காத்திருக்கும் தூக்குமேடை




முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக் கயிறுக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதை இது…
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தூக்கில் இடப்படப் போகும் பெண்மணி என்பதால் பரபரப்புடன் நாடே உற்று நோக்குகிறது. ஏற்கனவே இருந்த பெண்களுக்கான பிரத்தியேக தூக்குமேடை மதுரா நகரில் புதுப்பிக்கப்பட்டு விட்டது. தூக்கை நிறைவேற்றப் போகும் பவன் குமார் என்பவன் தற்போது அரசின் இறுதி உத்திரவிற்காகக் காத்திருக்கிறான்.
பவன் குமார் ஏற்கனவே நிர்பயா கற்பழிப்பு, கொலை வழக்கில் 2012 ம் ஆண்டு குற்றவாளிகளை தூக்கிலிட்டவன்.
அப்படி என்னதான் நடந்தது?
உத்திர பிரதேசத்தில் அந்த சிறிய ஊரின் பெயர் பவன்கேரி. ஷப்னம் அலியின் குடும்பம் அந்த ஊரில் மரியாதைக்குரிய குடும்பம். அப்போது அவளுக்கு வயது இருபத்தி ஐந்து. ஆங்கிலத்திலும், பூகோளத்திலும் என இரட்டை எம்.ஏ படிப்பு. அந்த ஊரின் ப்ரைமரி ஸ்கூலில் நல்ல டீச்சர்.
அவள் வீட்டின் எதிரே இருந்த ஒரு மரக்கடையில், சலீம் என்பவன் தினசரி கூலி வேலை செய்யும் ஒரு எடுபிடி. சலீம் ஆறாவது படிக்கும்போதே படிப்பு ஏறாமல் கல்வியைத் துறந்துவிட்ட ஒரு முட்டாள். அந்த சலீம் மீது ஷப்னம் அலிக்கு தீராக் காதல் ஏற்பட்டது.
அதெப்படி டபுள் எம்.ஏ படித்த ஒருத்திக்கு ஆறாவது ட்ராப் அவுட்டான சலீமுடன் காதல்? ஏனென்றால் அது கண்மூடித்தனமான உடல் இச்சைக்கான முட்டாள்தனமான காதல்.
அவர்களின் காதல், பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தபோது, படிக்காதவனுடன் காதல் என்பதால் பயங்கர எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்புக்கிடையே தீவிரமாக வளர்வதுதானே காதல்? வளர்ந்தது.
அரசல்புரசலாக காதல் புகைந்து கொண்டிருந்தபோது ஷப்னம் அலி சலீமுடன் ஏற்பட்ட அத்துமீறிய உறவினால் திடீரென கர்ப்பமானாள். ஏழுவாரக் கர்ப்பம் என்று தெரிந்ததும் வீட்டினர் கொதித்துப் போனார்கள். ஷப்னம் அலிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன.
இதனால் ஆத்திரமுற்ற காதலர்கள், ஷப்னம் அலியின் வீட்டில் வசிக்கும் ஏழு பேரையும் கொலை செய்ய முடிவெடுத்து, ஒரு வசதியான நாளுக்காக காத்திருந்தனர்.
ஏப்ரல் 14, 2008. அன்றைய இரவு மிகக் கொடுமையான இரவு.
அன்று இரவு, ஷப்னம் அலி வீட்டில் தூங்கப் போகும் முன், அனைவருக்கும் பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்தாள். அதை அருந்திய அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.
அப்போது எதிரே மரக்கடையில் காத்திருந்த சலீம், ஷப்னம் அலி தன்னுடைய வீட்டின் கதவைத் திறந்ததும், ரகசியமாக உள்ளே வந்தான். கையில் மிகக் கூர்மையான மரம் அறுக்கும் இரண்டு ரம்பங்கள் எடுத்து வந்திருந்தான்.
அங்கே பெரிய படுக்கையறையில் ஷப்னம் அலியின் தந்தை சவுகத் அலி (60) அம்மா ஹஷ்மி அலி (50), மூத்த அண்ணன் அனீஸ் (35) அண்ணன் மனைவி அஞ்சும் (30) இளைய சகோதரன் ரஷீத் (21), அண்ணன் அனீஸின் குழந்தைகள் ராபியா (14) மற்றும் அர்ஷ் (8) — மொத்தம் ஏழு பேர் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் மயங்கிக் கிடந்தனர்.
பிறகு காதலர்கள் இருவரும் நிதானமாக மயக்க நிலையில் இருந்த ஏழு பேரின் கழுத்துகளையும் மாறி மாறி அறுத்தனர். அவர்கள் அனைவரும் துடிதுடிக்க இறந்தனர்.
மறுநாள் பவன்கேரி கிராமமே அலறியது. போலீஸ் விரைந்து வந்து உயிருடன் மிச்சமிருந்த ஷப்னம் அலியிடம் துருவித்துருவி விசாரித்தது. அவள், “முந்தைய இரவு கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து பணத்திற்காகவும், நகைகளுக்காகவும் இந்தக் கொலைகளை நிகழ்த்திவிட்டு ஓடி விட்டதாகவும், சம்பவம நடந்தபோது, தான் அடுத்த அறையில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததாகவும்” கதையளந்தாள்.
ஆனால் போலீஸின் முதல் சந்தேகமே ஷப்னம் அலியின் மீதுதான். அவளை தனிமையில் அழைத்து வைத்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தபோது, அவள் உண்மையைக் கக்கினாள். உடனே சலீமும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டான்.
தீவிர விசாரணையின் முடிவில் அவர்கள் இருவரும் தாங்கள் ஏழு கொலைகள் செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து 2013 ஆரம்பத்தில் பவன்கேரி செஷன்ஸ் கோர்ட் இருவரையும் தூக்கிலிட உத்திரவிட்டது. 2013 வருட இறுதியில் அலஹாபாத் ஹைகோர்ட் தூக்கு தண்டனையை ஆமோதித்தது. இறுதியாக சுப்ரீம்கோர்ட் 2015 மே மாத இறுதியில் தூக்கு தண்டனையை இரண்டு முறைகள் உறுதி செய்தது.
அதைத் தொடர்ந்து ஷப்னம் அலியின் கருணை மனுவும் அப்போதைய உபி கவர்னர் ராம்நாயக், அப்போதைய பாரத ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆகியோரால் நிராகரிக்கப்பட்டது.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே சலீம் மூலமாக கர்ப்பமாக இருந்த ஷப்னம், 2009 ம் ஆண்டு ஜெயிலில் ஒரு ஆண் குழந்தயை பெற்றாள். அந்தக் குழந்தை ஆறு வயது வரை தன் அம்மாவுடன் ஜெயிலில் இருந்தது. ஜெயில் சட்டப்படி ஆறு வயதிற்கு மேல் குழந்தைகள் அம்மாவுடன் தங்க அனுமதி கிடையாது என்பதால் 2015 ம் ஆண்டு அவன் ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டான்.
இதைக் கேள்விப்பட்ட செய்பி என்பவர் அந்தக் குழந்தையை உடனே தத்து எடுத்து தற்போது வளர்த்து வருகிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உபி லோக்கல் நிருபர்கள் செய்பி வீட்டிற்கு படையெடுத்தனர்.
“அதெப்படி ஏழு கொலைகள் செய்து தற்போது தூக்குமேடைக்காக காத்திருக்கும் ஒருத்தியின் குழந்தையை தாங்கள் தத்து எடுத்தீர்கள்?”
“எனக்குத் தெரிந்த ஷப்னம் அலி வேறு… அவள் அன்பானவள், கருணை உள்ளம் கொண்டவள். ஷப்னம் அலி படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில் நான் ஜூனியர். ஒருமுறை என்னால் கல்லூரிக் கட்டணம் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. அதனால் நான் மிகுந்த சோகத்தில் இருந்தபோது, ஷப்னம்தான் எனக்கு கட்டணம் செலுத்தி உதவினாள். தவிர என்னை ஒரு சகோதரனாக பாவித்து என்னுடைய படிப்பிற்காக எனக்கு நிறைய உதவிகள் செய்தாள். இன்றைக்கு நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு அவள்தான் காரணம்.”
“ஷப்னம் பற்றி வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“அவள் ஏன் கொலை செய்யும் அளவிற்குப் போனாள் என்பது எனக்கு மிக்க அதிர்ச்சியாக இருக்கிறது. எவரையும் கொலையே செய்யாமல் அன்று இரவே சலீமுடன் அவள் ஓடிப் போயிருக்கலாம். நாளடைவில் குடும்பத்தினர் சமாதானமாகியிருப்பார்கள்… எல்லாம் அறிந்த என்னுடைய மனைவி என்னைப் புரிந்துகொண்டு ஷப்னம் மகனை நான் தத்து எடுத்துக்கொள்ள சம்மதித்தாள். அவள் பெருந்தன்மையானவள்…”
செய்ப் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
அதே நேரம் ஷப்னம் அலியின் உறவினர்கள் மிகுந்த கோபத்துடன் அவளை தூக்கிலிடும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்…
ஆனால் இந்திய அரசாங்கம் மெத்தனமாக இருக்கிறது. ஒருவேளை ஏப்ரலில் வரும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறதோ என்னவோ ?