கதையாசிரியர்:
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 507 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நமது முன்னோர் பேணிக் காத் துவந்த உன்னதமான பண்புகள் சில இன்று அதல பாதலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கின் றன. ந்த அறநெறிச் சரிவினு டைய ஒரு தோற்றத்தைக் குருகு லம் கோடிட்டுக் காட்டுகி றது கதையின் முள்ளந்தண்டு கயிலைச் சட்டம்பியார்; அவர் இலட்சிய மலையாக கம்பீர்யத்துடன் நம்முன் நிற்கிறார்! சந்ததிகளிடையே ஏற் படும் சிந்தனைப் போக்கின் பேதத் தையும் வேகத்தையும் கதைஞர் நுணுக்கமாகக் காட்டுகின்றார். 


கயிலைச் சட்டம்பியாரின் மனம் இப்போது கொஞ்மும் அமைதியாக இல்லை. வெண்கலக்குரலில் கணீரென்று ஆத்மலயிப்போடு எழுகின்ற மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தையும் உச்சரிக்க அவர் நா மறந்துகிடக்கிறது. இருந்தாற்போல திடீரென்று மூப்படைந்துவிட்டதான ஒரு உள்ளுணர்வு அவர் நெஞ்சத்தைப் போட்டு நெருடிக்கொண் டிருக்கிறது. உடலிலே இனம் புரியாத ஒருவகைத் தளர்ச்சி. எதற்கெடுத்தாலும் என்றுமில்லாத சிடுசிடுப்பு. உலகமே சூனியமாகி இருள் கவிந்துகிடப்பதுபோன்ற பிரமை. 

அவர் விழிகளில் இழையோடிக்கொண்டிருக்கும் கனிவும் தீட்சணியமும் மங்கி, சோகம் கப்பிக்கொண்ட பார்வை மயக்கம் வந்து குடிபுகுந்துகொண்டுவிட்டது. 

இன்று அவருக்கிருக்கும் மன நிலையில் எதையெல்லாமோ தவிர்த்துக்கொண்டபோதிலும் தினமும் ஆலயதரிசனம் செய் வதை மாத்திரம் அவரால் ஓதுக்கிவிட முடியவில்லை. எப் படி முடியும்? ஒரு வருடமா! இரண்டு வருடமா! உணர்வு தெரிந்த காலம் முதல் அவர் வாழ்வின் நித்திய கடமையா கிப்போன ஒன்று. அதிலே ஒரு சுகம்; அனுபவபூர்வமான இதம்; குளிர்மையான நிம்மதி; வாழ்க்கையை நெறிப்படுத்து கின்ற ஆகர்ணசக்தி எல்லாமே அவரைப் பொறுத்தவரையில் ஆலயமும் வழிபாடுந்தான். 

இன்றும் சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து நீராடி ஆலயத்துக்குச் சென்று வழிபாட்டை முடித்துக்கொண்டு மளனமாக வீடுதிரும்பி வந்துகொண்டிருந்தார் கயிலைச் சட்டம்பியார். 

“சட்டம்பியார் ஐயாவுக்கு ஏதும் சுகவீனமோ? நல்லா வாடிப்போனியள்.” 

மிகவும் அடக்கமாகப் பரிவோடு வினாவிய குரல் கேட் டுத் திடுக்கிட்டுப்போன கயிலைச்சட்டம்பியார் கால் தரித்துப் பின்னால் திரும்பிப் பார்த்தார். 

இன்றுவரை அவரைப் பார்த்து அநுதாபத்துக்குரிய வராக விசாரித்தவர்கள் யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

“என்ன ஐயா இப்பவும் இளந்தாரிபோல இருக்கிறியள்.” என்று அவரைப் பார்த்துப் பலர் நேருக்கு தேர் கேட்டுக் கொண்ட அனுபவந்தான் அவருக்குண்டு. 

அவர்களுக்கெல்லாம் சங்கப் பாடல் ஒன்றை மனத்தில் வைத்துக்கொண்டு பதில் சொல்லுவதற்கு அவர் தவறியதில்லை. 

”எனக்கென்ன… எந்தக் குறையும் வைக்காத மனைவி இருக்கிறாள். என் மனம் அறிந்து நடக்கின்ற மக்கள் இருக்கிறார்கள். நல்ல சுற்றத்தவர்கள் வேறு இருக்கிறார்கள். எனக்கேன் வயது போகப்போகிறது? தலை நரைக்கவும் மாட்டுது. வழுக்கை விழவும் மாட்டுது; பல்லு விழப்போறதுமில்லை. நான் இளந்தாரியாகத்தான் இருப்பேன்.” 

இன்னும் அப்படிச் சொல்லிக்கொள்ள முடியுமா அவ ரால்? எண்பது ஆண்டுகள் வாழ்ந்துகளைத்துப்போன தளர்ச்சியும் சோர்வும் காலத்துக்குக் காலம் அவரை வந்து பீடிக்கா மல், இப்போது எல்லாமே ஒன்று திரண்டு அவரை ஆக்கி ரமித்துக் கொண்டுவிட்டன. 

“யாரது…” கேட்டுக் கொண்டு காலைச்சூரியனின் கதிர் களைத் தடுக்க, கையை நெற்றிமேல் பிடித்துக் கண்களைக் கூசி உன்னித்து நோக்கினார். 

“ஐயாவுக்கு கண்பார்வையும் மங்கிப் போச்சுப் போல கிடக்கு” தோளில் கிடந்த சால்வையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நின்றுகொண்டிருந்த அந்தக் கிழவர் பொக்கை வாய் திறந்து சொன்னார். 

“அட பொன்னையாவே.. வாடா மேனை வா. வாஞ்சை யோடு அந்தக் கிழவரின் தோள்மூட்டைத் தொட்டு ஆதர வாகத்தடவினார் கயிலைச்சட்டம்பியார். அவர் ஸ்பரிசம் பட் டபோது அந்தக் கிழவரின் உடல் புளகாங்கிதத்தால் புல்ல நித்தது. 

“அட மேனை உள்னைக் கண்டு கனகாலம். இப்ப எப்படி இருக்கிறாய்!” கயிலைச் சட்டம்பியார் ஆதரவோடு விசாரித்தார். 

“நல்லா இருக்கிறேன்ஐயா.” 

“மக்கள் என்ன செய்கிறார்கள்? பேத்தியின்ரை கல்யாணம் ஒழுங்காகிவிட்டுதே?” 

“அதுவும் சரிவந்திட்டுது ஐயா. வாறமாதம் செய்யலா மெண்டு இருக்கிறம்.” 

“நீ கோயில் குளங்களுக்கு ஒழுங்காகப் போறியோ? என்னட்டைப் படிச்ச நீங்கள் வந்து இதுகளைக் கைவிடக் கூடாது. நீயும் உன் சந்ததியும் நல்லாருக்கிறதைப் பார்ப்பதில்தான் எனக்கு மன நிறைவு. அதுசரி… அவன் சின்னத்தம்பி இப்போ என்ன செய்கிறான்? இப்பவும் குடிக்கிறானா? அவனைப் பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டேன் எனக்கு வெட்கமாக இருக்கிறது. அவனைக் கண்டால் நான் ஒருக்கால் விசாரித்ததாகச் சொல்லு. அப்ப சரி மேனை நான் வரட்டுமே.” முதுகை ஒரு தடவை தடவி விட்டு கயிலைச் சட்டாபியார் திரும்பி நடந்தார். 

சட்டம்பியார் வீடு வந்து சேர்ந்தபோது. அவர் வருகையை எதிர்பார்த்திருப்பதை நித்திய கடமையாகக் கொண்டுள்ள சகதர்மினி சுண்டக் காய்ச்சிய பாலை வெள்ளித் தம்னரில் எடுத்துவந்து அவர் முன்னே வைத்தாள். நடந்துவந்த களைப்புத் தீர கட்டிலில் சாய்ந்துகொண்ட சட்டம்பியாரின் கவனம் பாலில் செல்லவில்லை. அவருடைய புத்திரர்கள் இருவருக்குமிடையே அப்போது நடந்துகொண்டிருந்த விவாதம் அவர் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டது. 

சட்டம்பியாரின் மூத்த மகன் இராமகிருஷ்ணன் பயிற்றப் பட்ட ஒரு தமிழ் சிரியன். அவன் ஒருவன்தான் தன்னுடைய வாரிசு என்ற முடிவுக்குச் சட்டம்பியார் வந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவன்தான் இளையவன் விவேகானந்தன். 

இளையவன் சட்டம்பியாரின் மகன் என்பதை அறியாத சிலர் இராமகிருஷ்ணனின் என்று கேட்பதுமுண்டு. சட்டம்பியாரும் இளையவன் விஷயத்தில் அப்படித்தான் நடந்துகொண்டார். அவனைக் கவனிக்கின்ற பொறுப்புகள் எல்லாவற்றையும் மூத்த வன் இராமகிருஷ்ணனிடமே ஒப்புவித்துவிட்டார். 

இன்று விவேகானந்தன் ஒரு B. A. பட்டதாரி. படிப்பை முடித்துக்கொண்டு சில வருடங்கள் வேலையற்று வீட்டோடு இருந்துவிட்டான். வேறு எல்லாப் பதவிகளுக்கும் அவன் முயன்று பார்த்துக் கைகூடாமற் போகவே இறுதியில் அவனுக்குக் கைகொடுத்தது ஆசிரியப் பதவிதான். மக்கள் இருவருக்கும் ஆசிரியப் பணி கிடைத்ததில் சட்டம்பியாருக்கு மிகுந்த மன நிறைவு. வேறு எந்தப் பதவியையும்விட ஆசிரியனாக இருப்பதில் பெறுகின்ற ஆத்மசுகம் அவருக்கல்லவா தெரியும். 

அந்தப் பேரானந்தத்தை அவருடைய மக்கள் அநுபவிக்கிறார்களா என்றால்… ஏன் இவர்கள் இந்நிலைக்கு வந்துவிட்டார்கள் என்ற சட்டம்பியாரின் தேடலுக்கு அவருடைய புத்திரர்களின் சம்பாஷணையே புதிரை விடுவிக்க ஆரம்பித்தது. 

“நீ எப்படிப் புவியியல் படிப்பிப்பாய்?” 

“நான் ஒரு பட்டதாரி; புவியியல் தந்தார்கள் நான் படிப்பிக்கிறேன்” 

“பட்டதாரி என்றால் என்ன, நீ ஒரு போதும் படிக்காத ஒரு பாடத்தை எப்பிடிப் படிப்பிக்க முடியும்?” 

“அதைப் பற்றி எனக்கென்ன கவலை. படிப்பிக்கச் சொன்னார்கள்… நான் படிப்பிக்கிறேன்.” 

கயிலைச் சட்டம்பியார் உள்ளத்தில் விவேகானந்தன் சொன்ன வார்த்தைகள் சுருக்கென்று தைத்தன. “ஒருவன் தான் கற்காத ஒன்றை மாணவர்களுக்குக் கற்பிக்க, பட்டதாரி என்ற முத்திரை ஒன்றுமட்டும் போதும் என்கிறானே! இது என்ன கொடுமை, என்று நினைந்து வருந்திக்கொண்டு லேசாக அவனைத் திரும்பிப் பார்த்தார். கால்மேல் காலைப் போட்டு அநாயாசமாகச் சிகரெட்டை இழுத்து மேலே ஊதியவண்ணம் தமையனோடு பேசிக்கொண்டிருந்தான் அவன். 

கயிலைச் சட்டம்பியார் சிகரெட்டோ, சுருட்டோ இன்று வரை புகைக்காத ஒருவர், மூத்த மகன் இராமகிருஷ்ணன் சுருட்டுப் புகைக்கிறான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் தேருக்கு நேர் அவர் பார்த்ததில்லை. விவேகானந்தனின் புகையைப் பற்றி மூத்த மகனிடந்தான் ஒரு தினம் சட்டம்பியார் சாடையாகச் சொல்லிப்பார்த்தார். 

“காலம் மாறிப் போய்ச்சுது ஐயா… இதை எல்லாம் நாங்கள் பார்க்கவும் கூடாது” 

மூத்தமகன் இராம்கிருஷ்ணன் வாத்தியாரின் அறிவுரையைக் கேட்டு உள்ளூாச் சிரித்துக் கொண்டு உள்ளடங்கிப் போனார் கயிலைச் சட்டம்பியார். 

ஒருதினம் விவேகானந்தனைத் தேடி அவனுடைய மாணவர்கள் இருவர் சட்டம்பியார் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஹலோ என்று வரவேற்று அழைத்து தனக்கருகே கதிரையில் இருக்கச் செய்தான், அவர்களு டைய உரையாடலில் இருந்துதான் அவர்கள் இருவரும் அவனிடம் படிக்கின்ற உயர்தர வகுப்பு மாணவர்கள் என்பதைச் சட்டம்பியார் உணர்ந்துகொண்டார். 

அவனும் அவர்கள் இருவரும் சேர்ந்து சிகரெட்டுப் புகைக்கின்ற காட்சியைப் பார்த்தபின்னர், தன்னுடைய கண்கள் அவிந்துபோய்விடும் என்ற அச்சத்தால் கண்களை மூடிக்கெண்டார் சட்டம்பியார். 

“எனக்கு, ஆங்கிலம் தந்திருக்கினம்” 

“நாங்கள் தமிழாவது ஒழுங்காகக் கற்றிருக்கிறோம். இவன் ஆங்கிலம் படிப்பிக்கிறானாம். தாய்மொழியைச் சரியாக அறியாதவன் அந்நியமொழியில் மேதை என்று நடிக்கிறான்…” 

சட்டம்பியாரின் மனம் பொறுக்கமாட்டாமல் உள்ளுக்குள் குறுகுறுத்தது. 

“அது சரி. நீ ஒரு பொருளாதாரப் பட்டதாரி; பொருளாதாரமல்லோ படிப்பிக்கவேணும்.” 

”பொருளாதாரம் இப்ப எங்கே படிப்பிக்கினம்… தந்த பாடத்தைப் படிப்பிக்கிறது தான்…” 

“அப்ப சம்பளம் ….!” 

“சம்பளம் என்ன சம்பளம்தானே தாறான்கள்…”

“அதைச் சொல்லவில்லையடா தம்பி. வாங்கிற சம்பளத்துக்குப் படிப்பிக்கவேண்டாமோ!” 

“அதைப்பற்றி எனக்கென்ன கவலை, எனக்குச் சம்பளம் கிடைக்குது; அது போதும்” 

“ச்ச அது பிழை; வாங்கிற சம்பளத்துக்காக வேலை செய்யவேணும்” 

கயிலைச் சட்டம்பியார் கண்களை மூடிக்கொண்டு அவர்கள் உரையாடலை அசை மீட்டார். 

“இளையவன் சம்பளம் கிடைத்தால் மட்டும் போதும் என்கிறான்; மூத்தவன் பெறுகிற சம்பளத்துக்கு மனச் சாட்சிக்குப் பயந்து வேலை செய்யவேண்டும் என்கிறான்; நான் இவற்றுக்காகவா கற்பித்தேன்…? கற்பித்தல் எனக்கொரு தொழிலல்ல; ஆசிரியத்துவந்தான் எனனுடைய வாழ்க்கை; நான் வாழ்ந்துதான் வழிகாட்டினேன். ஆசிரியத்துவம் ஒருவனுடைய தொழிலல்ல; ஒருவனுடைய வாழ்க்கைமுறை.” 

வீட்டுக்கு வெளியே கேட்கும் சயிக்கிளின் மணிஓசை எல்லோரின் கவனத்தையும் திசை திருப்புகிறது. 

“ஆரது… உள்ளுக்கு வா தம்பி…” இராமகிருஷ்ணன் வாத்தியார் தருவைப் பார்த்துக் குரல் கொடுத்தார். 

சயிக்கிளை வெளியே சார்த்திவிட்டு அவருடைய மாணவன் ஒருவன் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். 

“உங்களை எம். பி. வரட்டாம்… உடனே வரச்சொன்னவர்”, 

“சரி நீ போ… நான் இப்ப வாறன்…” 

“அப்ப அண்ணருக்கு அடிச்சிருக்கு அதிஷ்டம்” 

விவேகானந்தன் பகிடியாகவே தமையனைப் பார்த்துச் சொன்னான். 

“என்ன அதிஷ்டம். இப்படி எத்தனை தடவை போய் வந்துவிட்டேன்” 

“அஞ்சு வருஷமாக ஒரு ஹெட்மாஸ்டர் பதவிக்கு ஓடித் திரியிறியள், இன்னும் அஞ்சு வருஷம் ஓடினால் பென்சன் வந்துவிடும். பேசாமல் வீட்டோடைருக்கலாம். இருபத்தேழு வயதிலை நான் எடுக்கிற சம்பளத்தில் பாதி தானே உங்களுக்குக் கிடைக்குது. அதுதான் உந்த யூனிவசிற்றிப் படியிலே சும்மா காலைவைச்சிட்டு வந்தாலும் போதும். எல்லாம் பணந்தானே இந்தக் காலத்திலே.” 

வரை பொறுமையாயிருந்த கயிலைச் சட்டம்பியாரால் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. கண்களைத் திறந்து இருவரையும் ஒருதடவை வெறித்துப் பார்த்தார். இராமகிருஷ்ணனைக் குறிப்பாகப் பார்த்து முறைத்துக் கொண்டு ‘இங்கே வா’ என்று அழைத்தார். 

“நீ இப்போ எங்கே போகப்போகிறாய்?” 

“எம்.பி வீட்டுக்கு” 

“எம்.பி உனக்கு யார்?” 

“எம். பி. தான்; வேறு யார்?” 

“இல்லை. அவன் உன்னிடம் படித்தவனல்லவா…? அவன் உனக்கு ஆள்விட்டு தன் வீட்டுக்கு உன்னைக் கூப்பிடுகிறான்” 

“இதையெல்லாம் பார்த்தால் இந்தக்காலத்திலே ஒரு காரியமும் நடக்காது. நாங்கள் ஏமாந்துபோகவேண்டியது தான்” 

“என்ன சொன்னாய்! ஏமாந்துபோக வேண்டியதுதானோ! யாரடா ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் நாய்களே! போங்க போங்கோ! எலும்புத் துண்டுகளுக்கு ஒடுங்கோ; ஆனால் நான் ஏமாந்துபோய்விடமாட்டேன்.” 

கயிலைச்சட்டம்பியார் விறாப்புடன் எழுந்து வெளியே நடந்தார். 

அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பாலில் இரண்டு ஈக்கள் விழுந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தன. 

– சிரித்திரன், 1975.

– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *