கிறுக்கல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 2,329 
 
 

(1991 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

இன்றோடு ரெண்டு வாரங்கள். விஜி, நீ ஏன் இன்னும் கனாவில் வரல்லே: ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துண்டிருக்கேன். ரெண்டு வாரம், பதினாலு நாளடி! இனிமேல் நீ அவ்வளவுதான். அப்பிடி அப்பிடி அப்ப்டித்தானே?

கனைப்புக் கேட்டு நிமிர்ந்தார்.

“அப்போ நாளை ராத்ரி புறப்படறோம். ரிசர்வ் பண்ணியாச்சு.”

அவன் சொன்னதை வாங்கிக் கொண்டதாக அவர் விழிகளில் தெரியவில்லை.

“உங்களுக்கும் சேர்த்துத்தான்.”

“நானா? நான் ஏன்?”

“ஆம்ப்பா.”

“நான் ஏன்?”

“ஆமாம்பா.” இப்போ குறுக் கிட்டது அவள். “உங்களுக்கு இனிமேல் இங்கே என்ன இருக்கு?”

“என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே!” நெஞ்சில் கோபம் பிராண்டிற்று. “இங்கே என்ன இல்லை? ஒருத்தியில்லேன்னா உலகம் அஸ்தமிச்சுப் போயிடுமா?” ஆனால். குரல் தழுதழுத்து விட்டது (விஜி, உலகம் அஸ்தமிச்சுத்தான் போச்சுடி! ஆனால், இவாளுக்கு ஏன் நம்மை விட்டுக் கொடுக்கணும்?)

அவன் கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு அது ஒரு பழக்கம். அவனுக்கு எப்பவுமே நேரமிருப்பதில்லை. அவன் வருவதற்குள் அவளுக்கு, உயிர் போய்விட்டது. ஒரே பிள்ளை. மஹானுபாவன். கரெக்டா கொள்ளியிட வந்துட்டான். அவனுக்கு எப்பவுமே நேரம் இருப்பதில்லை.

“அப்பா. கோவப்படாதீங்கோ.” சட்டென மண்டியிட்டு அவர் வலது கையைத் தன் இரு கைகளிடையே பொத்திக்கொண்டாள். கூசிற்று. விடுவித்துக் கொள்ள முயன்றார். அவள் விடவில்லை. இப்போதெல்லாம் இதுதான் சகஜம் போலும்!

“நீங்கள் ரெண்டு பேருமே எப்போதோ எங்களிடம் வந்திருக்க வேண்டும். நாங்கள் கட்டாயப்படுத்தாமல் இருந்துட்டு, ஏமாந்தும் போயிட்டோம். இப்ப வேணும், எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கப்பா. இனிமேல் நீங்கள் ஒண்டியா இருக்க வேணாம்.”

பரவாயில்லை. அப்பா உலகம் முழுக்க அஸ்தமிச்சுப் போயிடல்லே.

“உன் பேர் என்ன?” சமாதானத்தில் முறுவலித்தார். அவர் கேள்வி அவருக்கு ஆச்சரியமாகப்பட வில்லை. எப்பவோ, வருடத்துக்கு ஒரு முறை அதுவும் நிச்சயமில்லை-வந்து ஒரு நாள் தங்கினால் அதிகம். வந்தாலும் இவளோடு எனக்கெங்கே நேர்ப் பேச்சு? பின்கட்டுலே அவளும் இவளும் பேசிண்டிருந்திருக்கலாம். இப்போ பட்டணத்துலே விட்டு விட்டு வந்திருக்காளே பேராண்டி. அவன் பேரும் தெரியாது. எனக்கும் வயசாச்சு. ஞாபக சக்தி குறைஞ்சுண்டு வரதோ என்னவோ?

எழுந்து நின்றாள்.

“என் பெயர் விஜி.”

தூக்கி வாரிப் போட்டது.

“நீயும் விஜியா?”

“என் பேர் விஜயஸ்ரீ. அழைக்கறது விஜி.”

“உன் பேர் விஜயம் இல்லை?”

“இருந்திருக்கலாம். ஆனால் நான் விஜயஸ்ரீ.”

***

தூக்கம் மறுத்தது. புரண்டார். எழுந்தார். உட்கார்ந்தார். மேடையை ஒட்டிய ஜன்னலுக்கு வெளியே, நிலா பட்டை வீறிற்று. கோயில் கோபுர கலசத்தின் மேல் பால் சேறாட்டம் வழிந்தது.

இங்கே என்ன இருக்குன்னு கேட்டாளே? வெதும்பினார். என்ன இல்லை? இதோ எதிரேயே பெருமாள் சன்னதி. இதே கோடியில் சிவன் கோயில். பஸ்ஸில் அரை மணி தூரத்தில் பஞ்சநதேச்வரர் தரிசனம் தர அழைக்கிறார். ஆசைப்பட்டால் அங்கிருந்தே ஒரே மூச்சில் பெரிய கோயில். பங்காரு காமாஷி மாரியம்மன், இத்தனையும் வளைச்ச காவேரி அத்தனையும் பார்த்துண்டு மதியம் சாப்பாட்டுக்கு திரும்பிடலாம்.

நம்ம ஊர் என்கிற எண்ணம் இருந்து அவ்வப்போது வந்து போக இவர்களுக்கு கொடுத்து வைக்காட்டா யார் குத்தமாம்?

சரி! எது எப்படியானும் போகட்டும். நாளை ராத்ரி இங்கே படுக்கையில்லை. இந்த நேரத்துக்குப் பட்டணத்தை நோக்கி ரயில் போயிண்டிருக்கும். திரும்பி வரேனோ இல்லேயோ, ஆகவே விஜி –

விஜி கனவில் வரவில்லை.

***

“கார்த்திக், Shake hands with Grand dad, say Good morning!”

“தாத்தாவுக்கு நமஸ்தே சொல் கார்த்திக்!”

“அவன் என்னை அப்பான்னே அழைக்கட்டும்.” லேசாகச் சினந்தார்.

பையன் லஜ்ஜையுடன் வந்து அவர் கையுள் தன் கையை வைத்தான். அவ்வளவுதான். எப்படியென்று தெரியவில்லை. அவருக்கு உள்ளே மார்பு அகன்று விரித்த மாதிரி…

இழுத்து அணைத்து, கன்னத்தோடு கன்னம் இருத்திக் கொண்டார். உடனே அவர் கழுத்தை அவன் கைகள் வளைத்துக் கொண்டன. அவருக்கு மூர்ச்சை போட்ட மாதிரி ஆகிவிட்டது. மெத்து மெத்து…

“வா வா கார்த்திக், நேரமாச்சி. இன்னி குளிக்க வேணாம். ரிக்க்ஷா வந்துட்டுது.ட்ரஸ் மாட்டிக்க. ஊம், ஜல்தி ஜல்தி – வா, வாரி விடிறேன். டிபன் எடுத்துக்கிட்டியா? இன்னிக்கு அந்தத் தாத்தா வீட்டுக்குப் போ வேணாம். நேரே இங்கே வந்திடு. இந்தத் தாத்தாவுக்குக் கம்பெனி கொடுக்கணுமில்லே! டாட்டா!”

அவரிடம் வந்தாள்.

“அப்பா, உங்கள் சாப்பாட்டை மேஜையிலே மூடி வெச்சிருக்கேன். எப்பவுமே காலையிலே கெடுபிடி தான். சமையல் விவரமா முடியாது. சாயங்காலம் வந்தாலும் எப்படாப்ப வேலை முடிச்சி தலை சாய்ப்போம்னு இருக்கு. ஞாயிற்றுக் கிழமைதான் கொஞ்சம் லெஷர். ஆனால் அன்னிக்கு வாஷிங் டே. வேலைக்காரி இங்கே பெரிய ப்ராப்ளம். மொஸாய்க்கைத் துடைக்க மட்டும் முப்பத்தி அஞ்சு வேணுமாம். தலையிலெழுத்தேன்னு கொடுக்கிறோம். டி.வி. பக்கத்துலே பாலுக்குப் பாத்திரம் வெச்சிருக்கேன். மத்தியானம் சைக்கிள்லே வருவான். மணியடிப்பான். தூங்கிடாதீங்க. போயிடுவான். வாசல் கதவை மூடியே வையுங்க. பகல்தானேன்னு பார்க்காதீங்க, தெரு வழியே பார்த்துக் கிட்டே போய் வேளை பார்த்து உள்ளே மாடி வழியா இறங்கிடுவான். ராவரைக்கும் காத்திருப்பான்னு அவசியமில்லை. வகையான நேரம். பொழுது, நம்மைவிட அவனுக்குத் தெரியும்: இந்த வீட்டைக் கட்டி இதைக் காக்கற பாடு. இதன் மேலே கடன்பாடு, ரெண்டு பேரும் சம்பாரிச்சு, ஆயுசே பத்துமா தெரியல்லியே! சரி, வரேன். வீடு பத்ரம் பத்ரம்!”

பேசிக்கொண்டே இறங்கிப் போய் விட்டாள். கட்டிலில் ப்ரமை பிடித்தாற் போல உட்கார்ந்திருந்தார். தும்பை நீளமாக்கி மேய விட்ட மாடு போல், வீட்டுள் தன் சிறை நிலை முழுக்க உணரச் சற்று நேரமாயிற்று.

சாப்பிட்டபின் – சாப்பாடா அது? குழம்பா ரஸமா அதுவே தெரியவில்லை. ஆறிப்போய் விறைத்த சோறு; யாருடைய எச்சில் தட்டோ? ‘பட்டணத்தில் இலை கிடைக்காது. கிடைத்தாலும் கட்டுப்படி ஆகாது.’ அவளுக்கா பேசத் தெரியாது? எச்சில் இட சாணம் காணோம் – தூங்க முயன்றார். தூக்கம் வரவில்லை. வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வந்தார்.

அமர்க்களமாத்தான் கட்டியிருக்கான். விசாலமா இரண்டு படுக்கை யறைகள். பெரிய பட்டைவாசல் (அதான் ஹால்). சமையலறை. ஸ்னான அறை, கழிப்பு அறை, கீழே போல் மாடியிலும் படுக்கை அறைக்கு ஒரு கழிப்பு அறை. மொட்டை மாடியிலும் ஒரு கழிப்பறை. இது என்ன கழிப்பறை மோகமோ? தலையெழுத்து! அப்படி ஒரு உடம்புக்கு வந்துடுமா அல்லது சோம் பேறித்தனமா? அங்கங்கே வாஷ் பேஸின். தரைபூரா, கீழும் மேலும் மொஸாயிக் கால் வழுக்கி இடுப்பு சரிஞ்சதோ என் வயசுக்கு அவ்வளவு தான். சோபா செட்டுகள். வித விதமான சௌகரியங்களில் நாற்காலிகள். இந்த நாளில் அசல் தேக்கு இவனுக்கு எப்படி கிடைச்சது. என்ன விலையிருக்கும்? உசிரையே கொடுத்திருக்கான் இல்லை. இவனை எப்படித் தனியா சொல்றது அவளும் தான் கொடுத்திருக்காள். ரெண்டு பேருக்குமே நாலு ஸ்தானத்தில் சம்பளம்னு சொல்லக் கேள்வி. ஆனால், போறல்லே போறல்லே கடிதாசுக்குக் கடிதாசு புலம்பல். அப்பா பொடிமட்டைக்கு காசு கேட்டுடுவான்னு பயமோ என்னவோ?

ஆமாம். இந்த மூணு பேருக்கு அதில் ஒண்ணு அரை டிக்கெட். இவ்வளவு பெரிய வீடு தேவைதானா? ஆனால், நான் கேக்க முடியுமா? “நான் சம்பாதிக்கறேன், நான் கடன் படறேன்” இந்த நாள் சித்தாந்தமே இப்படித்தானேயிருக்கு?

கிருஹப்ரவேசத்துக்கு நா போக முடியல்லே. வயல்லே நாத்துப் பிடுங்கற சமயம். அவள் போய் வந்தாள். வீட்டைப் புகழ்ந்து அவளுக்கும் மாளல்லே. ஆனால், அடுத்த நாளே வந்துட்டாள். ஏன் ஒரு வாரம் இருந்துட்டு வரதுதானேன்னு கேட்டதுக்குப் பிடி கொடுத்துப் பதில் சொல்லல்லே. நானும் அப்புறம் கேட்டுக்கல்லே. ஏன் கேக்கனும்? அவளுக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன தெரிஞ்சுதோ?

திடீரென்று தாங்க முடியாத ஆயாசம் அழுத்திற்று. நின்ற இடத்திலேயே உட்கார்ந்து விட்டார். இங்கே என்னால் தள்ள முடியுமோ? ஆனது ஆகட்டும். இன்னி ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடுவோமா? கையில் பணமில்லை. அவனைக் கேட்கவும் கூச்சமாயிருக்கு. ஆனால் பெட்டியில் அவ்வப்போ. சொக்காய் வேட்டி மடிப்புகளினிடையே போட்டு வச்சதைப் பீறாய்ஞ்சால் டிக்கெட்டுக்குத் தேறலாம்.

ஆனால் அங்கே போய் என்ன பண்றது? இவாளே சுட்டிக் காட்டின மாதிரி ஒண்டியா எத்தனை நாள் பொங்கித் தின்ன முடியும்? மூணாம் வீட்டிலிருந்து அம்முப் பாட்டியைத் தான் அழைக்கணும். அவளுக்கோ கை சுத்தம் கிடையாது. வீட்டுள் நுழைஞ்சதுமே சுவாதீனமா சாமி அலமாரியிலிருந்து சாவிக் கொத்தை எடுத்து இடுப்பில் சொருகிண்டுடுவாள். “பின்ன என்ன வோய். எண்ணெய் எங்கேயிருக்கு. பருப்பு எங்கேயிருக்குன்னு ஒவ்வொண்ணுத்துக்கும் உம்மைக் கேட்டுண்டிருக்க முடியுமா? உம்ம சொத்து எனக்கு வேண்டாம் வோய். என் பிள்ளை சம்பாதிக்கிறான். ஆம்படையான் விட்டுட்டுப் போன பென்ஷன் வேற இருக்கு. யார் கையும் நான் எதிர் பார்க்க வேண்டாம். ஏதோ பாவம்னு வரேன்.”

விஜி. என்னை வேடிக்கை பார்த்துட்டியேடி!

அவனோ நிலத்தை விக்க முஸ்தீபா நிக்கறான். “ஆத்துலே தண்ணியில்லே பம்பு ஸெட்டுலே காத்து ஊதறது. நாளுக்கு நாள் குத்தகைக்காரன் வெச்சது சட்டமாயிருக்கு. அவன் படி அளந்தால் உண்டு. இல்லாட்டா மண். வித்து உதறிட்டு வரதை விட்டுட்டு”ன்னு மொறு மொறுக்கறான். பெரியவாள் வெச்சுட்டுப் போன மண் ஹும்… “நீங்க எப்படியானும் போங்கோ, என் பாகத்தைப் பிரிச்சுடுங்கோ”ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா, என்னால் தாங்க முடியுமா? அப்புறம் அப்பன் புள்ளை என்ன இருக்கு?

வகையா மாட்டிண்டுட்டேன்.

யோசனையிலேயே அரைத் தூக்க மயக்கம். கதவுத் தட்டலில் கலைந்து எழுந்து திறந்தார்.

சிரித்தபடி. புத்தகப் பையை மார்போடு அணைத்தபடி… செம்பா கோதுமைச் சிவப்பு. பசு நாக்குப் போல். அடைமயிர் நெற்றியில் சரிய… மேல் வரிசையில் ரெண்டு பல் காலி, அதுவே அவன் இளிப்புக்கு வசீகரத்தைக் கூட்டிற்று. ஒரு கையை நம்பிக்கையுடன் அவர் கையுள் வைத்தான்.

“டீ செய்துட்டீங்களா தாத்தா?”

உதட்டைப் பிதுக்கினார்.

“இன்னுமா செய்யல்லே, வாங்க செய்யலாம்.”

மறுபடியும் உதட்டைப் பிதுக்கினார்.

“நான் செய்யறேன். மம்மி செய்யறதைப் பார்த்திருக்கேன்.”

சமையலறைக்குப் போனதும் “ஒரு ஸஸ்பன்ஸ்” என்றான்.

சிரித்துக் கொண்டே புத்தகப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். மஸால் வடையின் ‘கம்’ அறையைத் தூக்கிற்று. குட்டி குட்டியா, பத்துப் பைஸா அகலத்தில். பசி வயிற்றைக் கிள்ளுவதும் அப்போத்தான் தெரிந்தது.

ஆவலுடன் பையன், வாயில் திணித்துக் கொண்டே. “இங்கே தான் சந்துலே வீட்டிலேயே சூடா செய்யறாங்க. இப்ப நம்ம செய்யலாமா?”

“ஏன், அவள்தான் வரட்டுமே!”

“மம்மி வர ரொம்ப லேட் ஆவும். காலையிலிருந்து நீங்களும் ஒண்ணும் சாப்பிடல்லே. பசிக் கல்லியா? நிங்களுக்கு டீ வேணாமா? எனக்கு வேணுமே?”

ஆற்றில் அடித்துக் கொண்டு போறவனுக்கு கரையோரம் புல்பிடி. அவன் தலை அடவிக்குள் கையை நுழைத்து மயிரை உலுக்கினார். உள்ளே அலை பொங்கியது. இத்தனைக்கும் இதற்குமுன் இவனைப் பார்த்ததில்லே. இப்படி அடியோடு தடம் புரள ஆச்சரியம் என்ன? பய-ம்-ம்-மா இருந்தது.

“என்ன தாத்தா, என் கண், மூக்கு. வாய், மூஞ்சி மேலே விரலாட்டே எளுதறே?” சிரித்தான். “பொம்மை வரையறீங்களா?”

இருவரும், இரவில், கட்டிலில், பக்கத்தில் பக்கத்தில், முன் ரேழியில்.

“இல்லை பையா, உன் முகம் அப்படியே உன் பாட்டி முக மாட்டம் இருக்கு.”

பையன் எழுந்து உட்கார்ந்தான் “நொம்ப நாளிக்குமுன் இங்கே function நடந்திச்சே அப்போ வந்தாங்களே. அவங்களா?”

“ஆமாம்.”

குரலில் ஜாக்ரதையுடன், “தாத்தா மம்மி என்கிட்ட இப்போ சொல்லி அனுப்பிச்சி. நா. பாட்டி பத்தி நிங்களிடம் பேசக் கூடாதுன்னு.”

“ஏனாம்?”

“நிங்களுக்கு மனஸு கஸ்டமாயிடுமாம்.”.

பேரன் முதுகைத் தடவினார். “நீ பேசலாம். பேசு.”

“என்ன தாத்தா நான் பேச முடியும்? அவங்களைப் பத்தி எனக்கு என்ன தெரியும்? அடுத்த நாளே கிளம்பிட்டாங்க. என்ன சொல்லிச்சும் கேக்கில்லே. நீங்க ஊர்வே தனியா கஸ்டப்படுவிங்கன்னு சொல்லிப் போயிட்டாங்க.”

ஆம், இந்த அனாச்சாரம். இந்த அசுத்தம், இந்த பாஷை, அவள் அவனைப் பேரிட்டு அழைப்பது (“மிஸ்டர் பரத்வாஜ்” அதென்ன, பரத்வாஜ்? அப்புறம்தானே புரிந்தது கோத்திரத்தைப் பெயராகவே அழைக்கிறாள். அவன் அவளை “ஹனி”) துவைக்கற கல் இல்லை. வென்னீருள் குழாயடியிலேயே துணி குமுக்கல், எச்சில் துப்பல், சாப்பாட்டுத் தட்டுக்கள், பற்றுப் பாத்திரம் ஏகமயம் – அவளுக்கு அந்த ஒரு நாள் கூத்தே சரிப்பட்டிருக்காது. அதனால்தான் அப்பவே திரும்பிட்டாள். என்கிட்ட காரணம் சொல்லியிருக்கலாம். ஆனால், ஏன் சொல்லணும்? நானும் கேக்கல்லே. ஏன் கேக்கணும்?

அவன் கை அவர் கையுள் புகுந்து கொண்டது.

“தாத்தா நீங்க பேசுங்களேன். பாட்டியைப் பத்தி.”

வண்டு ஒன்று ஜன்னல் வழி உள்ளே நுழைந்து அறையைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அதன் ஒரே மூச்சுக் கூவல் விதவிதக் கோடுகளை இருளில் ஒறுக்கிற்று. அதெப்படி இந்த வேளை? திசை தப்பிப் போச்சா?

இல்லை நீதானா?

“ஏறக்குறைய உன் வயசில், கார்த்திக், உன வயசென்ன?”

“ஆறு.”

“சரி, அவளுக்கு எட்டு இருக்கும். இந்த வீட்டுக்கு வந்தாள்.”

“இந்த வீடா. என்ன தாத்தா. இது கட்டியே வருஷம் ஆவஸ்லே.”

“இந்த வீடுன்னா இந்தக் குடும்பம்.”

‘”Family?”

“ஆமாம். இந்தக் குடும்பத்துள் வந்தாள்.”

“அப்படின்னா?”

“அப்படின்னா எனக்கு அவளுக்கும் கல்யாணம்.”

“கலியாணமா, அவ்வளவு சுருக்காகவா?” பையனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “நீங்க little boy. little girl”

“ஆமாம் கார்த்திக். எங்கள் நாள் கலியாணங்கள் அப்படித்தான்.”

நினைவின் ரேக்கு சுருள் கழன்றது. உள்ளூர கமகமத்தது. நாயன வித்துவான் மென்ற தாம்பூலம் போல்.

“சொக்காய். பாவாடையிலே. கதவு மூலையில், அது இல்லேன்னா தூணைக் கட்டிண்டு, அவளுடைய அப்பா அம்மா நினைப்பிலே ஏக்கமா நிப்பா. பார்க்கப் பாவமாயிருக்கும். ஆனால் நாங்கள் பேச மாட்டோம்.”

“ஏன் தாத்தா?”

“வெக்கம். பெரியவங்களுக்கு மரியாதை.”

“பேசினா respect குறைஞ்சுடுமா? நீங்க இப்படி சொல்றீங்க. போன மாஸம், சித்திக்கு அதான் மம்மிஸ் ஸிஸ்டருக்கு மாரியேஜ் நடந்திச்சு. ரிஸெப்ஷன் போது அவங்க பாட்டுக்கு சோபாவுலே பேசி சிரிச்சுட்டுத் தானிருந்தாங்க. யாரும் கண்டுக்கல்லியே!”

கிழவர் முறுவலித்தார். “இது உங்கள் காலம்.”

“அப்படி காலம் தனித்தனியா ஆயிடுமா?”

“சரி விடு அதை.”

“சரி அப்புறம் என்ன ஆச்சி?”

“என்ன ஆச்சு, ஒண்ணும் ஆகல்லே, பெரியவா. பக்கத்து வீட்டு மனுஷா யார் வந்தாலும் எழுந்து நிக்கணும். பேசக் கூடாது. தோப்புக் கரணம் போட்டே கால் விட்டுப் போயிடும்”.

“பாவம். I am sorry தாத்தா.”

“அப்படி இப்படி இங்கேயும் அங்கேயுமா மூணு வருஷம் ஆச்சு. பிறந்த வீட்டுக்கு அழைச்சுண்டு போயிட்டா. அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தாள்.”

பையன் காத்திருந்தான். கிழவர் வேறு நினைவில் ஆழ்ந்து விட்டார். சொக்காய். பாவாடை போய், இப்போது பாவாடை தாவணியில் அவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் பெருகியிருந்தன. திடீரென பெரும் வித்யாசமாயிட்டா. அவள்தான்; ஆனால் அவளுமில்லை. நெற்றியில் ஒரு சவால் வீசிற்று. காதண்டை வரை. விழியோரங்களில் சுத்திப் பிடி போன்று கண் மையை ஏதோ ஒரு தினுசில் நீட்டித் திருகித் தீட்டியிருந்தது. விழிகளில் வாள்கள் மின்னின. விஜயாம்பிகே –

அவரிடமிருந்து புரண்ட கேவலில் அவரே மிரண்டு போனார்.

பையன் உஷாரானான். சமர்த்து. பாட்டி கதை மிச்சம் இனி இப்போ இல்லை. சமயம் பார்த்து அப்புறம்…

ஒருவருக்கொருவர் ஆதரவில் இருவரும் ஒருவருக்கொருவர் அவசியமாகி விட்டனர். அவர்களிடையே தனி ரஹஸ்யங்கள், விழிப் பேச்சு. ஸங்கேதங்கள், குறும்புகள். பீறிடும் சிரிப்புகள், கும்மாளங்கள் கிளம்பின. கண்ணெதிரே தொங்கிப் போன செடி ஜலம் கண்டு. மீண்டும் பச்சைப் பிடித்து நிமிர்வது போல, இவருக்கும் முகம் தெளிந்தது.

முகம் தெளிந்ததே அன்றி பையன் உடல் பூஞ்சையாகத் தானிருந்தான். கேட்டால் கிழவர் வந்ததுக்குப் பின் அவன் இன்னும் இளைப்பாய்த்தான் காட்டினான். கொடுக்கும் ஊட்டமும், தனிச் சத்துக்களும் எங்கேதான் போயினவோ? அவ்வப்போது தொண்டையைக் கனைத்துக் கொண்டான். மார்பில் சலங்கை குலுங்கிற்று.

“ஏண்டா கார்த்திக். தொண்டையை அப்படி செய்துக்கறே?”

“செய்யணும் போல இருக்கு தாத்தா. செய்யறேன்.”

துளசி, ஆடாதோடை, சித்தரத் தைக் கஷாயம் என்று மருமகளிடம் பிரஸ்தாபித்ததும்…

“அப்பா. நீங்க இப்ப சொன்ன கூட நாங்கள் பேர்கள் கேட்டதில்லே. எங்களுக்கும் தெரியாது. என் அம்மா வீட்டிலேயும் தெரியாது. பாட்டி வைத்யம்னு சொல்லக் கேள்வி. அதோடு சரி. முணுக்குன்னா இங்கே டாக்டரிடம் போயிடுவோம். ஊசி, மாத்திரை, பில் ஏன் கேக்கறீங்க? வரவர சமாளிக்க முடியல்லே, ஆனால் எங்களுக்கு இப்படித்தான் பழக்கம். நீங்க சொல்றதுக்கெல்லாம் எங்களுக்கு நேரம் எங்கே? அவனுக்கு உடம்பு ஒண்ணுமில்லே. வைட்டமின் “A”, “C”, “B” காம்ப்ளெக்ஸ், லிவர் எக்ஸ்ட்ராக்ட் இப்படிப் பேசுங்கோ. எங்களுக்குப் புரியும். ஆனால் உங்களுக்கு அந்தப் பாஷை தெரியாது” சிரித்தாள். “இதோ அலமாரியைப் பார்த்தீங்களா?” திறந்து காண்பித்தாள்.

மருந்து ஷாப்பே நடக்குது. இவன் அப்படியும் இப்படியிருக்கான்னா, நாங்கள் என்ன செய்வோம்? நாளடைவில் சரியாப் போயிடுமின்னு விட்டுட வேண்டியதுதான். இந்த வீட்டையும் அதன் மேல் சுமையையும் நினைச்சா என்பாடே தூக்க மாத்திரையாயிருக்கு, இந்த நாள் Medical system யாரை விட்டது? வியாதியிருக்கணும்னு தேவையில்லை. ஆனால், மாத்திரைங்களை முழுங்கியாவணும். உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் உங்கள் பிள்ளையைக் கேளுங்க.”

பிள்ளைக்கும், நாட்டுப் பெண்ணுக்கு மிடையே கண் சிமிட்டலும் கள்ளச் சிரிப்பும் கிழவருக்குப் புரியவில்லை.

“அப்புறம் அப்பா, பையனுக்கு உடம்புக்கு வரதைச் சமாளிக்க light இருக்கணும். அவனுக்குச் சரியா பெரியவங்களும் சேர்ந்துக்கிட்டுப் பெரிசு பண்ணக் கூடாது. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாத்தான் இருக்கணும். நீங்கள் செல்லம் கொடுத்து அவனுக்கு discipline குறைஞ்சு போச்சு.”

கிழவர் திடுக்கிட்டார்: “என்ன பேசறே? என்ன செல்லம் கொடுத்தேன்? குழந்தைக்குச் செல்லம் கொடுக்காமல் அவனோடு மல்லா கொடுப்பா?”

“இல்லேப்பா, நீங்கள் வந்தப்புறம், அவனுக்குப் பாடங்கள்லே கவனம் குறைஞ்சு போச்சு. இறங்கிட்டான். உங்களிடம் எனக்குச் சொல்லவும் முடியல்லே. உங்களுக்குச் சொன்னாலும் புரியாது. பள்ளிக் கூடத்துலே அட்மிஷன் ரிசர்வ் பண்ணிக்கிட்டு அப்புறம் குழந்தையைப் பெத்துக்கற காலம் இது.”

இவளோடு என்ன பேச முடியும்?. இந்த அளவு கூட அவர் பிள்ளை யோடு பேசுவதில்லை.

ஒரு சமயம் அவன் கார்த்திக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். மிரட்டலும் அடியும்தான் இருந்தன. பாடம் இல்லை. பையன் மிரண்டு மிரண்டு விழிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

“என்னடா, குருவி தலையிலே பனங்கா போல அவன் மேல் எவ்வளவு பாடம் ஏத்துவே?”

“இது உங்களுக்குப் புரியாது.”

மூர்க்கன். என்றுமே மட்டு மரியாதை கிடையாது. ஓரளவு ஒற்றுமையாக வாழவேணுமானால் தூரத்துப் பச்சையாயிருந்தால் பிழைச்சோம். அதுவும் போச்சு எனக்கு.

‘விஜி’ என்னைக் கொடுமை பண்ணிட்டேடி! உனக்கு நான் என்ன செஞ்சேன்!

வருவது அரைப் பரிட்சையா. வகுப்பு மாறும் பரிட்சையா? எப்போ வரது?

அப்பனும் ஆயியும் மாறி மாறி பையனைப் பிழிந்தெடுத்தார்கள். அம்மா இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தாள். அப்பா கணக்கு.

பையன் அடிவாங்கியது அம்மாவிடம்தான். ஆனால், அப்பா பார்த்த பார்வை அடியினும் கொடுமையாயிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு கறுப்பு விழி நடுநடுங்க குழந்தை கருகித் தீய்ந்து விடுவான் போல… உண்மையே அதுதானோ? நாளுக்கு ஒரு இம்மியாக இளைத்துப் போய்க் கொண்டு-

அன்றொரு நாள் இரவு. அவருக்குக் கண்கள் சொருகிய சமயம். பையன் நேரே வந்து அவர் மார்பின் மேல் துவண்டு விழுந்ததும் திடுக்கென்ற முழு விழிப்பில் பதறிப் போனார்.

“என்னடா கண்ணா? இது மாதிரி செல்லச் சொல் அவருக்கு வந்ததில்லை (பாட்டன் சொத்து இதுவரை உள்ளேயே புதைந்திருக்கும் போலும்!).

பதிலுக்கு ‘லொக்கு லொக்கு’ மார்பு மட்டும் கொதித்து முகம் வேர்த்துக் கொட்டியது.

பாவிகள் குழந்தையைப் பிழிஞ்சு எடுத்திருக்கா.

அவனோடு பேச்சுக் கொடுக்க வாய்க்கவில்லை. இருமல் குமுறிக் குமுங்கி, அமுங்கி ஒருவழியாக மூச்சு சீர்பட்டதும் தூக்கத்தில் ஆழ்ந்து போனான். மார்பில் மூச்சின் மிதப்பைக் கவனித்தபடி. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நாளாவே பையனை அவரிடம் படுக்க விடுவதில்லை. பரீக்ஷை நெருங்கிப் போச்சாம். “மலை மாதிரிப் பாடம் கிடக்குது. பையன் கவனிக்க மாட்டேன்கறான். முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லை.”

தொட்டார். கன்னம் பூப்போல. அசல் சொக்காய்ப் பாவாடை விஜி. முதல் முதலாய் வீட்டுள் அடியெடுத்து வெச்ச விஜி.

விஜி கனவில் வரவேயில்லை. பேரன்தான் கண்கூடா இருக்கானே என்கிற எண்ணமோ என்னவோ?

“கார்த்திக்!”

அவரை எழுப்பி விட்டதே அந்தக் கணீர்தான். கண்ணைத் திறந்தால், கிங்கரி நிக்கறா. பின்னாலேயே வந்து அவள் பின்னால் அவன்.

“இன்னிக்கு குழந்தை எழுந்திருக்கிற நிலையில் இல்லை. பித்த நாடி குதிரைக் கணக்கிலே பாயறது.”

“நாடி! குதிரை!” அவர் ஏதோ பெரிய ஜோக் அடித்து விட்ட மாதிரி, வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தான்.

பையன் எழவில்லை. அசதியில் அரைக்கண். இருவரும் பக்கத்தில் வந்து. பார்த்துவிட்டு ஏதோ கிசு முசுத்து விட்டு அவன்: “Alright இன்னிக்கு ஸ்கூல் வேணாம். ஆனால் எழுந்து படிக்கச் சொல்லுங்க. சாயந்திரம் வந்ததும் நான் ஹோம் ஒர்க் பார்ப்பேன் வா. ஹனி. நேரமாவிடிச்சு. ”

இருவரும் போய் விட்டனர். இன்று ஏனோ தினத்தை விட சுருக்கவே.

அவர்கள் போன சற்று நேரத்துக் கெல்லாம் பையன் எழுத்து உட்கார்ந்து விட்டான். ஜுரம் இருந்தது. ஆனால், தணிவு. இன்னிக்குப் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றதே சஞ்சீவி மருந்து. சேதி கேட்டதுமே துடியாகி விட்டான். அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டி. அவனுடைய துள்ளலைக் கண்டு சிரிப்புக் கூட வந்தது. பாவம், இப்படியா பாடம் கட்டிப் போடும்? இரண்டு முறை துள்ளினான். மறுபடியும் ஓடிவந்து தாத்தா கழுத்தைக் கட்டிக் கொண்டான். உள்ளே பாறைகள் உருகின.

“ஏலே. கொஞ்சம் ரஸம் சாதம் சாப்பிடு, கரைச்சுத் தரேன்.”

“ஒண்ணும் வேணாம் தாத்தா, பசியில்லை. வேணும்னா bread இருக்குது ஃப்ரிஜ்லே.இப்போ நீங்க எனக்குக் கதை சொல்லணும். கதை சொல்லி ரொம்ப நாளாச்சி.”

கதை சொல்லி ஒரு விளையாட்டு. திரும்பி அவன் வகுப்பில் பாடம் கேட்ட கதை கேட்டு-அது ஒரு விளையாட்டு.

“செஸ் ஆடுவிங்களா தாத்தா?”

“செஸ் தெரியாது. பதினெட்டாம் புள்ளி தெரியும்.” ஆனால், அதைச் சொல்லிக் கொடுத்து. நாலாவது ஆட்டத்திலேயே பேரன் தாத்தாவை மடக்கி விட்டான். கிழவருக்கு ரோசம் வந்து விட்டது. முகத்தை மேல் துண்டால் துடைத்துக் கொண்டு முஸ்தீப்பாக முனைந்தார். மறுபடியும் ‘செக்.’ உண்மை எப்படியானும் இருக்கட்டும். நானே விட்டுக் கொடுத்ததாவே இருக்கட்டுமே. இவன் முகத்தில் கலர் பார்க்கவே – பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

பிறகு இருவரும் தூங்கிப் போயினர்.

அவருக்கு விழிப்பு வந்தபோது. பையன் பக்கத்தில் இல்லே. உடனேயே பால் மணி அடித்தது. பால் வாங்கப் போனார்.

டீ போட்டார். பையனை கூப்பிட்டார்.

யோசனையாக மாடியிலிருந்து இறங்கி வந்தான். சொரத்தா யில்லை. ஆனால், அவரும் வேணு மென்றே கண்டு கொள்ளவில்லை. இந்தப் பூஞ்சை உடம்புக்கு இதுவரை உற்சாகமே அசதிதான். தவிர, பாடம் தான் மோடம் போடுகிறதே! அவர்கள் வருவதற்குள் வீட்டுக் கணக்கு செய்தாகணுமே!

ஆனால், கணக்குப் போடுவதாகப் பாசாங்குதான் பண்ணினான். அப்புறம் ஏதோ ஏடுகளைப் புரட்டி சரியில்லை னான். ஊஹும். அவர்களை எதிர்பார்த்து அவருக்கே பயமாயிருந்தது.

“ஏண்டா ஒரு மாதிரியா…?”

“ஒண்ணுமில்லே தாத்தா.”

அவர்கள் வந்தபோது – சேர்ந்து வந்தார்கள் – சேர்ந்துதான் மாடிக்குப் போனார்கள். பையன் மாடியடி வளைவில் ஒரு புத்தகத்துடன் உட்கார்த்திருந்தான். சுற்றி, புத்தகங்கள் சிதறித் கிடந்தன. படிப்பதாகத் தோன்றவில்லை. எதையோ எதிர் பார்த்து ஒளிந்து கொண்டிருந்தான் என்று தோன்றியது.

அதுவும் உடனேயே வந்து விட்டது.

“கார்த்திக்!”

நிமிஷமாக வதங்கித் தள்ளாடித் தள்ளாடி மேலே போனான். கால்கள் இழுத்துச் சென்றன. கிழவர் மாடியடியில் காத்திருந்தார். உடனேயே அடி-படபட-உடனேயே அலறல்.

“இனிமே மாட்டேன் டாடி-இல்லே மம்மி -இல்லே டாடி.”

ஒரு பாடத்துக்கா குழந்தையைக் கொலை பண்ணுகிறார்கள் பாவிகள்! சீற்றம் பொங்கிற்று. திடுதிடுமென மேலே ஓடினார். மாறிமாறி இருவரும் மொத்த பையன் இடையில் மாட்டிக் கொண்டிருந்தான். ஓடி அவனைப் பொத்திக் கொண்டார். அவர் மேல் ஒரு அடி விழுந்தது. வேணுமென்றல்ல. அடி. வேகம்.

Stop it! அவர் குரல்,’க்றீச்’சிட்டது. அப்பத்தான் அடங்கினார்கள். அவனுக்கு மூச்சு இரைத்தது.

சீறினார். “மிருகங்களா!”

“Look at that”கோபம் வந்தால் ஐயா இங்கிலீஷில்தான் கொப்புளிப்பார்.

அவன் விரல் சுட்டிய வழி. சுவரில் பென்சிலில், ஒரு கிறுக்கல், வட்டமாய், முறுக்கு தினுசில், கலியாண ‘சைஸில்’

அவருக்குச் சிரிக்க நேரமில்லே. பையன் ‘மடே’ரென்று கீழே விழுந்து விட்டான்.

“இந்தப் புத்தி இவனுக்கு வந்ததே உங்களால்தான்.”சீறினான், “நீங்க வந்திங்க, பையன் ரொம்ப Spoil ஆயிட்டான். ஹனி, இனி இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்க்காதே. அப்புறம் நான் ரொம்பக் கெட்டவனாயிடுவேன்.”

தரதரவென்று பையனையிழுத்துக் கொண்டு கீழே போய் விட்டாள். அவன் பின் தொடர்ந்தான்.

அவர்கள் மீண்டும் மேலே வந்த போது கிழவர் நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருந்தார். மாறி மாறி நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு, தலையைத் தடவிக் கொண்டிருந்தார். அந்த சேட்டை அவர் பிள்ளைக்குச் சிரிப்புக் கூட வந்துவிட்டது.

“பாரேன் ஹனி இதை! எப்படி முழிக்கிறார் பாரேன்!”

மறுநாள், பையனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டனர். காரத்திக் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பயம்?

அவர்கள் வீடு திரும்பும் போது நேரமாகி விட்டது.

“என்ன அக்ரமம்! கதவைத் தாளிட்டுக்கக் கூடயில்லே!”

உள்ளே சென்றால் அவர். அவர் இடத்தில் இல்லை. சாப்பாட்டுக் காரியர், தண்ணீர்ச் சொம்பு, ஃப்ளாஸ்க் எல்லாம் வைத்த இடம் கலையாமல் இருந்தன. சாப்பிடல்லியா?

“அப்பா!”

மாடியேறிப் போனார்கள்.

எல்லா விளக்குகளையும் போட்டு மாடி ஹால் பகலாய் எரிந்தது. மாடியேறினதுமே எதிர்ச் சுவரிலிருந்து பென்சிலில் ஒரு பெரிய பையன் முகம் – அல்ல முகம் மாதிரி ஒரு பாவனை கலைந்த தலையுடன் அவர்களைப் பார்த்து சிரித்தது! பலகை பலகையாய்ப் பற்கள். காதுக்குக் காது முகத்தையே அடைத்த சிரிப்பு. ஒட்டிப் போன கன்னங்கள்.

கிழவர் தோரணையாகக் கையை மற்ற சுவர்களுக்கும் வீசினார்.

பெரிய பெரிய முறுக்குகள் கலியாண சைஸ், கோடுகள், முட்கள், கிறுக்கல்கள், அனேகமாய்க் கிறுக்கல் தான், பென்சிலில், கலர்ப் பென்சிலில், கார்த்திக்கின் கலர்ப் பென்சில் பெட்டி காலி. கீழே பென்சில் சீவல்களும் ப்ளேடும் கிடந்தன. ஒரு இடத்தில் கறுப்பு மசியைக் கூடிலிருந்து அப்படியே வீசியிருந்தது.

இருவரும் முகத்தைப் பொத்திக் கொண்டனர்.

கிழவர் இன்னமும் கோடுகள் கிறுக்கிக் கொண்டிருந்தார்.

– ஆகஸ்ட் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *