கலக்கமும் தெளிவும்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 5,547
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாண்டிய மன்னர் பலரும் தங்கள் தங்கள் ஆற்ற லாலும் அருங்கொடையாலும் அறிவுச் சிறப்பாலும் பெரும் புகழை அடைந்து விளங்கினவர்களே. ஆனாலும், முதுகுடுமிப் பாண்டியன் தனக்கெனச் சிறப்பான கீர்த்தியைத் தேடிக்கொண்டவன். வழுதியர் வம்சத்தில் அவன் சிறந்தோர் வரிசையிலே எண்ணுவதற்கு உரியவன். ஆகவே, அவனைப் பாண்டியன் என்ருே வழுதி யென்ருே சொல்லாமல் பெருவழுதி என்று மக்கள் அனைவரும் வழங்கினர். முதுகுடுமிப் பெருவழுதியின் புகழ் இந்த அளவோடு நிற்கவில்லை. அவனுடைய வீரச் செயல் இமயம் முதல் குமரி வரையில் அவனுக்குப் புகழை உண்டாக்கியது. அவன் செய்த புண்ணியச் செயல்களோ பூவுலகத்துக்கு மேலும் கீழும் பரந்து புகழை உண்டாக்கின. தேவர்களுடைய உள்ளம் உவக்கும் செயல்களைத் தக்காரைக் கொண்டு செய்வதில் அவன் ஈடுபட்டான். மக்கள் இனிது வாழ்வதற்கேற்ற யாகங்களைச் செய்வித்தான். அங்கங்கே வேள்விகள் நிகழும் யாகசாலைகளைப் புரக்கும் பெரு வண்மையை உடைய அவனை, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று யாவரும் சொல்லிப் பாராட்டினார்கள்.
நல்லவர்களையும் வீரர்களையும் பாடுவதற்கு வாயூறிக் கிடக்கும் புலவர்கள் பலர் முதுகுடுமியின் புகழைப் பாடினர். அப்படிப் பாடும்பொழுது ஒருவர் சொன்ன வாறே சொல்லாமல் புதிய புதிய விதமாகச் சொல்ல முனைந்தனர். அவனுடைய வீரச் செயல்களும், அறச் செயல்களும் பல என்பதை யாவரும் உணர்வர். அவற்றை ஒவ்வொன்ருக அடுக்கிச் சொன்னாலே ஆயிரம் பாட்டாகும். அது போதுமா? கருத்தைச் சொல்வது பெரிதல்ல; அதைச் சொல்லும் தோரணை தான் பெரிது. அந்தத் தோரணையிலே நயமும் சுவையும் இருக்கவேண்டும். கவிஞனுடைய ஆற்றல் சிறப்பாக இருந்தால், எத்தனை தடவை ஒரே கருத்தைச் சொல்வதாக இருந்தாலும் வெவ்வேறு அழகோடு சொல்ல முடியும்.
காரிகிழார் அத்தகைய ஆற்றலுள்ள புலவர். முது குடுமியின் புகழ் எங்கும் பரவியிருப்பதை நன்ருக உணர்ந்தவர். அவன் புகழைத் தெரிந்தவர்கள் அவனுடைய பாராட்டில் இன்பம் காணலாம். அவன் புகழை அறியாதவர்கள் கூடப் பாட்டின் இனிமையிலே ஆழவேண்டுமென்று அவர் நினைத்தார்.
முதுகுடுமி தெய்வ பக்தியிலே சிறந்தவன். முக்கட் பிரானாகிய சிவபெருமானிடம் உறுதியான அன்பு பூண்டவன். அப்பிரானது திருக்கோயிலை வலஞ் செய்யும் வழக்கம் உடையவன். வேத வேள்வியினிடம் நம்பிக்கை உடையவன். எரியோம்பும் அந்தணர்களை வணங்குபவன். அவர்களுடைய ஆசியை விரும்புகிறவன். வீரத்திலோ, அவன் செயலே அளவிட்டுச் சொல்ல முடியாது. அவனுடைய ஆனக்கு அடங்க மறுத்த நாடுகள் என்ன ஆயின, தெரியுமா? தீக்கடவுளின் ஆட்சியை அங்கே நிறுத்தும் கொடுஞ் சினத்தை உடையவன் அவன். வீரம் உள்ள இடத்தில் காதல் சிறக்கும். ஆகவே அவன் காதல் இன்பத் திலும் திளைத்தான். கற்புடைய மட மங்கையர் பல ருக்குக் கணவகை இருந்தான் ; அவருடைய காதல் இன்பத்தை நன்கு நுகர்ந்தான். அவனிடம் அறச் செயல் சிறந்து நின்றது; பொருளிலும் அவன் சிறந்து விளங்கின்ை ; இன்ப நிலையில் உயர்ந்தோங்கினன்; வீட்டு நெறியையும் மறவாமல் கடவுளிடம் அன்பு பூண்டொழுகினன்.
இவற்றையெல்லாம் காரிகிழார் நன்ருக உணர்ந்து கொண்டவர். அவருக்குத் தமது சாதுரியத்தால் சிறிது நேரம் அமைச்சரையும், புலவரையும், அரசரை யுங்கூடக் கலக்கமடையச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அதை நிறைவேற்றும் சமயத்தை எதிர்பார்த்திருந்தார்.
2
அரசவையில் அன்று பெருங்கூட்டம். திருக்கோயில்களிலிருந்து இறைவன் திருவருட் பிரசாதத்தை ஏந்தி வந்த பெரியார் பலர் அங்கிருந்தனர். வேள்விகளை முடித்துக்கொண்டு, அவை நிறைவேற உறுதுணையாக இருந்த மன்னனை நேரிலே கண்டு ஆசி. கூற அந்தணர் பெருமக்கள் பலர் வந்திருந்தனர். பாண்டிய மன்னனது ஆணைக்கு அடங்கி ஒழுகுவதாக முறியெழுதிக் கொடுத்த மன்னர்களின் பிரதிநிதிகள் பலர் அங்கு அமர்ந்திருந்தனர். அரசனுக்கு உறவினர்களும் அமைச்சர்களும் நண்பர்களும் குடிமக்களில் தலைவரான வர்களும் விஜயம் செய்திருந்தனர். ஆடல் மகளிரும் பாடற்பாணரும் கூடி யிருந்தனர். செந்தமிழ்ச் சான்ருேராகிய புலவர் பலர் வீற்றிருந்தனர். அந்தப் புலவர் கூட்டத்திடையே காரிகிழாரும் அமர்ந்திருந்தார்.
அங்கே நடந்த பேச்சு அவ்வளவும் அரசனுடைய பலவகைப் புகழைப் பற்றியதாகவே இருந்தது.
“இந்த அரசர் புகழ் இமயத்துக்கு வடக்கிலும், குமரிக்குத் தெற்கிலும், கீழ் கடலுக்குக் கிழக்கிலும், மேல் கடலுக்கு மேற்கிலும் பரவி நிற்கிறது” என்ருர் ஒருவர்.
“அந்த எல்லே இந்த உலகத்தளவிலே அமைந்த தல்லவா ? மன்னர்பிரான் புகழ் மூன்று உலகத்திலும் பரவியதாயிற்றே! பூலோகத்தின் கீழே பாதாள லோகத்திலும் இவர் புகழ் பரவியிருக்கிறது. மேலே கோலோகத்தளவும் சென்றிருக்கிறது” என்றார் மற்றொருவர்.
“எங்கே போனாலும் நம் மன்னர் பிரானுடைய ஆணை கண்டு அச்சமும், ஆற்றல் கண்டு புகழும் நிறைந்திருக்கின்றன” என்று சுருக்கமாகச் சொன்னார் ஒருவர்.
சக்கரவர்த்தியின் செங்கோலுக்கு அஞ்சுவார் அஞ்சுக. அது எப்போதும் துலாக்கோலைப்போல நடு நிலையிலே நிற்பது. நியாயப்படி நடப்பவர்கள் அதற்கு அஞ்ச வேண்டுவதில்லை’ என்று வேருெருவர் தம் கருத்தை உரைத்தார்.
“நம் அரசர் பகைவரை வெல்ல வெல்லப் பரிசிலருக்குத்தான் யோகம். எவ்வளவு நாடுகளை இப்பெருமான் அடக்கினுலும், அவற்றால் வரும் பொருளைப் புலவருக்கும் பாணருக்கும் கூத்தருக்கும் வாரி வழங்குவ தன்றி, தமக்கென்று அதைப் பயன்படுத்திக் கொள்வ தில்லையே! இப்படி ஒரு பெரியவர் பாராட்டினர்.
“பரிசிலருக்கு வழங்குவது கிடக்கட்டும். எல்லோரும் வழங்குவார்கள். ஆல்ை, வரிசை அறிந்து வழங் கும் பெருமை இருக்கிறதே, அதைச் சொல்லுங்கள். பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கும் பண்பைப் பாராட்டுங்கள்” என்று எழுச்சியோடு பேசினர் ஒரு புலவர்.
அதுவரையில் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த காரிகிழார் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் ஏதோ சொல்லப் போகிருரென்று அருகில் உள்ளவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆண்டில் முதிர்ந்த சான்ருேர் ஒருவர், காரிகிழார் ஒன்றும் பேச வில்லையே ஏதாவது சொல்லக்கூடுமென்று எதிர் பார்ப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பல பேர் இருக்கிறார்கள்” என்றார்.
காரிகிழார் பேசத் தொடங்கினர்.
3
“நம்முடைய சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு அறிஞர்கள் பேசிய பிறகு நான் என்ன சொல்லப் போகிறேன்! அப்படி ஏதாவது சொன்னாலும், என் மடமையை வெளிப்படுத்திக் கொண்டதாக முடியுமேயன்றி, மன்னர் பெருமானது பெருமையை வெளிப்படுத்தியதாகாது. ஆலுைம், தோன்றியதைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.”
“இந்த முன்னுரையைக் கேட்ட புலவர்கள், காரிகிழார் எதற்காக இந்த அவையடக்கம் கூறவேண்டும்?” என்று நினைத்தார்கள். காரிகிழார் பேசலானர்.
பல பெரிய மன்னர்களை இப் பாண்டிய மன்னர் வென்ருரென்பது உண்மைதான். வேறு யாருடைய குடையின் கீழும் இந்நாட்டார் வாழாதபடி தம் ஒரு குடையை விரித்து உலகைப் புரக்கிருர் இப் பெரு வழுதியார். இவருடைய குடைவிரிய மற்றவர்களுடைய குடிைகளெல்லாம் மடங்கின என்று சொல்லிப் பாராட்டுகிருேம். ஆனால் இவர் குடையும் மடங்கும் குடை என்று யாரேனும் சொல்வார்களா?”
“சொல்லமாட்டார்கள், சொல்லமாட்டார்கள்” என்று மெல்லிய குரலில் அங்குள்ளவர்கள் சொல்லுவது காரிகிழார் காதில் விழுந்தது.
“இவர் குடையும் மடங்கும் என்று நான் சொல்லுகிறேன்.”
“ஆ!” என்று திடுக்கிட்டனர் பலர். இதென்ன அநுசிதமான வார்த்தையைப் பேசுகிறார் புலவர் என்று எண்ணினர் சிலர். புலவர் கூட்டத்தில் எல்லோரும் காரிகிழார் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு நோக்கினர்.
“இவர் குடை மடங்குவது கிடக்கட்டும். எட்டுத் திக்கிலும் உள்ள மன்னர்களை வென்று அவர்கள் முடிதம் அடிவருட நின்ற பிரான் என்று நம் அரசரைக் கொண்டாடுகிருேம். வணங்கா முடியுடைய வழுதி என்று சொல்லுகிருேம். இவர் வணங்கும் முடியை உடையவரே என்று நான் சொல்லுகிறேன்; தைரியத்தோடு சொல்லுகிறேன்.”
சபையில் உள்ளவர்கள் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. சாமானியமான குறுநில மன்னர்க ளெல்லாம் வணங்காமுடித் தம்பிரான் என்று. பட்டம் பெற்றிருக்கிருர்கள். உண்மையிலே வணங்கா முடி பெற்ற வழுதியை வணங்கிய முடியினகைச் சொல்வது பிழை ; பாவம் என்றே சொல்லவேண்டும். அப்படியிருக்க, காரிகிழார் என்ன காரணத்தால் இப்படி யெல்லாம் பேசுகிறார்? அரசவையில் சமயமறிந்து பேசத் தெரியாதவர் அல்லவே இவர்”-அவர்கள் சிந்தனை எப்படியெல்லாமோ ஓடியது.
காரிகிழார் அதோடு நிற்கவில்லை. ‘இம் மன்னர் பிரானது கண்ணி விளக்கம் பெறுவதாக என்று வாழ்த்துகிருர்கள் புலவர்கள். நான் அது வாடட்டும் என்று வாழ்த்துகிறேன்.’
இடியோசை கேட்டதுபோல இருந்தது சிலருக்கு. என்ன அமங்கல வார்த்தை என்று செவி புதைத் தனர் சிலர். அரசன் ஒன்றுமே விளங்காமல் உட் கார்ந்திருந்தான். அமைச்சர் கண்கள் சிவந்தன.
பெருவழுதியின் சினம் தாங்குவதற்கரியது என்று பேசுகிருேம். அது பகைவரைக் கருவறுப்பது, என்றும் தணியாதது என்று பாராட்டுகிருேம். அந்தச் சினம் மேற் செல்லமாட்டாமல் அடங்கட்டு மென்று நான் சொல்லுகிறேன்.’
ஒரு பெரியவருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. “காரிகிழாரா இப்படியெல்லாம் பேசுகிறவர்? இந்த வார்த்தைகளைக் கேட்ட செவிகளைக் கங்கை நீரால் கழுவிலுைம் தீராது. சொன்ன நாவைப்பற்றி என்ன சொல்வது?” என்று பொருமினர்.
காரிகிழார் அஞ்சவில்லை. நடுங்கவில்லை. புன்னகை பூத்தார். அந்தப் பெரியவரைப் பார்த்தார். “உங்கள் கோபம் நியாயந்தான். ஆனல் நான் இன்னும் முழுமையும் சொல்லவில்லையே! அதற்குள் உங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டீர்களே!” என்றார்.
“இன்னும் வேறு இருக்கிறதா?” என்று அந்தப் பெரியவர் கோபத்தோடு கேட்டார்.
“பொறுங்கள்; சற்றுப் பொறுங்கள், மடங்காத குடை மடங்குக என்று பின்னும் வாழ்த்துகிறேன். இகழவில்லை; வாழ்த்துகிறேன். வணங்கா முடி வணங் குக என்று வாழ்த்துகிறேன். வாடாத மாலை வாடுக என்று பரவுகிறேன். அடங்காத கோபம் அடங்குக என்று வாழ்த்துகிறேன்” என்று அவர் சொல்லும் போது யாவரும் பெரிய குழப்பத்தை அடைந்தனர். புலவர்கள் மாத்திரம், ஏதோ அற்புதம் விளைவிக்கப் போகிருர் இவர்” என்று உறுதியாக நம்பினர். அவர் களிற் சிலர், ‘புலவர் பெருமான் இனியும் அவையி னரை மயக்கத்தில் ஆழ்த்தவேண்டாம். தெளிய வைக்கவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர்.
4
காரிகிழார் ஒரு முறை சுற்றிலும் பார்த்தார். எல் லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். மன் னன் ஆவலை வெளிப்படையாகக் காட்டவில்லையே ஒழிய, எல்லோரையும்விட அதிக வேகம் அவனுக்குத் தான் இருந்தது. புலவர் பேசத் தொடங்கினர்.
“எல்லோருக்கும் படபடப்பை உண்டாக்கிவிட்ட என் செயலைப் பொறுத்தருள வேண்டும். நான் சொன்னவையெல்லாம் மன்னர் பிரானுடைய சீரிய குணங்களைப் புலப்படுத்துவனவே யன்றி வேறல்ல. எம்பெருமானுடைய சிவ பக்தியை நீங்கள் நன்கு அறிவீர்கள். திருக் கோயிலை வலம் செய்யும் வழக்க முடைய பெருவழுதி அங்கே குடை பிடித்துக் கொண்டா செல்கிருர்? அவருடைய பக்திக்கு இழுக் கல்லவா அது? முக்கட்செல்வர் திருக்கோயிலில் இவர் குடை பணிகிறதை நாம் பார்ப்பதில்லையா? அங்கே மடங்கும் குடை எங்கும் நிமிர்ந்து நிற்கிறது. ஆகவே, முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கு நின் குடை பணிக என்று நான் வாழ்த்துவதில் ஏதாவது தவறு உண்டா? சொல்லுங்கள்.
சபையினர் ஆனந்தத்தால் ஆரவாரம் செய்தார்கள். “காரிகிழாரா தவறு செய்பவர்?” என்று பேசிக் கொண்டார்கள்.
“வேள்வி பலவற்றைச் செய்யும் அந்தணரிடம் இப்பெருமானுக்கு உள்ள மதிப்பை நாம் அறிவோம். பிற இடங்களில் வணங்காத இப் பிரான் முடி, நான் மறை முனிவர் ஆசி கூறி ஏந்திய கைக்கு எதிரே இறைஞ்சுக என்று வாழ்த்துவது தவருகுமா? அந்த வணக்கந்தானே பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதியென்ற சிறப்பை நம் மன்னர் பிரான் பெறும் படியாக வைத்தது?”.
“புலவர் சாமர்த்தியமே சாமர்த்தியம்!” என்று அமைச்சர் ஒருவர் சொல்லிக் கொண்டார்.
“நம் மன்னர் மாலை வாடட்டும் என்றேன். எப்போது என்று நீங்கள் யோசிக்கவில்லை. பகை மன்ன ருடைய நாடுகளைச் சூறையாடிச் சுடும்போது அந்தப் புகை வீசுவதனால் அது வாடட்டும் என்கிறேன். வேண்டாம் என்று சொல்ல உங்களுக்குத் தைரியம் உண்டா?”
புலவரைக் குறைகூறிய பெரியவர் அயர்ந்து யோய்விட்டார். “தைரியம் இல்லை, தைரியம் இல்லை, தைரியம் இல்லை. உம்முடைய புலமைத் திறத்துக்கு முன் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் ?’ என்று பட படப்புடன் சொன்னர் அவர்.
“நம் மன்னர் மன்னரது வெகுளி அடங்கட்டும் என்றேன். இவருடைய கோபம் எங்கேயும் செல்லும். ஓரிடத்தில் மாத்திரம் செல்லாது. வாலிழை மட மங்கையர் கோபிக்கும்போது இவரும் சினந்து பயன் இல்லை. அவர் முகத்திலே சிவப்பேறினால் இவர் கோபம் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும். இதுதான் இன்ப இயல் காதல் வாழ்வு. இது நம் மன்னரிடம் வாய்ப்பதாக என்று வாழ்த்துகிறேன். நீங்களும், சேர்ந்து வாழ்த்துங்கள்” என்று கூறி முடித்தார் புலவர்.
எல்லோரும் மகிழ்ச்சியில்லை ஆரவாரித்தனர். கடைசியில் புலவர் இன்ப இயலைக் கூறியபோது மன்னன் உள்ளம் குளிர்ந்தான். காரிகிழார் தம் சாமர்த்தியத்தால் சபையை முதலில் ஒரு கலக்குக் கலக்கினவர், பிறகு தெளிய வைத்துவிட்டார். வியப்பும் ஆனந்தமும் துளும்ப அந்தத் தெளிவு ஏற்பட்டது.
(புறநானூறு, 6-ஆம் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதியது)
– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.
இலக்கிய ஆதாரங்கள்
இதற்கு ஆதாரமான புறநானுற்றுப் பாடல் வருமாறு :
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்.
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டில்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலே உலகத் தானும் ஆனாது
உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோல் ஞமனன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ! நிற்றிறம் சிறக்க!
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே !
இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த –
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
வாடுக இறைவதின் கண்ணி, ஒன்னர்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிய ரத்தைநின் வெகுளி, வாலிழை
மங்கையர் துணித்த வாண்முகத் தெதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே!