கவிதா அல்லள் கனிச்சுவை
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஹலோ கவிதா! ரெடியாயிட்டியா? நான் ரெடி! நீ ரெடியானவுடனே போன் செஞ்சுட்டுக் கீழே இறங்கிடு.”
“இல்லே கனி நான் இன்று பிரதோஷத்துக்கு வரல. பசிச்சிது. மீன் குழம்பு வச்சி நல்லா சாப்பிட்டேன். நீ போயிட்டு, எனக்காகவும் வேண்டிகிட்டு வா.”
“உங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனதற்குப் பிறகு நீ ரொம்பவும்தான் கெட்டுப்புட்டே! ஆண்டவனைத் தரிசிக்கிறதைவிட உனக்கு ருசியும் பசியும் பெரிசாயிட்டுதா?”
“ஆமாம் ஆண்டவன்கிட்டேதான் எவ்வளவோ வேண்டிக்கிட்டேன். முதல்லே என் வீட்டுக்காரர் என் மேலே வச்சிருக்கிற அவநம்பிக்கையை அவர் மனசிலிருந்து நீக்கிடு. எனக்கு அவர் போட்டிருக்கிற கட்டுப்பாட்டை நீக்கிடுன்னு. இத்தனை வருஷமா கேட்டுகிட்டு வர்றேனே என்ன பலன் கிடைச்சிது? இப்ப ஒரு வாரமாதான் சுதந்திரமா இருக்கிறேன். இல்லேன்னா அங்க பாக்கக்கூடாது. இங்கே நிக்கக் கூடாது, யாராவது நல்ல அறிவுள்ள அழகுள்ளவரா இருந்தா அவரைப்பத்தித் தப்பும் தவறுமா என்கிட்டே சொல்லி, அவரைப்பத்தி மட்டமா நினைக்கும்படி செய்யிறது. கோவிலுக்குப் போனா அவன்கிட்டே பேசாதே, இவன்கிட்டே பேசாதேங்கிறது. பூ விக்கிறவனும், அருச்சனை சீட்டு விக்கிறவனும், மந்திரம் சொல்லித் தீபாராதனை செய்யறவனும் ஆம்பிளைங் களா இருக்காங்களே.”
“அப்புறம் கும்பிடுற முருகனும், பெருமாளும் கிருஷ்ணனும்கூட ஆம்பள தெய்வம்தானே! அத அவரு சொல்லலையா?”
“ஓ அதனாலதான் என்னை, காளி கோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் போகச் சொல்றாரா? இருக்கட்டும்… இருக்கட்டும்… அவருக்கு நல்ல புத்தி புகட்டணும். இந்த ஒரு வாரமா ஒரே ஜாலிதான். இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவாரு. அதுக்குள்ளே அனுபவிக்க வேண்டிய தெல்லாத்தையும் அனுபவிச்சிட வேண்டியதுதான். பார்க்க வேண்டிய டங்களையெல்லாம் பார்த்துவிட வேண்டியது தான்.”
“அப்படின்னா இன்னைக்கு முருகன் கோவிலுக்கு வராம ஏன் சாப்பிட்டுட்டு வீட்டிலேயே இருக்கிறே.”
“ஒரு சேஞ்சுக்குத்தான். நீ போயிட்டு வா. சாயந்திரம் எக்ஸ்போ போட்டிருக்காங்க, போயிட்டு வருவோம். உங்க வீட்டுக்காரர்கிட்டே பர்மிஷன் வாங்கி வச்சுக்க..” என்றாள் கவிதா.
“உங்க வீட்டுக்காரர் போல இல்லே எங்க வீட்டுக்காரர். எனக்கு எல்லாச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் எங்கே என்னவென்று கேட்க மாட்டாரு. அந்த அளவுக்கு என்மேல நம்பிக்கை வச்சிருக்கிறாரு. ஏதாவது மேஜர் டிசிஷன்னாதான் கேட்பேன். ஆனா அவரு வர்றதுக்கு லேட்டுன்னா எங்கேயாவது போயிட்டு வந்தாருன்னா நான் துளச்சி எடுத்துடுவேன். அப்படிக் கேட்கக்கூடாதுன்னு பிறகு நினைப்பேன். அந்த நேரத்திலே ஒரு டென்ஷன்லே கேட்டுடுறேன். நான் நகை புடைவை வாங்கினேன்னா சொல்லிடுவேன். அவரும் அதையெல்லாம் கண்டுக்கமாட்டாரு வீட்டுக்கு வந்திட்டாருன்னா அவருக்கு எதையாவது எழுதிகிட்டேயிருக்கணும், இல்லே படிச்சிகிட்டே யிருக்கணும். வீட்டு வேல, வெளி வேல எல்லாத்தையும் தான் நான் செஞ்சிடுறேனே. அவரு பொறுமையா இருப்பாரு. நான்தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை. சின்ன விஷயத்திலேகூட அலட்டிக்கொள்வேன். அவரு புத்திமதி சொல்வாரு. அந்த நேரத்திலே இன்னும் டென்ஷன் ஆயிடுவேன். அது எனக்கு ஒரு நோயாயிட்டுது.
எங்க வீட்டுக்காரர்கூட ‘டென்ஷனாலே நோயா? நோயினால் டென்ஷனா?’ என்று கிண்டல் செய்வார். ஆனா எவ்வளவுதான் இருந்தாலும் என் வீட்டுக் காரருக்குத் துரோகம் செய்ய மாட்டேன். ஏன்னா என்னை நம்புறார். சரி… நான் கோவிலுக்குப் போயிட்டு வந்து பார்க்கிறேன். பை…”
தொலைபேசியை வைத்துவிட்டுப் பால், பன்னீர் பையுடன் கனிச்சுவை கோவிலுக்குப் புறப்பட்டாள்.
‘என்ன விந்தையான பெண்ணோ!…. கணவன் இருக்கும்போது அடங்கி ஒடுங்கிப் பெட்டிப் பாம்பாக! கணவன் உடன் இல்லாதபோது படமெடுத்து ஆடும் பாம்பாக, என்றெல்லாம் எண்ணியவாறே, கோவி லுக்குள் நுழையும் முன்பு பூக்காரரிடம் பூ வாங்கிக் கொண்டு உள்ளே சென்று சிவனுக்கும் நந்தீஸ் வரனுக்கும் இரண்டு அருச்சனைச் சீட்டு வாங்கினாள்.
அருச்சனைச் சீட்டு விற்கும் அந்தக் கோவில் அலுவலர், கனிச்சுவையைப் பார்த்தவுடன் கேட்டார்,
“என்னம்மா… உன் தோழி கவிதா வரலயோ.. என்ன அடக்கம், என்ன பண்பு. பொண்ணுன்னா அவாளாட்டம் இருக்கணும்.”
மனத்திற்குள் சிரித்துக்கொண்ட கனி,
“உடம்பு சரியில்லையா” என்று சொல்லிவிட்டு மூல விக்ரஹத்திடம் சென்று அய்யரிடம் அருச்சனைத் தட்டுகளைக் கொடுத்தாள்; அவரும் ‘கவிதா வரலயா’ எனக் கேட்டார். அவருக்கும் அதே பதில்.
“அப்படியா! உடம்புக்கு என்ன ஆயிடுத்து? என்ன பக்தி! ஆண்டவன் அனுக்கிரஹம் அவளுக்கு எப்பவும் உண்டு. இலட்சுமி கடாட்சம் அவ முகத்திலேயே தெரியறது. அவா ஆத்துக்காரன் ரொம்பவும் அதிருஷ் – டக்கார ஆம்படையான் அவாளுக்கு ஒண்ணும். ஆகாது” என்றார்.
விரும்பியதும், வேண்டுவதும் நிறைவேற பிர தோஷ பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பினாள். திரும்பும்போது பூக்காரரைப் பார்த்துக் கனிச்சுவைக் கேட்டாள்.
“எல்லோரும் கவிதாவை எங்கே எங்கேன்னு கேட்டுட்டாங்க. எல்லாரையும்விட வேண்டியவரான நீங்க ஒண்ணும் கேட்கலே. வரும்போதெல்லாம் ஒரு முழம் பூ கொடுப்பீங்களே. அதையும் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கல. உங்க பாசம், அன்பெல்லாம். எதிரிலே இருந்தாதானா?
“யாரு சொன்னது? நேற்றே போன் செய்து கவிதா சொல்லிட்டாங்க. அவுங்க முகத்தைப் பார்க்கலைன்னா, குரலையாவது கேட்காத நாளில்லை தெரியுமா? இன்னைக்குக் காலையிலேகூட பேசிக்கிட்டோம். பூ, பிரசாதத்துடன் வரச் சொல்லி யிருக்கிறாங்க”.
“நான்தான் போறேனே. என்னிடம் கொடுங்க. நான் கொடுத்துடுறேன்.”
“நேரிலே கொண்டு வரச் சொல்லியிருக்காங்க. நீங்க புறப்படுங்க.”
அவன் சொல்லி முடிப்பதற்குள், முகத்தை ஒரு வெட்டு வெட்டித் திரும்பி நடந்தாள். ஏன் தான் இப்படி வழியிறானோ! அவன் இருக்கட்டும். கவிதாவுக்குப் புத்தி எங்கே போகிறது? எதுக்காக இவனுக்குப் போன் செய்யணும்? நேரிலே வரச் சொல்லியிருக்கிறாள், வருகிறப்போவெல்லாம் பூவைக் கொடுத்து அந்தப் பூவையைப் பிடித்து விட்டானா?
“பூ வியாபாரம் செய்தாலும் ஆளு என்னமோ அழகாத்தானிருக்கிறான்! இருந்தாலும்…” யோசித்த வாறே கனிச்சுவை பேருந்தேறி வீட்டுக்கு வந்தாள்.
கவிதா குளித்து, சீவிமுடித்துத் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு அங்கு நிற்பது, இங்கு நிற்பது என்று இருப்புக் கொள்ளாமல் உலாவிக் கொண்டிருந்தாள். தனக்குப் பிடித்த சன் தொலைக்காட்சி நாடகத்தைக்கூடப் பார்க்காமல் பூக்காரன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அந்தச் சமயத்தில் தொலைபேசி மணி அடித்தது. ஓடிப்போய் ஆவலுடன் எடுத்தாள்.
“ஹலோ… நீயா! சரி என்னைப் பார்க்கணும்? இப்ப ஒண்ணும் பார்க்க வேண்டாம். நாம எக்ஸ்போ புறப்படுவதற்கு முன் போன் பண்றேன். அப்ப வந்தா போதும். நீ நல்ல பிரண்டா இருந்தா என்னைப் பார்க்க வராதே! என்னை டிஸ்டர்ப் பண்ணாதே! சரியா… வைக்கிறேன்…” தொலைபேசியின் மணியடிக்கும் பொத்தானைத் திருப்பி, அழைப்பு வந்தாலும் ஒலிக்காதபடி செய்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் பூனை திருட்டுப்பால் குடிக்க மெதுவாக வருவதுபோல் பூக்காரன் அருச்சனைத் தட்டு, பிரசாதம் சகிதம் வந்தான். அவனைக் கண்டதும், உள்ளே வா… என்று சைகை காண்பித்தாள். அவனும் உள்ளே சென்றவுடன் கவிதா வெளியே வராண்டாவிற்கு வந்து, நின்று கொண்டு அந்தப் பக்கம், இந்தப் பக்கம், யாரேனும் ‘அவன் வந்ததைப் பார்த்தார்களா’ என்று கவனித்தாள். யாரும் பார்க்கவில்லை யென்று உறுதி செய்து கொண்டபின் மெதுவாக, அதே நேரத்தில் சாதாரணமாக உள்ளே வருவதுபோல் வந்து கதவைச் சாத்தி உள்தாழ்ப்பாள் போட்டாள்.
நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு அந்யோன்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறக்காமலும், பதில் பேசாமலும் கவிதா இருந்தாள். மீண்டும் சத்தம் கேட்டது. “கவிதா கதவைத் திற… கவிதா… கவிதா…” என்று கனிச்சுவை குரல்கேட்டு வேறு வழியின்றிக் கவிதா கதவைத் திறந்தாள்.
“என்ன வேணும்… ஏன் காட்டுமிராண்டித்தனமா கத்துரே… உன்னைத்தான் இந்தப் பக்கம் வர வேண்டாம் என்று சொன்னேனே. எதுக்கு வந்தே…கொஞ்சம்கூட மேனர்ஸ் தெரியாம நான்சென்ஸ்…” என்றெல்லாம் கவிதா திட்டிக் கொண்டு இருக்கும்போதே, வாசலைக் குறுக்கிட்டு வைத்திருந்த கையைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் கனிச்சுவை.
கால்கள் நடுங்க, பேந்தப்பேந்த விழித்துக்கொண்டு நின்ற பூக்காரன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டாள். தடுக்க வந்த கவிதாவைத் தள்ளிவிட்டு, அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.
“ஏண்டா, இன்னொருத்தன் பொண்டாட்டி எவகிடைப்பான்னு நாயா அலையறே! உன் பொண்டாட்டிய, எவனாவது கையைப் பிடித்து இழுத்தா நீ ஒத்துக்குவியா? கீழே நிக்கிறா உன் பொண்டாட்டி. கொஞ்சமாவது உன் மானத்தைக் காப்பத்தறதுக்காக அவளை மேல அழைச்சிக்கிட்டு வரல.
“அந்தக் கழுததான் அப்படின்னா, கவிதா உன் புத்தி எங்கேடி போயிட்டுது. அறிவில்லே… வீட்டுக்காரன் உன்னைக் கண்டிப்பா வச்சிருக்கிறான்னா, உன் மேல உள்ள பிரியம்னு எடுத்துக்க. உன்னைச் சந்தேகப்படறான்னா, முன் ஜாக்கிரதையா இருந்து உனக்கு எந்தக் களங்கமும் வராம, குடும்பத்துக்கு எந்த அவப்பெயரும் வராம பாதுகாக்கணும்கிற நல்ல எண்ணமா ஏன் எடுத்துக்கக்கூடாது? உன்னை அடிக்கிறானா? திட்டுறானா? இம்சபடுத்துறானா? சில நேரங்கள்ள பேசும் பேச்சுகள் மனத்தைக் குத்தலாம். கொஞ்சம் பொறுமையா இருந்துக்க கத்துக்கணும். இப்படியேவா நடந்துகிட்டு வருவான். ஒண்ணு ரெண்டு குழந்தையாயிட்டா எல்லாம் சரியாயிடப் போவுது. வீட்டுக் காரனுக்குப் போட்டியா இப்படிப்பட்ட காரியம் செய்யலாமா? இதனால அவனுக்கு ஒண்ணும் ஆகிவிடப் போவதில்லை. அவனுக்குத் தெரியாமலே கூடப் போயிடலாம். ஆனா உன் மனசிலே இன்னிக்கு ஏற்பட இருந்த காயம் ஆறுமா? உன் ஆயுள் பூராவும் உன்னை உறுத்திக்கிட்டேயிருக்காது? உன்னை தொரத்திகிட்டே அந்தப் பாவம் தொடராது? உன் மனச்சாட்சிக்கு என்ன பதில் சொல்வே? அதன்பின் விளைவு என்ன? மனம் பாதிச்சா உடல்பாதிக்கும். நோய் வரும். முகத்திலே சிரிப்பு வருமா? இன்னிக்கு ஒரு நிமிஷ சந்தோஷம் கிடைச்சி ஆயுள் முழுதும் சந்தோஷத்தைத் தொலைச்சிடப் பார்த்தியேடி பாவி!
கணவன் வெட்கப்படற அளவுக்கு, மேற்கொண்டு படி. தொடர்ந்து அவனைவிடப் பெரிய படிப்பைப் படி. நல்ல வேலையில சேர்ந்து அவன் வெட்கப்படுற அளவுக்கு நெறய சம்பாதிச்சுக்க கண்டிச்சு அல்லது சந்தேகப்படும்படியா பேசினான்னா எதிர்த்து நாலு கேள்வி கேளு. உன் மாமனார் மாமியார்கிட்ட சொல்லு. அதை விட்டுட்டுக் கேடு கெட்ட வேலையைச் செய்யறாளாம். நீ என்னைத் தோழியா ஏத்துக்காட்டியும் கூட பரவாயில்லை; உன்னைக் காப்பாத்த வேண்டிய கடமையிலிருந்து நான் நழுவ முடியாது. மன்னிச்சிக்கோ” என்று ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டு, வெளியேறி மின் தூக்கி நோக்கிச் சென்றாள். அங்கே பூக்காரன் தலை குனிந்தவாறு நின்று கொண்டிருந்தான். கனிச்சுவையும் சென்று மின் தூக்கி வரும் வரையில் காத்திருந்தாள்.
மின் தூக்கி வந்தவுடன், அவனை நோக்கி “வா உள்ளே’ என்று சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு இறங்கினாள். அவன் கையெடுத்துக் கும்பிட்டு அழுதான். இவள் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் பேசாமலிருந்தாள்.
கீழ்த் தளத்திற்கு வந்தவுடன் அவனை அழைத்துக் கொண்டு, மையக் கூடத்தில் உட்கார்ந்திருந்த பூக்காரனின் மனைவி, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றாள்.
“என்னாச்சும்மா..” என்று மனைவி கேட்டாள். அதற்குக் கனிச்சுவை,
“கோவில் அறங்காவலர் குழுத்தலைவரிடம் வாதாடி, குடும்பச் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, கோவிலுக்குள்ளயே மீண்டும் அதே இடத்தில் பூக்கடை வைக்க அனுமதி வாங்கிக் கொடுத்து விட்டேன். சந்தோஷமா வீட்டுக்கு எல்லாரும் போங்க.” என்று சொல்லி வழியனுப்பிவிட்டுத் திரும்பினாள்.
“நல்ல பொண்ணுங்க. நல்ல நேரத்திலே வந்து உங்களைக் காப்பாத்தியிருக்காங்க. அவுங்க முதல்லே வீட்டுக்கு வந்து, கோவில் காம்பவுண்டுக்குள்ள கடை வைக்க தடைபோட்டுட்டாங்கன்னு சொன்னவுடன் நான் ஆடிப்போயிட்டேன். நம்ம பொழப்பே போயிட்டுன்னா? இப்பதான் எனக்குச் சந்தோஷமா இருக்குங்க..” என்று பூக்காரன் மனைவி சொல்லிக் கொண்டே நடந்தாள்.
“இப்போதுதான் எனக்கும் சந்தோஷமாயிருக்கு” என்று பூக்காரனும் சொல்லிப் பெருமூச்சுவிட்டான்.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.