காசு பணம் துட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 5,736 
 
 

கதிரேசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் தான். அவர் மகளை பற்றி கேட்டாள்.

அவர் மகள் அருள்மொழி அரசு பள்ளியில் படித்து கொண்டிருக்கிறாள். நன்றாக படிக்க கூடியவள். நன்றாக படித்தாலும் வீட்டில் உள்ள எல்லா வேலைகளும் அவள் அம்மாவுடன் சேர்ந்து செய்வாள். பள்ளியில் எந்த போட்டியாக இருந்தாலும் அவள் கலந்து கொள்வாள். ஒரு சில போட்டிகளில் பரிசுகளும் பெற்று இருக்கிறாள். அவள் படிப்பு சம்மந்தமாக எது கேட்டாலும் அவள் அப்பா மறுப்பு இல்லாமல் உடனே வாங்கி கொண்டு வந்து விடுவார். சில சமயங்களில் வாங்கி கொடுக்க தாமதம் ஆகும். அதற்கெல்லாம் அவள் அப்பாவிடம் கோபித்து கொள்ளாமல் இயல்பாக இருப்பாள்.

கதிரேசன் எப்போதும் வயல் வேலைகளில் மும்முரமாக இருப்பார். எளிமையாக இருப்பதால் ஓர் அளவு குடும்பத்தை ஓட்டி கொண்டு இருந்தார்.

சுமதி அருள்மொழியின் அம்மா. அவள் இரு மாடுகளை வைத்து கொண்டு இரண்டு மூன்று வீடுகளுக்கு பால் ஊற்றி தன் குடும்பத்தை ஓர் அளவு சமாளிக்க உதவி செய்கிறாள். சமயத்தில் அருள்மொழி தான் வீடுகளுக்கு பால் ஊற்றுவாள்.

கதிரேசனிடம் பேசிய பெண், நீங்கள் தான் கதிரேசனா என்றாள். அவள் குரல் கொஞ்சம் சத்தமாக அதட்டலாக இருந்தது. நாங்க ஸ்கூல்ல இருந்து பேசுறோம். உங்கள் மகள் பெயர் அருள்மொழியா. கதிரேசன் ஆமாம் என்றார். உங்க பெண்ணுக்கு பள்ளி ஸ்க்காலர் ஸிப் வந்துள்ளது. நீங்க எல்லா டாக்குமென்ட்டையும் கொடுத்திட்டிங்களா என்றாள். கதிரேசனுக்கு அப்போதுதான் அருள்மொழியின் ஆதார் கார்டு, புகைப்படம், சாதி சான்றிதழ் மற்றும் கதிரேசனின் வருமானச் சான்றிதழ் யாவற்றையும் தன்னிடம் கேட்டு வாங்கி கொடுத்த ஞாபகம் வந்தது. உடனே ஆமாம் கொடுத்து விட்டோம்.

உங்களிடம் Gpay/Phone pay இருக்கா என்றார். பணத்தை இன்று மாலைக்குள்ளாக எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். என்னிடம் பட்டன் Phone தான் இருக்குது. பணம் வேண்டுமா வேண்டாமா. என்ன இப்படி பேசுரிங்க Phone pay இல்லனா பணம் தர மாட்டிங்களா. நான் என் Bank Account No. தரேன் அதுல அனுப்புங்க என்றார். இப்போது எல்லா முறைகளும் மாறிவிட்டது. ஏதாவது வழி சொல்லுங்க. ஒன்று செய்யலாம். உங்க நண்பர்கள் யாரிடமாவது phone pay இருந்தால் நாங்க அனுப்புறோம்.

கதிரேசனுக்கு ஸ்டிரா இல்லாமல் இளநீர் குடித்தது போல் இருந்தது. சரிங்க, நான் அவங்ககிட்ட பேசிட்டு கூப்பிடுறேன். கதிரேசனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருடைய ஆபத் பாண்டவன் முருகன். உடனே அவனுக்கு அழைத்தார். முருகன் அவருடைய நெருங்கிய நண்பன். அவர் அரசுக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். அவரிடம் விவரத்தை கூறினான் கதிரேசன். சரி நம்பர் கொடு நானே பேசிக்கிறேன் என்றான். அந்தப் பெண்ணுக்கு கதிரேசன் மீண்டும் அழைத்தான். பணம் வரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் நண்பன் பேசுவான். அவனுடைய நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சரியென்று அவள் பெற்றுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது அதே அதட்டலுடன் முருகனுக்கு.

அவள் முருகனிடம் சத்தமா பேசினாள். முருகன் நினைத்து கொண்டான் பள்ளி ஆசிரியைகள் அப்படி தான் இருப்பார்கள் போல. அவள் முருகனிடம் கதிரசேனின் மகளின் ஸ்க்காலர்ஸிப் பணம் உங்க phone pay மூலமாக நாங்க அனுப்புறோம். அனுப்புவதற்கு முன் உங்க அக்கவுண்ட்ட நாங்க செக்கப் பண்ணணும். அதனால் உங்க பக்கத்துல யாராவது இருந்தால் அவங்க நம்பர்ல இருந்து எங்களுக்கு வீடியோ கால் பண்ணுங்க என்றாள். முருகனுக்கும் கதிரேசன் பாவம் அவனுக்கு பணம் கிடைத்தால் நல்லது என்று நினைத்தான். யார கூப்பிடுவது வீடியோ கால் பண்ண என்று யோசித்தார்.

அந்த நேரம் பார்த்து வெயில் ஜன்னல் வழியே நுழைந்து வருவது போன்று சீனிவாசன் வந்தான். முருகனை பார்த்து நின்றவன், அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு என்ன பிரச்சனை என்றான். வேறு வேலைகள் எதுவும் இல்லையென்றால்

உன் போன்ல இருந்து இந்த நம்பருக்கு ஒரு வீடியோ கால் பண்ணு என்றான். அவனும் அவசரத்தை புரிந்து கொண்டு உடனே கால் செய்தான். அதே பெண்ணின் குரல்.

அவள் முகத்தை காட்டவில்லை குரல் மட்டுமே கேட்க முடிந்தது.

அவள் பேச தொடங்கினாள் முருகனிடம். சார் உங்க phone pay ஓபன் பண்ணுங்க என்றாள். மகுடிக்கு அரவம் நின்று அசைவது போல் இருந்தான் முருகன். ஓபன் பண்ணினான். வீடியோ கால் மூலமாக அவள் பார்த்து கொண்டு உத்தரவு கொடுத்து கொண்டே இருந்தாள். அவசரப்படுத்திக் கொண்டே இருந்தாள். உங்க Bank Account காட்டுங்க எந்த Account ல் 5000 இருக்கோ அந்த Bank Account balance Check பண்ணுங்க. அவர் இந்தியன் Bank Account ஐ தேர்வு செய்தார். அதில் 6532 என்று இருந்தது.

அதை பார்த்தவுடன் அவள் விறுவிறுப்பு ஆனாள். சார் சரியா தெரியவில்லை கொஞ்சம் கிட்ட காட்டுங்க என்றாள்.

சார் இப்ப நான் சொல்லரத அப்படியே கேட்டு செய்ங்க.

சரி என்றான் முருகன். முதலில் வீடியோ கால் பண்ண போனுக்கு ஒரு QR code வந்துருக்கும் அத phone pay ல Scan பண்ணுங்க. Scan பண்ணினான். அதுல 6532 code Type பண்ணுங்க. முருகன் Type பண்ணினான். அடுத்து Msg ல்ல அருள்மொழி 12ம் வகுப்பு 24000 Code 6532 என்று Type பண்ணுங்க என்றாள். முருகன் Type பண்ணினான்.

சீனிவாசன் உடனே சார் நம்ம பணம் அவுங்களுக்கு போகும் என்றான். அப்போது தான் முருகனுக்கு தெரிந்தது தன்னுடைய பணம் போயிடும் என்று. அந்த பெண்ணிடம் முருகன் ஏங்க எங்க பணம் போகாதா. அவள் சிரித்து கொண்டே சார் பயப்படாதீங்க அந்த பணம் மீண்டும் ஸ்க்காலர்ஸிப்புடன் சேர்ந்து திரும்பி வந்து விடும். பணம் உங்களுக்கு அனுப்புவதற்கு முன் உங்க அக்கவுண்டுல zero balance காட்டணும். அப்பதான் நாங்க உங்களுக்கு பணம் உங்க அக்கவுண்டுக்கு அனுப்ப முடியும் என்றாள்.

முருகன் ஸ்கூல்லுணு சொன்ன தால நம்பினான்.

சீனிவாசனும் அதே போல் நம்பி பேசாமல் இருந்தான்.

முருகன் 9712 PIN Type பண்ணினான். வானவில் நிறத்தில் சக்கரங்கள் சுழன்று காட்டியது. பணம் செல்லாமல் அடம் பிடித்தது நெட் ஒர்க் பிராபளத்தினால்.

வீடியோ காலில் பார்த்து கொண்டு இருந்தவள் உடனே சார் நெட் ஒர்க் பிராபளம் 5 நிமிடம் line லே இருங்க வேற QR code அனுப்புறோம் என்றாள்.

மூன்று பேரும் காத்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து வெயிலின் வெளிச்சத்தை மறைத்து கொண்டு நிழல் போன்று

ஈஸ்வர மூர்த்தி வந்தார், பேராசிரியர் ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த கல்லூரியில் லஞ்சம் எதுவும் கொடுக்காமல் மெரிட்டில் வேலைக்கு சேர்ந்தார். அனைவருக்கும் அதிர்ச்சி அதற்கு முன்பு தான் பல லட்சங்கள் கொடுத்து இரண்டு மூன்று பேர்கள் வேறு வேறு ஊர்களில் இருந்து வேலைக்கு சேர்ந்து இருந்தார்கள். ஈஸ்வர மூர்த்தி வந்ததில் இருந்து அனைவரிடமும் இயல்பாக பழக தொடங்கி விட்டார். முருகனையும் சீனிவாசனையும் பார்த்தவுடன் சிரித்து விட்டு டீ சாப்பிட அழைத்தார்.

முருகன் வேலை இருக்கு என்று தயங்க சீனிவாசன் நடந்தவைகள் எல்லாவற்றையும் ஈஸ்வரனிடம் கூறிவிட்டார். ஆரம்பத்தில் இருந்து அனைத்தும் தவறாக இருப்பதால் பதட்டத்தில் கூறிவிட்டார். ஈஸ்வரனுக்கு எதுவும் புரியவில்லை ஆனால் அரசு வழங்கும் தொகை நேரடியாக Bank Account க்கு தான் வரும் என்பதில் துளி கூட சந்தேகம் கிடையாது.

ஈஸ்வரன் முருகனிடம் நான் அவர்களிடம் பேசுகிறேன் என்றார். முருகனுக்கும் சந்தேகமாக இருந்ததால் கொடுத்தான்.

ஈஸ்வரன் அந்த பெண்ணிடம் எங்கிருந்து பேசுரிங்க உங்க முகத்த காட்டுங்க என்றார்.

அந்த பெண் அமைதியாக எந்த சத்தமும் இல்லாமல் போன் காலை துண்டித்தார்.

அவள் Whats app ல்ல Share பண்ணுன QR code ம் காணாமல் போனது.

முருகனுக்கு வேர்த்தது ஆனால் பணம் தப்பித்ததில் மகிழ்ச்சி. நெட் ஒர்க் கடவுளுக்கு நன்றி கூறினான்.

ஈஸ்வரன் முருகனிடம் உங்க நண்பரிடம் உடனே போன் பண்ணி சொல்லுங்க இல்லைனா மீண்டும் பணம் திருடு போக வாய்ப்பிருக்கிறது. அப்படியே அந்த ஸ்கூலுக்கும் போன் பண்ணி சொல்ல சொல்லுங்க என்றார்.

மேற்கே மறைந்து கொண்டு இருக்கும் சூரியனை நோக்கி மூவரும் டீ அருந்த சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *