கலங்கிய கண்கள்




(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஐயோ கணேசா!

உதவி டீமேக்கர் முத்துநாயகம் தன்னை மறந்து பாய்ந் தோடினார். நாளாந்தம் கேட்டுப் பழகிய இயந்திர இரைச்ச லுக் கூடாகச் சன்னமாய் ஒலித்தாலும், அவர் போட்ட சத்தத்தை இனம் கண்டு ‘ரோதை காம்பரா’வில் இயந்திரங் களை இயக்குகின்ற இயந்திரமாய் நின்றிருந்த தொழிலாளர் கள் பதறி ஓடினர், அரவம் கேட்ட ஆட்டு மந்தைகளாய்.
வேர் வெட்டிய மரமாய், சின்னவரின் மார்பில் வீழ்ந்து கிடந்தான் நினைவிழந்த கணேசன்.
“கணேசா…! கணேசா…” முதுகைத் தன் இடக்கை தாங்க வலக்கையால் அவனது முகத்தைத் தூக்கி அசைத்துப் பார்த்தார் முத்துநாயகம்.
கண்ணாடியில் ஒட்டிய மழைத்துளிகளாய் அவன் முக மெங்கும் வேர்வைத் திவலைகள் அரும்பி நின்றன.
முத்தாகத் திரண்ட வேர்வைத் துளிகளுக்கடியில் எதிர் பாரா அதிர்ச்சியால் வெளுத்துக்கிடந்த அவனது முகத்தை, ததும்பிய கண்ணீர் பார்க்க விடாது தடுத்தது அவரை.
அவனுடைய வலக்கையின் மணிக்கட்டுப்பகுதி, நாரில் தொங்கும் வாழைத்தண்டாக, ஒடிந்து கிடந்தது. குங்குமச் சிவப்பாய் அதினின்று கொட்டி வழிகிற குருதியைத் தடுக்க அடுத்து நின்றவன் தலை லேஞ்சியை அவிழ்த்து, சின்னவ ரிடம் கொடுத்தான்.
உணர்ச்சி வயப்பட்ட அளவுத்கு, ஒன்றும் செய்யத் தெரி யாத மக்கள் சுற்றிவரக் காற்றிலாடும் மரங்களாய்க் கலங்கி நிற்க, அவனை அலாக்காய்த் தூக்கிச் சென்று, வெளியே நின்றிருந்த கொழுந்து லொறியில் கிடத்தினார் முத்து நாயகம்.
தாரை தாரையாய் அவர் கண்கள் நீரைச் சொரிந்தன. ஒழித்துக் கட்டிய உள்ள மாசை உணர்த்தி நிற்கவோ அவர் கண்ணீர் வடிகிறார்?
“ஐயோ கணேசா!”
மூட்டமாய்த் தெரிந்த நினைவின் எல்லையில் இறுதி யாய்க் கேட்ட குரலை ஊகிப்பால் ஒருத்தருக்கு உரித்தாக்கி, அதனாலேற்படுகிற மகிழ்ச்சியில், அசைத்தாலேபடுகிற கைவலியை மறக்கமுயன்றான் கணேசன். உதட்டைப் பற் களால் கவ்வி, உபத்திரவத்தைக் குறைத்து வைத்து, முழங் கையை வயிற்றில் நிறுத்திக்கையை நிமிர்த்தி வைப்பதற்குள் அவன் பட்ட பாடு…!
மணிக்கட்டைச் சுற்றி ‘பாண்டேஜ்’ போட்டிருந்தார்கள். இறுகக் கட்டிய துணியை அவிழ்த்தால் மூளியாய்த் தெரிகிற…
“ஓ!…” அவனால் அழாமலிருக்க முடியவில்லை. அப்படிக் கண்ணீர் சிந்தி அழுவதற்கும் அந்த ஆண்பிள்ளை யால் முடியாது.
இழந்ததை வைத்து, இருந்ததை நினைத்தால், எழு கின்ற உணர்வை இல்லாது செய்வதோ?
ஓடிவழிந்து, காட்டிக் கொடுக்கும் முன்னரே, கசிந்து வருகிற கண்ணீரைத் துடைக்க எண்ணி அவன் கையைத் தூக்குகையில்…
“ஐயோ அம்மா!…” முழங்கையில் யாரோ ஓங்கிச் சுண்டினாற்போல் வெட்டி இழுக்கிற நரம்பால், சுற்றிவிட்ட பம்பரமாய் அவன் சுழன்று விழுகின்றான் படுக்கையில். அவ னுக்கு மீண்டும் நினைவு தப்புகிறது.
நினைவு மீண்டு அவன் கண் விழித்தபோது மாலை நேரமாயிற்று. சுழிநீராய் நினைவுத் தொடர் சுழன்று நீள் கிறது. பெரிய வேலைக்குப் போகிறார் என்பதறிந்து மகிழ்ந் தாலும் அவரைப் பிரிவது அவனுக்கு வருத்தமாயிருந்தது. அவனது வருத்தம் நியாயமானது.
கல்லூரியில் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண் டிருந்த காலம். இயல்பாய் எழுகிற முரட்டுச் சுபாவத்தால் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ஓயாது சண்டை பிடித்துக்கொண்டு, அப்படிச் சண்டை பிடிப்பதனாலே, தன் திறமையைப் பிறர் குறைத்து மதிக்க வழிபண்ணி, அப்படிப் பிறர் தன்னைக்குறைத்து மதிப்பதையே சண்டைக்குக்காரண மாக்கி, அதனாலேயே கல்லூரியைவிட்டு விலகியவன்தான் இந்தக் கணேசன்.
கல்லூரி உதைபந்தாட்டக் குழுவிலிருந்து வேண்டு மென்றே தன் பெயர் ஒதுக்கப்பட்டிருப்தாக அவன் நினைத்தான்.
உண்மையில் அவனது காலத்தில் துவளாத மனசோடு அவ்வளவு தீர்க்கமாக விளையாட, அந்தக் கல்லூரியில் அவனைப்போல வேறு யாருமில்லைதான். அடுக்கடுக்காய் ஐந்தாறு கோல்களை
கோல்களை எதிர்க்குழுவினர் போட்டாலும், அடுத்த கோல் நாம்தான் போடப்போகிறோமென்ற நினைப் பில் உற்சாகம் மேலிட, ஓடி விளையாடி, இறுதியில் தோற்க நேர்ந்தாலும், தோல்வியின் நினைப்பே எழாதவாறு தனித்து நின்ற அவனது விளையாட்டே, பார்ப்பவர் மனசில் தங்கும்.
அவனுக்குத்தான் கல்லூரி உதைபந்தாட்டக் குழுவில் இடமில்லை! இடமில்லாதது மாத்திரமல்ல, ‘கணேசனுக்கு இடமில்லாமல் செய்வேன்’ என்று சபதம் போட்ட ஒருவனையே குழுவிற்குத் தலைவனாகவும் போட்டிருக்கிறார்கள்.
அணைக்கட்டை உடைத்தெறிந்த ஆற்று நீராய், ஆத்தி ரம் பீறிட்டது கணேசனுக்கு. குழுவில் இடம்பெறாத வேறு பத்து மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கல்லூரிக்குழுவை எதிர்த்து விளையாட அவன் முனைந்தபோது, உள்ளூர அவன் திறமையை உணர்ந்த ஒவ்வொருவரின் மனசும் அவனைப் பாராட்டியது.
விளையாட்டு மைதானத்தில் முன்பு ஒரு நாளுமில்லாத. அசாத்திய வெறியோடு அவன் அன்று விளையாடினான். அதுவே, தோற்றுவிடுவோம் என்று தீர்க்கமாகத் தெரிந்த கடைசி நிமிடத்தில் கல்லூரிக் குழுவின் தலைவனது கன்னத் தில் கைநீட்டி அடிக்க வைத்தது. ‘ஸ்போர்ட்ஸ்மன்ஷிப்’ இல்லாத அந்தச் செய்கையினால் அவன் கல்லூரியிலிருந்து விலக்கம்பட்டான்.
அரைகுறைப் படிப்போடு, கல்லூரியை விட்டுவந்த தொழிலாளியின் மகனான அவனுக்குத் தொழில் பெறுவது முடியாததாகிவிடவே, தோட்டத் தொழிலாளியாகவே அவ னும் மாறினான். அங்கேயும் அவனது சுபாவம் இலகுவில் மாறியதா?
கங்காணி, கணக்கப்பிள்ளை, கண்டக்டர் என்று ஒவ் வொருத்தரிடமும் முட்டி மோதி இனிப் ‘பற்றுச்சீட்டை’ இழக்க நேரிடும் என்ற எல்லைக்கு வந்த பின்னர், நிரந்தர மாகத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஒருத்தனானான். தொழிற்சாலைக்கு வந்ததன் பின்னர்தான், அவனுடைய முரட்டுக் சுபாவம் அடங்க ஆரம்பித்தது. அதை அடக்குவதற் கென்றே அவனோடு சற்று நெருங்கிப் பழகினார் உதவி டீமேக்கர் பொன்னுத்துரை. குறையில் விட்டாலும் படித்த டைக்காலத்தில் பழகியிருந்த பழக்கங்கள், சக பாமரத் தொழிலாளர்களிடமிருந்தும் அவனைப் பிரித்துக் காட்டின.
அவர் சொல்லாமலே அவன் வேலைகளை விளக்கிச் செய்வான். அப்படி அவன் விளங்கிச் செய்வதாலேயே, அவர் மற்றவர்களிலிருந்தும் அவனை விலக்கி, மதித்தார். அவர் விலகிப் போவது அவனுக்கு வருத்தமாகத்தானே யிருக்கும்? வரப்போகிறவர் எப்படியோஎன்ற நினைப்பைவிட வரப்போகிறவரிடம், விலகிச் செல்லும் சின்னவர் பொன்னுத் துரை தன்னை நடத்திய முறையால் பொறாமை கொண் டிருக்கும் தொழிலாளர்கள் ‘இட்டுக்கட்ட இருப்பது எத்த னையோ என்பதை நினைத்து ஆயாசப்பட்டான் கணேசன்.
அவன் பட்ட ஆயாசம் அர்த்தமற்றதாகிவிட்டது. புதி தாக வந்த முத்து நாயகத்தை அவனுக்கு முன்னரே தெரியும்! அவர்தான் அவனிடம் அறை வாங்கினவர், கல்லூரி உதை பந்தாட்டக் குழுத்தலைவனாய்யிருந்த போது.
அவரைக் கண்ட முதற்கணம், அவன் முகம் வியர்த்துக் கொட்டியது. தலைப்பாகையை அவிழ்த்துத் துடைத்துக் கொண்டான்.
அவனை அங்கு கண்ட அவருக்கு முகம் கறுத்து வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.
இராட்சத இயந்திரங்களெல்லாம் திடுமென நின்றாற் போன்றதோர் அந்தகாரத்தைக் கணேசன் உணர்ந்தான்.
தன்னைக் கண்டவுடன் அவருக்கு எப்படி இருந்திருக் கும்? அடிப்பட்ட புலியைப்போல் அவருணர்ச்சிகள் ஆவேசிந் தெழுந்தனவோ? உறங்கிய உணர்வலைகள் தன்னைக் கண்டதால் உசும்பித் துடித்தனவோ? வேலை முடிந்தி வீட்டுக்குப் போகுமுன்னர், அவரைத் தனியே சந்தித்து, பள்ளி வாழ்க்கையின் இளம்பிராயத்துச் செய்கையை மறந்து விடும்படி கேட்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.
அவன் தீர்மானம் தீர்மான அளவிலே நின்றுபோக ஒரு கிழமை ஓடிக்கடந்தது. இன்று மாலை, இன்று மாலை யென்று ஏழு மாலைகளை ஓடவிட்டு, எட்டாம் நாள் காலை, “இன்று சாயந்திரம் எப்படியும் அவர் பங்களாவுக்குச் சென்றேனும் கதைத்தே விடுவது” என்று உறுதிகூட்டி, உறுதிக்கு உரம்சேர்க்க, ‘அவர் அதை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாரென்பது என்ன நிச்சயம்? அப்படி மறந்திருந்து, நாம் போய்க் கேட்கப் போக, மறந்திருந்தது நினைப்பாகி, மனசிலே பகை வளர்ந்தால்… வீண் வம்பாகி விடுமே…
“அடேய் கணேசா! பாரம் தூக்கிப் போட்டாயாடா? உன் ரோதையில் பார் சூடேறி ஆவி பறப்பதை.”
அவன் உடல் முழுக்க ஒரு சேர அதிர்ந்து நின்றது. அவனுக்கு வெகு அருகில் இடுப்பில் கைவைத்து. அதிகார தோரணையில் அட்டகாசமாய் நின்றார் முத்துநாயகம்.
அவர் நின்ற தோரணை, அவனை விளித்தமுறை, அந்த இரண்டுமே கணேசனுக்கு வெறுப்பை யூட்டின.
ஆனால், வெறுப்புப் பாராட்டுகிற இடமா அது?வேலைத் தளத்தில் அவன்தானே பணிந்து போக வேண்டும்-பணிந்து போனான். கல்லூரியில் நடந்ததை முத்துநாயகம் இன்னும் மறந்துவிடவில்லை என்பது கணேசனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் இந்தத் தொழிற்சாலைக்கு வந்து பதவி யேற்று, ஒரு வாரமாகிறது. இதுவரை அப்படி வேறு யாரிடமும் பேசியதில்லை. அடுத்த ஒரு மாத காலமாய் ‘ரோதை காம்பரா’வுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, முத்துநாயகம் கணேசனிடம் போய்த்தான் நிற்பார். அவன் வேலையில் வேண்டுமென்றே குறை கண்டுபிடித்து விட்டுத் தான் மறுவேலை!
தனக்கு வேலை பார்த்துத் தரும் உத்தியோகத்தராய் அவரைக் கண்ட முதற்கணமே. கல்லூரியில் ஒன்றாகப் படித்த நினைவின் உறுத்தலால், அவரிடம் போய் எதை மறந்து விடும்படி கேட்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டி ருந்தானோ, அந்த நினைப்பே அவனிடம் விசுவ ரூபம் எடுத்தது.
அடங்கியிருந்த அவனது முரட்டுச் சுபாவம் வெடித்து எழுந்தது, சுற்றிநிற்கும் அறுபது தொழிலாளர்களும் ஏளன மாய்ப் பார்த்து நிற்க, அந்தப் பார்வையின் முழுத் தாக்கு தலையும் வார்த்தாற்போல் முத்துநாயகம் உதிர்த்து விடும் வார்த்தை ஊசிகளை அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
வாட்டக் கொழுந்து, ‘ரோதை’க்குள் வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி விழுகிற ஆயிரம் இறாத்தல் வாட்ட இலையையும் ‘ரோதை’க் குள்ளாகவே தன் பலமெல் லாம் சேர்த்துத் தள்ளிப் பாரமான கட்டையைப் போடுவதற் காகச் சங்கிலியைச் சுழற்றினான்.
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. ஆறு நிமிட வேலையை அன்று அவன் இரண்டு நிமிடங்களில் செய்திருக் கிறானே!
‘கணேசா!… இலை பிடிக்க உனக்கு எவ்வளவு நேரம்டா வேணும்? வேலை செய்யமுடியாத சோம்பேறிகளெல்லாம் வீட்டோட இருக்க வேண்டியது தான்….’ கணேசன் தன்னை மறந்தான். அவன் நரம்புகள் புடைத்தெழுந்தன. அடிவயிற் றில் கனன்றெழுந்த பெருமூச்சு பாம்பின் சீறலாய் வெளிப்பட்டது. இளம்பருவத்துப் பள்ளி நிகழ்ச்சியை இங்கேயும் காட்டத் துணிந்து விட்டானா அவன்?
ஐந்து விரல்களின் அச்சுப் பதிவை அவர் கன்னத்தில் மறுமுறையுமிட முனைந்துவிட்டானா அவன்?
அறுபது தொழிலாளர்களின் முன் வைத்து, அவரது கொட்டத்தை அடக்கியே தீர்வது. அவன் தீர்மானித்து விட்டான்.
“முத்துநாயகம்!…” இரைந்து வீழ்கிற நீரருவியாய் எழும்பி நிற்கிற இயந்திர சப்தங்களையும் மீற, இரைந்து கொண்டே வலக்கையை வேகமாகச் சுழற்றிக்கொண்டு திரும்பியவன்…
“ஐயோ அம்மா!” திரும்பிய வேகத்திலேயே திசை மாறிச் சுழன்றான். அவனது வலக்கையின் முன்பகுதி ‘ரோதை’யின் அடியில் சிக்கித் துண்டாகி வாட்டக் கொழுந் தோடு கலந்து இரத்தம் பீறிட்டு வடிந்தது…
ஓடுகிற எண்ணங்களை ஊடறுத்து நிறுத்துகிறது, எதிரே வந்து நின்ற மனித உருவம் முத்துநாயகம் நின்று கொண் டிருக்கிறார். ஆரஞ்சுப் பழங்களும் ஆப்பிள் பழங்களும் அவர் கையில் நிறைந்திருக்கின்றன. மற்றொரு கையில் ஃபிளாஸ்க்கை இறுகப் பற்றியிருக்கிறார். கண்களைத் திருப்பிக் கொள்கிறான் கணேசன்.
ஒடிந்த கரத்தில் உயிர்த்து எழுகிற ஓராயிரம் எண்ணங் கள் அவனை உழற்றுவிக்கின்றன.
“கணேசா…!”
கேட்கும் சக்தி தன் செவிகளுக்கில்லையென்பதுபோல, அசையாது படுத்துக் கிடக்கிறான் அவன்.
“கணேசா! என்னால் தானடா உனக்கு இந்தக் கதி!” வலக்கையை மூளியாக்கி, வாழ்க்கையின் முடிவையே தந்து விட்டு, எதிரே வந்து நிற்கிற அந்த மனிதனை அப்படியே நெரித்துக் கொன்றுவிட்டால்…!
இடக்கையோடு இணையமுடியாத வலக்கை வெறுமனே ஆடி விழுகிறது, செயலுருக் காணாத ஆத்திரம் வெறும் விம்ம லாய்க் காற்றில் கலக்கிறது.
அவன் கண்கள் சிவந்து கலங்குகின்றன.
அவர் கண்கள் கலங்கிச் சிவக்கின்றன. ஒன்றிணையப் போகும் உள்ளங்களின் அறிகுறியாமோ அது?
– 1965
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.