கார்டு மாறிப்போச்சி!




புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார் ராம்குமார். நண்பர், உறவினர் கூட்டத்தைக் கூட்டிப் பெரிய விருந்து கொடுத்தார். வந்தவர்களும் வயிறார உண்டு, பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் அளித்துச் சென்றார்கள்.
பிறகு, சாவகாசமாக அவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்த ராம்குமார், ஒரு வாழ்த்து அட்டையைப் பிரித்துப் படித்ததும் திடுக்கிட் டார்.
‘உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! கடவுள் உங்களுக்கு மன நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கட்டும்!’ என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. கீழே குணசேகரன் என்ற கையெழுத்து.
ராம்குமார் உடனே குணசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னார்.
உடனே, ‘ஐயையோ!’ என்று அலறிவிட்டார் குணசேகரன்.
”குணா, ஏன் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? நீங்கள் என்ன, வேண்டுமென்றா எனக்கு இந்த கார்டைத் தந்திருப்பீர்கள்! ஏதோ கை தவறுதலாக
கார்டு மாறியிருக்கும். டேக் இட் ஈஸி!” என்றார்.
”ஐயோ! நான் அதற்காக வருந்தவில்லை. நான் இன்றைக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். ஒன்று, உங்கள் வீட்டு கிரஹப்பிரவேசம். மற்றொன்று, நண்பர் பிரகாஷின் மனைவியின் இறுதிச் சடங்கு. அவருக்குத் தர வேண்டிய கார்டு உங்களுக்கு வந்துவிட்டது. அதுகூடப் பரவாயில்லை. ‘உங்களின் நீண்ட நாள் கனவு இன்று பலித்திருக்கிறது. உங்களின் தீவிர முயற்சியாலேயே இது கைகூடி இருக்கிறது. வாழ்த்துக்கள்!’ என்று உங்களுக்குத் தர இருந்த கார்டை அவருக்குக் கொடுத்துத் தொலைத்துவிட்டேனே!” என்றார் குணசேகரன்.
– 06th ஆகஸ்ட் 2008