கல் குமிழிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 257 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கல்விக்குக் கொடுப்பதைக் கடவுளுக்குக் கொடு’ இந்த வாக்கியத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்தேன். “கடவுளுக்குக் கொடுப்பதைக் கல்விக்குக் கொடு” என்ற பிரசாரத்தை நான் அறிவேன். மூலை முடுக்குகளில் எல்லாம் அந்தக் கலை வாக்கியந்தான் எழுதப்பட்டிருக் கிறதே! ஆகையால், அதற்கு மாறாக எழுதப்பட்டிருந்த இந்த வாக்கியத்தைக் கண்டு எப்படி வியப்படையாமல் இருக்கக்கூடும்? இந்த மாதிரி எழுதிய பைத்தியம் யார் என்று தெரிந்துகொள்ள ஆசை உண்டாயிற்று. யாராய் இருக்கக்கூடும் என்று யோசனை செய்துகொண்டே திரும்பினேன். 

உப்பு அரித்துத் தேய்ந்துபோன நந்தியின் பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

“யாரப்பா இதை எழுதினது?” என்று கேட்டேன். 

“கரிகாலச் சோழன்! சோழன் கரிகாலனைத் தெரியு மல்லவா? ஹிமயமலையின் சிகரத்தில் அவன் வெற்றிக் கொடியை நாட்டினான். அறியாமை என்னும் மற்றொரு ஹிமயமலையும் இருக்கிறதல்லவா ? அதன்மீது கரித்துண்டு என்னும் தண்டாயுதம் பிடித்துப் படையெடுத்து இந்தக் கரிக்கைச் சோழர்கள் வெற்றி காண்கிறார்கள்” என்று சொல்லி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டான். 

இப்படிப் பதில் சொன்னவுடன் எனக்கு முதலில் ஓர் எண்ணந்தான் உண்டாயிற்று. எந்த ஸ்தலத்துக்கோ தீர்த்தத்துக்கோ சென்றாலும் அங்கே சில வியாபாரிகள் உண்டு. ஆனால் அந்த வியாபாரத்துக்கு முதலோ, சரக்கோ, செல வோ ஒன்றும் தேவை இல்லை. முழு முதல் இருக்கும் பொழுது மற்றவை எதற்கு? இந்த வியாபாரிக்கு பண்டா என்று பெயர். இந்த மாதிரி வியாபாரிகளில் இவரும் ஒருவர் என்றுதான் நினைத்தேன். 

ஆனால் கஞ்சாப்புகை வாசனை ஒன்று அடித்ததைக் கவனித்த பொழுது என் எண்ணம் தவறென்று தோன்றிற்று. 

“நீங்கள் யார்?” என்றேன். 

“மண்டபத்தான்” என்றார், சுருக்கமாக. பொழுது போக்குக்காக அங்கே நான் வந்தவன்தானே? இவர் வாயைக் கிண்டினால் பொழுது போகும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பித்தேன். 

“கலிகாலச்சோழன் என்றெல்லாம் சொன்னீர்களே எது அறியாமை? கல்விக்குக் கொடுப்பதைக் கடவுளுக்குக் கொடு என்பதா அல்லது அதைத் திருப்பி எழுதுவதா?” 

”உண்மையைச் சொன்னால் இரண்டுந்தான்” என்றார். 

இப்படி ஏதேதோ பேசிக்கொண்டு பிரகாரத்தை வலம் வந்தோம். பிரகாரம் முழுவதும் சிற்பங்கள். அந்தக் காலத்தில் இவைகளெல்லாம் எவ்வளவு அற்புதமாய் இருந் திருக்கும்! இப்பொழுதோ வௌவால்களும் விஷமிகளும் காலமுமாகச் சேர்ந்து அவைகளைக் குலைத்து விட்டன. இருந்தாலும் சில அற்புதமான சிற்பங்கள் இன்றும் இருக் கின்றன. ஒரு நரசிம்மாவதாரம் என்ன! ஒரு சிம்மவாஹினி என்ன! இவற்றைப் பார்த்து நானும் சிலையாகிவிட்டேன். 

“போவோமா?” என்றார். 

“போவோம்” என்று சொன்னேனே ஒழிய, கால் அசையவில்லை. 

“இதெல்லாந்தானே கல்வி, கலை?” என்று அவர் என்னைக் கேட்டதும் எனக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை. பாக்கிச் சிற்பங்களைப் பார்த்துவிட்டுக் கோவிலுக் குள் நுழைந்தோம். 

ஆஹா ! என்ன காட்சி! என்ன காட்சி! பெரிய அழகிய லிங்கம் ஒன்று கர்ப்பக்கிருகத்தில் அமர்ந்திருந்தது. லிங்கத்தையும் எங்களையும் தவிர, குருக்களையோ வேறு ஜனங்களையோ காணோம். நான் வாங்கிச் சென்றிருந்த கர்ப்பூரத் தைக் கொளுத்தி லிங்கத்துக்கு எதிரில் வைத்து வணங்கினேன். 

“சிற்பத்தைக் கண்டு அயர்ந்து போனீரே; கைலாச நாதரின் நெற்றியைப் பாரும்” 

லிங்கத்தின் நெற்றியைப் பார்த்தேன். கர்ப்பூரத்தின் ஒளி லிங்கத்தின் நெற்றியில் விழவே சிவனுடைய மூன்றா வது விழி திறந்தது. அம்மாதிரியான தோற்றம் எழுந்தது என்று திரித்துச் சொன்னாலும் உண்மை ஒன்றேதான். கறுப்புக் கல்லில் என்ன அழகான லிங்கம்! 

வியப்பு ஒரு புறம் இருக்க மற்றொரு நினைப்பு எழுந்தது. “இவ்வளவு உயர்ந்த கோயில் ஏன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது?” என்று கேட்டேன். 

“கவனிப்பு இல்லாமல் என்ன ? கல்வி, கலை இவைகளைத் தான் கவனிக்கிறார்களே! வாசலில் பீடி குடித்துக்கொண்டி ருக்கிறானே அவன்தான் இந்தச் சிற்பங்களுக்கெல்லாம் காவல்-மத்திய அரசாங்கத்தார் அவனுக்குச் சம்பளம் கொடுத்து வருகிறார்கள், தெரியுமா?” 

“அது தெரியாது. ஆனால் அவன் இந்தச் சிற்பங்களைக் கவனிப்பதாகவோ அதற்கு வேண்டிய தகுதியுள்ளவ னாகவோ தெரியவில்லையே.” 

“அதெப்படிக் கவனிக்க முடியும்? அவன் கவனிக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான். அதைக் கவனிக்கிறான். மாதம் முதல்தேதி எப்பொழுதென்று அவன் கவனிக்கிறான். அவ்வளவுதான் அவனிடம் எதிர் பார்க்கலாம். இந்தக் காலத்து அரசாங்கத்தாரும் வேறு என்ன செய்துவிடப் போகிறார்கள் ? அந்தக் காலத்து ராஜாக்கள் என்றால் எதையோ நினைத்துக்கொண்டு எதையோ செய்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள். இவற்றை எல்லாம் பார்த் தால் எனக்குத் துயரம் தாங்கவில்லை. கலிகாலச் சோழர் களுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.” 

“‘உண்மைதான் கோவில்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஓர் ஏக்கம் உண்டாகிறது! இன்னும் எவ்வளவு காலம் வரையில் இவைகளை விதி விட்டுவைக்கப் போகிற தோ? கட்டிடக்கலை, சிற்பக்கலை இவைகளுக்கெல்லாம் பொக்கிஷமாக இருக்கும் இந்தக் கோவில்களெல்லாம் வர வரப் பலஹீனப்பட்டும் வெடித்தும் உடைந்தும் இடிந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தார் ஏன் எல்லாக் கோயிலின் பராமரிப்பையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது? அப்படிச் செய்யாவிட்டால் இன்னும் ஒரு நூற் றாண்டுக்குள் இவை முற்றும் பாழாய்விடும். இதைப்பற்றி நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது.” 

“அதுவும் உண்மைதான். ஆனால் மற்றோர் உண்மையை கவனிக்கவேண்டும். இந்தப் பல்லவ அரசர்களைப் பாருங்க ளேன். அவர்கள் கட்டிய ஒரு கோயிலாவது வாழ்கிறதா ? ஆனால் எப்படி வாழும்? எல்லாம் கல் குமிழிகள். நம்முடைய பிராணனை எதில் நாட்டுகிறோமோ அது ஒருகால் வாழ லாமே யன்றி,மற்ற எதுவும் வாழாது. இந்தக் கோயில் மகாபலிபுரம் கோயில் இவைகளைத்தான் பாருங்களேன் ! பல்லவர்கள் உயிரைச் சிற்பத்தில் வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றிச் சந்தேகம் இல்லை. அத்துடன் நின்றி ருந்தால் தவறு ஒன்றும் நேர்ந்திருக்காது அந்தப் பித்தை மறைப்பதற்காகக் கோயில்களைக் கட்டி விட்டார்கள். கடவுளின் அருகில் அவருக்கு சமமாக கலை வாழவேண்டும் என்று நினைத்தார்கள்; திட்டமிட்டார்கள்; வேலை செய் தார்கள். என்ன ஆயிற்று ? நரசிம்ம பல்லவவர்மன் இந்த கைலாச நாதர் கோயிலைக் கட்டினான். இந்த அற்புதமான சிற்பங்களையெல்லாம் செய்யச் சொன்னான். அவன் மனைவி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை கடவுளே கலையாக இருக்க வேண்டுமேயல்லாது கடவுள் வேறாகவும் கலை வேறாகவும் இருக்கக்கூடாது என்று சொன்னதன் உண் மைக்குச் செவி சாய்க்கவில்லை.” 

“இதற்குச் சரித்திரத்தில் ஆதாரம் இருக்கிறதா!” என்று குறுக்கிட்டேன். 

“அதைப் பிறகு சொல்லுகிறேன்; இதைக் கேளுங்கள்” என்று மேலே சொன்னார். “பஞ்ச தந்திரத்தில் ஒரு கதை உண்டு. எலியும் தவளையம் நட்பாகி ஒன்றுடன் ஒன்று கயிற்றால் பிணைத்துக் கொண்டன. மேலே பறந்த கருடன் பாய வருவதைப் பார்த்து எலி வங்குக்கு இழுத்தது; தவளை குளத்துக்கு இழுத்தது. இந்தப் போராட்டத்துக்கிடையில் கருடன் எலியைத் தூக்கிக்கொண்டு போயிற்று. எலியுடன் தவளையும் அழிந்தது.” 

“அந்த மாதிரி?” என்றேன். 

“அந்த மாதிரி இங்கே கடவுளும் நிலைக்கவில்லை. கலையும் நிலைக்கவில்லை. நரசிம்ம பல்லவவர்மரின் மனைவி சொன்ன தைத்தான் கைலாச நாதரும் வேறு விதமாகச் சொன்னார். அவன் அதைப் புரிந்து கொள்ளவில்லை.” 

“என்ன சொன்னார்?” என்று குறுக்கிட்டேன். 

“ராஜா கோயிலைக் கட்டிவிட்டு கும்பாபிஷேகத்துக்கு நாளைக் குறிப்பிட்டான். கைலாசநாதர் ஓர் இரவு அவரி டம் வந்தார். ‘கும்பாபிஷேக தினத்தை ஒத்தி வைத்துவிடு, அன்றைத்தினம் திருநின்றவூருக்குப் போகவேண்டும். பூச லார் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்கிறார். அதற்கு போகவேண்டும்” என்று சொன்னார். அரசன் அதற்கிணங்க தினத்தை ஒத்தி வைத்துவிட்டான். அத்துடன் நில்லாமல் தன்னதைவிட. உயர்வான கோயிலைக் காணச் சென்றான். திருநின்றவூருக்குச் சென்று பார்த்தால் கோயிலையே காண வில்லை. வியப்பு மேலிட்டு அங்கும் இங்கும் விசாரித்தான். அவன் வியப்பு கோடி மடங்கு அதிகமாயிற்று. பூசலார் என்னும் சிவனடியார் மானஸிகமாக ஒரு பெரும் கோவிலை கட்டிமுடித்திருந்தார். எத்தனை மாதத் தியானமாக கற்கள் வந்து குவிந்தன ! எத்தனை மாதத் தியானமாக வேலைகள் நடந்து வந்தன ! இப்பொழுது அந்த மனக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் ! அதற்குக் கைலாசநாதர் உடந்தை ! இந்த விஷயத்தின் உண்மையை அரசனால் உணர முடியவில்லை. 

“அதன் விளைவைத்தான் நாம் இப்பொழுதும் பார்க்கி றோம். இங்கே கடவுளும் நிலைக்கவில்லை. கலையும் நிலைக்க வில்லை. கலையையும் கடவுளையும் பிரித்து வைத்துப் போற்ற முற்பட்ட எல்லா இடங்களுக்கும் ஏறக்குறைய இந்தக் கதி தான்.” 

நண்பர் பெருமூச்சுடன் நிறுத்தினார். அந்தப் பெரு மூச்சின் முடிவில் பாழடைந்த கோயில்கள் எல்லாம் என் கண்முன் எழுந்தன. நான் கண்மூடி மௌனியானேன். 

“என்ன ஊமையும் குருடும் ஆகிவிட்டீரே?” என்ற கேள்வி காதில் விழவே சுயநினைவு வந்தது. 

“நாட்டு மக்களில் நானும் ஒருவன் தானே? அந்த நிலையை அடைந்து விட்டேன்” என்றதும் அவர் கடகட வென்று சிரித்துக்கொண்டு சொன்னார். 

“கல்விக்குக் கொடுப்பதைக் கடவுளுக்குக் கொடு என்று எழுதியிருப்பதன் பொருள் இப்பொழுது விளங்குகிறதல்லவா? கடவுளுக்குக் கொடுக்காமல் கல்விக்குக் கொடுப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போம். எல்லோரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிவிடுவார் கள். எல்லோரும் பட்டம் பெறுவார்கள்; உத்தியோகத் துக்கு மனுப்போடுவார்கள்; சம்பாதிப்பார்கள் : சாப்பிடு வார்கள்; இன்பத்தில் ஈடுபடுவார்கள்: இனத்தைப் பெருக்குவார்கள். இல்லை. இல்லை. இதில்கூட நமக்குத்தான் பயம் வந்துவிட்டதே ; விளைவு இவ்வளவுதானே? அதற்கு மேல் உண்டா? செக்குமாடு சுற்றி வரும் தூரத்தை நீளமாக் கினால் எத்தனையோ ஆயிரம்மைல் ஆகும். ஆனால் மாடென் னவோ இருந்த இடத்தைவிட்டுப் போவதில்லை. அதைப் போலத்தான் இந்தக் கல்வி விஷயமும் ! காலத்துக்கு அப் பாற்பட்ட ஒன்றுடன் கலையையும் கல்வியையும் பிணைக்கா விட்டால் அவை நிலைக்கா. சிதம்பரம் கோயிலை நினைத்துக் கொண்டால் நான் சொல்வது விளங்கும். காலம் கடந்த ஒன்றைப் போற்றாதவரையில் கலை பிறக்காது; பிறந்தாலும் ஆயுள் நீடிக்காது. புதை பொருள் ஆராய்ச்சி இலாகா மாதம் முப்பது நாற்பது முந்நூறு நானூறு என்று சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்து அவைகளைப் பாதுகாக்க வேண்டியதுதான். அவ்வளவுதான் மிஞ்சும்.” 

“நூற்றில் ஒரு வார்த்தை” என்று நண்பரின் முதுகைத் தட்டிக் கொடுக்கக் கையை எடுத்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். புதை பொருள் ஆராய்ச்சி இலாகாவைச் சேர்ந்த ஆள் என்னை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியாமல் விழித்தேன். 

“யாரையா-பைத்தியமா நீ-தனக்குத்தானே பேசிக்கிட்டு! இல்லேன்னா இந்தப் பொம்மைகளோடே பேசறியா?” என்று அவன் அதட்டியதும் நான் திடுக்கிட்டேன். 

“என்னுடன் பேசிக்கொண்டிருந்தாரே, அவர் எங்கே?” என்றேன். 

“அட பைத்தியக்கார மனுசா! போ போ! ஒண்ணரை மணியா இங்கே நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்துக் கிட்டிருக்கேன். ஒன்னைத்தவிர ஒரு ஈக்குருவிகூட இங்கே வரவில்லையே! போ வெளியே” என்று என் கையைப்பிடித்து வெளியே இழுத்துவிட்டான். 

எனக்குச் சொல்லமுடியாத கோபமும் திகைப்பும் பொங்கின. ஆனால் அவனுக்குப்போய் விஷயத்தை எப்படி விளங்க வைப்பது? சிவனே என்று பைபில் இருந்த சில்லறையை எல்லாம் அங்கிருந்த உண்டியில் போட்டு விட்டு வெளியேறினேன். குளவி ரீங்காரம் இடுவதுபோல் “கல்விக்கு கொடுப்பதைக் கடவுளுக்குக் கொடு” என்ற வாக்கியம் மனத்தில் சிலையோடிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *