ரமணி பாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 1,615 
 
 

“பாட்டி… பாட்டி… உங்க பேரன் சதீஷ் வந்திருக்கான்.” முதியோர் இல்ல பொறுப்பாளர் சதீஷை அறிமுகப்படுத்தினார்.

“ம்..ம்..யாரு…?”

“பேரன்…. சதீஷ்…அமெரிக்காவிலிருந்து…”

“பேரனா… சதீஷ்சா…” சற்று நேரம் பேச்சே இல்லை… நிமிர்ந்த கண்களில் கொஞ்சம் ஈரம்.

சற்று நிதானித்து… “எப்படி இருக்க சதீஷ்…? என் கண்ணு… ராசா… உங்க அப்பா எங்கே…?”

“நல்லா இருக்கேன் பாட்டி. அப்பா வரல. என்கூட வர்றதா இருந்தாரு. அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசரம் வேலை. நான் மட்டும்தான் பாட்டி இப்ப வந்தேன்.”

“ம்.. என்னப்பா …? காது சரியா கேட்கலப்பா….”

“அப்பா… வரல பாட்டி. நான் மட்டும்தான் வந்தேன்.”

“ரெண்டு வருஷம் ஆச்சு பார்த்து… இங்கே சேர்த்த பிறகு, ஒரு தடவ வந்துட்டு போனான்….. எப்போ என் மகனை பார்ப்பேன்னு தோணுதுப்பா சதிஷ்சு…

“தினம்…. உங்க நெனப்புதான் சதீஷ்…. ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குது. இந்த அம்மா (முதியோர் இல்ல பொறுப்பாளர்) கிட்ட தான் சொல்லுவேன் அடிக்கடி. என் பையனுக்கு போன் போட்டு வரச் சொல்லுங்கன்னு. சொல்லி ஆறு மாசம் ஆகுது… அவங்களும் 10 தடவைக்கு மேல சொல்லிட்டேன்னு சொன்னாங்க….

“வாய் கொளறுதுப்பா… ரொம்ப பேச முடியல..

“ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ நீ மட்டும் வந்து இருக்கே..உங்க அம்மா எப்படி இருக்கா?…தம்பி எப்படி இருக்கான்? மருமகளைப் பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு….” கையை விரித்துக் காட்டியபடி.

“போன தடவை உங்க அப்பா மட்டும்தானே வந்து போனான்.

“சரி நீயாவது… வந்தியே இப்ப ..இந்த பாட்டிய பாக்க.”

“இன்னும் ஒரு வருஷம் நான் இங்க தான் இருப்பேன் பாட்டி.. இங்க தான் வேலை.. இனி வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களை வந்து பார்ப்பேன் பாட்டி…”

“அப்படியா சதீஷ்…இங்கேயா வேலை?..ரொம்ப சந்தோஷம்ப்பா.”

பாட்டியின் கண்களில் ஒளி… வாயில் எச்சில்…. கண்களில் கடல் பொங்கிய நிலை..

இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள்… ரமணி பாட்டி. பிறகு வாயை துடைத்துக் கொண்டே…”மகராசா அது போதும். அது போதும் எனக்கு!” பொக்கை வாய் திறந்து, குழந்தையை போல் சிரித்தாள்.

பத்து நிமிடம் இருந்து விட்டு… “சரி வரட்டுமா பாட்டி?….” என்றான் சதீஷ்.

“என்னப்பா… அதுக்குள்ள போறேங்கிர… உன்னை பாத்து எவ்வளவு நாளாச்சு?. ….சாயங்காலம் போயேன்…கொஞ்சம் ஓங் கூட பேசிட்டு இருக்கேனே….”

“அடுத்த வாரம் தான் வருவேனே பாட்டி…?”

“அது இருக்கட்டும். இப்போ இருப்பா…”

சதீஷ்…கையை பிடித்து உட்கார வைத்தாள் ரமணி பாட்டி…

“உங்க அப்பா சின்ன வயசுல …அப்படி பாசமாக இருப்பான்… அம்மா அம்மான்னு சேலையை புடிச்சுக்கிட்டு பின்னாடியே வருவான். நான் செய்ற அச்சு முறுக்கு அவனுக்கு ரொம்ப பிடிக்கும்… எப்பவும் அதையே தான் கேட்பான்…”

“அதை இன்னும் மறக்க முடியல.. அப்புறம் ஸ்கூல், காலேஜ் ,வேலை, கல்யாணம்னு பிஸியா ஆயிட்டான்…கல்யாணம் வரைக்கும்…தினம் தினம் போன் பண்ணுவான்…”

“இப்ப…? என்கூட பேச நேரமில்லை அவனுக்கு.”

“நீ…அப்பா மாதிரி செய்யாதப்பா…. அம்மா அப்பா கிட்ட உன் பாசம் குறையவே கூடாது…எவ்வளவு வேலை இருந்தாலும் வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணி பேசிடனும். என்ன சதீஷ்…எப்பவும்…அம்மா அம்மாதான். அப்பா அப்பா தான். உங்களுக்காகத்தான் அவன் இப்படி ஓடிட்டு இருக்கான்…”

சதீஷ் பெருமூச்சுவிட்டான்.

“நானும் உங்க தாத்தாவும் ,கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து…பாத்து பாத்து அந்த வீட்டை கட்டிணோம். உங்க தாத்தா , பையனுக்கு வேணும் …பேரனுக்கு வேணும்னு அந்த வீட்டை கனவு வீடா கட்டினார். அங்கே இப்போ யாருமே…..இல்லை . மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…அதை பத்தி பேசணும்னு நினைச்சேன்..இந்த ஹோம்ல. இருக்கிறவங்க என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிறாங்க.. அவங்க செய்யற உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல.. பெத்த தாயை கவனிப்பது போல பாத்துக்கிறாங்க. இவங்க தான் இப்ப எல்லாம் எனக்கு..”

சதீஷ் முகத்தில் ஈ யாடவில்லை.

“அந்த வீட்டை இந்த முதியோர் இல்லத்துக்கு எழுதி வெச்சிடலாம்னு நினைப்பு வந்துக்கிட்டே இருக்குப்பா…என்ன மாதிரி…அனாதைகளுக்கு அடைக்கலம் கிடைக்குமே…. என்ன சொல்ற சதிஷ்…எல்லாமே வெறுத்துப் போச்சு….ஓடி ஓடி காசு சேத்து.. அர்த்தமே இல்லாத வாழ்க்கையா ஆயிடுச்சு…என்பது வயசுல உங்க அப்பாவும் இப்படித்தான் நினைப்பான். இப்ப புரியாது. அவனுக்கு…”

“அப்பாவுக்குத் புரியும் பாட்டி. அடிக்கடி உங்கள பார்க்கப் போகணும்னு சொல்லிகிட்டு தான் இருப்பாரு.”

“நான் உயிரோடு இருக்கும்வரை தானே வரப்போறான்…”

“கவலைப்படாதீங்க பாட்டி. சீக்கிரம் அப்பாவ வர சொல்றேன்.”

“சரிப்பா..சதீஷ் உங்க அப்பா போட்டோ இருக்கா…காட்டேன்… இப்ப எப்படி இருக்கான்? போட்டோல யாவது பார்க்கிறேன்.”

சதீஷ் கைபேசியில் இருந்து காண்பித்தான்.

“என்ன முகத்தில சுருக்கம் வந்திருச்சு. முடி கொஞ்சம் வெளுத்து இருக்கு.. கடவுள் புண்ணியத்துல கண்ணு மட்டும் நல்லா தெரியுது எனக்கு. அவன் கல்யாண முகம் மட்டும்தான் எப்பவும் ஞாபகம்.. அதுவரை தானே என்னோட இருந்தான் .. கல்யாணம் முடிஞ்சு அமெரிக்கா போனவன் தான்… அந்த முகமும், அந்த பத்து வயது முகமுமே எப்பவும் வந்து போகுது… அவன் முகத்தைப் பார்க்கத்தான் இந்த உசுரு ஊசலாடிக் கிட்டு இருக்கு சதிஷ்சு….”

“சீக்கிரம் வருவார் பாட்டி. கவலைப்படாதீங்க.சரி பாட்டி. அஞ்சு மணி ஆச்சு .நான் கிளம்புறேன் . ஞாயிற்றுக் கிழமை வரேன் பாட்டி…”

“கிளம்புறியா… சதீஷ்.. சரி போயிட்டு…அடுத்த வாரம் வா…” எழுந்திருக்க முயன்றாள்… ரமணி பாட்டி…முடியவில்லை…

சதீஷ் கையை பிடித்து பொக்கைவாய் சிரிக்க… “அடுத்த வாரம் வா… உங்க அப்பாவை போன் போட்டு வரச் சொல்லு…”

“சரி பாட்டி…”

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பாட்டியை பார்க்க சதீஷ் வந்தான். முதியோர் இல்லம் சற்று வித்தியாசமாகப்பட்டது.

ஆங்காங்கே ஒரே கூட்டம்…சதிஷ்க்கு ஒன்னும் புரியல.

பாட்டி அறைக்குள் நுழைந்தான்.. அந்த பொறுப்பாளர் அம்மா சதீஷ்யை பார்த்தவுடன் கண் கலங்கினர். .. “இப்பத்தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு.. திடீரென மூச்சு திணறுச்சு.. ஏதோ சொல்ல வந்தாங்க…. முடியல. ஐந்து நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சு போச்சுப்பா… இப்ப தான் உனக்கு போன் போட்டேன். ஒரே பிசியா இருந்தது… உங்க அப்பாவுக்கு இப்பதான் சொன்னேன்.”

“இப்போ என்னப்பா பண்றது. உங்க அப்பா அம்மாவால உடனே வர முடியுமா? உயிரோடு இருக்கும் போதே உங்க அப்பாவ பார்க்க ரொம்ப ஆசைப்பட்டாங்க.”

“நான் எத்தனையோ தடவை சொன்னேன்…வரேன் வரேன்னு சொல்லிட்டு வரல….”

“இப்ப கேட்டு சொல்லுப்பா…இல்லாட்டி நாங்களே எல்லா பார்மால்டியும் இங்கேயே முடித்து விடுவோம்.. பேரன் நீ இருக்க… கொள்ளி மட்டும் வைப்பா… உன்னை பார்த்த சந்தோஷத்திலேயே போய் சேர்ந்துட்டாங்க போல….”

“ஒரு வாரமா அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்…”

சதீஷ் வெறுமையாய் சிலையாய் நின்றிருந்தான்.

சதீஷ் தனக்குள்…அப்பா செய்தது தவறு. வருடத்திற்கு ஒரு முறையாவது பார்க்க வந்திருக்கலாம். எனக்கு இது ஒரு பாடம். உயிர் போன போது பாட்டியின் மனசு என்ன பாடு பட்டிருக்கும். இது பெரிய பாவம். அனைவருக்கும் இது ஒரு பாடம். பாட்டியின் கடைசி ஆசைப்படி, அந்த வீட்டை ரமணி பாட்டி முதியோர் இல்லமாக மாற்றுவதால் அவரின் ஆன்மா சாந்தி அடையும். சடலத்தை பார்க்க இனி அப்பா வந்து ஒரு பயனும் இல்லை. தனது இந்த முடிவோடு அந்த பொறுப்பாளர் அம்மாவை பார்த்தான் சதீஷ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *