காலங்களில் நாம் வசந்தம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 13,630 
 
 

“பூனைய அடிச்சு முடுக்கிறத விட மீன மூடி வெக்கிறது நல்லதுன்னு  என்ற அப்பத்தாக்காரி அடிக்கொருக்கா சொல்லுவா. காலுந்தோலும் தெரியற மாதர டிரஸ்ஸ போட்டுட்டு காலேஜ்க்கு போயிட்டு அவம்பாக்கறா, இவம்பாக்கறான்னு ஏஞ்சொல்லோனும்….?” தாய் சுந்தரியின் பேச்சு கசப்பாக இருந்தது சுமிக்கு.

சுமி கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி. அதிலும் கலைக்கல்லூரி மாணவி என்பதால் கலையாக உடையணிந்து சிலையாகத்தெரிய வேண்டுமென்பதில் தினமும் கூடுதல் அக்கரை எடுத்துக்கொண்டு எறும்பு போல் தேடி வரும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் மாணவிகளுக்கும் சக்கரையாகத்தெரிந்தாள்.

“டிரஸ் பண்ணினா சுமியப்போல பண்ணோனும். உலக அழகியே தோத்துப்போற அளவுக்கு புதுசு புதுசா, தினுசு தினுசா போட்டுட்டு வாரா” சக மாணவிகளான தோழிகளே அதிசயமாகப்பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போயினர்.

“வாழ்க்கைங்கிறது ஒரு தடவை. அத வாழ்ந்துட்டு போயிரனம். இளமை திரும்பவும் வராது. இந்த காலேஜ்க்கு மறுபடியும் படிக்க வர முடியாது. ஒவ்வொரு நாளும் நமக்கு போனஸ். நாளைக்கு இருப்போமா, இல்லையான்னு யாருக்கும் தெரியாது….”என்பாள் தத்துவமாக.

அவளுக்கு பிடித்த கவர்ச்சியான ஆடையணிபவள், தாயின் பேச்சிற்கிணங்குவது போல் நடிக்கும் பொருட்டு மேலே வேறு ஆடையை அணிந்து சென்று கல்லூரிக்கு போனவுடன் காரிலிருந்து இறங்கும் போது ஆடையை மறைத்த இன்னொரு ஆடையைக்கழட்டி காரில் வைத்து விடுவாள்.

கல்லூரி விழாக்களில் நடிப்பு, பாட்டு, நடனம் என எதையும் விட்டு வைக்காமல் பங்கேற்று அசத்துவாள். சுமி ஒரு நாள் கல்லூரிக்கு வரவில்லையென்றாலும் அனைவருக்கும் நாளே வெறுமையாக இருக்கும். 

சுமி வெகுளித்தனமானவள். அவளைப்பிடிக்காதவர்கள் யாருமில்லை எனும் நிலையை உருவாக்கி வைத்திருந்தாள். அனைவருடைய பிறந்த நாளையும் தெரிந்து வைத்துக்கொண்டு முதலாக வாழ்த்துச்சொல்லி பரிசு கொடுத்து மகிழ்விப்பாள். 

அனைவரையும் காதலித்ததால் அவளுக்கென தனியான காதலர் யாருமே இல்லை. ‘வித்யாசமான பிறவியா இருக்கறா. மரத்துல பழுக்கிற பழங்கள பார்க்கத்தான் முடியும், பசிக்கு உதவாதுங்கிறது எவ்வளவு வேஸ்டோ, அத போல அவ வாழ்க்கைய யாரோடையும் சேராம வீணடிச்சிட்டு இருக்கறா….’என சக மாணவர்கள் அவள் முன்பு பேசுவதையும் கோபப்படாமல் ரசிப்பாள்.

ஒரு நாள் தன்னோடு படிக்கும் மாணவன் சிகன் “சுமி… ஒரு நாள் கூட உன்னப்பார்க்காம என்னால இருக்க முடியல. உனக்காக எத வேணும்னாலும் செய்யத்தோணுது. லவ் அது இதுன்னு சொல்லத்தோணல. நீ ஓகே ன்னு சொல்லு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” எனக்கூறியதைக்கேட்டு சத்தமிட்டு சிரித்தாள்.

“இத பாரு சிகன், ஆண் பெண் ஈர்ப்புங்கிறது இன்னைக்கில்ல, மனுசன் தோன்றுன காலத்துல இருந்தே இருந்திருக்கும். இல்லேன்னா நானும் நீயும் இப்ப, இங்க நின்னு பேசீட்டு இருக்க மாட்டோம். உன்ன மாதிரி ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் குறைஞ்சது நூறு பேருக்கு மேல என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டிருக்காங்க. நீ இன்னைக்கு கடைசி ஆளா கேட்டிருக்கே…” என சொன்னவள் கண்களில் வெளியான கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.

“அவங்கெல்லாம் இப்ப வேற ஒரு பொண்ண காதலிச்சிட்டோ, படிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்திட்டோ, ஏதாவது தொழில் பண்ணி சம்பாதிச்சுட்டோ இருப்பாங்க. என்னோட முகமே கூட அவங்களுக்கு மறந்து போயிருக்கும். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்னு சொல்லுவாங்க. ஒரு பொண்ணு அழகா இருந்தா அவளப்பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு தான் கேட்கனமா…? நமக்குள்ளிருக்கிற திறமைய வெளியே கொண்டு வர அழகு முக்கியமில்லையே….? அத யாரு கூட வேணும்னாலும் சேர்ந்து செய்யலாமே….?  ரமி, ரதி, கயா, காம்யா, மாயா இவங்களப்பார்த்தா கல்யாணம் பண்ணிக்கணம்னு உனக்குத்தோணலையா…?” இப்படியெல்லாம் சுமி பேசுவாள் என எதிர்பார்க்காத சிகன் தலை குனிந்து பதில் பேசாமல் நின்றான்.

‘சுமியைப்பற்றி எவ்வளவோ கற்பனை செய்து வைத்திருந்ததெல்லாம், கவிதை எழுதி வைத்திருந்ததெல்லாம் வீணாகி விட்டதே’ என நினைத்து கவலைப்பட்டான்.

நிகனின் அருகில் சென்று அவனது தோளில் தட்டிக்கொடுத்த சுமி “கவலைப்படாதே…. நீயும் ரொம்ப அழகாத்தான் இருக்கே. நீ படிப்பு முடிச்சு வேலைல சேர்ந்த உடனே என்னை விட அழகான பொண்ணு உனக்கு கிடைக்கத்தான் போறா. அப்ப என்னை மறக்காம இருந்தீன்னா எனக்கு கால் பண்ணி சொல்லு… இல்லே…. இல்லே…. அது முடியாது… நீ நல்லா இருந்தீன்னாலே  போதும்….” சொன்னவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது. அப்போது வந்த சக தோழி மாயாவின் காரில் ஏறிச்சென்றாள்.

அடுத்த நாள் கல்லூரிக்கு யாரும் வரவில்லை. சுமியின் உயிரற்ற உடலைக்கான அவளது வீட்டின் முன் அனைவரும் கண்ணீருடன் குவிந்திருந்தனர்.

சுமி கடைசியாக எழுதியிருந்த வரிகள் அவளது உடல் மீது வைக்கப்பட்டிருந்தது.

‘என்னை நேசித்த பெற்றோரான சாமிக்கும், நான் வாழ காரணமான பூமிக்கும், எனது மனதை, அழகை நேசித்த அனைவருக்கும் நன்றி. நாம் எப்படி வாழ்வது என்பதை நம்மால் முடிவு செய்ய முடியுமே தவிர, எத்தனை காலம் வாழப்போகிறோம் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கிறது. காலங்களில் நாம் வசந்தம். காலம் முடிந்த பின் எதுவுமில்லை நமக்குச்சொந்தம். கிடைக்கும் காலத்தை மகிழ்ச்சியாக வாழப் பழகுங்கள். முடியும் காலத்தை வேதனையின்றி ஏற்றுக்கொள்ளுங்கள். பூவில் வளரும் காய் கனிந்து தான் விழுமென்பதில்லை. பலத்த காற்றுக்கு பிஞ்சுகளும் உதிர நேரும்’ அவளது தத்துவார்த்தமான அனுபவக்கருத்துக்களைப்படித்தவர்கள் மனம் பக்குவப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *