கவிதை மனிதர்கள்
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னுரை
டாக்டர் கைலாசம் மிகவும் களைத்துப் போய் வீட்டுக்கு வந்தார். கழற்றிக் கொடுத்த அவரது கோட்டினை ஹேங்கரில் மாட்டியவாறு அவரது மகள் “என்ன டாடி ரொம்ப சோர்ந்து போயிருக்கீங்க” என்றாள்.

“என்ன செய்யறதம்மா? சில பேர் பேச்சைக் கேட்டாலே களைப்பாகி விடுகிறது. இன்று அப்படிப்பட்ட அறுவைக் கிராக்கிகள் நாலைந்து வந்துடுச்சு. அதுவே களைப்பாயிடுச்சு” என்றார் டாக்டர் கைலாசம்.
“நீங்க சொல்றது உண்மைதான். ஆனா சில பேர் பேசும்போதே கவிதை போலே பேசறாங்களாமே. உங்களுக்குத் தெரியுமா?”
“முதல்ல ஒரு டம்ளர் காபி கொடும்மா. எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லை. யாராவது தலைவர்கள், எழுத்தாளர்கள் அப்படிப் பேசியிருப்பாங்க. நீ, பத்திரிக்கைகளின் பெட்டிச் செய்தியைப் படிச்சிட்டு என்கிட்ட சொல்றே” என்றார் டாக்டர் கைலாசம்.
‘இருங்க வரேன்’ என்று சொல்லி விட்டுச் சென்றவள், சமையலறையிலிருந்து காபி நிறைந்த டம்ளருடன் திரும்புகிறாள். ‘சொல்லு, நான் சொன்னது சரிதானே’ என்று காபியை உறிஞ்சியவாறே மகளைப் பார்க்கிறார் டாக்டர்.
‘இல்லை டாடி. நான் அதுமாதிரி பிரபலங்கள் பேசியதைப் பத்தி சொல்லலை. கவிதைன்னாலே என்னன்னு தெரியாத சாதாரண ஆளுங்க சாதாரணமாப் பேசும்போது வந்து விழற வார்த்தைகள் கவிதை மாதிரி கேட்கிறவர்களை அசத்திடும். என்னோட நண்பர் மதுசூதன் ஓர் ஆடியோ கேசட் பண்ணியிருக்கார் இதைப்பத்தி. கேட்கறீங்களா?’ என்று கேசட்டை பிளேயரில் பொருத்துகிறாள் டாக்டரின் மகள் வள்ளி.
‘கேட்கலாமே’ என்று ஆர்வத்துடன் சாய்வு நாற்காலியில் சாய்கிறார் டாக்டர்.
ஒலிப்பதிவு நாடா சுழன்று மதுசூதனின் குரல் அந்த அறையை நிறைத்தது.
வாழ்வதே ஓர் கலை (Living itself an art) என்று முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. ஓர் பத்திரிக்கை வெளியீட்டு விழாவில் பேசினார். அந்த வாழ்வுக் கலை எல்லோருக்கும் பிடிபட்டு விடுவதில்லை. ஆனால், அடிப்படையில் ஓர் கலையுணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. அதை அவரவர் கூர்ந்து கவனித்தால் தெரியும்.
கலையும் கவிதையும் சொற்களிலும் வடிவங்களிலும் வேறுபட்டாலும் அதிக வித்தியாகம் கொண்டவையாக நினைக்க முடியாது. எனவே வாழ்வே ஓர் கவிதை என்றும் கொள்ளலாம். கவிதைகளை ஏட்டிலும், நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் மட்டும் இல்லாமல் அன்றாட வாழ்விலும் நம்மையறியாமல் நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி இல்லாமல் மனிதர்களின் கவிதைகளை அனுபவித்த விதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தச் சிறு குறிப்புகள் கவிதைகளாகவோ, பேரிலக்கியமாகவோ பேசப்படுவதற்கு நியாயமில்லாமல் இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் நான் கண்ட கவிதைகளைப் பதிவு செய்துவிட்ட மாபெரும் நிறைவில் இருக்கிறேன். இதுபோதும் எனக்கு.
ஓய்வெடுக்கும் காற்று
ஓர் இருட்டின பின் மாலைப் பொழுதில் வீட்டு வாசலில் உட்கார்ந்து காற்று இல்லையே என்று நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். எனது மருமகன் என் தமக்கையின் நாலு வயதுச் சிறுவன் அருகில் இருந்தான். என் அங்கலாய்ப்புக்குப் பதிலாய் அவன் ‘காத்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கு மாமா’ என்றான். நான் அதிர்ந்து போனேன். ஹைகூ, மினி கவிதை, புதுக்கவிதை போன்ற துறைகளில் உபயோகிக்கப்படும் உத்தி போன்ற ஓர் கூற்றை ஒரு மானுட மழலை சொல்லி விட்டதைக் கண்ட எனது நெக்குரு கலை விவரிக்க என்னிடம் சொல் பஞ்சம்.
ஐஸ் கட்டிகளில் அவனது கடைசிப் படுக்கை
எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென்று எதிர்பாராத விதமாக அரசுப் பணியில் இருக்கும் போதே மாரடைப்பால் இறந்து போனார். இது கல்யாணச் சாவல்ல, மிகவும் பரிதாபகரமான மரணம். அவரைச் சார்ந்துள்ள மனைவிக்கும் மலர்ந்து கொண்டிருக்கிற அவரது டீனேஜ் புதல்வ, புதல்வியருக்கும் ஓர் பேரிடி. இதில் இன்னொரு வருத்தம், இறந்தவரின் எழுபது வயதுத் தந்தையும் அந்தப் பேரிடிக்கு உள்ளானவர். வழமையான மரண வீட்டின் ஓலங்கள், பரிதாப ச்சுகள். மனிதர்களின் முடிச்சு முடிச்சான கூட்டங்கள். இவற்றினிடையே பிரேதம், யாரோ தொலைதூர உறவினர் வருவார் என்பதால் ஐஸ் கட்டிகள் வரவழைக்கப் பட்டன. வரிசையாக அடுக்கப் பட்டன. நாலைந்து போர் சேர்ந்து பிரேதத்தை ஐஸ் கட்டிகளின் மேல் கிடத்திக் கொண்டிருக்கும் போது அந்தப் பழுத்த மனிதர் இறந்தவரின் தந்தை அவரையும் அறியாமல் சொன்னார் – “His last Bed in lce”. வால்ட் விட்மனும் புதுக் கவிதை நாட்டமும் இலக்கிய வெறியும் இல்லாத அந்தப் பெரியவர் இப்படிச் சொன்னது வேறு யாரைப் பாதித்தது என்று தெரியவில்லை. சாதாரண பேச்சில் இப்படிக் கவிதையா என்று எனது வியப்புகள் மாளவில்லை.
பேனா எடுத்துத் தொடுப்பவர்கள்
மாலை முடிந்து இரவு வந்து கொண்டிருக்கிற நேரம். அலுவலகப் பணிகள் முடிந்து கூட்டை நோக்கி நான் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாகக் கடக்கும் தெரு. அங்கு பிரதானமாய் ஜே ஜே என்று பிரார்த்தனை மனிதர்கள் கூடும் பிள்ளையார் கோயில் ஒன்று. கோயிலின் வாசலில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி பூ விற்றுக் கொண்டிருந்தாள். அவள். கையால் பூ அளந்து விற்றுக் கொண்டே “என்ன செய்யறது. நான் பூ தொடுத்தாத்தான் காசு. நீங்க ஆபீஸ்ல பேனா எடுத்துத் தொடுத்தாத்தான் காசு” என்று தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தது என் செவிகளில் விழுந்தது.
இவை நமது பேனாக்காரர்கள் கையாளும் வார்த்தைக் கோவையைப் போன்றே இருப்பதைப் பாருங்கள். அந்தப் பெண்மணி இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த பாதிப்பால் இந்தச் சொற்கோவை வந்தது என்று சொல்வதற்கு இல்லை. சாதாரணமாக வந்து விழுந்த வார்த்தைகளில் எத்தனை கவிதைச் சிதறல்கள் பாருங்கள்!
கவிதை மனிதர்களைப் பற்றி, மனிதர்களிடையே கவிதை பற்றி எனது அனுபவங்களைச் சொன்னேன். எப்படி முடிப்பது என்னுரையை? கவிதைகளுக்கு – வாழ்வில் கவிதைகளுக்கு ஏது முடிவு?
– ஐசிஎப் நிறுவனத்தின் ரயில் கோச்சு சஞ்சிகை, ஏப்ரல் 1994.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |