காதலுக்கு மரியாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 5,761 
 
 

அது வீரயுகம்.

அவன்  மருத நிலத்து இளம் காளை.  மண முடித்து இரு  குழந்தைகளுக்கு அப்பன் ஆனபோதும் ஆசைச் சுழியில் அலைக்கழிக்கப்பட்டு பரத்தையர் பலரோடு உறவு கொண்டிருந்தான், மாயப் பரத்தன் எனப் பரத்தையரால் கேலி செய்யப்படும் அளவுக்கு அவனது கழி காமம் இருந்தது.

அவனது பரத்தமை வாழ்வு அவனது  தந்தைவழிச் சொத்துக்களை கொள்ளை கொண்டது. அதனால்  எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது, அப்போது பாணன் ஒருவன் வயல்களாலும்  தோட்டங்களாலும் சூழப்பட்டு வளம் கொழிக்கும் பூமியான கள்ளூருக்குச் சென்றால் தொழில் தேடிப் பிழைக்கலாம் என அறிவுறுத்தினான்.

அவன் கள்ளூருக்கு வந்த போது  முதல் முதல் அவன் கண்களுக்கு அகப்பட்டவள்  ஆதிரை தான். 

ஆதிரையின் கட்டுடலும் கரிய நிறமும் அவனைச் சுண்டி இழுத்தன, கள்ளூர் மட்டுமல்ல அந்த நிலத்தின் பெண்களும் அந்த ஊர் போலவே எழிழ் கொஞ்சுபவர்களாக இருப்பதாக  எண்ணிக்கொண்டான். அவன் உள்ளத்து  காமப் பேயும் விழித்துக் கொண்டது. எப்படியாவது அவளை அடைந்துவிட அவன் மனம் துடித்தது.  

இப்பொழுது தொழில் தேடுவதைவிட ஆதிரையைத்தன் காதல் வலைக்குள் சிக்க வைப்பதே அவனது முதன்மைப் பணியாக மாறிவிட்டது. மிக விரைவிலேயே ஆதிரையை அடைவதற்கான சந்தர்ப்பமும் அவனுக்கு கிட்டியது. 

ஆதைரை பதிமபருவத்தினள். அப்பருவத்துக்கே உரிய எழுச்சியும் விளையாட்டுத் தன்மைகளும் அவளிடத்து நிறைந்திருந்தன. 

அன்று அவள் தன் தோழிகளோடு ஆற்றில் நீர் குடைந்து விளையாடிக்கொண்டிருந்தாள். நீர் விளையாட்டு என்றால் ஆதிரைக்கு சலிப்பே ஏற்படுவதில்லை. தோழிகள் சிறிது நேரம் நீரில் நீந்தி விளையாடிவிட்டு, வயல்களில் பூத்திருந்த ஆம்பல் மலர்களை பறித்து வருவதாகக் கூறி வெளியேறிவிட்டார்கள்.  

ஆதிரை நீராடும் அழகை இரண்டு கண்கள் பசியுடன் இரசித்துக்கொண்டிருந்தன. மோகமுள் தைத்த உள்ளத்தினனாய் அவன் அவஸ்தைப்பட்டான். எப்படியாது அவளை அடைந்துவிடத் துடித்த அவனுக்கு வழியொன்று  புலப்பட்டது.  

அவன் நீர் பாம்பு ஒன்றை பிடித்து அவள் அறியாதவாறு அவளருகே எறிந்தான்.  

தன் அருகே பாம்பினை கண்ட ஆதிரை பயத்தினாள் கத்தியபடி கரைசேர்ந்தாள்.  

அவன் அவள் பயத்தைப் போக்குவது போல அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.  

முதல் முதல் ஒரு கட்டழகனின் அணைப்பு… 

அவள் ஒரு போதும் அனுபவித்திராத புதுமை உணர்வு…

அதன் பின் அவர்கள் இருவரும் பல தடவைகள் தனியே சந்திதுக் கொண்டார்கள்.  

அவன் காதல் வாக்குறுதிகளை அளவுக்கு அதிகமாகவே வழங்கினான்.  

அவர்கள் காதலுக்கு நாரைகளும் மருத மரங்களுமே சாட்சியாய் இருந்தன.  

ஆதிரை அவனை விட்டு விலக முடியாத பித்து நிலைக்கு உள்ளானாள். அவனைச் சந்திக்காத பொழுதுகள் அவளுக்கு சூரியனைக்காணாத காலைப் பொழுதுகள் போலாயின.  

அவன் பல மலர்களில்  தேன் நுகரும் வண்டு போன்றவன்.   

அதனால் அவனுக்கோ அடிக்கரும்பை சுவைத்தவன் படிப்படியாக நுனிக்கரும்பைச் சுவைத்தால் போல் அவள் உறவு ஒரு சலிப்பை உண்டு பண்ணியது.  

ஆதிரையின் நெருங்கிய தோழிக்கு காதல் பித்துப் பிடித்து மயங்கும் ஆதிரையின் மனநிலை மிக விரைவாகவே புலப்பட்டு விட்டது.  

அவள் களவொழுக்கத்தை விட்டு ஆதிரையை மணம் பேசி வருமாறு அவனிடம் வற்புறுத்தத் தொடங்கினாள்.  

அவன் மெல்ல நழுவத்தொடங்கினான்.  

மெல்ல மெல்ல அவர்கள் உறவு பற்றிய செய்தி அம்பலாகி பின் அலராகி அம்பலத்துக்கும் வந்து விட்டது.  

ஊர்கூடிய மன்றத்தில் தோழி வழக்கைத் தொடுத்தாள்.  

அவனோ ஆதிரையைத் தான் பார்த்ததே இல்லை எனச் சாதிக்கத் தொடங்கினான்.  

வீர்யுகத்திலே வீரம் மட்டுமல்ல காதலும் போற்றுவதற்குரியதே, அந்தக் காதலைக் கொச்சைப்படுத்துவதை சமூகம் எப்படி அனுமதிக்கும்? காதலை மானிடத்தின் உன்னதமெனக் கருதும் சமூகம் எப்படி அக்காதலுக்குச் செய்யும் துரோகத்தை சகித்துக் கொள்ளும்? 

புல்லுருவிகளாய் தோன்றிக்கொண்டிருக்கும் அவன் போன்றவர்களை அச்சமூகத்துக்கு அச்சத்தை ஊட்டுபவர்களாக இருந்தார்கள்.  

உண்மையை ஆராய்ந்தது மன்று.  

அவன் பற்றிய முழு உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. 

ஆதிரை அவன் மீது பெரும் கோபம் கொண்டாள்.  கயவன் ஒருவனை அடையாளம் காணாது கண்மூடித்தனமாக நம்பிய தன் அறியாமைக்காக வெட்கித் தலை குனிந்தாள்.  

அவனுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அவள் மனம் துடித்தது. அவள் மட்டுமல்ல-

மன்றத்தில் கூடியிருந்தோரும்… கோபத்தின் உச்சக் கட்டத்துக்கு சென்றிருந்தனர்.

அவன் மன்றத்தின் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டான். அவன் தலைமீது  சுண்ணாம்பு கரைக்கப்பட்டு ஊற்றப்பட்டது. 

அவன் வெப்பம் தாங்காது துடிதுடித்தான். 

அது ஆதிரையின் மனவெப்பியாரத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் இல்லைத்தான்.  

ஆனாலும் காதல் தனக்கான மரியாதையைப் பெற்றுக்கொண்டது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *