காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்
காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம்.
கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியை நாம் அறிவோம். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் காதலியை உயிர் பிழைக்கச் செய்ய தன் உயிரையே தியாகம் செய்த காதலனின் கதையை இப்போது பார்ப்போம்.
காதலின் இன்பத்தையும், பிரிவின் துன்பத்தையும், தியாகத்தின் சிறப்பையும், அது அளிக்கும் உவப்பையும் ருரு – பிரமத்வரா கதையின் மூலம் அழகாக வர்ணிக்கிறது மகாபாரதம் ஆதி பர்வம்.
கந்தர்வர்களின் அரசனான விஸ்வாவசு, விண்ணுலக அப்சரஸ் மேனகையின் மேல் கொண்ட காதலின் மோகத்தால் பிரமத்வரா பிறந்தாள். பிறந்த குழந்தையை பூமியில் விட்டுச் செல்வது அமர லோக அழகிக்கு ஒன்றும் புதிதல்லவே!
தந்தை கந்தர்வ ராஜன். தாய் அகில லோக சுந்தரி. கேட்க வேண்டுமா புதல்வியின் அழகுக்கு? நளினமும் ஒளியும் மென்மையும் அழகுமாக தன் ஆசிரமத்தருகில் கிடந்த அப்பெண் சிசுவை ‘ஸ்தூலகேசர்’ என்ற மா முனிவர் கண்டார். தவத்தால் அதன் தன்மை அறிந்தார். அன்போடு எடுத்து வளர்த்தார். ‘பிரமத்வரா’ என்று பெயரிட்டார். சீராட்டி தாலாட்டி நற்பண்புகளை ஊட்டி வளர்த்தார்.
அழகே ஒரு உருவம் கொண்டாற்போல் வளர்ந்து யவனத்தை அடைந்தாள் பிரமத்வரா. வனமெங்கும் மான் போல் துள்ளித் திரிந்தாள். தோழியர் புடை சூழ நீரில் நீந்தினாள். பூப்போன்ற அவர் மலர் பறித்தாள், மாலை தொடுத்தாள், இறைவனுக்கு சமர்ப்பித்தாள். இன்பமே வடிவமாக இயற்கையோடு இயைந்து வாழ்ந்தாள்.
பிருகு முனிவரின் புதல்வர் ஸ்யவன முனிவர். ஸ்யவனரின் மகன் பிரமதி முனிவர். பிரமதியின் புதல்வன் ருரு. கல்வியில் சிறந்து ஒழுக்கத்தில் உயர்ந்து தவத்தில் மிளிர்ந்து வாழ்த்து வந்தான் முனிகுமாரன் ருரு. அரண்யத்தின் வேறொரு பகுதியில் இவர்களின் ஆசிரமம்.
பட்டாம்பூச்சி போல் வனத்தில் பறந்து திரிந்த பிரமத்வராவை முனி குமாரன் ருரு ஒரு முறை பார்க்க நேர்ந்தது. மன்மதன் தன் வேலையைத் தொடங்கினான். இருவர் மனமும் ஒன்றாயின. இணை பிரியாத காதல் ஜோடியாக கானகம் எங்கும் கண்ணில் பட்டனர்.
இனி தாமதம் வேண்டாம் என்று தீர்மானித்து, தன் தந்தை பிரமதியிடம் தங்கள் காதலை எடுத்துச் சொல்ல தோழர்களைத் தூண்டினான் ருரு. கீர்த்தியில் சிறந்த ஸ்தூலகேசரிடம் பிரமதி சென்று மகனின் விருப்பத்தை வெளிப்படுத்தி பெண் கேட்டார்.
ஸ்தூலகேசர் தன் வளர்ப்புப் பெண்ணின் பிறப்பு விருத்தாந்தங்களை வெளிப்படையாகக் கூறினார். ருருவின் தந்தை மறுப்பேதும் கூறவில்லை. திருமணம் நிச்சயிக்கப் பட்டது. முகூர்த்தம் நெருங்கிய வேளையில் பிரமத்வரா வழக்கம் போல் சகிகளோடு வனமலர்களைக் கொய்யச் சென்றாள்.
யார் கண் பட்டதோ? சருகுகளின் இடையே ஒளிந்திருந்த யமனைப் பார்க்காமல் பாதம் பதித்தாள் பிரமத்தவரா. பாம்பு உருவில் அவளைத் தீண்டினான் மரண தேவன். அடுத்த கணம் மயங்கி விழுந்தாள் அப் பைங்கிளி. தன் வேலையை முடித்த அந்த நாக சர்ப்பம் நெளிந்து சரசரவென்று புதருக்குள் நுழைந்தது. பளபளவென்று மின்னிய அதனைக் கண்ட சேடிகள் நடுங்கினர். வேகமாக ஓடிச் சென்று ஸ்தூலகேச மகரிஷியின் தெரிவித்தனர். அவரோடு சேர்ந்து பரத்வாஜர், மைத்ரேயர், உத்தாலகர்,ஸ்வேதகேது, பிரமதி, ருரு என்று வனத்தில் வசித்த அத்தனை ரிஷிகளும் விரைந்து வந்தனர்.
மூச்சு நின்று போன பிரமத்வரா, தூங்கும் வனதேவதை போலக் கிடந்தாள். ருருவால் அக்காட்சியைக் காண சகிக்கவில்லை. பூமியில் விழுந்து கதறினான். முனிவர்களை உயிர் ஊட்டச் சொல்லி கெஞ்சினான். விதியின் விளையாட்டை உணர்ந்த மகரிஷிகள் துக்கத்தால் துவண்டு கிடந்தனர்.
இனி தாங்க இயலாது என்று அவ்விடம் விட்டகன்றான் ருரு. கானகம் எங்கும் திரிந்தான். கண்ணில் பட்ட விருட்சங்களை
யும்
பட்
சிகளையும் தன் காதலிக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி மன்றாடினான். வானம் அவன் வார்த்தைகளை எதிரொலித்தது. பித்தனாய்த் திரிந்தான். பேயனாய் அரற்றினான்.
“என் தவ வாழ்வு உண்மையெனில், நான் படித்த சாத்திரங்களின்படி நான் நடப்பது சத்தியமெனில் என் பிரமத்வரா உயிர் பிழைக்க வேண்டும்” என்று கதறினான். “அவளிலல்லாத என் வாழ்க்கை சூன்யம். நானும் என்னை மாய்த்துக் கொள்வேன்” என்று சூளுரைத்தான்.
வானம் ஒளிவிட்டது. ஒளி பேசுமா? பேசியது.
“முனி குமாரா! வருந்தாதீர். மாண்டோர் மீண்டதில்லை. ஆயினும் ஒரு உபாயம்”.
“என்ன உபாயம்? விரைந்து சொல்வாய், ஓ வான் ஒளியே! என்ன அது? என் உயிரையும் கொடுப்பேன். கூறும் கூறும்!”
“அவள் ஆயுசு தீர்ந்தது. ஆயின் உமக்கு தீர்காயுசு உள்ளது. அதில் பாதியை அவளுக்கு அளித்தால் உயிர் பிழைப்பாள்” என்றுரைத்தது அசரீரி.
போன உயிர் திரும்ப வந்தாற்போல் கண்ணைத் துடைத்துக் கொண்டு ஆகாயம் பார்த்து அரற்றினான் ருரு,
“உண்மையாகவா? தெய்வ வாக்கே! உன் கூற்று உண்மையா? இதோ கொடுத்தேன். என் பாதி உயிரை. எங்கே என் ஆருயிர் பிரமத்வரா?” என்று இருக்கை நீட்டி வினவினான்.
அசரீரி அபயமளித்து மறைந்தது.
பிரமத்வரா ஒளிபெற்ற மின்னல் கொடியாக விழித்தெழுந்தாள். அன்பு உள்ளங்கள் இணைந்தன. ஆசிகள் பெருகின. அன்யோன்ய தம்பதிகளாக மணமேடை கண்டனர். உடலில் பாதி அளித்த சிவபெருமானைப் போல உயிரில் பாதி கொடுத்து மனைவியாக்கினான்.
ஆனால் ருருவின் மனதில் சர்ப்பங்களின் மேல் தீராத துவேஷம் மூண்டது. கையில் கம்பு இல்லாமல் அவன் எங்கும் வெளியே செல்வதில்லை. எங்கு பாம்பைக் கண்டாலும் உடனே இரக்கமின்றி அடித்துக் கொன்றான்.
ஒரு நாள் வழியில் கிடந்த ஒரு கிழட்டு நாகத்தை தீர்த்துக் கட்ட கழியை ஓங்கினான். ஆனால் அந்த நாகம் அவனிடம் கருணையை வேண்டியது. தன் பெயர் ‘ துந்துபன்’ என்றது. தான் ஒரு ருஷி என்றும், தன் நண்பனிடம் விளையாட்டாக செய்த குறும்பு வினையாகி தனக்கு இந்த தேகம் வாய்த்தது என்றும் உரைத்தது. “ஸ்யவன மகரிஷியின் வம்சத்தில் உதித்த ருரு முனிவரின் தரிசனத்தால் எனக்கு விமுக்தி என்றான் என் நண்பன்” என்று கூறி அப்பாம்பு ரிஷியாக உருமாறி, ருருவுக்கு கருணையை உபதேசித்து அமைதியடையச் செய்தது.
அன்பும் அமைதியுமாக ருருவும் பிரமத்வராவும் இல்லறம் நடத்தினர். வம்சம் வளர்ந்தது. குடும்பம் தழைத்தது.
“காதல் உயர்ந்தது என்று உலகிற்கு உணர்த்தவே நீங்கள் தோன்றியுள்ளீர் போலுள்ளது” என்றாள் பிரமத்வரா.
“நம் இருவரின் பாதி உயிர் ஒன்று சேர்ந்தால் பூர்ண ஆயுள் தானே? நீ இருந்தால்தான் நானும் இருப்பேன்” என்றான் ருரு.
ஆயிரம் கால அன்புப் பயிராக அவர்கள் இல்வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.
காதலுக்கு உதாரணமாக யார் யாரையோ இப்போது சொல்கிறோம்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக ருரு, பிரமத்வரா கதை உள்ளது.
– சினேகிதி, ஜூன், 2017 ல் பிரசுரமானது.