குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 107 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 20 | 21 – 30 | 31 – 40

21. விக்கிரகங்கள்

விக்கிரக வழிபாடு மனிதனை மந்தையாக்குகிறது’ என்ற குரல் எழுந்தது. 

விக்கிரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது. 

மக்களிடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களரி. 

இரத்த வெள்ளத்தில் – புரட்சி வென்றபின், 

புரட்சித் தலைவர்களே 

விக்கிரகங்களாக 

வீற்றிருக்கக் கண்டனர்! 

22. கோபுரக்கூடு

சிட்டுக் குருவி ஒன்று தன் கூட்டை அழகு படுத்திக் கொண்டிருந்தது. 

அதனைக் கண்டு மனிதன் சிரித்தான். 

‘குருவி கூடு கட்ட வேண்டுமேயொழிய, பெரிய கோபுரம் கட்ட முயலக் கூடாது.’ 

‘ஏன்?’ 

‘உன்னால் அது முடியாது…’

‘பார்க்கிறாயா?… முயற்சியால் முடியாதது, மதியால் இய லாதது எதுவுமேயுல்லை… பந்தயம் கட்டுகிறாயா?’ என்றது குருவி. 

மனிதன் சவாலை ஏற்றான். 

அவன் மீண்டும் அவ்விடம் வந்தபோது 

சிட்டுக் குருவியின் கூடு கோபுர நுனியில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது. 

23. வினா

‘உப்பு நீரில் பயிர்கள் விளையா!’ என்று புத்தகப் பூச்சி யான ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார். 

உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்துக் கேட்டான்: 

‘உப்பு நீரில் பயிர் விளையாதென்றால், விவசாயியின் வியர்வை யில் உப்பு இல்லையா?’ 

ஆசிரியர் மோசனையில் ஆழ்ந்தார். 

‘சிந்திக்க வேண்டிய கேள்வி?’- வழுக்கையை கை தடவி விட்டுக்கொண்டது. 

24. வியர்வைச் சித்திரங்கள்

எழிலார்ந்த கலா மண்டபம். 

உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம். உழைப்பின் உயிரோவியம். 

சிற்பிகளின் உளிகள் தூண்களை கலையாக்கியிருந்தன. 

ஓவியர்களின் தூரிகைகள் சுவர்களை இயற்கையால் திரை யிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தி யாகவில்லை. 

சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார் வையிட்டவாறு சென்றுகொண்டிருந்தார், அவர் அழகு மகள் – சின்னஞ் சிறுமியும் துள்ளிக் குதித்தவாறு அவரு டன் வந்துகொண்டிருந்தாள். 

திடீரென அவள் வேகம் தடைப்பட்டது. 

“அப்பா… அப்பா… அந்தச் சித்திரங்கள்தான் எல்லா வற்றையும் விட அழகாக இருக்கின்றன இல்லையாப்பா…?” என்றாள். 

பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் மார்த்தார். 

அங்கே- 

கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து.. வியர்வைக் கறை ஏறி…ஏறி… படர்ந்து விரிந்து… 

இன்னதென்று விளக்க முடியாத ஓவியம் போல் மின்னியது. 

25. தானவிழிகள்

உலக சுகாதார நிறுவனம் விழிப்புலனற்றோர் குறை யைப் போக்குமாறு உலக நாடுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டது. 

கருணை உள்ளம் கொண்ட அந்த நாடு ஏராளமான விழி களை அனுப்பி வைத்தது. 

உலகெங்கும் பெரும் பாராட்டு. 

‘உங்கள் நாட்டு மக்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள். தாங்கள் இறந்த பின் தம் கண்களைத் தானம் செய்யும் பண்பு கொண்டவர்கள்’ 

‘என்ன? தானமா? நல்ல கதை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொலை செய்து கண்களைப் பிடுங்கி அனுப்ப பாராட்டு அவர்களுக்கா?’

ஆட்சியாளர் பொருமினர். 

26. சட்டமறுப்பு

ரயில் ஓடிக்கொண்டிருந்தது, 

இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்துகொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். 

திடீரென ஒருவன் சொன்னான்; ‘மச்சான் நானும் இப்போ சட்டமறுப்பில் தான் இருக்கிறேன்’. 

‘என்ன சொல்லுகிறாய்?…’ 

‘ரெயிலுக்கு டிக்கட் எடுக்கேல்ல மச்சான் !…..’ 

27. பொருள் – ஆதாரம்

திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் கேட்டாள். 

‘ம்… ம்…உங்களுக்கு என்னைவிட பணம்தானே பெரிசாப் போச்சு… இல்லாட்டி வீட்டாற்றை பேச்சைக் கேட்டு இப்படித் தயங்குவியளா?’ 

அவன் உற்றார், பெற்றோரைப் பகைத்து, அவள் கரம் பற்றிய சில நாளில் அவன் மீண்டும் கேட்டாள் 

‘இஞ்சருங்கோ… நீங்களும் இருக்கிறியளே ஆம்பிளை யெண்டு! உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிழூர்… நீங்கள் எண்டால் வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கிடக்கிறியள்…’ 

அவன் கேட்டான் 

‘அப்படியெண்டா… உமக்கு என்னைவிட பணம்தான் பெரிசாப்போச்சு…’ 

அவள் பதில் தயங்காமல் வந்தது. 

‘பணமில்லாமல்… எப்படி வாழுறது… பணமிருந்தாத் தான் நீங்களும்… நானும்… அதுக்குப் பிறகு தான் மற்ற தெல்லாம்… விசர்க்கதைகளை விட்டுப்போட்டு ஏதும் சம்பாதிக்கப் பாருங்க…’ 

28. முதலைகள்

பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன. 

ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி சென்று தேர்தல் நன் கொடை கேட்டது. 

முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடை யாக வழங்கினார். 

சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது. 

அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடை வழங்கினார். 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான். ‘அப்பா! இப்போது வந்தவர்கள் பதவிக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?’ 

‘ஆமாம், மகனே!’

‘அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவினீர்கள்?’

‘அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிச், சலுகை பெறலாம் அல்லவா?’ 

‘அதுசரி… முதல் கட்சியினருக்கு உதவாமல் விடலாமே?’

‘தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே?’

‘இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா?’

‘இல்லை மகனே இல்லை. நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்து…… நாம் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழப் பழகவேண் டும் புரிகிறத….?’
 
‘புரிந்தது’. 

29. பொன்னாடு

உலகெங்கும் சுற்றிப் பறந்து, களைத்துத் திரும்பி வந்து கிளைகளில் அக் காக்கைகள் அமர்ந்து கொண்டன. 

“அற்புதமான உலக மாத்திரை. எத்தனை நாடு. எத்தனை மனிதர். எத்தனை காட்சிகள்… ஆஹா…’ ஒரு காக்கை வியந்துகொண்டது. 

‘ஆனாலும், எல்லா நாடுகளையும் விட என் தாய் நாடுதான் மிக உயர்ந்தது’ என்றது மற்றக் காக்கை. 

‘எப்படி?’ 

‘எங்கள் நாட்டில் தானே நாளுக்கு நாள் அகதிகள் முகரம்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஈரநெஞ்சம் கொண்ட ஆட்சியல்லவா?’- என்றது மறு காக்கை. 

‘உண்மைதான்!’ என்றபடி கா…கா… கா… கா என  உலகெலாம் பறையடிக்க சிறகடித்தவாறு வானில் பறக்கத் தொடங்கியது. 

30. பரிணாமம்

தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறுவது, தொழிலாளர்களின் உயிர் மூச்சா? 

மூச்சிழந்த தொழிலாளிகளின் உடல்கள் வற்றலாயின. வயிறு ஒட்டியுலர= 

முதலாளி பஞ்சுத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் சாய்க்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்க 

தொழிலாளர்கள் புரட்சிக்காரர்கள் ஆயினர். 

அமைப்பு மாறியது. 

வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலை ஏகினர் புரட்சியின் புதல்வர்கள். அங்கே- 

முதலாளித்துவம், பதவியதிகாரமாய், 

அதிகாரிகளின் வடிவில், 

காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர். 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *