கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 810 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஜன்னலுக்கு வெளியே பார்க்கப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எவ்வளவு நேரந்தான் சரங்கட்டி இறங்குகிற இந்த ஓயா மழையைப் பார்த்திருப்பது? 

லீவை இன்னும் இரண்டு நாட்கள் நீடிப்பது என்ற முந்திய யோசனையை விட்டு, நாளைக்கே புறப்பட்டால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் வலுத்தது ஆனால், கூடவே அங்கும் போய்த்தான் என்னத்தைக் கண்டது என்று உணர் ந்தான். அதே இயந்திரமயமாகிப் போன வாழ்வு…… அஸ்ஸையுங் கடிகாரத்தையுந் துரத்துகிற வாழ்வு, புழுதி, அகை, நெரிசல். 

படியிலிருந்து நீர்க்கோடு இழுத்தபடி திண்ணையில் ஏறி ஊரத்தொடங்கிய அட்டையை, எழுந்து போய்க் காலால் தட்டினான். சுருண்டுபோய் முற்றத்துத் தண்ணீரில் தொளப் பென்று விழுந்தது. 

வருஷத்தில் சராசரி மூன்று தடவைகள் தான் யாழ்ப் பாணம் வரச் சாத்தியப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று கிழமைக்குக் குறையாமல் நின்று, இந்த மண்ணைத் துளித் துளியாய்ச் சுவைக்கிற வேட்கையோடு வருவான். திரும்ப மனம் வராது. இம்முறை போவதேகூட, அடுத்த பயணம் வருவதற்காகத்தானே என்றிருக்கும். 

கொழும்பில் – அந்தக் கொங்கிறீற் காட்டில் இருக்க நேரிடுகிற நாட்களில் எல்லாம் மகாகவியின் பாடல் நினைவுக்குவரும்- 

‘இந்நாளெல்லாம் 
எங்கள் வீட்டுப் 
பொன்னொச்சிச் செடி 
பூத்துச் சொரியும்….’ 

போய்ச் சேர்ந்ததிலிருந்து, திரும்ப, இன்னும் எத்தனை நாட்கள் என்று மனம் தினசரி கணக்கிடும். அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகிற ரயில் பயணங்கள் எப்போதுமே இனிய அநுபவங்கள். 

ஊரில் நிற்கிற நாட்களுக் கென்று தனியான வாழ்வு முறை. ஒன்றிருக்கும் – கொழும்பில் நிர்ப்பந்திக்கப்பட்ட அவதியையும் பரபரப்பைபும் மறக்கிற மாதிரி, காலையில் வளவெல்லாம் சுற்றித்திரிந்து பல்லுத் தீட்டி, அடுப்படியில் குந்தியிருந்து கோப்பி குடித்து – அந்த நாட்கள் வலு ஆறுதலாக ஆரம்பமாகும், கடைக்குப் போய் வருவது, வருகிறவர்களுடன் பேசுவது, தொட்டாட்டு வேலைகள் என்று சாப்பிடப் பத்து மணியாகும். சாப்பிட்ட பின் சைக் கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டால், ஒரு நாளைக்குப் பட்டினப்பக்கம் ஒரு நாளைக்கு மானிப்பாய், ஒரு நாளைக்கு இன்னுமெங்கேயோ என்று போய் வருகிற வேலைகளிருக்கும். வந்து முதல் நாளைக்கு காலும் தொடையும் நோகும். பிறகு, சரி. முந்தியெல்லாம் விடலைப் பருவத்தில், காத்தி,கலைஞன், விக்கி. விஜயன் என்று கோஷ்டி குலையாதிருந்த நேரத்தில் ஒரு நாளைக்குக் குறைந்த பட்ச சரா சரி ஓட்டம் பதினைந்து மைல் என்பது நினைவு வருகிறபோது இந்த நோவு வேதனை தரும். வீடு வர இரண்டு மணியோ, மூன்று மணியோ, அதன் பிறகும் வேலை இருக்கும்-இதைத்தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு என்று. வீட்டில் அவன் இந்த வேலைகளைச் செய்ய வேண்டிய தேவையோ. எதிர் பார்ப்போ இல்லாதிருந்தாலுங்கூட, இவற்றை இழுத்துத் தன்மேல் போட்டுக் கொண்டு செய்வான் – இந்த மண்ணின் காற்றைச் சுவாசிக்கிற வெறியோடு. குளித்துச் சாப்பிட ஆறு மணி யாகும். நிலாக்கால முன்னிரவுகள் முற்றத்தில் கழியும். நிலா வரா ராக்களில், அன்று பகல் சந்தித்திருக்கக் கூடிய ஒரு புத்தகம் அல்லது அண்டை அயல் பெடியங்களுடன் தாயம். கந்தையாண்ணையின் சின்னவன் கண்ணன் நன்றாகட் பாடுவான். 

சைக்கிள் ஓட்டங்கள். யாழ்ப்பாண வாழ்வில் தான் ஒட்டிக் கொண்ட உணர்வை நிச்சயமாக்கும். சைக்கிள் யாழ்ப்பாணத்தின் தேசிய வாகனம் – இந்த மண்ணின் அடையாளம். ஒரு கிணற்றடிப் பனையில் சைக்கிள் ஒன்றைச் சாத்திவைத்துப் படம் பிடித்தால், அந்தப் படம் யாழ்ப் பாணத்தின் முழுமையான ஸிம்பலாக இருக்கும் என்ற எண்ணம் வரும். சீற்றின் கறுப்பு. வேட்டியில் தேயத் தேய, அதன் தலைப்பை இடக்கையால் பிடித்தபடி, தெருத்தாரில் ரயர் ஒட்டிப் பதிய ஒடுகையில் களைப்புத் தெரிவதில்லை. வாயில் வெற்றிலையும், தலையில் யாழ்ப்பாண வெய்யிலும் புழுதியும். சைக்கிள், தெரு, காற்று, புழுதி, வியர்வை மோர், தேத்தண்ணி, சூசியம், வெற்றிலை, புத்தகக்கடைகள் கன நாளைக்குப் பிறகு காணநேர்கிற நண்பர்கள்– 

‘ஆ! எப்ப வந்தது?’ 

வெய்யிலில் காய்ந்து வருகிற அவனைக் காண்கிற அவர்கள் கேட்பார்கள்; 

‘என்ன ஐசே, இந்த வெய்யில் உமக்குச் சுடுகிறதில் லையா?’ சுடுவதில்லைத்தான். 

வெய்யில் தான் என்றில்லை – மழையுங்கூட என்ன குறைந்து போயிற்று? தூறத்தூற முகத்தை நிமிர்த்தி அதில் நனைத்து, தலையைச் சிலுப்பி வழித்து. சைக்கிளை மிதிப்பது சுகம். மழை நின்ற ஐந்து நிமிடங்களில், எதிர்க்காற்றிலோ, அல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிற நேரத்திலோ, அல்லது ஒரு நண்பனை விசாரித்துவிட்டுப் பார்க்கிற போதோ இந்த ஈரம் காய்ந்து விட்டிருக்கும். 

ஆனால், இப்போது என்னாயிற்று – இந்த மழை தன்னைச் சுற்றிமட்டுமே சிணுசிணுத்துக் கொண்டு மீதி உலகத்திலிருந்து தனியே வேலியிட்டுப் பிரிப்பது போல? 

நேற்றுக் காலை தொடங்கிய இந்த மழை பின்னேரங் கொஞ்சங் குறைந்திருந்த போது, கலைஞன் வீட்டுக்குப் போய் விசாரித்துப் பார்த்தான். கலைஞன் வருவதாகத்தான் இருந்தது; ஆனால் வரவில்லை. 

எழுந்து பின் விருந்தைக்கு வந்தான். தாழ்வாரத்துப் பீலியால் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது – அருவி போல. விழுகிற இடத்தில் பள்ளம் விழுத்தி, நுரைத்து வழிகிற தண்ணீர். இந்த நுரைக் குமிழ்களில் இப்போதுங்கூட ஆசை வருகிறது போல இருந்தது. கொப்புளமாய்ப் பொங்கி, அசைந்து ஆடி, ஒன்றன்பின் ஒன்றாய் அல்லது அருகரு காய்ச் சேர்ந்து தழுவிப் பெருத்தும் வெடித்தும் நீரின் வேகமே தம் வேகமாய் அவை நகர்ந்து கொண்டிருந்தன. 

இப்படித்தான் ஒரு மழை நாளில் இந்தக் குமிழ்களைப் பிடிக்கப்போய், தாழ்வாரச் சேற்றில் சறுக்கிக் குண்டியடி புண்ண விழுந்தது ஞாபகம் வந்தது. அது நடந்து இருபது இருபத்திரண்டு வருஷங்கள் இருக்கும், இந்த இருபத்தெட்டு வருடகால வாழ்வின் அர்த்தம் என்னவென யோசித்தபடி, வாரடித்து ஓடுகிற வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந் தான். வெள்ளம், அடிவளவில் சேர்ந்து கொண்டிருந்தது. ஆயிரங்காய்ச்சி மாவடியில் நிற்கிற தண்ணீர் முழங்கா லடிக்கு வரும். மாட்டுக் குடிலினடியில் மாடுகளிரண்டும் குடங்கியபடி தொட்டிலை நெருங்கி நிற்பது தெரிந்தது. 

என்ன செய்வதென்று தெரியாமலேயே அடுப்படிப் பக்கம் போனான். அடுப்படியில் குளிர் தெரியவில்லை. அம்மாவுந் தங்கைகளும் சமையல் மும்முரத்தில் இருந் தார்கள். இந்த மழையாலும் மூட்டங்களாலும் பாதிக்கப்படா தவர்களாக அவர்கள் தெரிந்தார்கள். இப்போதே பகல் சமையல் வேலையைத் தொடங்கிவிட்டார்களா என்ற யோசனை வந்தபோதே, நேரம் பத்துமணிக்கு மேலிருக்கும் என்பதும் நினைவு வந்தது. அடைமழை பிடித்தால் நேரங் கூடத் தெரிகிறதில்லை. காலையில் எழுந்ததிலிருந்து இந்த மூன்று நாலு மணித்தியாலமும் ஒரு வேலையும் செய்யாமலே நாசமாய்ப் போயிருக்கிறது. 

‘தேத்தண்ணி கொஞ்சம் சுடச்சுட வைச்சுத்தரட்டே, அப்பு?’ என்று அம்மா கேட்டதற்கு, 

‘வேண்டாம்’ என்றவன், ‘ நாளைக்குப் பகல் நான் திரும்ப வேணுமெல்லே?’ என்று நினைவு படுத்துபவன் போலச் சொன்னான். 

‘உனக்கென்ன, பைத்தியமே? இந்த மழையுக் கையோ? ……வந்த நீ இன்னும் இரண்டு நாள் லீவைப் போட்டிட்டு நிண்டு ஆறுதலாகப் போறது தானே?’ 

‘இஞ்ச நிண்டுதான் என்ன செய்யிறது?’ 

‘ரெயில்கூட ஓடுதோ, தெரியாது….’

‘அது ஓடுதாம். இஞ்சை யாழ்ப்பாணத்திலைதான் வெள்ளம். மற்ற இடங்களிலை ஒண்டுமில்லையாம்…. ரேடியோ விலை சொன்னாங்கள்……..’ என்றபடி, இப்பால் வந்தான். 

கூடத்தில், முத்தையர் வந்து, ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தார் – ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் போட்ட பேய் வெள்ளத்தில் நந்தாவிலில் கவிழ்ந்து மூழ்கிய குதிரை வண்டியின் கதையைப் பற்றி. 

கலைஞன் பயல் வராமல் விட்டுவிட்டான். அவன் வந்திருந்தால் இந்தப் பயணத்தின் இந்தக் கடைசிநாட்கள் முழுமை கொண்டிருக்கலாம். மற்ற நண்பர்களை விசாரிப்பது தேவையற்றது. அவர்கள் இப்போது வரச் சந்தர்ப்பம் இல்லை என்பது தெரியும். 

எல்லோரையுமே ஊரில் சந்திப்பதானால், அதற்கொரு காலம் இருக்கிறது. வருஷ விடுமுறை. வருஷப்பிறப்பன்று தான் மருதடியிலுந் தேர். ஊரவன் எல்லாம் வருவான்; எங்கிருந்தாலும் வருவான். வருஷப்பிறப்புக்கு ஒரு கிழமை முந்தித் தொடங்குகிற பண்டிகைக் கோலம், வருஷம் பிறந்து அடுத்து வருகிற ஞாயிறுவரை நீடிக்கும். இந்தக் காலத்தில் இன்னமும் ஒரு விசேஷமிருந்தது. 

இப்போதுதான் வசந்தந் தொடங்குகிறது. வேப்பம் பூவும், குயில்களும். 

இந்த மாதிரி – அல்லது இதிலும் சிறப்பான காலமும் வேறொன்று இருக்கிறது அது வைகாசிப் பூரணையை அல்லது ஆனிப் பூரணையை அண்டிவரும். அப்போது அம்மன் கோவில் கோவில் திருவிழா. சோழகம் தொடங்கி விட்டி ருக்கும். ஊர்ப் பனங்கூடல்கள் எல்லாம் ஓவென்று பாடும், ஓயாது. அருகில் எங்கோ சமுத்திரம் மாதிரி. இந்தக் காற்றில் ஏறியும் இறங்கியும் எங்கெங்கிருந்தோ ஒலிக்கிற லவுட்ஸ்பீக் கர்கள். அருகில் கேட்கிறபோது அரியண்டமாய் இருக்கிற பாட்டுகள் கூட தூரத்துக் காற்றில் மனதை ஈர்க்கும். போதாக்குறைக்கு மாம்பழ ஸீஸனும். 

இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் இப்படி இனிக்கும் என்பதால், மற்றச் சந்தர்ப்பங்கள் கசக்கும் என்றில்லை. ஊருக்கு வருகிற எந்தச் சந்தர்ப்பமுமே கசப்பதில்லை. இனிப் பில்தான் வித்தியாசம். 

ஜனவரி முன்னடியில் பனிக்குளிரும் திருவெம்பாவை யும். அரை விழிப்பில் போர்த்துப் புரண்டபடி ரேடியோவில் திருவெம்பாவை கேட்கிற சுகம் – ஒரு மன உறுத்தல் இருந் தாலும் இத்தனை வயதாகியும், எழும்பி முற்றத்திற்கு வந்த வுடன் வாயை விரித்து ஊதி, பனிப்புகை விட்டு ரசிக்கிறது. கொழும்பிலுந்தான் பனி பெய்கிறது. 

பிறகு, பொங்கல். புகையிலை இறைப்பு. அக்கம்பக் கத்துத் தோட்டங்களிலெல்லாம் இரவிரவாக – விடியவிடிய இறைப்பு நடக்கும். மெஷின்களின் ரீங்காரம் தாலாட்டும். பனிப்புகாரில் நீர்த்த நிலவெறிக்கும் இராக்களானால், இன்னும் விசேஷம். அரை விழிப்புடன் புரள்கிற அப்போதும். இன்னொரு குற்ற உணர்வு குறுகுறுக்குந்தான். அம்மா சின்ன வயதில் சொல்கிற கதை ஒன்று நினைவு வரும். ஒரு ராச குமாரனின் கதை, தகப்பன் ராசாவை அவன் கேட்டுப் சாப்பிடப் பெற்ற போகங்கள்: தங்கமாளிகை, ஏவலர்கள், பாலுந் தேனும், படுக்கப் பஞ்சுமெத்தை, விடியற்காலையில் மெஷின் இறைக்கும் சத்தத்தைக் கேட்டபடி தூங்க வேண் டும்…….. அம்மாவின் கற்பனையும் ரசனை உள்ளமும் இப்போது அதிகபட்சம் புரிகிறது. 

இந்த அதிகாலை அரை விழிப்பு சுகங்களில் இன்னும் தூரத்தில் ஒன்று, ஐப்பசி மாதக் குழை வண்டில்கள். எங்கோ குழைவாங்கி வெட்டிக் கட்டிக் கொண்டு விடியற் புறங்களில் வரிசையாகப் போகிற வண்டில்கள். தெருவின் நிசப்தத்தில், சில்லுகளின் லயம் மாறாத (கடக், கடக்’ ஒலி மட்டும் வீடுவரை வந்து தாலாட்டும். ஆனால், முழுதாக அயர்ந்துவிடக்கூடாது. 

முன்னிரவிலும் ஒன்று உண்டு. கார்த்திகை மட்டில்- கெல்லாவில் பனைக்குள் வெள்ளம் சேர்ந்து தெருவரை தளம் புகிற நாட்களில், பொழுது படத் தொடங்குகிற கச்சேரி எப்போது முடியும் என்று தெரியாது. தவளைகளும் வேறேதோ பிராணிகளும் போடுகிற இந்தக் கத்தல் கூடக்கவர்ச்சி தான். 

பனங்கிழங்கு, சித்திரைக் கஞ்சி, சித்திரபுத்திர நாயனார் கதை, ஆலம்பழம், கிளிகளும் மைனாக்களும், ஆடிக் கூழ், நல்லூர்த் திருவிழா, கார்த்திகை விளக்கீடு – இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அழகு இருந்தது: ஒவ்வொரு சுவை இருந்தது. 

ஏன், இந்த அடைமழை நாட்கள் கூட, அர்த்தமும் அழகுங் கொண்டிருந்தவைதாம். இப்படி வெள்ளம் போட்ட ஒரு போதில்-அறுபத்தேழிலாக இருக்க வேண்டும். லாவிலில் மாதக்கணக்கில் வெள்ளம் நின்றபோது, அவன் மூன்று வாரங்களாக மினைக்கெட்டு, ஒரு நாளைக்கு ஒரு வால் பேத்தையாகப் பிடித்து ‘பிறிஸேவ்’ பண்ணி, தவளையின் வளர்ச்சிச் சரித்திரத்தை உருவாக்கி, கல்லூரி ஆய்வு கூடத்திற்குக் கொடுத்தான். 

இன்னொரு வருஷ அடைமழையின் போது அவனும் கலைஞனுமாக கிராமபோன் பெட்டியைத் திருத்தினார்கள். பாட்டா காலத்திய பழைய கிராமபோன் அது. பழுதாகிக் கிடந்தது. அக்குவேறு ஆணிவேறாக அதைக் கழற்றி- ஸ்பிரிங் பொக்ஸில் மட்டும் பிழையிருக்கவில்லை – திருத்தி, புது வார்னிஷும் அடித்து, பாடவைத்தார்கள், 

அதற்கு முதல் ஒரு அடைமழை மூடலில்தான் அவன் பாரதக்கதை முழுவதையும் படித்து முடிக்க முடிந்தது. பெரிய எழுத்துப் பாரதம். தடித்த, சிவத்த மட்டை போட்ட நாலோ, ஐந்தோ பாகம். யாரோ ஒரு நாயக்கர் ஸன்ஸ் வெளியீடு. 

அந்த அறுபத்தேழு வெள்ளத்தில் இன்னொரு முக்கிய மான வேலையும் நடந்தது. இதே மாதிரி, இந்தக் குறிச்சி முழுவதுங் குளங்கட்டித் தேங்கிப் போன வெள்ளத்தை, அவனும் அவன் கூட்டாளிகளுமாகச் சேர்ந்து கான் வெட்டி, கொத்தாவலை நதியில் பாய வைத்தார்கள். கொத்தாவலை நதி, அம்மன் கோவிலடியில் இருந்து வழுக்கையாற்றுக்குப் போகிற வெள்ளவாய்க்கால். ஊர்ப்பெடியன்கள் வாயில் அது நதியாகக் கௌரவம் கொண்டது. கொத்தாவலை அதைத் திறந்து வைத்த பிரமுகரின் பெயர். இந்த வெள்ளத்தை அந்த நதியில் பாயச் செய்யக் கான் வெட்டிய வேலை முழுதாக ஒருநாள் எடுத்தது. கால்மைல் நீளக்கான். 

ஊரோடு இருந்த காலங்களில் ஒவ்வொரு வருஷமும் மழை வெளித்தவுடன் கல்லுண்டாய்த் தப்பாது. வயல் வெள்ளத்தில் வடிவான நிறநிற மீன்களெல்லாம் எங்கிருந்தோ அள்ளுண்டு வரும். போத்தல்களும் பழந் துணிகளுமாகப் போவார்கள். விஜயன் ஒரு தடவை, ஒரு ஆமையைக்கூடப் பிடித்தான், இந்த வெள்ளந் தப்புகிற ஆசை, சின்ன வயசிலேயே தொட்டது. அம்மன் கோவிலடி வெள்ளம். அப்போது ஆறாம் ஏழாம் வகுப்புப் படித்த காலங் களில் இடுப்பு மட்டும் வரும். மற்றவர்கள் அருவருத்து நிற்கையிலுங் கூட, விக்கிப்பயல் புளுகந் தாங்காது, ஒரு தரம் அதற்குள் விழுந்து நீந்தினான். வெள்ளம் கலக்குகிற போது மரத்தடிகளில் வெள்ளம் விளிம்போடு ஒட்டிக் கொண்டு கிடக்கும் நட்டுவக்காலிகளும் நண்டுகளும் மேலெங்கும் குறுகுறுக்கச் செய்யும். வெள்ளத்தில் தவளைக் கல்எறிகிற சம்பியன், காத்தி…….. 

இந்த இவ்வளவு நாள் வாழ்வு, இந்த வேலைகள் – எல் லாம் அர்த்தமற்ற பைத்தியக்காரத்தனங்கள் என இப் போது படுகின்றன இனியும் இதே தடத்திலா என்று நினைக்கிறபோது தயக்கமாகவும் இருந்தது. யோசித்தவாறே கிடந்தான். 

படலையடி வெள்ளத்தில் கால்களை இழுத்து இழுத்து அலம்பியபடி யாரோ வருகிற சத்தங் கேட்டு விழித்தபோது தான், அப்படியே சாய்மனைக் கதிரையில் தான் அயர்ந்து போய்விட்டது புரிந்தது. மழை இப்போது நியாயமாகக் குறைந்திருந்தது. 

சாக்கால் போர்த்திக் கொண்டு, குடையுடன் பொன் னையாம்மான் வந்தார். 

‘எப்பிடியடா தம்பி, வெள்ளம் போதுமே?’ 

ஒன்றும் சொல்லாமல் எழுந்து சிரித்தான். 

‘அங்கை போய்ப் பார், அவன் கந்தையன் வீட்டை- பெரிய பரிதாபம். வீட்டுச்சுவர் ஊறி விழுந்து போச்சு, தலைவாசலுக்கை கிடந்த விதை வெங்காய மெல்லாம் வெள்ளம். 

பாவம் கந்தையாண்ணை, பிள்ளைகுட்டிக்காரன். தான் இப்போது தூங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தச் சுவர் அங்கே சரிந்திருக்கும்…….. 

‘காத்து எழும்பியிருக்கு, அது பயந்தான், எண்டாலும் மழை இன்னுங் கொஞ்சத்திலை விட்டிடும்….’ என்றார் அம்மான். 

‘விட்டா நல்லதுதானே…. அந்தச் சுவர் எப்படிப் பொத பொதவென்று பொறிந்திருக்கும்?’ 

‘ஆனா, மழை விட்டாலும் வெள்ளந்தான் பிரச்சினை பண்ணப் போகுது….” 

‘ஏன்? – நல்லகாலம், குழந்தை குஞ்சுகள் அந்தக் சுவருக்குள் அகப்படவில்லை’ 

‘ஏனோ? இது இவ்வளவும் இஞ்ச பெய்த மழைக்கு வந்த வெள்ளமெண்டே நினைக்கிறாய்? வரத்து வெள்ளமடா. ஆரோ தோட்டப்பக்கத்த லை வெட்டி இஞ்சை விட்டிருக் கிறாங்கள்…. பார், செம்பாட்டு வெள்ளம். மழை நிண்டாலும் வெள்ளம் ஏறப்போகுது. திண்ணைச் சாக்கில் ஈரக் கால்களை மாறி மாறித் துடைத்தபடி அம்மான் சொன்னார். 

‘அப்ப, நாங்களும் கொத்தாவலை நதிப்பக்கம் வெட்டி விடுவம்?’ 

‘பின்னை? வெட்டத்தானே வேணும். அதுதான் வந்தனான். கொய்யா எங்கை?’ அம்மான் கேட்டார். கூட்டிக் கொண்டு உள்ளே போனான். 

சண்டிக்கட்டும் தலைப்பாகையுமாய் ஒரு கையில் குடையைப் பிடித்தபடி, மற்றக் கையில் விறகுக் கட்டைச் சுமந்துகொண்டு ஐயா, கொட்டிலிலிருந்து வந்து கொண்டிருந்தார், 

‘விறகுக் கொட்டிலுக்குள்ளை வெள்ளம் ஏறிவிட்டுது’

இவனிடம் சொன்ன எல்லாக்கதைகளையும் இங்கும் சொன்னார், அம்மான். 

‘ஐயோ, பாவம்….’

‘அதுதான் இப்ப முதல் வேலையா, இந்த வெள்ளத்தை வெட்டி விடவேணும். பிறகு தான் மற்றக் கதை….’

‘ஆர் வெட்டுறது?’

முத்தையர், கந்தையாண்ணை என்று ஏழெட்டுப் பேரைச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு ரோசத்தோடு அம்மான் சொன்னார். ‘போனமுறை நீங்கள் இளந்தாரியள் வெட்டினாப் போலை எங்களாலை ஏலாதெண்டு நினைச்சிடாதை, இம்முறை நாங்கள் வெட்டிக்காட்டிறம். நாளைப் பொழுதுபட இந்த மூத்தத்திலை ஒரு சொட்டுத் தண்ணி நிக்காது. 

‘அப்ப வெட்டுங்கோவன். நானும் வாறன் உங்களோட….’

‘அப்ப நீ நாளைக்குப் போகேல்லையா?….’ – அம்மா வுக்குச் சந்தோஷமாக இருந்தது. 

‘நிண்டிட்டுப் போறன்’ என்றான். 

‘இப்ப துவங்கினா பொழுது படுகிறதுக்குள்ளை அரை வாசியாவது வெட்டி முடிச்சிடலாம்…. நீ சாப்பிட்டு வருவியா?’ – அம்மான் கேட்டார். 

‘வாறன்.’ 

அம்மான் போனதும் அடுப்படிக்கு வந்தான். 

‘அங்கை போய்ப்பார், அண்ணை…. மாட்டுக் கொட்டிலை.

போய்ப் பார்த்தபோது, மாடுகளின் காற்குளம்புகளுக்கு மேலாகத் தண்ணீர் நின்றது. 

‘அதுகளை இந்தத் தாழ்வாரத்திலை அவிழ்த்துக் கட்டுவமா?’ – சாரத்தை உதறி சண்டிக்கட்டைக் கட்டினான். 

‘நீ அவிட்டுக்கொண்டு வரப் போறியா?’ 

‘ஓம்’ என்றபடி இறங்கியவனிடம் தங்கச்சி சொன்னாள்: ‘உனக்குப் பழக்கமில்லாத மாடுகள். இடிக்கும்….’ 

அது சரிதானென்று பட்டது; திரும்பிச் சொன்னான். 

‘அப்ப, நான் விறகு எடுத்துக் கொண்டு வந்து போடுறன், மாட்டை அவிழ்த்துக் கட்டச் சொல்லி ஐயாவைச் சொல்லுங்கோ…’

குடையை வாங்கிக்கொண்டு முற்றத்து வெள்ளத்தில் இறங்கிய போது, உச்சி வரைக்கும் சிலீர் என்றது. 

– மல்லிகை, ஓகஸ்ற் 1979.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *