காப்பிக் கடை
காலை மணி ஒன்பது, மருதமுத்துவின் காப்பிக் கடையில் சபை கூடி விட்டது. சபை என்றதும் நீங்கள் பெரிதாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.கதிரவன், முகுந்தன், சிவா, அன்பரசு ஆகிய நான்கு பேர்கள்தான் அந்தச் சபையின் உறுப்பினர்கள். தினமும் ஒன்பது மணிக்கு, மருதமுத்துவின் காப்பிக் கடையில் கூடும் அவர்கள், நண்பகல் பன்னிரண்டு வரையில் பல விஷயங்களை அலசி ஆராய்வார்கள். அரசியல், பொருளாதாரம், காலை, வணிகம், நாட்டு நடப்பு என்று பல தரப்பட்ட விஷயங்களை பற்றி ஆழமாக விவாதிப்பார்கள். நாடாளுமன்றத்தில் கூட அந்த அளவிற்கு ஆழமான, சுதந்தர கருத்துக் பரிமாற்றம் நடக்குமா என்று எனக்குத் தெரியாது.
அன்றும் வழக்கம் போலச் சபை கூடிவிட்டது.
“இதோ இந்தச் செய்தியைக் கொஞ்சம் கேளுங்கள்!” குரலை உயர்த்திப் படிக்க ஆரம்பித்தார் அன்பரசு.
“சுங்கை புலோ சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் நம்மவர்கள்தான் அதிகமாம்”.
“அட உண்மையாகவா!” சாதனைக்குரிய செய்தி ஒன்றைக் கேள்விப் பட்டது போல வியந்து போனார் சிவா.
“போன வருடம் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விட இந்த வருடம் கைதிகளுடைய எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்ந்து இருக்கிறதாம். அதிலும் பெரும்பாலோர், பதினெட்டிலிருந்து முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகமாம். சீன, மலாய்க்காரர்களுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிற நேரத்தில், இந்தியர்களுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறதாம்”. எல்லாருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி நிதானமாகப் படித்தார் அன்பரசு.