கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 6,577 
 
 

நான்கு பேர்கள் நண்பராம்
நள்ளிரவில் சேர்ந்துபோய்
ஓங்கி நின்ற மரத்தடி
ஒன்று சேர்ந்து தோண்டினர்

பானை ஒன்று தென்பட
எடுத்தனைப் பார்த்தனர்
கண்ணைக் கவரும் பொன்நகை
புதைய லிருக்கக் கண்டனர்.

நான்கு பேரும் புதையலை
நம்பி ஒரு குடிசையில்
வாழ்ந்திருந்த பாட்டியின்
வசம் கொடுத்துச் சொல்லினர்:

‘ஓன்று சேர்ந்து நால்வராய்
வந்து கேட்கும் போதிலிப்
பானை தந்து உதவிடு!
‘பத்திரம்! பத்திரம்!’ என்றனர்.

‘நான்கு பேரும் புதையலை
நாளை என்ன செய்யலாம்?’
என்று எண்ணி இருக்கையில்
நீர் வேட்கை வந்ததாம்

நான்கு பேரில் ஒருவனை
‘நீர்க்குடத்தை வாங்கிவா!’
என்று சொல்லி பாட்டியின்
இருப்பிடத்திற்கனுப்பினர்.

சென்றவனோ கெட்டவன்
செல்வ ஆசை மிக்கவன்
பொன் நிறைந்த பானையை
கொடுக்கச் சொல்லிக் கேட்டனன்.

பாட்டி கொடுக்க மறுத்திட
உரத்த குரலில் அவனுமே
நண்பர் மூவர் கேட்டிட
பாட்டி கொடுக்க மறுப்பதாய்

புகார் சொல்லிப் புலம்பிட
மூவர் ஒன்று சேர்ந்துமே
பாட்டி விரைந்து கொடுயென
‘வேகம்! வேகம்!’ என்றனர்
பொற்குடத்தைப் பாட்டியும்
எடுத்துப் போகக் கொடுத்திட

அவனும் அதை வாங்கியே
அங்கிருந்து மறைந்தனன்.
நீர்குடத்தை வாங்கப் போய்
நெடிய நேரமானதால்

மூவர் சேர்ந்து பாட்டியின்
இருப்பிடத்தை நெருங்கினர்
பாட்டி சொன்ன விவரத்தால்
எல்லா மறிந்து கொண்டனார்

ஊரிலுள்ள மனறத்தில்
தீர்ப்புச் சொல்லும் ராமராம்
புகார் தன்னைக் கேட்டதும்
புரிந்து கொண்டார் நடந்ததை!

பாட்டி மீது தவறில்லை.,
பாவம் அவள் தூயவள்
காக்க வேண்டிப் பாட்டியை
“தீர்ப்பு சொன்னார் இப்படி

‘மண்ணில் கிட்டும் யாவுமே
மனிதர்க்கல்ல அரசுக்கு
நால்வராகச் சேர்ந்துபோய்
பாட்டியிடன் கேளுங்கள்

நல்கு கின்ற பரிசினை
அரசு வசம் தாருங்கள்
உங்களுக்கு உரியதை
ஊரறியத் தருகிறோம்!!’

என்று அனுப்பி வைத்திட
மீதி மூவர் கூடியே
ஓடிப்போன ஒருவனைத்
தேடி இன்னும் அலைவதால்….

ஆக்கப்பட்ட யாவுமே
அரசுடைமை என்பதை
அறிந்து வாழ்வீர் நீங்களும்
அல்லலில்லை என்றுமே!

– பழைய கதை புதிய பாடல், கோகுலம் தமிழ்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *