காலவெள்ளம்




(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் எங்கையடா?
அவரது ஆவேசக் குரல்
அப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறது.
வேலுபொடியன்ரை முச்சந்தியில்
கூடி நிற்கின்ற வர்களுக்குத் திகைப்பு.
ஊரின் தென்மேற்கிலுள்ள
புறம்போக்கு நிலத்தில் பெருங்கலட்டி.
பெருங்கலட்டியிலுள்ள
பற்றைகளுக்குப் பின்னால் காலைக்
கடனை முடித்தபின்பு, ஒவ்வொருவராக
வந்து, வேலுப் பொடியன்ரை
முற்சந்தியில் கூடுவர். அவர்கள்
எல்லோரும் சேர்ந்து ஒரு குட்டி
பார்ளிமென்ரை நடத்திவிட்டுத்தான்
தங்கள் வீடுகளுக்குச் செல்வது வழக்கம்.
குடும்ப விவகாரங்கள், ஊர்
பிரச்சினைகள், குடுக்கல் வாங்கல்
பிணக்குகள், ஊர் வம்புகள், நாட்டு
நடப்புகள், அரசியல் போன்ற
விவகாரங்கள் தான் அந்தப்
பார்ளிமென்ரில் பேசப்படும்.
போதிய ஆட்கள் வந்து சேர்ந்து
விட்டனர்.
இன்னும் பார்ளிமென்ற்
தொடங்கவில்லை.
அவன் எங்கையடா?
அவரது ஆவேசக் குரல் அங்கு கூடி நின்றவர்களைத் திணறடிக்கின்றது.
‘அவன் ஆராயிருக்கும்? ‘
‘அவன் ஆராயிருந்தாலென்ன. இண்டைக்கு அவன்ரை பாடு அதோ கெதிதான்’
முச்சந்தியில் கூடி நிற்கின்ற ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ண அலைகள்.
‘அந்தப் பிராமணப் பயல் எங்கையடா?‘
இடுப்பில் நாலு முழக் கதர் வேட்டி, தோளில் கதர் சால்வை. தலையில் குடும்பி. கையில் எந்த நேரமும் ஒரு மஞ்சள் நிற துணிப்பை. இளமைத் தோற்றம் எலுமிச்சை பழநிறம்.
தொழில், ஊர் சேவை.
அவன் பிராமணனல்ல. அது பட்டப் பெயர்.
‘அட அந்த அப்பாவி யார்? ‘
ஒருவர்.
‘முடிஞ்சுது. இண்டைக்கு அந்த வேதவனத்தின்ரை பாடு அதோகதிதான்’
மற்றவர்.
‘அந்த அப்பிராணி மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாதே. ‘
‘தன்ரை வாழ்க்கையை ஊர் சேவைக்காக அர்ப்பணிச்ச பொடியனாச்சே. அதுக்கா இந்தப் பேரிடி? ‘
‘நேற்றுப் பொழுது படேக்கைதான் அந்த வேதவனமும், இவர் பெரியண்ணையும் கலகலப்பாய் கதைச்சு, சிரிச்சுப் பேசிக்கொண்டு போனதை நான் பாத்தன்.’
வேலுப்பிள்ளை.
‘பெரியண்ணை எண்டு தான், அந்த ஊரிலை உள்ள சிறுவர் தொடக்கம், பெரியவர்கள் வரை, தில்லையம்பலத்தை உரிமையோட வாஞ்சையுடன் அழைக்கின்றார்கள்.’
‘நேற்றென்ன, மூண்டு நாட்களாய், எங்கடை ஊரின் வடமேற்குப் புறத்திலுள்ள காந்தி நகரிலை, வேதவனம் ஒரு பெரிய மகாநாட்டை நடத்தினார். அது வெற்றிகரமாய் நடந்து முடியிறதுக்கு, பெரியண்ணை மும்முரமாய் அலுவல் பார்த்தவர்.
‘வேதவனத்தின்ரை வலது கையாய், மூண்டு நாட்களும் பெரியண்ணை கடுமையாய் செயல்பட்டார். அப்பிடிப்பட்ட அவர், இண்டைக்கு வேதவனத்தைத் துலைச்சுக்கட்டத் துடிக் கிறாரோ’.
கணபதிப்பிள்ளை மனம் வெதும்பிக் கூறுகின்றார்.
சவாரிச் செல்லன்ரை பூவரசம் வேலி.
வேலியிலுள்ள பூவரசம் கதியால் ஒன்றை, பெரியண்ணை துள்ளி எட்டிப்பிடித்து, இடுக்கி இரண்டாய் முறிக்கின்றார்.
‘இண்டைக்கு என்ன நடக்கப்போகுதோ?’
முச்சந்தியில் கூடி நிற்கின்றவர்களுக்குப் பதட்டம்.
‘இந்தப் பெரியண்ணைக்கு என்ன புடிச்சிட்டுது? இவர் ஏன் இப்பிடி அட்டகாசம் பண்ணிறார்? ‘
அவர்கள் மனதில் கேள்வி.
‘எங்கடை ஊரிலை மூண்டு நாட்களாய் மறுமலர்ச்சி மகாநாட்டை சிறப்பாய் நடத்தி முடிச்சார்’ வேதவனம்.
நேற்றுத்தான் மகாநாட்டின் கடைசி நாள்.
நேற்று மகாநாட்டில் பங்குபற்றிய எல்லாருக்கும் சமபந்திப் போசனம். அதையும்கூட, பெரியண்ணை நிண்டு மும்முரமாய் நடத்தி முடித்தார்.
அப்படிப்பட்டவருக்கு இண்டைக்கு என்ன புடிச்சிட் டுது? ஏன் இப்பிடி அட்டகாசம் பண்ணிறார்?
பெரியண்ணனின் நெருங்கிய நண்பன் சண்டியன் சண்முகத்தைக் கேட்கின்றார், பாஞ்சான் கந்தையா.
‘இப்ப இவர் பெரியண்ணை ஏன் வேதவனத்தை அடிச்சு முறிக்கத் துடிக்கின்றார்?’
கார்த்திகேசுவின் கேள்வி.
மறுமலர்ச்சி மகாநாட்டுக்கு வந்திருந்த இருநூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் எல்லாருக்கும், எங்கடை ஊர் மக்கள் ஒண்டு சேர்ந்து, மூண்டு நாட்களும், மூண்டு நேரமும் உணவளித்தம்.
மகாநாட்டு மண்டபத்துக்குப் பக்கத்திலுள்ள மூண்டு வீடுகளையும் எடுத்தம். காலை, பகல், இரவு உணவு வகைகளை அந்த மூண்டு வீடுகளிலும் சமைத்து வழங்கினம். அரிசி, காய் கறி வகைகளைச் சேர்ப்பதில் பெரியண்ணை தான் முன்னுக்கு நிண்டு செயல்பட்டார். அவரது தலைமையில்தான் ‘சாப்பாட் சபை ‘களும் சிறப்பாய் நடந்தது. எங்கடை ஊரிலை நடக்கிற நன்மை தீமைகள் எல்லாம்,பெரியண்ணை யின்ரை தலைமையில் தான் நடந்து வருகின்றன.
‘அவனன்றி அணுவும் அசையாது. அதைப்போல பெரியண்ணையின்றி எந்தப் பொதுக்காரியமும் நடைபெறுவ தேயில்லை. எங்கடை மக்களுக்காகப் பெரியண்ணை தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துள்ளார்.
எங்கடை ஊர்க்கட்டுப்பாட்டை எவரும் மீறி நடக்க முடியாது. அதுக்குப் பெரியண்ணை எள்ளளவும் இடம் கொடார்.
பெரியண்ணை தனிக்கட்டை. திருமணம் முடிக்காத ஐம்பது வயது பிரமச்சாரி.
பெரியண்ணனுக்கு ஐந்து சகோதரிகள். அவர் தான் குடும்பத்தில் மூத்தவர்.
அவரது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார்.
குடும்பச்சுமை அவரது தலையில்.
போதிய நிலபுலன்களை அவரது பெற்றோர் விட்டுச் சென்றிருந்தனர்.
கஷ்டப்பட்டு உழைத்து தன் ஐந்து சகோதரிகளையும் கரை சேர்த்துவிட்டார்.
அவருக்கு கல்யாண வயசு கடந்துவிட்டது.
இப்போ அவர்கட்டைப் பிரமச்சாரி.
பெரியண்ணை எப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும், அவர் பொது வேலைகளில் ஈடுபடுவதில் என்றுமே பின் நின்றதில்லை.
அவரது தோட்டத்தில் வேலை செய்வதற்கு நீ முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு ஐயாவத்தை, நாவலடி போன்ற குறிச்சிகளைச் சேர்ந்த எட்டுப் பத்துப் பேர் முன்வருவார்கள்.
பெரியண்ணையின் தோட்டத்தில் வேலை செய்கின்ற குடும்பங்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கு யண்ணை ஒரு நாளும் கூலி கொடுப்பதில்லை.
அவர்களுக்கு சாப்பாடு தாராளம் . காலையில் குரக்கன் புட்டு அல்லது ‘கூப்பன்மாப்புட்டும் மரவள்ளிக்கிழங்குக் கறியும், தேத்தண்ணி சீனியுடன். மத்தியானம் நெல்லரிசிச் சோறும் இரண்டு மூன்று கறிகளும்.
அவரது ‘குடிமக்களின்’ நன்மை தீமைகளில் பெரி யண்ணை பங்கெடுப்பார். இறப்புப் பிறப்புக்கள், திருமணங் கள் போன்ற காலங்களின்போது, பெரியண்ணை தான் செலவுப் பொறுப்பு. தாராளமாய் பெரியண்ணை தனது பணத்தைச் செலவு செய்வார்.
சித்திரை புதுவருசப்பிறப்பு, தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் பெரியண்ணை தன் குடிமக்களுக்கு புது உடுபுட வைகள் கொடுப்பது வழக்கம். ஆண்களுக்கு நான்கு முழக் ‘காரிக்கன்’ வேட்டிகளும், சிறுவர்களுக்கு நரமுண்டுத் துண்டுகளும், சிறுமிகளுக்கு சீத்தைச் சட்டைகள், பெண் களுக்கு ‘காடுவெட்டி’ச் சேலைகளும் கொடுப்பார். எல்லோரும் பெரியண்ணை வீட்டுக்கு வந்து உடுப்புகளை வாங்கிச் செல்வார்கள்.
புதுவருடக் கைவிஷேசம் தலைக்கு ஒரு ரூபா.
குடிமக்களின் கலியாணவீடு, மரண வீடு, நோய்நொடிக் காலங்களில் பெரியண்ணை பார்த்தும் பாராமல் செலவு செய்வார்.
ஊரில் உள்ள கோவில்களின் கட்டுமான திருப்பணி வேலைகளிலும் பெரியண்ணை முன்னின்றுழைப்பார்.
கிராமத்தில் ஏற்படும் பிணக்குகளையும், சண்டை சச்சரவு களையும் தனது அதிகாரத்தையும் சமயோசித புத்தியையும் பாவித்து தீர்த்து வைப்பார். இதற்குக் கிராம மக்கள் பெரியண்ணையைத்தான் எதிர்பார்ப்பர்.
எங்கள் ஊரின் ஒற்றுமை, கட்டுக்கோப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் பெரியண்ணை எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக அக்கறை செலுத்தி வருகின்றார்.
எங்கள் ஊரைச் சேர்ந்த ஆசாரி கந்தசாமி, கோவில் தேர் செய்ய சிங்கப்பூர் சென்றார்.
மூன்று வருடங்களின் பின் அவர் பெரும் பணக்காரனாக திரும்பி வந்தார்.
பணக்கார ஆசாரி கந்தசாமி ஊரில் எவரையும் மதிப்பதில்லை.
ஆசாரி கந்தசாமியின் தந்தை திடீர் என மாரடைப்பால் இறந்துபோனார்.
தந்தையின் செத்தவீட்டை பெரும் டாம்பீகமாகச் செய்து தனது அந்தஸ்தை நிலைநாட்ட எண்ணினார் கந்தசாமி.
தேர் சாயலில் பாடை கட்டப்பட்டது.
கரையூரில் இருந்து ஐந்து கூட்டம் பறை மேளம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தடுக்க பெரியண்ணராக்கள் முயற்சித்தனர்.
பலனில்லை.
பொலிஸ் காவலுடன் பிரேதம் எடுக்கப்பட்டது.
சில நாட்களின் பின் ஆசாரி கந்தசாமி தனது வில் வண்டியில் யாழ்ப்பாணப் பெரியபட்டணம் சென்றிருந்தார்.
ஆசாரி வீடு திரும்பும்பொழுது நள்ளிரவாகிவிட்டது. எங்கள் ஊர் தெற்கெல்லையில் உள்ள கூத்தாடுவான் குளத்தடியில் நான்கைந்து பேரின் நடமாட்டம்.
விடிந்ததும் விடியாததுமாக கறுவல் கொத்தான் காலைக் கடன் முடிக்க வயல் வெளியிலுள்ள அலரிப்புட்டிக்குச் செல்கின்றான்.
கூத்தாடுவான் குளத்தடியில் தேடுவாரற்ற நிலையில் ஒரு வில்லு வண்டில்.
மாடுகளைக் காணவில்லை.
முனகல் சத்தம்
எங்கிருந்து வருகிறது?
வில்லு மதகின் கீழிருந்துதான் முனகல்.
சுற்றப்பட்ட புல்பாய்க்குளிருந்துதான் சத்தம் வருகின்றது. வழிப்போக்கர் இருவரின் உதவியுடன் சுற்றப்பட்ட புற்பாய் வெளியே எடுக்கப்படுகின்றது.
அடிகாயங்களுடன் ஆசாரி கந்தசாமி.
ஒரு மாதத்திற்கு மேல் யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரி யில் படுத்த படுக்கையாக கந்தசாமி.
கந்தசாமியின் கைகால்கள் சரியாகச் செயல்பட மறுக்கின்றன.
நான்கு மாதங்களுக்கு மேலாக கந்தசாமியால் வெளியே நடமாட முடியவில்லை.
பொலிஸ் வந்தது.
விசாரணை நடந்தது.
பலன்?
பெரியண்ணையாக்கள் தான் தன்னை அடித்து முறித்தது என்று, ஆசாரி கந்தசாமிக்கு நன்றாகத் தெரியும்.
பயம் காரணமாக கந்தசாமியால் வாய்திறக்க முடிய வில்லை.
அடித்தவர்கள் யார் என்று தனக்குத் தெரியாதென திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஆசாரி கந்தசாமி.
‘பெரியண்ணை’
‘என்ன வேதவனம்?
‘உங்கடை உதவியாலை நேற்றும் இண்டைக்கும் எங்கடை மகாநாடு சிறப்பாய் நடந்தது. நாளைக்கு மகாநாட்டு கடைசி நிகழ்ச்சி. அதுதான் மிக முக்கியமானது. அதன் வெற்றியும் சிறப்பும் உங்கடை ஒத்துழைப்பிலைதான் தங்கிக்கிடக்கு’.
‘அதென்ன? ‘
‘மகாநாட்டின் உச்ச கட்டம்தான் சமபந்திப் போசனம்’
‘அதுக்கு நான் என்ன செய்யக்கிடக்கு? ‘
‘எங்கடை ஊரிலையுள்ள கம்பன் புலக் குறிச்சி ஆட்களின்ரை பகுதியைச் சேர்ந்த ஏழெட்டு பேர் இந்த இரண்டு நாள் மகாநாட்டிலை பங்குபற்றியிருக்கினை. அவை யோடை நாவலடியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரி அற்றென்டன் பசுபதியும், கம்பன் புலத்தைச் சேர்ந்த மெக்கானிக் இராசதுரையும் இரண்டு நாள் மகாநாட்டிலையும் பங்குபற்றியிருக்கினை.’
‘அப்பிடியா எங்கள் ஒருதருக்கும் தெரியாமல் போச்சே. என்னாலை நம்பமுடியேல்லை.’
வியப்புடன் கூறுகின்றார் பெரியண்ணை.
‘அவை ஆட்களோடை ஆட்களாய் சேர்ந்து இருந்தினை. அதைப்போலை நாளைக்கு நடக்கிற சமபந்திப் போசனத் திலையும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஆட்களும் பங்குபற்றினால்…
‘என்ன பேய்க்கதை கதைக்கிறாய்? எங்கடை ஊராக்களுக்கு இது தெரிய வந்துது, பெரிய பிரச்சினையாய் போகும். எங்கடை ஊர்க்கட்டுப்பாடு?’
‘அதில்லை பெரியண்ணை, நேற்றும் இண்டைக்கும் நாங்கள் பாடுபட்டது வீணாய்ப்போகும். ‘
‘அப்பென்ன செய்கிறது. ? ‘
‘ஐயாவத்தை,நாவலடியைச் சேர்ந்த மூன்று நாலு பேர் சமபந்தி போசனத்திலை பங்குபற்றினால் நல்லாயிருக்கும்.’
‘எங்கடை ஊராக்கள் என்ன சொல்லுவினமோ…
பெரியண்ணை எங்கடை ஊர் இளம் பொடியளோடை நாங்கள் கதைச்சிருக்கிறம். அவை எல்லாருக்கும் சம்மதம். எங்கடை ஊர் பெரியாக்களை நீங்கள் தான் ஒரு மாதிரி சமாளிக்கவேணும்.
‘இளசுகள் தான் முக்கியம். எங்கடை ஊர் முன்னேற்றத் துக்கு அவங்கள் தான் முன்னுக்கு நிண்டு பாடுபட்டுழைக் கினை.
எங்களாலை அவையோடை ஒத்துழைக்காட்டி ஒண்டும் செய்யேலாது. இந்த விசயத்திலை அவையோடை நாங்கள் பட்டும் படாமலும் சேர்ந்தோட வேண்டியதுதான்.
‘சரி, ஊராக்கள்? ‘
‘பெரியண்ணை, நீங்கள் நினைச்சால் அவையளைச் சமாளிச்சுப் போடுவியள்.
‘வேதவனம் நீ ஆரையாவது கேட்டுப் பார்த்தியா? ‘
‘நான் நாலைஞ்சு பேரைக் கேட்டன். அவை பயத்திலை தயங்கிக் கொண்டிருக்கினை.
நீங்கள் சம்மதிச்சால், அந்த நாவலடி சரவணையும், கம்பன் புலத்து காத்தியும், தாங்கள் தயார் எண்டு சொல்லினை. நீங்கள் என்ன சொல்லிறியள்? ‘
‘இனி என்ன செய்யிறது? அப்ப சரி. காரியம் ஒப்பேற வேணுமே.’
அப்ப நாங்கள் அவையளைக் கூப்பிடுகிறம்.
‘ஆனா ஒண்டு வேதவனம். ‘
‘என்ன பெரியண்ணை?’
‘சரவணையாக்களைத் தலைப்பந்தியிலை இருத்தாதை யுங்கோ. அவையளை, பந்திக்கு இடை டயிலையும், தொங்க லிலையும் ஆக்களோடை ஆக்களாய் இருத்துங்கோ. நான் அந்தப் பக்கம் வரேல்லை.
மறுமலர்ச்சி மகாநாடு சமபந்தி போசனத்துடன் வெற்றி கரமாய் நடந்து முடிந்தது.
மகாநாட்டு முடிவிலை நடந்த சமபந்தி போசனம் பற்றி, ஊரிலை இரவிரவாய் பலவகையான கதைகள் புகைந்தன.
இந்த விவகாரம் விடியுது, விடிய முந்தி பெரியண்ணை காதிலும் விழுகின்றது.
காலையிலேயே பெரியண்ணையின் அட்டகாசம் வெடித்தது.
அவன் எங்கையடா?
‘அந்தப் பிராமணப்பயல் எங்கை போட்டானடா? ‘
‘அவனை இண்டைக்கு நான் அடிச்சு முறிக்கிறன். அவன்ரை குடும்பியை அறுத்தெறியிறன். அவன் எங்கை போட்டானடா?’
அரை மணி நேரத்துக்கு மேல், பெரியண்ணை, வேலுப்பொடியன்ரை முச்சந்தியிலை நிண்டு
அட்டகாசம் பண்ணிக் கமறுகின்றார்.
கமறிக் களைத்த பெரியண்ணை தன் வீட்டுக்கு செல்கின்றார்.
‘அண்ணை அந்த வேதவனத்தை அடிச்சு முடிச்சுப் போட்டியே? ‘
சகோதரி அன்னம் கேட்கின்றாள்.
‘பாவம், அது இப்ப எந்த ஆஸ்பத்திரியிலை கிடக்குதோ? நீயும் வாறியே போய்ப்பாப்பம்.’
அன்னத்தின் பேச்சில் கிண்டல்
‘அவன் என்ரை கண்ணிலை பட்டானெண்டால் தெரியும், அவன்படுகிற பாட்டை’
‘திண்ணைப் பக்கம் ஒருக்கா திரும்பிப் பாரண்ணை’
கேலியாக அன்னம்
திண்ணைக்குக் கட்டியிருக்கின்ற கிடுகுத் தட்டி மறைவில் வேதவனம்.
‘நீ இஞ்சையா இருக்கிறாய்?’
ஆச்சரியமாய் பெரியண்ணை.
வேலுப்பொடியன்ரை முச்சந்திப் பக்கம் போகாதை.
‘வேம்படி வயிரவர் கோயிலுக்குப் பின்னாலை போற ஒற்றையடிப் பாதையாலை போ.
‘நீதானே எனக்குச் சொன்னாய் பெரியண்ணை‘
‘அப்ப அவன் எங்கை?’
– காலவெள்ளம், முதற் பதிப்பு: 19.09.2010, இலங்கை முற்போக்குக் காலை இளகிய மன்றம், கொழும்பு.
நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |