காந்தி ராஜ்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2025
பார்வையிட்டோர்: 369 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணாடிச் சிறைக்குள் தன்னை அடைத்து வைத்திருப்பதை காந்திஜியால் சகிக்க முடிய வில்லை. 

“ஐயோ! இதைவிட பிரிட்டிஷ்காரனின் இரும்புச் சிறை எவ்வளவோ தேவலாமே” என்று பொறுமுகிறார். காற்று வேகமாக அடிக்கிறது . காந்திஜி குமுறி எழுகிறார்… 

அப்பொழுது, 1932-

நாட்டு மக்களிடையே ஒரு புதிய சக்தி, புதிய வேகம் பிறந்தது. நாலு முழத்துகில் உடுத்திய பொக்கைக் கிழ வரின் சக்திமிக்கச் சொற்களால் இளைஞர் உலகமே ஆகர் ஷிக்கப்பட்டது அந்தக் காலத்தில். 

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்த எண்ணிய வீரர்கள் வாழ்ந்த வினோத சகாப்தம் அது, 

அதே காலத்தில்தான் கதர்க்கொடி பிடித்தவனின், கைகள் முறிக்கப்பட்டன. ‘வந்தே மாதரம்’ என்று கோஷித்தவனின் வாய் கிழிக்கப்பட்டது. 

ஒரு பிடி உப்புக்காக உயிரைத் திரணமாக மதித்த உத்தமர்கள் வாழ்ந்த பொற்காலம் அது. 

அப்பொழுது ஒரு நாள் இரவு… மணி பன்னிரெண்டு! 

ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு ஆங்கிலேயனின் பெயரால் கட்டப்பட்ட வார்ட்… 

ஹாலின் இருமருங்கிலும் கட்டில்களில் நோயாளிகள் படுத்திருக்கின்றனர்.

மங்கலான விளக்கொளி… 

ஏழாம் நெம்பர் படுக்கையிலிருந்து திடீரென்று இரவின் அமைதியைக்கிழித்துக்கொண்டு ‘வந்தே மாதரம்’ என்ற குரல் வெறியுடன் அதிர்கிறது. 

“வந்தே மாதரம்…” 

”மகாத்மா காந்திக்கு… ஜே!” 

தேசபக்தன் வேலுசாமி தன்னை மறந்த நிலையில் கூவுகிறான். 

அவன் உடல் முழுதும் கட்டுகள்… மண்டையில் பெரிய தலைப்பாகை போன்று வெள்ளை பேண்டேஜ் சுற்றப் பட்டிருக்கிறது… அதன் மீது சிறிது ரத்தம் கசிந்த கறை. 

‘அன்னியத் துணியை தீயிலிட்டுக் கொளுத்துங்கள்…’ பிரசங்கம் செய்வது போல் கைகளையும் தலையையும் ஆட்டிக் கொண்டு துள்ளிக் குதிக்கிறான். கட்டிலிலிருந்து விழுந்து விடாமலிருக்க அவனைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டுகிறார்கள் வார்ட் பாய்கள். 

‘வந்தே மாதரம்…’ 

‘மகாத்மா காந்திக்கு… ஜே!’ 

சக்தியுள்ளவரை கூவுகிறான்… கத்திக் கத்தி மூர்ச்சை யாகிறான். ஆழ்ந்த உறக்கம்… நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்புகின் றன. லேசாகக் கண் விழிக்கிறான். 

மெல்லிய குரலில் பாடுகிறான் : 

‘எந்தமாருயிர் அன்னையைப் போற்றுதல் 
ஈனமோ அவமானமோ?’… 

நர்ஸ் ஒருத்தி அவனருகே வருகிறாள். தர்மா மீடரை வைத்துப் பார்த்து, ‘சார்ட்’ டில் 106 என்ற இலக்கத்தை நோக்கி ஒரு கோடு கிழித்து விட்டுப் போகிறாள். 

ஜுர வேகத்தில் அவன் நிலை தவறிப் பேசுகிறான். கோஷிக்கிறான்… 

”மகாத்மா காந்திக்கி… ஜே!” 

‘வந்தே மாதரம்…’ 

அதே கோஷத்தை அன்னியத் துணிக்கடைக்கு முன் நின்று கோஷித்ததனால்தான் அவனுக்கு இந்நிலை ஏற்பட்டது… 

அந்தப் படையின் முன்னணி வீரனான அவனை அடித்து நொறுக்கினர்… 

சர்க்கார் ஆஸ்பத்திரியில் இருபத்தி நாலுமணி நேரமும் அந்தக் கோஷம் ஒலிக்கிறது! இப்பொழுது அவனை யார் என்ன செய்ய முடியும்? 


அன்று காலை… வேலுசாமிக்கு ஜுரம் சற்று குறைந் திருந்தது. அதாவது 106-லிருந்து 103-க்கு இறங்கியிருந்தது. பிரக்ஞை இருந்தது… நிலை தடுமாறி மனம்போன போக்காகப் பிதற்றவில்லை: கூச்சலிடவில்லை. 

அருகே நின்றிருந்த போலீஸ்காரனைக் கண்டதும், தான் கைதியாக இருப்பது நினைவுக்கு வந்தது… 

தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களைப் பார்த்துப் பேச முடிந்தது… 

அப்பொழுது தான் அந்தச் செய்தி வந்தது… 

அதுதான்… அவன் மனைவிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்த செய்தி! 

அதைக் கேட்டபொழுது அவனுக்கு எத்தனை ஆனந்தம்! ஆனால் எழுந்து நடக்க முடியவில்லை. கட்டி லிலிருந்து அசையவே முடியாது… குழந்தையை அருகே கொண்டு வந்தால் கூட, அவனால் கை நீட்டி வாங்க முடியாது!… ஏன் தெரியுமா? அவன் சுதந்திரம் விரும்பினான்! 

பாவம், அவன் மனைவி என்ன கஷ்டப்படு கிறாளோ?… உதலிக்கு யார் இருக்கிறார்களோ?… என்று மனம் குழம்பினான். 

எது எப்படியானாலும் இனிமேல் அவன் எழுந்து நடக்க வேண்டுமே… 

ஆஸ்பத்திரி மணி அடிக்கிறது. அவனைப் பார்க்க வந்த நண்பர்கள் அனைவரும் விடை பெற்றுக் கொள்கிறார்கள். 

வேலுச்சாமியைத் தனிமையின் ஏக்கம் பிடித்துக் கொள்கிறது. 

கண்களை மூடுகிறான். 

கண்களுக்குள்ளே ஏதோ ஒரு ஒளி பரவுகிறது. கனவின் அலைகளாடும் அவன் லட்சியத் திரை விரி கிறது… அவன் மானசீகக் கனவுகள் அதில் ஒளி வீசிப் படர்கின்றன. கண்களை இருள் கவ்வுகிறது… கண்களுக் குள் நிலவின் குளுமையில் கனவுக் கோட்டைகள் உயர்கின்றன. 

பாரத தேசத்தில் ஸ்வாதந்தர்ய ஒளி படர்கிறது!

பாரதத் தேசம் ஸ்வராஜ்யம் பெற்றுவிட்டது! 

ஸ்வந்திர பாரதத்தில் தேசப்பிதா காந்திஜி பேசுகிறார்; 

“பாரத மக்களே!… இந்த நாடு உங்கள் நாடு! ஏழை பாரதம்!… என்றாலும் எங்களுடைய பாரதம் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிக் கொள்ளலாம்…” 

“இங்கே அன்புதான் சட்டம்; ஒற்றுமைதான் படை அகிம்சையே நம் சக்தி மிக்க ஆயுதம்!…” 

“நீங்கள் ஸ்வதந்திர புருஷர்கள்… நீங்கள் இந்த தேசத்தின் எஜமானர்கள்… போலீஸ்காரர்களைக் கண்டு அஞ்சவேண்டாம்… கௌரவமிக்க உங்களுடைய ஊழியர்கள் அவர்கள்…. 

“மக்களுக்கு சேவை செய்ய மக்களால் நியமிக்கப் பட்ட மக்களின் வேலைக்காரர்கள்” என்பதில் அவர்களும் கௌரவமடைகிறார்கள்… ஸ்வதந்திர பாரதத்தில் எல்லோரும் சமம்… 

வேலுச்சாமியின் நெஞ்சு வெற்றிப் பெருமிதத்தால் உயர்கிறது. 

“என் மண்டையைட் பிளந்து என்னை ரத்த வெள் ளத்தில் மிதக்கவைத்த மூர்க்கனே, நீ மக்களின் வேலைக் காரனாகி விட்டாய். அது போதும்! உன்னை நான் பழி வாங்கி விட்டேன்…” என்று இறுமாந்து கோஷிக்கிறான். 

அதோ, ஒரு காந்தி ராஜ்யப் போலீஸ்காரன் வரு கிறான். அவன் கையில் துப்பாக்கி இல்லை; குண்டாந்தடி யும் இல்லை அகிம்ஸையே அவன் ஆயுதம்; அவன் வாழ்வது பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திலல்ல; சூரியாஸ்தமன மும், சூரியோதயமும் முறையாக நடக்கும் காந்தி ராஜ் யத்தில் வாழ்கிறான். அவன் மக்களுக்கு சேவை புரிவதில் பெருமையடைபவன். 

ஒரு போலீஸ்காரன், வெயிற்காலமானதால் சைனா பஜாரில் தண்ணீர்ப் பந்தல் நடத்துகிறான். அன்று ஒவ் வொருவனையும் மூர்ச்சித்து விழும்வரையும் அதற்கு மேலும் மிருகம் போல் தாக்கிய அந்த இரக்கமற்ற நெஞ்சு உடையவன் இன்று வெய்யிலில் செல்வோருக்குப் பணி விடை புரிகிறான். 

காந்திஜியின் கருணை பொழியும் பார்வை, அவனை மாற்றிவிட்டது அவன் வாழ்வது காந்தி ராஜ்யத்தில்… 

அதோ; அந்தக் கிழவி வருகிறாள்… அவள் தான் ஆரஞ்சுப் பழம் விற்பவள்… 

அவளைக் கண்டவுடன் வேலுச்சாமியின் மனம் நன்றி கூறுகிறது. “எனக்குப் பணிவிடை செய்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற தாயே! நாம் வென்றுவிட்டோம்” என்று நெஞ்சில் நன்றி கனிகிறது அதோ, அந்த ஜார்ஜ் சிலையருகே அவன் வருகிறான். அவன் அடிபட்டு நினைவிழந்து அங்குதான் வீழ்ந்திருந்தான். 

பாவம்! தலையில் சுமக்க முடியாத பாரத்துடன் அசைந்து அசைந்து நடக்கிறாள். 

“பாட்டீ… பாட்டி…” என்று கத்திக்கொண்டே ஓடி வருகிறான் அவள் பேரன்மார்களில் ஒருவன். 

அவன் யார் தெரியுமா? அன்று கூந்தலைப் பிடித்து அவளை அலங்க மலங்க இழுத்துச் சென்றானே அந்த இன்ஸ்பெக்டர்| 

”ஐயோ! பாவம்… ஏம் பாட்டி இவ்வளவு சிரமப்பட்டு தூக்கியாறே… அங்கே யாரும் போலீஸ்காரங்க இல்லியா?…நான் தூக்கியாறேன் பாட்டி…” என்கிறான் இன்ஸ்பெக்டர். 

“ஏண்டாப்பா… நம்ம காந்தி ராஜ்யத்திலே நீங்க எவ்வளவு மாறிப்பூட்டீங்க… அப்பல்லாம்…” 

“அதெல்லாம் மறந்துடு பாட்டி…” என்று கூறும் பொழுது அவள் கண்கள் கலங்கின. 

“அட, புத்திகெட்ட புள்ளெ. இதுக்கா அழறே? இப்போ நமக்குள்ளே எவ்வளவு ஒத்துமை… எல்லாம் அந்த காந்தி மகான் கருணை … ” 

“சரி… கூடையைக் குடு பாட்டி… பாவம் தள்ளாத வயசிலே நீ கூடையைத் தூக்கிக்கிட்டு நடக்கறே… நா சும்மா வரேன்… யாராவது பார்த்தா சிரிப்பாங்க…” என்று தன் தலையிலிருந்த தொப்பியைக் கழட்டிக் கொண்டு, கூடையைச் சுமந்து கிழவியின் பின்னால் ஓடு கிறான் இன்ஸ்பெக்டர். அதாவது அவள் பேரன். 

ஆகா! காந்தி ராஜ்யத்தில் என்ன சமுதாயப் பிணைப்பு … ஒற்றுமை… பரஸ்பரம் அன்பு… மதிப்பு… மரியாதை!… என்ன சமத்துவம்… 

வேலுசாமிக்கு நெஞ்சு நிறைந்த பெருமிதம். “இந்த சுவர்க்கத்தில் நான் வாழாவிட்டாலும் என் பிள்ளை வாழ்வான்… நேற்று பிறந்திருக்கிறானே, என் மகன் அவன் வாழ்வான். என்னை அடித்து நொறுங்கிய அந்த ஆங்கிலோ – இந்திய சார்ஜென்ட் என் பிள்ளைக்கு சேவகம் செய்யப் போகிறான்… 

அதோ அந்த சார்ஜண்ட் பிள்ளைகளைப் பள்ளிக்கு. அழைத்துச் செல்கிறான். குழந்தைகளைப் பாதுகாத்து அழைத்து வருகிறான்… அவன் இப்பொழுது மக்களின் சேவகன்… குழந்தைகளின் புத்தக மூட்டையைச் சுமந்து, செல்கிறான்… காந்தி ராஜ்யத்தில் பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வி போதிக்கப்படுகிறது. ஏன்… மக்கள் ஸ்வதந்திர பாரதத்தின் எஜமானர்கள்- காந்திஜிதான் சொல்கிறார். 

காந்திஜி சேரி கூட்டுகிறார். ஒவ்வொரு காந்தீயத் தொண்டனும் தெரு கூட்டுகிறான் என்றால், ஸ்வதந்திர பாரதத்தில்- மக்களின் சேவர்களான போலீஸ்காரர்கள் தொண்டு செய்யத்தான் செய்வார்கள். அதில் கேவலமில்லை; கௌரவமிருக்கிறது! 

சேரி கூட்டுபவன்- மக்களின் சேவகன். போலீஸ் காரன் பொதுஜனத் தொண்டன். இந்தியா முழுவதுமே ஒரு உன்னத ஆஸ்ரமமாகத் திகழப்போகிறது. அதுதான் காந்தி ராஜ்யம் 

அதோ, காந்தி ராஜ்யம் ஸ்தாபிதமாகிறது. அந்தப் புனித ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் போராட்டத்தில் ரத்தம் சிந்திய பெருமை எனக்குமுண்டு! அதில் நான் உயிர்த் தியாகம் செய்யவும் தயார். என் மகன் ஸ்வதந்திர பிரஜையாக வாழட்டும்… 

அதோ, அந்தப் புனித சாம்ராஜ்யக் கொடி ‘சலசல’த்துப் பறக்கிறது. 

வேலுசாமியின் இதயச்சுமை குறைகிறது. 

கனவுகள் வேலுசாமியின் மார்பைத் தழுவுகின்றன. அழுத்துகின்றன… அவன் இதயம் குளிர்கிறது… உடலில் ஜுரமும் குறைகிறது. 

103., 102., 101., 100., 99., அதற்கும் கீழே… சார்ட்டில் கோடுகள் கீழ்நோக்கிப் பாய்கின்றன… 

அவன் உள்ளம் குளிர்ந்ததுபோல் உடலும் குளிர்ந்து விட்டது. அவன் கண்கள் கனவுகளில்-ஸ்வதந்திரக் கனவு களில் லயித்து ஆழ்ந்து விட்டன. 

பிறந்த பொன்னாட்டின் பெருமையை உயர்த்த ரத்தம் சிந்தினான். வரப்போகும் புதிய சகாப்தத்தை சிருஷ்டிக்கும் பணியில் உயிர்த்தியாகம் புரிகிறோம் என்ற நிம்மதியில் செத்துவிட்டான். ‘காந்தி ராஜ்யம்’ பாரத மக்களை, தன் பிள்ளையை வாழ வைப்பதற்காக உயிர்த் தியாகம் புரிந்தான் வேலுசாமி! 

வேலுசாமியின் சவ அடக்க ஊர்வலம் பிரும்மாண்ட மாக நடந்தது. 

அவனைத்தான் புதைத்தார்கள்! அவன் லட்சியத்தை, அவன் கனவுகளையெல்லாம் அவனுடன் சேர்த்துப் புதைத்து விட்டார்கள் என்று அப்பொழுது யாராலும் நினைக்கக்கூட முடியவில்லை. 

யார் நினைத்தாலும் நினைக்கா விட்டாலும். அவர்கள், அவன் லட்சியத்தை அவன் காந்தி ராஜ்யத்தைப் புதைத்தே விட்டார்கள்! 

1954- 

வேலுசாமியின் கனவு ‘பலித்து’ எட்டு ஆண்டுகளாகி விட்டன. ஆமாம்… இப்பொழுது நடப்பது காத்தி ராஜ்யம்- காந்தி சகாப்தம். 

அதோ, சைனாபஜார்! கொள்ளை வியாபாரிகளின் வெள்ளை மாளிகைகளின் மீது மூவர்ணக் கொடி – ஸ்வதந்திரக் கொடி அசைந்தாடுகிறது. 

எந்தக் கொடியைப் பிடித்துக்கொண்டு ஸ்வதந்திர வெறியுடன் ‘அன்னியத் துணியை வாங்காதே’ என்று வேலுசாமி கோஷித்தானோ, அதே கொடி, அன்னியப் பொருளை விற்ற வியாபாரிகளின் சென்னியில் நிழல் வீசுகிறது. 

சைனாபஜாரில் அந்த வர்த்தக மாளிகையின் நிழலில்- பிளாட்பாரத்தில்- ஓர் இளைஞன். அவனைத் தெரிகிறதா? 

அவன் தான் வேலுசாமியின் வாரிசு! 

காந்தி ராஜ்யத்தில் அவன் பிச்சை யெடுக்காமலிருக்கிறானே, அது போதாதா? 

”எடு சார்… எடு… கண்ணாடிகிளாஸ்… மூணு, ஒரு ரூபா மூணு, ஒருரூபா… பெளண்டன் பேனா எது எடுத் தாலும் ஆறணா ஆறணா… எடுசார்… எடுசார்…” என்று பிளாட்பாரத்தில் கடை பரப்பிக்கொண்டு அமெரிக்க சாமான் விற்கும் அந்த இளைஞன் யார்?… அன்னியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் ஸ்வதேசி இயக்கத்தின் முன்னணியில் நின்றுப் போராடி உயிர் துறந்த தியாகி வேலுசாமியின் அருமைப் புதல்வன். 

“எடுசார்… எடு… அமெரிக்கன் கூலிங்கிளாஸெல்லாம் முக்கால் ரூபா… முக்கால் ரூபா… வேலுசாமியின் புதல்வன் ஸ்வதேசிப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு மக்களைத் தூண்டுகிறான் காந்தி ராஜ்யத்தில் 

அதோ, லாத்திகளைச் சுழற்றிக் கொண்டு அந்தப் போலீஸ்காரர்கள் ஏன் ஓடி வருகிறார்கள்?… 

அன்னியப் பொருட்களை விற்பவர்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா?… 

அப்படியானால் அந்தப் பெரிய கடையில் விற்கப்படுகின்றனவே, அவை?… 

அல்ல; அல்ல…ஆரஞ்சுப்பழம் விற்கும் கிழவிகூட ஓடுகிறாளே! 

பிளாட்பார வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளைச் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்… 

“எடுசார்… எடுசார்… மூணு கிளாஸ் ஒரு ரூபா…” 

“டே… போலீஸ்…” 

‘ஐயோ…” தன் கடையைச் சுருட்டிக்கொண்டு ஓட யத்தனிக்கிறான் வேலுசாமியின் புதல்வன். அதற்குள் ஒரு போலீஸ்காரனின் பிடி அவன் பிடரியை நெருக்குகிறது. 

“சார்… சார்…” 

“என்னடா… சார்… உம் நடடா ஸ்டேஷனுக்கு!”… என்று நெட்டித் தள்ளிக்கொண்டு போகிறான் போலீஸ்காரன். 

இந்தச் சமுதாயத்தில், இந்த ராஜ்யத்தில்தான் இவனை வாழவைக்க வேலுசாமி ரத்தம் சிந்தினான்; தான் பெற்ற பிள்ளையை, தன் மனைவியைப் பார்க்கமுடி யாத நிலையில் உயிர்துறந்தான் 

அவன் கனவு கண்ட ஸ்வதந்திர பாரதம் இதுதான்! 

அதோ ஒரு போலீஸ் ஸ்டேஷன். 

காந்தி ராஜ்யம்தான் நடைபெறுகிறது என்று அறிவிக்க போலீஸ் ஸ்டேஷனில் காந்திஜியின் திரு உருவப் படம் மாட்டப்பட்டிருக்கிறது! அந்தப் படத்தில் அகிம்சையே நம் ஆயுதம்’ என்ற அவர் வாசகங்கள்!… அதை ‘ஊர்ஜிதம்’ செய்வதுபோல் அந்த இளைஞனின் கன்னத்தில் ஓர் அறை விழுகிறது. 

“போன மாசம் ‘பைன்’ கட்டினியே அதுக்குள்ளே மறுபடியும் வந்துட்டியா…” 

“வேறெ பொழைப்பு இல்லீங்களே…” 

“சாவறது தானே…” என்ற பதிலைத்தான் அவருக்குச் சொல்ல முடிந்தது… 

அவர்கள்தான் என்ன செய்ய முடியும். சட்டப்படி நடக்க வேண்டியது அவர்கள் கடமை! சாதாரண மனிதன் ஒருவன் சட்டத்தின் மர்மங்களைத் துருவித் துருவிக் கேட்கும்போது அவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க முடியும். பிரிட்டீஷ்காரன் காலத்தில் அவர்கள் அப்படித் தானே சொன்னார்கள்! 

அவன் கையிலிருந்த அன்னிய வியாபாரப் பொருட்கள் காந்தி ராஜ்யப் போலீஸாரால் பகிஷ்கரிக்கப்படுகின்றன. தரையில் சிதறிக்கிடக்கும் அந்தச் சாமான்களைப் பார்க்கிறான் இளைஞன். அவன் பிழைப்பிலே மண் விழுந்து விடுமல்லவா? அவன் கண்களில் நீர் திரையிடுகிறது. கலங்கிய விழிகளின் பார்வை, சுவரில் மாட்டப்பட்டுள்ள காந்திஜியின் படத்தில் விழுகின்றன. அவன் தேசப் பிதாவை நோக்கி கெஞ்சுவது போல் இருக்கிறது அந்தத் தோற்றம்! 

காந்திஜியின் வதனத்தில் சலனமற்ற குழந்தைப் புன்னகை நெளிகிறது. 

காந்திஜி சிரிக்கிறார்! அவர் ஏன் சிரிக்கவேண்டும்? காந்திஜியின் கனவு பலித்து விட்டதா, என்ன? இல்லையே!… 

காந்திஜியின் பிரசங்கங்கள் அந்தரங்க சுத்தியுடன் செய்யப்பட்டவையாக இருந்திருந்தால், அவருடைய எழுத்துக்கள் ஹிருதய பூர்வமானதாக இருந்திருந்தால்… 

ஐயோ! அவர் இப்பொழுது கண்ணீர் விட்டுக் கதற வேண்டாமோ? 

காரண காரியமில்லாமல் அவன்மீது அடிகள் விழு கின்றன. 

“காந்தி சொன்னதை மறந்து என்னை அடிக்கிறீங்களே…” என்று அவன் அலறுகிறான். “ஓஹோ… காந்தி இவருகிட்டத்தான் வந்து சொன்னாரு…” “சீ… நாயே, வாயை மூடு!” 

“இல்லே… நெசமா எங்கப்பாகிட்டே சொன்னாரு…. எங்கப்பா…” 

“இவங்கப்பனுக்கும் காந்திக்கும் மாமன் மச்சான் உறவு. பிச்சைக்காரக் கழுதை” என்று உறுமுகிறார் இன்ஸ்பெக்டர்… 

காற்று வேகமாக அடிக்கிறது… சாதாரணக் காற் றல்ல… புழுதிக்காற்று, அந்தக்காற்றில் வேலுசாமியின் ஆவி சிரிக்கிறது. காற்றோடு காற்றாய் இழைந்து காந்திT யின் படத்தில் மோதுகிறது. அவரைப் பிடித்து குலுக்குகிறது அதனூடே ஏமாற்ற மிக்க சிரிப்பு- வேதனை சிரிப்பு சீறுகிறது! 

“ஆமாம்… காந்திஜிக்கும் வேலுசாமிக்கும் இருந்த உறவு ரத்தாகி விட்டது! புதிய உறவு பிறந்து விட்டது!” என்று அந்த ஆவி சிரிக்கிறது. 

“காந்திஜி அவர்களே! அகிம்சையே நம் ஆயுதம் என்று போலீஸ் ஸ்டேஷனில் எழுதப்பட்டது தான் காந்தியத்தின் வெற்றியோ! அந்த வெற்றிக் களிப்பில்தான் புன்னகை செய்கிறீர்களோ! கண்களிருந்தால் திரும்பிப் பாருங்கள் உங்களைச் சுற்றித் துப்பாக்கிகள் இருப்பதை!” 

காற்று, சுழித்துத் திரும்புகிறது! மீண்டும் ஒரு சிரிப்பு! 

காந்திஜி… தாங்கள் செத்துவிட்டீர்கள். அதனாலென்ன? நீங்கள் ஒரு தனி மனிதன் தானா? அன்று பொங்கிப் பிரவகித்த சுதந்திர சக்தியெல்லாம் ஒரு தனி மனிதனுடையதுதானா? வெறும் தனி மனிதசக்தி இருந் தென்ன, இல்லாவிட்டால் என்ன?… 

“மகாத்மா அவர்களே! அதோ, கேட்பாரற்ற அந்த ஏழை மகளைப் பாருங்கள் காந்திஜி, பாருங்கள்!… அவன் ஒரு தியாகியின் புதல்வன் என்பது ஒரு புறம் இருக்கட்டும், 

பாரத அன்னையின் புனிதமிக்க புதல்வனல்லவா அவன்? அந்த நிரபாரதியை அவர்கள் அடிக்கிறார்கள் உங்கள் பேரால்! நீங்கள் புன்னகை தவழும் வதனத்துடன் சலன மின்றிப் பார்க்கிறீர்கள்… இதென்ன விடுதலை? இதென்ன சுதந்திரம்? இதென்ன அகிம்சை?” என்று காற்று சீறிச் சினந்து சிரிக்கிறது! 

இளைஞனின் கையிலிருந்த சாமான்கள் சாமான்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு அவன் ஸ்டேஷனை விட்டு விரட்டப்பட்டான். அவன் தயங்கித் தயங்கி நின்றான். 

“ஏண்டா நிக்கறே?”… 

“சாமான் இல்லாமெ போனா மொதலாளி அடிப்பாருங்க… இனிமே விக்கலீங்க…” என்று அழுது கெஞ்சினான் அந்த ஆண்மகன். 

”போடா… ஒன் மொதலாளியைக் கூட்டிக்கிட்டு வா…” போலீஸ்காரர்கள் அவர்கள் சட்டப்படி செய்கிறார்கள்… அவர்கள் மேல் என்ன குற்றம்? 

”ஐயோ!… முதலாளிக்கு என்ன பதில் சொல்வது?…” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை! நெஞ்சைத் துக்கம் அடைத்தது. அந்தப் பஞ்சை மகன் விம்மி விம்மி அழுதான்! ஸ்டேஷனை விட்டு வெளியேறும் போது கண்ணீர் கலங்கும் விழிகளால் காந்திஜியின் திரு உருவத்தை ஒரு முறை மீண்டும் பார்த்தான். அந்தப் பார்வை…அதன் அர்த்தம் காந்திஜிக்குத் தெரியும்! உண்மையான காந்தியவாதிகளுக்குத் தெரியும். 

அந்தப் பார்வையில் காந்தியின் வதனம் கறுத்தது. 

அதைப் பற்றியெல்லாம் அந்த இளைஞனுக்குக் கவலை இல்லை! அவனுக்கு வேண்டியதெல்லாம் – விற்றுத் தருவதாக முதலாளியிடம் பெற்று வந்த விதேசிப் பொருட்கள் தான். 

அவை இல்லாமல் அவன் முதலாளியின் முகத்தில் விழிக்க முடியாது… நாளை முதல் அவன் பிழைக்கவும் முடியாது! 

வயிற்றைப் பசி, கிள்ளுகிறது… மனதைத் துயரம் குடைகிறது! 

மணி பத்தாகிவிட்டது! 

அவன் ஜார்ஜ் சிலையின் பாதத்தடியில் தஞ்சம் புகுகிறான். 

அன்று அடிமைப் பாரதத்தில் அவன் தகப்பன் ரத்தம் சிந்திய அதே இடத்தில் இன்று ஸ்வதந்திர பாரதத்தின் புதல்வன் கண்ணீர் சிந்துகிறான். 

அந்தச் சிலையின் லட்சியமே அதுதானே! கண்ணீர் – ரத்தம்! 

இன்று கண்ணீர்!… நாளை ரத்தமும் கிடைக்கலாம்! 

ஜன சந்தடி அடங்கிவிட்டது! நள்ளிரவு……

இளைஞன் அழுது அழுது உறங்கி விட்டான். 

போலீஸ் ஸ்டேஷனில் காவலுக்கிருக்கும் ஒரு ஜீவனை தவிர மற்றவர்கள் உறங்குகின்றனர். 

இப்பொழுது காந்திஜியால் சிரிக்க முடியவில்லை! அவர் முகத்தில் சோகத்தின் கருமை படர்கிறது. அவர் கண்கள் கலங்குகின்றன. அங்கு மாட்டி வைக்கப்பட்டிருக் கும் துப்பாக்கிகளைக் கண்டு அவர் நெஞ்சு பதைக்கிறது. 

”ஐயோ!… என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்கிறீர்கள்” என்று அவர் கேட்பது யாருக்குத் தெரிகிறது? 

கண்ணாடிச் சிறைக்குள் தன்னை அடைத்து வைத்திருப்பதை காந்திஜியால் சகிக்க முடியவில்லை!… 

“ஐயோ, இதைவிட பிரிட்டீஷ்காரனின் இரும்புச் சிறை எவ்வள்வோ தேவலாமே…” என்று பொருமுகிறார்… 

காற்று வேகமாக அடிக்கிறது… காந்திஜி குமுறி எழுகிறார்… 

சுவரிலிருந்து படம் கீழே விழுகிறது! 

கண்ணாடிச் சிறை நொறுங்குகிறது. 

காந்திஜிக்கு விடுதலை. காவலாளியின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து வெளியேறுகிறார்… 

ஏழையின் துயரம் அவர் நெஞ்சில் பதிந்து விட்டது… அவருடைய அந்தராத்மா சாந்தியின்றித் தவியாய்த் தவிக்கிறது. 

அதோ!… ஜார்ஜ் சிலையில் பாதார விந்தங்களுக்கடியில் அந்தப் பஞ்சை மகன் படுத்துறங்கிறான். 

காந்திஜியின் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து துக்கம் பீறிட்டு எழுகிறது. மேல் துண்டை வாயில் அடைத்துக் கொண்டு அவனை நெருங்குகிறார்… அனுபவச் சுருக்கம் விழுந்த அம்முதியவரின் மேனி தாங்க முடியாத சோகத் தில் பரிதாபகரமாகக் குலுங்குகிறது!… கம்பை ஊன்றி, கால்கள் தள்ளாட அவனை நெருங்குகிறார்… 

அவன் உடலை முடக்கிக்கொண்டு உறங்குகிறான். அவன் கன்னத்தில் ‘புண்ணியவாளர்களின்’ கைவிரல் முத்திரைப் பதிந்திருக்கிறது. 

“மகனே….” தொண்டை அடைக்கக் கூறி, அவன் கன்னத்தை வருடுகிறார்… 

“மகனே…” 

அவன் திடுக்கிட்டு விழிக்கிறான். 

“தாத்தா…” 

“நான்தான்… காந்தி வந்திருக்கிறேனடா…” 

“மகனே… நீ அனுபவித்த துயரத்தை நானும் பார்த் தேன்… இன்னும் கொஞ்சம் காலம் பொறு… என் வார்த்தைகள் பொய்க்காது… அன்னியனிடம் பல நூற்றாண்டுகள் பொறுத்திருந்தோம் நம்மவர்களிடம் சற்று இன்னும் பொறுமை காட்டுவோமே… சத்தியமே. வெல்லும்…” 

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் தாத்தா… அந்தச் சாமான்…” 

“மகனே நாம் என்னதான் துயருற்றாலும், நாம் வாழ்வது சுதந்திர பூமியில்…” 

“ஹும்… சுதந்திர பூமி… மிஸ்டர் காந்தி, அதற்கு, அர்த்தம் என்ன? பூமி சுதந்திரமாகத்தான் சுற்றுகிறது என்று கூறுகிறீர்களா?… அதன் சுதந்திரத்தைப் பறிக்க எவராலும் முடியாதே… ஹ்ஹஹஹா…” என்று ஒரு மூன்றாம் குரல் வெடிச் சிரிப்புடன் கூறிற்று… காந்திஜியும். இளைஞனும் திகைக்கிறார்கள்… 

“மிஸ்டர் காந்தி!… திகைத்த வேண்டாம்… நான் தான் ஐந்தாம் ஜார்ஜ்! தெரிகிறதா”… ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹா… 

“ஏன் சிரிக்கிறாய்… இது எங்கள் விஷயம். நீ யார் சிரிக்க? நீ ஏன் இங்கு வந்தாய்?…” 

“உன்னைத்தான் நாங்கள் துரத்தி விட்டோமே! 1947 – ஆகஸ்ட் பதினைந்தோடு உன் சிரிப்பு ஒடுங்கிவிடவில்லையா?…” 

“இல்லை. என்னை நீங்கள் துரத்தவில்லை… வேலு சாமியைப் போன்ற புத்தி கெட்டவர்களின் பொய்யான லட்சியங்களைத்தான் துரத்தி விட்டீர்கள். மிஸ்டர் காந்தி; எனது லட்சியங்கள் இங்குதான் நிறைவேற்றப்படுகின்றன. என்னுடைய சட்டங்கள், என்னுடைய கட்டளைகள் செயல் புரிகின்றன… நான் எங்கும் போய் விட வில்லை. இப்பொழுது தான் நான் ஹிமாலயம் போல் வளர்ந்து உங்கள் இந்தியாவை வளைத்து நெருக்கி என் மார்பில் அணைத்துக் கொண்டிருக்கிறேன்… இதில் நான் காணும் அபத்தங்களை ரசித்துச் சிரிக்க, என்னைத் தவிர வேறு யாருக்கு உரிமை?…” 

“இல்லை, முப்பத்தியாறு கோடி மக்களின் இதய பீடத்திலும் நான் இருக்கிறேன்… நீ இல்லை…” என்கிறார் காந்தி. 

“ஆம். நான் இல்லை. எனது லட்சியங்கள் இருக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் உங்கள் அகிம்சை இல்லை; நீங்கள் இருக்சிறீர்கள். நான் இல்லை என் துப்பாக்கி இருக்கிறது. காந்தியவர்களே! எங்கே உங்கள் அகிம்சை… உங்கள் வாக்குறுதி… வேலுசாமியின் தியாகத்திற்குப் பரிசு… எங்கே காந்திஜி எங்கே?” 

காந்திஜி பின்னால் நகர்கிறார். இளைஞனின் கையை உதறிவிட்டுத் தட்டுத் தடுமாறி ஓடுகிறார். அருவமாக அசைந்து இருளில் மறைகிறார்… 

“தாத்தா… தாத்தா…” என்று கூவிக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறான் இளைஞன். 

‘தம்பீ; தாத்தா உனக்கு எட்டாத லட்சியமடா! ஓடு! ஓடு!’ 

ஜார்ஜ் சிலை வெறிகொண்டு பேய்போல் சிரிக்கிறது.

காலமெல்லாம் சிரித்துக்கொண்டே இருக்கிறது! 

– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *