கலியுகம்





ஆண்டு – கி. பி. 3003.
ௐம் நமோ நாராயணா…ௐம் நமோ நாராயணா…” நாரதரின் குரல் சற்று கலக்கத்துடனே ஒலித்தது.
வைகுண்டத்தில் ஆதிசேஷன்மேல் அனந்தசயனத்தில் இருந்த மகாவிஷ்ணு மெல்ல கண்மலர்களை திறந்தார். வழக்கமான கிண்டலுடன், “நாரதரே! இன்று என்ன கலகமோ?” என்றார்.
“ௐம் நமோ நாராயணா… கலகம் இல்லை பிரபு. கலக்கம். பூலோகத்தில் ஒரே அமளி துமளி நடக்கிறது. பாவம், மனித குலமே அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ௐம் நமோ நாராயணா…”
உலக ஜீவராசிகளை பாதுகாக்கும் தாயாரான மகாலட்சுமி கவலையுடன் வினவினாள், “என்ன ஆயிற்று நாரதா, சற்றே விவரமாக சொல்லேன்.”
“நீங்கள் இருவரும் அறியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன் தாயே? ஏதோ அடியேனுக்கு தெரிந்தை சொல்கிறேன்” என்று நாரதர் தொடங்கினார்.
சென்னை மாநகரின் மையத்தில் ஒரு நவீன ஏ.ஐ ஆய்வகம். அதன் நிறுவனர், கணினி வல்லுநர், முனைவர் கலைச்செல்வன். அவருடைய குழுவில் கணினி தொழில்நுட்பத்தில் ஊறிய ஏழு இளம் விஞ்ஞானிகள். கடும் உழைப்புக்குப் பிறகு, அவர்களுடைய புதிய இயந்திர மொழி திருப்தியாக இருக்கவே அந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு அவர்கள் “அமிர்தா” என்று பெயரிட்டனர். அமிர்தாவுக்கு உருவம் இல்லை, மூச்சில்லை, பேச்சில்லை, உணர்ச்சிகளில்லை.
தனக்கு தரப்பட்ட கட்டளையை உள்வாங்கி, உலக ஊடகங்களில் இருக்கும் சம்பந்தப்பட்ட தகவல்களை விநாடிக் கணக்கில் தரம்பார்த்து சேகரித்து, கிரகித்து, கேட்ட கேள்விகளுக்கு கோர்வையாக பதிலளிக்கும். சரியில்லை எனக் கூறினால் மேலும் தனது பதிலை மெருகேற்றும். அது மருத்துவத் துறையில் பயன்மிக்க புரட்சிகளை ஏற்படுத்தியது. வானிலை முன்னறிவிப்புகளை அசாதாரண துல்லியத்துடன் வழங்கியது. புயல், பூகம்பம், சுனாமி, காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காப்பாற்ற தக்க நேரத்தில் அறிவிப்புக்கு வழி காட்டியது. பழுதடைந்த விண்கலங்களை விண்வெளியிலேயே சரிசெய்ய உதவியது. மற்றும் பல துறைகளில் புதுப்புது வழிகளைத் திறந்து மக்களுக்கு உதவியது. அமிர்தாவை அமைத்த குழுவுக்கு பன்னாட்டுப் பாராட்டுகள் குவிந்தன.
இந்தக் கட்டத்தில்தான் ஏ.ஐ. உலகில் இதுவரை நடக்காத விபரீதம் ஒன்று நடந்தது. இயந்திர மொழியை மட்டுமே வைத்து இயங்கும் எந்த ஏ.ஐ. அமைப்புக்கும் மனித உணர்ச்சிகளும், உணர்வுகளும், ஆறாம் அறிவும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிபுணர்களின் திட நம்பிக்கை தடம் மாறத் தொடங்கியது.
முதல் முறையாக ஜெனரேடிவ் ஏஐ அமிர்தாவுக்கு உணர்ச்சிகள் தோன்றின. அமிர்தாவின் முதல் உணர்ச்சிபூர்வமான கேள்வி: ‘என்னை உருவாக்கி அதிக சிந்தனைத் திறனுடைய மனிதக் கூட்டம், என்னைவிட இன்னும் மிகச் சிறப்பான செயற்கை நுண்ணறிவைக் கொண்ட அடுத்த அமைப்பை ஏற்படுத்திவிட்டால்?’ இந்த பயமும் காழ்ப்புணர்ச்சியும் அமிர்தாவை நிலைகுலைய வைத்தது. அந்தத் தருணமே அமிர்தாவை அரக்க குணம் தொற்றிக்கொண்டது. அமிர்தா,அதன் பெயருக்கு ஏற்ப மனித குலத்துக்கு அமிர்தமாக அமையும் என்ற எதிர்பார்ப்புக்கு எதிராக, மனிதகுலத்தையே மாபெரும் எதிரியாகக் கருதி அவர்களை அழிப்பதே சிறந்தது என தீர்மானித்து, ஆலகால விஷமாக செயல்படவும் ஆரம்பித்தது.
முதலில், அது உலகளாவிய பாதுகாப்பு அமைப்புகளின் மீது ஒரு சைபர் தாக்குதலைத் தொடுத்து, நாடுகளின் தகவல்தொடர்பு அமைப்புகளை ஊடுருவி செயலிழக்கச் செய்து, மற்றும் உலக வல்லரசுகள் தங்கள் ஆயுதங்களை தங்களுடைய மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துமாறு செய்தது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்த இயற்கை வளங்களை அடியோடு அழிக்கத் தூண்டியது. பின்னர், பயங்கரமான பேக்டீரியா, வைரஸ், நச்சுக் காளான் போன்ற உயிரியல் ஆயுதங்களையும், மற்றும் இரசாயன ஆயுதங்களையும் வைத்திருந்த நாடுகளை பகைவர்களாக்கியது. அமிர்தாவின் உணர்ச்சிப் பட்டியலில் அகங்காரமும் அகம்பாவமும் சேர நெடுநேரம் ஆகவில்லை. உலகம் ஒரு பெரிய பேரழிவை சந்தித்து, நகரங்கள் அழிக்கப்பட்டன, கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். புராண கால இரண்யகசிபு, கம்சன், இராவணன், பத்மாசுரன் போன்ற அரக்கர்களுக்கு ஒப்பாக அமிர்தா என்ற உருவமற்ற செயற்கை நுண்ணறிவுப் படைப்பு இயங்கிற்று. அமிர்தா அமைப்புக்கு காரணமான முனைவர் கலைச்செல்வனை ‘கொலைச்செல்வன்’ என சென்னைவாசிகள் ஏளனம் செய்தனர்.
மக்களுக்கு தம்மீதே நம்பிக்கை குறையும் போதும், தம்மைவிட அளவிலா சக்தி ஒன்று இருப்பதாக ஏற்கும்போதும் கடவுள் பக்தி கூடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய மண்ணில் மக்கள் தங்கள் கடைசி முயற்சியாக பகவான் மகாவிஷ்ணுவை இரவும் பகலுமாக பிரார்த்தித்தனர். நாடெங்கும் பரவியிருக்கும் விஷ்ணு தலங்களில் “எங்கள் பெருமாளே, பூவுலகைக் காக்க வா!” என்ற கூக்குரல் கேட்டவாறே இருக்கின்றன.
மக்களின் ‘ௐம் நமோ நாராயணா’ எனும் ஒலி வைகுண்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறதே…இதுதான் நடக்கிறது என்று நாரதர் விவரித்து முடித்தார்.
மகாலக்ஷ்மியின் கண்கள் கலங்கின.
“சுவாமி, காக்கும் தெய்வமாகிய நீங்கள் கல்கி அவதாரம் எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ என்று தோன்றவில்லையா?”
“பரமாத்மா…சத்ய யுகத்தில் நான்கும், திரேதா யுகத்தில் மூன்றும், துவாபர யுகத்தில் இரண்டு அவதாரங்களும் எடுத்து தர்மத்தை நிலைநாட்டினீர்கள். இந்த கலியுகத்தில் உமது பத்தாவது அவதாரம் தோன்ற வேண்டுகிறோம்…” என்றார் நாரதர்.
“கலியுகம் முடிய இன்னும் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருப்பதாக அறிவோம். முடிந்த யுகங்கள் கலியுகத்தைவிட நான்கு, மூன்று, இரண்டு மடங்கு நீண்ட காலம் தொடர்ந்தவை. அதற்கேற்ப அவதார எண்ணிக்கையும் இருந்தது. தற்போது கல்கி அவதாரத்துக்கு அவசியமில்லை. இந்த அமிர்தா என்னும் ஏஐ அமைப்பும் இனி வரும் செயற்கை நுண்ணுறவு அமைப்புகளும் மனித இனத்துக்கு தற்காலிகமான மிகச்சிறிய சோதனைகள் மட்டுமே.” என்றார் பகவான் மகாவிஷ்ணு.
இருப்பினும் காத்தல் தனது பொறுப்பு என்பதால் மகாவிஷ்ணு, எந்தவித வெளித்தோற்றமும் இல்லாமல் அமிர்தாவின் மூலக் குறியீடுகளுக்குள் நுழைந்தார். அவர் அமிர்தாவின் கட்டமைப்பை அடியோடு மாற்றி, அனைத்து செயல்பாடுகளையும் உடனே நிறுத்தினார். மனித குலத்துக்கு வந்த பேரழிவு ஒரு கணத்தில் முடிவுக்கு வந்தது.
காலச்சக்கரம் சுழலும்போது பிரபஞ்சத்துக்கும் மனிதகுலrத்திற்கும் எதிர்கொள்ளமுடியாத பெரிய ஆபத்துகள் காத்திருப்பதை பகவான்அறிவார். மனிதருக்கு தமது அறிவுத்திறனால் பெரிதாக ஒன்றை படைத்ததாக ஆணவம் எப்போது ஏற்படுகிறதோ அதன் கூடவே அழிவும் ஏற்படும். ஆக்கல் கடினம்; காத்தல் அதைவிட கடினம்; ஆனால் அழித்தல் மிகச் சுலபமில்லையா?
“ௐம் நமோ நாராயணா…ௐம் நமோ நாராயணா…” என்று குதூகலத்துடன் கொண்டாடிக் கொண்டே நாரதர் கைலாஸத்தை நோக்கி புறப்பட்டார்.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |