கள்வர் தலைவன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 120
(1955ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்நாடகத்தில் வருபவர்கள்
ஏமாங்கதன் – புஷ்பபுரத்தரசனுடைய முதன் மைந்தன்
சௌரியகுமாரன் – ஏமாங்கதன் தம்பி.
பாலசூரியன் – ஏமாங்கதன் புதல்வன்.
பலாயனன் – புஷ்பபுரத்து மந்திரி.
ஜெயபாலன் – ஒரு விஷவயித்தியன்.
சூடாமணி – ஒரு வணிகன்.
தாரகன் – பலாயனன் வீட்டு வேலையாள்.
காஞ்சேயன், விடங்கன் – சௌரியகுமாரன் தூதர்கள்.
நாயனார், வயத்தான், கோஸ்கி, மக்கன்தேவ், அந்தர்டப்பு, இரிச்சன், காயி, தோப்பாசாமி – கள்வர்கள்.
சௌமாலினி – ஏமாங்கதன் மனைவி.
சுசங்கதை – செளரியகுமாரன் தங்கை.
கள்வர், சேவகர்கள், முதலியோர்.
இடம்:- அதிகபாகம் புஷ்பபுரத்திலும், அயலிலுள்ள தூமகாரண்யத்திலும், சிறிது பாகம் குமாரபுரத்திலும்.
முதல் அங்கம் | இரண்டாவது அங்கம்
முதற் காட்சி
இடம்:- தூமகாரண்யத்தில் ஒரு காட்டாற்றை யடுத்த அடர்ந்த இடம். இங்குள்ள கள்வர் கோயிலுக்கெதிரில் ஏமாங்கதன் பலிபீடத்தருகிலுள்ள ஒரு ஸ்தம்பத்திற் கட்டப்பட்டிருக்கிறான்.
ஏ. ஐயோ! இப்பாதகர்கள் சீக்கிரம் வந்து என்னைக் கொன்று விட மாட்டார்களா! எத்தனை நேரம் நானிவ் வேதனையி லிருப்பேன்? என் ஐம்பொறிகளும் கலங்குகின்றனவே. என் மனமும் ஒரு வழி நில்லாது பெருஞ்சுழல் மத்தியி லகப்பட்ட துரும்பைப் போல் தத்தளிக்கின்றதே! இம் மனோ சஞ்சலத்தையும் தேக பாதையையும் அனுபவிப் பதைவிட சீக்கிரம் இறப்பேனாயின் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணினவனாயிருப்பேன். ஐயோ ! இக்கதி யனுபவிப்பதற்கோ நான் மாறுவேடம் பூண்டு புஷ்ப்புரி யினின்றும் தப்பிவந்தேன்! நான் அங்கேயே இருந்திருப் பேனாயின் யாராவது என்னை ஹிம்சியாது சீக்கிரம் கொன்றுவிட்டிருப்பார்களே ! இந்த யமவேதனைக் கெல் லாம் ஆளாயிருக்க மாட்டேனே! ஐயோ!இக்கொடிய பாதகர்கள் கையிற் படுமுன் என்னுயிரையாவது மாய்த் துக்கொண்டிருக்கலாகாதா நான்!-ஆ! யார் விதி யாரை விட்டது! ஈசனே! ஈசனே! என்னைக் கைவிட்டீரே!-சீ! ஈசன் ஒருவனிருக்கின்றானோ ! இருந்தால் ஏன் நான் இக் கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும்! நான் புத்தி அறிந்தது முதல் பிறருக்கு ஒரு தீங்கும் செய்ததுமில்லை நினைத்ததுமில்லை. அப்படியிருக்க நான் ஏன் இக்கதிக்கு வரவேண்டும்? இதைவிடக் கேடான கதி ஒருவனுக்கு வாய்க்கப் போகின்றதோ?- பிறருக்கு நன்மை செய்தால் தனக்கு நன்மை பயக்குமென்கிறார்களே! நான் பிற ருக்கு நன்மையே செய்திருக்க எனக்கு தீமையே பயந்து நான் இக்கதிக்கு வந்தேனே! சீ! நான் மற்றவர்களைப் போல் கள்ளம் கபடமுடையவனா யிருந்திருப்பேனாயின் இக்கதிக்கு வந்திருக்கமாட்டேனென்பது திண்ணம்!- இதெல்லாம் முன் வினைப்பயனோ! – ஏன் இன்னும் இந்த யமகிங்கிரர்கள் திரும்பி வரவில்லை? ஐயோ! என் மனதை நான் எவ்வளவு திருப்பியும் ஒரு வழியில் நில்லேனென் கிறதே! அப்பா! பாலசூரியா! உன்னையும் உன் தன்னை யையும் கடைசி முறைப் பாராது நான் இறக்கவேண்டி யதா யிருக்கின்றதடா!என் கண்மணியே! என்னை மேம் படுத்த வந்த என்னருஞ் மே! நான் இறந்த பின் யாரையடா அப்பா என்றழைக்கப் போகின்றாய்? நான் இறந்ததை யறிந்தால் நீயும் இறப்பா யென் பது நிச்சயம். பிறகு பேதையாகிய உன் அன்னைக்குத் தேறுதல் சொல்வார் யார்? ஐயோ! சௌமாலினி எட்டு மாதத்துப் பூரண கர்ப்பிணியா யிருக்கின்றாளன்றோ! அந்தோ! அந்தோ! என் மனம் சுழல்கின்றது! ஒன்றும் தோற்றவில்லையே ! என் கண் பஞ்சடைகின்றதே! பால சூரியா! சௌமாலினி-
ஜெயபாலன் தூரத்தில் வருகிறான்.
ஜெ. ஈதாகும் மனிதனுடைய வாழ்க்கை ! ஒவ்வொரு மனித னும் என்ன என்ன எண்ணங்களெல்லாம் எண்ணி என்ன என்ன தீர்மானிக்கிறான்! அவைகள் எவ்வெவ் விதம் முடிகின்றன! பேதை மனிதனால் என்ன முடியும்? இவ்வுண்மையை அறியாது மனிதன் எவ்வளவு தான் என்கிற அகங்காரத்தையும் கர்வத்தையும் கொள்ளுகின் றான்! இதற்குப் பிரத்தியட்சமான உதாரணம் என் கண் முன்பாக இதோ தோற்றுகின்றதே! இப்பேதை மனி தன் சற்று முன்பாக நமது கள்வர் கையிற்படுமுன் என்ன என்ன எண்ணியிருந்தானோ? அவ்வெண்ணங் களெல்லாம் சிறிது பொழுதுக்குள் என்னவாகப் போகின்றன! ஐயோ பாவம், பேதை மனிதன் ! சீ ! அதி ருக்கட்டும் இப்பொழுது அவனைப் பார்த்து பரிதாபப் படுகின்ற நான் அவனைவிட என்ன உயர்ந்த ஸ்திதியி ட லிருக்கிறேன்? அவன் இன்னும் கால் நாழிகையி லிறக்கப் போகின்றான்; நான் இன்னும் ஒரு மாதத்திலிறக்கப் போகின்றேன். ஒரு மாதமா? ஆம், சரியாக ஒரு மாதம் இன்னும் கெடு வைத்திருக்கிறான் சௌரிய குமாரன் நமக்கு. ஆ! சௌரிய குமாரா!- ஆயினும் இப்பேதை மனிதனுடைய மனநிலைமை எப்படியிருக்கிறதென்று அருகிற் சென்று கண்டறிவோம்! [அருகிற் செல்கிறான்.) என்ன, கண்ணைமூடிக்கொண்டிருக்கின்றான்? இறந்துவிட் டானா என்ன பயத்தினால்? இல்லை மெய்ம்மறந்தான் போலும்! இவனை நாம் எங்கேயோ பார்த்த ஞாபகமா யிருக்கின்றது?- ஓ ! இவர் சௌரிய குமாரனுடைய அண்ணனன்றோ ? ஆம் ஆம்! இவர் மாறுவேடம் பூண்டு இங்குவந்து நமது கள்வரிடம் அகப்படும்படி நேரிடுவா னேன் ?- ஓ! அப்படியேதாவது நேரிட்டிருக்கலாம்! நாம் இவரை இறக்க விடுவது நியாயமன்று. இவ்விசேஷத்தி னுண்மையை அறியவேண்டும். (ஏமாங்கதன் முதுகை மெல்லத் தொடுகின்றான்.)
ஏ. ஓ! காலம் வந்து விட்டது ! அப்பா! உங்களை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகின்றேன்,என்னை ஹிம்சியாது ஒரே வெட்டாய் வெட்டி விடுங்கள்.
ஜெ. ஐயோ பாவம்! நான் தம்மைக் கொல்ல வந்திருக்கின்ற தாக எண்ணிக் கூறுகின்றார்.- ஏமாங்கதராஜனே! நான் உம்மைக் கொல்லவரவில்லை கண்விழித்துப் பாரும். ஏ.[பயந்து கண்விழித்து] அப்பா ! நீ யார்? நான் ஏமாங்கத னென்று உனக்கெப்படி தெரியும்?
ஜெ. சொல்லுகிறேன். இதோ [ஏமாங்கதனைக்கட்டி யிருக்கும் கயிற்றை யறுத்து, ஸ்தம்பத்தினின்றும் விடுவிக்க, ஏமாங்கதன் மூர்ச்சையாகின்றான்.] பாவம் மூர்ச்சையாயினான்! [சயித் தியோபசாரம் செய்கின்றான்.)
ஏ. [கண்விழித்து] நான் என்ன கனவு காண்கின்றேனோ!
ஜெ. இல்லை இல்லை.
ஏ. அப்பா! நீ யாராயிருந்தாலுமிருக்கட்டும். நாம் இவ்விடத்தை விட்டு சீக்கிரம் அப்புறம் போவோம். நான் இங்கிருப்பேனாயின் என்னைக் கொன்று விடுவார்கள்! சீக்கிரம் எழுந்திரு!ஐயோ! எழுந்திருக்கவும் எனக்குச் சக்தி யில்லையே! [ஜெயபாலன் மடிமீது விழுகின்றான்.)
ஜெ. ராஜகுமாரா ! எழுந்திருக்கவேண்டாம். ஒன்றும் பயப் படாதீர். நான் உம்மைக் காப்பாற்றுகின்றேன். தாம் ஏது இங்கு இவ்வுடையுடன் வந்தது? நடந்த விருத்தாந் தத்தை உண்மையாக ஒளியாது கூறும்.- என்னிடம் கூறச் சந்தேகப்படுகின்றாற் போலிருக்கிறது. ஒரு சந் தேகமும் வேண்டாம். நீர் ஒன்றும் பயப்படவேண்டிய தில்லை, என்ன சமாசாரம்?
கோஸ்கி, மக்கன்தேவ், வயத்தான், அந்தர்டப்பு, இரிச்சன், நாயனார், காயி, தோப்பாசாமி, முதலிய கள்வர், குடத்தில் ஜலம் வேப்பிலை முதலியவைகளை எடுத்துக்கொண்டு ஒரு புறமாக வருகின்றனர்.
வ. அடடே! எங்கேயோ பூட்டாண்டா! ஓடி பூட்டாண்டா தப்பிச்சிகினு. [மற்றெல்லோரும்] ஆமாண்டா! ஆமாண்டா!
நா. இல்லை! இல்லை அதோ இருக்கிறான் பார்!
இ. அடே! நம்பசாமி பக்கத்திலே உக்காந்துகினு இருக்கிறார்டா!
நா. ஒரு வேளை அவர் தான் அவிழ்த்துவிட்டாரா என்ன?
கோ. அடே இரிச்சா! போயி கேக்கலாமா சாமியே?
வ. ஆமாண்டா! இண்ணைக்கி எப்புடியும் நரபலிகொடுக்கணும் இல்லா போனா இந்த வருஷமெல்லாம் வவுத்துலே மண்ணுதான்!
கோ. ஆமாம் ஆமாம், நீ போயி சாமியே கேளு.
நா. ஆமாம். அடே வயத்தான் ! நீ தான் சரியானவன், போய் கேள், நாங்கள் பின்னால் வருகிறோம்.
வ. ஒரு வேளெ கோவிச்சிகினா சாமி, என்னாடா செய்யரது?
இ. ஒண்ணும் கோவிச்சிக்க மாட்டாரு, நீ போயி கேள்.
வ. நாம் மாட்டேண்டா எனக்கு பயமா இருக்குது!
இ. அடே! கேட்டா எம்பங்கு தேங்கா தர்ரேன் !
வ. தேங்காயா! தேங்காயா! ஒரு முடி தரணும்.
இ. தர்ரோம் போ. தேங்கா இண்ணா ஆ இண்ணு வாயெ தெறக்குறாம் பார்!
வ. என்னா இண்ணுடா கேக்கரது ?
நா. சத்! நாழி ஆய்விட்டது பலிகொடுக்கவேண்டுமென்று கேள். அடே, இல்லாவிட்டால் இவனையே பிடித்து பலி கொடுத்து விடலாமாடா!
கோ. ஆ! சரியான வேலை, வா இப்படி, போயி கேக்கிரையா என்னா?
வ. இல்லை இல்லை, இதோ போயிகேக்கரேன்.
[அவர்களிருக்குமிடம் போகிறார்கள். வயத்தான் முதலிலும் மற்றவர்கள் பின்னுமாக.]
வ. சாமி –
ஜெ. என்னடா அது?
வ. உம் – [பின்னால் இருப்பவர்களுக்குச் சைகை செய்கிறான்] உம்-என்னாடா சொல்ரது? என்னாடா சொல்ரது?
[திரும்பி மற்றவர்களைக் கேட்கிறான்.]
இ. தேங்கா! – பத்திரம்.
ஜெ. என்னடா அது?
வ. உம் – தேங்கா –
ஜெ. தேங்காயா வேண்டும்? அடே! இப்படி வாருங்கள் எல்லோரும். இவரையல்லவா இன்றைக்கு நரபலி கொடுக்க இங்கே கட்டிவைத்தீர்கள் இவர் யார் தெரியுமாஉங்களுக்கு?
எல். தெரியாது!
ஜெ.இவர் என்னுடைய பிராண சிநேகிதர். இவரையாகொல்லப் பார்த்தீர்கள் நீங்கள்?
எல். இல்லை சாமி! இல்லை!
ஜெ. நான் சொல்வதைக் கேளுங்கள். இனிமேல் நீங்கள் எப்பொழுதும் நரபலி கொடுக்கலாகாது. நான் ஆக்ஞாபிக்கின்றேன்; நமக்கொரு துன்பமும் செய்யாத எம்மனிதனையும் நாம் வருத்தலாகாது என்று நான் கட்டளை யிட்டிருக்கின்றதை மறந்தீர்களோ?
கோ. ஆமாஞ்சாமி, பொலிபோடா போனால் கருப்பண்ணசாமி கோவிச்சிகினா? அப்புறம் இந்த வருஷமெல்லாம் நமக்கொண்ணும் ஆப்பிடாதே.
ஜெ.அப்படியல்ல, ஒரு ஆட்டைப்பிடித்துக்கொண்டு போய் பலியிட்டு பூஜை நிறைவேற்றுங்கள்.
வ. ஆமாஞ் சாமி! ஆமாஞ்சாமி! நல்லவேலை!
இ. ஆடு ஒதவுமடா?
வ. வாயெ மூடுடா உனக்கென்ன தெரியும்! மனுஷனைக் கொண்ணா என்ன பிரயோஜனம்? ஆட்டைக் கொண்ணாலும் திண்ணலாம்.
நா. எப்பொழுது பார்த்தாலும் திண்டியே இவனுக்கு.
வ. ஆனா சாமி! மனுஷன் எவ்வளவு பெரியவனா இருக்கறான்? ஆடு இவ்வளவுண்டா இருக்குதே. ஒரு ஆடு போதுமா? நாலு ஆடு பொலிபோட்டா அதுக்கும் இதுக்கும் சரியா யிருக்கும்.
ஜெ.அப்படியே. சரிதான் புறப்படுங்கள் பூசைபோட,
வ. பலே! அடேகோஸ்கி! இரிச்சா! மக்கன்தேவு!காயி! அல்லாம் வாங்கடா. இண்ணைக்கு நரிமூஞ்சிலே முழிச் சோண்டா நாலாடுடா!
நா. நாலாடு என்னத்துக்கடா?
வ. இத்தனி பேரிருக்கிறோமே ஒரு ஆடுபோதுமா? நானே ஒரு ஆடுதிண்ணுவனே?
இ. ஒரு ஆடு!
வ. பந்தியம் கட்டரையா?
இ. உம்.என்ன பந்தியம்?
வ. ஒரு ஆடு நான் திண்ணாப்போனா இன்னொரு ஆடு துணணச் சொல்ரது.
கோ. கெட்டிக்காரன்தான் வா, நேரமாச்சி அதுக்குத்தானே உனக்கு வவுத்தான் இண்ணுபேரு வைச்சாங்கள். [கள்வரெல்லாம் போகின்றார்கள் சந்தோஷமாய்]
ஜெ. அரசே, இனி சொல்லலாமே தாங்கள்.
எ. அப்பா! நீ என்னுயிரைக் காப்பாற்றிய பரமபுருஷன். என்னுயிர் உன்னுடைமையாய்விட்டது. இனி நீ கேட்பதை நான் மறுப்பேனோ?ஆயினும் இக்கள்வர் கூட்டத்திலிருந்தும், உன்னைப்பார்த்தால் ஈவு இரக்கமுள்ளவனாகத் தோற்றப்படுகின்றாய். என்னுடைய விருத்தாந்தத்தைக் கேட்பாயாயின் வீணாக வருத்தப்படுவாய். நான் ஏன் கூறவேண்டும்?
ஜெ. அப்படியல்ல, சொல்லும் கேட்போம்.
ஏ. நான், புஷ்பபுரத்தரசனாகிய சச்சந்தனுடைய மூத்தகுமா ரன், என்பெயர் ஏமாங்கதன். என் தாயார் என்னைப் பெற்றவுடன் இறந்து விட்டார்கள். பிறகு என்பிதா வேறொருமணம் செய்துகொண்டார். அனுசூயா தேவி யாகிய அம்மாற்றாந்தாய் மூலமாக எனக்கு சௌரிய குமாரன் சுசங்கதை என்று ஒரு தம்பியும் தங்கையு முண்டு. அனுசூயாதேவி என்னிடம் மிகவும் அன்பு பாராட்டி வந்தாள். சௌரியகுமாரனும் சுசங்கதையும் என்னைத் தம்முடைய சொந்த தமையனைப் போலவே பாவித்து வந்தார்கள்.
ஜெ.உம்முடைய தம்பியின் பெயரென்ன?
ஏ.சௌரிய குமாரன். சுவாமியினுடைய கிருபையால் நான் எல்லா சௌக்கியங்களையும் பெற்று விவாகமாகி புத்திர சந்தானத்துடன் வாழ்ந்து வந்தேன்.
ஜெ. சௌரிய குமாரனுடைய நண்பன் ஜெயபாலன் என் றொருவன் இருந்தானே உமக்குத் தெரியுமா?
ஏ. தெரியும், அவர்களிருவரும் உயிர் நண்பர்களாயிருந்தார் கள். ஆனால் நான் ஜெயபாலனைப் பார்த்ததில்லை. அவன் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்ததாகக் கேள்விப் பட்டேன். அப்பா, அதையேன் கேட்கின்றாய்? உனக்கு அவனைத் தெரியுமோ?
ஜெ. இல்லை சும்மா கேட்டேன். அப்புறம் சொல்லும், தாம் இந்த ஸ்திதிக்கு வந்ததேது? அதைக் கூறும்.
ஏ. என்னுடைய பிதா நான் அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பிரயத்தனப் பட்டதாகக் கூறி என்னைத் தன் நாட்டெல்லைக்குள்ளிருந்தால் யார் வேண்டு மென்றாலும் கொன்றுவிடலாமென்று கட்டளை யிட்டுத் துறத்திவிட்டார்.[கண்ணீர்விடுகிறார்.]
ஜெ. அரசே! வருந்தவேண்டாம் சொல்லும். – உம்.
ஏ. அப்பா! என்னைப்பார்த்தால் தகப்பனுக்கு விஷம் கொடுத்துக் கொல்லும்படியான துரோகியைப்போலவா யிருக்கின்றது? அப்பா! அப்படிப்பட்ட பாதகர்களும் இவ்வுலகிலிருக்கிறார்களோ? அதை நினைத்தாலும் எந் நெஞ்சம் பகீர் என்கின்றதே!
ஜெ. இதென்ன தாம் ஓர் ஆடவன் என்பதை மறந்தீரா என்ன? அரசே ! நீர் உம்முடைய பிதாவுக்கு இவ்வாறு ஒரு காலும் துரோகம் நினைத்தும் இருக்கமாட்டீர் என்று றுதியாக நம்புகின்றேன் நான். ஆயினும் உம்முடைய பிதா எதைக்கொண்டு இவ்வாறு உம்மீது சந்தேகித் தார்? அதைச் சற்று விளங்கச் சொல்லும்.
ஏ. இதோ சொல்லுகிறேன். உன்னிடம் கூறியாவது என் துயரம் தணிகின்றேன். சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு அரண்மனையில் நாங்களெல்லோரு போஜனம் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது பிதா தன் பாத்திரத்திலிருந்த தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டு இன் னும் வேண்டுமென்று கேட்க, அவர் பக்கத்தி லுட்கார்ந்திருந்த நான் எனது பாத்திரத்திலுள்ள ஜலத்தை அவருடைய பாத்திரத்தில் விட்டேன். உடனே என் பாத்திரத்திலிருந்த பொழுது வெறும் ஜலமாயிருந்தது அவருடைய பாத்திரத்திற் பட்டமாத்திரத்தில் வெண்மைநிறமாக மாறியது. அதைக் கண்டவுடன் என்பிதா முகம் கறுகி என்னைச் சற்று நேரம் கோபித்து உற்றுப்பார்த்துவிட்டுச் சாப்பாட்டை விட்டு அப்பாத் திரத்தை அப்படியே எடுத்துக்கொண்டு தன் அறைக் குட் சென்றார். இதை யெல்லாம் கண்டவுடன் நான் திக் பிரமைகொண்டு சற்று நேரம் அசைவற்றுப் போயி னேன். பிறகு என் பிதாவிடம் என்னவென்று விசாரிக்கச் சென்ற பொழுது, தான் என்னை மறுபடியும் கண்ணால் பார்க்க மாட்டாரென்றும், நான் அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றதாகவும், அதற்காக நான் ஏழு தினங்களுக்குள் தனது நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென்றும் அதற்கப்புறம் தனது நாட்டெல்லைக் குள் நானிருப்பேனாபின் என்னை யார்வேண்டுமென்றா லும் கொன்றுவிடலாமென்றும் கடுமையான கட்டளை யிட்டனுப்பினார். பிறகு நான் என் பிதாவை நேரிற் கண்டு பேசவேண்டுமென்று என்னாலியன்றவளவு முயன்றும் அவர் ஒரே பிடிவாதமாய் என்னைப் பாரே னென்று சொல்லிவிட்டார். பிறகு –
ஜெ. உம்முடைய பிதா வைத்திருந்த பாத்திரம் என்ன பாத்திரம் ஞாபகமிருக்கின்றதா உமக்கு?
ஏ. அவருக்கென்று செய்யப்பட்ட பஞ்சலோக பாத்திரம் ஒன்று.
ஜெ. என்ன! பஞ்சலோக பாத்திரமா?
ஏ. ஆம், என்ன ஆச்சரியப் படுகின்றாய்?
ஜெ. ஒன்றுமில்லை, அந்த ஜலம் எந்த வர்ணமாக மாறியதென்று கூறினீர்?
ஏ. வெண்மையாகப் பால்போல மாறியது. அப்பா, என்ன விசேஷம்? இதைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? என்ன யோசிக்கிறாய்?
ஜெ.[தனக்குள்] ஆகா! – இரண்டாவதோ! -இதை நான் முன்பே அறிந்திருப்பேனாயின்! – அப்படியா!- நான் யாரை நோவது? என்னையே! என்னையே ! – உம் அப்புறம் சொல்லும்.
ஏ. பிறகு நான் எப்படியாவது பிதாவின் கோபத்தைத் தணிக்கின்றேன், நீர் இந்நாட்டை விட்டுச் செல்ல வேண்டாமென்று என்னைத் தன் சொந்த அண்ணன்போற் பாவிக்கின்ற சௌரிய குமாரன் கூறவே. அந்த ஏழு தினங்களும் புஷ்பபுரியிலேயே இருந்துவிட்டேன். அவனுடைய பிரயத்னமும் பயன்படாமற் போகவே, அந்த ஏழு தினங்களும் கழிந்தவுடன் இனி அங்கிருப்பது அபாயமெனக் கருதி மாறுவேடம் பூண்டு இங்கு வந்து வழிதெரியாது உழன்று கொண்டிருக்கும் பொழுது இப்பாதகர்கள் கையிலகப்பட்டேன். இதுவே நடந்த விர்த்தாந்தம். என்னுடைய பிதாவின் மீது ஆணைப் படி இதில் சற்றேனும் பொய்யில்லை. என்னுடைய பாத்திரத்தில் யார் முன்பாக விஷத்தை வார்த்து திருந்தார்களோ இதெல்லாம் சத்தியமாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எனக்கொன்று மாத்திரம் சந்தேகமாயிருக்கின்றது. என்னுடைய பாத்திரத்திலல்லவோ விஷம் முதலிலிருந்தது; ஆகவே அது என்னைக் கொல்லவல்லவோ வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைப் பிதா யோசியாமற் போனாரே.
ஜெ. அது விஷமென்று உமக்கு உறுதியாக எப்படித் தெரியும்?
ஏ. நான் என்னுடைய தங்கையாகிய சுசங்கதையைக் கேட் டேன். அவள் பஞ்சலோக பாத்திரத்தில் உருமாறியபடி யினால் அது விஷமாகத்தானிருக்க வேண்டுமென்று பிதா கூறியதாகச் சொன்னாள். அதுவுமன்றி அந்த உருமாறிய ஜலத்தை பிதாவானவர் ஒரு நாய்க்கிட, அது உடனே வலது புறத்தில் ஒருவித வலி கண்டு இறந்ததாம். அப்பா, இதிலொரு ஆச்சரிய மிருக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன் என் கைக்குழந்தையும் வலது பக் கத்தில் ஒருவித வலி கண்டிறந்தது. அது இறந்தது போலவே இந்நாயும் இறந்ததாக என் தங்கை எனக்குக் கூறினாள்.
ஜெ. என்ன! உம்முடைய கைக்குழந்தையா?
ஏ. ஆம், அப்பா! அப்பா! மற்றவைகளையெல்லாம் கேட்ட நீ இதையும் கேள். இவ்வாறு திடீரென்று வலிகண்ட குழந்தை இறந்ததுமன்றி அன்றிரவு அரண்மனையினின்றும் அப்பிரேதம் காணாமற் போய்விட்டது. பிரேதத்தை யாராவது திருடுவார்களோ? அப்பா! என்ன? என்ன?
ஜெ. ஆகா! சந்தேகமேன் – குழந்தையென்றும் பார்க்கலாகாதா! – மூன்றாவதோ! – இப்பொழுது நன்றாய் எல்லாம் விளங்குகின்றது! சௌரியகுமாரா!
ஏ. என்ன சௌரிய குமாரனைப்பற்றி? – என்ன அப்பா யோசிக்கின்றாய்? – அப்பா நீ யார்?
ஜெ.(தனக்குள்) காலம் வந்து விட்டது. (ஏமாங்க அரசே அந்த விஷத்தை உம்முடைய பாத்திரத்தி விட்டிருக்கக் கூடும் என்று நினைக்கின்றீர்?
ஏ. அப்பா! அதுதானே தெரியவில்லை எனக்கு நாத்து முதல் இது வரையில் ஒருவருக்கும் மனதறி செய்யவில்லையே ! எனக்குப் பிறரேன் தீங்கு வேண்டும்? உனக்கென்ன தோற்றுகின்றது பற்றி? உனக்கு ஏதாவது தெரியுமா?
ஜெ. ஏமாங்கதராஜனே, நான் இப்பொழுது உம்மிடம் சொல் லத் தடையில்லை. ஆயினும் அதற்குக்காரணம் கேளாத பட்சத்தில் கூறுகிறேன், என்ன சொல்லுகின்றீர்? ஏ. அப்படியே ஆகட்டும்,யார் செய்தது தெரியுமா உனக்கு?
ஜெ. உம்முடைய கைக்குழந்தைக்கு விஷங் கொடுத்துக் கொன்று அதன் பிரேதத்தை அபகரித்துச் சென் றவனும், உமக்கு விஷங்கொடுத்துக் கொல்ல முயன்றவனும் – உமது தம்பியாகிய சௌரியகுமாரனே!
ஏ. என்ன! சௌரிய குமாரனா!
ஜெ.ஆம் – ஆச்சரியமாயிருக்கிறதோ உமக்கு?
ஏ. நீ அப்பா! நீ யேதோ தெரியாமையினாற் கூறுகின்றாய். என்னுடைய தம்பி ஒரு காலும் இதைக் கனவிலும் நினைத்திருக்கமாட்டான். அவன் என் குழந்தை இறந்த பொழுது துக்கித்தது சுவாமிக்கே தெரியும். அதன் பிரேதத்தை க்ஷணமேனும் விட்டுப்பிரிய மனம்வரவில்லை யென்று அதன் பக்கத்திலேயே இருந்தழுததைப் பார்த் திருப்பாயாயின் இவ்வாறு ஒருகாலும் நீ கூறமாட்டாய். அதுவுமன்றி என் பிதாவின் கோபத்தைத்தணிக்க அவன் முயன்றது கொஞ்சமல்லவே! என்னுடைய உடன்பிறந் தானும் எனக்காக அவ்வளவு பாடுபட்டிருக்க மாட் டானே! அப்பா, இந்த தவறான எண்ணத்தை விட்டு விடு. நீ ஏதோ –
ஜெ. சரிதான்,அப்படியே இருக்கட்டும். ஒரு காலம் வரும், அப்பொழுது உமக்கு இதன் உண்மையைக் காட்டுகிறேன். அதிருக்கட்டும், அரசே உமக்கு புஷ்பபுரிக்குப் போய் முன்போல் பிதாமுதலியோருடன் சுகமாய் வாழ்ந் திருக்க வேண்டுமென்று விருப்பமில்லையோ?
ஏ. அப்பா! நீ இதைக் கேட்பது எனக்கு மிகவும் ஆச்சரிய மாயி ருக்கின்றது.இதைவிட எனக்கின்னும் இவ்வுலகில் சிலகாலம் உயிருடன் வாழ்ந்திருக்க விருப்பமில்லையோ வென்று கேட்டிருக்கலாம். அப்பா, என் கண்ணுக் கொப்பாய என் அருமைப் புதல்வன் பாலசூரியனையும் என் மனைவி சௌமாலினியையும் நான் சீக்கிரம் காணா விட்டால் எனதுயிர் நிற்பது கடினம்.
ஜெ.அரசே,உம்முடைய கோரிக்கையை நான் நிறைவேற்று கின்றேன்; ஆனால் நான் சொல்லுகிறபடி காரணமொன் றும் வினவாமல் செய்வீரா நீர்?
ஏ. அப்பா, எப்பொழுது நீ எனதுயிரைக்காப்பாற்றினாயேர் அப்பொழுதே நான் உனக்கடிமையாகி விட்டேன். உன் சொற்படி நான் நடவாமற் பேவேனோ! எப்படியாவது நான் எனது பெண்சாதிபிள்ளையையும் தந்தை தாயாரை யும் பார்த்தாற் போதும். ஆனால், உன்னால் என்ன முடி யும்? அதிருக்கட்டும், அப்பா, இவ்வளவெல்லாம் கேட் டுக் கொண்டு வந்த நீ இன்னானென்று எனக்குக் கூற வில்லையே, அப்பா, நீ யார்?
ஜெ.(தனக்குள்) நான்! – நான்! – சாம்பிணம் – நான் இக்காட்டிலுள்ள கள்வர்களுக்கெல்லாம் தலைவன்.
நாயனார் வயத்தான் முதலிய கள்வரெல்லாரும் திரும்பிவருகிறார்கள்.
ஜெ. நாயனார், பூஜையெல்லாம் சரியாக நிறைவேறிற்றா? நா. எல்லாம் தங்களுடைய கருணையினால் சரியாக ஆயிற்று. இதோ பிரசாதம்.(புஷ்ப முதலியவற்றைக் கொடுக்கின்றான்.) அடே! கருப்பண்ணசாமி அருளினால் நம்முடைய சுவாமிக்கு சகல நன்மையு முண்டாகக் கடவது!
எல். ஜெய!
நா.நமக்கெல்லாம் க்ஷேமமும் ஐஸ்வரியமும் கிடைக்கக் கடவது!
எல். ஜெய!
நா. நம்முடைய பகைவரெல்லாம் அழியக்கடவது!
எல். ஜெய!
வ. நம்பளுக்கெல்லாம் ரொம்ப ஆடும் தேங்காயும் கெடைக்கக் கடவது! ஜெய! – அடெ ஜெய சொல்லுங்கடா, தேங்காயும் ஆடும் திண்ணூட்டு வல்லே?
ஜெ. நாயனார், எல்லோரும் வந்து இப்படி என் எதிராக நில் லுங்கள். நான் இதுவரையில் உங்களுக்குத் தலைவனாக இருந்தேனல்லவா? இப்பொழுது எனக்கு தேச சஞ் சாரம் செய்து ஆங்காங்குள்ள க்ஷேத்திரங்கள் முதலிய வைகளைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று ஒரு ஆசையுண்டாயிருக்கின்றது. ஆகவே நான் போய்த் திரும்பி வருமளவும் இதோ இருக்கும்படியான என் பிராண சிநேகிதரை உங்களுக்குத் தலைவனாக ஏற்படுத்து கின்றேன். தேசசஞ்ராரம் முடிந்து நான் திரும்பி வரு மளவும் இவரே உமது தலைவர். (தானணிந்திருந்த முடியை ஏமாங்கதன் தலையில் தரிக்கின்றான்)
ஏ. அப்பா! இந்தவேலை என்னத்திற்கு எனக்கு? வேண்டாம்!
ஜெ. ஐயனே, சற்று முன்பாக என்சொற்படி நடக்கின்றேன் என்றீரே இதுதானோ? இதை ஏற்றுக்கொள்ளும், பிறகு உமக்கு எல்லாம் விளங்கச்சொல்கின்றேன்.
கோ. இத்தனி காலம் உங்கீழ் இருந்தோம். இப்போ நீங்க பூட்டைங்கண்ணா நாங்களும் உங்களோடு வர்ரோம், நீங்க பூட்டாக்கா அப்புறம் –
மற். ஆமாம் சாமி. ஆமாம் சாமி.
ஜெ. அடெ! நான் சொன்னபடி செய்யுங்கள். நான் அடிக் கடி இங்குவந்து உங்களுடைய க்ஷேமத்தை விசாரித்துக் கொண்டே இருப்பேன், ஒன்றும் பயப்பட வேண்டாம். இது வரையில் எப்படி என் சொற்படி நடந்து வந்தீர்களோ அது போலவே இனி இவர் சொற்படி நடக்க வேண்டும் தெரியுமா?
எல். நீங்க சொல்லரபடி செய்ரோம் சாமி!
ஜெ. நாயனார், நான் மேலைக்குகைக்குச் செல்கின்றேன். நீ இன்னும் மற்ற கள்வரையெல்லாம் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர். ஐயனே, வாரும் செல் வோம். உம்முடன் இவர்களைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். சொல்லுகின்றேன் வாரும். அதுவு மன்றி நீர் மிகவும் பசியுற்றிருக்கின்றீர். வாரும் போ வோம். [ஏமாங்கதனை அழைத்துச் செல்கின்றான்.]
இ. அடே! இதென்ன இது! நம்ப சாமி எங்கேயோ பூட்ராராம் வேறொரு சாமியை வைச்சூட்டுப் போரா ராமே! இந்த சாமியே பார்த்தாலும் நல்லவராட்டந் தான் இருக்குதுரா. ஆனாலும் இவரெ பார்த்தா தைரிய சாலியாயில்லேடா!
ம. இல்லெடா, நம்ப சாமி சீக்கிரமா வந்துடுவாரு.
கோ. அதுவமில்லாமே அடிக்கடி வர்ரேன் இண்ணாரே.
நா. ஆம் ஆம். சீக்கிரம் வாருங்கள் போவோம். அடெ அந்தர் டப்பு எங்கேடா ?
வ. அடே நம்ப பொலிபோட்ட எடத்திலே ஈச்சங்கள்ளெ வச்சூட்டு வந்தூட்டேண்டா!
இ. இல்லேடா, அத்தை நான் வரும்போது பார்த்தேன் காணோமே.
வ. ஒருவேளெ அந்தர்டப்பு குடிச்சூட்டானோ?
இ. ஆமாண்டா ஆமாண்டா! இதோ குடிச்சூட்டு வுய்ந்து கினு வாராம்பாரு. [அந்தர்டப்பு குடித்துவிட்டு விழுந்து கொண்டு வருகிறான்.]
அ. அடே வவுத்தான்! – நான் குரிசூட்டேண்டா ஈசங் கல்லு! – அட தொப்பே!
வ. ஐயோ! ஒழிஞ்சுது. வாயிலே மண்ணெ போட்டான். அதுக்குத்தான் நான் அப்பவே குடிச்சுடணுமிண்ணேன். கேட்டைங்களா!
நா. அடே நேரமாய்விட்டது, போவோம். அடே இவனை இப்படியே பிடித்துக் கொண்டுவாருங்கள். [அந்தர்டப்புவை இழுத்துக்கொண்டு எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
இரண்டாவது காட்சி
இடம் :- புஷ்பபுரியில் அரண்மனையிலோர் அந்தரங்கமான அறை. சௌரியகுமாரன் கள்ள அறையை யுடைய ஒரு மேஜயின் முன்பாக, கையிலோர் மருந்துக்குப்பியுடன் நிற்கின்றான்.
சௌ. பலாயனனுக்கு நேற்றைத்தினம் பாலில்கலந்து கொடுத் தது போதுமா போதாதா? போதுமெனத் தோற்றுகின் றது. அவனால் நமக்கு இன்னும் சில காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றன, ஆகவே அவன் இன்னும் சில தினங்கள் பொறுத்திருப்பதே நலம். (குப்பியை மேஜை யில் வைத்து மூடிவிட்டு ஒருபுறமாக வருகிறான்.) சீ ! ஒன்றின் மேலொன்றாய் வந்து கொண்டிருக்கின்றனவே! இத னுடன் என் கவலைகளெல்லாம் முடியும் என்று நினைத் திருக்க முன்பிருந்ததை விட அதிகரித்தனவே யொழிய குறைந்தபாடில்லை. ஒன்றை நினைக்க ஒன்றாய் முடிகின் றது. அன்றைத்தினம் பிதா மறுபடியும் ஜலம் கேளாம லிருக்கலாகா தா அல்லது ஏமாங்கதனாவது அதற்கு முன் அவ்விஷத்தை அருந்தியிருக்கலாகாதா ? இந்த சந் தர்ப்பத்தில் பாலசூரியன் என்கையினின்றும் இரண்டாம் முறை தப்பித்துக் கொண்டான்; ஆயினும் விட்டேனா அவனை! என்ன சங்கடங்கள்! இன்னும் நான் அதைரி யப் படுவதற்கொன்றும் நியாயமில்லை. நான் ஏவியிருக் கின்ற தூதர்கள், எப்படியும் ஏமாங்கதனை விடமாட் டார்கள்; ஒருகால் அவர்கள் கையினின்றும் அவன் தப்புவானாயின் நான் இந்த ஏழுதினங்களாக அவனை ஏமாற்றி இங்கேயே இருக்கச் செய்த கஷ்டமெல்லாம் வீணாகிவிடும். ஏமாங்கதன் இறந்தான் என்று என் செவியினால் நான் கேட்குமளவும் எனக்கு இரவெல்லாம் பகல்தான்! இதைக் கேட்டபின்பே நான்மேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்கவேண்டும்.
கதவின் பக்கமாய் காஞ்சேயன் வந்து நிற்கிறான்.
சௌரி. காஞ்சேயா, விடங்கனெங்கே?
கா. அவனைக் காலைமுதல் காணோம். அரசே, தம்முடன் கண்டு பேசுவதற்காக சௌமாலினிதேவியும் பாலசூரிய ரும் வெளி வாயிலில் வந்து நிற்கிறார்கள்.
சௌரி. உள்ளே வரச்சொல். இதென்ன சங்கடம்! [விரை வில் மேஜையைப் பூட்டிவிட்டு தன் ஆசனத்திற்கு வருகிறான்.) நான் மிகவும் வருத்த முற்றவனைப்போல் வேஷம்போட வேண்டும். நான் மேற்கொண்ட வேலை என்னை ஒவ் வொன்றா செய்யச்சொல்கின்றது!
பாலசூரியன் சௌமாலினியை அழைத்து வருகிறான்.
சௌரி. அம்மணி! தாங்கள் ஏது இவ்வளவு பிரயாசம் எடுத் துக் கொண்டிங்கு வந்தது? அப்படி என்னுடன் ஏதா வது பேசவேண்டியிருந்தால் எனக்கொரு வார்த்தை சொல்லியனுப்பினால் நான் தங்களிடம் வரக்காத்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும். சமாசாரம்? பாலசூரியா, என்ன சமாசாரம்?
பா. என்ன சமாசாரம்!-நான் பிரயோஜனமில்லை என்று எவ்வளவு தடுத்தும் கேளாது என் பிதாவைப் பற்றி உம்மிடம் பேச என் அன்னை வந்திருக்கிறார்கள்.
சௌமா. ராஜகுமாரா ! இடுக்கணுற்ற காலையில்உ தவுவாரே உற்றாரெனப்படுவார் ! இந்த சந்தர்ப்பத்தில் எமக்குதவு வார் உம்மையன்றி வேறு ஒருவருமில்லை. உம்மாலேயே எங்கள் குறைகள் தீர்க்கப்படவேண்டும். அப்பா! உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, என் பிராணநாதர் ஒரு அபராதமும் நினைத்தவரல்லவென்பது நீர் அறியாத விஷயமல்ல. மாமா அவர்கள் வீணாக அவர் மீது கோபம் கொண்டு இந் நாட்டை விட்டுப் போம்படி கொடுமை யான கட்டளையிட்டிருக்கின்றது நீர் அறிந்த விஷயமே தாம் எப்படியாவது மாமா அவர்களிடம் சொல்லி இக் கடூரமான கட்டளையை மீட்டுக்கொள்ளும்படிச் செய்து என்பர்த்தாவுடன் என்னைச் சேர்ப்பிப்பது தம்முடைய கடமை, பாலசூரியன் தன் பிதாவை நினைந்து வருந்தி வருந்திக் குன்றிப் போகின்றான். எப்படியாவது தாங்கள் தயை கூர்ந்து எமக்கிவ்வுதவி செய்யவேண்டும். உம்மை யே நம்பிருக்கின்றேன். நான் உம்மை மிகவும் வேண்டிக் கொள்ளுகின்றேன். நான் உமக்கு மூத்தவளாகையால் உமது பாதத்தில் வீழ்ந்து வேண்டாத குறைதான். (முகத்தை முன்றானையால் மூடித் தேம்பி அழுகிறாள்.)
சௌரி. அம்மணி! வருந்தவேண்டாம். வருந்தவேண்டாம் நான் என்னால் ஆனமட்டும் பிதாவுக்குச் சொல்லிப்பார்த் தேன், அவர் ஒரே பிடிவாதமாயிருக்கின்றார். ஆயினும் தாம் அதைரியப்பட வேண்டாம். நாளாவர்த்தியில் பிதாவினுடைய கோபம் தணியும்; அப்பொழுது நாம் சொல்லுவோமாகில் கேட்பார். இப்பொழுது சொல் வதிற் பயனில்லையென்று தோற்றுகிறதம்மணி.
சௌமா. அப்பா! அதற்கு நான் எத்தனை காலம் கார்க்க வேண்டுமோ! என் பிராணநாதரை விட்டுப்பிரிந்து நான் இங்கெப்படி உயிர் வாழ்ந்திருப்பது? அவர் இப் பொழுது எங்கு உழல்கின்றாரோ! என்ன சங்கடங்களை அனுபவிக்கிறாரோ! என்னுடன் கடைசி முறை சொல்லி விட்டும் போகவில்லையே ! ராஜகுமாரா! மாமா அவர்கள் முன்பிட்ட கட்டளையை மீட்டுக்கொள்ளாமற் போனாற் போகின்றது, எங்களையேன் இவ்வரண்மனையை விட்டுப் போகக்கூடாது என்று காவலிலமைத்திருக்கின்றார்? நாங்கள் என்ன தப்பிதம் செய்தோம் அவருக்கு? அப்பா! குலமகளைத் தன் கொழுன்னிடமிருந்து இவ் வாறு பிரித்துவைப்பது உமக்கு நியாயமென்று தோற்று கின்றதா? இதனால் நமது குலத்திற்கு அபகீர்த்தி வரு மன்றோ? அப்பா! இதையாவது செய்யும். எப்படி யாவது மாமாவைக்கேட்டு நாங்களிருவரும் இவ்வரண் யை விட்டு என் பிராணநாதரிருக்குமிடம் தேடிச்சென்று அவருடனிருக்க உத்திரவு கொடுக்கும்படியாகக் கேளும். இது எங்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்ததாகும். உமக்கு மிகவும் புண்ணியமுண்டு.-
சௌரி. அம்மா அழவேண்டாம். இதற்கு எப்படியும் பிதா இசைவாரென்று நினைக்கிறேன்.இதோ நான் பிதாவிடம் போய் பேசுகின்றேன். இப்பொழுது தமயன் இருக்கு மிடம் உமக்குத் தெரியுமா?
செளமா. தெரியாது. எப்படியாவது சுற்றித் தேடிக் கண்டு பிடிக்கின்றோம்.
சௌரி. பாலசூரியா உனக்குத் தெரியுமா?
பா. ஏன்! உமக்குத் தெரியாது?
சௌரி. தெரியாது!
பா. சிற்றப்பா ! வேண்டாம் கடைசிமுறைச் சொல்கின்றேன். உண்மையை மஹாராஜாவிடம் கூறி என் பிதாவின் மீது அவர் கொண்டிருக்கும் கோபத்தைத் தணியும். இதற் கெல்லாம் நீர் தான் ஏதோ காரணமாயிருக்கின்றீர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் பிதாவின் மீது சிறிதேனும் குற்றமில்லை. வேண்டாம்! வேண் டாம்! எங்களுக்குத் தீமைசெய்து நீர் நன்மையடைய மாட்டீர்! தன் வினை தன்னைச்சுடும். சர்வ சாட்சியாக ஈசனொருவனிருக்கிறான், அவனுக்குப் பொதுவாக நாம் நடக்கவேண்டும். அவனுக்கு நாம் செய்யும் நன்மை தீமையெல்லாம் தெரியும், நம்முடைய செய்கைகளையெல் லாம் வேறொருவரும் அறியாவிட்டாலும் அவனறிவான். அவன் எப்படியும் நம்மை இவ்வுலகத்திலாவது வேறு உலகத்திலாவது தண்டிப்பான். நம்முடைய செய்கை களுக்கெல்லாம் அவனுக்கு நாம் ஒரு காலத்தில் உத்திரவு சொல்லவேண்டி வரும்.
செளரி. அப்பா! நீ சொல்வது எனக்கொன்றும் புலப்பட வில்லையே!
பா. இப்பொழுது புலப்படாது, ஒரு காலம் வரும் அப் பொழுது நன்றாய்ப்புலப்படும்-அம்மணி! நான் முன்பே சொன்னேனே ! இப்பொழுது இங்கு வந்து பேசினதி னால் என்ன பயனைப் பெற்றீர்? எல்லாம் நம்முடைய விதியின்படி ஆகின்றது.நாம் இந்த சங்கடங்களையெல் லாம் அனுபவிக்கவேண்டுமென்று பிராப்தமிருந்தால் அது நம்மைவிடுமோ! இவர்களையெல்லாம் வேண்டுவதி னால் என்ன பிரயோஜனம்? நம்முடைய விதியை மாற்ற இவர்களால் முடியுமோ? இல்லை நாம் சீக்கிரத்தில் சுகமடைவோ மென்று நம்முடைய தலையில் எழுதியிருந் தால் அதைத் தடுக்க இவர்களால் முடியுமோ? எல்லாம் ஈசன்செயல். அவனாலன்றி பேதை மனிதர்களால் என்ன முடியும்? அவனை நம்பி அவனேகதியென்றிருக்க வேண் டும். அவனைவிட நம்முடைய ஆபத்துகளில் நமக்கு உதவுவார் ஒருவருளரோ ? நாம் திரிகரண சுத்தியா யிருக்க வேண்டும், மற்றவைகளெல்லாம் அவன் செயலேயென்று நன்மை நேர்ந்த போதிலும் தீமை நேர்ந்த போதிலும் யாதும் அவன் திருவுள்ளமென்று பொறுத்திருக்க வேண்டும். குற்றமற்ற மனமுடையவ ராய் அவனை நம்பினவர்களுக்கு அவன் உதவிசெய்யாமற் போகமாட்டான், தீமை செய்பவர்களைத் தண்டியா மலும் போகமாட்டான். தன்வினை தன்னைச் சுடாமற் போகாது; வாரும் போவோம்; இங்கு நாமினி இருப் பானேன்? இவரை வேண்டுவதை விட சுவாமியைத் துதித்தாலும் சற்றுப் பிரயோஜன முண்டு. சிற்றப்பா ! தன்வினை தன்னைச்சுடும், மறவாதீர் அதனை (சௌமாலினி யை அழைத்துக்கொண்டு போகிறான்.)
சௌரி. தன்வினை தன்னைச்சுடும்! சுட்டபொழுது பார்த்துக் கொள்ளுவோம். இந்த பாலசூரியன் ஏதோ சந்தேகிக் கிறான் – ஆயினும் இவனுக்கு உண்மை தெரியப்போகின் றதா? அதில்லை ! – உம்! – இவனுக்கு நாம் சீக்கிரம் வழி தேடவேண்டும். பாலசூரியா ! இரண்டு முறை தப்பினாய், மூன்றாம் முறையும் தப்பித்துக் கொள்ளுகின்றாயோ பார்ப்போம்!
சுசங்கதை வருகிறாள்.
சுசங்கதா! நீயும் வந்தாயா! என்ன சமாசாரம்? இப்பொழுது சௌமாலினியும் பாலசூரியனும் இங்கு வந்திருந்தார்களா ?
சௌரி. ஆம், வந்திருந்தார்கள்.
சு. என்ன கேட்டார்கள் உன்னை?
சௌரி. அரண்மனையை விட்டு வெளியேபோகவேண்டுமாம்.
சு. அதற்கு நீ என்ன சொன்னாய்?
சௌரி. நான் என்ன சொல்வது? உனக்குத்தான் தெரியுமே!
சு. சீ! சீ! அப்படியல்ல. அவர்கள் என்னிடமும் முறை யிட்டார்கள்; அதைக் கேட்கவே நானும் இங்கு வந் தேன். அப்பா! உன் எண்ணத்தைத்தான் நிறைவேற் றிக் கொண்டாயே! ஏமாங்கதனைக் கொல்லாவிட் டாலும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டாய். எப்படியும் பிதாவின் பிற்காலம் உனக்குத்தான் பட்டம் கிடைக்கப் போகின்றது. இனிமேல் அனாதியான சௌமாலினியை யும் பாலசூரியனையும் நீவருத்துவானேன்? பெண்ணென் றும் பார்க்கவேண்டாமா? அதிலும் பூரண கர்ப்பிணி, எட்டு மாதம்! இந்த துக்கத்தில் அக்கருவுக்கு ஏதாவது கெடுதி நேரிட்டாலும் நேரிடும். அவளிஷ்டப்படி அவளை அனுப்பிவிடுகின்றதுதானே?
சௌரி. நான் என்ன செய்வது ?
நீ என்ன செய்வது! ஐயோ பாவம்! நீ தானே அம் மாளிடம் கூறி பிதாவுக்குப் போதிக்கச் செய்து அவர் களை அரண்மனையை விட்டு வெளியே போகாதபடி காவலிலிருக்கச் செய்தாய். நீ இப்பொழுது இஷ்டப் பட்டால் முடியாமற்போகுமா இக்காரியம்?
சௌரி. ஆமாம், பூரணகர்ப்பிணி ஆயிற்றே இப்பொழுதெங் கே வெளியிற் செல்வது ?
சு. அதெற்கெல்லாம் நான் தக்க ஏற்பாடு செய்கின்றேன்; என்ன அப்பா, பழி பாவத்திற்கஞ்ச வேண்டாமா? உனக்கொரு குற்றமும் செய்யாத ஒரு பேதை மனதை நீ நோகச் செய்யலாமா? வேண்டாம்- என்ன சொல்லுகின்றாய்?
சௌரி. சுசங்கதா, பூரணகர்ப்பிணி வெளியிற் செல்லக் கூடாது. இங்கேயே இருப்பாளாகில் சீக்கிரம் அவ ளுடைய தொந்தரவையெல்லாம் நீக்கிவிடுகின்றேன்.
சு. சீ! சீ! பாதகா! இதுவரையில் நீ செய்த துர்நடத்தை யெல்லாம் போதாதா ? ஒரு பெண் கொலையும் வேண்டுமா? இப்படியா எண்ணியிருக்கின்றாய்? இப்பொழுது நான் பிதாவிடம் சென்று எல்லா உண்மையையும் கூறுகின்றேன்.
சௌரி. என்ன என்ன! சுசங்கதா! நில் போகாதே!
சு. தொடாதே என்னை ! நான் பொறுத்ததெல்லாம் போதும். நியாயமனியாயமில்லையா! இதோ போய் சொல்லுகின்றேன். அப்படியா சமாசாரம்!
சௌரி. சுசுங்கதா ! நான் இறந்து பிணமாய்க்கிடப்பதைப் பார்த்து சந்தோஷிக்க வேண்டுமென்றிருந்தால் னிஷ்டப்படி செய். நீ பிதாவிடம் கூறுவாயாயின் அவர் என்னை எப்படியும் கொன்றுவிடும்படி கட்டளையிடுவார். அதைக்காண நீ விரும்புவாயாயின் போ, போ, போ.
சு. (கண்ணீருடன்) அட பாபி ! எப்பொழுது பார்த்தாலும் இந்த இழவு ஒ கூறிக் கூறித்தானே காலத்தைக் கழித்து வருகின்றாய். நீ எக்கேடு கெட்டாவது போ. உயிருக்கே உலை தேடுகின்றாயேயொழிய வேறொன்றுமில்லை. ஆயினும்சௌமாலினிக்கு நீ ஏதாவது கெடுதி நினைப்பாயாயின் உடனே நான் பிதாவிடம் எல் லா உண்மையையும் கூறிவிடுவேன். அதற்குச் சந்தேக மில்லை. என்ன சொல்லுகின்றாய்? – உன்னிடம் இங்கு பேசிக்கொண்டிருப்பதை விட அவளிடம் போய் அவ ளுக்குத் தேறுதல் சொல்லினாலும் சிறிது புண்ணிய முண்டு. நான் சொன்னது மாத்திரம் நன்றாய் ஞாபக மிருக்கட்டும். (போகிறாள்)
சௌரி. இதென்ன இழவு! தொந்தரவின் மீது தொந்தரவாய் வருகின்றது! இந்த சங்கடத்திற்கென்ன செய்வது?- (மேஜையின் மீது வைத்திருக்கும் மணி அடிக்கிறது) அப்பா! ஏமாங்கதன் இறந்தான்! (விரைந்து எழுந்திருக்கின்றான்.)
பலாயனன் விரைந்து வருகின்றான்.
சௌரி. இறந்தானா ஏமாங்கதன்?
ப. பிறந்தான் ஏமாங்கதன்! தப்பித்துக்கொண்டான்!
சௌரி. ஆ! தப்பித்துக்கொண்டானா?
ப. ஆம்! புலியூர்வரையில் சங்கனும் விடங்கனும் பின் தொடர்ந்து சென்றார்களாம்; அங்கே சாயங்காலம் ஒரு குடியானவன் வீட்டில் நுழையக்கண்டு அன்றிரவு கொன்றுவிடத் தீர்மானித்து இருட்டியவுடன் உள்ளே சென்று பார்க்க, இதற்குள் எங்கேயோ போய்விட்டா னாம். பிறகு எங்குதேடியும் அவன் சென்ற வழி தெரி யாது திரும்பி வந்துவிட்டனர்.
சௌரி. கழுதைகள்! சும்மாவாகவா திரும்பி வந்துவிட்டார். கள் ? அக்குடியானவனைப் பிடித்துக் கேட்கின்றது தானே ?
ப. கேட்டார்களாம், அவன் ஒன்றும் தெரியாதென்கிறானாம் என்ன பயமுறுத்தியும்.
சௌரி. ஒருவேளை புலியூருக்கடுத்த தூமகாரண்யத்திற்குப் போய் ஒளிந்திருந்தாலு மிருக்கலாம். பலாயனா! அந்தக் கழுதைகளை உடனே புறப்பட்டு மாறுவேடம் பூண்டு தூமகாரண்யத்திற் போய்த்தேடச் செய். ஏமாங்கத னைக் கொன்றாலொழிய திரும்பிவரக்கூடாதென்று நான் கட்டளையிட்டதாகச் சொல். அப்படித் திரும்பிவந்தால் என்ன கதி என்று அவர்களுக்கே தெரியும். உடனே புறப்படச்சொல் சீக்கிரம்.
ப. இதோ சொல்லுகின்றேன்-ஆயினும் அப்படியே-விட்டு விட்டால்? பாவம் இனி அவன் நம்மை என்ன செய்யக் கூடும்? நம்முடைய காரியமோ நிறைவேறி விட்டது!
சௌரி. அப்படியல்ல! நான் சொன்னபடி செய் – பலாயனா என்ன உனது வலது கையில்?
ப. ஏதோ நேற்றைத்தினம் சாயங்கால முதல் இருந்திருந்து அங்கே ஒருவித வலிகாண்கின்றது.
சௌரி. அது ஒன்றுமில்லை நீ சீக்கிரம்போ. (பலாயனன் போகி றான்) நாம் கொடுத்தது தன் சொரூபத்தைக் காட்ட வாரம்பித்து விட்டாற்போலிருக்கிறது ! அதிருக்கட்டும், இதென்ன பெரும் சங்கடம்! ஏமாங்கதன் தப்பித்துக் கொண்டானாமே! இனி நான் மிகவும் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இப்பொழுது நான் கொஞ்சம் அஜாக்கிரதையா யிருப்பேனாயின் எல்லாம் கெட்டுப் போம். ஏமாங்கதன் எப்படியும் தன்னுடைய பெண்டு பிள்ளைகளைப் பெறவிரும்புவான். அவர்கள் அவனிடம் போய்ச்சேர்ந்து விடுவார்களாயின் பிறகு நமக்குக் கஷ் டம். ஆதலால் சௌமாலினியையும் பாலசூரியனையும் சிறையிலிட்டு வைக்கும்படி பிதாவுக்குப் போதிக்க அனுசூயாதேவியை ஏவ்வேண்டும். அந்த மட்டும் எனது மனதுக்கிசைந்த தாயார் கிடைத்தது என் பாக்கியமே! நான் இனி காலத்தை வீணிற்கழிக்கலாகாது. ஒவ்வொரு க்ஷணமும் எனக்குபயோகப்படும்: (போகிறான்.)
காட்சி முடிகிறது.
மூன்றாவது காட்சி
இடம்:- ராஜ வீதியில் ஒரு வீடு. வீதியில் ஜெயபாலன் மாறுவேடம் பூண்டு வருகிறான்.
ஜெ.[தனக்குள்) இவ் வீதியைக் காணுங்கால் என் மனதில் என்னென்ன ஞாபகங்கள் வருகின்றன! ஹா! [பெருமூச்சு விடுகிறான்] நாம் வந்த வேலையை பார்ப்போம். அவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்து பயனென்ன? அந்த புத்தி அப்போதே இருக்கவேண்டும் – இப்படியாவது இவனைக் கைவசப்படுத்த வேண்டும். ஆயினும் இவன் சௌரியகுமாரனிடம் மிகவும் அன்யோன்யமாயிருக்கின்றான். அவனுடைய துர்ச் செய்கைகள் இவனுக்குத் தெரிந்திருந்தாலுமிருக்கும். இவனை நம்முடைய வசப்படுத்துவதெப்படி?- ஆயினும் பார்ப்போம் [பலாயனன் வீட்டு வாயிலெதிரில் வந்து நிற்கிறான்,]
தா.யார் ஐயா அது?
தாரகன் வருகிறான்.
ஜெ. அப்பா,நான் ஒரு ஜோசியன். நாகர்கோயிலினின்றும் உம்முடைய எஜமானனைப் பார்க்க வந்திருக்கின்றேன். இப்போழுது பார்க்கச் சந்தர்ப்பப்படுமா?
தா.ஏன் ஐயா ! இப்பொழுது சந்தப்பப்படுமா படாதா என்றே ஜோசியம் பார்த்துக்கொண்டு வருகிறதுதானே?
ஜெ. பார்க்கலாம் எனத்தோற்றுகின்றது.
தா. பார்க்கமுடியாது எனத்தோற்றுகின்றது! அவருக்கு இப்பொழுது உடம்பு சவுக்கியமில்லை; ஆயினும் நான் சொல்லிப் பார்க்கிறேன்.(வீட்டுக்குள்ளே போகிறான்.]
ஜெ.[தனக்குள்] நன்றாகக் கேட்டான் புத்திசாலி! ஜோசியர் களுடைய விபத்து இதுதான்.
சூடாமணியும் தாரகனும் வருகிறார்கள்.
தா. மருந்துசாப்பிடுகிறார். இதோவருவதாகக்கூறினார். தாம் இப்படி உட்கார்ந்திரும் [ஓர் ஆசனம்கொடுத்து விட்டு உள்ளே போகிறான்.]
சூ. தாங்கள் தான் நாகர்கோயில் சோசியர் போலிருக்கின்றது?
ஜெ. ஆமாம். [ஒரு புறமாய்] அட்டா! இவனா!
சூ. தங்களை எங்கேயோ இதற்கு முன்பாகப் பார்த்திருக்கின்றாற் போலிருக்கின்றது?
ஜெ. இருக்கலாம், எனக்கும் தங்களை எங்கேயோ இதற்கு முன்பாகப் பார்த்த ஞாபகமாயிருக்கின்றது.
சூ. ஓ! ஒருவேளை முன்பு அட்சய வருஷத்துக் கருப்பில் எளிய வர்க்கெல்லாம் ஆயிரம் ஆயிரமாக தானங் கொடுத்தேனே அப்பொழுது பார்த்திருக்கலாம்.
ஜெ. இருக்கலாம். [ஒருபுறமாய்] ஆரம்பித்தாயா?
சூ. அப்படிதருக்கும். இப்பொழுது என்னை அடையாளம் கண்டு பிடித்தல் கஷ்டமாயிருக்கின்றாற் போலிருக்கிறது! சகஜந்தான். அப்பொழுது நான் போட்டுக் கொண்டிருந்த வைரக் கடுக்கன் பச்சைக்கல் முருகு முத்து மாலை மோகனமாலை வீர வண்டாயம் முதலியன வெல்லா மில்லாதிருக்கின்றேனல்லவா!
ஜெ.ஆமாம் – பிரபுவுக்கு என்னவுடம்பு? –
சூ. ஏதோ உடம்பில் வலியாயிருக்கிறதாம் – என் சிறு விரலில் ஒரு பதினாயிரத்து முன்னூற்று எழுபத்து மூன்று வராகன் பெறும்படியான ஒரு கெம்புமோதிரம் போட்டுக் கொண்டிருந்தேனே தங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா, இந்தபொன் மோதிரம் இருக்குமிடத்தில்?
ஜெ. ஆமாம் ஞாபகமிருக்கின்றது – பிரபுவுக்கு என்ன வலி என்று கூறினீர்?
சூ. இருந்திருந்து கையில் ஒரு விதமானவலி யொன்றுண்டா கின்றதாம் – உமக்குமாத்திரம் ஒருசமாசாரம் கூறுகிறேன் அதை ஒருவரிடமும் கூறவேண்டாம். அந்த மோதிரத்தை ஒரு இரவு ஒருவருமறியாதபடி மகாராஜா என் வீட்டிற்கு வந்து மிகவும் வேண்டிக்கொண்டார். அவர் என்ன அதற்கு விலை கொடுக்கப் போகின்றாரா என்று தானமாகக் கொடுத்து-விட்டேன்.
ஜெ. மிகவும் சந்தோஷம்! – எந்தக்கையில் நோகின்றதாம்?
சூ. வலதுகையில் அப்புறம் – என்ன ஆச்சரியப்படுகின்றீர்? என் கையில் நான் அப்போது போட்டுக் கொண்டிருந்த காப்பும் கொலுசும் எங்கே காணோமே என்று யோசிக்கின்றீரோ? அதைச் சென்ற பொங்கல் பண்டிகையில் என்னுடைய அம்பட்டனுக்குக் கொடுத்து விட்டேன்.
ஜெ. அப்படித்தான் செய்யவேண்டும். மகாப்பிரபு, தமக் கென்ன குறைவு! – இவருக்கு என்று முதல் இந்நோ யுண்டா யிருக்கின்றது? சூ. இரண்டுதினங்களாக இருக்கின்றதாம் – அதிருக்கட்டும் தங்களைநான் ஒருஜோசியம் கேண்டும். பத்து வருடத்துக்கு முன் ஒருஜோசியர் சீக்கிரம் எனக்கு எண் பதுகோடி பொன் புதையலில் கிடைக்கும் என்று கூறி விட்டுப்போனார். இதைச் சொன்னதற்காக அவருக்கு நான் ஆயிரம் பொன்கொடுத்தேன். அந்தப் புதையல் எனக்கு எங்கே கிடைக்கு மென்று தாங்கள் ஜோசியம் பார்த்துச் சொல்லவேண்டும். உமக்கும் ஏதாவது தருகிறேன்.
ஜெ. இவ்வளவு சீக்கிரத்தில் கூறமுடியுமா? நான் தங்களு டைய கிரகத்திற்கு நாளைத்தினம் காலைவருகின்றேன், அப்பொழுது எல்லாம் பார்த்துக் கூறுகின்றேன்.
சூ. ஆம்! அதுதான் சரி, நான்வருகின்றேன் மறக்கவேண் டாம். என்மாளிகை தெரியுமே உமக்கு? பக்கத்து வீதியில் வாசற்படி இடிந்தவீடு நம்முடையது. பாருங் கள்! நாம் எத்தனை முறை அதைச் சரிப்படுத்தியும் தினம் அநேக யாசகர்கள் வந்து நுழைவதினால் எல்லாம் இடிந்து போகின்றது நம்முடைய வீட்டில். நான் வருகின்றேன். (போகிறான்]
ஜெ. அப்படியே – இப்படியும் ஒரு – ஒரு ஜன்மமிருக்குமா! சந்தோஷம்! இவனே நமது மாறுவேடத்தைக் கண்டு பிடிக்கா விட்டால் வேறுயார் கண்டுபிடிக்கப்போகிறார் கள் அதிருக்கட்டும், இதென்ன! எனக்கேதோ புத்தி யில் ஒரு சந்தேகம் தோன்றுகின்றது – இப்படி யிருக்குமா? ஆயினும் என் புத்தியிற்படுவது இதுவரை யிலும் பொய்த்ததில்லை. பலாயனனுக்கு ஏன் அதைக் கொடுக்கவேண்டும்? ஒருவேளை இருவரும் சச்சரவிட்டுக் கொண்டார்களா? எல்லாம் கேரிற்கண்டால் தெரிய வருகின்றது – ஹா ! ஹா! இவ்வளவு பாபத்திற்கும் ஆதிகர்த்தா நான்தானே!
பலாயனன் வருகிறான்.
ப. வாருங்கள் உட்காருங்கள்.
ஜெ. (ஒருபுறமாய்) சரி தான்! சந்தேகமில்லை. நான்காவது ஐயோ பாவம்- இன்னும் எத்தனைபெயருக்குத்தான் கொடுத்திருக்கின்றானோ! நாம் வந்த வேலை நிறைவேறி விட்டது!
ப. தாங்கள் எப்போது நாகர்கோயிலினின்றும் வந்தீர்? இங்கு இதுவரையில் வேறுயாரையாவது பார்த்தீங்களா?
ஜெ.நேற்றைத்தினம் சாயங்காலம் நான் இங்குவந்தேன். தங்களை முதலில் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று தம்மிடம் வந்தேன்.
ப. சந்தோஷம் – முதலியேயே உங்களுக்கு ஒரு விஷயம் கூறி விடுகின்றேன். பொழுது நான் சிறுவயதாயிருக்கும் ஜோசியத்தில் மிகவும் நம்பியிருந்தேன், வரவர எனக்கு அந்நம்பிக்கை குறைந்துகொண்டே வருகின்றது.
ஜெ. அப்படியல்ல, அதில் ஏதாவது உண்மையிராமற் போகாது.
ப. அப்படியா! – நீர் இன்னும் எத்தனை வருஷம் உயிரோடிருப்பீர் சொல்லும்?
ஜெ. சாதாரணமாக மனிதனுடைய ஆயுளைப்பற்றி மாத்திரம் ஜோசியம் பார்த்துக் கூறக்கூடாது என்று ஒரு பிரமாணமுண்டு, ஆயினும் என்னாயுளைக் கூறத்தடையில்லை. நான் இன்னும் இருபத்தாறு நாளைக்குள் இறக்க வேண்டு மென்று தோற்றுகின்றது.
ப. என்ன! அது ஏனப்படி? உமக்கென்ன உடம்பு?
ஜெ. உடம்பொன்றுமில்லை, அது என் தலைவிதி?
ப. என்ன! தற்கொலை புரியப்போகின்றீரா என்ன?
ஜெ.இல்லை, என் தலைவிதி அது.
ப. என்ன ஆச்சரியம்! நான் இன்னும் எத்தனை வருடங்கள் உயிரோடிருப்பேன் சொல்லும்?
ஜெ. ஐயா! நான் முன்பே கூறினேனே இதை மாத்திரம் தாங்கள் கேட்கலாகாது. எப்படியிருக்குமோ, ஒரு வேளை ஏதாவது கெடுதியாயிருந்தால் பிறகு நான் பொய் பேச வேண்டிவரும்.
ப. அப்படியல்ல. எப்படியிருந்த போதிலும் உண்மையைக் கூறும். நான் இதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல. எத்தனை காலமிருந்த போதிலும் நாமெல்லாம் ஒருநாள் இறக்க வேண்டியதுதானே; என்னுடைய ஜாதகத்தைக் கொண்டு வரவா?
ஜெ. வேண்டாம். நான் முகத்தைப்பார்த்துக் கூறுவது வழக்கம். தாங்கள் சற்று தயை செய்து என் எதிராக நில்லுங்கள் (பலாயனன்எழுந்து நிற்க ஜெயபாலன் அவன் நாடியைப் பரி சோதிக்கிறான்) சரி!-உட்காரலாம். நான் உமக்கு இன்னொரு வேளை கூறுகிறேன் – மன்னிக்கவேண்டும்.- நான் வருகின்றேன்.
ப. (ஜெயபாலன் கையைப்பிடித்துக்கொண்டு) இதென்ன! நில்லும். ஐயா என்ன சமாசாரம் ? நீர் ஏதோ என்னிடம் கூற இஷ்டமில்லாது இவ்வாறு போக்குச் சொல்லுகின்றாற் போலிருக்கின்றதே!
ஜெ. உமக்கு நான் இதைக்கூறாதிருத்தலே நலம். இதைவிட வேறு எதையாவது கேளும்.
ப. அப்படியல்ல, நான் பயங்காளியன்று; நீர் சும்மாசொல்லும். என்னுடைய வேண்டுகோளைத் தாம் மறுப்பது நியாயமன்று.
ஜெ. நான் கூறுகின்றேன், பிறகு என்னைப் பழிக்க வேண்டாம். இன்றைத்தினம் இருபத்தைந்தாநாள் தாம் இறக்கப் போகின்றீர்! நான் வருகின்றேன்.
ப. ஐயா! ஐயா! போகவேண்டாம். சுவாமி! இதனுண்மையைத் தாங்கள் எனக்குக் கூறிவிட்டே போகவேண்டும் – அது ஏன் அப்படிக்கூறினீர்?
ஜெ. மிகவும் ஐயா! இன்னும் நீர் கேட்பீராயின் உமக்கு வருத்த முண்டாகும், வேண்டாம்.
ப. அப்படியல்ல எப்படியும் தாங்கள் சொல்லவேண்டும் இதற்குள்ளாக நான் எப்படி இறக்கவேண்டி வரும்?
ஜெ.பலாயனரே ! இப்பொழுது உமது வலதுகையில் நோயெடுக்கவில்லையா?
ப. ஆம்.
ஜெ. அது எதனால் என்று நினைக்கின்றீர்?
ப. எனக்குத் தெரியவில்லை. இதைக்கொண்டா நான் சீக்கிரம் இறக்கப்போகின்றேன் என்று கூறிவிட்டீர்?
ஜெ. உம்முடைய வீட்டில் ஏதாவது நாய் இருக்கின்றதா?
ப. இருக்கின்றது.
ஜெ. உம்முடைய வலதுகையில் எங்காவது கீறி இரண்டு மூன்று துளி இரத்தமெடுத்து அந்நாய்க்கிட்டுப் பாரும். அப்புறம் சொல்லுகின்றேன்.
ப. இதென்ன ஆச்சரியம்! அடே! அவன் பெயரென்ன? தாரகா (உள்ளே இருந்து தாரகன் சுவாமி ! என்கிறான்) நம்முடைய நாயெங்கே இருக்கின்றது?
தா. (உள்ளேயிருந்து) இதோ உள்ளே தூங்கிக்கொண்டு இருக்கின்றது.
ப. இதோ நான் வருகின்றேன். தாங்கள் சற்றுப்போகாதிருக்க வேண்டும். (உள்ளே போகிறான்)
ஜெ. இருக்கின்றேன் – நீ போ என்றாலும் நான் இனி போக மாட்டேனப்பா! இவனுக்கு நாம் நம்முடைய விர்த்தாந்தத்தை வெளியிடாது சௌரிய அடைய செய்கையை யெல்லாஞ் சொல்லி, அவன் இவனுக்குக் கொடுத்த விஷத்தினின்றும் நாம் இவனைத் தப்புவிக்க முயலுவதாகக் கூறி நமது கைவசப்படுத்த வேண்டும்.
தாரகன் விரைந்தோடி வருகிறான்
தா. ஐயா! உம்மை ஐயா சீக்கிரம் அழைத்து வரும்படியாகக் கூறினார்.
ஜெ. அப்பா, என்ன சமாசாரம்?
தா. என்னமோ எனக்கொன்றும் தெரியாது. எங்கள்நாய்க்கு என்னமோ கொடுத்தார்; அது வலது பக்கமெல்லாம் ஒரு வலி கண்டு இழுத்துக்கொண்டிருக்கின்றது. ஐயா திக்பிரமை கொண்டவர் போலிருக்கின்றார். சீக்கிரம் போம், (ஜெயபாலன் உள்ளே போகிறான்.)
தா. இது என்னடா இது! இந்த ஜோசியர்தான் என்னமோ சொன்னாற் போலிருக்கின்றது. அந்த நாய்க்கு ஐயா என்னமோ தின்னக் கொடுத்தார். உடனே நம்முடைய ஐயாவுக்கு கையில் வலிக்கின்றது போலல்லவோ அதற்கும் வலிக்கின்றது! என்னவோ சமாசாரம் தெரிய வில்லை! ஐயாவும் என்னை அப்புறம் போயிரு என்று கூறினார்! (உட்காருகிறான்.)
விடங்கன் சந்நியாசி வேடம் பூண்டு வருகிறான்.
தா. யார் ஐயா அது? நீரும் ஒரு ஜோசியரோ?
வி. இல்லை அப்பா, நான் ஒரு சந்நியாசி. உம்முடைய எஜமானனை நான் பார்க்கவேண்டும்.
தா. அதெல்லாம் இப்பொழுது, பார்க்கமுடியாது – ஒரு நாய் போதும் அந்த மட்டும்.
வி. தாரகா! உன்னாலும் என்னைக் கண்டுபிடிக்க முடிய வில்லை அல்லவா!
தா. விடங்கா! இந்த வேஷமென்னடா?
வி. அதெல்லாமிருக்கட்டும் எனக்கிப்பொழுது நேரமில்லை. பலாயனரிடம் நாங்கள் அவர் சொன்னபடி புறப்பட்டு விட்டோம் என்றும், எப்படியும் வேலை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றோமென்றும் கூறிவிடு. (போகிறான்)
தா. சரி ஏமாங்கதராஜன தப்பித்துக்கொண்டார் என்று பார்த்தேன், மறுபடியும் வழி வைத்தீர்களா!
ஜெயபாலனும் பலாயனனும் வருகிறார்கள்.
தா. ஐயா, விடங்கன் இங்குவந்து தாம் சொல்லிய வேலையைச் செய்யப் புறப்பட்டு விட்டதாகக் கூறும்படி சொல்லிவிட்டுப் போனான்.
ப. சரிதான், நீ போ உள்ளே. (தாரகன் உள்ளே போகிறான்) ஐயா! இப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லையே, நான் அவனுக்காக எவ்வளவு பாடு பட்டேன் அதையாவது இப்பொழு தெல்லாம் விளங்குகின்றது. ஆஹா! சிநேகிதன் என்றும் பாராமல் எனக்கு விஷம் கொடுத்த அவனை நான் சும்மா விட்டேனா! ஐயா – இதற்கு மாற்றொன்று மில்லையா! என்னுடைய ஆஸ்தியெல்லாம் உமக்குத் தரு கிறேன் இதை மாத்திரம் கண்டறிந்து கூறுமே!
ஜெ. அப்பா! நான் தான் முன்பே கூறினேனே ! என்னால் கூடியமட்டும் பிரயத்தனப்பட்டு அந்த மூலிகையை தேடிப் பிடித்து உனக்குத் தருகின்றேன். ஆயினும் நீ நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். செய்கிறபட்சத்தில் எப்படியும் உனக்கு அதைக் கண்டெடுத்துத் தருகிறேன்.
ப. அப்படியே செய்கின்றேன், எப்படியாவது நான் பிழைத்தாற் போதும்.
ஜெ. ஆனால் நீ இவ்விஷயங்களை யெல்லாம் பற்றி சௌரிய குமாரனுடன் ஒன்றும் கூறலாகாது. அவனுக்கு நீ ஒரு தீங்கும் செய்யலாகாது. நான் உனக்கு உத்தரவு கொடுக் கும்வரையில் முன்பிருந்தது போலவே அவனுடன் அன் யோன்யமாயிருப்பதுபோல் நடித்து வரவேண்டும். நான் சீக்கிரம் உனக்கு ஏதாவது எழுதியனுப்புவேன். அதன்படியே யே செய்யவேண்டும். என் கட்டளையின்படி மா நீ நடந்துவருவாயாயின் உனக்கு எப்படியும் நான் உதவிசெய்கின்றேன் நீ வேண்டியபடி.
ப. அப்படியே செய்கின்றேன்,நீர் மாத்திரம் என்னுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் ஏமாங்கத் ராஜன் எங்கிருக்கின்றான் என்று கூறினீர்?
ஜெ. நான் உனக்கு அதைக் கூறவில்லையே. அவர் உயிருடன் இருக்கிறார் என்றுமாத்திரம் கூறினேன். அதையேன் கேட்கின்றாய்?
ப. உமக்கொன்றும் தெரியாது அப்பாதகன் சௌரியகுமாரனுடைய வேலை யெல்லாம். இப்து அவர் தூம் கரண்யத்திற்றான் ஒளித்திருப்பாரென்றும் அங்கு போய் எப்படியாவது அவரைக் கொன்று விட்டே வர வேண்டுமென்றும் இரண்டு கொலையாளிகளை ஏவியிருக்கின்றான். அவர்கள் அவ்வேலைக்காகப் புறப்பட்டு விட்டார்கள். என்னுடைய வேலைக்காரன் சற்றுமுன்பாகக் கூறியதைக் கேட்கவில்லையா தாம்?
ஜெ. அப்படியா சமாசாரம்? ஐயோ!- அப்பா பலாயனா சிநேகிதன் என்றும் பாராமல் உனக்கு விஷம் கொடுத் திருக்கின்ற சௌரியகுமாரனைத் தண்டித்து ஏமாங்கத ராஜனுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று உனக்கு உண் மையில் இஷ்டமிருக்குமாயின் உடனே ஏமாங்கதருக்கு இக்கொலையாளிகளின் விவரத்தையெல்லாம் கூறி ஜாக் கிரதையாயிருக்கும்படியாக ஒரு நிரூபமெழுதி என்னிடம் கொடு. நான் அதை அவருக்குக் கொடுக்கின்றேன்.
ப. இதோ அப்படியே செய்கின்றேன். அக்கொலையாளிகளில் சன்யாசி வேடமும் ஒருவன சன்யாசிவேடமும் மற்றொருவன் ஒரு வியாபாரியின் வேடமும் பூண்டிருப்பான்; நான் எல்லாவற்றையும் எழுதி இதோ தருகின்றேன்.
ஜெ. அப்படியல்ல ஒரு நிருபம் எழுதி அதை உனக்குப் பூரண நம்பிக்கையுள் ஒரு சேவகனிடம் கொடுத்து தூமகா ரண்யத்திற்கு சீக்கிரம் எடுத்துக்கொண்டு போகும்படி சொல், அவன் அங்கு சென்றவுடன் யாராவது வந்து அவனை யார் என்று கேட்டால் “சாம்பிணம் என்று கூறி ஏமாங்கத ராஜனுக்கு ஒரு நிருபம் கொடுக்க வேண் டுமென்று சொல்வானாயின், அந்நிருபம் ஏமாங்கதனிடம் போய்ச்சேரும். பலாயனா! உன் உயிரின்மீது உனக்கா சையிருக்குமாயின் நான் சொன்னபடி செய். சீக்கிரம்.
ப. அப்படியே செய்கின்றேன் இதோ.
ஜெ.சீக்கிரம். நான் போய்வருகின்றேன். நான் கூறியதெல் லாம் ஞாபகமிருக்கட்டும். நீ அணுவளவு பிசகினால் நான் ஜோசியத்தினால் கண்டறிவேன் பிறகு உன்கதி-
ப. ஐயனே! நீர் என்னை எப்படி வேண்டுமென்றாலும் பரி சோதித்துப் பாரும். நீர் கூறியதுமாத்திரம் ஞாபக மிருக்கட்டும், என்னை எப்படியாவது காப்பாற்றவேண் டும். (வீட்டிற்குள்ளே போகிறான்)
ஜெ. இதென்ன ஒன்றொன்றாய் முளைக்கின்றதே! நான் சீக்கி ரம் தூமகாரண்யம் போகவேண்டும். பலாய னனை நன்றாய் நம்பலாமெனத் தோற்றுகின்றது. இந் நிருபம் போய்ச் சேருமுன் எல்லாம் கெட்டுவிட்டால்! நானும் சீக்கிரம் சென்று ஏமாங்கதனைப் பார்க்கவேண் டும், இங்கு என்வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு, சௌரியகுமாரன் நாம் எண்ணியதற்கு மேலாகத் தானி ருக்கின்றான்.ஆயினும் நான் உயிருடன் இருக்குமளவும் (போகிறான்)
காட்சி முடிகிறது.
நான்காவது காட்சி
இடம்: தூமகாரண்யத்திலோர் மலைக்குகை. காயி முதலிய கள்வரெல்லோரும் வருகிறார்கள். வயத்தான் ஒரு மூலையில் படுத்துறங்குகின்றான்.
கா. அடே! இதோ படுத்துகுனு தூங்கராண்டா – இத்தனி நாழி தேடினமே!
அ. எழுப்புடா அவனே எழுப்பு! இன்னும் என்னடா தூக்கம்?
கோ. அடெ! வவுத்தா! எழுந்திரடா எழுந்திரு. பொழுது விடிஞ்சி போச்சிடா.
வ. அடேசத்! நான் தூங்குரேண்டா எழுப்பாதைங்கோ.
அ. அடே எழுந்திரடா அண்ணா! இண்ணைக்கி சீக்கிரம் காலமே போயிவேட்டையாடி சாமிக்கு திண்ரத்துக்கு என்னமான புடிச்சிகினு வந்தூட்டு அப்புறம் நம்ப வேலைக்குப் போகணு மிண்ணு நாயனார் சொன்னானே கேக்கலே ? அடே!- கோஸ்கி ! இவன் எழுந்திருக்கிறதா காணோ! ரேத்துநாலாடுதிண்ணானே எழுந்திருப்பானோ இப்பொ!
கா.அடே, ஏண்டா பொய்பேசரே நாலாடு ஒருத்தன் திண்ணு வானாடா!
அ. அடே! நாலுகாலு இவன் பக்கத்திலே இருந்துது. கா. அதுவும் பொய், ஒ இருந்துது? அ. நாலுகாலு ஒண்ணுதானேடா பின்னே?
வ. அடே! சத்! வளவள இண்ணு கூச்சபோட்டுகினு! போங்கோ நான் வல்லெபோங்கோ!
அ. அடே கோஸ்கி ! (ஒருபுறமாக) இவனை எழுப்பிரத்துக்கு நான் ஒருவழி சொல்ரேன் பார் (உறக்க) அடே! காயி ! ஏதுடா இந்த மான்கறி? சாமிக்கிவச்சி இருந்துதே அத்தையா தூக்கிகினு வந்தூட்டே? கொண்டா இப்படி.
வ. (விரைவில் எழுந்து) எதோடா மான்கறி எதோ? எதோ?
அ. பாத்தியா எழுந்தான்!
வ. அடே அந்தர்டப்பு! பொய்யாபேசனே? எனக்கு தூக்கம் வருதுபோ (மறுபடியும் தூங்கப் பார்க்கிறான்.)
கா. (அவனைத் தடுத்து) அடே! சத் இன்னம் என்னா தூக்கம்? வாடா வேட்டையாடப் போகணும். வேட்டையாடி மானே இண்ணா அப்புறம் தின்னலாம் வா. புடிச்ச சீக்கிரம் போவோம் வா. (ஒருபுறமாகப் போகிறார்கள்)
சங்கன் வர்த்தகன் வேடந்தரித்து மற்றொரு பக்கம் வருகிறான்.
ச. என் சொற்படிகேட்டிருந்தால் இந்த விடங்கன் இக் கள் வர் கையில் ஒருக்காலுமகப்பட்டிருக்கமாட்டான். ஆயி னும் அவர்கள் அவனைக்கொன்று விடாமலிருக்கும் பட் சத்தில் ஒருவிதத்தில் இது அனுகூலமே. நேற்றைத் தினம் விடங்கனுடன் பேசிக்கொண்டிருந்த கள்வன் கூறிய அடயாளங்களினால் இப்பொழுது ஏமாங்கதன் இவர்களுக்குத் தலைவனாக இருக்கின்றான் என்று நம்ப வேண்டியதாயிருக்கின்றது. இப்பொழுது நான் ஏமாங் இருக்குமிடமறிந்து நேராகச்சென்று கொல்வ தென்றால் அசாத்தியமானகாரியம். இக்கள்வர்களும் நம்மைவிடமாட்டார்கள். ஆகவே நான் இவர்கள் கையில் அகப்பட்டு இவர்களுடன் சேர்ந்து கொண்டாற்போல் நடித்து உண்மையை அறிந்து சமயம் பார்த்து நமது வேலையை முடித்துக் கொண்டு திரும்பவேண்டும். பகையாளியின் குடியை உறவாடியே கெடுக்கவேண்டும். அதுவுமன்றி இப்படிச் செய்வதனால் விடங்கனுடைய சமாசாரமும் நமக்குத் தெரியவரும் – உம்? நமது பின் பாக இருவர் தொடர்கின்றார்கள். யுக்திசாலிகள் தான். தூண்டிலிட்டால் மீன் அகப்படுகின்றது (தன்பையிலிருந்து ஒரு பதக்கத்தை யெடுத்துமெல்ல கழுத்திலணிந்து கொள்ளு கிறான். ஐயோ ! இந்தக்காட்டில் வந்து அகப்பட்டுக் கொண்டோமே ! என்ன செய்கிறது? இங்கு ஒரு துணையையும் காணோமே (பயந்தவனைப் போல் பாவிக்கிறான்)
நான்குபுறமும் திடீரென்று வந்து கள்வர்கள் சுற்றிக்கொள்கிறார்கள்.
நா. நில் அங்கே! உன்கையிலிருக்கின்றதெல்லாம் கொடுத்து விடுகின்றாயா? உதைவேண்டுமா?
வ. உதைச்சா தவிர கொடுக்கமாட்டாண்டா அவன். உதைங்கடா! உதைங்கடா!
ச. ஐ ஐயோ! அப்பா! என்னிடம் உள்ளதை யெல்லாம் என்னை அடியாதேயுங்கள்! அடியாதேயுங்கள் (அவனிட முள்ளதையெல்லாம் கவர்கின்றார்கள்) ஐயோ! அப்பொழுதே நினைத்தேன் நான் புறப்படும்பொழுதே ஒரு கள்பானை எதிரில் வந்தது.
வ. அடே! அத்தெ முன்னேகேளுங்கடா ஒதைச்சி, எங்கே அந்த கள்ளுப்பானை?
கோ. அடே! நான் மாம்பழம் இண்ணுபாத்தா, ஈச்சம்பழமா யிருக்குதுடா!
அ. இவ்வளவுதானா! சீ! ஆனா தோலை உரிச்சிகினு உட்டூடலாம்.
வ. ஆமாம் அந்த கள்ளுபானை என்னமாபோரது? நீ தானே அண்ணைக்கி எல்லாத்தையும் குடிச்சூட்டெ.
நா. அடெ வாயை மூடு. அதிருக்கட்டும் நீயாரடா? காட்டில் வந்தால் திருடர்கள் இருப்பார்கள் என்றுதெரி யுமே, சும்மா வரலாமா? அவர்களுக்கு கொடுக்க ஏதா வது கொண்டுவர வேண்டாமா?
ச. அப்பா! நான் புஷ்பபுரியிலுள்ள ஒரு எளியவர்த்தகன், நான்.
அ. அடேடே! புஷ்புரியிலிருந்து யாராவது வந்தா அப் படியே புடிச்சிகினுவரச்சொன்னாரே நம்பசாமி
அ. இவனெ நம்ப அப்படியே புடிச்சிகினு போகலாம்.
ச. அப்பா! என்னை அடிக்காதீர்கள், நீங்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனாலும் வருகிறேன் நான்.
வ. ஆமாம் உன்னை அடிக்கத்தேவலே இண்ணுசொல்ரேன்; நீ அந்த கள்ளுபானை மாத்திரம் எங்கே இண்ணு சொல்லி விடு
ஏமாங்கதன் கள்வர் தலைவன் கோலத்துடன் வருகிறான்.
ஏ. அடே! யார் அடா இவன்?
நா. சுவாமி! இவன் புஷ்பபுரத்து வர்த்தகனாம், இங்கே வழிதெரியாது அகப்பட்டானாம். நாங்கள் என்னவோ இருக்கு மென்றுபார்த்தோம். இது தான் இருந்தது. (அபகரித்தபொருளை யெல்லாம் ஏமாங்கதன் பாதத்தருகில் வைக்கிறார்கள்)
ஏ. அப்பா உன் பெயரென்ன ?
ச. என்பெயர் அருணாசலசெட்டி. சொற்ப வியாபாரம் பேரீச்சம் பழத்தில்.
வ. எங்கே! பேரீச்சம்பழம் கொண்டாந்திருக்கிறையா?
ஏ. நீ ஏன் இங்கு வந்தாய்?
ச. மகாராஜா அவர்கள் என்னுடைய சொத்தையெல்லாம் அபகரித்துக்கொண்டு என்னைத்துரத்திவிட்டார்! நான் அடுத்த ஊரில் என் பந்துக்களிடம் போய் பிழைக்கலா மென்று வந்தேன். வந்த இடத்தில் வழி தெரியாது இக் காட்டில் அகப்பட்டுக் கொண்டேன்.
ஏ. நீ, புஷ்ப்புரியில் அரண்மனைக்கு எப்பொழுதாவது போவதுண்டா?
ச. நான் அடிக்கடிப் போவதில்லை,ஆயினும்,இரண்டு தினங் களுக்கு முன்பாக ஒருநாள் போகவேண்டி வந்தது.
ஏ. என்ன விசேஷம்?
ச. ஏமாங்கதராஜனுடைய புத்திரன் பாலசூரியன் ஒருவரி ருக்கின்றார் அவர் என்னை அழைப்பித்தார்.
ஏ.பாலசூரியனா? அப்பா நான்-அப்பா! பாலசூரியன் உன்னை எதற்காக வரவழைத்தான்? என்ன சொன்னான் உன்னிடம்?
ச. ஐயா! நான் அவர் கூறியதை ஏமாங்கதராஜ க்குத் தவிர மற்றொருவருக்கும் வெளியிடுவதில்லை என்று பிர மாணம் செய்திருக்கின்றேன்;
அ. (ஒருபுறமாய் கோஸ்கிக்கு) அடேடே! நம்ப பழயசாமி பேரெ சொல்லி எவனோ ஒருத்தன் இந்தசாமிக்கு கொடுக்கணும் இண்ணு ஒரு ஓலை கொடுத்தானே அது எங்கேடா? கொடுத்தூட்டையா?
கோ. இல்லேடா இல்லே! நன்னா ஞாபகம் படுத்தனே! சாமி! எவனோ ஒருத்தன் உங்ககிட்ட இந்த ஓலையெ கொடுக்க ணும் இண்ணு சொல்லி கொடுத்தூட்டுப் போனான்! அவனே புடிச்சிகலாம் இண்ணு பார்த்தோம் பழயசாமி பேர்சொல்லவே உட்டுட்டோம்.
ஏ. என்ன ஓலை? (வாங்கி அதைப் படித்துப்பார்க்கிறான்)
ச. சரி! என்னவோ சங்கடம் தெரியவில்லை! எமனோலை வந்து விட்டது!
ஏ. ஆஹா! என்ன ஆச்சரியம்! குலசேகரன் கூறியவண் ணமே இருக்கின்றது ! அடே! கோஸ்கி! இவனை ஜாக்கி ரதையாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!- சந்தேகமில்லை ! இவன் தான். அடே! காயி அந்தர்டப்பு, நீங்கள் சென்று நேற்றைத்தினம் ஒரு சன்யாசியைப் பிடித்து அடைத்து வைத்திருக்கின்றதாகக் கூறினீர்களே, அவனை ஜாக்கிரதையாகக்கட்டி என்முன் இழுத்து வாருங்கள்!-என்ன ஆச்சரியம்! (சில கள்வர் போகின் றார்கள்) சரி ! தீர்ந்தது நம்முடைய வேலை!
சன்யாசி வேடம் பூண்ட விடங்கனைக் கள்வர் பிடித்து வருகிறார்கள்.
ஏ. சரி! அடயாளங்களெல்லாம் சரியாகவேயிருக்கின்றன, இதில் சந்தேகமில்லை. ஓய் ! சன்யாசி ! அதோ நிற்கின் றானே யார் தெரியுமா உமக்கு?
வி.அப்பனே! எந்நேரம்|சிவயோகத்திலிருக்கும்படியான நமக்கு வேறு என்ன தெரியப்போகின்றது? எல்லாம் சிவமாகத் தோற்றுகின்றது. சிவத்திற்கு பேதமேது? ஜகத் சிவமயம்.
ஏ. போதும், உங்களுடைய கண்கள் சந்தித்தபொழுதே நான் உண்மையை அறிந்துகொண்டேன். இனிச் சந்தேகமேன்? அடே கோஸ்கி (சைகை செய்கிறான்.)
கோ. சாமி! நமக்கு ஒருகெடுதியும் செய்யாதவங்களே கொல் லக்கூடாது இண்ணுபழயசாமி உத்திரவு பண்ணியிருக்கிறாரே!
ஏ. நான் சொன்னபடி செய்யமாட்டாய் நீ!, நாயனார் மக்கன் தேவ்!
(ஏமாங்கதன் சைகைசெய்ய நாயனாரும் மக்கன்தேவும் சங்கன், லிடங் கன் இருவரையும் கட்டாரியால் குத்தி விடுகிறார்கள்.)
ச. தக்க – தண்டனையே (கீழே விழுகின்றான்.)
வ. அடே! இப்பவாவது அந்த கள்ளுபானை எங்கே இருக் குது சொல்லிவிட்டு செத்துபோடா! (சங்கன் இறக்கின்றான்)
வி. ஜகத்-சிவமயம்! (இறக்கின்றான்)
ஏ. கோஸ்கி! இப்படி வா ! ஏன் இவர்களைக் கொல்லவேண் டுமென் ற கேட்டாய்? அவர்கள் மேலாக அணிந்திருக்கும். வஸ்திரத்தை எடுத்து அங்கே என்ன இருக்கின் றதோ அதை எடுத்துவா.
கோ. (அவர்கள் மேலாடையை எடுத்து) அடடே! கத்திடா! பாத்தியா திருட்டுப்பசங்களே!
ஏ. இவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள், தெரியுமா உங்களுக்கு! என்ன ஆச்சரியம்!-ஓலையை முழுதும் படித் துப் பார்ப்போம் இதென்ன அடியில் என்னமோ எழுதி யிருக்கின் “உம்முடைய தகப்பனார் மிகவும் அசௌக்கியமாய் இருக்கின்றார். அவருடைய முடிவு சமீபத்திலிருக்கின்றதென்று நினைக்கின்றேன். இதை உமக்குத் தெரிவிக்கவேண்டி வந்ததே என்று எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கின்றது, ஆயினும் அதைரியப்பட வேண்டாம்.” அப்படியா- ஐயோ! நான் இறந்தாலும் பெரிதல்ல என்பிதாவை நான் எப்படியும் போய்ப் பார்க்கவேண்டும்- அடே! கோஸ்கி-
ஜெயபாலன் வருகிறான்.
அப்பா! குலசேகரா, வந்தாயாநீ! என்னை சுவாமிதுர திர்ஷ்டத்திற்கென்றே பிறப்பித்தாரோ? (கண்ணீர் விடுகிறான்)
ஜெ. ஓ! முன்பே எல்லாம் நடந்து விட்டாற்போலிருக்கின்றது ! ஐயனே ! என்ன சமாசாரம்? இதெல்லாம் என்ன?
ஏ. அப்பா! நீ சௌரியகுமாரனைப்பற்றி கூறியதெல்லாம் உண்மைதான். இதோ புஷ்பபுரியினின்றும் பலாயனன் என்னும் ஒரு மந்திரி எழுதியிருக்கின்றான் பார், (ஓலையைக் கையில் கொடுக்கிறான்) அப்பா, சௌரியகுமாரன் இவ்வ ளவு துரோகி என்று நான் முன்பு கனவிலும் நினைக்க வில்லை. பலாயனனுக்கும் விஷம் கொடுத்திருக்கின்றா னாமே! அப்பா சினேகிதன் என்றும் பார்க்கலாகாதா? இவ்வளவு செய்தவன் என் பெண்சாதி பிள்ளையை சும்மாவிடுவானோ? நான் இங்கிருப்பது முதலிய விஷயங் களெல்லாம் அவனுக்கு ஒரு ஜோசியர் வந்து கூறியதாக எழுதியிருக்கின்றான். இந்த ஓலை என்னிடம் வந்து சேர்ந் திரா விட்டால் எப்படியும் இதோ இறந்து கிடக்கும் பாதகர்கள் கையினால் நான் இறந்திருப்பேன் என்பது திண்ணம் ! அந்த மட்டும் சுவாமியினுடைய கிருபை இருந்ததே எனக்கு !-ஆயினும் ஒன்று போனால் ஒன்று முளைக்கின்றதே யொழிய வேறொன்றுமில்லை.என் பிதா மிகவும் உடம்பு அசேளக்கியமாயிருக்கிறாராம்! இதற்கு நான் என்ன செய்வது?
ஜெ. (தனக்குள்) அடடா! நாம் ஒன்றை உத்தேசிக்க அது வேறொன்றாய் முடிகின்றதே !-ஆம் அப்படித்தான் எழுதியிருக்கின்றது, ஆயினும் அவருக்கு ஒன்றும் இப் பொழுது நேரிடாதென்று நினைக்கின்றேன்.
ஏ. எல்லாம் சுவாமியினுடைய கருணை. அப்பா! நீ என்ன சொல்லுகின்றாய்?
ஜெ, என்ன சொல்வது? எதைப்பற்றி?
ஏ. அப்பா! என் உயிர்போனாலும் போகின்றது, நான் எப்படியாவது என் பிதாவைப் பார்க்கவேண்டும்.
ஜெ. பிதாவைப் பார்க்க வேண்டுமா! ஐயனே! என்ன சமாசாரம்? பிதாவையாவது, நீராவது, பார்ப்பதாவது! நீர் உமது நாட்டிற்குள் காலை வைத்தவுடன் உயிரிழக்க வேண்டி வருமென்பதை மறந்தீரோ? உமது பிதாவுக்கு ஒன்றுமில்லை; வேண்டாம்.
ஏ. அப்பா ! நீ என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன். என் உயிர்போனாலும் சரி! நான் போகவேண்டும் (புறப்படுகிறான்,)
ஜெ. (கையைப்பிடித்து) சற்றுப்பொறும் சொல்லுகின்றேன் அடே! நாயனார் நீங்களெல்லாம் போயிருங்கள். அப்புறமாய். (கள்வர் எல்லோரும் போகிறார்கள்) ஐயனே, நீர் நன்றாய் யோசித்துப் பாரும். நீர் இப்பொழுது உம்முடைய பிதாவைப் பார்க்க முயல்வது பிரயோஜனமற்ற காரியம்! இதனால் பெருந் தீங்குகளெல்லாம் விளையும்.
ஏ. அப்பா! உன்னை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன், இது கஷ்டமென்று எனக்கும் தெரிகின்றது. ஆயினும் இந்த உதவிமாத்திரம் எனக்குச் செய், நான் எப்படியும் பிதாவை ஒருமுறையாவது பார்க்கவேண்டும்.
ஜெ.(ஒருபுறமாய்) இனி இவருடன் பேசுவதிற் பயனில்லை.- ஆனால் அரசே, என்சொற்படி கேட்கின்றீரா !நான் உம் முடைய பிதாவைப் பார்க்கும்படியாகச் செய்கின்றேன். ஏ. அப்படியே செய்கின்றேன். நீ என்ன செய்யச் சொன்னாலும் செய்கின்றேன்.
ஜெ. செய்கின்றீரா? இது சத்தியம்?
ஏ. சத்தியம், எப்படியாவது என் பிதாவைப் பார்த்தால் போதும்.
ஜெ. (தனக்குள்) இதுவும் ஒருவிதத்தில் நமக்கனுகூலந்தான்!- ஐயனே, நான் உம்மை ஓர் ஒளஷதத்தினால் உருவை மாற்றி ஊமையும் செவிடுமாக்கி பாயனுக்கு ஒரு நிரு பம் கொடுத்தனுப்புகிறேன். அந்நிருபத்தை பலாயன னிடம் கொடுத்தால் நீர் அரண்மனைக்குட்சென். று சௌரியகுமாரனைக் காணவேண்டி நேரிடும்.
ஏ. சௌரியகுமாரனையா !
ஜெ. ஆம் ஜாக்கிரதை! பலாயனனுக்காவது சௌரியகுமார னுக்காவ உமது செய்கையால் வெளியிட்டுக் கொள்ளப்போகின் றீர்! அவர்கள் ஏதா வது எழுதிக்கேட்டாலும் ஒன்றும் பதில் எழுதாதீர்! தெரியுமா?- சௌரியகுமாரனுடைய அறைக்குட் சென் றவுடன் அவன் வெளியே போகும் சமயம் பார்த்து அங்கு வைத்திருக்கும்படியான ராஜமுத்திரையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பயப்படாமல் உமது பிதா இருக்கும் அறைக்குட்சென்று அவரைப் பார்த்து விட்டு, சீக்கிரம் திரும்பி மேலைக்கோபுரவாயிலருகில் வரு வீரானால், நான் அங்கு வந்திருப்பேன், பிறகு செய்ய வேண்டிய வேலையை அப்புறம் சொல்லுகின்றேன். நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். நான் அனுப்பும்படி யான மாறு வேடத்தில் உம்மை உமது பிதாவும் கண்டு பிடிக்கமாட்டார். நீர் மாத்திரம் பயந்தவரைப்போல் பாவிக்கவே கூடாது, தெரியுமா?
ஏ. ஆம். அதெல்லாம் சரிதான். அந்த முத்திரை உனக் கென்னத்திற்கு? அதை எடுத்துவர முடியாது, ஒரு வருமெடுக்காதபடி அது இருக்குமிடத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றதே?
ஜெ. அரசே, நான் கூறுவதற்கொன்றும் நியாயம் கேட்கலா காதென்று கூறினதை மறந்தீரோ! அதிருக்கட்டும் – ஆனால் அந்த முத்திரையை எடுத்துவர முடியாதா?
ஏ. முடியாது.
ஜெ. பெரிதன்று, உம்மிடம் இரண்டுவெறும் ஓலைகளைத் தருகின்றேன். அதன் அடியில் அம்முத்திரையை பதித்துக் கொண்டு வரவேண்டும், ாக்கிரதை இதை ஒருவருமறி யாதபடி செய்யவேண்டும். யாராவது பார்த்துவிட்டால் எல்லாம் கெட்டது. அரசே, தாம்போய் திரும்பிவருமள வும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், உமது செய்கை யால் ஒருவேளை யாராவது கண்டு பிடித்துவிட்டால்?- ஏ. அப்பா நான் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பேன். பயப்படாதே.
ஜெ. எப்படியிருக்குமோ? நம்மாலான அளவு ஜாக்கிரதையாயிருக்கவேண்டும் நாம். ஐயனே, நமது கள்வர்களை அழையும்.
ஏ. ஏன் ?
ஜெ. சொல்லுகின்றேன் அழையும்.
(ஏமாங்கதன் தாரையெடுத்தூத, கள்வரெல்லோரும் வந்து சேர்கின்றார்கள்)
நமது கள்வருதவி நமக்கிருக்குமளவும் பயமில்லை! அடே! நாயனார் நீங்களெல்லோரும் நாளைத்தினம் காலை புஷ்பபுரத்துக் கடைத்தெருவில் வெவ்வேறாக மாறு வேடம் பூண்டுவந்து சேர்ந்திருக்க வேண்டும். இதற்கு வேண்டிய காரியங்கஊமலம் நீ பார்த்து இவைகளை யெல்லாம் அங்கு ஜாக்கிரதையா யிருக்கும்படி செய். மிகவும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும் நான் அங்குவரு வேன். போய் சித்தம் செய்யுங்கள் சீக்கிரம்
எல். அப்படியே சாமி. (போகிறார்கள்)
ஜெ. ஐயனே, அரண்மனையில் தாம் நடந்து கொள்ளவேண்டி யதைப்பற்றி நான் உமக்கு இன்னும் சில சமாசாரங்கள் கூறவேண்டும், வாரும் சொல்லுகின்றேன், குரபாலக் கோட்டைக்குள் போவோம்.
ஏ. அப்பா! இப்பொழுதாவது சொல்லமாட்டாயா நீ யாரென்று?
ஜெ. ஐயா, நான் சொல்வதைத் தெரிந்துகொள்ளும் அதற்கு மேல் போகாதீர். (இருவரும் போகிறார்கள்)
– தொடரும்…
– கள்வர் தலைவன், நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, ஐந்தாம் பதிப்பு: 1955, அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
பூமறாங்
நீர்வை பொன்னையன்
September 3, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
September 3, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 3, 2026