கழுகின் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 35 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

உயரமான பாறையின் உச்சியில் வேர்விட்டிருக்கும் ஓர் ஆலமரத்தின் பிரம்மாண்ட கிளையே என் நிரந்தரக் குடியிருப்பு.

என் பார்வை – வானத்தின் கூர்மையான கத்தி; வேட்டையே அதன் மொழி.

இன்று வானம், தன் அடிப்படையையே இழந்து நிற்பது போலிருந்தது.

காலை, சூரியனின் முதல் கதிர் என் இறகின் நுனியைத் தொட்டது.

அந்த வெப்பம் வழக்கமானதல்ல; உடலின் ஆழத்தைத் தொட்டு சுட்டெரித்தது.

காலை வேட்டைக்காக வானில் வட்டமிட்டேன்.

ஒருகாலத்தில் என் சிறகுகளுக்குக் கீழே வெள்ளி நாண் போல ஒளிர்ந்து ஓடிய அந்த நதி,

இப்போது வெறும் காயம்பட்ட மணல் பரப்பாகவே காட்சியளித்தது.

ஒரு கிழவனின் காய்ந்த கைகள் போல, அந்த மணல் வெளி நீண்டு கிடந்தது.

அதன் நடுவே, ஒரு மீன் – சுருண்ட உடலில் உயிரின் கடைசி வினாடிகளை எண்ணிக்கொண்டிருந்தது.

துடிதுடித்து, மணல் வெடிப்புகளுக்கிடையே அது புதைந்து போனது.

அந்தக் காட்சியில், வறட்சியின் அமைதியே சத்தமாயிருந்தது.


புழுதி கொதிக்கும் நிலத்தில், ஒரு சிறிய முயலைக் குறிவைத்த வேட்டைக்குப் பின், பட்டுப்போன பலா மரத்தின் கிளையொன்றில் மௌனமாக இளைப்பாறினேன்.

அப்போது, மழையை மறந்த வானத்தின் கீழ், ஒரு குயில் பாட முயன்றது. தொண்டையைச் செருமிக்கொண்டே, உயிர் சேராத ஒரு பாடலைத் தொடங்கியது. அதில் சத்தம் இருந்தது; இசை மட்டும் இல்லை.

நான் கேட்டேன், “குயிலே… இன்னைக்கு உன் பாட்டு ரொம்ப கசப்பாக இருக்கே. இது உன் வழக்கமான குரலா தெரியலையே?”

குயில் என் கேள்வியைக் கேளாதது போல, தன் சிறகுகளை உதறியது. சிறிய அலகைத் திறந்து, இனிப்பு மறந்துபோன ஒரு கசப்பான துளியைத் துப்பியது.

பின்னர் மெல்லிய குரலில் முணுமுணுத்தது:

“இங்கே மரமெல்லாம் ஒவ்வொண்ணா செத்துக்கிட்டு இருக்கு. தொண்டையை நனைக்க ஒரு சொட்டுத் தண்ணிக்கும் வழியில்லை. அப்புறம், பாட்டுல இனிப்புக்கு நான் எங்கே போவேன்?”

நான் பெருமூச்சு விட்டேன். “வெயில் கொஞ்சம் கூடத்தான் இருக்கும். அதுக்காக இப்படி நொந்து பேசலாமா?”

குயில் கோபத்துடன் தன் தலையை ஆட்டியது.

“வெயிலைக் குற்றம் சொல்லாதீங்க. நீங்க மேல இருந்து சூரியனோட வெளிச்சத்தை மட்டும்தான் பாக்குறீங்க. ஆனா நாங்க இங்கே கீழே, இந்த அனலிலே வெந்துகிட்டு இருக்கோம்!”

நான் சொன்னேன்,

“யாரையும் திட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை, குயிலே. உன்னுடைய தாகத்தை நீயேதான் போராடித் தீர்த்துக்கணும்.”

அதற்கு குயில் ‘குக்… குக்…’ என்று சிரித்துக்கொண்டே சொன்னது: “போராடவா? அதுவும் யாரிடம்?

உங்க ஒரு இறக்கை அசைஞ்சாலே நாங்க நிலைகுலைஞ்சு போயிருவோம்.

உங்களைப் பொறுத்தவரை இந்தப் பூமி ஒரு வேட்டைக்களம்.

ஆனா எங்களைப் பொறுத்தவரை, இது உசிரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஒளிஞ்சுக்க வேண்டிய இடம்.”

அந்த வார்த்தைகள் முடிந்ததும், என் சிறகுகள் மௌனமாகின.

என் பாறை அசையவில்லை;

ஆனாலும் அதன் உயரம், ஒரு கணத்தில் பளுவாக மாறியது.


மாலை நேரத்தில்,

ஒரு பெரிய பறவை வெள்ளம் வானில் எழுந்தது.

அவை என் நிலத்தைச் சேர்ந்தவை அல்ல; வடக்கு நோக்கிப் புதிய புகலிடத்தைத் தேடிப் பறந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தின் வேகம், ஏதோ ஒரு மரண அவசரத்தை அறிவித்தது.

உடல் முழுவதும் வெப்பமும் களைப்பும் ஒட்ட, ஒரு வயதான நாரை என் பாறைக்கு அருகிலிருந்த ஒரு கிளையில் வந்து அமர்ந்தது.

நான் கேட்டேன்,

“அய்யோ பாவம்! உங்களைப் பார்த்தா ரொம்ப தூரம் பறந்து களைச்சுப் போன மாதிரி இருக்கே. ஏன் இப்படி இறக்கை வலிக்கக் கடல் மேல பறந்து வர்றீங்க? என்ன துயரம் உங்களுக்கு?”

நாரை சிரித்தது.

அது சிரிப்பு அல்ல.

“துயரமா? நிலத்தையே இழந்தவனுக்கு துயரம் என்ன, நிம்மதி என்ன, கழுகே?”

அதன் கழுத்து, பசியின் மெலிவால் நடுங்கியது.

நான் கேட்டேன்,

“உங்க நிலத்துக்கு என்னாச்சு?”

நாரையின் குரல் கடல் அலையின் கரகரப்பாய் வந்தது.

“எங்க நிலம் ஒரு தீவு. அது மெல்ல மெல்லக் கடலுக்குள்ளே முழுகிடுச்சு…”

அதன் சிறகின் ஒரு இறகு பிளந்தது. அது மீண்டும் உயர முயன்றது.

நான் கேட்டேன், “இப்போ எங்க போறீங்க?”

“தெரியலை. பறக்கறதுக்கு வானமென்னவோ விரிஞ்சுதான் இருக்கு. ஆனா மூச்சிறைக்க வந்து உட்காரத் தரையில ஒரு பிடி மண்ணு கூட சொந்தமா இல்லை.”, நாரை மெதுவாகக் கூறியது.

என் உயரத்தை அன்றாந்து பார்த்ததும், அது தன் தலையைத் திருப்பிக்கொண்டது.


நாரையின் சொற்களைச் சுமந்துகொண்டு என் பாறைக்குத் திரும்பினேன். கீழே, காய்ந்த புதருக்குள் சருகுகள் உரசும் சத்தத்திற்குப் பதிலாக, ஆக்ரோஷமான சீறல் கேட்டது.

மூத்த அணில் தன் நரைத்த வாலைச் சுருட்டி, ஒரு வேலி போலத் தடுத்துக்கொண்டு நின்றது.

“இந்த வருஷம் விதை கம்மி.

அதனால உங்க குடும்பத்துக்கும் பங்கு கம்மிதான்.”

இளைய அணில் உடம்பை நேராக நிமிர்த்தி, வெயிலில் உலர்ந்து பிளவுபட்ட தரையைப் பார்த்து சொன்னது.

“இந்தப் பொந்துல இருக்கிற விதைகள்ல பாதிக்கும் மேல எங்களோட உழைப்பு இருக்கு. வெயில் அடிச்சப்போ, நீங்க நிழலுக்குள்ள இருந்த நேரத்துல, விதை தேடி மண்ணை தோண்டினது நாங்கதான்.”

மூத்த அணிலின் முகம் இறுகியது.

“நேத்து வந்த ஆளு நீ! இந்தப் பொந்தோட பழக்கவழக்கம் பத்தி உனக்கு என்ன தெரியும்?”

இளைய அணில், தாகத்தால் ஒட்டிய வயிற்றை எக்கிக்கொண்டு, எகிறியது.

“நேத்து, நேத்து’ன்னு சொல்லாதீங்க பெரியவரே. எங்க தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா காலத்துலேர்ந்து நாங்களும் இங்கதான் விதை புதைச்சு வாழ்றோம். இங்க யாரும் பூமியிலிருந்து முளைச்சு வரல!”

பெரிய அணிலின் கண்கள் ரத்தமெனச் சிவந்தன.

“இது சரிப்பட்டு வராது. உங்க மூச்சுக்காத்து என் மேல படுறதே எனக்கு பிடிக்கல.

எட்டிப் போய் உட்காரு!”

அவை தங்களுக்குள் முதுகு காட்டிக்கொண்டு விலகின.

உயரத்திலிருந்து பார்த்தபோது, அந்தச் சிறிய பொந்துக்குள் கண்களுக்குப் புலப்படாத ஒரு குறுகிய சுவர் மெல்ல எழுந்து நிற்பதைப் போல இருந்தது.


பூமி துடிக்கும் அதிர்வுகள் என் சிறகுகளைக் குத்தின.

குயிலாகவோ, நாரையாகவோ, அணிலாகவோ—

நாளை என் நிலை மாறினால்?

நெஞ்சில் ஒரு சிறிய நடுக்கம் ஓடியது. என் நகங்கள் வேட்டைக்காக தயாராக இருந்தாலும், அந்த நடுக்கம் சிறகுகளையும் பதட்டமாய் தட்டியது.

இருமுறை சிறகுகளை உதறினேன்.

பதில் கிடைக்கவில்லை.

அந்த நொடியில்,

பாறையின் விளிம்பில் ஒரு சலனம்.

வெப்பம் தாங்காமல், பாறையின் விளிம்பிலிருந்து ஒரு சிறிய குயில் குஞ்சு கீழே சறுக்கி விழுவதை என் கூர்மையான பார்வை பிடித்தது.

வழக்கமாக, இப்படிப்பட்ட வீழ்ச்சிகள் எனக்கு ஒரு சுவையான உணவின் தொடக்கம்.

ஆனால் இன்று,

என் சிறகுகள் அதுவாகவே விரிந்தன.

காற்றைக் கிழித்துக்கொண்டு நான் கீழே பாய்ந்தபோது, என் நகங்கள் வேட்டைக்காகத் திறக்கவில்லை; ஒரு தொட்டிலைப் போல வளைந்தன. மண்ணைத் தொடுவதற்கு ஒரு அடி முன்பாக, அந்தக் குஞ்சு என் நகங்களுக்குள் மென்மையாக அடங்கியது.

இதுவரை நான் பிடித்த உயிர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இதுவும் வேட்டையா?

நாளை மீண்டும் பசி தொடங்கினால்?

எதற்கும் என்னிடத்தில் பதில் இல்லை.

அந்தக் குஞ்சின் உடல், என் பரந்த இறகுகளின் நடுவே நடுங்கியது. இதுநாள் வரை நான் அறிந்திராத ஒரு உணர்வு, என் இறகின் அடியில் மெல்ல இறங்கியது.

என் குரல் மென்மையாயிற்று.

“பயப்படாதே!”

அந்தச் சொற்கள் என் தொண்டையிலிருந்து வரும் முரசொலியல்ல; மார்பிலிருந்து உருவாகி வரும் ஒரு மெல்லிய அலைபோல இருந்தது. அதை உச்சரித்த என் செவியே, அதன் ஒலியைக் கேட்டு சில விநாடிகள் அசைவற்று நின்றது.

வெளியில் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஆனால் என் சிறகுகளுக்கு அடியில், அந்த வறண்ட நிலத்தின் வெப்பத்தையும் மீறி,

ஒரு மெல்லிய குளிர்ச்சி –

முதன்முதலாக என் மனதிலிருந்து ஊற்றெடுத்தது..


அந்த இரவு, வானமும் மண்ணும் அதிகாரத்தின் உயரத்தைக் கைவிட்டு, அன்பின் ஈர்ப்பை ஏற்ற ஒரே நிழலாக இணைந்தன.

ஒரு குடையைப் போல விரிந்திருந்த என் பரந்த சிறகுகளின் நடுவே, அந்தச் சிறிய குஞ்சு மெதுவாகக் குலுங்கியது. அதன் மூச்சு துளித்துளியாக வெளிவந்தது.

ஒரு நொடிக்கு, அது மெதுவாக “குக்… குக்…” என்று சொன்னது.

நான் மெதுவாகப் பாறையின் விளிம்பில் எழுந்து நின்றேன். என் பார்வை இன்னும் கூர்மையாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போது, அது கீழே நகரும் உயிர்களைக் குறிவைக்கவில்லை;

மாறாக,

அவை ஏன் நகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன

என்ற வேரை நோக்கிக் கூர்மையாயிற்று.

நான் சிறகுகளை விரித்தேன்-

சீற்றமின்றி.

அந்த விரிப்பில், பாறையின் உச்சியில் இருந்த ‘சக்கரவர்த்தி’யின் நிழல் கீழே விழுந்தது;

ஒரு சாம்பல் போல,

மௌனமாக.

வானம் அமைதியாக இருந்தது. மண், தன் உள் ஆழத்தில் ஏதோ ஒரு ஈரமான அசைவை உணர்ந்தது.

அப்போதுதான் நான் உணர்ந்தேன்:

உயரம் என்பதெல்லாம்,

பூமியைத் தொட்டபோதுதான்

அர்த்தம் பெறும் என்று…

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *