கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 6,415 
 
 

மதுரை கோவில் ஒன்றில்,

சாமியை தரிசிக்க ஒரு வயதான பெரியவர் வருகிறார். அவர் பார்க்க வயது முதிர்வு என்ற போதிலும், அவர் உடித்திய உடை, அவரின் தோற்றம், அவரை ஏழமை மிகுந்த ஒருவராய் காண்பித்தது.

கோவிலுக்குள் நுழைந்தார் வயதான பெரியவர். இரு கோவில் பூசாரிகள் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.

கோவிலில் வேறு ஆட்கள் யாரும் இல்லை. சுந்தரம் சுவாமியை நோக்கி நகர்ந்தார். இரு பூசாரிகளும் அவரை கண்டு கொள்ளாமல் பேசி கொண்டு இருந்தனர்.

பெரியவர் சுவாமியின் முன் நின்று, பூசாரிகளை பார்த்து கொண்டு இருந்தார். அவர்கள் வருவதாக தெரியவில்லை.

கோவில் பூசாரிகளும், பெரியவர் சுவாமியின் முன் நிற்பதை கண்டு கொள்ளாதவாறு இருந்தனர்.

அப்போது கோவிலுக்குள் மற்றொரு நபர் உள்ளே வருகிறார்.

உள்ளே நுழைபவரை பார்த்தாலே நல்ல பணக்காரனை போல் தெரிந்தது.

உடனே கோவில் பூசாரிகள் இருவரும் எழுந்து “வாங்க.. வாங்க..“ என்று வந்தவரை வரவேற்க்க , அதனை பார்த்து இருந்தார் பெரியவர்.

உள்ளே நுழைந்தவரின் கையில் தங்க மோதிரம் , காப்பு , கழுத்தில் தங்க செயின் என பார்க்க பணக்கார தோற்றம்.

“சார் , வாங்க.. யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்னு, சொல்லுங்க. சிறப்பா அர்ச்சனை பண்ணிரலாம்“

என்று கோவில் பூசாரிகள் இருவரும் கேட்க,

அதற்க்கு அவன் “இன்னைக்கு எங்க முதலாளிக்கு பிறந்த நாள். அவர் பேருக்கு தான் அர்ச்சனை பண்ணனும்“ என்று வந்த நபர் கூற,

“நல்ல விஷயம் தான். சிறப்பா பண்ணிரலாம். உங்க முதலாளி பெயர் , ராசி , கோத்திரம் சொல்லுங்கோ“ என்று பூசாரி கேட்க,

அப்போது தொலைபேசி அழைப்பு வர , அந்த நபர் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார்.

“அய்யா பெரியவரே! கொஞ்சம் இந்த பக்கம் வாறிங்களா. சாமிய பார்த்துட்டா கிளம்ப வேண்டியது தான? “ என்று மற்றொரு பூசாரி கூற,

“நான் சாமிய பார்த்துட்டேன். விபூதி தந்தா கிளம்பிரலாம்னு நிக்கிறேன்.” என்று பெரியவர் கூற,

“இந்தாங்க விபூதி “ என்று வேண்டா வெறுப்பாய் பூசாரி கொடுத்து அனுப்ப , பெரியவர் அங்கிருந்து நகர்ந்து சாமியை சுற்றிவர கிளம்பினார்.

தொலைபேசியில் பேசி முடித்து அந்த நபர் வர, “ உங்க முதலாளி பேர் சொல்லுங்க சார்?“ என்று பூசாரி ஒருவர் கேட்க,

“முதலாளி பேர் மீனாட்சி சுந்தரம். அரிசி மில் வச்சிருக்கார். அவர்கிட்ட நாற்பது பேர் வேலை பார்கிறாங்க“ என்று அந்த நபர் முதலாளியை பற்றி கூறி கொண்டு இருந்தான்.

“அது சரி தம்பி. உங்க முதலாளியை கூட்டிட்டு வந்திருந்தா, இன்னும் சிறப்பா அர்ச்சனை பண்ணிருக்கலாம் “ என்று பூசாரி ஒருவர் கூற ,

“எங்க முதலாளி இங்க நின்று இருந்தாரே , வயசான பெரியவர் அவர் தான் எங்க முதலாளி மீனாட்சி சுந்தரம் “ என்று அந்த நபர் கூற ,

“அந்த பெரியவர் தான் உங்க முதலாளியா?. நீங்க தம்பி ?” என்று ஆச்சரியமாக பூசாரி இருவரும் கேட்க,

“நான் அவரோட கார் டிரைவர். காரை ஓரமாக நிப்பாட்டி வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சு.“ என்று அந்த நபர் கூற,

வாய் பேச முடியாமல் இரு பூசாரிகளும் நின்ற நேரம் , சுவாமியை சுற்றி வந்தார் மீனாட்சி சுந்தரம்.

அவரை பார்த்ததும் சங்கடமான சூழலில் , முகத்தை வைத்து , அவரின் ராசி கோத்திரம் நட்சத்திரம் என்று அவரின் விபரங்களை பெற்று கொண்டு அர்ச்சனையை துவக்கினார் பூசாரி ஒருவர்.

மீனாட்சி சுந்தரம் தன் டிரைவரை அழைத்து , அர்ச்சனை தட்டில் 500 ரூபாய் நோட்டை போட சொன்னார்.

அந்த ஐநூறு நோட்டை பார்த்ததும் இரு பூசாரிகளுக்கும் சற்று தலை குனிந்தனர்.

“பணம் தான் ஒவ்வொருவருக்கும் மரியாதையை பெற்று தருமா ? உடுத்தும் உடையோ , அல்லது பணம் தான் ஒரு மனிதனின் தரத்தை நிர்ணயிக்குமா ? “ என்று கடவுளை நோக்கி மீனாட்சி சுந்தரம் கேட்டு அங்கிருந்து நகர்கிறார்.

அவரை பின் தொடர்ந்து கார் டிரைவர் நகர்கின்றான்.

இந்த மாதிரி நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நிறைய அரசு அலுவலகம் , மருத்துவமனை, பொது இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மனிதனை பார்ப்போம்.

பணம் மட்டும் தான் வாழ்க்கையா? பணமும் தான் வாழ்க்கை. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை!

பணத்தில் இருக்கும் மகாத்மா காந்தி அவர்களின் சிரிப்பு என்னமோ ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் நாம் தான் பணத்தை பொறுத்து மாறிக்கொண்டு இருக்கிறோம். அது பணத்தின் தப்பு இல்லை. நம்முடைய தப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *