கள்ளக் கோழி!
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டாக்ஸி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. இயங்கும் இயந்திரச் சுழற்சியோடு போட்டிபோடும் தன்மையில் வேகமாக வேலை செய்துகொண்டிருந்தது ‘ராவன்னா’வின் சிந்தனை.

‘ராவன்னா’ படவுலக வட்டாரங்களில் பிரமாதமாகப் பெயர் அடிபடும் ஒரு பிரசித்தப் புள்ளி. அவர் அந்த உலகிற்கு வந்து சேர்ந்ததே ஒரு பெரிய கதை
அவரது முழுப்பெயர் ராக்கப்பச்செட்டியார். பரம்பரையாகப் பண லேவாதேவியைத் தொழிலாகக்கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வழி வழியாக வட்டிக்குக் கொடுத்துச் சேர்த்த செல்வம். வட்டிச்சிட்டை, கணக்கு நோட்டு பேரேடுகள், பிராமிசரி நோட்டுக் கத்தை கள், ஊரிலே பெரிய மனுஷர் என்ற கௌரவம், பெரிய கோவில் தர்மகர்த்தாப் பொறுப்பு ஆகிய சகல சம்பத்துக்களையும் தமது புத்திரபாக்கியத்திற்குப் ‘பட்டா இறக்கி’ விட்டு, பெரிய செட்டியார் ‘மண்டையைப் போடு’ மட்டும் அவர் வாழ்ந்த தினுசே அலாதியானது.
அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரிச் சதா ஸில்க் ஜிப்பா, கழுத்திலே மின்வெட்டும் தங்கச் சங்கிலி, டால் வீசும் ‘கோல்ட் ரிஸ்ட் வாட்ச், அதற்கு வைரம் வைத்திழைத்த செயின், ‘த்ரீ காஸி சிகரெட்டின், ‘மாட்ச் பாக்ஸ்’ சகிதம் ராக்கப்பனைப் பார்க்க முடியாது. அப்பாவிற்கு நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள சாதாரண, நாட்டுப் புறத்துப் பெரிய வீட்டுப் பிள்ளையாண்டான்களைப் போல உடையலங்காரம், வீட்டு விவகாரங்களைக் கவனிப் பது, சாயங்காலம் கோவில் பக்கம் தலையைக்காட்டுவது எனப் பம்மாத்துப் பண்ணித் திரிந்தார். சில நாட்களில் இரவு எட்டரை மணிக்கு மேல் நண்பர்கள் சிலருடன் நாக ரிக மைனர் வேஷத்தில், சைக்களில் டவுனுக்குப் போய் ‘மாடத் தெரு மோகினி’களுடன் ‘ஜல்ஸா’ செய்து திரும்புவார். அத்தகைய ‘ராக்காடு வெட்டும்’ வீலைகள் மைந்த னைப் பற்றித் தந்தையார் அறிந்த விவிர எல்லைகளுக்கு அப் பேர்பட்ட விநோதங்கள்.
தகப்பனார் மறைந்த பிறகு தட்டிச்சொல்ல ஆள் கிடையாது. எனவே பயப்படவேண்டிய அவசியம் இல்லை. செயல்கள் தாராளமாக, தங்கு தடை இன்றி, பகிரங்கமாக நடைபெறத் தொடங்கின. பெரிய செட்டியாருக்கு ‘தொடுப்பு’ என்ற காரணத்திற்காக அதுவரை அவர் வழிவிலகி நடந்து கொண்டிருந்த கோவில் தாசி அலங்காரத்தாச்சி மகள் அம்புஜம் ஐயாவின் ஆசைநாயகியானாள். அற்புதமாகப் பாடும் ஆற்றலுள்ளவளாக அவர் கருதிய அந்த ‘ஸ்வீட் ஹார்ட்’டை வெள்ளித் திரையிலே ஒளிவீசச் செய்து, திக்கெல்லாம் புகழ் பரவ வழி ஏற்படுத்தினால் என்ன என்ற சபலம் எழுந்தது அவருக்கு. அந்த ஆசை அவர் மூலமே அவளையும் பற்றி ஆகாமல் தீராது என்ற எல்லையை அடைந்தது. படத் தொழில் அவருக்குப் புதிது. தனியாக இறங்கி ஆழம் பார்க்கப் போதுமான பணமோ, தெம்போ இல்லை. என்னடா செய்வது என யோசித்தார்.
மழை காலத்தில் சாம்பல் கிடங்குகளில் காளான்கள் முளைப்பதுபோல், படவுலகில் புதிது புதிதாக புரொடியூசர்கள் தலை தூக்கிக் கொண்டிருந்த காலம் அது. கையிலே போதிய பணம் இல்லை என்றாலும், கருப்பு மார்க்கெட்டில் சம்பாதித்த ஒரு சில ஆயிரங்களைக்கொண்டு விநியோகஸ்தர்கள், பிரதேச உரிமை வாங்குபவர்களையும் கடன் கொடுப்பவர்களையும் நம்பிப் படவுலகில் பல ‘முதலாளி’கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னதைப் போல ‘பொம்பிளை ஷோக்’கும், ‘கியா’லும் அதிக லாபம் அடைய சினிமா ஒரு தொழில் என்பதுமே காரணங்கள். எனவே, பணமுள்ளவர்கள் கவனத்தை அந்தத் திசைக்கு இழுக்கத்தக்க தரகச் சுறா மீன்கள் பல வாலடித்துத் திரிந்தன. சில சந்தர்ப்பங்களில் நடிகைகள் சிலரே ‘துருப்புச் சீட்டுகளாக’ப் பயன் படுத்தப்பட்டனர்.
அத்தகைய ‘சுறா’ ஒன்றின் பசப்பு வார்த்தைகளுக்கு இரையாகிப் பட வுலகிற்கு இழுத்துவரப்பட்டார் ராக்கப்பன். தமது லட்சியமான அம்புஜத்தைச் சினிமாவில் சேர்ப்பதையும் சித்தியாக்கிக் கொள்ளலாம் என்பது அவர் நோக்கம்.
நோக்கம் நிறைவேறியது. வருஷம் ஒன்றிற்கு ஆறு சதவிகிதத்தில் ‘புரோநோட்டு’களின் பேரில் கடன் கொடுக்கும் பழக்கம் தொலைந்தது. நூற்றிற்கு மாதத்திற்குப் பதினைந்து ரூபாய்க்கு அதிகமாகவே வட்டி கூட்டி வட்டிக்கும் முதலுக்குமாகச் சேர்த்து, ‘உண்டி’ எழுதி வாங்கிக்கொண்டு, அறுபது நாள், தொண்ணூறு நாள் என்று ‘அண்டிமாண்’டின் பேரில் தவணைக்குப் பணம் கொடுக்கத் தலைப்பட்டார். அம்புஜத்திற்கும் ‘சினிமா சான்ஸ்’ கிடைத்தது.
சில வருஷங்களிலே ராக்கப்பனது முதல் பல மடங்கு பெருகிற்று. ‘ராவன்னா’ என்ற பெயரும் பல இடங்களில் அடிபடத் தொடங்கியது. விரைவிலேயே அம்புஜிமும் நட்சத்திரப் பதவிக்கு உயர்ந்தாள். ஆனால், புகழ்ச்சிக்கு உயர்ந்ததும், இறக்கை முளைத்தவுடன் பறந்தோடிப் போகும் பட்சியைப் போல ராக்கப்பனை விட்டு அவள் பறந்து விட்டாள். குவியும் பணம், புதுப்புது நட்சத்திரங்கள், நடிக நண்பர்கள், பட முததாளிகளின் உறவு, கடன் வாங்கச் சிக்க வைக்கும் வலையாகச் சிலர் கொணர்ந்து தள்ளும் ‘சரக்கு’களின் சகவாசம் ஆகிய பல உல்லாசங்களுக்கிடையே ‘காடை கைவிட்டுப்போனதை’ப் பற்றிக் கவலைப்பட வில்லை ராவன்னா.
‘ஜயம், ஜய’ மென்றடித்தது இன்னும் கொஞ்சகாலம் பிறகு ‘ரோதை’ சிக்க ஆரம்பித்தது. கடன் வாங்கியவர் கள் சிலர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அவர்களது படத்தை வாங்குவார் கிடையாது. ஆகவே, டப்பாக்களில் உறங்கிய அவற்றை அவரே எடுத்து, விநி யோகித்து, ஓட்டி பணம் பார்க்க நேர்ந்தது. அவரிடம் வாங்கிய காசை குஷாலாகத் ‘தீவாளி’ பண்ணி விட்டுப் படத்தை முடிக்க வழி இல்லாமல் திணறினார்கள் சிலர். அந்தப் படங்களுக்கு அதிக முதல்போட்டு அவரே முடிக்க வேண்டி வந்தது.
இப்படிச் சன்னஞ் சன்னமாகப் படத்தொழிலின் பல துறைகளிலும் நுழைந்து அனுபவப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த அனுபவங்கள், ‘இப்படிக் கடன் எழவிற்கு மாரடிப்பதைவிடச் சொந்தமாகவே ஒரு படம் எடுத்துத் தொலைத்தால் என்ன?’ என்று எண்ணத் தூண்டின.
டாக்ஸி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
முன்னேறும் வேகத்தில், பின் தொடா, டாக்ஸி பின்னால் தள்ளிச்சென்ற டிராம்களின் ‘நுண,நுண’ப்பு-பஸ்களின் ‘ஹார்ன் அலறல்கள்-வயிற்றுப்பாடு பெரும்பாடாக உந்த, அதனால் அடிசுட மண்டை வெடிபடக்காயும் நூற் றிப்பத்து டிகிரி வெயிலையும் கானல் பறக்கும் தார் ரோட்டையும் லட்சியம் செய்யாது, இதயம் செத்த மாமிச பர்வதங்களை இழுத்து ஓடும் ரிக்ஷாவாலாக்களின், ‘ஓரம்! ஏய், ஓரம் போ !’ என்ற குரல்கள் எதுவும் அவர் யோசனையைச் சிதற அடிக்கவில்லை.
அவரது நினைவெல்லாம் ராதாமணியைப்பற்றிய விவரங்களிலேயே லயித்திருந்தது.
அவளைப் பற்றி ராகவன் சொன்ன விஷயங்களெல்லாம் நிசமாக இருக்குமா? இல்லை, பயல் சும்மா தான் அளந்திருப்பானா? உண்மையாக இருக்கும் என்று நம்பக்கூட முடியவில்லையே! அவள் அப்படி ரொம்ப ரொக்கம் என்றால் அவளால் எப்படி இவ்வளவுகாலம் கொண்டி செலுத்த முடிந்தது? ‘நீராமின்னா’ளில் அவள் தோன்றிய லட்சணம்! அதை நினைத்தால்…
ராதாமணி நடித்த முதல் படமான ‘நீராமின்னா’ளில் அவள் தோன்றிய கோலம் அவர் மனத்திரையிலே மின்னியது. முக்காலே மூணுவீசம் நிர்வாணமாக, பெண்மை எழில் பெரும் பகுதி வெளிச்சம் போட அவள் அந்தப் படத்தில் நடிப்பு என்ற பெயரில் ஓடியாடித் திரிந்தாள்.
அதைப்பற்றி ராகவனிடம் அவர் விவாதித்தபொழுது அவர் சொன்னார் “அதை நீங்கள் தப்பிதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்பவும்கூட அவள் கலைக்காக எதையும் செய்யத் தயார்.”
எதையும் செய்யத் தயாராம் பின்னே என்ன? இதை யும் செய்ய ரெடியா இருப்பாள் என்றுதானே அர்த்தம்?
‘இதை’ என்பது எதை என நினைக்க அவருக்கே சிரிப்புத் தாளவில்லை. தம்மையும் மீறி வாய்விட்டுச் சிறிது உரக்கவே சிரித்து விட்டார்.
திடீர்ச் சிரிப்பொலி எழக்கேட்ட டிரைவர் தலையைத் திருப்பி அவர்மீது கணநேரம் கண்ணோட்டம் செலுத்தித் திரும்பினான். ‘ராவன்னா’விற்கு அசடு தட்டியது. பைத் தியமோ என எண்ணுவான் அவன் என்று நினைத்தார். நிலைமையை ஒருவாறு சமாளித்து “ராதாமணியைப் பற்றி இப்பவே ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? விடிஞ்சாத் தெரியுது வெளிச்சம். இன்னும் கொஞ்ச நேரத்திலே தானாகத் தெரிந்துவிட்டுப் போகிறது!'” எனச் சமாதானம் செய்துகொண்டு தெருக்காட்சிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
சொந்தத் தயாரிப்பு பற்றிய சிந்தனை பிறந்ததுமே யாரை நடிக்க ஒப்பந்தம் செய்யலாம் என்ற பிரச்னை எழுந்தது. ஆலோசித்த அவருக்கு ராதாமணியின் ஞாபகம் வந்தது.
ராவன்னாவிற்கு ராதாமணி மீது பல நாட்களாகவே கண், ‘நீராமின்னா’ளைப் பார்த்த நாள் தொட்டுப் படர்ந்த நப்பாசை. படவுலகில் புகுந்த பிறகு அவளைப்பற்றிக் கேள்விப்பட்ட கதைகள் ஆசைத்தீயை விசிறி விடும் மேல் காற்றுச் சுழல்களாயின. “பிரமாத நட்சத்திரங்கள் எனப் புகழப்படுபவள்களை யெல்லாமே பார்த்தாச்சு. இவ மட்டும் என்னவாம்! இவளும் என்னிடம் சிக்க ஒரு சந்தர்ப்பம் வராமலா போகும்!” என அடிக்கடி சொல்லி வந்தார்.
ராகவன் ராதாமணி நடித்த படங்கள் சிலவற்றிற்கு ‘காஸ்ட்யூம் டைரக்ட’ராக இருந்தவர். அவரோடு ராவன்னா அடிக்கடி ராதாமணியைப் பற்றிப் பேசியபொழுது அவர் ராதாமணி தனிரகமானவள், அவள் போக்கே ஒரு மாதிரியானது, அதனால் புரொடியூசர்களுக்கெல்லாம் அவள் மீது வெறுப்பு என்று சொல்லிவந்தார். அப்படிப்பட்ட வர் சில தினங்களுக்கு முன்பு வந்து ராதாமணிக்கு இந்த முதலாளிகள் செயல்களே பிடிக்க வில்லையாம், இனி சொந்தத்திலேயே படம் தயாரிக்கப் போகிறாளாம். அதற்காக நல்லவராகப் பணம் போடக்கூடியவராக ஒரு பங்குதாரருக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற செய்தியை அறிவித்தார்.
அதைக் கேட்டதும், தாம் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் வந்துவிட்டது எனச் சந்தோஷமடைந்தார் ராவன்னா. ராதாமணி எப்படிப்பட்டவள் என்பதைப் பார்த்துவிடலாம். அவளைத் தமது படத்திற்கு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறவரைப் போல போய், அவள் மனம் போலவே பேச்சுக்கொடுத்து, நேரம் போக்கி, கடைசியில் அவள் படப்பிடிப்பிற்குப் பணம் உதவுவதாகச் சொல்லி நோட் டம் பார்த்து விடலாம் என எண்ணி மகிழ்ந்து போனார்.
அதற்காகவே அன்று தமது சொந்தக்காரை விட்டு விட்டு, ‘டாக்ஸி’ அமர்த்திக்கொண்டு, மத்தியானம் இரண்டு மணிக்கு நகரின் மறுகோடியில் இருந்த நட்சத்தி ரத்தின் வீட்டிற்குப் புறப்பட்டார் அவர்.
டாக்ஸி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
டிராம்களின் ‘நுண, நுண’ப்பு, பஸ்களின் அலறல், பாட்டை சாரிகளின் ஒட்டசாட்டம், சலசலப்பு, சகலத்தையும் சற்று நேரம் கவனித்த ராவன்னா சடிதியிலேயே சலித்துப்போனார். மீண்டும் ராதாமணியைப் பற்றி, அவளோடு பேசவேண்டிய விதம் பற்றி யெல்லாம் திட்டம் போட ஆரம்பித்தார்.
திட்டத்திலே திளைத்த சிந்தனை ராதாமணியின் பங்களா வரும்வரை தடம் பிறழவில்லை.
பங்களா வாசலில் வந்து கார் நின்றது. ‘கேட்’ அருகே புறாக்கூடு மாதிரி இருந்த கூண்டிலிருந்த காவற்காரன் வந்திருப்பது யார் என்றறிய எட்டிப் பார்த்தான். “அம்மா இருக்காங்களா?” என விசாரித்தார் ‘ஐயா’ “இருக்காங்க. இப்பதான் தூங்கப் போனாங்க,” என்றான் காவற்காரன்.
முதலாளி ஐயா காரை விட்டிறங்கினார். பார்வை பங்களாவை நோக்கிப் பாய்ந்தது. சாளரத்தில் சந்திரோதயம்! வந்திருப்பது யார் என்றறிய ஹால் ஜன்னல் வழியாக ‘நட்சத்திரம்’ எட்டிப் பார்த்தது.
“அம்மா இன்னும் தூங்கப்போகலை,” என்றார் ராவன்னா.
காவற்காரன் மௌனமாக அவர் நோக்கிய திசையில் பார்வை செலுத்தினான். அம்மாவைக் கண்டதும் தன்னைப் பொய்யனாக்கி விட்டாளே எனப் புழுங்கியது மனம். பதில் பேசாமல் நின்றான்.
அவசர அவசரமாகப் ‘பாக்கெட்’டிலிருந்து ‘பர்ஸை’ எடுத்து ‘மீட்டர் சார்ஜ்’படி வாடகையைக் கொடுத்து விட்டு, இனாம் காசிற்காகக் கையைச் சொரிந்த டிரைவரை கூடக் கவனிக்காமல் பங்களாவிற்குள் நுழைந்தார் ராவன்னா.
தோட்டத்தைக் கடந்து அவர் வராந்தாப் படிகளை நெருங்கியதும், ஜன்னலைவிட்டு ஹால் வாசலுக்கு வந்தாள் ராதாமணி.
கருப்புக் கரையுடன் கூடிய வெள்ளைப் புடவையும், மல் ரவிக்கையும் அணிந்திருந்தாள் அவள். நன்கு படியும் படி வாரிவிடப்படாத கூந்தலின் சுருள்கள் சில நெற்றி யிலே விழுந்து தறுதலைத்தனமாக விளையாடிக் கொண்டி ருந்தன. ‘மேக்-அப்’ இல்லாத அந்தச் சாதாரண நிலையிலும் அவள் அவர் கண்களுக்கு அழகியாகவே திகழ்ந்தாள். புன்னகை நெளியும் வதனத்துடன், இருகரம் கூப்பி, ‘நமஸ் காரம்’, என இன்மொழி சிதறி அவள் அவரை வரவேற்றாள்.
க்ஷணநேரம் தம் எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து விட்டார் ராவன்னா. பின்பு, சொக்கு நிலையிலிருந்து சமாளித்துக்கொண்டு, “என்னைத் தெரியுதுங்களா?” என்றார்.
“தெரியாமல் என்ன? ஸ்டுடியோக்களிலே ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கிறேன். பல முறை உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”, என்றாள் ராதாமணி.
“நானும் உங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறிமுகம் செய்துகொள்ள இப்பொழுதுதான் சந்தர்ப்பம் வாய்த்தது,” என்றார் படியேறி வராந்தாவை அடைந்த ராவன்னா.
“முன்னதாகவே வந்திருக்கலாமே,” என்ற ராதா “உட்காருங்க நிக்கிறீங்களே!” என்றாள். ஒரு ஓரத்தில் கிடந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி உபசரித்தாள்.
ராவன்னாவிற்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ரொம்ப நல்லமாதிரியாகத் தான் தென்படுகிறாள்; இதர சாதாரண நடிகளைப் போலவே தான் பழகுகிறாள்; விசித்திர குணம் படைத்தவள் என்பதெல்லாம் வெறும் ‘டூப்’; சுத்தக்கட்டுக்கதை போலிருக்கிறது என எண்ணினார்.
அவர் நாற்காலியில் அமர்ந்ததும் அவளும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். வீட்டு உள்ளே இருந்து நாற்பது, நாற்பத்தைந்து வயதுள்ள ஒரு அம்மாள் வந்தாள். அவள் தன் தாய் என அறிமுகம் செய்த நடிகை ராவன்னாவையும் அவளுக்கு அறிமுகப் படுத்தினாள். பின்பு எழுந்து, உள்ளே போய் வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் காபி, பலகாரம் வந்தது. வேலைக்காரன் ஒருவன் கொண்டுவந்து வைத்துப்போனான். “இதெல்லாம் எதுக்குங்க?” என்ற சம்பிரதாய மறுப்பிற்கும், “இல்லை. சும்மா சாப்பிடுங்க,” என்ற உபசரணைக்கு மிடையே கொஞ்ச நேரம் கழிந்தது. ராவன்னா ராதாமணியின் நடிப்புத்திறமையைக் குறித்துப் பேச ஆரம்பித்தார். “காபி சாப்பிட்டுவிட்டுப் பேசுங்கள்,” என்றாள் அம்மாள்.
ஒருவகையாகச் சிற்றுண்டி முடிந்தது. பின்பு ராதா மணி நடித்த படங்கள், அவை அடைந்த வெற்றி, அவற்றிலே அவள் நடித்த சிறப்பு முதலிய புரவோலங்களையெல் லாம் ஒரு பாட்டம் புகழ்பாடித் தீர்த்தார் ராவன்னா. அவளும் சுவாரஸ்யமாகப் பேச்சில் ஈடுபட்டாள். அவள் நடித்த பொழுது நடைபெற்ற சம்பவங்கள், படமுதலாளிகள், டைரக்டர்கள் குணாதிசயங்கள், படவுலகின் தன்மை குறித்தெல்லாம் அவளது விமர்சனங்கள் வெளிவந்தன. ஒளிவு மறைவின்றி வெளுத்து வாங்கினாள்.
தன்னிடம் அவள் இதையெல்லாம் சொல்லுவானேன் எனத் தயங்கினார் ராவன்னா. தன்னையும் அத்தகைய ஒருவன் என்ற லிஸ்டில் சேர்த்து, தனக்கு உறைக்கவேண்டும். என்பதற்காக அவ்விதம் பேசுகிறாளா என்ற சந்தேகம். பேர்வழி கொஞ்சம் விசித்திரம்தான் போலும் என எண்ணத்தொடங்கினார். என்ன இருந்தாலும், சுவையாகவும், சுபாவமாகவும் அவள் விஷயங்களை விஸ்தரித்துச் சொன்ன பொழுது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது இன்பமாக இருந்தது.
நேரம் ஓடியது, டிராம்களும், பஸ்களும் போய்க் கொண்டிருந்தன வெளியே. ரஸ்தாவில் ஜனங்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இடை யிடையே அவளைத் தெரிந்தவன் எவனாவது கூடப் போகிறவனுக்கு அவள் வீட்டைக்காட்டி, வராந்தாவில் அமர்ந்திருப்பது ஸ்டார் ராதாமணி எனச் சொல்லிப்போவான். பேச்சில் ஈடுபட்டிருந்த அவர்கள் அதை ஒன்றையும் கவனிக்கவில்லை.
கடிகாரம் நாலுமணி அடித்து ஓய்ந்தது.
“மணி நாலாகிவிட்டதா? அம்மாவுடன் பேசிக் கொண்டிருங்கள். வந்துவிடுகிறேன்.” என்று சொல்லிப் போனாள் ராதாமணி.
நேரக்கொலை செய்து ‘லட்சிய சித்தி’க்காக முயலும் எண்ணத்தோடு வந்திருந்த ராவன்னா அதுவும் நல்லதுக்குத் தான் எனக் கருதினார். ஆனால் மகள் வீட்டிற்குள்போன தும், கேட்ட பிளேட்டையே மறுபடியும் போடுவதைப் போல மகள் சொன்னதையே திரும்பவும் அம்மாவும் சொல்ல ஆரம்பித்தது கழுத்தறுப்பாகத் தோன்றியது பாவம், கேட்டுச் சகிக்கவேண்டியிருந்தது.
“சவம் என்ன தொழில் செத்த தொழில்,” என அலுத்துக் கொண்டாள் அவள்.
“தொழில் நல்லதுதான். அதில் ஈடுபட்டிருப்பவர்கள்…” என இழுத்தார் ராவன்னா.
நல்ல வேலையாக ராதாமணி திரும்பிவந்து சேர்ந்தாள். குளித்து, புடவைமாற்றி, அலங்காரம் செய்து, ஜ்வலிப்பு மங்கையாகத் திகழ்ந்தாள் அவள்.
அவளைத் தொடர்ந்து வேலைக்காரன் பழவகைகளும் ஓவலும் கொணர்ந்தான்.
சாப்பிட்டானதும் “சினிமா எதுக்காவது போவோமா” என்றார் அவர்.
“அதெல்லாம் எதுக்கு? இங்கேயே இருந்து பேசிக் கொண்டிருக்கலாம்,” என்றாள் அவள்.
மின்னல் தாக்குதல் மோசம், முற்றுகை மூலம் சாவதானமாகக் கோட்டையைக் கைப்பற்ற வேண்டுமெனத் திட்டமிட்டிருந்த ராவன்னாவிற்கு எதிரி சுலபமாகவே சரணாகதி யடைவதாகத் தோன்றியது. ராதாமணியின் பேச்சில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று எண்ணினார்.
குஷியாக வீட்டில் தங்கச் சம்மதித்து, தமது அனுபவங்கள், தாம் பார்த்த, பழகிய, பட முதலாளிகளின் தன்மைகள், தவறுகள், தமது திட்டங்கள் குறித்தெல்லாம் விரிவாக, பிரமாதமாகப் பேசினார்.
பேச்சு வாக்கில் பொழுதையே கவனிக்கவில்லை. மாலைப்போது கவிந்து, இருள் சூழ்ந்து, தெரு விளக்குகளெல்லாம் ஏற்றப்பட்டுவிட்டன.
“சாப்பிட்டுவிட்டு வந்து பேசலாம்,” என ராதாவின் தாயார் சொன்னதும் தான், “அட இவ்வளவு நேரமாகி விட்டதா? அப்போ நான் போய் வருகிறேன். நாளை வந்து நம்ம பட விஷயமாகப் பேசிக்கொள்கிறேன்,” என்றார் ராவன்னா.
“இங்கேயே சாப்பிட்டுவிட்டுப் பேசி முடிக்கலாம்,” என்றாள் ராதா.
சாப்பாடு முடிந்து மறுபடியும் வராந்தாவில் வந்து அமர்ந்தார்கள். ஜன சந்தடி வரவரக் குறைந்து, டிராம் பஸ்கள் போக்குவரத்து நிற்கும் வரை பேசிக்கொண்டிருந்தார்கள். தமது படத்தில் அவள் நடிக்க வேண்டியது, அவர் அவள் தயாரிக்க விருக்கும் படத்திற்குப் பொருள் உதவுவது, அவள் இஷ்டம் போலவே நடிகர்கள், டைரக்டர் எல்லாம் நியமிப்பது எனப் பேசி முடிவாயிற்று.
இடையில் தாய் தனக்குத் தூக்கம் வருகிறது என்று சொல்லி அவளது அறைக்குப் போய்விட்டாள்.
மணி பத்தாயிற்று. “பெரிய நட்சத்திரம் நீங்கள் உங்கள் வீட்டில் போன் இல்லாமல் இருக்கிறீர்கள்!” என்றார் ராவன்னா.
“எதுக்கு? யாராவது அடிக்கடி கூப்பிட்டு எதையாவது சொல்லி உயிரை வாங்கவா?” என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.
“இல்லை. போன் இருந்தால் டாக்ஸி கம்பெனிக்குப் போன் பண்ணி ஒரு டாக்ஸி வரவழைத்து நான் போகலாம் பாருங்கள். முதலாளிகள் கார் உங்களுக்கு உபயோகப் படுவதால் நீங்களோ கார் வைத்துக்கொள்வதில்லை. என் கார் நான் புறப்படும்போது வெளியே போயிருந்தது. நான் இங்கே வருவதாகச் சொல்லி வர வில்லை. சொல்லியிருந்தால் கொண்டு வந்திருப்பான்.”
“ஏன் இவ்வலவு கவலை? இங்கேயே படுத்திருந்து விட்டுக் காலையில் போனால் போச்சு.”
அவர் எதிர்பார்த்ததும் அதுதானே! தமது சந்தோஷத்தை மறைக்க முயன்றும் அவரால் முடியவில்லை. மன மகிழ்வின் சாயை அவர் முகத்தில் படிந்தது.
ராதாமணி அவரைக் கவனிக்க வில்லை. வேலைக்காரனை அழைத்து அவருக்கு வராந்தாவில் படுக்கை போட்டுவிட்டு ஹாலுள் தனது படுக்கையையும் போட்டுவிட்டு அவன் படுக்கப் போகலாம் எனக் கட்டளையிட்டாள்.
தமக்கு வெளியே படுக்கை போடச் சொன்னதைக் கேட்ட அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பிறர் கண் துடைப்பதற்காக அப்படிச் செய்திருக்கலாம் எனச் சமாதானம் செய்துகொண்டார்.
இன்னுமொரு அரைமணி நேரம் வம்பளப்பிலே கழிந்தது. அவர்களைத் தவிர மற்றவர்கள் தூங்கி விட்டார்கள். ரோட்டிலும் சந்தடி இல்லை.
“எனக்கும் தூக்கம் வருகிறது. நான் போகிறேன். நீங்களும் படுத்துக்கொள்ளுங்கள்,” என்றாள் ராதா.
“நீங்கள் மிகவும் நல்லவர்கள். உங்களோடு முன்பே பழகாமல் போனோமே என்றிருக்கிறது எனக்கு,” என்றார் ராவன்னா.
“நான்தான் அப்பொழுதே கேட்டேனே முன்பே ஏன் வந்திருக்கக் கூடாதென்று?” என்றாள் அவள்.
“பெரிய நட்சத்திரமாச்சே! ஒளி கண்களைக் கூசச் செய்துவிடுமே எனப் பயம்,” எனச் சொல்லிச் சிரித்தார் ராவன்னா.
“ஓ அப்படியா? இப்போ கூட ரொம்பக் கூசிப் போயிருக்கும். கண்களை மூடிக்கொண்டு நன்றாகத் தூங்குங்கள்,” என்று கூறி அவள் உள்ளே போய் விட்டாள்.
போனவள் மின்சார விளக்குகளை நிறுத்திவிட்டுப் படுத்துவிட்டாள் என்பதைப் படர்ந்த இருளும், கட்டில் கிரீச்சிட்ட ஒலியும் அறிவித்தன.
இருள் படர்ந்ததும் தானும் எழுந்து கட்டிலில் போய்ப் படுத்தார் ராவன்னா. பலவித எண்ணங்கள் குமைந்து கூத்திடும் அரங்கமாயிற்று அவரது உள்ளம். அவரது பார்வை தோட்டத்து இருளில், மரங்களுக்கு ஊடே மின்னும் நட்சத்திரங்கள் மீதெல்லாம் படிந்து பின்பு தெருவிற்குத் திரும்பியது. கார்ப்பரேஷன் விளக்குகள் தூரத்திற்கு ஒன்றாக நின்று ஒளி சிதறிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ எழுந்து ஒலித்தது உள்ளான்களின் ரீங்காரம்.
தூக்கம் பிடிக்கவில்லை ராவன்னாவுக்கு. ராதாமணி தூங்கியிருப்பாளோ என்னவோ! அவரால் நிர்ணயிக்க முடியவில்லை வாயிற் காவற்காரன் பீடிபற்ற வைத்துக் கொண்டு எழுந்து வந்து கொஞ்சநேரம் வெளியே நின்று பின்பு மறைந்தான்.
வெகுநேரம் அங்குமிங்கும் சூன்யப்பார்வை பதித்த வண்ணம் படுத்திருந்தார். தீடீரெனத் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. சந்திரோதயம் ஆகிவிட்டது போலும் என எண்ணினார்.
மெதுவாக எழுந்து, பூனைபோல் காலடி எடுத்து வைத்து நடந்து, ஹாலுள்போய் ராதாமணியின கட்டிலை நெருங்கினார். நெஞ்சு பயத்தால் பட படத்தது. அவள் தூங்குகிறாளா, விழித்திருக்கிறாளா என விளக்கேற்றிப் பார்க்கலாமா என்றால், புதிய இடத்தில் ஸ்விட்ச் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பது கஷடம். திருடன் போல் நகர்ந்து நகர்ந்து கட்டிலில் கை வைத்தார், “ராதா” என மெதுவாகக் கூப்பிட்டார். பதில் இல்லை. பாசாங்கு செய்கிறாளோ என எண்ணினார். திரும்பிப் போய் விடலாமா என்று யோசித்தார். சபலம் அனுமதிக்க வில்லை. ‘திக், திக்’கென அடிக்கும் இதயத்தோடு கொஞ்சநேரம் நின்றார். பின்பு துணிந்து மேலே கை வைத்துவிட்டார்.
மார்பில் திடீரென ஏதோ விழுவதை உணர்ந்த ராதாமணி, “யாரது” எனக் கூவியபடி திடுக்கிட்டு எழுந்தாள். ‘பெட் ஸ்விட்’சை அழுத்தி அறையில் ஒளி பரவச் செய்தாள்.
எதிரே அசட்டு முழி முழித்தபடி ராவன்னா நிற்பதைக் கண்டதும் அவள் சீற்றம் கொண்டாள் கட்டில் அருகில் விட்டிருந்த தனது ‘ஸ்லிப்பரை’ கையில் எடுத்துக்கொண்டு, ‘போ! மரியாதையாகப் போய் விடு! வீட்டை விட்டு உடனே வெளியே போ! அயோக்கிய ராஸ்கல்!’ என இரைந்தாள்.
ராவன்னாவிற்கு அவமானத்தால் உயிரே போய் விடும் போலிருந்தது “தயவு செய்து சப்தம் போடாதே அம்மா, வேலைக்காரர்கள் எல்லாம் வந்துவிடப்போகிறார்கள். நான் வராந்தாவிற்குப் போய் விடுகிறேன். இரவு இப்போது எப்படிப் போவது? படுத்திருந்து விட்டுக் காலையில் போய் விடுகிறேன். இனி ஒன்றும் செய்ய மாட்டேன். உள்ளே வரவில்லை,” என்றார்.
“ஊஹும். வாட்சுமேனை கூப்பிட்டு ரிக்ஷா கொண்டு வரச் சொல்கிறேன். இந்த க்ஷணமே போயாக வேண்டும்,” என்றாள் நடிகை.
“யாரையும் கூப்பிட வேண்டாம். நானே போய் விடுகிறேன்”. எனச் சொல்லிப் புறப்பட்டார் அவர்.
கேட் அருகில் வந்து கதவைத் திறக்கச் சொல்லவும் வாட்ச்மேன் இந்த ஆள் என்ன இப்படி என அதிசயித்தான். அவர் மௌனமாக வெளியேறினார்.
ராதாமணி தன்னிடம்தான் வேஷம் போட்டாளா உண்மையாகவே அப்படியா, தம் மீது ஏதாவது விரோதம் கொண்டு அப்படிச் செய்திருப்பாளா என்றெல்லாம் குழம்பியது சிந்தனை. அவளைப்பற்றி அபிப்பிராயம் கூறியவர்கள் எல்லாம் தம்மைப் போலவே அனுபவம் பெற்றுத் தான் அவ்வாறு சொல்லிவந்தார்களோ என நினைத்தார்.
ரஸ்தா வெறிச்சோடிக் கிடந்தது.
கள்ளக்கோழி பிடிக்கப் போகிறவனைப் போலப் போய் அவமானப்பட்டுத் திரும்புகிறோமே என நாணினார். யாருக்கும் இந்தச் சம்பவம் தெரியாமல் போகணுமே என அங்கு மிங்கும் பார்த்தபடியே துரிதமாக நடந்து கொண்டிருந்தார் அவர். பக்கத்தில் ஏதாவது ரிக்ஷா நிற்கிறதா என அவர் கண்கள் துழாவின.
– கள்ளக் கோழி கதைகள், முதற் பதிப்பு: ஜூன் 1949, எரிமலைப் பதிப்பகம், திருச்சி.