கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2025
பார்வையிட்டோர்: 651 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயா! ஐயா!” 

அவர் பேசவில்லை. யாராவது பதில் கொடுத்துக் கட்டும். மேடையில் படுத்திருக்கும் நிலையில், நரம்புகள் தளர்ந்து, உடலோடு மனம் கண்டிருக்கும் இசைவை இழக்க மனமில்லை. 

அஸ்தமித்துவிட்டது. இப்பல்லாம் சுருக்கவே இருள் விழுந்துடறது காக்த்திகை மாதமில்லையா? 

“வீட்டில் யாருமில்லே?” கேட்டிலிருந்து குரல், மீண்டும், அவசரமாக 

யார் அந்தக் கடன்காரன், வேளையில்லா வேளையில், பழனிக்குப் பால் காவடி தூக்கறேன்னு, ரசீது புத்தகத்தோடு வந்திருப்பான்- 

“எனக்கென்ன? உங்க வீட்டுள்ளே பாம்பு!” 

விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னாலேயே, சமையல் கட்டிலிருந்து அவளும் வந்தாள். 

“என்ன? என்ன?” 

முள்வேலி அடிலே படுத்திருக்குது. 

உடம்பு உதறல் கண்டது. 

“எப்படியானும் போங்க! சொல்லிட்டேன்! உங்கபாடு. உள்ளே இருந்துட்டேவா குரல் கொடுக்காமே!” 

போய்விட்டான். அவனுக்குக் கோபம். இருளில் உருவக் கோடு கூடத் தெரியாமல் குரலாவே இயங்கிவிட்டுப் போய் விட்டான். 

அடுத்தாற்போலேயே, “இந்து அவங்க அம்மா! பெரீ- ய – பாம் – இல்லே பூச்சி!” ஒரு பெண்குரல் குழறிற்று. “வீட்டுள்ளே நுழையுது – அப்பா, முருகா!” 

“ஐயோ என் குழந்தைகள் எல்லாம் வெளியிலே போயிருக்காளே!” அவள் குரல் அழுகையில் நடுங்கிற்று. 

அப்பத்தான் அவருக்கு நினைப்பு வந்தது. வாசல் விளக்கைப் போடவில்லை. ‘ஸ்விட்ச்சை’த் தட்டினால், மின்சாரம் ‘அம்பேல்’ தெருவிளக்கும் பேசவில்லை. ஆனால் அது இருந்தும் ஒண்ணுதான், இல்லாமலும் ஒண்ணுதான். வேலியோடுதானும் வீடுகாக்கும் பூவரச மரத்தின் இலைகள் நெருக்கமான பின்னல் கோலத்தில் வெளிச்சம் உள்ளே விழாமல் தடுத்தன. 

யாரைக் கூப்பிடுவது? இந்த இருளில் யார் வருவார்கள்? எதிர் வீட்டில் ஊருக்குப் போயிருக்கா. யாருக்கோ சீமந்தமாம். பக்கத்து வீட்டில் சந்தடியிருக்கு. ஆனால் எல்லாரும் உள்ளேயிருப்பா. பஜனையில் மலைக்குப் போறா. 

பின் வீட்டில் – ஊஹூம். அங்கே போக, பின் வேலியில் வழி திறந்துவிட்டிருக்கு. கிணற்றடி தாண்டி இருட்டில் சரிப்படாது. நரேஷ் இன்னும் ஆபீசிலிருந்து வந்திருக்க மாட்டான் 

“வெள்ளிக்கிழமையும் அதுமா, இன்னும் சாமி விளக்கு கூட ஏத்தல்லையா?” எரிந்து விழுந்தார். “ஏன் பாம்பு வராது? லாந்துரை ஏத்து”. 

“வீட்டில் சொட்டு சீமெண்ணைய் இல்லை. gas இன்னிக்கோ நாளைக்கோன்னு காத்துண்டிருக்கு. என்ன செய்யப்போறேனோ தெரியல்லே.” 

“நிர்வாகம் பலே பேஷ்!” 

“என்னைச் சொல்லி என்ன? நானா பண்றேன்? உங்கள் பெண்ணைக் கேளுங்கோ!” 

“சீமெண்ணையே எப்போ இல்லையோ, மெழுகுவர்த்தி பத்திப் பேசவே வழியில்லை. அம்மா பதிவிரதா சிரோமணி எப்படியேனும் வீட்டுள் வெளிச்சத்தை வரவழைக்கப்பார்.” 

அவள் உள்ளே போகையில், பின்னாலேயே கத்தினார். “டார்ச் என்னவாச்சு?” 

“இந்த இருட்டிலே எங்கே தேடறது? கிடைச்சாலும் ‘ஸெல்’ இல்லை”. 

“ஹத்தரி குடக்கல், குடும்பமே பவிஷே!” 

செல்லாக் கோபம். வியர்த்தத்தில் உள்ளே அலை பொங்கிற்று. 

ஆமாம், இதுவரை காதுக்கு ஒரு சலசலப்புக்கூடக் கேக் கல்லியே! அதனால் சொன்னவா- – அதுவும் ஒருத்தருக்கு ரெண்டுபேரா – பொய்யாயிடுவாளா? பெரீ – இ – இ – சாமே! இங்கே வந்து இந்தப் பன்னிரண்டு வருஷங்களில் எத்தனை வீடு முளைச்சாச்சு இன்னுமா நாட்டுப்புறம் மாதிரி!’ 

ஆ ஞாபகம் வரது, பின் வீட்டில் வாழும் பாம்பு இருக் காமே! பேச்சுவாக்கில் நரேஷ் எப்பவோ சொன்னான். எங்களுக்கு முன்னாலிருந்தே புத்து இருக்கு. நாங்கள் இருக்கு.நாங்கள் உங்களுக்கு முன்னாலிருந்தே இருக்கோம். அதனால் என்ன? நாங்கள் அது வழிக்குப் போறதில்லை. அதுவும் எங்கள் வழிக்கு வரதில்லை, நாங்களும் சம்சாரிகள்தான். இது வரைக்கும் நாகராஜ சுவாமி புண்யத்திலே இதுவரை நன்னாத்தானிருக்கோம். 

அவா சமாதானமாயிடலாம். பதினஞ்சு அடி தூரத்திலே பாம்பை வெச்சிண்டு சும்மா பார்த்துண்டிருக்க முடியுமா? 

இந்த இருட்டில் இங்கேதானிருக்குன்னு அதை ஆணியிலே அடிச்சு சொல்ல முடியுமா, நிறுத்திவைக்க முடியுமா? இருட்டில் நான் எங்குமிருப்பேன். 

அவரை அறியாமல் கைகள் கூப்பின. 

வெளியில் போனவர் திரும்பற நேரம்தான். 

சேது ஆபீஸிலிருந்து- 

நந்து மாலைக் காலேஜிலிருந்து வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். இந்து ஷாப்பிங் வர நேரம்தான். அவள் தான் தற்சமயம் குடும்பத்தின் கோவர்த்தனதாரி. கையால் ஆகாத்தை வாயால் இட்டு நிரப்பிண்டு, ஒரே அமுலும் அட்டஹாசமும்தான். அவள் கண்ணை மூடிண்டால் கூடவே உலகமும் அஸ்தமித்துவிடும். 

ஆனால் யாரும் ஒரு தரமேனும் பூமியில் கண்ணைச் செலுத்தி வரமாட்டா. அவாளவாள் குருட்டு யோசனையில், யார் தலையும் ஆகாசக் கோட்டையில் தான். 

பெருமூச்செறிந்து எழுந்தார். 

“எங்கே போறேள்?” 

“பக்கத்தாத்துக்கு, புருஷாளைக் கூப்பிட.” 

“உங்களுக்கு மாத்திரம் பாம்பு குறுக்கப் படுத்திண்டு இல்லையா?” 

“இருக்கும், ஆபதாமப ஹத்தாரம் தான் துணை. நடக்கறது நடக்கட்டும். சிறுசுகளெல்லாம் வெளியிலே போயிருக்கு என்னை உசிர் வெல்லம் கொண்டாடச் சொல்றியா?” 

“நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். இருட்டுலே குருட்டாண்டி. அதுலே தடுக்கி அதன்மேலேயே விழுவேள்”. 

“அப்படி நேர்ந்தால் அதையும் படவேண்டியதுதான். குந்தளே, பாம்பு சத்யத்துக்குக் கட்டுப்பட்டது. மனுஷனுக் குத்தான் எதுவுமே கிடையாது. 

“போக வேண்டாம்னா வேண்டாம். வயசாயிடுத்துன்னா பிராம்மணனுக்கு இப்படியா பேதலிச்சுப் போகணும்?” 

பதில் பேசவில்லை. கோபத்தை அடக்கிக்கொண்டார். படியை விட்டிறங்கி விட்டார். வயசான பிறகுதான் இவா ளுக்கு நாம் பிராம்மணனாறோமோ? இத்தனை நாளா இவாளுக்கு என்னவாயிருந்தோம்? எனக்கு வயசாயிடுத்து. இவளுக்கு மட்டும் நின்ன இடத்திலேயே நின்னுடுத்தா? இவளுக்கு சரியா பதிலுக்குப் பதில் பேசிண்டிருக்க முடியுமா? உண்மையான கரிசனமிருந்தால் இவளும் என்னோடு வரட்டுமே! 

மெல்லியதாய் மடிக் கொம்பைத் தவிர வீட்டில் தடி, கழி என்கிற தினுசில் ஏதுமில்லை, ஊன்றிக்கொள்ளத் தடி வாங்கிக் கொடுக்க சேது தலைகீழாக நின்றான். மறுத்து விட்டார். வயதை ஒப்புக்கொள்ள மனம் ரோசம் பார்த்தது. 

வாசற்படியைத் தாண்டுகையில் தாண்டித்தானே ஆகனும் – பயம் இருக்கட்டும். அதுதான் எப்பவும் இருக் கிறதே! – ஆபத்தின் விளம்பில் இரத்தோட்டத்துக்கு ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடுகிறது. அங்கே நேரத்தின் தத்தளிப்பில் ஒரு த்ரில். இப்போ என்ன வேணுமானாலும் நேரலாம் – என்ன நேருமோ? எனும் கேள்வி நெஞ்சில் கொக்கி மாட்டி இழுக்கையில் ஒரு விரக்தி- அந்த விரக்தியி னாலேயே மனதுக்கு ஒரு ஆகாச விடுதலை. 

ஒன்றும் நேரவில்லை. ஆனால் படி தாண்டினதுதான் தாமதம். நடையை வேகமாய்க் கட்டினார். பின் துரத்திக் கொண்டு வருகிறதோ? 

வாசலில் உருவம் நிற்பது அடையாளமாகத் தெரிந்தது. 

“சாமி சரணம், யாரது? மாமாவா, அடடா, வாங்கோ மாமா என்னமாமா இந்த இருட்டில்? ஒரு குரல் கொடுத் திருந்தால் வரமாட்டேனா?” 

“நான்தான் வந்துட்டேனே! சந்தரு இப்போ திரும்பி போறப்போ நீதான் துணை வரணும்”. 

விஷயத்தை விளக்கினதும், கிழங்குமாதிரி டார்ச் சை எடுத்துக்கொண்டு சந்தரு உடன் கிளம்பிவிட்டான். 

முள்வேலி பூரா கீழே அடித்து பார்த்தாகிவிட்டது. பூவரச மரத்தின் வேர் முடிச்சுகளுடன் முடிச்சாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறதா? மேலே கிளையில் சுற்றிக் கொண்டிருக்கிறதா? 

இல்லை. 

சந்தருவின் காலடியில் கீழே ஜமக்காளமாக உதிர்ந்து கிடக்கும் பூவரசம் சருகுகள் ‘சரக் சரக்’ 

“மாமா நான் மலைக்குப் போறேன். தரிசனம் பண்ணி வெக்கறது வரை நான் அவனுடைய பொறுப்பு – எனக்கு எதுவுமே நீங்க நெனக்கறபடி நேராது. சாமியே சரணம் ஐயப்போவ்- 

நம்பிக்கையின் முதல் சந்தரு பகுத்தறிவு சந்தேகங் களின் பீடம். ஆனால் இரண்டுமே இல்லாமல் முடியாது. இதென்ன கோலம்? 

கேட்டுக்குத் தென் மூலையில் கிடந்த செங்கல் குவியலின் மேல் ஏறி நின்றுகொண்டு சந்தரு, டார்ச் வெளிச் சத்தைச் சுற்றிலும் மேலோட்டமாக விட்டான். 

போன இரண்டாம் வருடம் வீட்டைப் பழுது பார்த்த மிச்சம். முழுதும் அரையுமாய், வெய்யிலில் காய்ந்து மழையில் ஊறி நாளாவட்டத்தில் கலைந்து சரிந்து அவலமாய்… 

“மாமா, எனக்குத் தெரிஞ்சவரை முள் வேலியில் அது ல்லை. இந்த செங்கல் குவியலுள் அது புகுந்து கொண் டிருந்தால். அதை யாரும் ஒண்ணும் பண்ணிக்க முடியாது. சரி வரேன் மாமா, எனக்கு நேரமாச்சு, நைட் ஷிஃபட்-” 

போய்விட்டான், கவலைகளை மீண்டும் கொடுத்து விட்டு. 

“இன்னிக்கு ஒளியும் ஒலியில் மண்ணா?” என்று அவள் புலம்ப ஆரம்பிக்கையிலேயே விளக்குகள் ஏற்றிக்கொண்டன. வெளிச்சம் வெள்ளமாய்ப் புரண்டது. அதுவே ஆசி. 

“ஹாய்!'” குதித்துக்கொண்டு குந்தளை உள்ளே ஓடினாள் தலையில் அடித்துக்கொண்டார் மாட்டுப்பெண் வர வயசாச்சு, 

அடுத்தாற்போலேயே கேட் க்றீச்’, ‘பார்த்து வா! என்று சொல்லக்கூட நேரம் தரவில்லை. இரண் கை களிலும் இரண்டு பைகளைத் தூக்கிக்கொண்டு, குடும்பத்தின் கோவர்த்தனதாரி ‘விர்’ரென்று நடந்து உள்ளே வந்து விட்டாள். 

“வேடிக்கை பாத்திண்டிருக்கேளே, ஒரு பையை வந்து வாங்கிண்டால் என்ன? கை, விட்டுப்போறது. இப்படி உழைச்சாகணும்னு என் தலையெழுத்தா?” 

ஆனால் பையைக் கொடுக்கமாட்டாள். கொடுத்து விட்டால். தியாகி ஆவது எப்படி? அது நாக்கு அல்ல. கொடுக்கு. 

பின்னாலேயே ‘கேட்’ தடதடா. 

அதுதான் நந்துவின் பிரவேசம் சைக்கிளோடு. வாங்கி இரண்டு வருஷங்களாகவில்லை. பேரீச்சம் பழக்காரனுக்குப் போடுகிறமாதிரி, எட்டு ஊருக்குக் கேட்கறமாதிரி கலகலத் துப்போயாச்சு. 

“என்னடா அதுக்குள்ளே வந்துட்டே?” 

“இன்னிக்கு “ப்ராக்டிகல்’ இல்லை; வாத்தியாருக்கு ஒளியும் ஒலியும் பார்க்கணுமாம்”. 

“என்ன மாமா, ஒரே கலாட்டா, உங்கள் வீட்டில்?” 

குரலோசை முன்னே, நரேஷ் பின்னே. பின் வீட்டி லிருந்து கிணற்றடி வழியாக எப்பவும்போல் அவன் வழி. பாவம் அவன் என்ன செய்வான், அந்தக் குரல் எப்பவுமே இரண்டு டெஸிபல் தூக்குத்தான். 

“உனக்கு யார் சொன்னது?” 

“யார் சொல்லணும். நான் உங்களுக்குப் பின் வீட்டுக் காரன் மாமா. மாமா, ஒண்ணு சொல்றேன். பாம்பைப் பார்த்தேன்னவன் பொய் சொல்லியிருக்கான். உங்கள் சுபாவம் தெரிஞ்சு”. 

“நரேஷ் நீ கெட்டிக்காரனாயிரு. வேண்டாம் என்க நான் யார்? ஆனால் மத்தவாள்ளாம் மக்குன்னு பண்ணாதே!” 

“அப்படின்னாப் பார்த்தவாளுக்குக் காலம் சரியில் லேன்னு அர்த்தம். அப்படியெல்லாம் லேசா, காரண மில்லாமல், யார் கண்ணிலும் பாம்பு பட்டுடாது மாமா. பாம்பு, பசு ரெண்டும் மனுஷாள் மாதிரியில்லே. அதுகளோட பூர்வாம்சமே வேறே – 

இந்த ரீதியில் என்னத்தையோ கொட்டிவிட்டுப் போய் விட்டான். 

அவருக்குச் சிரிப்பு வந்தது, கோபம் வந்தது, ஆச்சரியம் வந்தது. 

இவனுக்கு ஏன் இத்தனைப்பதட்டம். அவர்கள் வீட்டில் வாழும் பாம்பைச் சொல்கிறார்கள் என்று ரோசமோ? 

“வாசலில் வந்து உட்கார்ந்துட்டேளா? இன்னும் அந்த நேரம் ஆகல்லியே வ இவன் எப்போ முளைத்தான் வந்ததே தெரியல்லியே! ஆனால் சேதுவே அப்படித்தான். சத்தமில்லாத பாவனை. சாந்தமும்,மரியாதையும் பிசகாத குரல். ஆனால் அப்பா அவனுக்காக வாசலில் உட்கார்ந் திருப்பது அவனுக்குப் பிடிக்காது. 

அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றார். அப்பா என்ன நிம்மதி, புறா மார்பு மாதிரி, மெத்து மெத்துனு எல்லாரும் உள்ளே வந்தாச்சு. 

காப்பியைக் குடித்தபடி அவர் சொன்னதையெல்லாம் கேட்டான். அவனுடைய காபியிலிருந்து ஒரு குட்டித் தம்ளரில் அவருக்குக் கொடுத்தான். ஒரு முழங்குதான். ஆனால் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இந்தப் பரிமாறல் நெடு நாளையப் பழக்கம். வேடிக்கையாக ஆரம்பித்து, பிறகு ஒரு சடங்காகவே நிலைத்துவிட்டது. அப்பாவுக்குச் சொட்டுக் காப்பி என்கிற பேரும் கொண்டாச்சு. 

சற்று நேரம் பொறுத்து. 

அப்பா ஒண்ணு சொல்றேன். கேட்பேளா?

காத்திருந்தார். 

இன்னும் பாம்பு, பார்த்த இடத்திலேயே எங்களுக் காகக் காத்திண்டிருக்குன்னு நினைக்கிறேளா? நீங்கள் எங்க க்காக வாசலில் உட்கார்ந்திருப்பதால் எங்களைக் காப் பாற்றிவிட முடியாது. இன்னும் ஒண்ணு, நாம் எல்லோரும் உள்ளே வந்துவிட்டோம் என்பதால் பத்திரமாகிவிட்டதாக உங்கள் எண்ணமா? இதோ பாருங்கள். சுட்டிக் காட்டி னான். ‘தண்ணீர் போக வைத்திருக்கும் ஓட்டை. இன்று வெள்ளிக்கிழமை. கூடத்தை அலம்பிவிட்டிருப்பார்கள். மீண்டும் அடைக்க மறந்துவிட்டார்கள். இதன் வழியாக உங்கள் பாம்பு வர முடியாதா? வருவது பாம்பாய்த் தானிருக்கணுமா?” 

அதிகப்பிரசங்கி. இந்தக் காலமே நமக்கு உபதேசம் செய்கிறவர்கள்தான். நாம் சொல்வது நல்லதுக்கு வாங்கிக் கொள்ள மாட்டார்கள். 

“யமன் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்கானா? வெளி யில் போகிறோம். திரும்பி வரோம், இல்லை முழுசா வரோம்னு என்ன நிச்சயம்? நான் விவரித்துச் சொல்லமாட் டேன், நீங்கள் தாங்கமாட்டீர்கள்! புன்னகை புரிந்தான் நாக்கில் சனி என்பீர்கள்”. 

தினமும் காலையில் பேப்பரைப் பிரிக்கிறோம். மொத்த மாகவும் சில்லரையாகவும் உலக முழுவதும் உயிரின் செலா வணியைப் பார்த்தால்-ஹும். இன்று நாம் படிக்கிறோம். நாளைக்கு நாமே பேப்பரில் வந்தால் ஆச்சரியமில்லை. 

கோபம் வந்து என்ன செய்வது? வாதம் அசைக்க முடியாதது. 

“வாழ்க்கையின் அநித்யத்தைப்பற்றி, சாஸ்திர பூர்வ மாகவும், சம்பிரதாயமாகவும், பக்தி மார்க்கமாகவும் உங்க ளுக்கு அந்த நாளில் தெரிந்ததென்றால் எங்களுக்கு இப்போ அனுபவபூர்வமாக, உங்களைவிட நன்றாகத் தெரியும். இங்கே விமானம் கடலில் விழுந்தது. அங்கே ரயிலோடு ரயில் மோதல், ஈராக் ஈரான் யுத்தம், பங்களாதேஷில் வெள்ளம், ரஷ்யாவில் பூகம்பம் கோடிக்கணக்கில் உயிர்ச் சேதம் – அப்போ யாருக்கென்று அழுவோம்? நீங்களும் நானும் பாம்பும் எந்தப் பொருட்டு?” 

சேது குரல் லேசாக நடுங்கிற்று 

“எங்களுக்குத் தெரிந்தபடி, வாழ்க்கையைக் காரணி ஆள்கிறது. ஆயிரம் கைகள் கொண்டு நீங்கள் எங்களை அணைத்தாலும், அத்தோடு யாரும் போட்டி போட முடியாது.” 

பொட்டை லேசாக வலிக்கிறதோ? இரு விரல்களால் தேய்த்துக் கொண்டார். சேது அழகாயிருக்கான் இல்லே? சேது மூச்சுப் பிடிச்சு இத்தனை நாழி பேசி எனக்கு ஞாபக மில்லே. 

வீடு இடிந்துபோயிருக்கும். எல்லாரும் இறந்து போயிருப்பார்கள். ஆனால் கல்லையும் மண்ணையும் தோண்டி எடுத்தால், வீட்டின் குழந்தை ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் உட்கார்ந்து கண்ணைக் கசக்கியபடி அழுது கொண்டிருக்கும். இல்லே எச்சிலைத் துப்பி விளையாடிக் கொண்டிருக்கும் அதுதான். X அதுக்குத் தனியா உசிர் உண்டா, சுரணை உண்டா, எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்டு”. 

‘பேஷ், பேஷ்’ அப்படியே என் அச்சுத்தான். ஆனால் கண் மட்டும் சற்றே குழிவு. இவன் வயசில் அப்படியே நான் இவனேதான். ஆனால் மீசையில்லை. பயம், அம்மா முழியை நோண்டிவிடமாட்டாளா? எனக்கும் மீசைமேல் ஆசை கிடையாது. இவன் அனுமதி கேட்டானா? நான் அப்படி எதிர்பார்க்கிறவன் இல்லை. எனக்கு அதில் அக் கரையுமில்லை. ஆனால் மீசை இவனுக்கு நன்றாயிருக்கிறது. 

அவன்மேல் அவர் கண்கள் கனிந்தன. கண்முன் இரு தூரங்கள் பாய்ந்தன. அவைகளினூடே சேது காத தூரத் தில் தெரிந்து, மங்கிக்கொண்டே வந்தான். ஆனால் குரல் மட்டும் எட்டிற்று. What is the matter with him? 

“நாங்கள் எந்த நிமிஷமும் ரிஸ்கிலேதான் வளைய வரோம். வாழறோம். கையிலெடுத்த கவளம் வாய் போய்ச் சேருவது நிச்சயமில்லை. அதனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? வீட்டுள்ளே பாம்பு, வெளியில் விபத்து என்று வெளியில் போகாமல் இருக்க முடியுமா? உங்கள் கவலையில் எங்கள் இறக்கைகளைக் கட்டிப்போட்டு உங்களைச் சுற்றி உட்கார்த்தி வைத்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பிழைப்பு எப்படி? அவரவர் வாழ்க்கை எப்படி? காரணி Y தான் வாழ்க்கை அதுவேதான் adventure என்னப்பா முழிக்கறேள்; லெக்சர் பண்றேனா? என்னப்பா அப்படியே பார்க்கறேள், அப்பா-அப்பா!” 

கவிழ்ந்தாற்போல் அவன் மேல் சாய்ந்துவிட்டார். 

X சுழலும் வேகத்தில் சக்கரத்தின் தோற்றத்தைப் பெற்று ஜகஜ்ஜோதியாக அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. இவன் என்ன புதுசா சொல்லிட்டான்? சக்கரம் அறுக்கறது கபாலம் ஏத்தறது, இது பாரதத்திலா, இதை பின் சொல்லா? அது அவர்மேல் மோதிய வேகத்தில் இருளானார். இதழ்கள் விரிந்த ஒரு பெரிய மலரின் அடித்தண்டின் தனி இருளுள் இரு ளோடு இருளாய் மூழ்கிப் போனார். 

பிசுபிசு காலைப் பனி; தூவிய மகரந்தம், அகில் கமழ் ஓமப்புகை — மூவும் கலவை ஒரு தூப மண்டலத்தில் மிதந்து செல்வதானதோர் பிரமையில் விழிப்பு பொல பொல வென்று புலர்ந்தது. பிரமையா, நிஜமேதானா? கீழே அதல தூரத்தில் தெரிவது பூமியெனும் உருண்டையின் வளை முகடா? பயமாயில்லை. நிர்ச்சலம், தன்மயம், என்ன லேசு, என்ன சுகம்! 

எல்லாமேதான், புத்திமயம், ஸ்படிகத் தெளிவு. தனக்கு உடல் இல்லை என்பதை உணர்வு அப்பொத்தான் உணர்த் திற்று. பயமாயில்லை. 

உயரே ஒரு கற்கண்டுக் கட்டி சிமிட்டி, ஒளியும் சிரிப்பு மாய்த் தன்னிடம் வரும்படி அழைத்தது. அதை நோக்கித் தான் உயர முயன்றபோது மகரந்தத்தில் ஒரு அடைமேகம் மேலே கவிந்துகொண்டு தடுத்தது. 

“உஷ்- சத்தம் போடாதீங்க, நினைப்பு வருது காத்துக்கு இடம் விடுங்க! இப்படி அடைச்சுக்கிட்டா, மனுஷ னுக்கு மூச்சே விட முடியாது போல இருக்கே!” 

சுற்றி குரல்கள். தெரிந்த இடத்துக்குத்தான் திரும்புவ தாகத் தெரிந்தது. மனமேயில்லை. ஆனால் தப்ப வேறே வழியுமில்லே. இதென்ன இப்படி ஒரு கூட்டம்? ஏன்? அவருடைய கோபத்தை வெளிக்காட்ட வார்த்தைகள் நெஞ்சில் தவித்தனவன்றி நாக்கு உருவாக்க முடியவில்லே ஏன்? 

“ஸ்ட்ரோக்னு நினைக்கிறேன். மைல்டுதான்.நவ்ரோபி யான் போட்டிருக்கேன். இந்த மாத்திரைகளைக் கொடுங்க நாளைக்குப் பார்க்கலாம். ஹலோ ஸார், எல்லாம் சரியாயிடும் – கொத்தாய் அவர் கன்னத்துக் கதுப்பை நிமிண்டி – விட்டு டாக்டர் போனார். அவரைச் சுற்றியிருந்த கும்பலும் சுருக்கவே கலைந்தது. 

சேது என்ன இவ்வளவு சுருக்கில் இப்படி கசங்கிப் போயிட்டான்! என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு? பேச வரல்லியே, பேசாமலே போயிடுமோ! திகில் சிரித்தது. ‘சேது! சேது’ அவர் கண்களில் தெரிந்த பேச்சில், சேது தாவி அவர் கைகளைத் தன் கைகளில் பற்றிக்கொண்டான். 

அப்பாவும் பிள்ளையும் கண்ணோடு கண் எந்நேரம், இந்நேரம் நீண்டதோ? 

சேது பொட்டென்று உடைந்துபோனான். 

“அப்பா! நான் சொன்னதை நிரூபிச்சுக் காண்பிச்சுடா தேங்கோப்பா! எப்படியும் அந்தவேளை இப்போ வேண்டாம்பா!” 

மேடை விளிம்பில் அவன் கைகளிடையுள் அவன் முகம் புதைத்து தோள்கள் குலுங்கின. 

அவருக்குப் புரிந்தது. ஆனால் ல் நீ சொன்னபடியே காரணி x என் கையிலா இருக்கிறது! என்று சொல்ல வர வில்லை. வாய்தான் அடைத்திருக்கிறதே! ஆனால் உறவின் பரிமளம் பரிணமிக்கும் வேளை இப்படித்தான் அமைவ தென்றிருந்தால், இப்படி நேர்ந்தது வீணாகவில்லை. 

அவருடைய விரல்கள் அவன் தலையின் அடவியுள் புகுந்துகொண்டு மயிரைக் கோதின. விரல் நுனிகள் அன்பு சொட்டுவது தெரிந்தது. 

– சுபமங்களா

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *