வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை. வெளியே சொல்லிக்கொள்ளவில்லையே தவிர, ‘நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் அதற்கு ‘என்றுதான் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோருக்கும் மனதில் தோன்றியிருக்கும்.
என்னை மூக்கம்மாச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எங்க அத்தான் பேரு விட்ட ஆயான் அல்லவா’ என்று சொல்வாள். மூக்கம்மா ஆச்சியும் எங்கள் அம்மாவுடைய அம்மாவும் சகோதரிகள். கூடப் பிறந்தவர்கள் அல்ல. பெரியப்பா சித்தப்பா மக்கள். ஒன்றுவிட்ட அக்காவும் தங்கையும். மூக்கம்மா ஆச்சிதான் மூப்பு. எங்கள் அம்மாத் தாத்தா அவளுக்கு அத்தான் முறை. எங்கள் தாத்தாவை நாங்கள் பார்த்ததில்லை. ‘அவ்வோ லேசுப்பட்ட ஆம்பிளை இல்லை’ என்று ஆரம்பித்து ஒரு கதை சொல்வாளாம். கோமு அக்கா சொல்லி யிருக்கிறாள். அந்தக் கதை இப்படிப் போகும்.
தாத்தா மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை பார்த்தார். ஆள் மீசையும் குடுமியுமாக அப்படி இருப்பார். துரை வீட்டு வெள்ளைக் காரிச்சி தாத்தாவைக் குதிரை மேல் தூக்கிவைத்துக்கொண்டு போய் விட்டாள். இரண்டு மூன்று நாட்களாகக் காணோம் காணோம் என்று தேடியிருக்கிறார்கள். மூன்றாம் நாள் ராத்திரி நடு ஜாமத்திற்கு மேல் பூப் போல அதே குதிரையில் கொண்டுவந்து வீட்டு முன்னால் இறக்கிவிட்டுவிட்டுப் போய்விட்டாள். இந்தக் கதையை அக்கா சொல்லும் போதே நம்பும்படியாகத்தான் இருந்தது. நான் வளர்ந்த பிறகு மூக்கம்மா ஆச்சியிடம் அதைச் சொல்லும்படி கேட்டேன். மூக்கம்மா ஆச்சி என் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, ‘அவ்வோ இருக்கும்போது சொல்ல வேண்டியதை, போன பிறகு சொல்லக்கூடாது’ என்று முடித்துக் கொண்டாள். அது உண்மைதான் என்று அம்மாவும் சொல்கிறாள்.
‘தாத்தா இறந்த பிறகு மூக்கம்மா ஆச்சி ஒரு சொல்கூட தாத்தாவைப் பற்றிப் பேசியது கிடையாது என்பது வாஸ்தவம்தான்’ என்று கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
நான் இப்போது யாரைப் பார்த்தாலும் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறேனே. யோசித்துப் பார்த்தால் அது எனக்கு மூக்கம்மா ஆச்சியிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும். எனக்கு மட்டும் அல்ல. கோமு அக்காவுக்கும் கிட்டத்தட்ட அந்தப் பழக்கம் வந்துவிட்டிருக்கிறது. அம்மாவுக்கு அது பற்றிக் கொஞ்சம் சங்கடம் தான்.
மூக்கம்மா ஆச்சி எந்தக் காலத்து மனுஷி. காது வளர்த்துப் பாம்படம் போட்டிருந்தவள். இப்போது வெற்றுக் காதாய் கொஞ்சம் தலையைத் திருப்பினாலும் தூர்ந்துபோன நுனி ஆடுகிறது. அவளுக்கு எப்படி இந்தப் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை . கோமு அக்காதான் ஆச்சியை நோண்டி நோண்டி ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பாள். ‘அது எப்படி ஆச்சி, ஆம்பிளை பொம்பிளைண்ணு பார்க்காமல் எல்லார்கிட்டேயும் தாராளமா கையைப் பிடிச்சுப் பேசுதே’ என்று அவள் ஆச்சியிடம் கேட்கும் போது, விஷேச வீட்டிற்கு வந்து அப்போதுதான் வாசலில் கால் வைக்கிற ராமையா மாமா கையைப் பிடித்து, ‘அய்யா வந்தியா? நல்லா இருக்கியா அய்யா?’ என்று ஆச்சி விசாரித்தபடி இருப்பாள்.
ஆச்சி இதற்கு வேறு விதமாகப் பதில் சொல்வாள். ஆண் பெண் என்கிற விஷயத்தைத் தொடாமல் அப்படியே விட்டுவிடுவாள். ‘இதிலே தாராளம் என்ன தாராளம் வேண்டிக் கிடக்கு? என் கையிலேயும் அஞ்சும் அஞ்சும் பத்து விரல்தான். ராமையா கையி லேயும் பத்து விரல்தான்’ என்று சொல்லிவிட்டு, ‘எனக்கு ஒரு கோட்டை ஜோலி கிடக்கு. உனக்குப் பதில் சொல்லிக்கிட்டு நிக்க நேரமில்ல’ என்று உள்ளே போய்விடுவாள். கோமு அக்கா விட மாட்டாள். அது எப்படி ஆச்சி?’ என்று பின்னாலேயே போவாள். ‘அது எப்படியா? நாளைக்கு உனக்குக் கல்யாணம் ஆகி, ஆமக்கன் வருவான் பாரு. அவன் கிட்டே கேளு. அது எப்படிண்ணு அவன் சொல்லுவான்’ என்று சிரித்தபடி அக்கா கன்னத்தைக் கிள்ளித் தள்ளிவிடுவாள்.
ஆச்சி சொல்கிறதன் அர்த்தம் அக்காவுக்கே புரிந்திருக்காது. அப்புறம் எனக்கு எப்படி அந்த வயதில் புரிந்திருக்கும்? ‘ஆமக்கன் வருவான்’ என்றால் ‘ஆண்மகன் வருவான்’ என்பதுதான் என்று தெரியவே ரொம்ப காலம் ஆயிற்று. அதுவரை அது ஆமை ஓட்டி லிருந்து ராத்திரி ராத்திரி ஒரு ராஜகுமாரன் வெளிவருகிற கதையை மூக்கம்மா ஆச்சி சொல்வாள். அது போல அவளுடைய இன்னொன்று என்றுதான் இருந்தது.
மூக்கம்மா ஆச்சி கதை சொல்லாத நாள் இராது.. இருட்டுக்கும் அவளுடைய கதைகளுக்கும் ஒரு நெருக்கம் இருந்துகொண்டே இருக்கும். பகலில் அவள் கதை சொன்னதே கிடையாது. சாயுங்காலம் அவளைக் கதை சொல்லச் சொன்னால், ‘கருகருத்த நேரத்தில் கதை சொல்லக்கூடாது. ராட்சசன் பிடிச்சுக்கிடுவான் என்று தவிர்த்து விடுவாள். அவளிடம் ராஜா கதைகள் நிறைய உண்டு. சதா அவர்கள் குதிரையில் எப்போது பார்த்தாலும் வேட்டை யாடிக்கொண்டே இருப்பார்கள். ஒரு யானையை முதலை கவ்வும். காப்பாற்றச் சொல்லி யானை ராஜாவைக் கெஞ்சும். ராஜா முதலை மீது அம்பு விடுவார். முதலை அதனுடைய சாபம் விமோச்சனம் ஆகிவிட்டது என்று ஒரு முனிவர் ஆகும். முனிவரின் வாய்க்குள் இருந்து ஏழு கன்னிப்பெண்கள் வருவார்கள். ராஜா ஏழு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக வாழ்வார்.
இப்படி ராஜாவுக்கு ஏழு பெண்களைக் கல்யாணம் செய்து வைக்கிற ஆச்சியின் கல்யாணம் பற்றி அம்மா சொல்லும் போது வருத்தமாக இருக்கும். மூக்கம்மா ஆச்சி அடிக்கடி அவள் கிராமத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு வருவாள். பத்து நாள் பதினைந்து நாட்கள் என்று இருப்பாள். கணக்கு எல்லாம் கிடையாது. போய்விடுவாள் இல்லையா? அப்படி ஆச்சி வந்துவிட்டுப் போன ஒரு மத்தியான நேரத்தில் புறவாசல் நடைப்பக்கம் அம்மாவுக்குத் தலை சிக்கல் எடுத்துக்கொண்டே எங்கள் அம்மாச்சி சொல்வாளாம், ‘பாவிக்கு பதினாறு வயசு கூட முடியலை. ரதி மாதிரி இருப்பா. என்ன அவசரம் கொள்ளை போகுதுண்ணு கட்டிக் கொடுத்தாங்களோ? இந்த பவுர்ணமிக்கு நேர் அடுத்த பவுர்ணமி புண்ணியவான் போய்ச் சேர்ந்துட்டான். பாம்பு கொத்திட்டுதுண்ணு சொன்னாங்க. மோகினி அடிச்சுட்டுதுண்ணாங்க. ஆத்தில முங்கிட்டான்னாங்க. தாழம் புதருக்குப் பக்கத்தில் கிடந்து தூக்கிக்கிட்டுவந்து போட்டாங் களாம். ரெண்டு கையையும் பிரிச்சால் ரெண்டு குத்து மணல் இருந்துதாம். ஒவ்வொரு உள்ளங்கை மணலுக்குள்ளேயும் உசிரோடு ஒரு கருவண்டு இருந்து பறந்து போச்சாம்’
‘நிஜமாவா ஆச்சி?’ என்று கோமு அக்கா போல எனக்கும் மூக்கம்மா ஆச்சியிடம் என்றைக்காவது ஒருநாள் கேட்டுவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் சில விஷயங்கள் இப்படி ஒரு பக்கம் தோன்றினாலும், இன்னொரு பக்கம் அப்படியெல்லாம் அதை விளையாட்டுத்தனமாகக் கேட்டுவிடக் கூடாது’ என்று நமக்கே படும் இல்லையா. அப்படித்தான் இருந்தது. ஆச்சியிடம் கேட்கவே இல்லை. கேட்டிருந்தால் மூக்கம்மா ஆச்சி அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு கதை சொல்லியிருக்கக் கூடும். உதாரணத்திற்கு தொடையில் வண்டு துளைக்கிற கர்ணன் கதையை அவள் எம்.ஜி.ஆர் படக் கதையாக மாற்றி விடுவாள்.
மூக்கம்மா ஆச்சிக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடித்திருந்தது. என்ன, மலைக்கள்ளன் கதையில் பாதியையும் தாய்க்குப் பின் தாரம் கதையையும் சேர்த்துவிடுவாள். மர்மயோகி கதையையும் மகாதேவி கதையையும் அப்படித்தான். யாராவது, ‘என்ன ஆச்சி? எல்லாக் கதையையும் இப்படி குழப்புதீங்க?’ என்று கேட்டால், ‘எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஒம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி என்று கேள்வி கேட்கிறவனின் கன்னத்தை, தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த மாவுக் கையால் தொடுவாள். எல்லோருக்கும் அவனைப் பார்த்தால் சிரிப்பு வந்துவிடும்.
மூக்கம்மா ஆச்சியைப் பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரிய வில்லை. படுத்துத் தூங்குவது போலத்தான் இருக்கிறது. யாராவது தூங்கும் போது சிரிப்பார்களா? பச்சைப் பிள்ளை வேண்டுமானால் சிரிக்கும். ஒரு பல் கூட இல்லாமல், மேல் உதடும் கீழ் உதடும் சுருங்கி, ஈறுக்கு மேல் உள்மடங்கி, ஆச்சியும் பச்சைப் பிள்ளை மாதிரி தான் இருக்கிறாள்.
நாங்கள் பார்க்க, முதலில் இருந்தே ஆச்சிக்குப் பொக்கு வாய் தான். ஏன் உனக்கு ஒரு பல் கூட இல்லாமல் விழுந்துட்டுது ஆச்சி? என்று கேட்டால், முதலில் ஒரு சிரிப்புச் சிரிப்பாள். ‘அந்தக் கதைய ஏன் கேட்கே போ’ என்று ஆரம்பிப்பாள். கோமு, யானை என்ன எல்லாம் சாப்பிடும்னு உனக்குத் தெரியுமா?’ என்று தலை பின்னிய படி அக்காவிடம் கேட்பாள். ‘ஓலை’ என்று அவள் சொன்னால், ‘உனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்’ என்று ஆச்சி கொஞ்ச நேரம் அப்படியே இருப்பாள்.
‘ஒரு நாள் ராத்திரி ஆடிச் செவ்வாய்க்கு அவ்வையார் விரதக் கொழுக்கட்டை செஞ்சு வச்சிருந்தேன். இது எப்படியோ அந்த யானைக்கு வாசம் அடிச்சுட்டு. அப்படியே பாவனாசம் மலையிலே இருந்து பறந்து வருது. ரெண்டு முழத்துக்குக் கொம்பை நீட்டிக் கிட்டு, சுளவு மாதிரிக் காதை ஆட்டிக்கிட்டு அது வாரதைப் பார்த்து தொழுவுல நிக்கித பசுமாடு கண்ணுக்குட்டி எல்லாம் பதறிச் சத்தம் போட்டிருக்கு. நான் நல்லா அசந்து தூங்கிட்டேன். அது என்னடா’ன்னா ஜன்னல் வழியா தும்பிக்கையை நீட்டி என்னை எழுப்புது. பார்த்தால் ஆனை. ‘என்ன வேணும் உனக்கு? ண்ணு கேட்டால், கொழுக்கட்டைன்னு சொல்லுது. சொல்லிக்கிட்டு தும்பிக் கையை தந்தத்தில் சுத்திக்கிட்டு ஆசையா நிக்கி. ஆகா. இது கொம்பன் ஆச்சே. ஆம்பிளைகளுக்கு அவ்வையார் கொழுக்கட்டையைக் கொடுக்கக் கூடாதே’ன்னு ஞாபகம் வருது. என்னடா செய்யலாம்னு பார்த்தேன். சட்டுண்ணு ஒரு பொய் சொன்னேன். ‘நீ வருவேன்னு யாருக்குத் தெரியும், அது எல்லாம் அப்போதையே காலியாப் போச்சு. அங்கணாக் குழியில ஏனத்தைக் கழுவப் போட்டாச்சு பாரு’ண்ணேன். ‘நிஜமாவா?’ண்ணு கேட்டுது. ‘சத்தியமா’ண்ணு அடிச்சுச் சொல்லீட்டேன். ஆனை சத்தியத்துக்குக் கட்டுப் படும். ‘சத்தியம்னா, சரிண்ணு அது திலும்பிப் போயிட்டுது. மறு நாள் காலையில் எழுந்திருச்சுப் பார்த்தா, ஒரு பல்லு கூட இல்லை. எல்லாம் உதுந்துட்டுது. ஆனை கிட்டே பொய் சொன்னேம்’லா. அதுனால தான்’ என்று சிரிக்கும் போது ஆச்சி கைகள் கோமுவுக்கு ரிப்பன் வைத்து முடித்திருக்கும். அப்பா பின்னால் ஒரு தடவை சொன்னார். ஆச்சிக்கு ஏதோ விஷக் காய்ச்சல் வந்து அப்படி ஆகிவிட்டதாம்.
அப்பாவுக்கு ஆச்சியைப் பிடிக்கும். ஆச்சியை அப்பா சில அபூர்வமான படங்கள் எடுத்திருக்கிறார். ஏதோ ஒரு விஷேச வீட்டு சமயமாக இருந்திருக்க வேண்டும். அத்தனையும் மூக்கம்மா ஆச்சி சிரிக்கிற படங்கள். ஆச்சியின் முகத்தை மட்டும் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட அந்தப் பக்கவாட்டுப் படம் அருமையாக இருக்கும். கண்கள் இடுங்கி, பற்கள் அற்ற வாய் ஒரு பறவைக் குஞ்சின் அலகு போல் திறந்து, நாடியில் ஒரே ஒரு முடி வளர்ந்திருக்க, அவள் சிரிக்கிற அந்தப் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அப்பா, என்ன கிரேஸ் பாரு’ என்று சொன்னார். அதைப் பார்த்த அம்மாச்சி, ‘அப்படியே கனிஞ்சு போய் இருக்கா’ என்று சொல்லும் போது அவள் கண் கலங்கியது. ஜன்னல் பக்கம் போய் வெளிச்சத்தில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தவள், ‘மூக்கம்மா படம் என் கிட்டேயே இருக்கட்டும்’ என்று சொல்லியபடி வந்தாள். ‘அது உங்களுக்குத்தான் அத்தை’ என்று அப்பா சொன்னார். அம்மாச்சி கையில் இருந்து அதைத் திரும்பி வாங்கக் கூட இல்லை.
ஆச்சி திருவை பக்கம் காலை நீட்டிக்கொண்டு உளுந்து உடைக்கிற ஒரு படத்தில் வெயில் அத்தனை மாயங்களையும் செய்திருக்கும். குத்துப் புரையில் இருக்கிற கல் உரல், வழுவழு வென்று இருக்கிற பூண் போட்ட உலக்கை, மாடக்குழியில் இருந்து வடிந்திருந்த எண்ணெய்க் கால்கள், புடலங்கொடியின் தட்டுத் தட்டான இலைகள் எல்லாவற்றின் மேலும் வெயில் விழுந்திருக்க, ஆச்சி திருவையைச் சுற்றும் அந்தப் படம் ஒரு துக்கத்தை உண்டு பண்ணும். இந்த உலகம் அவளைத் தனியே அந்தத் திருவையுடன் விட்டுவிட்டது போலவும், விளைகிற மொத்த உளுந்தையும் அவள் காலம் காலமாகக் கருப்பும் வெள்ளையுமாக உடைத்துக்கொண்டு இருப்பது போலவும் இருக்கும்.
மூக்கம்மா ஆச்சி எங்கள் வீட்டுக்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டாள். சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு எதையாவது தராசின் எதிர்த் தட்டில் வைத்துவிட வேண்டும் என்று நினைப்பாள் போல. இப்படி ஏதாவது செய்துகொண்டே இருப்பாள். சாதாரண வேலை யாக இராது அது. கனத்த வேலையாக இருக்கும். எத்தனை கோட்டை நெல்லையும் ஒரு ஆளாக வெந்து தட்டுவாள். பத்து பக்கா பச்சரிசி மாவை ஒத்தையில் இடிப்பாள். ஊரில் இருந்து அவள் கொண்டுவந்த காணத்தை மண் சட்டியில் வறுத்துத் தட்டும் போது அடிக்கிற வாசம் அப்படி இருக்கும். பரணில் இருக்கும் வெங்கலப் பாத்திரங்களை இறக்கி வாய்க்காலுக்குக் கொண்டு போய் விளக்கியெடுத்து வெயிலில் வைப்பாள். ‘சொன்னால் கேட்க மாட்டீங்களா பெரியம்ம? செத்த நேரம் ஒரு இடத்தில் அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தா என்ன?’ என்று அம்மா கேட்டால், ‘ஓடுத வரைக்கி வண்டி ஓடிக்கிட்டே இருக்கணும். நிக்கப் படாது’ என்று சொல்லிய படி, வாசலில் புளிச் சிப்பத்தை ஓலைப்பாயோடு விரித்துக் காய வைக்கப் போய்விடுவாள்.
இதைப் பார்த்துக்கொண்டே நடையேறி வந்த கல்லூர் சித்தப்பா, குடையை மடக்கித் தூண் பக்கம் சாத்தியபடி அப்பா விடம், ‘கிழவி வந்துட்டாளா ஊழியத் தீவனத்துக்கு? இன்னும் ரெண்டு மாசத்துக்கு இங்கேயே பட்டறையைப் போட்டிருவாளே’ என்று சொன்னார். அசிங்கமாக ஒரு சிரிப்பு வேறு. இதை அவர் சொல்லி முடிக்கக் கூட இல்லை. அப்பா அந்தக் குடையை எடுத்து அவர் கையில் கொடுத்தார். ‘உம்ம யோக்கியதை எல்லாருக்கும் தெரியும். கிளம்பும்’ என்று தெரு வாசலைப் பார்க்கக் கையைக் காட்டினார். அப்பா இவ்வளவு கோபம் எல்லாம் படுவதே இல்லை. இந்த ஆள் பண்ணுகிற படுக்காளித் தனத்துக்கு’ என்று ஏதேதோ கெட்ட வார்த்தை சொல்ல ஆரம்பித்தவர் ஆச்சியைப் பார்த்தார். வெயில் கடல் போல் வாசல் முழுவதும் கொந்தளித்தபடி இருக்க, ஒரு படகினைச் செலுத்துவது போல மூக்கம்மாச்சி அந்த ஓலைப் பாயின் மேல் அமர்ந்து புளியங்கொட்டைகளை எடுத்துக்கொண்டு இருந்தாள். குத்தவைத்திருந்த அவள் அங்கிருந்தபடியே வாயைப் பொத்திக் காட்டியது போல இருந்தது. சத்தம் போடுவதை அப்படியே நிறுத்திவிட்டு அப்பா உள்ளே போனார்.
கொஞ்ச நேரம் கழித்து ஆச்சி கையைத் துடைத்துக்கொண்டே வந்தாள். அப்பா வருத்தப்பட்டு இருப்பாரோ என்னவோ என்று, ‘கல்லூர்க்காரன் குத்தமா ஒண்ணும் சொல்லலையே. உள்ளதைத் தானே சொல்லுதான். என்ன? ஆற அமர கல் திண்ணையில் உட்காந்து ஒரு செம்பு தண்ணியைக் குடிச்சிட்டுச் சொல்லி யிருக்கலாம். அதுவரை அவனுக்குப் பொறுக்கலை. நடையேறின உடனே சொல்லணும்னு தோணியிருக்கு. சொல்லீட்டான்’ என்று சொல்லும் போது சேலை நுனியால் வாயைப் பொத்திக் கொண்டாள்.
மூக்கம்மா ஆச்சி அதற்குப் பிறகு யாரிடமும் பேசவில்லை . நேரே கன்றுக்குட்டி நிற்கிற தொழுவுக்குப் போனாள். அதன் முன் எப்போதும் இருக்கிற கல் தொட்டியின் விளிம்பில் உட்கார்ந்து கன்றுக்குட்டியைத் தடவிக்கொடுத்தாள். அது விடாமல் அவளுடைய முழங்கையை நக்கியதை நாசியை உறிஞ்சியபடி ஏற்றுக்கொண்டாள். ஓட்டுமேல் இருந்து ஒரு காகம் பறந்து வந்து கன்றுகுட்டியின் முதுகில் உட்கார்கிறவரை அப்படியே இருந்தாள்.
‘அப்படியே மத்தியானம் கொஞ்ச நேரம் படுத்துக் கிடக்கிற மாதிரி தானே இருக்காங்க. ஆச்சி கோனார் வரலை. பால் கறக் கணும்’னு பக்கத்தில் போய்ச் சொன்னால் நான் ஆச்சு, செம்பைக் கொடுண்ணு எழுந்திருச்சாலும் எழுந்திருச்சிருவாங்க’ அப்பா நின்றுகொண்டே மூக்கம்மா ஆச்சியைப் பார்த்துச் சொன்னார். நாங்கள் எல்லோரும் ஆச்சியை நீ, நான் என்று ஒருமையில்தான் சொல்வோம். அப்பா மரியாதையாகவே பேசுவார்.
துக்கம் விசாரிக்கிற சம்பிரதாயத்தில் யாரோ அம்மாவிடம், ‘அவ ஒண்ணு மாறாந்தையில் இருப்பா. அதை விட்டா இங்கே தானே இருப்பா. ரெண்டு அட்ரஸ் தானே அவளுக்கு. வேற ஒரு பக்கமும் தேடவே வேண்டாமே’ என்று ஆச்சியைப்பார்த்துச் சொன்னார்கள்.
‘நேத்து பொழுதூரத் தான் பெரியம்மை வந்தா. எப்போ வந்தாலும் இலந்தைப் பழமும் பிரண்டையும் பறிச்சுக்கிட்டு வாரதைப் போல நேத்தும் கொண்டாந்து இருக்கா. எப்பவுமே சாப்பிடுதது யார் கூட உட்கார்ந்து சாப்பிட்டாலும் , படுக்கிறது எங்க அம்மை இருந்த ரூமிலதான் போய்ப் படுத்துக்கிடுவா. ‘அங்க ஃபேன் கிடையாது, இங்கே படு’ண்ணா கேட்க மாட்டா. ‘அவ இருந்த வரைக்கும் அவ கூட என்னத்தையாவது பேசிக்கிட்டு கிடப்பேன். இப்போ என்னத்தையாவது நினைச்சுக்கிட்டு அங்கனேயே கிடந்துருதேன்’னு சொல்லீருவா. நேத்துக் கூட அந்த மாதிரி அங்கேயே தான் படுத்திருந்தா’ அம்மா ரொம்பவும் உருத்தாக பதில் சொல்லுவாள்.
துக்கம் கேட்கிறவர்கள் அதற்கு மட்டுமா வருகிறார்கள் அவர்கள் சாமர்த்தியம் தெரிய வேண்டாமா? ‘அக்கா அக்காண்ணு அத்தையைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பா. அதே மாதிரி அங்கேயே படுத்துக் கிடந்து அக்கா கூடயே சத்தங் காட்டாமல் போயிட்டா’ என்று பேச்சு போயிற்று. அம்மாவுக்கு இப்படிப் பாசாங்காக நீண்டுகொண்டு போவது பிடிக்கவில்லை. என்னைக் பார்த்து, ‘அப்பாவுக்கு ஏதாவது தகவல் வந்துதா? அக்கா புறப்பட்டுட்டாளா?’ என்று பேச்சை மாற்றினாள்.
கோமு அக்காவுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். எப்படி இதை எடுத்துக்கொள்ளப் போகிறாள் என்று தெரியவில்லை. அவளுக்குத் தலைப் பிள்ளை பிறந்து இறந்து போனதும் உடம்புக்குக் கொஞ்சம் சரியில்லாமல் போய்விட்டது. உடம்புக்குச் சரியில்லை என்றால் சாதாரணமில்லை. திடீர் திடீர் என்று எழுந்திருந்து ஓட ஆரம்பித்துவிட்டாள். இடுப்புச் சேலை மீது கூட அவ்வளவு கவனம் இருந்ததாகச் சொல்லமுடியாது. அம்மாவுக்கு வருத்தத்தை விடவும் இளைப்பு அதிகம் ஆகிவிட்டது. ஒன்றும் செய்ய முடிய வில்லை. மூக்கம்மா ஆச்சிதான் கூடவே இருந்தாள்.
அக்காவுடன் மூக்கம்மா ஆச்சி எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருந்தாள். வழக்கமாக அவள் பேசுவது போல அல்லாமல் வேறு மாதிரியான தணிந்த குரலில் இருந்தது அது. நாங்கள் எல்லோரும் உறங்கின பிறகு கூட, இரவில் மூக்கம்மா ஆச்சி பேசிக்கொண்டே இருப்பது மழைச் சத்தம் போல பாட்டம் பாட்டமாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. பேச்சுதான் ஔடதம் என்று ஆச்சிக்குத் தெரிந்திருந்தது. அக்கா பேசுவதையும் இவளே பேசி, பதிலும் இவளே சொல்லி, ஒரு வித்தியாசமான சம்பாஷணையை அவர்களுக்கு உள்ளே ஆச்சி உண்டாக்கியிருந்தாள்.
எங்களுடைய அம்மாத் தாத்தாவைப் பற்றி அக்காவுடன் பேசிக் கொண்டு இருப்பதை ஒருநாள் கேட்கமுடிந்தது. மூக்கம்மா ஆச்சி தாத்தா போடுகிற ஒரு சந்தனக் கலர் சட்டையப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அந்தக் காலத்தில் மேல் துண்டு போடுகிறதே அபூர்வம். உங்க தாத்தா துரை கிட்டே வேலை பார்த்ததாலே வட்டக் கழுத்து சட்டை போடுவா. அதிலேயும் சந்தனக் கலர் சட்டைதான் ஜாஸ்தி இருக்கும். மூணு பித்தான். மூணும் தங்கம். சிவப்பு உல்லன் நூலில் சரடு மாதிரி மூணையும் கொருத்து இருக்கும். ஆளு வீமன் மாதிரித்தான் இருப்பா. எனக்கு மூடி முழிக்கிறதுக்குள்ளே பொசுக் குண்ணு இவ்வளவும் ஆகிவிட்டது தெரியும். தனியாவே இவ இருக்காண்ணும் தெரியும். ஆனா ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டா. எனக்குத் தான் அடிச்சுக்கிடும். தவியா தவிக்கும். இங்க வந்த இடத்தில் ஒருதடவை கிறுக்கு ரொம்ப கூடிட்டுது. கோட் ஸ்டாண்டில் கழட்டி போட்டிருந்த தாத்தா சட்டையை மோந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அதை உங்க அம்மாச்சி பார்த்துட்டா. ஒண்ணுமே சொல்லலை. ராத்திரி என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதா. மாலை மாலையா கண்ணீர் விடுதா. நான் பேசாமல் கல்லு மாதிரி இருக்கேன். பொங்கிப் பொங்கி அழுகிறதை அவ நிறுத்தவே இல்லை’. இவ்வளவையும் கரண்டை அளவு தண்ணீர் சத்தமில்லாமல் ஓடுகிற ஆறு மாதிரி மூக்கம்மா ஆச்சி அக்காவிடம் சொல்லிக்கொண்டே போனாள். ராத்திரியில் நெட்டலிங்க மரத்தில் இருந்து கொட்டை ஒவ்வொன்றாக விழும் போது சத்தம் கேட்கிற மாதிரியும் கேட்காத மாதிரியும் இருக்கும். அப்படி இருந்தது.
இன்னொரு தடவை, மழை பெய்து குளம் பெருகி மருகால் போனால் அவள் ஊர் எப்படி இருக்கும் என்பதைப் படம் மாதிரி விவரித்துக்கொண்டிருந்தாள். உண்மையோ பொய்யோ தெரியாது. மூக்கம்மா ஆச்சி சொல்வதைப் பார்த்தால் நிஜம் மாதிரித்தான் இருந்தது. ‘பத்து வருஷம் பெய்யாவிட்டால் கூட அதுக்கு ஒண்ணும் ஆகாது. எப்படா மழை பெய்யும்ணு ஓட்டுக்கு உள்ளேயே இருக்கும். மழை விழ வேண்டியதுதான் பாக்கி. நான் இருக்கேன், நான் இருக்கேன்’னு வெளியே வந்து நத்தை பூரா ஊந்து வந்து போக ஆரம்பிச்சிரும்.’ அப்படிச் சொல்லும் போது மூக்கம்மா ஆச்சி தரையில் தனது விரல்களை ஊன்றி, நத்தை போல நகர்த்தி கோமு அக்கா பாதம் வரை கொண்டுபோனாள். ஒரு நத்தை பிசுபிசுவென்று அக்கா காலில் ஏறப் போவது போல இருந்திருக்கும். அக்கா காலை இழுத்துக்கொண்டாள்.
பெருவிரல்கள் கட்டப்பட்டிருந்த மூக்கம்மா ஆச்சியின் கால் களைப் பார்த்தபடியே இதை நினைத்திருந்தேன். ஆச்சியின் பாதம் சிறு பிள்ளைகள் உடையதைப் போல இருந்தது. வெளியூரில் இருந்து வரும்போது அம்மாவுக்கு அக்காவுக்கு வாங்குகிற ஞாபகத்தில் ஒருதடவை அப்பா மூக்கம்மா ஆச்சிக்கும் செருப்பு வாங்கிவந்து விட்டார். அது ஆச்சி கால் அளவுக்கு ரொம்பப் பெரியது. மாற்றி விடலாம் என அப்பா சொன்னார். ‘வேண்டாம், இருக்கட்டும்’ என்று ஆச்சி சொல்லிவிட்டாள். ‘எது அளவுப்படி நடந்தது இது வரைக்கு’ என்று சேர்த்துச் சொன்னதுதான் கஷ்டமாக இருந்தது.
சபாபதி மாமாவிடம்தான் மற்றப் பொறுப்புக்களைக் கொடுத் திருந்தது. யாருக்கு எல்லாம் தகவல் சொல்லவேண்டும், எத்தனை மணிக்கு எடுப்பது, எங்கு கொண்டு போவது, கருப்பந்துறை மயானமா, சிந்து பூந்துறையா?, குருக்களையா, குடிமகன், தவசிப் பிள்ளை, பலசரக்கு என்று எல்லாவற்றையும் மடமடவென்று மாமா ஏற்பாடு செய்வது ஆச்சரியமாக இருந்தது.
சபாபதி மாமாதான் அப்பாவிடம் கேட்டார், ‘பேப்பர்லே போட வேண்டாமா?’. என்னிடம்தான் மாமா கேட்டது போல ‘கண்டிப்பா போடணும்’ என்று நான் உடனடியாகச் சொன்னேன். அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார். ‘போட்டோ ஏதாவது போடணுமா? இல்லை, சும்மா இந்த மாதிரி விபரம், இத்தனை மணிக்கு இங்கே வச்சு மத்தது எல்லாம்’னு தகவல் மட்டும் போதுமா?’. சபாபதி மாமா கேட்டதும் அப்பா, அத்தை ஃபோட்டோ நம்ம வீட்டில எத்தனை இருக்கு’ என்றார். படம் அவசியம் என்பதைத் தான் அவர் அப்படிச் சொன்னார்.
‘ஆச்சி சைட் போஸ்ல திரும்பிக்கிட்டு இருப்பாங்க இல்ல. நீங்க எடுத்தது. அது ரொம்ப நல்லா இருக்கும் பா’ என்றேன். இப்போதும் அப்பா இன்னொரு தடவை என்னைப் பார்த்துச் சிரித்தார்.
பட்டாசலுக்கு வந்தவர், அம்மாவிடம் சொல்லவந்ததை விட்டு விட்டு மூக்கம்மா ஆச்சி தலைமாட்டில் எரிகிற விளக்கையே பார்த்தார். நானும் அப்பா பக்கத்திலேயே நின்றேன். இதன் பின்பும் இத்தனை அமைதியாகவும் துல்லியமாகவும் ஆச்சி இருக்க முடியுமா? மிகச் சின்ன முகம். பூஜைக்கு வைத்த வெற்றிலை மாதிரித் திருத்தம். அவள் கொண்டு வருகிற பிரண்டைக் கொடி போலத் தரையோடு தரையாக.
அம்மா, ‘என்ன?’ என்கிறது போல அப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள். அப்பா நான் சொன்ன அந்தப் புகைப்படம் பற்றியும், அதை அம்மாச்சி அவளுக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டதையும் , அம்மாச்சி பெட்டியில் அது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் சொன்னதை நானும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
‘வேணும்னா அம்மாச்சி பெட்டியை நான் பார்க்கட்டுமா?’ என்று அம்மாவிடம் கேட்டேன். விளக்கில் எண்ணெயை ஊற்றி, திரியைத் தூண்டி, வகிட்டில் விரலைத் தடவியபடி அம்மா, சாவி இருக்கிற இடத்தைச் சொன்னாள். ‘அம்மாச்சி ரூம்ல பெட்டி இருக்கிற இடம் தெரியும் அல்லவா?’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டே அது எங்கே இருக்கிறது என அவளே சொல்லியும் விட்டாள்.
அம்மாச்சி அறையைக் கழுவிவிட்டிருந்தார்கள். அந்த அறையில் தூங்கும் போது மூக்கம்மா ஆச்சிக்கு இப்படி ஆனதால் டெட்டால் உபயோகித்து இருந்தார்கள். அதை பத்தி வாசனையால் தாண்ட முடியவில்லை. அறையில் அதிக வெளிச்சமும் இல்லை. இருட் டாகவும் இல்லை. போதுமானதாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே யாரோ எட்டிப் பார்த்துவிட்டுப் போவது மாதிரி, செம்பரத்தம் பூக்களோடு கிளை அசைந்து விலகியது.
ஒரு பெட்டியைத் திறந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டிருந்தது. அதுவும் இது போன்ற வழவழப்பு நிறைந்த ஒரு மரப் பெட்டியைத் திறப்பது வேறு ஒரு உலகத்தில் நிகழ்வது போல இருந்தது. எதனாலோ, ஒரு வேளை இரண்டு பக்கவாட்டிலும் இருந்த பூ வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடிகளாலோ, அது ஒரு
ஹார்மோனியப் பெட்டி போலவும், எந்த விரலின் பதிவிலும் ஒரு சிறு இசையின் ஒலி அதிலிருந்து உண்டாகும் என்றும் நிச்சயம் உண்டாயிற்று.
இரண்டு தட்டுகளாக வெளியே எடுத்துவைக்கும்படியான தடுப்புப் பலகைகள் உள்ள பெட்டியில் இருந்து ரகசியங்களின் தாழம் பூ வாசனை அடித்தது. சிறு சிறு புத்தகங்கள், சொத்துப் பத்திரங்கள், காலாவதியான ஒரு நூற்பாலையின் பங்குப் பத்திரங்கள், சில பட்டுச் சேலைகள், ஒரு பட்டு நேரியல் எல்லாம் இருந்தன. அம்மாச்சி எப்போதும் கழுத்தில் போட்டிருந்த ஸ்படிக மணி மாலை உள்ளங்கைகளில் குளிர்ந்தது.
எல்லாவற்றிற்கும் கீழ் தனித்தனியாக இரண்டு மூன்று மஞ்சள் பைகள். எல்லாம் கூலக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையின் மேல் விலாசம் உள்ளவை. அதிகம் தேடவேண்டியது இல்லாமல் முதல் பையிலேயே மூக்கம்மா ஆச்சியின் புகைப்படம் இருந்தது
அந்தப் படம், சிவப்பு உல்லன் நூலால் கோர்க்கப் பட்ட மூன்று தங்கப் பித்தான்கள் உள்ள, தாத்தாவின் வட்டக் கழுத்து சந்தனக் கலர் சட்டையின் மேல் இருந்தது.
மூக்கம்மா ஆச்சி அற்புதமாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
மூக்கம்மா ஆச்சி!!! மறக்க முடியாத கதாபாத்திரம்!!யானைக்கதை அருமை!!!