காக்கைகள்…
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 11,902
அதிகாலையிலேயே அந்தப் பை பாஸ் ரோடு பரபரப்பாகிவிடும்.
இருள் கலைந்து கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூட்டமாக பலர் நடை பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
நடப்பவர்களைப் பார்த்தால் சில நேரம் சிரிப்பு வரும். இத்தான்தண்டி உடம்பை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு நடந்தாலும் குறையாது.
உண்மையிலேயே உடம்பைக் குறைக்கணும்னா… அதிக கலோரி இல்லாத சாப்பாடு சாப்பிடணும். அப்படியே சாப்பிட்டாலும் 600 கலோரிக்கு மேல போகக் கூடாது. ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கணும். இப்படி யார் கட்டுப்பாடா இருக்கிறாங்க?
சும்மா வீட்டுச் சுமையிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சிங்கிற பேர்ல.. பை பாஸ் ரோட்டுக்கு நடக்க வந்திடுவாங்க.
பிள்ளைகளைக் கல்யாணம் செய்ஞ்சு குடுத்திட்டு, கடமை முடிச்ச கணவன் மனைவி – மகள் பிரசவத்துக்குச் சம்சாரம் போனதால தனியா இருக்கிற குடும்பத்தலைவர் – தனிக்கட்டையானவங்க – இப்படி வகை வகையாய்…
தொழிலதிபர்கள், சின்ன சின்ன அரசியல் தலைவர்கள் … இப்படிப் பல்வேறுபட்டவர்கள் இங்கு நடப்பார்கள்.
இதில் டாக்டரின் அறிவுரைக்குப் பயந்து நடப்பவர்களும் உண்டு.
நண்பர்களோடு சேர்ந்து நின்னுகிட்டு, உள்ளூர் அரசியல்ல இருந்து அமெரிக்க அதிபர் வரைக்கும் பேச்சு ஓடும்.
நாளைக்குத் தேர்தல்ல யார் ஜெயிப்பாங்கன்னு பல புள்ளி விவரங்கள்…. இங்கு விளையாடும்.
முடிவுகள் வேறுமாதிரி வந்தாலும், அதையும் சமாளித்துக் கொண்டு…. தேர்தலுக்கு மொத ராத்திரி…. மிட் நைட்ல… பணம் கை மாறிடுச்சு…. என்று நேரில் பார்த்ததுபோல் பேசுவாங்க.
வினோதமானப் பேச்சுகள்…. யாரேனும் வெட்டிபேச்சி என்று சொல்லக் கூடும்.
அதுமட்டுமா? அங்கு காலையில் மட்டுமே முளைத்திருக்கும் உளுந்தங்கஞ்சி கடை, டீக் கடை எல்லாம் கூடி நின்று அரட்டை அடிப்பதுதான் வேடிக்கையான வாடிக்கை.
இவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்றால் செத்திடுவாங்களோன்னு தோணும்.
பொண்டாட்டி பிள்ளைகிட்ட பேசுறாங்களோ இல்லையோ? நடை நண்பர்கள்கிட்ட சுவாரசியமா மனசைவிட்டு பேசிவாங்க.
இவங்க பேச்சு சுவாராஸ்யத்தில.. ஊஹூம்…. இவங்க பக்கத்தில என்ன நடக்குதுன்னே கூடத் தெரியாது.
அந்த சாலை வழியா ஒரு வி ஐ பி யைக் கடத்திக் கொண்டு போய்க் கொடூரமா கொலை செய்ஞ்சது கூட நியூஸ் பேப்பர்வ பார்த்துதான் தெரிஞ்சுக்குவாங்க.
அவ்வளவு பரிதாபத்திற்கு உரியவர்கள்.
அந்தச் சாலையில், ஆறு மணி வரை வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
நேரம் செல்லச் செல்ல வாகனங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும். நடப்பவர்களும் படிப்படியாகக் குறைந்துவிடுவார்கள்.
அதிகாலையில் ஒன்றிரண்டைத் தவிர விபத்துகள் ஒன்றும் நடந்ததில்லை.
இந்த ஊரில் ஆற்றுப் பாலத்தை விட பை பாஸ் ரோட்டில்தான் நடப்பவர்கள் அதிகம். தினந்தினம் நடப்பவர்களை ஓரளவு எல்லோருமே தெரிந்து வைத்திருப்பர். அவர்கள் பேசிக் கொள்ளாவிட்டாலும் ஒருவரை ஒருவர் கண்டதும் லேசான சிரிப்பை உதிர்த்துக் கொள்வார்கள்.
அன்று அப்படியில்லை.
அந்த ரோடே வேறுமாதிரி இருந்தது.
போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் நின்றிருந்தனர்.
நடப்பவர்கள் ஒரிருவரைத் தவிர எவரையும் காணவில்லை.
என்ன நடந்தது இன்று காலை?
யாரையோ லாரி மோதிவிட்டு நிற்காமல் போய்விட்டானாம். அடிபட்டவன் ‘கோமா’வில இருக்கானாம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, போலீஸ் தொல்லை வேணாம்னு நடை பயிற்சிக்கு வர்றவங்க வராம விட்டுட்டாங்க.
யாரு அடிபட்டுட்டா?
தினம் நடப்பவரா இருந்தாதான் நமக்குத் தெரியுமே!
ஒரு ஆளு … கைலியை மடிச்சுக் கட்டிட்டு… அரைகால் டிராயர் தெரியற மாதிரி வெடுக் வெடுக்குன்னு நடப்பாரே… அந்த ஆளுதான்..
ஆர்வம் குறையாத நண்பர்கள் அளவளாவிக் கொண்டு இருந்தனர். அப்போது, இவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ‘பைக்’ ஒன்று மின்னல் வேகத்தில் கடந்து கொண்டிருந்த போது, நின்றிருந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்து, அண்ணே என்று ஓர் குரல் அழைக்க, ‘பைக்’ சரக்கென்று நின்றது.
யாரு அடிபட்டது?
யாராவது கேட்க மாட்டாங்களான்னு எதிர்பார்த்த மாதிரி, ‘பைக்’ நண்பர் வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுக் கொண்டே, ‘ ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன். நம்ம “கரண்ட் கணேசன்”. கணேசன்தான் அவன்பேரு. “கரண்ட் கணேசன்” அவன் பட்டப்பேரு. கரண்ட் ஒயர்ல அடிச்சு துன்புறுத்துவானாம்.
கடைவீதி பஸ் ஸ்டாப் பக்கத்தில, ஒயின் ஷாப் நடத்துறானே?….
ஓ… அவனா?
ஆமாம்.. அவன்தான். யாரோ மர்மநபர்கள், கார்ல வந்தாங்கலாம். கரண்ட் பின்னாடி போய், கிரிக்கெட் மட்டையில ஒரே அடி… ஓங்கி அடிச்சிட்டுப் பறந்துட்டாங்கலாம்.
அட நீங்க வேறண்ணே… இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, இதே மாதிரிதான், சுடுகாட்டு ரோட்டுல, இந்த கரண்ட் கணேசன் ஸ்கூட்டர்ல போகும்போது, அவன் தலையைச் கோணி சாக்கு பையில மூடி… ரெண்டு மூணு பேர் சேர்ந்து அடி பின்னிட்டானுங்க. இது வரைக்கும் யார் அடிச்சாங்கன்னு யாருக்கும் தெரியாது.
பாவம்… இப்ப கோமாவுல இருக்கானாம். பிழைக்கிறது சந்தேகம்தான்.
ஒவ்வொரு டீக்கடையிலும், ஒவ்வொரு முச்சந்தியிலும் நால் ரோட்டிலும் இதே பேச்சு.
ஒருவனுக்கு ஒன்னுண்ணா… ஊர் இப்படித்தான் பேசுமோ?
நாளைக்கு நமக்கும் இப்படி நடந்தால்… நம்மைப்பற்றி யார் யார் என்னென்ன பேசுவார்களோ?
ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிருகங்களோ பறவைகளோ கவலைப் படுகிறதா என்ன?
உலகத்தில் என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த…. அந்த செத்து அழுகிப் போன எலியைச் சுற்றி காக்கைகள் கூட்டமாய் வட்டமடித்த வண்ணம் இருந்தன.
ஆனாலும்….. மனிதர்கள் சிறப்பிற்கு உரியவர்கள்…?