காலம் மறந்த இடம்






அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ | அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம்
துரோகி
அந்தச் சில நாட்கள் ஏக்கத்துடனேயே கழிந்தன. லிஸ்ஸுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளுக்கு மீகாமனின் அறையை ஒதுக்கி இருந்தேன். ப்ராட்லியும் நானும் மேல் தள அதிகாரியின் அறையை எடுத்திருந்தோம். கீழ் நிலை அதிகாரிகள் தங்கும் அறைகளில் ஓல்சன் மற்றும் இரு சிறந்த மாலுமிகளும் தங்கி இருந்தனர். நாப்ஸின் படுக்கையை லிஸ்ஸின் அறையில் போட்டிருந்தேன் அவள் தனிமையை உணராதிருக்க.
ஆங்கிலக் கடல் பரப்பை விட்டு வந்தவுடன் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடல் பரப்பிலேயே வெகு தூரம் பயணம் செய்து கொண்டே இருந்தோம். முதல் இரண்டு படகுகள் எங்களைக் கண்டவுடன் வெகு வேகமாகச் சென்று விட்டன. இன்னொரு சரக்குக் கப்பல் எங்களைச் சுட்டதனால் நாங்கள் மூழ்க வேண்டியதாய்ப் போனது. இதன் பின்தான் எங்களுக்குச் சோதனைகள் வர ஆரம்பித்தன. டீசல் இயந்திரம் ஒன்று பழுதாகி விட்டது. அதை கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் முன் பக்கத்தின் இடது புற தொட்டி ஒன்று நிரம்ப ஆரம்பித்து விட்டது. நான் அப்போது மேல் தளத்தில் இருந்ததால் உடனடியாக என்ன நடக்கிறது என்று கவனித்தேன். சட்டென்று மேல் கதவை மூடி விட்டுக் கீழே போனேன். இந்த நேரத்தில் கலம் இடது புறம் தலை கீழாக இறங்க ஆரம்பித்தது. அதனால் நான் வேறு யாருக்கும் உத்தரவிடாமல் நானே வேகமாகச் சென்று அந்தத் தொட்டியில் நீரை உள் விடும் அடைப்பானை நோக்கி ஓடினேன். அது நன்றாகத் திறந்திருந்தது. அதை மூடி விட்டு அந்தத் தொட்டியில் இருந்து நீரை வெளியேற்றும் எக்கியை இயங்கச் செய்வது ஒரு நிமிட வேலைதான். இருந்தாலும் கடைசி நிமிடத்தில்தான் செய்ய முடிந்தது.
அந்த அடைப்பான் தானாகத் திறந்திருக்க வாய்ப்பே இல்லை. யாரோ ஒருவன் திறந்திருக்க வேண்டும், யாரோ ஒருவன் தானும் அழிந்து எங்கள் அனைவரையும் அவனோடு சேர்த்து அழிக்க வேண்டும் என்று நினைத்தவன்.
அதன் பின் அங்குக் காவல் புரிய ஒருவனை நியமித்தேன். இயந்திரத்தைப் பழுது பார்க்க மறு நாளில் இருந்து ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆகி விட்டது. பெரும்பாலும் நீர்ப் பரப்பிலேயே சும்மா சுற்றிக் கொண்டிருந்தோம். நண்பகலில் மேற்கிலிருந்து புகை வருவதைப் பார்த்தோம். இந்த உலகில் எல்லோரும் எதிரியாய் இருப்பதால் அந்த இன்னொரு இயந்திரத்தை இயக்குவதற்கு உத்தரவிட்டேன் எங்களை நோக்கி வரும் படகில் இருந்து தப்பிக்க. அந்த இயந்திரம் ஆரம்பிக்கும்போது இரும்பு அரை படுவது போன்று ஒரு கர கர சத்தம் கேட்டது. அது நின்றவுடன் நாங்கள் என்னவென்று பார்க்கச் சென்றோம். யாரோ ஒரு குளிர்ந்த உளியை பல் சக்கரத்தில் செருகி வைத்திருந்தார்கள்.
பாதி சரி செய்து விட்டு நொண்டியடித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் இரு நாட்கள் சென்று விட்டன. பழுது முடிந்த அன்றிரவு காவலுக்கு வைத்தவன் என்னை வந்து எழுப்பினான். ஆங்கில நடுத்தர வர்க்கத்தின் ஒரு புத்திசாலியான அவன் மேல் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு.
“சொல் வில்சன். என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
அவன் தன் ஆட்காட்டி விரலை மெதுவாக வாயில் வைத்து “இந்த சேட்டைகளுக்கெல்லாம் யார் காரணம் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்” என்று மெல்ல என் காதில் முணுமுணுத்தான். அந்தப் பெண்ணின் அறையை நோக்கித் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.”அவளது அறையில் இருந்து பதுங்கிப் பதுங்கிச் சிறை வைக்கப்பட்ட மீகாமன் அறைக்குக் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்றாள். பென்சனும் நேற்றிரவு அவளை அங்கு பார்த்தான். ஆனால் இன்றுதான் என்னிடம் சொன்னான். பென்சனுக்குக் கொஞ்சம் மூளை கம்மி. இரண்டையும் இரண்டையும் கூட்டச் சொன்னால் கூட யாராவது எடுத்துக் கொடுத்தால்தான் நான்கு என்று சொல்வான்.”
இதற்கு பதிலாக அவன் நேராக வந்து என் முகத்தில் ஒரு குத்து விட்டிருந்தால் கூட இவ்வளவு ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன்.
“இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். இனிமேலும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இரு. சந்தேகப் படும்படி யாராவது நடந்தால் உடனே எனக்குத் தகவல் தெரிவி” என்று கட்டளை இட்டேன்.
அவன் எனக்கு சல்யூட் வைத்துச் சென்றான். நான் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என் அறையில் அமைதியில்லாமல் உலாவிக் கொண்டிருந்தேன். பொறாமையாலும் பயத்தாலும் பெரும் துயரத்திற்கு ஆளானேன். இறுதியில் ஒரு வழியாகக் கஷ்டப்பட்டுத் தூங்கினேன். நான் எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. அரை வேகத்தில் செல்லுமாறு நான் உத்தரவிட்டிருந்ததால் கடல் பரப்பில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தோம். நமது நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளும் வரை இப்படியே இருப்பதுதான் நல்லது. நேற்றும் இன்று இரவும் கூட வானம் மூட்டமாகவே இருந்தது. மேல் தளத்திற்குக் காலையில் வந்து பார்த்தபோது கதிரவன் நல்ல வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். மாலுமிகளும் தெம்பாக இருந்தார்கள். அனைத்தும் சாதகமாக இருப்பது போல் தெரிந்தது. நேற்றிரவு நடந்த கொடுமையான சந்தேகங்கள் கூட மறந்து கடற் பரப்பைக் கவனிக்கச் சென்று விட்டேன்.
ஆனால் நிலைமையோ தலை கீழ். ஒரு கொடுமையான செய்தி காத்துக்கொண்டிருந்தது. கோணமானியும் காலக் கருவியும் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தன. இந்த இரவுதான் அவைகள் இரண்டுமே உடைக்கப்பட்டிருக்கின்றன. வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் லிஸ் பேசிக் கொண்டிருந்த அதே இரவில்தான் அவைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அதை நினைக்கும்போதே என் மனம் வலித்தது. எந்தவித ஆபத்துக்களையும் நான் தைரியமாக சமாளித்து விடுவேன். ஆனால் லிஸ் ஒரு துரோகி என்று அறியும் போதுதான் எனக்குள் பயம் ஊற்று எடுக்க ஆரம்பித்தது.
ப்ராட்லியையும் ஒல்சனையும் மேல் தளத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். ஆனால் வில்சன் நேற்றிரவு சொன்னதை மட்டும் என் வாழ்க்கையில் என்றும் யாரிடமும் கூறி விடும் தைரியம் எனக்கில்லை. யோசிக்கும் வேளையில் அவள் எங்களை எல்லாம் தாண்டி வான் ஸ்சோன்வர்ட்ஸை சந்திக்கச் சென்றிருந்தால் எப்படியும் நிறைய பேர் பார்த்திருக்கக் கூடும்.
ப்ராட்லி புரியாதது போல் தலையசைத்தான். “என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஜெர்மானியன் மிகவும் அறிவாளியாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான். ஆனால் அவன் நினைப்பது போல் நம்மைத் துன்பத்திற்கு உள்ளாக்கவில்லை. ஏனெனில் நம்மிடம் இன்னும் உதிரி பாகங்கள் இருக்கின்றன.”
இப்போது கவலை தோய்ந்த முகத்தை அசைப்பது என் முறை. “உதிரி பாகங்கள் நம்மிடம் இல்லை. தந்திக் கருவிகள் காணாமல் போன போதே அவைகளும் போய் விட்டன” என்றேன்.
இருவரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். “நமக்கு வழிகாட்டக் கதிரவனும் கவராயமும் துணை இருக்கின்றன” என்றான் ஓல்சன். எதாவது ஒரு இரவு அவர்கள் கவராயத்தைக் கூட களவாடலாம். ஆனால் பகலில் நம்மை எல்லாம் தாண்டிக் கதிரவனை அடைவது சுலபம் அல்ல” என்றான்.
அப்போது ஒருவன் நடுப் பாதை வழியாகத் தலையை நீட்டி என்னிடம் அனுமதி கேட்டு மேலே வந்தான் புத்தம் புதிய காற்றைச் சுவாசிப்பதற்காக. அவன் பென்சன் என்று புரிந்தது. லிஸ் வான் ஸ்சோன்வர்ட்ஸை அன்று இரவு சந்தித்ததைப் பார்த்ததாக வில்சன் சொன்ன அதே ஆள். அவனைச் சிறிது தூரம் கூட்டிச் சென்று எதாவது வித்தியாசமாக நடந்ததா நீ பணியில் இருக்கும்போது என்று கேட்டேன். அவன் தன் தலையைச் சொரிந்தான். பின் இல்லை என்றான். பின் ஏதோ யோசனை வந்தவன் போல் அந்தப் பெண் பழைய மீகாமனின் அறையில் நடு இரவு நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் அதைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் யாரிடம் எதுவும் சொல்லவில்லை என்று கூறினான். எந்த சின்ன விஷயம் வழக்கத்துக்கு மாறாக நடந்தாலும் உடனே என்னிடம் சொல் என்று கூறி விட்டு அவனை அனுப்பி வைத்தேன்.
அவன் சென்ற பிறகு பணியில் இல்லாதவர்கள் ஒவ்வொருவராக மேலேறி வந்த வண்ணம் இருந்தனர். மேலே வந்து புகைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடமே மிகவும் குதூகலமாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நான் காலைச் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று எண்ணிக் கீழே சென்றேன். சமையல்காரர் அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருந்தார் மின் அடுப்பில். நான் நடுப் பாதையில் இறங்கிக் கொண்டிருக்கும் போது லிஸ் நாப்ஸுடன் வந்தாள். அவள் மலர்ச்சியுடன் என்னைப் பார்த்துக் காலை வணக்கம் சொன்னாள். அதற்கு நான் பதில் வணக்கம் மிகவும் இறுக்கமாகக் கடுகடுப்புடன் சொன்னேன்.
“என்னுடன் சாப்பிட வருகிறாயா?” என திடீரென்று கேட்டேன். நாமே ஒரு விசாரணையை ஆரம்பித்து விடலாம் என்று கடமை உணர்ச்சியோடு எண்ணிக் கொண்டேன். அவள் மிக மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டாள். நாங்கள் அதிகாரிகள் சாப்பிடும் உணவகத்தில் அமர்ந்தோம்.
“நீ நன்றாக உறங்கினாயா” என்று கேட்டேன்.
“இரவு முழுவதும்” என்றாள். “அற்புதமாகத் தூங்கினேன்”
அவள் சொன்னது மிகவும் நேரிடையாக நேர்மையாக இருந்தது. கள்ளம் கபடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவளது துரோகத்தை வெளிப்படச் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாகக் கேட்டேன் “காலக் கருவியும் கோண மானியும் நேற்றிரவு சிதைக்கப்பட்டு விட்டன. நமக்குள் யாரோ ஒரு துரோகி இருக்கிறான்.” ஆனால் அதெல்லாம் அவளுக்குத் தெரியும் என்பது போல் ஒரு முடியைக் கூட அவள் அசைக்கவில்லை.
“யாராக இருக்கும்.” என்று அழுதபடியே கேட்டாள். “ஜெர்மானியர்கள் செய்திருந்தால் அவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களது உயிரும் இதில் அடங்கி இருக்கிறது.”
“ஆண்கள் எதாவது ஒரு நல்ல காரணத்துக்காக உயிரை விடவும் தயங்க மாட்டார்கள். நாட்டுப்பற்றாக இருக்கலாம். தங்களைத் தியாகம் செய்வது போல் மற்றவர்களையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் அவர்கள் அன்பு செலுத்துபவர்களையும் சேர்த்து. பெண்களும் கிட்டத்தட்ட அதே போல் தான். ஆனால் அவர்கள் தங்கள் மரியாதையை காதல் அனைத்தையும் கூட இழக்கச் சம்மதிப்பார்களா” என்று நான் சொன்னேன்.
நான் சொன்னபோது அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவள் கன்னம் மெலிதாகச் சிவப்பாயிற்று. முன்னுரை கொடுத்த பின் அப்படியே தொடரலாம் என்று எண்ணினேன்.
“ஒரு உதாரணத்திற்கு வான் ஸ்சோன்வர்ட்ஸை எடுத்துக் கொள். எதிரியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் தான் சாவது மட்டுமல்லாமல் அனைவரையும் சாகடிக்கவும் தயங்க மாட்டான். அவன் யாரையும் தியாகம் செய்வான். உன்னையும் சேர்த்து. நீ இன்னும் அவனை காதலிப்பதாக இருந்தால் நீ கூட அவனது கருவியாக இருக்கலாம். புரிகிறதா” என்று விளக்கம் கொடுத்தேன்.
அவள் என்னை ஒரு திகிலாக பார்த்தாள் அகலத் திறந்த விழிகளோடு. அவள் முகம் மிகவும் பேயறைந்தது போல் வெளிறி விட்டது. பின் ஆசனத்தில் இருந்து எழுந்தாள். “ஆமாம்” என்றாள். எனக்கு முதுகை காட்டியவாறு விருட்டென்று கிளம்பி அவள் அறைக்குச் சென்று விட்டாள். அவள் மனதைக் காயப்படுத்தி விட்டதால் எனக்கும் உறுத்தலாக இருந்தது. அதனால் அவள் பின்னாலேயே சென்றேன். பணியாளர்கள் இருக்கும் அறைக் கதவு வரை சென்றேன். அப்போது வான் ஸ்சோன்வர்ட்ஸ் அவள் செல்லும்போது அவள் காதில் ஏதோ கிசு கிசுத்தான். அவள் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்று யூகித்ததால் கண்டும் காணாமல் சென்று விட்டாள்.
– தொடரும்…
தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com