குயிலி
(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் குயலிக்குப் பெருவிழா. மாவட்ட வைத்திசாலைப் பணிப்பாளர் குயிலியினுடைய பெருமைகளை மேடையிலே பேசிக் கொண்டிருக்கிறார். கௌரவம் மிக்க, கருத்துக்களைக் கேட்கக்கூடிய அனேகமானோர் மண்டபத்தில் இருந்ததனால் மண்டபம் அமைதியாகவே இருந்தது.
குயிலிக்கு பொன்னாடையினைப் போர்த்தி பொற்கிளியும் வழங்கப்பட்டது. பதிலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. அந்தச் சபையிலே அவள் மிகவும் இளையவள். அவளால் இரு வார்த்தைகள் கூடப்பேச முடியவில்லை . மிகுந்த கரகோசத்தின் மத்தியிலே அவள் கரகரத்த குரலிலே சபையோரைப் பார்து மிக்க நன்றி என்ற இரு வார்த்தைகளை மட்டும் கூறினாள். அந்த இரு வார்த்தைகள் கூட, பக்கத்தில் இருந்த பணிப்பாளரக்குக் கேட்கவில்லை. குயிலியின் கண்கள் குளங்களாகக் காணப்பட்டன. பொன்னாடையோடு அவள் மேடையிலிருந்து இறங்கும் போது விழுந்து விடமால் இருப்பதற்காக படிக்கட்டுகளின் கைபிடியை இறுக்கமாகவே பற்றியிருந்தாள்.
குயிலிக்கு, 17 வயதுதான். அவளுடைய வீடு அவள் சாதாரண தரப் பரீட்சையுடனேயே கல்வியை நிறுத்திக் கொண்டது. உயர் தர வகுப்பு படிக்கக்கூடிய அறிவு அவளுக்கு நிறையவே இருந்தது. ஆனால் அவள் குடும்பத்தின் நிலையோ அதற்குச் சாதகமாக இருக்க வில்லை. இருந்தாலும் அவளுக்குக் கிடைத்திருந்த ஆசிரிய ஆலோசனைகள் அவளிடம் அர்பணிப்புச் சிந்தனையை வளர்த்திருந்தது. அதனால் அவள் மட்டக்களப்பு அரசாங்க வைத்திய சாலையிலே தொண்டராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டாள்.
ஏனோ தெரியவில்லை எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும். அன்பு ஆதரவு நல்ல பண்பு ஆகியன அவளுக்கு ஒரு நிதானத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வருடமாக குயிலி பயணம் செய்யும் தனியார் வாகனத்தில் அவளுக்கென்றொரு பயணிகளின் இருக்கை நிரந்திரமாகவே வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் பயணிக்கிறாள். அது அவளுக்கு இலவசப் பயணம். அவள் நினைத்திருந்தால் அவளுக்கு வழங்கப்பட்ட அவளது சேவைக்கான அறையிலேயே மட்டக்களப்பில் தங்கியிருக்கலாம். வாழைச்சேனைக்கு அவள் ஏன் வந்து போகிறாள். மன நோயாளியான தன் தாயைப் பார்க்கவா? அல்லது தன்னுடைய சகோதரனைப் பற்றி அயலவர் சொல்லும் சொற்களைக் கேட்கவா? அல்லது தான் பிறந்த இடத்திற்கு மதிப்பளிப்பதற்காகவா? அல்லது இவை முழுவதற்குமாகவா? அவளுக்கே இவற்றுக்கு சரியான விடை கிடைக்கவில்லை.
குயிலியினுடைய தந்தை வெளிநாட்டிலே இருந்து பிணமாகவே அதுவும் சீல் வைத்து மூடப்பட்ட பெட்டியிலே வீட்டுக்கு வந்து சேர்ந்திந்தார். அதைத் தொடர்ந்து அம்மாவின் சுகவீனம். சிறு வயதிலிருந்தே மூத்த இரு அண்ணமார்களின் அட்டகாசம்.
பதினேழு வயதினிலேயே பெரியவர்கள் மத்தியிலே குயிலிக்குப் பொன்னாடை எப்படிக் கிடைத்தது. அன்றொருநாள் நாள் திட்டமிடப்படாத கர்த்தால். வாழைச்சேனையிலே உயிர்களும் உடமைகளும் காவு கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியசாலை நிருமாண வேலைகளைப் பார்ப்பதற்காகச் சுகாதார அமைச்சர் அங்கு வந்திருந்தார். மட்டக்களப்பின் சகல திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. அமைச்சர் புதியவர். இளைஞர். உற்சாகமானவர். மனிதர்களை நேசிப்பவர் ஆனாலும் அவருக்கும் ஒரு பிரச்சினை. அவருடைய இளம் மனைவி அவர் கூடவே எப்போதும் ஒட்டிக் கொள்வார். ஆனாலும் அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி.
அமைச்சரின் முதலாவது குழந்தையின்பிரசவத்தினை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இடம்பெறக் காலம் அனுமதிக்க வைக்கிறது. வைத்தியசாலை பரபரப்பானது. பணிப்பாளர் சீனிய மேற்றனை அழைத்தார். மேற்றனோ குயிலியை அழைத்தார். குயிலியின் கைராசி அந்த வட்டாரத்தில் அவ்வளவு பிரசித்தம்.. அழகிய ஆண்பிள்ளைதான். ஆனால் அது காலால் பிறந்தது. அது ஒரு பிரச்சனை. என்ன பிரச்சனை? ஒரு கால் பிறந்திருந்தது. மறுகால்வயிற்றினுள் மடிந்திருந்தது. சீனிய மேற்றன் குயிலியைத்தான் நம்பினார். அவள் கைராசிக்காரியல்லவா.
அமைச்சர் மனைவியின் தலைமாட்டிலேயே இருந்தார். அவர் முற்போக்கானவர். வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே கணவன்மார் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்பொழுதுதான் ஆண்களுக்கும் வேதனை புரியுமோ என்னவோ? குயிலியினுடைய கைராசி வெற்றியளித்தது விட்டது. அமைச்சரின் மனைவி குயிலியின் கைகளைப் பற்றிக் கொண்டு புன்முறுவல் பூத்தார். குழந்தையை சுத்தப்படுத்துவதற்காக எடுத்துச்சென்றுவிட்டார்கள்.
இப்போது பெற்றோரும் குயிலியும் மாத்திரமே பிரசவ அறையில் இருக்கின்றார்கள். அங்கு ஒரு பிரமித்த நிலை. நமது பஞ்சதந்திரக் கதையிலே புழுகிலே ஏமாந்த காக்கையைப் போல குயிலிருந்தாள். எல்லோரும் அவளைப்புகழ்ந்தார்கள். அதனால் சற்று கற்பனையில் வளர்ந்திருந்த குயிலியோ வெட்டப்பட்ட பொக்குள் கொடியின் மறுபகுதியை மறந்து விட்டாள். அது இப்போது தாய்க்கு நஞ்சாகப்பார்க்கிறது. அமைச்சரின் மனைவியின் உடல் நிறம் சற்று மாறத்தொடங்கியது. முகம் கறுத்து மூச்சு இரைத்தது. சீனிய மேற்றன் அமைச்சரிடம் குழந்தையைக் கொடுப்பதற்காக ஆனந்தமாய் வந்தார். அவரின் பின்னால் அவருடைய படையும் வந்தது.
உள்ளே வந்தவர்கள் வாசலில் வாயடைத்து நின்றார்கள். நோயாளியின் கருவறையில் குயிலி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். மிகவும் நிதானமாக தைரியமாக அவள் செயற்பட்டாள். அந்தச் சம்பவம் சரித்திரமானது. அமைச்சரின் மனைவியின் நிறம் பழைய நிலைக்கு மாறியது. விரைவில் குயிலி நிரந்தர சேவையில் இருக்கப் போகிறாள் அதற்கு முதற்படிதான் இந்தப் பொன்னாடை வைபவம்..
கர்த்தால் முடிந்து விட்டது. களவரங்கள் அடங்கி விட்டன. பொன்னாடையைக் கைப்பையில் வைத்து பொற்கிழியை திறந்து பார்க்காமல் அதனுள் வைத்து குயிலி வீதிக்கு வருகிறாள். ஒரு வருடமாக தன்னைப் பயணிக்க வைத்த அந்தப் பிரத்தியேக வாகனத்தின் ஓட்டுனர் அவள் நினைவுக்கு வருகிறார். அவருக்கே அந்தப் பொற்கிழியைக் கொடுப்பதாக அவள் திட்டம். பத்திரிகையில் அவளுடைய பெரிய புகைப்படம் அமைச்சரின் வாழ்த்துக்கள் வானொலிச் செய்திகள் அமர்க்களப்பட்டன.
மழைஓய்ந்து விட்டாலும் தூவானம் ஓய்வதில்லை என்பது போல வாழைச்சேனைக் கலவரத்தின் காரணமாக அவள் வந்த பஸ்வண்டி கிரானிலேயே அவளை இறக்கி விட்டுத் திரும்பி விட்டது. கல்மடு வீதியால் கல்குடா பாதையை நோக்கி தமிழர்கள் பைசிக்கிளில் செல்கின்றனர். ஒரு பிரதான உற்பத்தியிலே பல உப உற்பத்திகள் உருவாகுவது வழக்கம்.. தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் குயிலியை உற்றுப்பார்க்கிறார்கள். பத்திரிகைகள் வாழைச்சேனைக்கு வந்துசேரவில்லை.. என்றாலும், அவர்கள் வானொலியைக் கேட்டிருப்பார்கள் என அவள் நினைக்கிறாள். வாழைச்சேனையில் நான்கு நாள் மின்சாரம் இல்லை என்பது அவளுக்குத் தெரியாது வேலிக்கு மேலால் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு எட்டி எட்டி அவளை உற்றுப்பார்க்கிறார்கள். அவளுடைய மனதிலே ஒரு பூரிப்பு: அவள் அவளுக்குள்ளாகவே உயர்ந்து செல்கிறாள். அவளின் வீட்டிற்கு இன்னும் அரைக் கிலோமீற்றர்தான் பாக்கி.
அப்பொழுது. அவளின் நண்பி அவளை நோக்கி ஓடி வருகிறாள். அவளுடைய கைகளைப்பற்றி கண்ணீர் சொரிகிறாள். ஆனந்தக்கண்ணீர் இப்படி ஊற்றெடுக்குமா என்று. குயிலி நினைக்கிறாள். மெதுவாக அவர்கள் இருவரும் அசைகின்றார்கள்: 100மீற்றர் தூரம் சென்றிருப்பார்கள். நண்பி சற்றுக் குயிலியை நிறுத்துகிறாள். வீதியின் பக்கத்திலிந்து சற்று, சரிவான பக்கத்திற்கு அழைத்துச்செல்கிறாள். அவளின் குடும்பத்தில் அடுத்த பிரபல்யம்.. அவளின் இரண்டாவது அண்ணா அங்கே குரல்வளை அறுக்கப்பட்டு பாதி முகம் சிதைக்கப்பட்டு கைகால் உடைக்கப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான். நான்கு பேர் வருகின்றார்கள் உடலைத்தூக்கிச் செல்கின்றார்கள். அந்த அண்ணனுக்கு அவளுடைய இறுதிமரியாதையும் அவனுக்கு கிடைக்கப்பட இருக்கின்ற இறுதி அடக்க உடுப்பும் அந்தப் பொன்னாடையே.
– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை