காரும் கதிரும்





(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
முந்திய தினம் நல்ல மழை பெய்ததால் அன்று இளங்காலை, மழை ஓய்ந்து மங்கிய வெயிலும் சிதறிய மேகத்தின் ரிமலும் கூடி அழகார்ந்து விளங்கியது. கதிர் முற்றிய பய நிலங்களின்மேல் நிழலும் ஒளியும் மாறி மாறித் தம் நீண்ட சலாகையினால் வர்ணங்களைத் தீட்டின. நெடுந்தூரம் பரவிய பசுமையின் சித்திரம், ஒரு சமயம் கதிரவன் கிரணங்களை வீசும்போது, பளிச்செனத் திகழும்; மறுசமயம் முகிலின் சாயையினால் கண்ணுக்கினிய இருண்ட நிறம் கொள்ளும்.
விண்ணரங்கில் காரும் கதிருமே நடிக்கும் வீசித்திர நாடகம் இவ்வாறு இருக்க, கீழே உலகில் வாழ்க்கையின் கூத்துக்களத்தில் நடக்கும் விந்தைகளுக்கு ஓர் எண்ணிக்கை உண்டோ!

நாம் இந்த இடத்தில் அத்தகைய வாழ்க்கைக் கூத்தின் திரையைச் சற்று நீக்கிப் பார்ப்போம். ஒரு கிராமம். வழியோரமாக வீடு ஒன்று தெரிகிறது. அதன் வெளிப்புறமாயிருக்கும் அறை ஒன்று மட்டுமே கிலம் ஆகாமல் இருக்கிறது. அவ்வறையின் இரு மருங்கிலும், சரிந்து வீழும் செங்கற்சுவர் வளைத்துக்கொண் டிருக்கும் மண்வீடுகள். பாட்டையிலிருந்து பார்த்தால், அந்த வீட்டின் உட்புறம் ஜன்னலுக்கு அருகே ஓர் இளைஞன் மேடைமீது அமர்ந்து சற்றைக் கொருதரம் இடதுகையால் விசிறிக்கொண்டே இறுக்கத்தையும், ஈக்களின் உபத்திரவத்தையும் போக்கிக்கொள்வது தெரியும். வலதுகையால் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் புரட்டி ஊக்கமாகப் படித்துக்கொண்டிருந்தான்.
வெளியே ஊர்ப்பாதையில் ‘டோரியா போட்ட சிற்றாடை கட்டிக்கொண் டிருக்கும் சிறுமி ஒருத்தி மடியில் சில
கருநாவற்பழங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக வாயில் போட்டு ருசிபார்த்த வண்ணம் கம்பிபோட்ட அந்த ஜன்னல்முன் போவதும் வருவதுமா யிருந்தாள். உள்ளே, புஸ்தகத்தில் லயித்திருக்கும் இளைஞனுக்கும் அந்தச் சிறுமிக்கும் இடையே வளரும் நேசம் அவளது முகத்தில் பிரதிபலித்தது. இளை ஞனுடைய கவனத்தைத் தன்பால் எப்படியாவது இழுக்க வேண்டுமென்பதே அப்பாவையின் நோக்கம். ஆனால் அவன் நினைவெல்லாம் எங்கோ நிலைத்துவிடவே அவள் வெறுப்புற்றுத் தனக்குள்ளேயே, “என்னைத் திரும்பிப் பார்க்காமல் போனால் போயேன் ; எனக்குமட்டும் என்ன அக்கறை, உனக்கு நாவற்பழம் கொடுக்கவேண்டுமென்று? நானே தின்று வீடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டாள்.
துரதிருஷ்டவசமாக அறையில் படிப்பில் ஊன்றி யிருக்கும் ஆசாமிக்குக் கண் பார்வை சற்று மட்டம்.. சிறிது தொலைவில் தனக்காக அந்தப் பெண் காத்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுமிக்கும் அது தெரிந்திருந்தாலும், நெடுநேரம் குறுக்கும் நெடுக்கும் அலைந்துவிட்டு அவன் பராமுகமாய் இருந்ததற்குப் பழி தீர்த்துக்கொள்ள நாவற்பழக் கொட்டைகளை ஒவ்வொன்றாக அவன்மேல் விட்டெறிந் தாள் ; குருடனிடத்தில் தன் கோபத்தைக் காட்ட இதுதான் அவள் கையாண்ட கடைசி வழி.
சிறிது நேரத்திற்கு ஒருதரம் இரண்டொரு கொட்டை தற்செயலாக ஜன்னல் கட்டைமேல் டக் கென்று விழுந்தபோது படிப்பில் ஆழ்ந்திருந்த அந்த இளைஞன் நிமிர்ந்து பார்த்தான். அந்த மாயக்காரி அதை உணர்ந்தவளாய் இருமடங்கு ஆர்வத்துடன் மடியிலிருந்து பக்குவமான நாவற்பழங்களைத் தின்பதற்கு எடுத்து வைத்துக் கொள்ளலானாள். இளைஞன் புருவத்தைக் குறுக்கிக் கூர்ந்து கவனித்தான். சிறுமி யாரென்று அறிந்து கொண்டான். புஸ்தகத்தை வைத்துவிட்டு ஜன்னலுக்கு. அருகில் வந்து நின்றுகொண்டு சிரித்தமுகத்துடன், ”கிரி பாலா!” என்று அழைத்தான்.
கிரிபாலா திரும்பிக்கூடப் பாராமல் தன் மடியி லிருந்து கனிந்த நாவற்பழங்களை எடுத்துக்கொண்டே மெல்ல மெல்ல ஒவ்வோர் அடியாக வைத்து வெளியே செல்லலானாள். அப்போதுதான் பார்வைக் குறைவுள்ள அந்த இளைஞனுக்கு விஷயம் புரிந்தது ; அறியாமல் தான் செய்த ஏதோ தவறுக்காக இது தண்டனைபோலும் என்று ஊகித்தான். விரைவாக வெளியே வந்து, “கிரிபாலா! எங்கே, எனக்கு நாவற்பழம் கிடையா தா என்றான். கிரிபாலா அவன் வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதவள்போல், நன்றாகப் பழுத்த ஒரு நாவற்கனியைச் சாவதானமாகத் தின்றுகொண் டிருந்தாள். அந்த நாவற் பழங்கள் கிரிபாலாவின் தோட்டத்தில் பறித்தவை. தினந்தோறும் அந்த இளைஞனுக்கு அதில் பங்கு கிடைத்து வந்தது. கனிகளை நமக்கா க மட்டுமன்றி மற்றோர் ஆசாமிக்காகவும் கொண்டு வந்தோம் என்பது அவளுக்கு ஞாபகம் இல்லையா? பின்னே, தன் தோட்டத்தில் பறித்த பழங்களை அயல்வீட்டுக்காரன் ஜன்னலுக்கு எதிரே தின்பதன் கருத்துத்தான் என்ன? அப்போது இளைஞன் அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். கிரிபாலா முதலில் கோணிக் கொண்டு திமிற முயன்றாள். குப்பென்று அவள் கண் களில் நீர் பொங்கி எழுந்தது. மடியிலுள்ள நாவற்பழங் களைக் கொட்டிவிட்டு அவ்வீடத்திலிருந்து ஓடிப்போய் விட்டாள்.
காலையில் கண்ணைக் கூசிய வெயிலும், கருமுகிலின் நிழலும் பிற்பகலில் மங்கி அமைதிகொண்டன. வெண்ணிற மேகங்கள் குவியலாக வானவரம்பில் படிந்து கிடந்தன. மாலையின் மங்கும் ஒளி இலைகள்மேலும், குளத்து நீரின்மீதும் இயற்கை எழிலுடன் பளபளத்தது. மீண்டும் அந்தச் சிறுமி அதே கம்பிபோட்ட ஜன்னல் முன்பு தெரிகிறாள்; அந்த அறையினுள் அதே இளைஞன் உட்கார்ந்திருக்கிறான். முன் இருந்ததற்கு இப்போது வேறுபாடு என்னவென்றால், தற்சமயம் பாலிகையின் மடியில் நாவற்பழங்கள் இல்லை; இளைஞன் கையிலும் புஸ்தகம் இல்லை. இதைத் தவிர முக்கியமான சில மாறு தல்களும் தென்பட்டன.
இந்தத் தடவையும் அதே இடத்திற்கு அந்தப் பெண் வந்து எதற்காக அலைகிறாள் என்பதை இங்கே கூறுவது கடினம். பாலிகையின் நடவடிக்கையிலிருந்து உள்ளே இருக்கும் இளைஞனுடன் அவள் பேச வரவில்லை என்பது மட்டும் தெரிந்தது. காலையில் தான் மண்ணில் உமிழ்ந்த நாவற்கொட்டை மாலையில் முளைத்திருக் கின்றதா என்று பார்க்கவே அவள் வந்திருப்பதாகத் தோன்றியது. அது ஒருபுறம் இருக்க, அவர்களுடைய போக்கில் மற்றொரு வீசேஷமும் தென்பட்டது. இளைஞனின் முன்பு மேடைமேல் நாவற்கனீகள் குவிய லாகக் கிடந்தன. சிறுமி நடு நடுவே, குனிந்து ஏதோ தேடுவதாகப் பாவனை செய்யும்போது அவன் தன் உள்ளத்தில் குமிழ்த்தெழும் சிரிப்பை வெளிக் காட்டாமல் ஆழ்ந்த யோசனையில் இருப்பவன் போல் கனிகளை ஒவ்வொன்றாகப் புசிக்கலானான். கொட் டையை வெளியே துப்பும்போது எதிர்பாராதபடி இரண் டொன்று பெண்ணின் காலில் வந்து விழும். அப்போது கிரிபாலா, ‘காலையில் நாம் செய்த காரியத்திற்கு இது பதி லாக்கும்!’ என்று உணரலானாள். ஆனாலும் இது நியாயமா? அகம்பாவத்தை யெல்லாம் விட்டொழித்துத் தன் சின்னஞ்சிறு உள்ளத்தை அவனிடம் சமர்ப்பிக்கவழி தேடும்போது இப்படி அதற்கு இடையூறு செய்வது கொடுமையன்றோ ? தானே வலிய அவனிடம் அகப்பட்டுக் கொள்ள வந்ததை நினைத்துக் கொள்ளும்போது பாலிகை யின் முகம் நாணிச் சிவந்தது. அவ்விடத்தை வீட்டு நழுவ முயலும்போது, இளைஞன் வெளியே வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
காலையில் நிகழ்ந்ததுபோலவே இப்போதும் சிறுமி உடலை வளைத்துக்கொண்டு அவன் பிடியிலிருந்து தப்பீ ஓட முயன்று பார்த்தாள். ஆனால் இந்தத் தடவை அவள் அழவில்லை. முகம் நாணத்தால் ரத்தம்போலச் சிவக்க, கழுத்தை வக்கிரித்துக்கொண்டு, தன்னை அலைக்கழிப் பவனின் பின்புறமாக முகத்தை மறைத்து ஓயாமல் சிரித்தாள். விதியின்றித் தோற்றுப்போய் அவள் அந்தக் கிராதி போட்ட அறையினுள் சிறை புகுந்தாள்.
வானவெளியில் முகிலும் வெயிலும் மாறி மாறி இயற்றும் கண்ணாமூச்சி விளையாட்டுப்போல் பூதலத்தின் ஒரு மூலையில் இவர்கள் விளையாடுவதும் நிரந்தரமான தல்ல ; அதிசயமானதும் அல்ல. காரும் கதிரும் ஒன்றோ டொன்று இழைவது வெறும் விளையாட்டல்ல ; ஆனால் நமக்கு அது வேடிக்கையாகத் தோன்றுகிறது. வேலை வெட்டியில்லாத மழைக் காலத்தில் இருவரிடையே நிகழும் இம்மா திரிச் சிறு சம்பவங்கள் பல, வெளிக்கு அற்பமானவையாகத் தோற்றும். ஆனால், உண்மையில் அவை அற்பமன்று. எந்த விதிக்கும் கட்டுப்படாத மூவா முதலோன் ஊழிதோறும் ஊழியைப் பிணைப்பது போல், அச்சிறுமியின் மனத்தில் எழும் அழுகையையும் சிரிப்பையுமே அவள் ஆயுள் முழுதும் நீடிக்கும் இன்ப துன்பமாக மாற்றுகிறான்.
இப்போது அச்சிறுமி ரோஷம் கொண்டதிலோ ஓர் அர்த்தமும் இல்லை. இந்த வீசித்திர நாடகத்தைக் காண்பவர்களுக்கு மட்டுமல்ல ; இதில் முக்கிய பாத்திர மாக நடிக்கும் இளைஞனுக்கும் அது பொருளற்றதாகவே இருந்திருக்கும். அந்தச் சிறுமி ஒவ்வொரு நாள் அதிக மாகக் கோபித்துக் கொள்கிறாள்; ஒவ்வொரு நாள் அளவு கடந்த அன்பு காட்டுகிறாள். சில நாளில் அவனுக்கு நிறையக் கனிகள் தந்து உபசரிக்கிறாள்; சில தினங்களோ நாள் தோறும் கொடுப்பதையும் நிறுத்திவிடுகிறாள்; இதற்குக் காரணம் என்னவென்று சொல்வது? ஒவ் வொரு சமயம் தன் கற்பனைத் திறமையை யெல்லாம் காட்டி இளைஞனுடன் உல்லாசமாக உரையாட வருகிறாள். ஒவ்வொரு சமயம் திடீரென மனம் கல்லாகித் தன்னால் இயன்றவரையில் அவனோடு சேராமல் விலகிநின்று துன்புறுத்துகிறாள். கடினமாக இருந்த இவ்வுள்ளம் சட்டென அநுதாபத்தால் கண்ணீர்ப் பெருக்கில் கரைந் துருகுவதும் உண்டு. அற்பமாகத் தோற்றுகின்ற காரும் கதிரும் நடத்தும் இந்த லீலைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்னால் விவரிக்கப்படும்.
2
கட்சிச் சண்டை, குட்டிக்கலகம், வம்பு, வீண் வழக்கு, சணல் வியாபாரம், கரும்புச் சாகுபடி இவைதாம் அந்தக் கிராமத்தில் இருந்தவர்களுக்குப் பிரதானம். சசிபூஷண னும் கிரிபாலாவும் மட்டுமே இலக்கிய சர்ச்சையிலும் சிந்தைக்கு விருந்தாக உள்ள சம்பாஷணைகளிலும் ஈடு பட்டிருந்தனர். இதைக்குறித்து ஊரில் எவரும் அக் கறையோ, ஆவலோ கொள்ளவில்லை. காரணம் : கிரிபாலாவுக்கு வயசு பத்துத்தான். சபிபூஷணன் அப் போதுதான் முளைத்தெழும் எம்.ஏ., பி. எல். இவர்கள் உறவினரல்லர்; அண்டை வீட்டுக்காரர்களே.
கிரிபாலாவின் தந்தை ஹரகுமாரர் ஒரு காலத்தில் அந்தக் கிராமத்திலேயே பெரிய மிராசுதாரராக இருந்தவர். இப்போதோ துர்த்தசையினால் சொத்தெல்லாம் வீற்றுத் தொலைத்துவிட்டு அயலூர் ஜமீன்தாரன் ஒருவனிடம் காரியஸ்தராக அமர்ந்திருந்தார். அவர் வசிக்கும் பர்க் கணாவிலேயே அவருக்கு வேலை. அதனால் பிறந்த ஊரை விட்டுப் போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
சசிபூஷணன் எம். ஏ., தேர்ச்சி பெற்றதும் சட்டப் பரீக்ஷையிலும் தேறினான். ஆனால் இன்னும் எந்தத் தொழிலிலும் ஈடுபடாமல் சும்மா இருந்தான். நாலு பேரோடு கலந்து உறவாடுவதும் இல்லை; கிராமக் கூட்டங்களில் கலந்துகொண்டு இரண்டு வார்த்தைகூடப் பேசுவதும் இல்லை. கண் பார்வை மட்டமானதால் பழக்க மானவர்களைக்கூட அவன் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. புருவத்தைக் குறுக்கிக்கொண்டு யாரென்று பார்ப்பான். இதை அகம்பாவம் என்று பிறர் எண்ணினார்கள்.
கல்கத்தாவில் ஜனத்திரளிடையே இந்தமாதிரித் தன் இஷ்டப்படி இருப்பது அதிசயமாயிராது. ஆனால் ஒரு பட்டிக்காட்டில் இது குற்றமாகக் கருதப்படும். சசிபூஷண னுடைய தகப்பனார் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பலன் ஏற்படவில்லை. முடிவாக, உத்தியோகம் இல்லாம விருக்கும் தம் பிள்ளையைப் பயிர் பச்சையையாவது கவனித்துக் கொள்ளும்படிக் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இதனால் கிராம வாசிகள் சசிபூஷணனைக் கேலி செய்து அவனைக் கண்டபோதெல்லாம் இகழ்ந்து வந்தனர். இவற்றையெல்லாம் அவன் சகித்துக்கொண்டு வந்தான். அவர்கள் அவனை இகழ்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அமைதியை விரும்பும் சசிபூஷண னுக்கு விவாகம் செய்துகொள்ள இஷ்டமில்லை. பெண்ணை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அவன் இப்படி இருப்பதைக் கர்வம் என்று எண்ணி அவனைக் கண்டு பொருமினார்கள்.
அவர்கள் இவ்வாறு அவனுக்குப் பல வீதத்திலும் தொந்தரவு இழைக்க இழைக்க, அவன் தன் சொந்த. வீட்டில் தனிமையிலேயே மறைந்து வசிக்கலானான். அறையின் ஒரு மூலையில் மேடைமேல் மெத்தையை விரித்துக் கொண்டு ஆங்கிலப் புஸ்தகங்களைப் படிப்பதில் ஈடுபட்டிருப்பான்; நினைத்த வேளையில் பிடித்த புஸ்த கத்தைப் படிப்பதே அவன் செய்யும் வேலை. சொத்து எக்கதி அடைந்தால் என்ன அவனுக்கு? க்கு
மனிதவர்க்கத்தில் கிரிபாலா ஒருத்தியோடு மட்டுமே அவனுக்குப் பழக்கம் என்பதை முன்னரே கூறியுள்ளோம்.
கிரிபாலாவின் சகோதரர்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண் டிருந்தார்கள். அடிக்கடி தங்கள் முட்டாள் தமக்கையைப் பார்த்து அவர்கள், “உலகத்தின் வடிவம் எப்படி இருக்கும் ?”, “சூரியன் பெரியதா,- உலகம் பெரியதா?” என்று பலவீதமான கேள்விகள் கேட்டு அவளைப் பரீக்ஷிப்பார்கள். அவள் தப்பாகப் பதில் சொல்வதைப் பார்த்து அவளைத் தூக்கி எறிந்தாற் போல் பேசிப் பீழையைத் திருத்துவார்கள். “சூரியன், உலகத்தைக் காட்டிலும் பிரமாண்டமானது என்ற கொள்கைக்கு ஆதாரம் காட்டு” என்று அவள் துணி வாகக் கேட்டால், அவளுடைய சகோதரர்கள், “சூ! வாயை மூடு. எங்கள் புஸ்தகத்தில் எழுதி இருக்கிறது !” என்று அவளை மட்டந் தட்டுவார்கள்.
அச்சடித்த புஸ்தகத்தில் அப்படி இருக்கிறது என்று கேட்டதும் கிரிபாலாவின் வாய் அடைத்துவிடும். வேறு பிரமாணமே அவளுக்கு வேண்டியதில்லை. அவளுக்கு மட்டும் மனசில் தானும் அவர்களைப்போலப் புஸ்தகங்களை வைத்துக் கொண்டு படிக்க வேண்டுமென்று ஆசை. ஒவ்வொரு நாள் தன் அறையில் ஏதாவது புஸ்தகத்தை வைத்துக்கொண்டு மட மடவென்று படிப்பதுபோல் அபிநயம் செய்து அநாவசியமாகப் பக்கங்களைப் புரட்டிக். கொண்டே இருப்பாள். பழக்கம் இராத அந்தக் கரிய அச்செழுத்துக்கள் பெரிய தோரணவாயில் வழியாக எந்த.. ரகஸ்யலோகத்தை நோக்கியோ கொம்பும், காலும், கீழ், விலங்கும், மேல் விலங்குமாய்ச் சாரி சாரியாகச் செல்வது போல் அவளுக்குத் தோற்றும். கிரிபாலா வினவும் கேள்விகளுக்கு அவை திரும்பிக்கூடப் பதில் தராமல் நிற்கும். பாவம்/ ஆவல் குடிகொண் டிருக்கும் அவளிடம். பாட புஸ்தகத்தில் வரும் சொற்றொடர்கள் புலி, நரி, குதிரை,கழுதை இவற்றைப்பற்றிய ஓர் அதிசயத்தையும் சொல்லாமல் மௌனம் சாதிக்கும்.
கிரிபாலா, தனக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தரும்படி அண்ணன் தம்பிமார்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் அவர்கள் கா திலேயே போட்டுக்கொள்ள வில்லை. சசிபூஷணன் ஒருவனே இந்த விஷயத்தில் அவளுக்கு ஒத்தாசையாக இருந்தான். ‘கதாமாலை’, ஆக்யானமஞ்சரி’ என்ற பாடபுஸ்தகங்கள் புரிபடாமல் இருந்ததுபோலவே சசிபூஷணனுடைய குணமும் முதலில் கிரிபாலாவுக்கு புரியாமல் இருந்தது. பாட்டையோர் மாகக் கம்பிபோட்ட அந்தச் சிறிய அறையினுள் அவன் தனிமையாக மேடைமேல் புஸ்தகங்கள் சூழ உட்கார்ந் திருப்பான். வெளியே கிரிபாலா கம்பியைப் பிடித்துக் கொண்டு, முதுகு வளையப் புஸ்தகத்தைக் கவிந்து படிக்கும் இந்த அதிசயப் பிரகிருதியைப் பார்த்து ஸ்தம்பித்து நிற்பாள். அவனைச் சூழ்ந்துள்ள புஸ்தகங்களின் எண் ணிக்கையைப் பார்த்துத் தன் அண்ணன்மார்களைவிடச் சசிபூஷணனே ரொம்பப் படித்தவன் என்ற முடிவுக்கு வருவாள். இதைவிட ஆச்சரியமான விஷயம் அவள் கண்டதில்லை. ‘கதாமாலை’யைப் போன்ற எத்தனையோ பாடபுஸ்தகங்களைச் சசிபூஷணன் ஓர் எழுத்துவிடாமல் படித்திருக்கவேண்டும் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. சசிபூஷணன் புஸ்தகங்களின் ஏடுகளைத் தள்ளும்போது அவள் ஒரே இடத்தில் நின்று கவ னிப்பாள். அவனது அறிவின் விசாலம் அத்தகைய தென்று அவளால் அநுமானிக்க முடியவில்லை.
கடைசியாக ஒருநாள் வியப்பில் ஆழ்ந்த அச்சிறுமி, கண் பார்வை மங்கிய சசிபூஷணனுடைய கவனத்தைக் கவர்ந்தாள். சசிபூஷணன் பகட்டாகப் ‘பைண்டு’ செய்த புஸ்தகம் ஒன்றைத் திறந்து, “கிரிபாலா, பொம்மை காட்டுகிறேன். வா” என்று கூப்பிட்டதும் ஒரே ஓட்டம் பிடித்தாள். ஆனால், மறுதினமே மீண்டும் அவள் ‘டோரியா’ சிற்றாடை அணிந்துகொண்டு அந்த ஜன்னலுக்கு வெளியில் நின்றவண்ணம், முன்போலவே ஒரே கவனமாகச் சசிபூஷணன் படித்துக்கொண் டிருப் பதைக் கண்கொட்டாமல் கவனித்தாள். சசிபூஷணன் அன்றும் அவளைக் கூப்பிட்டுப் பார்த்தான். அந்தத் தடவையும் கிரிபாலா தலைமயிர் காற்றில் பறக்க, இரைக்க இரைக்க ஓடி மறைந்து வீட்டாள். இவ்வாறு தொடங்கிய இவர்களுடைய நட்பு வரவர முதிர்ந்து வந்தது ; பாலிகை ஜன்னலுக்கு வெளியிலிருந்து சசிபூஷணன் அறையினுள் வருவதும் மேடையில் உள்ள புஸ்தகங்களைப் புரட்டிப் பொம்மை பார்ப்பதுமாக அவ்வளவு அந்நியோன்யம் ஏற் பட்டதன் காரணம் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கே பிரயோ ஜனப்படும்.
சசிபூஷணனிடத்தில் கிரிபாலா கல்வி கற்க ஆரம் பித்தாள். கேட்டால் உங்களுக்குச் சிரிப்புவரும்; இந்த உபாத்தியாயர் தம் சிறு மாணவிக்கு வெறும் எழுத்து, உச்சரிப்பு, இலக்கணம் மட்டும் கற்றுக் கொடுத்ததோடு நிறுத்தி விடவில்லை; பெரிய பெரிய காவியங்களிலிருந்து மொழிபெயர்த்தும் அவளுக்குச் சொல்வார்! அவள் அபிப்பிராயத்தையும் கேட்பார். அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் புரிந்ததோ இல்லையோ அது கடவுளுக்குத் தான் தெரியும்; அவளுக்கு மட்டும் இது பிடித் திருந்தது. விளங்கினதையும் விளங்காததையும் கலந்து, தன் சின்னஞ் சிறு உள்ளத்தில் அபூர்வமான கற்பனைச் சித்திரங்களை வரைந்து கொள்வாள். கண்கள் விரிய மெளனமாக, மனம் ஒன்றி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பாள். ஒவ்வொரு சமயம் சம்பந்த மற்ற கேள்விகளைக் கேட்பாள். அவர்கள் சம்பாஷணை எப்போதாவது இதிலிருந்து வேறு ஏதாவது விஷயத்திற்குத் தாவும். சசிபூஷணன் ஒருபோதும் அவளைத் தடுத்ததில்லை; அவள் இஷ்டப்படிப் பேச விட்டுவிடுவான். பெரிய பெரிய காவியங்களைப்பற்றி அவள் கூறும் புகழுரை யையோ கண்டனத்தையோ கேட்டுச் சந்தோஷம் அடைவான். அந்த ஊரில் கிரிபாலா ஒருத்தியிடமே அவனுக்கு உள்ளூற அன்பு. சசிபூஷணனோடு பரிசய. மானபோது கிரிபாலாவுக்கு வயசு எட்டு; இப்போது அவளுக்குப் பத்து நிரம்பிவீட்டது. இந்த இரண்டு வருஷ காலத்திற்குள் ஆங்கிலமும் வங்க பாஷையும் கற்றுக்கொண்டு பாடபுஸ்தகங்களைச் சுலபமாகப் படிக்க. ஆரம்பித்துவிட்டாள். கிரிபாலாவுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகே, பிடிக்கா திருந்த கிராம வாசமும் அவனுக்குப் பிடித்திருந்தது.
3
இவ்வீதம் இருந்தும் கிரிபாலாவின் தந்தை ஹரகுமாரருக்கும் சசிபூஷணனுக்கும் அவ்வளவாக மன ஒற்றுமை இல்லை. இந்த எம். ஏ., பி.எல். இடம் தம் வழக்கு விஷயமாக யோசனை கேட்க அவர் முன்னெல்லாம் வருவார். சசிபூஷணன் அதில் சிரத்தை காட்டியதாகத் தெரியவில்லை. தனக்குச் சட்டவிஷயங்களில் அநுபவம் போதாதென்று சொல்லவும் அவன் தயங்கவில்லை. ஆனால் காரியஸ்தர் மட்டும் இதை வெறும் புரட்டு என்று கருதினார். இம்மாதிரி இரண்டு வருஷங்கள் கழிந்தன.
இதற்கிடையே ஒரு சமயம் தமக்கு அடங்கா த குடியானவன் ஒருவனை அவர் தண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வெவ்வேறு இடங்களில் அவன் பேரில் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவனை அழுத்துவதற் கான வழி சொல்லும்படிச் சசிபூஷணனை அவர் அடிக்கடி வற்புறுத்திவந்தார். இதற்குச் சசிபூஷணன் தந்த பதில் ஹரகுமாரருக்கு அனுகூலமானதாக இல்லை; அவருக்கு ஆக்ரோஷத்தையே உண்டு பண்ணியது.
மற்றொரு குடியானவன்மேல் அவர் தொடுத்திருந்த வழக்கும் அப்போது தோற்றுவிட்டது. அவன் பக்கம் சசிபூஷணனே நின்று மறைவாக வேலைசெய்திருக்க வேண்டுமென்று துரபிப்பிராயம் கொண்டார் ஹரகுமாரர். இனிமேல் இந்த மனிதனை ஊரில் இருக்கவிடக் கூடாது என்று திடப் பிரதிக்ஞை செய்துகொண்டார்.
அவன் தோட்டத்தில் திடீரென மாடு, கன்றுகள் புகுந்து செடிகளை நாசமாக்கும்; துவரங் கொல்லை தீப் பற்றி எரியும்; வரப்புக்காக அனாவசியமான சச்சரவு மூளும். சொந்தக் குடியானவர்களே குத்தகையைச் சரிவரக் கொடுக்காமல் இழுக்க அடிப்பார்கள். அவன் மேல் அக்கப்போர் தொடுப்பார்கள். அஸ்தமிக்கும்போது வெளியில் வந்தால் அவனைக் குத்தி விடுவதாகவும் இரவு வேளையில் வீட்டையே தீக்கிரையாக்கப் போவதாகவும் ஊரில் பயமுறுத்தினார்கள்.
கடைசியாகச் சாதுவான சசிபூஷணன் ஊரைவிட்டுக் கல்கத்தாவுக்கு வந்துவிடச் சித்தமானான். அவன் புறப் படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் சமயம் கிராமத்தில் ஜாயிண்ட் மாஜிஸ்டிரேட் துரை முகாம் வந்து இறங்கினான். டவாலி, போலீஸ் சேவகன், பட்லர், நாய்கள், குதிரை, குப்பைக்காரன், மற்றும் சிப்பந்திகள் கூட வரவே கிராமம் திமிலோகப்பட்டது. புலியின் பீன் செல்லும் நரிகள்போல் சிறுவர் கூட்டம், துரை முகாம் போட்டிருக்கும் இடத்தருகில் சுற்றிக்கொண்டிருந்தது.
வழக்கப்படிக் காரியஸ்தர் ஹரகுமாரர் துரைக்கு வேண்டிய கோழி, முட்டை, நெய், பால் எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுத்துச் செலவுக் கணக்கில் பற்று எழுதி விட்டார். மாஜிஸ்டிரேட் துரைக்கு, வேண்டிய அளவுக்குமேல் முகம் சிணுங்காமல் ஹரகுமாரர் பண்டங்களைத் தாராளமாக வழங்கியும் துரையின் குப்பைக்காரன் அவருடைய நாய்க்கு இரண்டு வீசை நெய் வேண்டுமென்று அதிகார தோரணையில் கேட்டான். போதாத வேளை, ஹரகுமாரர் அவனைப் பார்த்து, ‘நாட்டு’ நாயை விடச் சீமை நாய்க்கு எவ்வளவு கொடுத்தாலும் ஜரிக்கும்; ஆனால் நீ கேட்கிற அளவு கொடுத்தால் அதற்கு மந்தம் தட்டிவீடும்” என்று அவனை வெறுங் கையுடன் அனுப்பிவிட்டார்.
குப்பைக்காரன் துரையிடம் போய், “நாய்க்காக மாமிசம் எங்கே அகப்படுமென்று காரியஸ்தரைக் கேட் டேன். ‘ஈன சாதிப் பயலே ! எவனடா உன்னை அனுப் பினான்?’ என்று எல்லாரெதிரிலும் என்னைத் திட்டினார். உங்களையும் சும்மாவிடவில்லை” என்று வத்தி வைத்தான்.
ஏற்கனவே அந்த மாஜிஸ்டிரேட் பிராமணத் துவேஷி; போதாக்குறைக்குத் தன்னுடைய குப்பைக் காரனை இழிவு படுத்தின சமாசாரத்தையும் கேட்டு ஆத்திரமடைந்தான். உடனே போலீஸ் சேவகனைக் கூப்பீட்டு, “அந்தப் பார்ப்பானை உடனே இழுத்துக் கொண்டுவா, இங்கே!” என்று உத்தரவிட்டான்.
காரியஸ்தர் உடல் நடுக்குறத் துர்க்கா நாமத்தை ஜபித்த வண்ணம் துரையின் கூடாரத்தெதிரே வந்து நின்றார். துரை ‘டக் டக்’ என்று பூட்ஸ் காலால் அடி வைத்து வெளியே வந்து உரத்த குரலில் ஆங்கில உச்சரிப் புடன், “நீ என்னாட்டுக்கு நம்ப மனிசனைப் பயமுறுத் தினே? சொல்லு, மான்!” என்று மிரட்டினான்.
ஹரகுமாரர் குலைநடுங்கக் கைகளைக் கூப்பி, “துரையவாள் ஆளைக்கூட நான் திட்டுவேனா,எங்கேயாவது? அவன் தங்களுடைய நாய்க்கு இரண்டு வீசை நெய் கேட்டான் முதலில்; நல்ல ஜாதி நாயாயிற்றே, அதனுடைய உடம்புக்கு ஆகாதே என்றுதான் கொடுக்க வில்லை. ஆனாலும் நெய்க்காக ஆளை அனுப்பி இருக் கிறேன். நான் வேறு ஒன்றும் சொல்லவில்லையே, துரை!” என்று மன்றாடினார்.
மாஜிஸ்டிரேட் வீடாக்கிண்டன். அவன் ஹரகுமா ரரைப் பார்த்து, ”யாரை அனுப்பியிருக்கிறே? எங்கே அனுப்பியிருக்கிறே?” என்றான்.
ஹரகுமாரர் தம் வாயில் வந்த இரண்டு பேரைச் சொன்னார். அந்த ஆட்களைச் சீக்கிரம் நெய்யை எடுத்து வரும்படித் துரை சிப்பந்திகளுள் ஒருவனை ஏவிக் காரியஸ் தரைத் தன் கூடாரத்திலேயே நிறுத்திக் கொண்டான். ஏவலாட்கள் திரும்பிவந்து துரையிடம் நெய்க்காக அவர் எவரையும் எங்குமே அனுப்பவில்லை என்று அறிவித் தனர். இதனால் காரியஸ்தர் சொன்னதெல்லாம் பொய் யென்றும், குப்பைக்காரன் வார்த்தையே மெய்யென்றும் பட்டு விட்டது துரைக்கு. அவன் உறுமிக்கொண்டே தன் குப்பைக்காரனைக் கூப்பீட்டு, இந்தத் தடிப்பயலின் காதைத் திருகி இவன்மேல் ஏறி இந்தக் கூடாரத்தைச் சுற்றிச் சுற்றிக் குதிரை சவாரி செய்” என்று ஆக்ஞை யிட்டான். குப்பைக்காரனும் தயங்காமல் நாலுபக்கமும் ஜனங்கள் பார்க்கத் துரையின் கட்டளையை நிறை வேற்றினான்.*
*குல்னா மாஜிஸ்டிரேட் ஒரு பிரஜையைக் கொடூர மாக நடத்துவதற்கு முன்பே இக்கதை எழுதப்பட்டது. பெல்துரை மிகவும் நல்லவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தான்; அவரைப் போன்ற பெரிய மனிதரை நான் இங்கே குறிப்பிட்டதாக எண்ண வேண்டாம்.
இந்தச் செய்தி ஊரெங்கும் அமளிகுமளிப்பட்டது. ஹரகுமாரர் வீட்டுக்குத் திரும்பியதும் உணவு ஒன்றும் கொள்ளாமல் ஸப்தநாடியும் ஒடுங்கிப்போய்ப் படுத்துக் கிடந்தார். ஜமீன் நிர்வாக ஸம்பந்தமாக அவருக்கு அநேக சத்துருக்கள் ஏற்பட்டிருந்தனர். இதைக் கேட்டதும் அவர்களுக்கெல்லாம் வயிற்றில் பாலை வார்த்தாற்போல் ஆயிற்று. இந்த அட்டூழியத்தைப் பற்றிக் கேட்டதும், கல்கத்தாவிற்குப் பிரயாணமாகும் சசிபூஷணனுக்கு ரத்தம் கொதித்து எழுந்தது. அன்று இரவு முழுவதும் அவ னுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.
மறுநாட் காலையில் அவன் ஹரகுமாரர் வீட்டுக்குச் சென்றிருந்தான். அவன் கையைப் பிடித்துக்கொண்டு துக்கம் பொங்கிவரத் தேம்பித்தேம்பி அழுதார் அவர். மாஜிஸ்டிரேட்டின்மேல் மானநஷ்ட வழக்குத் தொடுக்கும் படியும், தானே அவர் பக்கம் வக்கீலாக இருந்து வாதாடுவ தாகவும் உறுதி கொடுத்தான் சசிபூஷணன்.
துரைமீது மானநஷ்ட வழக்கு என்றதும் அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். ஆனால் சசிபூஷணனோ விடுபவனாயில்லை.
ஹரகுமாரர் யோசித்துப் பார்ப்பதாகச் சொன்னார். நாலுபக்கமும் விரோதிகள் கொம்மாளம் அடிப்பதைப் பார்க்கச் சகியா தவராய்ச் சசிபூஷணனுடைய யோசனைக்கு இணங்கினார். “அப்பனே! நீ கல்கத்தாவுக்குப் போய் விடுவதாகக் கேள்விப் பட்டேனே; போகக்கூடாது. உன்னைப்போன்ற ஒருவன் இந்த ஊரில் இருந்தால் எனக்கு எவ்வளவோ பக்கபலமாயிற்றே! எது வந்தாலும் சரி; என்னை இந்த மானக்கேட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்று நைந்துருகிச் சொன்னார்.
4
இதுவரையில் ஊரார் கண்ணுக்குப் படாமல் தனிமையில் காலங்கழித்த சசிபூஷணன் இன்று கச்சேரியில் தோன்றினான். வழக்கின் விவரங்களைக் கேட்டுக்கொண்டு. மாஜிஸ்டிரேட் அவனைத் தம் அறையினுள் அழைத்துச் சென்று மிக்க மரியாதையுடன், “சசிபாபு, இந்தக் கேஸை அம்பலமாக்காமல் ஒருவிதமாக ராஜியாகப் போய்விட்டால் நன்றாயிருக்குமே!” என்றார்.
சசிபாபு மேஜைமேல் இருக்கும் ஒரு சட்டப் புஸ்தகத்தின்மேல் பார்வையைச் செலுத்திய வண்ணம், “”என்னுடைய கக்ஷிக்காரர் இதற்கு உடம்படமாட்டார். நாலுபேர் சிரிக்க அவரை அவமானப்படுத்திய வியவகார மாயீற்றே!எப்படி இதை ரகஸ்யமாகச் சரிப்படுத்துவது?’ என்றான்.
இரண்டொரு வார்த்தையிலிருந்தே, மிதமாகப் பேசும் அந்தச் சசிபூஷணன் எளிதில் மசியக்கூடிய பேர்வழியல்ல என்பதைக் கண்டுகொண்டு மாஜிஸ்டிரேட் துரை, “ஆல்ரைட், பாபு ! வியவகாரம் எவ்வளவு தூரம் போகிறதோ, பார்க்கலாம்” என்றார்.
வழக்கு வீசாரணைத் தினத்தைத் தள்ளிப்போட்டு வெளியூர் அலுவல்களைக் கவனிக்கப் புறப்பட்டுவிட்டார். இதற்குள் ஜாயிண்ட் மாஜிஸ்டிரேட் ஜமீன்தாரனுக்கு ஒரு கடிதம் எழுதினான்:
அதில், “உம்முடைய காரியஸ்தன் என் வேலையாள் ஒருவனை அவமானப் படுத்தியதோடுகூட என்னையும் தூஷித்ததாகத் தெரிகிறது. இதற்கு நீர் ஜவாப் சொல்லா விட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்” என்று மிரட்டி யிருந்தான்.
ஜமீன்தாரன் திடுக்கிட்டவனாய் உடனே ஹர குமாரரை வரவழைத்தான். காரியஸ்தர் நடந்ததை யெல்லாம் ஆதியோடந்தம் கூறிவிட்டார். ஜமீன் தாரன் கடுகடுப்புடன், “துரையின் குப்பைக்காரன் இரண்டு வீசை நெய் கேட்டால் அப்போதே கொடுத்து விடுகிறதுதானே? உம் அப்பன் வீட்டுச் சொத்து என்ன முழுகிப் போகிறது!” என்று கடிந்து கொண்டான்.
‘அவன் சொல்வது வாஸ்தவந்தானே? நம் சொத்து ஒன்றும் புரண்டு போகவில்லையே! கொடுத்து வீட்டிருக் கலாம்’ என்று பட்டது ஹரகுமாரருக்கும். தம் பிழையை ஒப்புக்கொண்டு அவர், “என் போதாத காலம், எனக்கு. அப்படிப் புத்தி கொடுத்தது ! ஊம்!” என்றார்.
“அதோடு நில்லாமல் மாஜிஸ்டிரேட் மேலேயே தாவா தொடுக்கும்படி உமக்கு யாரையா உபதேசம் பண்ணினது?” என்றான் ஜமீன்தாரன்.
“பெரியவாள் கோபித்துக் கொள்ளக் கூடாது.. வழக்குத் தொடுக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட வில்லை; எங்களூர் வக்கீல் சசிபூஷணன் ‘கேஸ்’ ஒன்றும் கிடைக்காமற் போகவே என்னைத் தூண்டி இவ்வாறெல் லாம் செய்திருக்கிறான்” என்றார்.
ஜமீன் தாரனுடைய சினம் சசிபூஷணன் மேல் பாய்ந்தது. ‘அவனென்ன, உதவாக்கரை வக்கீல்! தான் பேரெடுக்க வேண்டுமென்று செய்த சூழ்ச்சி’ என்று பட்டு விட்டது ஜமீன் தாரனுக்கு. காரியஸ்தரை உடனே வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படியும், ஜாயிண்ட் மாஜிஸ்டிரேட், பெரிய மாஜிஸ்டிரேட் இவர்கள் காலில் விழும்படியும் உத்தரவிட்டான். காரியஸ்தர் துரையின் கோபத்தைத் தணிக்கக் கொஞ்சம் பக்ஷணமும் கனி வகை களும் எடுத்துக்கொண்டு அவனுடைய இருப்பிடத்திற்கு ஓடினார். தமக்கும் வழக்குக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும் அந்த மீசை முளைக்காத வக்கீல்பயல் சசிபூஷணனே இதற்குக் காரணம் என்றும் மிகவும் வணக்கமாகச் சொல்லிக் கொண்டார். துரை உடனே சசிபூஷணன் மேல் தம் கோபத்தைக் காட்டிக் காரியஸ் தரை வெகுவாகப் புகழ்ந்தார்: “டெரியாமல் செய்டடற்கு மிகவும் வருட்டம் எனக்கு!” என்று ஒரு வீதமாக வியவகாரத்தை மழுப்பி வீட்டார்.
அந்தத் துரை வங்கபாஷையை நன்கு அறிந்தவர் என்று ஸம்மானங்கள்கூடப் பெற்றவர். அவர் பொது மக்களுடன் இம்மாதிரி அற்புதமாக ஸம்பாஷிப்பது வழக்கம்.
“அம்மா அப்பா எல்லாம் நீங்களே தான். ஒரு சமயம் அடித்தாலும் ஒரு சமயம் அணைத்துக் கொள்வீர்கள். குழந்தைகளான எங்களுக்கு உங்கள் பேரில் குறை கூறு வதற்கு என்ன இருக்கிறது?” என்று காரியஸ்தர் தம் ராஜவிசுவாஸத்தைக் காட்டிக் கொண்டார்.
ஜாயிண்ட் மாஜிஸ்டிரேட்டின் ஒவ்வொரு சிப்பந்திக் கும் அவர்கள் மனசுக்குத் திருப்தியாகும்படிப் பொருள்களை வழங்கிவிட்டு ஹரகுமாரர் பெரிய மாஜிஸ்டிரேட்டைப் பேட்டி காணச் சென்றார். ‘சசிபூஷணன் தலைக் கிறுக்குப் பிடித்தவன்; அவனால்தான் இந்த வழக்கே ஏற்பட்டது என்பதைக் காரியஸ்தர் கூறக் கேட்டுப் பெரிய மா ஜிஸ்டி ரேட்டும், “எனக்குந்தான் அதிசயமா யிருந்தது, ஏது, நீங்களே இந்த மாதிரிப் பண்ணுவீர்களா என்று ! என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுக் காதோடு காது வைத்தாற் போல் வியவகாரத்தை முடிப்பதுதானே அழகு ! இப் பொழுது புரிகிறது, எல்லாம் யாருடைய வேலை என்று’ என்றார். கடைசியாக ஹரகுமாரரைப் பார்த்து, “சசி’ காங்கிரஸ்காரனா ?” என்று புலன் விசாரித்தார். அவரும் சற்றும் தயங்காமல், “ஆமாம்” என்றார்.
‘இதெல்லாம் காங்கிரஸ்காரர் சூழ்ச்சிதான்!’ என்று வெள்ளைத் துரைமார் ரீதியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.
“காங்கிரஸைச் சேர்ந்த சதிக் கூட்டம் ஒன்று ‘அமிர்த பஜார் பத்திரிகை’யில் அரசாங்கத்தின் மேல் இல்லாத புகார்களையெல்லாம் எழுதிக்கொண்டு தலை மறைவாக நாடெங்கும் திரிகிறது. இத்தகைய கூட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய நமக்கு வீசேஷ அதிகாரம் கொடுக்காத இந்திய சர்க்கார் என்ன சர்க்கார் ?” என்று பலவாறாக அரசாங்கத்தை இகழ ஆரம்பித்தார்.
‘காங்கிரஸ்கார’ச் சசிபூஷணனின் பெயர் மட்டும் மாஜிஸ்டிரேட்டின் மனசில் நன்றாகப் பதிந்து விட்டது.
5
வாழ்க்கையில் நிகழும் பெரிய விஷயங்களை ஒட்டி அற்பமான சம்பவங்களும் உலகத்தில் வேரூன்றி நிற்கின்றன.
சசிபூஷணன் மாஜிஸ்டிரேட்டுடன் போர் தொடுக்கச் சட்ட புஸ்தகங்களைப் புரட்டித் தனக்கு அநுகூலமான குறிப்புக்களை எடுத்துக்கொண்டு மனசிற்குள்ளேயே வாதங்களைத் தீட்டி வைத்துக்கொண் டிருந்தான். கற்பனையில் சாக்ஷிகளை ஜோடித்தான். தன்முன்பு நீதி மன்றத்தில் ஜனத்திரள் நிற்பதுபோல் பாவனை செய்து கொண்டு இவ்வாறு வேர்த்து வழியப் போர்க்கோலத் துடன் இருக்கும் சமயம், அவனுடைய சிறிய மாணவி ஏடு கிழிந்த தன் பாடபுஸ்தகங்களையும் நோட்டுப் புஸ்த கங்களையும் எடுத்துக்கொண்டு அங்கே படிக்க வந்து விடுவாள். தோட்டத்திலிருந்து தேர்ந்த நாவற் கனிகளைக் கொண்டு தருவாள். தன் அன்னையைக் கேட்டு ருசி கரமான ஊறுகாய்களைச் சிற்சில தினம் கொண்டு வந்து தருவாள். ஒருநாள் தேங்காய்ப் பொடிச் சாதம் வரும். வேறு ஒரு தினம் வீட்டிலேயே செய்த தாழம்பூ மணம் கமழும் பீட்டைச் சமயம் பார்த்துக் கொண்டு வைப்பாள்.
முதல் சிலதினங்கள் சசிபூஷணன், சித்திரமே இராத கனமான ஒரு புஸ்தகத்தை வேண்டா வெறுப்பாய்ப் புரட்டுவதைக் காணும்போது கிரிபாலாவுக்கு அதில் அவன் மனம் ஊன்றவில்லை என்றே தோன்றும். முன்னெல்லாம் இந்தமாதிரிப் புஸ்தகங்களைப் பிரித்து அநேகம் அதிசயமான விஷயங்களைச் சொல்லுவான் ; ஆனால், இந்த ஒரு புஸ்தகத்திலுள்ள விஷயத்தைமட்டும் ஏனோ அவன் விவரிக்கவில்லை ! அதில் தான் அறிந்து கொள்ளக்கூடியது ஒன்றுமே இல்லையா ? இருக்கலாம்; புஸ்தகம் பெரியதோ, அன்றோ ? தன் சிற்றறிவுக்கு அது எப்படி எட்டும்? இவ்வாறு அவள் சிந்திக்கலானாள்.
சசிபூஷணனுடைய கவனத்தைத் தன்பால் இழுக்கக் கிரிபாலா கூந்தலை அலப்பிக்கொண்டே உரத்த குரலில் பதங்களைத் தானே கூட்டிக் கூட்டிப் படித்துப் பார்த்தாள். அதனால் ஒரு பலனும் ஏற்படாமற் போகவே அந்தக் கனமான கருப்புப் புஸ்தகத்தின்மேல் அவளுக்கு எரிச்சல் மூண்டது. அதை ஒரு கொடூரமான மனிதனாகவே பாவித்து வெறுத்தாள். புரிபடாத அந்தப் புஸ்தகத்தின் ஒவ்வோர் ஏடும் கிரிபாலாவை ஏளனம் செய்வதுபோல் மௌனம் சாதித்தது. அவளுக்கு அதன்மேல் இருந்த அசூயையினால் யாராவது அதைத் திருடிக்கொண்டு போயிருந்தால் அவனுக்கு, வீட்டில் செய்த நல்ல பக்ஷணங் களைக்கூட வழங்கியிருப்பாள். அந்தப் பாழும் புஸ்தகம் ஒழியாதா என்று அர்த்தமற்ற பல பிரார்த்தனைகள் செய்துகொண்ட போதிலும் தெய்வம் அவற்றை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே வாசகர்களும் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திக்க வேண்டிய அவசியமே யில்லை.
அவன் கவனிக்காமல் இருக்கவே, வேதனையில் ஆழ்ந்த அந்தச் சிறுமி இரண்டொரு நாள் கழித்துத் தன் ஆசிரியனிடம் பாடம் கற்க வருவதை நிறுத்திவிட்டாள். தான் வராதிருப்பதனால் சசிபூஷணன் கவலைப்படுகிறானா என்பதை அறிவதற்குப் பாதையோரமாக மறைவில் நின்று கவனிப்பாள். சசிபூஷணன் அந்தப் பயங்கரமான புஸ்தகத்தை எரிந்துவிட்டுத் தனியாக நின்று கொண்டு கைகளை ஆட்டி ஆட்டி அந்நியமொழியான ஆங்கிலத்தில் ஜன்னல் கம்பிகளைப் பார்த்து ஏதோ பிரசங்கம் செய்துகொண் டிருப்பான். நீதிபதியின் மனத்தை வசப்படுத்த அவன் கையாளும் முறை இதுவே போலும்! வாழ்க்கையில் அநுபவம் பெறாது புஸ்தக உலகில் திரியும் சசிபூஷணன் எண்ணம், ‘அந்தக் காலத் தில் டெமாஸ்தனீஸ், ஸிஸிரோ, பர்க், ஷெரிடன் போன்ற மேதாவிகள் தம் நாவன்மையால் அசாமான்யமான காரியங் களைக்கூட நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் எதிரியின் வாதங்களைச் சொல்லம்பினால் சின்னபின்னம் ஆக்கிப் பல கொடூரங்களை வெளிப்படுத்தி, அகம்பாவம் கொண்டவர் களைத் தரையோடு தரையாகக் கவிழச் செய்து வெற்றி வாகை சூடியிருக்கும்போது, வியாபாரமே உயிர்நிலையாக இருக்கும் இந்தக் காலத்தில் அப்படிச் செய்வது அசாத்திய மன்று’ என்பதே. ‘அதிகாரத்திமிர் ஏறிய ஆங்கிலேயர் களை உலகோர் முன்பு பணியச் செய்வது எப்படி?” என்பதைக் குறித்துத் திலகுசிக் கிராமத்தில் இடிந்து போன ஒரு சிறுவீட்டில் நின்றுகொண்டு சசிபூஷணன் யோசித்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்து விண்ணவர் அழுதார்களா, சிரித்தார்களா என்று எவ் வீதம் சொல்வது?
அன்று முழுவதும் கிரிபாலா அவன் கண்ணிலேயே படவில்லை. அன்று அவள் மடியில் நாவற்பழமும் இல்லை. முன்போல் அந்தப் பழத்தைச் சேகரித்து வைத்துக் கொள்ளவும் அவள் ஆசைப்படவில்லை. என்றாவது ஒரு நாள் சசிபூஷணன் அவளை நோக்கிச் சகஜமாக, “கிரி, நாவற் பழம் இல்லையா ?” என்று கேட்பான். அப்போது குறும் பாகக் கேட்கிறான் என்று எண்ணி, “போ! உனக்கென்ன வேலை?” என்று எரிந்துவிழுந்து அவ்விடத்தை வீட்டு அகல்வாள். சசிபூஷணனுடைய கவனத்தைக் கவர முன் போல் நாவற்கொட்டையை உபயோகிக்காமல் தொலைவில் எதையோ பார்த்து அச்சிறுமி, “ஸ்வர்ணா! இரடி, போகாதே! இதோ நானும் வந்துவிடுகிறேன்” என்று கூக்குரலிடுவாள்.
புருஷவாசகர்கள், ‘ஸ்வர்ணலதா’ என்ற ஏதோ ஒரு பெண்ணை நோக்கி அவள் இவ்வாறு பேசினாள் என்று நினைக்கலாம். ஆனால் இதை வாசிக்கும் பெண்மணிகள், “அது யாரையும் குறிப்பிடவில்லை ; சமீபத்தில் இருக்கும் ஆசாமியின் சிந்தனையைக் கலைக்கத்தான்’ என்று எளிதில் ஊகிப்பார்கள். ஆனால் பாவம் ! குருடன் முன்பு அவள் செய்த இந்த ஜாலமெல்லாம் பலிக்கவில்லை. அவள் கூவியது சசிபூஷணன் காதில் விழாமல் இல்லை. பாலிகை விளையாட்டின்மேல் உற்சாகமாக இருக்கிறாள் என்று நினைத்தான். அதன் நடுவே அவளைப் பாடம் படி க்க அழைப்பது உசிதமல்ல என்று எண்ணினான். அதோடு அவனுக்கு அலுவல் இருந்தது. யார்மீதோ சொல்லம்பு எய்யப் பழகிக்கொண்டிருந்தான். அவனுடைய சிந்தனை யைக் கலைக்க அவள், சிறு பிராயத்தில் விட்டெறிந்த கொட்டைகள் குறி தப்பியது போலவே, இப்போது படிக்கத் தெரிந்த பீன்பு ஒரு மகத்தான லக்ஷ்யத்தைக் கைப்பற்ற அவள் வகுத்த உபாயமும் வீணாயிற்று. வாசகர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயந்தான்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாவற் பழக் கொட்டையாவது, நாலு ஐந்து குறி தவறினாலும், ஒன்றா வது இலக்கைப் போய்த் தாக்கும் என்ற நிச்சயம் உண்டு. ஆனால் ஸ்வர்ணா, ஆயிரந்தான் கற்பனைப் பெண்ணாய். இருந்தாலும் ‘இதோ வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் அதிக நேரம் நிற்பாளா? அப்படி நிற்கும் பக்ஷத்தில் ஸ்வர்ணா உண்மையானவளா என்பதைப்பற்றி இயல்பாகவே எல்லோருக்கும் ஸந்தேகம் பிறந்துவிடும். இந்த உபாயம் பயனற்றுப் போகவே கிரிபாலா அவ்விடத்தை வீட்டு விரைவில் அகலவேண்டியதா யிருந்தது. தொலைவில் நிற்கும் ஸ்வர்ணா என்ற தோழியோடு சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அவளுக்கு உள்ளூற ஆசை இருந்தால் அவள் பறந் தல்லவோ சென்றிருப்பாள்; ஆனால் கிரிபாலாவின் நடையில் அந்தப் பரபரப்புத் தென்படவில்லை. அவள் போகும்போது யாராவது தன்னைப் பின் தொடர் கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தாள். யாரும் வரவில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு இருந்த சிறு நம்பிக்கையும் மங்கிவிட்டது. நைந்திருக்கும் தன் பாட புஸ்தகங்களைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து வழியோரத்தில் சிதற அடித்தாள். சசிபூஷணன் கற்றுக் கொடுத்த வித்தையைத் திருப்பித் தரக்கூடிய சக்தி தனக்கு இருந் தால், சப்பீ உமிழ்ந்த நாவற்கொட்டையைப்போல், அதையும் அவன் வாயிற்படியண்டையே கக்கிவிட்டு வந்திருப்பாள். ‘இன்னும் ஒருமுறை சசிபூஷணனைப் பார்ப்பதற்குள் கற்றதையெல்லாம் மறந்துவிட வேண்டும்; அவன் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்ல முடியாதபடி இருக்கவேண்டும். ஒரு கேள்வீக்குக்கூட ; அப்போதுதான் அவன் கொட்டம் அடங்கும்.’ இதுவே அவள் கொண்ட தீர்மானம்.
கிரிபாலாவீன் இரு கண்களிலும் நீர் நிறைந்தது. கற்ற கல்வியைத் தான் மறந்துவிட்டால் சசிபூஷணனுக்கு அது வருத்தத்தையே அளிக்கும் என்று நினைக்கும்போது வேதனையுறும் அவள் உள்ளம் சிறிது சாந்தம் அடைந்தது. அவன் செய்த ஒரு பிழையினால் படிப்பை அறவே மறந்து பெரியவளாகும் கிரிபாலாவைக் கற்பனைக் கண்ணால் காணும்போது தன் பேரிலேயே அவளுக்கு, உலகத்தில் இல்லாத அநுதாபம் பொங்கி வழிந்தது – அந்தக் கார் காலத்து வானில் தினந்தோறும் மேகம் திரண்டெழு கிறதே அதுபோலவே. கிரிபாலா வழி யோரமாக ஒரு மரத்தின் மறைவீல் நின்ற வண்ணம் ரோஷம் தாளாமல் விம்மி விம்மி அழுதுகொண் டிருந்தாள். காரணமின்றி அவளைப்போல் தினந்தோறும் எத்தனையோ பெண்கள் அழுவதைப் பார்க்கிறோம்; நின்று கவனிக்க அதில் என்ன விசேஷம் இருக்கிறது?
6
சசிபூஷணனுடைய சட்டசம்பந்தமான ஆராய்ச்சியும் பேச்சுத்திறமையும் பயனற்றுப் போனதன் காரணம் வாசகர்களுக்குத் தெரிந்தே இருக்கும். மாஜிஸ்டிரேட்மீது தொடுத்த வழக்கு எதிர்பாராத விதமாய் வாபஸ் வாங்கப் பட்டது. ஹரகுமாரர் தம் பர்க்கணாவில் கௌரவ மாஜிஸ்டிரேட்டாக நியமிக்கப்பட்டார். அழுக்கடைந்த ஜிப்பா ஒன்றும் தலைப் பாகையும் போட்டுக்கொண்டு, அவர் இப்போதெல்லாம் ஜில்லா அதிகாரிகளைப் பேட்டி கண்டு தம் வணக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை.
சசிபூஷணனுடைய அந்தக் கருநிறச் சட்டப் புஸ்தகம் கிரிபாலாவின் சாபத்தினாலோ என்னவோ இருளடைந்த மூலை ஒன்றில் சீந்துவாரின்றிப் புழுதியில் கிடந்தது. அது அப்படி ஆதரவற்று விழுந்து கிடப்பதைப் பார்த்துச் சந்தோஷப்படக்கூடிய அந்தக் கிரிபாலா இப்போது எங்கே ?
சட்டப் புஸ்தகத்தைக் கட்டி வைத்த அன்றுதான் கிரிபாலா ஏன் வரவில்லை என்று சசிபூஷணனுக்குத் திடீரெனத் தோன்றியது. ஒவ்வொன்றாகக் கடந்த இரண்டு வருஷகாலத்து நினைவுகள் அப்போதுதான் மனத்தின் கண் எழுந்தன. ஒரு நாள், ஒளி நிரம்பிய காலை நேரத்தில் கிரிபாலா மடி நிறைய அன்றலர்ந்த மகிழ மலர்களைக் கொண்டு வந்து தன்முன் நின்ற காட்சி அவன் ஞாபகத்திற்கு அப்போது வந்தது. அவள் வந்தது தெரிந்தும் அவன், புஸ்தகத்தை வீட்டு முகத்தைத் திருப்பாமல் இருந்தபோது அந்தப் பூவின் நறுமணம் அவனை என்னவோ செய்து விட்டது. கிரிபாலா தன் தலைப்பில் செருகியிருந்த ஊசியை எடுத்துத் தலை குனிந்தபடியே ஒவ்வொரு மலராகக் கோத்து மாலை கட்டலானாள்; மாலையை நிதானமாகவே புனைந்தாள். அதை முடிக்க வெகு நாழிகையாயிற்று. பொழுதோ ஏறிக்கொண் டிருந்தது. கிரிபாலா வீட்டிற்குத் திரும்பும் நேரமும் ஆகிவிட்டது. ஆனால் சசிபூஷணனின் படிப்புக்கு மட்டும் ஒரு முடிவு ஏற்படவில்லை. கிரிபாலா மகிழ மாலையை மேடைமீது வைத்துவீட்டு வாடிய முகத்துடன் போய்விட்டாள். அன்று அவள் உள்ளத்தில் குமுறிய ரோஷம் இப்போது திரண்டு வருவது போன்ற பிரமை மூண்டது அவனுக்கு. ‘அவள் இப்போதெல்லாம் ஏன் முன்போல் தன் அறையினுள் வராமல் வெளி யிலேயே நின்று பார்த்துவிட்டுப் போய்விடுகிறாள்? எதற்காக அவள் இங்கு வருவதை நிறுத்தி விட்டாள்? என்மேல் கிரிபாலாவுக்குக் கோபம் இத்தனை நாள் நீடித்திராதே!’ இவ்வாறெல்லாம் எண்ணிப் பெருமூச் செறிந்து பிரமை பிடித்தவன்போல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டான். தன் சிறு மாணவி வராது போகவே புஸ்தகம் படிப்பதில் அவனுக்கு ஸ்வாரஸ்யம் ஏற்படவில்லை. இரண்டொரு புஸ்தகத்தின் ஏடுகளை அவன் புரட்டிப் பார்த்ததுதான் மிச்சம். அவன் அவற்றையும் ஒருபுறமாக எறிந்து வீட்டான். ஏதோ எழுத உட்கார்ந்தான். சற்றைக்கு ஒருதரம் பாதை யிலேயே அவன் கண் லயித்திருந்தது, கிரிபாலாவுக்காக.
“கிரிபாலாவுக்கு ஒரு வேளை உடம்பு அசௌக்கியமோ? அதனால்தான் அவள் வரவில்லையோ ?” என்று அவன் மனம் அல்லற் பட்டது. விசாரித்ததில் அவன் கவலை கொண்டது வீண் எனத் தெரிந்தது. கிரிபாலா இப் போதெல்லாம் வீட்டுப் படியைத் தாண்டுவதில்லை. அவளுக்கு விவாக வயசாகிவிட்டது ; ஒரு வரனும் அகப்பட்டு வீட்டான்.
கிரிபாலா தன் பாட புஸ்தகங்களைக் கிராம வீதியில் கிழித்தெறிந்ததற்கு மறுநாள் அதிகாலையில் தன் மடியில் எதையோ மறைத்துக்கொண்டு வேகமாக வீட்டி லிருந்து வெளியே வந்துகொண் டிருந்தாள். கோடைக் காலமானதால் இரவெல்லாம் தூக்கமின்றிக் கழித்த ஹரகுமாரர் பொழுது விடியுமுன்பே வாசல் திண்ணையில் திறந்த உடம்புடன் புகையிலை போட்டுக்கெரண்டு உட்கார்ந்திருந்தார். கிரி அவசரமாகச் செல்வதைப் பார்த்து, “எங்கே போகிறாய்?” என்று கேட்டார். ”சசி அண்ணா அகத்திற்கு” என்றாள் கிரி. ஹரகுமாரர் அவளை அதட்டி, “சசியின் அகத்திலே உனக்கு என்ன வேலை ? போ உள்ளே ! கல்யாணம் ஆகிற வயசாயிற்று; நாளைக்கே மாமியார் வீடு போக வேண்டியவள் ! வெட்கம், மானம் இல்லை?” என்று திட்டினார். அன்று தொட்டு அவள் வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடந்தாள். ஆகவே அவளுடைய ரோஷத்தைத் தணிக்க அவகாசம் கிடைக்காமற் போய்விட்டது சசிபூஷணனுக்கு. மாம்பழச் சத்து, கார் அரிசிப் பிட்டு, எலுமிச்சங்காய் ஊறுகாய் இவை இப்போதெல்லாம் அவனுக்குக் கிடைப்பதில்லை. மழை பாட்டிற்குப் பெய்துகொண் டிருந்தது. மகிழம் பூ உதிர்வது நிற்கவில்லை. மரம் முழுவதும் பேரிக்கனீ பழுத்திருந்தது. கிளிகள் கொத்தி நழுவி விழும் கனிந்த கருநாவற்பழங்கள் மரத்தடியில் சிதறிக் கிடந்தன. ஐயோ என்ன கொடுமை ! அந்தக் கிழிந்த பாட புஸ்தகங்கள் மட்டும் அங்கே தென்படக் காணவில்லையே!
7
அன்று கிரிபாலாவுக்கு விவாகம்; கல்யாண வீட்டில் மேள ஓசை கேட்டுக்கொண் டிருந்தது. விவாகத்திற்கு அழைக்கப்படாத சசிபூஷணன் அன்றே படகேறிக் கல்கத்தாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.
வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டதிலிருந்து ஹர குமாரர் சசியை விஷக்கண்ணால் பார்த்தார். அவன் தன்னை அலக்ஷ்யம் செய்கிறான் என்றே அவருக்குப் பட்டுவிட்டது. அவன் நடவடிக்கைகளில், அதன் அறிகுறியைத் தாம் காண்பதாக எண்ணிக் கொண்டார். கிராமத்தவர்கள் எல்லோரும் தாம் அவமானப்பட்டதை மறந்து வீட்டிருக்கும்போது சசி ஒருவன் மட்டும் அதை ஞாபக மூட்டுவதுபோல் தோன்றவே அவர் அவன் முகத்தில்கூட விழிக்காமல் இருந்தார். தற்செயலாக அவனைப் பார்க்க நேரிடும்போது அவர் ஹ்ருதயத்தில் என்னவோ ஒன்று உறுத்தும். ஆத்திரத்தில் அவருக்குத் தலை கால் தெரியாமல் போய்விடும். சசியை எப்படி யாவது ஊரை விட்டே தொலைத்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டார்.
சசிபூஷணனைப் போன்றவர்களை ஊரை வீட்டு அப்புறப்படுத்துவது அப்படி ஒன்றும் கடினமான காரிய மல்ல. காரியஸ்தருடைய கோரிக்கையும் சீக்கிரத்திலேயே நிறைவேறிவிட்டது. ஒரு நாள் விடியற்காலையில் பெரிய புஸ்தக மூட்டை, இரண்டு மூன்று தகரப் பெட்டிகள் இவற்றுடன் சசி படகில் ஏறிவிட்டான். கிராமத்தோடு தன்னைப் பிணைத்திருந்த ஒரே அன்புத்தளை அன்றே, ஆடம்பரமான விவாகத்திடையே வீண்டது. இந்த அன்புத்தளை தன் ஹ்ருதயத்தை இவ்வளவு திடமாகப் பற்றிக் கொள்ளும் என்பதை இதற்கு முன்னால் அவன் அறிந்து கொள்ளவீல்லை. படகு விலகிச் செல்ல செல்ல, கிராமம் தூரத்தில் மெல்ல மறைய மறைய, மணவிழாவின் இனிய வாத்தியத்தின் மெல்லொலி காதில் விழும் போதெல்லாம் அவன் கண்களில் நீர், திரை இடும். அவன் ஹ்ருதயம் துடிக்கும்; கண்டம் அடைத்துக்கொள்ளும். நெற்றி நரம்புகளெல்லாம் ரத்த வேகத்தினால் பட படக்கும்.
உலகத்துக் காட்சிகளெல்லாம், நிழலைக்கொண்டு நிருமித்த பேய்த்தேர்போல, நிலையற்றே தோற்றின.
காற்று, கடு விசையுடன் பிரதிகூலமாக வீசிக்கொண் டிருந்தது. ஆற்று நீர் அநுகூலமாகச் சென்றபோதிலும் படகு மெல்லவே முன்பு ஏகியது. அதே சமயம் நதியில் நடந்த ஒரு வீபரீதம் சசிபூஷணனுடைய பிரயாணத் திற்குத் தடையாக நின்றது ; ‘ஸ்டேஷன் காட்டி’லிருந்து பட்டணத்திற்குப் புதிய நீராவிக்கப்பல் போக்கு வரத்து ஏற்படுத்தப்பட் டிருந்தது. ஒரு ஸ்டீம்-லாஞ்சு இரைச்ச லுடன் நீரைக் குழப்பிக்கொண்டே எதிர்முகமாக வந்து கொண் டிருந்தது. கப்பல் நிர்வாகி இளம் பிராயமுள்ள துரை. அதில் பிரயாணிகள் மிகச் சிலரே இருந்தனர். சசிபூஷணனுடைய கிராமத்தவர்களும் அதில் இருந்தனர். ஒரு பெரிய வியாபாரத் தோணி, சற்றுத் தொலைவிலிருந்தே அந்த ஸ்டீம் லாஞ்சுடன் போட்டி போட்டுக்கொண்டு வந்தது. ஒவ்வொரு சமயம் ஸ்டீமரைப் பிடிப்பதும் பின் தங்குவதுமாய் இருந்தது. தோணிக்காரனுக்குக் குஷி பிறந்துவிட்டது. அவன் முதலில் கீழ்ப் பாய்மரச் சீலையை அவிழ்த்து வீட்டான்; பீறகு அதற்குமேலிருக்கும் பாய்மரச் சீலையையும் பீரித்துவிட்டான். ஸ்டீமரோடு போட்டி போடுவதற் காகத் தோணியினது கூம்பின் உச்சியில் இருக்கும் குட்டிச் சீலையும் காற்றில் ஊதியது. காற்றின் பளுத் தாங்காமல் பாய்மரம் முன்னே சரிந்தது. கலம் போழ்ந்த ஜலராசிகள் மகா கோலாகலத்துடன் தோணியின் இரு மருங்கிலும் ‘தை தை’ என்று கொந்தளித்தன. தோணி’ அப்போது கடிவாளம் அறுந்த குதிரைபோல் தலை தெறிக்கச் சென்றுகொண் டிருந்தது. நதியின் ஒரு வளைவில் துரிதமாகச் சென்று தோணி ஸ்டீமரையும் கடந்தது. ஸ்டீமர் நிர்வாகி கிராதிமேல் சாய்ந்தவண்ணம் தோணி போட்டி போடுவதைக் குதூகலத்துடன் பார்த்துக்கொண் டிருந்தான். மரக்கலம் தன் முழு வேகத்துடன் ஸ்டீமரைத் தாண்டி இரண்டொரு கஜம் சென்றபிறகு அந்த வெள்ளைக்காரன் துப்பாக்கியை எடுத்துக் காற்றில் வீங்கும் சீலையைக் குறி வைத்துச் சுட்டான். அக்கணமே சீலை கிழிந்துவிட்டது.
அந்த வெள்ளைக்காரன் எதற்காக இவ்வாறு செய் தான் என்று சொல்வது சற்றுக் கடினம். அவ்வாங்கில மகனின் மனப்பான்மையை வங்காளிகளாகிய நாம் சரியாகப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒருவேளை சுதேசிப் பாய்மரக் கலம் ஒன்று போட்டியிடுவது அவனுக்குச் சகிக்கவில்லையோ என்னவோ? காற்றில் அழகாக ஊதி விளங்கும் ஒரு பொருளைத் துப்பாக்கியால் சுட்டால் என்ன கதியாகும் என்று பார்க்கும் குரூர ஆவலாகவும் இருக்கலாம், ஒருவேளை. கர்வமாகச் செல்லும் அந்தத் தோணியின் சீலையில் துளைசெய்து அதை ஜலத்தில் அழுத்துவதில் என்ன வேடிக்கை வேண்டியிருந்ததோ அவனுக்கு ! அதன் உண்மை நமக்கு என்ன தெரியும்? ஆனால் இதுமட்டும் நிச்சயம்; விளையாட்டு என்று எண்ணிச் செய்யும் வீபரீதத்தினால் தமக்கு யாதொரு தண்டனையும் ஏற்படாது என்று திடநம்பிக்கை கொள்வது ஆங்கிலேயருடைய மனப் பான்மை; படகோடு மூழ்கி இறக்கும் மனிதர்களை அவர்கள் ஜீவகோடியைச் சேர்ந்தவர்களாகவே எண்ண மாட்டார்கள். துப்பாக்கியை நீட்டி வெள்ளைக்காரன் சுட்டபோது படகு மூழ்கி வீட்டது. அதே சமயம் சசிபூஷணனுடைய படகு இந்த அட்டூழியம் நடந்த இடத்தை அணுகியது. இந்தக் கண்ணராவியைச் சசிபூஷணன் நேரிலேயே பார்க்க நேர்ந்தது. சரசரவென்று தன் படகை அவ்வீடத்திற்குச் செலுத்தித் தோணியில் உள்ளவர்களை மீட்க முயன்றான். உள்ளே ‘மசாலா’ அரைத்துக்கொண்டிருந்த ஓர் ஆளை மட்டும் காணவில்லை. மழைக் காலமானதால் நதியில் நீர் புரண்டு சென்றது.
சசிபூஷணனுடைய ஹ்ருதயத்துள் ரத்தம் குபீரெனக் கொதித்தெழுந்தது. சட்டம் ஒரு கழுதை; அது ஒரு பெரிய சிக்கலான இரும்பு ஆலை போன்றது. கோல் தாழாது பக்ஷபாதமின்றித் தண்டனை வீதிக்கும்போது, அதில் மனிதவுள்ளம் குமுறுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் பசிக்கும்போது உணவு தராமலும், விருப்பம் உண்டாகும்போது அநுபவிக்க விடாமலும், ஆக்ரோஷம் கொள்ளும்போது தண்டனை விதிக்காமலும் இருப்பது சசிபூஷணன் வரைக்கும் இயற்கைக்கு விரோதமான தென்றே தோற்றியது. உலகத்தில் எவ்வளவோ அநீதங்கள் ஏற்படுகின்றன; பார்த்த மாத்திரம் அவற்றுக்குரிய தண்டனையை நம் கையாலேயே வீதிக்க முடியாமற் போய்விடுகிறது. கடவுள் இவற்றையெல்லாம் பார்ப்பவன் உள்ளத்தைத்தான் சுட்டெரிக்கி அப்போது சட்டத்தை நினைத்துக்கொண்டு ஆறுதல் கொள்வது நம் மனசுக்கே லஜ்ஜையாய் இருக்கிறது; ஆனால் யந்திரம்போற் சுழலும் சட்டமும், யந்திரத்தால் இயங்கும் கப்பலும் சசிபூஷணனிடமிருந்து அந்த வெள்ளைக்காரனைத் தொலைவாக வைத்துவிட்டன. இவற்றால் உலகத்துக்கு என்ன நன்மைகள் விளைந்தன என்று சொல்வது? ஒன்றுமட்டும் சந்தேகமறக் கூறலாம். சசிபூஷணன் இந்தியனுக்குரிய ஆத்திரம் கொண்டதுதான் மிச்சம்.
மூழ்கிய தோணியிலிருந்து மீண்டவர்களுடன் சசி, தன்னுடைய கிராமத்திற்கே திரும்பி வந்தான். அந்தத் தோணியில் ஏராளமாகச் சணல் இருந்தது. அதை எடுப்பதற்காக ஆட்களை அமர்த்திவிட்டு, ஸ்டீமர் நிர்வாகிமேல் உடனே போலீஸில் பிராது கொடுக்கும்படித் தோணியைச் சேர்ந்தவர்களுக்கு யோசனை கூறினான்.
இதற்கு அவர்கள் சற்றும் சம்மதிக்கவில்லை. id ‘தோணியைத்தான் பறிகொடுத்தோம். இந்த வம்பில் சிக்கிப் பணத்தையும் பறிகொடுக்க வேண்டுமா ? முதலில் போலீஸார் எதிரில் ஆஜராகவேண்டும், அப்புறம் காரி யத்தை வீட்டுச் சோறு, தண்ணீர், தூக்கம் இராமல் ஒவ்வொரு கோர்ட்டாக ஏறவேண்டுமே! அதோடு வெள்ளைக்காரத் துரையாயிற்றே! அவன்மேல் புகார் செய்தால் கடைசியில் வழக்கு எந்த விதமாக முடியுமோ? கடவுளுக்குத்தானே தெரியும்!” என்றான் அவர்களுள் ஒருவன். சசிபூஷணன் தான் வக்கீல் என்றும் வழக்கைத் தன் செலவிலேயே நடத்துவதாகவும் சொன்னதன்பேரில் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஸ்டீமரில் சென்ற சசிபூஷணனின் கிராமத்தவர் எவரும் சாக்ஷி சொல்ல அறவே மறுத்துவிட்டனர்; “ஐயா! நாங்கள் எதையும் பார்க்கவில்லை ; ஸ்டீமரின் பின்பாகத்தில் கிடந்தோம். எஞ்ஜின் போடும் இரைச்சலுக்கும் ஜலத்தின் சலசலப் பிற்கும் இடையே வெடிச் சத்தம் எப்படிக் காதில் வீழும்?” என்றார்கள்.
ஊரார்மேல் வெறுப்புற்றவனாய் அவர்களை உள் ரூறச் சபித்துவிட்டு மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடத்த ஆரம்பித்து வீட்டான் சசிபூஷணன்.
சாக்ஷியத்திற்கே அவசியம் ஏற்படவில்லை. அந்த ஸ்டீமர் நிர்வாகியே தான் துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக்கொண்டான். மேலும் அவன், “ஆகாயத்தில் நாரைக்கூட்டம் ஒன்று பறந்து சென்றது. அதைப் பார்த்துத்தான் சுட்டேன். அப்போது எங்கள் ஸ்டீமர் வீசையுடன் சென்றுகொண் டிருந்தது. நதி வளைவாகத் திரும்பும் இடம். நான் சுட்டதால் காக்கைதான் விழுந்ததோ, நாரைதான் விழுந்ததோ, தோணிதான் மூழ்கியதோ! எனக்கு எப்படித் தெரியும்? பூமியிலும் ஆகாயத்திலும் வேட்டையாடுவதற்குச் சௌகரியங்கள் இருக்கும்போது தம்பிடி தாளாத அழுக்குப்பிடித்த கந்தல் மேலா குண்டை வீணாக்குவேன்!” என்றான்.
‘குற்றவாளியல்ல’ என்று விடுவிக்கப் பட்டவுடன் அந்த வெள்ளைக்கார நிர்வாகி சுருட்டை வாயில் பற்ற வைத்துக்கொண்டே நிச்சலமாய் ‘உவீஸ்ட்’ (whist) விளையாடக் ‘கிளப்’பை நோக்கிச் சென்றான். தோணியில் மசாலா அரைத்துக்கொண் டிருந்த ஆளின் பிரேதம் அவ்வூருக்கு ஒன்பது மைலுக்கு அப்பால் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. சசிபூஷணன் புண்பட்ட உள்ளத் துடன் தன் கிராமத்திற்குத் திரும்பினான்.
அந்தத் தினமே படகை அலங்கரித்துக் கிரிபாலாவை அவள் புக்ககத்திற்கு அழைத்துப் போனார்கள். தன்னை யாரும் அழைக்காது போனாலும் சசிபூஷணன் நதிக்கரை யோரமாக வந்து நின்றான். படித்துறையில் கூட்டமாக இருக்கவே சற்றுத் தொலைவாகவே இருந்தான். படகு நகர்ந்து அவன் எதிரே செல்லும்போது சட்டென ஒரு. தரம் நிமிர்ந்து நோக்கியபோது தலையில் முக்காட்டை இழுத்துக்கொண்டு மணமகள் குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்தாள். கிராமத்தைவீட்டு நீங்குமுன் ஒரு. தரமாவது சசி அண்ணாவைப் பார்க்கவேண்டு மென்று ஏங்கினாள் கிரிபாலா. இன்று தன்னுடைய குரு இவ்வளவு: சமீபத்தில் கரையில் நின்றிருப்பது அவளுக்குத் தெரியாமற் போய்விட்டது! அவள் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. மறைவாக வீடும் கண்ணீர், அவள் இரு கன்னங்களிலும் வழிந்தோடியது.
படகும் சிறிது சிறிதாகக் கண்ணுக்கு மறைய லாயிற்று. ஆற்றுநீரின்மேல் இளம் வெயில் படிந்து பளபளத்தது. அருகில் இருந்த ஒரு மாமரத்தின் கிளையில் வரிக்குயில் ஒன்று தீங்குரல் எடுத்துச் சலிக்காமல் பாடிக்கொண் டிருந்தது. கூலிப்படகுகள் இக்கரைக்கும் அக்கரைக்குமாகச் சென்றுகொண் டிருந்தன. நீர் மொள்ள வரும் கிராமப் பெண்டுகளின் வாயில், கிரிபாலா புக்ககம் போகும் விமரிசையைப் பற்றிய பேச்சுத்தான். சசி பூஷணன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துவிட்டுப் பாட்டை ஓரத்தில் இருக்கும் தனக்குச் சொந்தமான அச்சிறு அறையிலேயே அடைக்கலம் புகுந்தான். திடீரென, ‘சசி அண்ணா’ என்று கிரிபாலாவீன் குரல் கேட்டது போன்ற மருள் ஏற்பட்டது அவனுக்கு. எங்கே அவள் ? எங்கே அவள் ? எங்கேயும் இல்லை ! அவள் வீட்டிலும் இல்லை; வழியோரத்திலும் இல்லை; அவள் கிராமத்திலேயே இல்லை. கண்ணீர் மல்கும் அவன் இதயத்துள் வீற்றிருந்தாள்.
8
சசிபூஷணன் மறுபடியும் மூட்டை முடிச்சுக்களுடன் கல்கத்தாவிற்குப் பிரயாணமானான். கல்கத்தா போவதற்கு அவனுக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. ஆகவே ரெயில் வழியாகச் செல்லாமல் நதி மார்க்கமாகவே புறப்பட்டான்.
அப்போது நல்ல மழைக்காலம். வங்காள தேச முழுதும் வளைந்து வளைந்து குறுக்கும் நெடுக்கும் நீர் நிலைகள் பீன்னிக் கிடந்தன : பசுமை போர்த்த வங்க நாட்டின் ஜீவநாடிகளான நதிகளெங்கும் நிறைபுனல் ஓடிற்று; மரங்களும் புதல்களும் சணலும் கரும்பும் செழித்தோங்கிப் புதுமை அழகு எங்கும் வழிந்தோடுவது போல் தோன்றிற்று.
சசிபூஷணன் ஏறிச்செல்லும் படகு குறுகி வளைந்து ஓடும் பல நீரோட்டங்களில் புகுந்து சென்றது. கரைபுரண்டு சென்றது ஜலராசி. நாணற் புதர்களும், சில இடங்களில் பயிர் நிலங்களும் நீரில் மூழ்கிக் கிடந்தன. கிராமத்து எல்லையிலும் மனைகளின் மூங்கில்வேலிக்கு அருகிலும் மாந்தோப்பினுள்ளும் நீர்ப்பெருக்குப் பரவீ இருந்தது. எங்கும் எதிர்க்கும்படியாக வானவர் மாரிபொழிந்து வங்க பூமியை வெள்ளக் காடாக்கினர்.
பிரயாணம் தொடங்குமுன் மழையில் குளித்த இயற்கை, கதிரவனின் ஒளியைப் பருகிப் புன்னகை பூத்தது. சில நாழிகைக்கெல்லாம் ஆகாயம் இருண்டு வந்து மழை பொழிய ஆரம்பித்தது. அப்போது எந்தத் திசையைப் பார்த்தாலும் காட்சி மனசுக்குப் பிடிக்கா தப்டி இருந்தது. பெரு வெள்ளம் ஊரெங்கும் பொங்கி வரும் போது ஆநிரை, ஜலமும் சேறும் குழம்பிய முற்றத்தில் ஒன்றோடொன்று இடி பட்டுக்கொண்டு கொட்டும் மழையிலேயே பரிதாபமுறும்படி நனைவதுபோல், சேறும் சதுப்பும் புதல்களும் நிரம்பி வங்கதேசம் அந்த ஓயா மழைத் தாரையை மௌனமாகத் தாங்கிக்கொண் டிருந்தது. உழவர்கள் ஜம்பங்குடையை போட்டுக் கொண்டு கழனீகளுக்குச் சென்றனர். பெண்டுகள் தெப்பமாக நனைந்து மழையிலும் வாடைக்காற்றிலும் உடலைக் கூசிக்கொண்டே தம் அலுவலாக ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதும் வருவதுமாய் இருந்தனர். சறுக்கும் படித்துறையில் ஜாக்கிரதையாகக் கால்களை வைத்துச் சிலர் தண்ணீர் மொண்டு சென்றனர். வீட்டுத் திண்ணை களில் குடியானவர் சிலர், புகையிலை மென்றுகொண்டே கும்மென உட்கார்ந்திருந்தனர். அவசியமான வேலை யுள்ளவர்கள் வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கையில் செருப்பும் தலையில் குடையுமாகத் தெருவில் போய்க்கொண் டிருந்தனர். மண்டை வெடிக்கும்படியான வெயிலாக இருந்தாலும் கொட்டு மழையாயிருந்தாலும் நம் நாட்டுப் பழைய புனிதமான சம்பீரதாயப்படி, பெண்கள் குடை பிடித்துத்தான் செல்வதில்லையே!
மழை ஓயாது பொழியவே ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்கும் படகினுள் அடைப்பட்டுக் கிடக்கப் பிடிக்காமல் சசிபூஷணன் ரெயில் மார்க்கமாகப் போவதென்று உறுதி கொண்டான். இரண்டு நதிகள் சேரும் மணல் திடர் ஒன்றில் சசிபூஷணனுடைய படகைக் கட்டிவீட்டு அதிலுள்ளவர்கள் ஆகாரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாயினர். ‘பல்லியை எத்தனை தரம் எடுத்துப் போட்டாலும் அது திரும்பத் திரும்பப் பழங் காடிப் பானையிலேயே போய் வீழும்’ என்று ஒரு வசனம் உண்டு.. சசிபூஷணன் அன்று இதை நிரூபித்துவிட்டான்.
இரண்டு நதிகள் கூடும் அந்த இடத்திற்கு அருகே பெரிய வலைகளைப் பரப்பிச் செம்படவர்கள் மீன் பிடித்துக் கொண் டிருந்தனர். படகு போவதற்கும் வருவதற்கும் மட்டும் ஓர் ஓரமாக இடம் வீட்டிருந்தனர். நெடுநாளாக இந்தத் தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதற்காகச் சர்க்காருக்கு மீன் மாசூல் செலுத்தி வந்தனர். அவர்களுடைய துரதிருஷ்டவசமாய் இந்த வருஷம் அந்தப் பக்கமாகத் திடீரென ஜில்லா போலீஸ் சூபரிண் டெண்டெண்டு விஜயம் செய்தான். அவனுடைய படகு தொலைவில் தென்பட்டவுடனேயே முன் ஜாக்கிரதையுடன் படகு செல்வதற்கான வழியை அவர்கள் காட்டினார்கள். ஆனால், கேவலம் இந்தச் செம்படவப் பயல்கள் வார்த்தை யையா கேட்பது!’ என்ற மண்டைக் கொழுப்பினால் வலைகள் மேலேயே படகைச் செலுத்தும்படி ஆட்களுக்கு உத்திரவிட்டான். வலையின் சட்டம் நீரில் படியவே படகு செல்வதற்கு வழி ஏற்பட்டு வீட்டது. ஆனால், படகு சட்டத்தின்மேல் மோ தியதால் அதன் சுக்கான் மாட்டிக் கொண்டது. அதைச் சரிப்படுத்தச் சிறிது நாழிகை ஆயிற்று.
அந்தப் போலீஸ் துரையின் முகம் கோபத்தால் ரத்தம்போல் சிவந்து வீட்டது. உடனே படகை அந்த இடத்திலேயே நிறுத்தினான். அவனுடைய தோற்றத் தைப் பார்த்து அங்கே இருந்த செம்படவர்களெல்லாம் மேல் மூச்சு வாங்க மூலைக்கு ஒருவராக ஓடிவீட்டனர். துரை தன் படகோட்டிகளைக் கூப்பீட்டு வலை முழுவதையும் அறுத்தெரியும்படிக் கட்டளையிட்டான். அவர்களும் கைகூசாமல் எழுநூறு எண்ணூறு ரூபாய் பொறுமான அந்தப் பெரிய வலைக்கோவையைத் துண்டு துண்டாகச் சிதைத் தெறிந்தனர். அவர்கள் அவைகளை யெல்லாம் ஒரு போராகக் குவித்த பிறகு செம்படவர்களை இழுத்து வரும்படித் துரை உத்தரவிட்டான். ஓடிப் போனவர்கள் அகப்படாமற் போகவே அக்கம் பக்கத்தி லிருந்த இதில் சம்பந்தப்படாத பேர்வழிகள் நால்வரைப் போலீஸ் சேவகன் பிடித்துக்கொண்டு வந்தான். ‘நாங்கள் ஒரு பாவத்தையும் அறியோமே!” என்று அந்த நிரபராதிகள் கெஞ்சி மன்றாடினார்கள். அவர்களைப் பிடித்துக் கட்டும்படி அந்தப் போலீஸ் புலி ஆக்ஞை இடும்போது, மூக்குக் கண்ணாடி அணிந்த சசிபூஷணன் சொக்காய்ப் பித்தானைச் சரியாகக் கூடப் போட்டுக் கொள்ளாமல் ஜோடு ‘சடக் சடக்’ என்று அடித்துக் கொள்ளத் தலைதெறிக்கப் போலீஸ் உத்தியோகஸ்தன் இருக்கும் படகெதிரே வந்து நின்றான்.
ஆக்ரோஷத்தினால் குரல் குலைக்க, “ஏழைச் செம்பட வர்களின் வலையைப் பிய்த்தெரியவும், ஒன்றும் அறியாத இந்த ஜனங்களை ஹிம்ஸிக்கவும் உமக்கு என்ன அதிகாரம் ஐயா இருக்கிறது?” என்றான்.
போலீஸ் அதிகாரி, ஹிந்துஸ்தானியில் அவனை ஏதோ வித்தியாசமாகச் சொல்லவே, கரைமேல் இருந்த சசிபூஷணன் இமைப்பொழுதில் படகினுள் தாவி அந்த உத்தியோகஸ்தன்மேல் போய் விழுந்தான்; சிறு பிள்ளைகள் அடிப்பதுபோல் வெறிபிடித்துத் துரையைத் தாக்கினான்.
அதற்கப்புறம் என்ன நடந்ததோ அவனுக்கே தெரியாது.போலீஸ் தாணாவில் கண் விழித்தபோதுதான் தன் நிலை அவனுக்குப் புரிந்தது. அது மனசுக்குத் திருப்தி யையோ, உடலுக்குச் சுகத்தையோ தரக்கூடியதாயில்லை.
9
சசிபூஷணனுடைய தந்தை, பாரிஸ்டரைக்கொண்டு அவனை ஜாமீனில் விடுவித்துக்கொண்டு வந்தார். அப்புறம் வழக்கு வீசாரணை ஆரம்பமாயிற்று. வலைஞர் யாவரும் சசிபூஷணன் இருக்கும் பர்க்கணாவைச் சேர்ந்த ஜமீன் குடிகளே. சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்ட போதெல்லாம் சசியினிடமே யோசனை கேட்க அவர்கள் வருவது வழக்கம். போலீஸ் சூபரிண்டெண்டெண்டு பிடித்துக்கொண்டு வந்த அந்த நிரபராதிகள் நால்வரும் சசிபூஷணனுக்குத் தெரிந்தவர்களே. தன் பக்கம் சாக்ஷி களாக வரும்படி அவர்களை யெல்லாம் சசிபூஷணன் அழைத்து வந்தான். ஆனால், அவர்களுக்கு உள்ளுக்குள் நடுக்கந்தான். ‘குழந்தையும், குட்டியுமாக இருக்கும் நாம் போலீஸ் வம்பில் மாட்டிக் கொண்டால் என்ன நேரிடுமோ?’ என்ற திகில் அவர்களுக்கு. அதோடு அவர் களுக்குத்தான் அந்த வெள்ளைக்காரத் துரையின் எதிரே நின்று போராடுவதற்கு என்ன சக்தி இருக்கிறது? நஷ்டம் என்னவோ ஆகிவிட்டது! ‘இப்போது இந்தச் சாக்ஷி ஸம்மனை ஏற்றுக்கொள்ள வேண்டுமே!’ என்று சங்கடத்தில் ஆழ்ந்தார்கள்; “சாமி! நீங்கள் ஏனோ. எங்களை இந்த வம்பில் மாட்டிவிடுகிறீர்கள் ?” என்று எல்லோரும் ஒரு முகமாய்க் கூறினர்.
நிதானமாகப் புத்திமதி சொன்னதன் பேரில் அவர்கள் நடந்ததை நடந்தவாறே சொல்ல ஒப்புக்கொண்டார்கள்.
இதற்குள் ஹரகுமாரர் ஒரு சமயம் தம் காரியமாய் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் சென்றிருந்தபோது அங்கே. மேற்சொன்ன போலீஸ் அதிகாரி அவரைப் பார்த்து,. “ஏன் ஐயா காரியஸ்தரே! உம்முடைய குடிகள் சிலர் போலீஸ்மேல் அக்கப்போரெல்லாம் தொடுக்க ஆரம்பித்து வீட்டார்களே !” என்றான். ஹரகுமாரர் திடுக்கிட்டவராய், “என்ன, அப்படி ஒருபோதும் நடக்காதே! அந்த ஈனஜாதிப் பயல்கள் உடம்பில் அவ்வளவு திமிர் ஏது?” என்றார்.
வழக்கு, சசிபூஷணன் பக்கம் வெற்றியடையவில்லை என்பது பத்திரிகை படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந் திருக்கும்!
வலைஞர் ஒவ்வொருவராக வந்து சாக்ஷிக்கூண்டில் ஏறித் துரை தங்களுடைய வலையை அறுக்கவில்லை யென்றும், தங்களைப் படகண்டை வரச்சொல்லிப் பெயரை மட்டும் குறித்துக் கொண்டாரென்று சொன்னார்கள்.
அதோடு நில்லாமல் சசிபூஷணன் ஊரைச்சேர்ந்த இரண்டொருவர், தாம் பிரஸ்தாப ஸம்பவம் நடந்த இடத்தில் ஏதோ கல்யாணத்திற்குப் புறப்படக் கரையில் காத்திருந்ததாகவும், அப்போது சசிபூஷணன் அகாரண மாக ஓடிவந்து போலீஸ்காரரை வலுச் சண்டைக்கு இழுத்ததைத் தாமே நேரில் பார்த்ததாகவும் கலப்பற்ற பொய்யை நீதி ஸ்தலத்தின் நடுவே வாய் கூசாமல் சொன்னார்கள்.
அந்தப் போலீஸ் அதிகாரி தன்னைத் திட்டியதால் தான் அவனை அடித்ததாக ஒப்புக்கொண்டான் சசி. தனக்கு ஆத்திரம் முண்டதற்கு மூலகாரணம், அதிகாரி வலையை அறுத்து அந்த நால்வரையும் துன்புறுத்தியது தான் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டான்.
இந்த மாதிரி ஒரு வழக்கில் சசிபூஷணனுக்குக் கிடைத்த தண்டனை சட்டப்படி அநியாயம் என்று சொல்ல முடியாது. ஆனால், தண்டனை மட்டும் சற்றுக் கடுமைதான். அவன்மேல் மூன்று நான்கு குற்றச் சாட்டுகள்: அடித்த குற்றம், அத்துமீறி வந்தது, போலீஸ் வேலைக்குத் தடை விளைவித்தது முதலியவை. இதில் ஒவ்வொரு குற்றமும் அவன் செய்ததாகவே ருஜுப்படுத்தப்பட்டது.
சசிபூஷணன் தனிமையாக இருந்த தன் சிறு அறை யையும், பொழுதுபோக்குவதற்கு உதவியாய் இருந்த புஸ்தகங்களையும் விட்டுவீட்டுச் சிறையில் ஐந்து வருஷ காலம் உழலவேண்டியதாயிற்று. அவனுடைய தந்தை அப்பீல் செய்வதாகச் சொன்னபோது சசிபூஷணன் அவரைத் தடுத்து, “சிறைவாசமே மேலானது ! இரும்புக் கிராதிகள் ஒருபோதும் பொய் சொல்லா. ஆனால் இந்த இருட்டறைக்கு வெளியே நடத்தும் சுதந்திர வாழ்க்கை என்னை ஆபத்தில்தான் சிக்கவைக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பு இல்லையே என்று நீங்கள் சொல்வதா யிருந்தால் சிறையில்தான் பொய்யர், துரோகிகள், பேடிகள் இவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள்; ஏனென்றால், இடம் குறுகியது. வெளி உலகமோ மிகவும் பரந்தது” என்றான்.
10
சசிபூஷணன் சிறைக்குச் சென்ற சில தினங்களுக் கெல்லாம் அவன் தந்தை இறந்துவிட்டார். அவனுக்கு நெருங்கிய உறவு வேறு யாரும் இல்லை. ஓர் அண்ணன் மட்டும் நெடு நாளைக்கு முன்பே மத்திய மாகாணத்தில் ஏதோ வேலையில் அமர்ந்து அங்கேயே தங்கிவிட்டான் ; அவன் இந்தப் பக்கம் வருவதே யில்லை. ஊரிலிருந்த கொஞ்சநஞ்சம் சொத்துக்களையும் காரியஸ்தர் ஹரகுமாரர் சூது மார்க்கமாய்க் கபளீகரம் பண்ணிவீட்டார்.
சிறைக் கூடத்தில் கைதிகள் சாதாரணமாகப் படும் கஷ்டத்தைவிட அதிகமாகவே படவேண்டுமென்று அவன் தலையில் எழுதியிருந்தது. அப்படி யிருந்தும் அந்த ஐந்து நீண்ட வருஷங்கள் எவ்விதமோ கழிந்து விட்டன.
மீண்டும் முன்போலவே ஒரு மழைநாளில் உடல் நலிந்து உள்ளம் உடைந்தவனாய்ச் சசிபூஷணன் விடுதலை யாகிச் சிறைக்கு வெளியே வந்து நின்றான். சுதந்திர மனிதனாகி விட்டாலும் இந்த விரிவான உலகில் தமர் என்று சொல்லிக்கொள்ள அவனுக்கு யாருமில்லையே! தலைசாய்க்க இடந்தான் ஏது ? வீடு வாசலின்றி, உறவினர் இன்றி, சமூகத்தில் இடமின்றித் தான் ஒன்றியாக நிற்பது அவனுக்கே வருத்தத்தை அளித்தது.
மீண்டும் வாழ்க்கையை எப்படித் தொடங்குவது என்று அவன் ஆழ்ந்து சிந்தித்துக்கொண் டிருக்கும்போது ஒரு கோச்சு வண்டி அவன் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வேலையாள் இறங்கி, “நீங்கள் தானா சசிபூஷண்பாபு?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்றான் சசிபூஷணன்.
அந்த ஆள் அக்கணமே வண்டிக் கதவைத் திறந்து அதில் சசிபூஷணன் ஏறுவதற்காகக் காத்துக்கொண் டிருந்தான்.
சசிபூஷணன் வியப்படைந்து, “எங்கே வரவேண்டும் நான்?” என்றான்.
வேலையாள், “எங்கள் எஜமானர் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றான்.
வழியில் போவோர் வருவோர் இதைக் கவனிப் பதைக் கண்டு பிடிக்காமல் மேலே பேச்சின்றி வண்டியில் ஏறிக்கொண்டான் சசி. ‘வாஸ்தவமாக இதில் ஏதோ வீசகு ஏற்பட்டிருக்கிறது; எப்படியிருந்தால் என்ன? ன் எங்கோ ஓர் இடத்திற்குப் போய்த்தானே ஆகவேண்டும். ஒரு வேளை இந்த அதிசயத்திலிருந்து எனக்குப் புது வாழ்வு ஆரம்பமாகிறதோ என்னவோ ? என்று தன்னுள் எண்ணிக் கொண்டான்.
அன்றுகூடக் காரும் கதிரும் வானவெளி எங்கும் ஒன்றை யொன்று துரத்திக்கொண்டு திரிந்தன. வழி யோரத்தில் மழைநீர் தேங்கிய பைந்நிற வயல்கள் ஒளியும். நிழலும் கலந்து விசித்திரமாகத் தோற்றின. வழியில் சந்தைக்கடை கூடும் இடத்தில் பெரிய தேர் ஒன்று நின்றது. அதற்குச் சிறிது தொலைவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தாசரிக் கூட்டத்தினர் தம்புராவை மீட்டித் தாளம் போட்டுக்கொண்டே பாடினர் :
“வருக வருக நாதனே வருக!
வருக விரைவிலென் வேட்கையைப் போக்க!
வருகஎன் உளம்கவர் கள்வனே வருக!”
சிபூஷணனுடைய வண்டி போய்க்கொண்டே இருந்தது. அவர்களைக் கடந்து சென்றும் பாட்டின் மற்ற அடிகள் தெளிவாகக் கா தில் விழுந்தன:
”வருக நோய்மிகச் செய்திடும் அன்பனே!
வருக கருணைக் குழகனே வருக!
வருக கார்முகில் வண்ணனே வருக!”
பாட்டின் அடிகள் வரவர மங்கிக்கொண்டே வந்தன; தளிவாகக் கேட்கவில்லை. ஆனால் அதனுடைய சந்தம் மட்டும் சசிபூஷணன் மனத்தில் ஓர் அலையை எழுப்பி விட்டது. அவன் தனக்குத்தானே பாடிக்கொண்டு பாட்டின் மிகுதியான அடிகளைக் கவனம் செய்தான்:
“வருகஎன் ஆனந்த வாழ்வே மீண்டு.
வருகஎன் நெடுநாள் துயரமே மீண்டு.
வருகஎன் இன்ப துன்பில்வாழ் நிதியே!
வருக வருகஎன் ஆசைக் கொழுந்தே!
வருக வருகஎன் அன்பின் பிழம்பே!
வருக வருகஎன் மனச்சஞ் சலமே!
வருக வருகஎன் தோள்மீ தணைவாய்.
வருக வருகஎன் அழியாப் பேறே!
வருக வருகஎன் அகத்துள் உறைவாய்.
வருக வருகஎன் கண்ணினுள் மணியே.
வருக வருகஎன் கனவிலும் நினை விலும்.
வருகஎன் உயிரிலும் உடலிலும் உலகிலும்.
வருக வருகஎன் முகத்தொளிர் முறுவலில்.
வருக வருகஎன் கண்பனி யதனில்.
வருக வருகஎன் நிழலிலும் மயலிலும்.
வருக வருகஎன் ஊடலில் உவந்து.
வருக வருகஎன் எண்ணம் அனைத்திலும்.
வருக வருகஎன் பொறுப்புக ளனைத்திலும்.
வருகஎன் அறமே! வினையே!
வருக வருகஎன் நிறைவே! வாழ்வே!
வருக வருகஎன் மரணத் திலுமே.”
மதில் சூழ்ந்த ஓர் இரண்டடுக்கு மாளிகை யெதிரே வண்டி வந்து நின்றபோதுதான் சசிபூஷணன் செய்யுள் இயற்றுவதும் நின்றது. அவன் கேள்வீ எதுவும் கேட்காமல் வேலைக்காரன் காட்டிய வழியே வீட்டினுள் நுழைந்தான். அவன் போய் உட்கார்ந்த இடம் ஒரு. பெரிய கூடம். அங்கே பெரிய பெரிய கண்ணாடிப் பீரோக்களில் பல விசித்திர வர்ண அட்டைகளையுடைய புஸ் தகங்கள் வரிசையாக வைக்கப்பட் டிருப்பதைப் பார்த்தான். அந்தக் காட்சியைக் கண்டவுடன் பழைய வாழ்வின் நினைவுகள் மீண்டும் ஒரு முறை சிறையிலிருந்து வெளிப்படுவனபோல் வந்தன. பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற அழகிய கோப்புடைய அந்தப் புஸ்தகங்கள் யாவும் ஓர் இன்ப உலகத்திற்குச் செல்லும். மணிகள் பதித்த தோரணவாயிலாகவே தோற்றின.
மேஜையின் மேலும் என்ன என்னவோ பொருள்கள் கிடந்தன. சசிபூஷணன் மங்கிய பார்வையுடன் அவை என்னவென்று நோக்கினான்:- ஓர் உடைந்த பலகை, அதன்மேல் அழுக்குப் படிந்த பழைய பாட புஸ்தகம் இரண்டு, கிழியும் தறுவாயிலிருக்கும் ஒரு வாய்ப் பாடு, ‘கதாமாலை’, காசி ராமதாஸரின் மகாபாரதம் ஒன்று இவைதாம். பலகையின் சட்டத்தின்மேல் அன்றொரு நாள் சசிபூஷணன் கருப்பு மசிகொண்டு பட்டையாக எழுதிய ‘கிரிபாலா தேவி’ என்ற அக்ஷரங்கள் இன்னும் அழியவில்லை. நோட்டுப் புஸ்தகங்களிலும் தான் எழுதிய எழுத்துக்கள் அழியாமல் இருப்பதைக் கவனித்தான்.
எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவன் ஹ்ருதயத்துள் ரத்தம் வேக. மாய்த் துள்ளி ஓடியது. திறந்த பெரிய சாளரத்தின் வழியாக வெளியே நோக்கினான். அவன் கண்களில் அப் போது தென்பட்டது என்ன ? – கிராதியிட்ட அந்தப் பழைய அறை ; மேடும் பள்ளமுமாகச் செல்லும் கிராமப் பாதை; ‘டோரியா’ச் சிற்றாடை கட்டிக்கொண்டிருக்கும். அதே பூம்பாவை; அன்று தான் தனிமையில் நுகர்ந்த அவ்வின்ப வாழ்வு !
அந்த நாளில் சுகத்தில் ஊர்ந்துசென்ற வாழ்வு* அவனுக்கு ஏற்றதாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறு காரியங்களிடையே போவது தெரியாமல் நாட்கள் கழியும். தன் சொந்த அலுவலுக்கு நடுவீல்- ஒரு பாலிகை தன்னிடம் பாடங் கற்றுக்கொள்ள வருவது ஓர் அற்ப நிகழ்ச்சியாகவே அப்போது தோன்றிற்று. ஆனால் அந்தக் கிராமத்தின் ஒரு மூலையில் ஏகாந்தமாகக் கழியும் அந்நாட்கள் – அவன் அநுபவீத்த அந்தச் சிறு அமைதி – அவன் பெற்ற அத்துளி இன்பம் – அந்தப் பெண்ணின் சின்னஞ்சிறு முகம் – இவை எல்லாம். சொர்க்கக் காட்சிபோல் தேச கால வர்த்தமானங்களை மீறி: அவன் கற்பனையில் நிழல்களெனத் தோன்றின. அன்றைய வாழ்க்கைச் சித்திரங்களும் நினைவுகளும், மழையினால் மங்கிய இந்தக் காலை ஒளியுடன் கூடி, அவன் மனத்துள் எழுந்த இன்னிசையோடு கலந்து அபூர்வமான உருவம் கொண்டன. புதல்கள் சூழச் சேறு படிந்த குறுகிய கிராம வீதியில், தான் அலக்ஷ்யம் செய்த அப்பேதையின் துயருற்ற வதனம் அவன் மனத்திரையில் ஆழ்ந்து பதிந்திருந்தது. இந்தச் சிந்தனைகளுடன் அந்தப் பிச்சைக்காரர் பாட்டும் சேர்ந்து அவனுக்குத் தீராத. ஏக்கத்தை உண்டாக்கியது. அந்த நாட்டுப்புறப் பாவையின் முகத்தில் உலகத்துத் துரனைத்தும் திரண்டிருப்பதுபோல் அவனுக்குப் பட்டது. சசிபூஷணன் தன் இரு கரங்களுக்கிடையே முகத்தை மறைத்து, மேஜை மேல் இருக்கும் அந்தப் பலகை புஸ்தகங்களோடு பதித்த வண்ணம், கடந்து சென்ற அந்நாட்களைப்பற்றிக் கனவு. கண்டுகொண்டிருந்தான்.
நெடுநேரம் இவ்வாறு இருந்த பின்பு பக்கத்தில் மெல்லொலி கேட்கவே நிமிர்ந்து பார்த்தான். அவன் எதிரே வெள்ளித் தட்டில் கனிகளும் தின்பண்டங்களும் ஏந்திக் கிரிபாலா மௌனமாகக் காத்திருந்தாள். அவன் தலை தூக்கியதுமே அணிகலம் இழந்து விதவைக்குரிய வெள்ளாடை தரித்திருக்கும் கிரிபாலா பூமியில் படிந்து அவனை வணங்கினாள். எழுந்ததும், முகம் சோர்ந்து நிறம் மங்கி உடல் நலம் குன்றிய சசிபூஷணனைக் கருணை நிரம்பிய கண்களால் நோக்கினாள். தாரை தாரையாக வீழிநீர் அவள் கன்னங்களில் பெருகியது.
க்ஷேமலாபம் வீசாரிக்க வாயெடுக்கும்போது நெஞ்சில் அடைத்து வரும் அழுகை, சசிபூஷணனைப் பேசவிடாமல் தடுத்து விட்டது. வேதனை அவன் உள்ளத்திலேயே கட்டுண்டு சுழன்றது. அப்போது அந்தத் தாசரிகள் பிச்சையெடுத்துக்கொண்டே அவ்வீட்டெதிரே வந்து நின்று திரும்பத் திரும்ப அதே பாட்டின் அடியைப் பாடினார்கள்.
“வருக வருக நாதனே வருக……”
– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.