காற்றை மிரட்டிய இரு கைத்தடிகள்..!





சந்தேகம் என்று வந்துவிட்டால் அது பெரிய சரித்திரமாகிவிடுகிறது. அப்படித்தான் ‘இரட்டைச் சுழி’ நம் தலையில் இருந்தா அது நல்லதா கெட்டதா திடீர்னு நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுப்பி உட்கார வைத்த விழிப்பு கேட்டது என்னை. என்ன பதில் சொல்வது தெரியவில்லை.

கூகுளில் தேடினால் அது குழப்ப ஆரம்பித்தது!. சரி, இப்போதுதான் கூகிள் மேப்பை நம்பி குப்புற விழுந்தவங்க கதையெல்லாம் படிச்சிருக்கோமேனு, கூகுளை விட்டுவிட்டு குழப்பத்தைத் தீர்க்க பதில் தேடினேன் மனசுக்குள்ளேயே!
‘சுழி’.. எப்போதுமே பயத்தை உண்டு வாத்தியார் சுழிச்சாலும் சரி வந்து தலையில் உதிச்சாலும் சரி! அது பண்ணும் ஒரு விஷயம் பயம் என்பது மட்டும் புரிந்தது. அப்போது பள்ளியில் எலிமெண்டரி ஸ்கூலில் படிக்கிற காலகட்டத்தில் வெட்டாந்தரையில் வீற்றிருந்தது எங்கள் பள்ளி..! அடிக்கடி சூறைக் காற்று சுழற்றியடித்து கண்ணிலும் வாயிலும் மண்ணை அள்ளி வீசி விளையாடும்! எப்போது ஆடிமாசம் மாதிரி. யூனிபார்ம் வெள்ளைச்சட்டை செங்காமட்டிக் கலராகும். வீட்டுக்கு வந்தால், திட்டு விழும்.. மண்ணில் புரண்டு விளையாடிதாக அம்மா திட்டி அடிப்பாள். ஆனால், மண்தான் புரண்டு விளையாடியது என்றால் புரியாது அம்மாவுக்கு!.
அந்தச் சுழற்காற்றை ‘பேய்க்காற்று’ என்பார்கள் சக நண்பர்கள். நமக்குத் தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது அதிசயமாக இருக்கும். சுழலும் பேய்க்காற்றுக்கு பயமாய் இருக்கும். அது அடிக்கும் போது அவர்கள் விலகி ஓடிவிடுவார்கள் என்னைத் தனியே விட்டுவிட்டு!
ஒருநாள் அக்கா வீட்டுக்குப் போயிருந்த போது, பஸ் ஸ்டாண்டில் இரண்டு கிழவர்கள் கையில் கைத்தடியோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த பஸ் ஸ்டாண்டு ஊரின் எல்லை என்பதால் ஒரு ரவுண்டடித்து பஸ் நிற்பதுமாதிரி ஒரு பஸ் ஸ்டாண்டு அது!
அங்கே பொழுது போகாமல் நின்றிருந்தேன் நான். அவர்கள் அந்த பஸ்ஸ்டாண்டின் சிமிண்ட் பென்ஞ்சில் உட்கார்ந்து ஊர்க்கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘விர்ர்னு’ ஒரு சப்தத்தோடு சுழிக்காற்று அதான் பேய்க்காற்று சுற்றிச் சுற்றி வட்டமடித்து என்னை நெருங்க பள்ளியில் உண்டாக்கி வைத்தபயம் உச்சம் தொட உதறலெடுக்க ஆரம்பித்தது. ஆனால் ஆச்சரியம் என்ன வென்றால்…
அந்த சுழிக்காற்று வட்டமடித்து வட்டமடித்து அந்த இரு கிழவர்களை நெருங்க, அவர்களில் ஒருவர் ”ஏய்.போ!. போ! அக்கட்டால!’ என்றார். போ அந்தப் பக்கம் என்று வட்டார வழக்கில் அவர் விரட்ட காற்று அவரை நெருங்காமல் விட்டு, விலகி வேறு பக்கம் போனது.
எனக்கு ஆச்சரியம்… அவர்கள் விரட்டினால் மட்டும்தான் சுழிக்காற்று அஞ்சி ஓடுமா? இல்லை யார் விரட்டினானலும் ஓடுமா? பேய்க்காற்று என்னும் அதன் உள்ளுக்குள் பேய் இருக்குமா? அது நெருங்கிப் பிடித்து நம்மை தொந்தரவு செய்யுமா? கருப்புக் கயிறு மந்திரிச்சு கட்டணுமா? என்னென்னவோ சந்தேகம்..
வயது முதிர்ந்தவர்கள் என்பதால், அவர்களைப் பார்த்து பேய்க்காற்று பயந்ததா? இல்லை அவர்கள் கைவசமிருந்த தடிக்கு பயந்து தள்ளிப் போனதா? தெரியவில்லை
இத்தனை பயமிருக்கும் என்னால் பேய்விரட்டமுடியுமா? பேய்னு ஒண்ணு இருக்கா? இல்லையா?
ஆனால் ஒண்ணு நிச்சயம் எதுவும் பயந்தால் விரட்டும் விரட்டினால் பயப்படும் என்று இன்று புரிந்தது!