனவாகவேயிருந்தன. 

வறிய நாடோ மேலும் மேலும் அடிப்படைக் கல்விக்கு தனது செல்வத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது. 

60. பாசம்

பிள்ளைகளை நன்றாகத்தான் வளர் த்துப், படிப்பித்து ஆளாக்கி விட்டார். 

என்ன பயன்? 

வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர்.

அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினார். 

ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றான். 

‘என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக…’.. தந்தைக்குப் பெருமகிழ்ச்சி. 

சதை ஆடுகிறதா ? 

‘கொஞ்சம் பொறுங்களப்பா…இதோ வருகிறேன்’ என்று எங்கோ விரைந்தான். 

அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி… 

‘இந்தாருங்கள் அப்பா!’

அவர் கனவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம்புதிய திருவோடு காட்தியளித்தது. 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *