குருவே சரணம்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 1,553
முரளிக்கு ஒரு பெரிய பொறியாளராக வேண்டும் என்பதுதான் ஆசை. குடும்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்த போதிலும் தட்டுத் தடுமாறி கல்லூரிப் படிப்பினை முடித்து வேலை தேட ஆரம்பித்தான். பல தொழிற்சாலை வாயிற்படியை மிதித்ததுதான் அவன் வாழ்க்கையில் செய்த சாதனை.
ஆனால் நேர்காணலுக்குச் சென்ற இடங்களிலெல்லாம் பிறகு பார்க்கலாம் என்ற வார்த்தைகள்தான் அவன் காதில் விழுந்தன. வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது. எத்தனை நாள்தான் வேலையில்லாமல் திண்டாடுவது என்று சோர்ந்து போனான்.
மனம் நொந்துபோன முரளி வாகனத்தை ஓட்டிக் கொண்டு கண் போன போக்கிலே சென்றான். அப்போது வெயிலின் காரணமாக ஓய்வெடுக்க எண்ணி வழியில் தென்பட்ட ஆலமரத்தடியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான். அந்த மரத்தடியில் ஒரு துறவி தவம் செய்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் அவரிடம் தம் குறைகளைச் சொல்லி நிவர்த்தி தேடலாம் என்று அவன் உள்மனம் கூறியது. உடனே அந்தத் துறவி தியானம் முடியும்வரைக் காத்திருந்து பிறகு அவரை வணங்கி தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை நான் என்ன செய்யட்டும் ஆலோசனைக் கூறுங்கள் என்றான்.
துறவி, என்ன சரியான வேலையா அது என்ன? என்றார். ஐயா நான் பொறியாளராக பணிபுரிய ஆசைப்படுகின்றேன். எனக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என்றான். துறவி அவனைப் பார்த்து, அது சரி ஏதாவது கம்பனிக்கு மனு போட்டுள்ளாயா என்றார். ஆமாம் ஐயா பல கம்பனிகளுக்கு மனு போட்டுள்ளேன், பல இடங்களில் நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன் ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை என்றான்.
துறவி அவனைப் பார்த்து பக்கத்திலிருக்கும் காட்டிற்குச் செல். அங்கு உள்ள கோவிலுக்குப் பக்கத்திலிருக்கும் மரங்களில் குருவிகள் கூடு கட்டியிருப்பதைப் பார்க்கலாம். பல குருவிகள் கூடு கட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். அங்கு சென்று கூடு கட்டுகின்ற ஒரு குருவியின் கூட்டினை கலைத்து விடு. இவ்வாறு 10 நாட்கள் சென்ற பிறகு என்னிடம் வா என்று கூறி அனுப்பினார்.
இது என்னடா வம்பாப் போச்சு என்று எண்ணிய முரளி சரி துறவி சொல்வதில் அர்த்தம் இருக்கும் செய்து தான் பார்ப்போமே என்று எண்ணி அடுத்த நாள் அந்தக் காட்டிற்குச் சென்று ஒரு பறவை மரத்தில் கூடு கட்டுவதைப் பார்த்து அதைக் கலைத்து விட்டான். அந்த பறவை எங்கோ பறந்து சென்று விட்டது.
அடுத்த நாள் அங்கு சென்று பார்த்த போது நேற்றைய தினத்தை விட இன்று அங்கு ஒரு கூடு கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தது. இவன் வந்ததைப் பார்த்த பறவையும் விடாமல் கூடு கட்டிக் கொண்டிருந்தது. இவனுக்கு ஒரே ஆச்சரியம். நீயா நானா பார்த்து விடுவோம் என்று அன்றைக்கும் கூண்டினை அழித்து விட்டான்.
இப்படியாக பத்து நாட்கள் கடந்தன. ஆனால் அந்தக் குருவி கூடு கட்டுவதை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து தினமும் கட்டிக் கொண்டேயிருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த முரளி இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று துறவியிடம் சென்று வணங்கி நின்றான்.
துறவி அவனைப் பார்த்து புன்னகைத்து என்ன நான் சொன்னது போலச் சென்றாயா? செய்தாயா? என்று கேட்டார். முரளி நடந்த விவரங்களைக் கூறினான்.
ஒரு குருவிக்கு இருக்கும் விடா முயற்சி ஏன் உன்னிடம் இல்லை. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லையே. நேர்காணலுக்குப் பலமுறைச் சென்றதாகக் கூறினாய். ஆனால் அங்கு சென்று வந்த பிறது ஏன் அவர்கள் உன்னை தேர்வு செய்யவில்லை என்று சிந்தித்துப் பார்த்தாயா? உன்னிடம் என்ன குறை இருக்கின்றது என்று சீர்தூக்கிப் பார்த்தாயா. பார்த்திருக்க மாட்டாய்
ஏனென்றால் நான் அதிகம் படித்தவன். எனக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது என்ற எண்ணம் மட்டுமே உன்னிடம் இருந்தது. எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ, முயற்சி திருவினையாக்கும் என்ற எண்ணமோ உன்னிடம் துளிகூட இல்லை. அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை.
நீ என்னதான் குருவிக் கூண்டினைப் பிய்த்துப் போட்டாலும் நான் கூடு கட்டிதான் தீர்வேன் என்று கூடு கட்டிய குருவியின் விடாமுயற்சி உன்னிடம் துளிகூட இல்லை என்பதை புரிந்து நடந்து கொள். நேர்காணலில் நிர்வாகம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்றவாறு உன்னைத் தயார் படத்திக்கொள். கிடைக்கின்ற வேலையை உடனே பற்றிக் கொண்டு வேலை செய். பிறகு எல்லாம் தானாக வந்து சேரும் என்று கூறி அறிவுரைக் கூறி அனுப்பினார்
தன் தவற்றினை உணர்ந்த முரளி துறவி சொன்னது போலச் செய்து கிடைத்த வேலையை சரியாகச் செய்து முதல் சம்பளம் வாங்கிய கையோடு பழம் பூ குரு தட்சணையோடு துறவியைப் பார்த்து மகிழ்ச்சியோடு குருவே சரணம் என்று அவர் முன் வணங்கி நின்றான்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதை எப்போதும் நம் வாழ்வில் கடைபிடிப்போம். கடந்த ஆண்டு நாம் சந்தித்த பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்த்து தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்த்து, இந்த ஆண்டுச் செய்ய வேண்டியவைகளைத் திட்டமிட்டு தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் செய்து வாழ்வில் எப்போதும் சிறப்பாக வாழ்வோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |