கனவு காணும் இளைஞன்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை)

கனவு காணும் இளைஞன் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் தனது தாயிடம் சென்று, “அம்மா,… நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். ஆனால் அதை உன்னிடம் சொல்ல மாட்டேன்!” என்றான்.
“ஏன் சொல்ல மாட்டாய்?”
“நான் சொல்ல மாட்டேன்!”
தாய்க்குக் கோபம் வந்து அவனை நாலு சாத்து சாத்தினாள்.
அவன் ஓடிச் சென்று தந்தையிடம் சொன்னான். “அப்பா,… நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதை அம்மாவிடம் சொல்லவில்லை. உங்களிடமும் சொல்ல மாட்டேன்!’
தந்தையும் அவனை செம்மையாக மொத்தினார்.
அதனால் அவன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
வழியில் ஒரு வழிப்போக்கரைக் கண்டான்.
“நான் ஒரு கனவு கண்டேன். அதை என் தாயிடம் சொல்லவில்லை. என் தந்தையிடமும் சொல்லவில்லை. உங்களிடமும் சொல்லப் போவதில்லை!’ என்றான்.
“சரியான லூசுப் பயலாக இருப்பான் போலிருக்கிறதே…!” என்றபடி வழிப்போக்கர் விலகி நடந்தார்.
வழியில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அப்படியே சொல்லிக்கொண்டிருந்த அவன், இறுதியில் அரசரின் அரண்மனையை அடைந்தான்.
“அரசே! நான் ஒரு கனவு கண்டேன். அதை என் தாயிடமும் சொல்லவில்லை; தந்தையிடமும் சொல்லவில்லை. வழியில் கண்ட வழிப்போக்கர்கள் யாரிடமும் சொல்லவில்லை. உங்களிடமும் சொல்லப்போவதில்லை!”
அரசருக்குக் கோபம் வந்தது.
“இந்தக் கிறுக்கனைச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!” எனக் கட்டளையிட்டார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
சிறையில் உணவு கொடுக்கப்படாமல் பட்டினியால் வாடிய அவன், சிறையறையிலிருந்து சுரங்கம் தோண்டிச் சென்று இளவரசியின் அறையை
அடைந்தான். அங்கு இளவரசிக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவுகளைத் திருடி சாப்பிட்டு வந்தான்.
நீண்ட நாட்களாக இது நடந்துகொண்டிருந்தது. யார் தனது உணவைத் திருடுகிறார்கள் என்று தெரியாமல் இளவரசி கவலை கொண்டிருந்தாள். உணவுத் திருடனைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் உணவு அலமாரிக்குப் பின்னால் மறைந்திருந்து கவனித்தாள்.
சற்று நேரத்திலேயே சுவரில் இருக்கும் ஒரு பெரிய கல் நகர்ந்து, துவாரம் உண்டாயிற்று. அதிலிருந்து ஓர் இளைஞன் வெளிப்பட்டான். அவன் அலமாரியில் இருந்து உணவை எடுக்கும்போது இளவரசி அவனைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டாள்.
“நீ யார்?”
“நான் ஒரு கனவு கண்டேன்…” இளைஞன் ஆரம்பித்தான். “அதை என் தாயிடம் சொல்லவில்லை, தந்தையிடம் சொல்லவில்லை, வழிப்போக்கர்களிடம் சொல்லவில்லை, அரசரிடமும் சொல்லவில்லை. அரசர் என்னைச் சிறையில் போட்டுவிட்டார். அங்கிருந்து சுரங்கம் தோண்டி இங்கே வந்தேன். நான் உனது கருணைக்குப் பாத்திரமானவன்!”
இளவரசிக்கு அந்த இளைஞன் மேல் கருணை வந்ததோ இல்லையோ, எல்லாக் கதைகளிலும் வருவது போலக் காதல் வந்தது.
கனவு காணும் இளைஞனுக்கு சொல்ல வேண்டுமா? அதுவும் ஏழைக் கதாநாயகர்கள் என்றால் பணக்கார இளைஞிகளைத்தானே காதலிக்க வேண்டும்! அந்தக் காலத்தில் என்றால், இளவரசிகளை! ஆகவே, அவனும் அவளைக் காதலித்தான்.
அவர்கள் ரகசியக் கணவன்-மனைவியாகவே வாழ்ந்துவந்தனர்.
ஒரு நாள் கிழக்கு நாட்டின் அரசர் இந்த நாட்டு அரசருக்கு, இரு புறமும் சம அளவில் உள்ள ஒரு குச்சியை அனுப்பி, கூடவே ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தார்.
“இந்தக் குச்சியின் இரு முனைகளில் எது மேல் பாகம், எது அடிப்பாகம் என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். அதைச் சொல்லிவிட்டால் நல்லது. உங்களால் சொல்ல இயலாவிட்டால் உங்களது மகளை எனது மகனுக்குத் திருமணம் செய்து தர வேண்டும்.”
சாதாரணமாக இரு அரச குடும்பங்களுக்கு இடையே திருமண உறவு கொள்வது இயல்பான காரியம். ஆனால், இது போன்ற சவால்களில் ஒருவர் தோல்வி அடைந்து மகளைத் திருமணம் செய்து கொடுக்க நேர்வது அவமானத்திற்குரியது. எனவே, அரசர் இதைக் குறித்து ஆழ்ந்த கவனமும் கவலையும் கொண்டார். தனது சபையின் அனைத்து அறிஞர் பெருமக்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால் ஒருவராலும் அதற்கு விடை காண இயலவில்லை.
இளவரசி அந்தச் செய்தியைத் தனது ரகசியக் கணவனான சிறைக் கைதியிடம் தெரிவித்துவிட்டு, “யாருக்கும் பதில் தெரியவில்லை என்றால் என்னை அந்த நாட்டு இளவரசனுக்கு மணம் முடித்துக் கொடுத்துவிடுவார்கள். நாம் என்ன செய்வது?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.
“கவலைப்படாதே! நான் அதற்கு வழி சொல்கிறேன்” என்ற அவன், “அந்தக் குச்சியை ஒரு குளத்தில் போடச் சொல்! எந்த நுனி நீரில் மூழ்குகிறதோ, அது அடிப் பாகம்; மற்றது மேல்பாகம்!” என்றான்.
அவர்கள் அவ்வாறே செய்து, கிழக்கு நாட்டு அரசரின் புதிருக்கு விடை கண்டனர்.
கிழக்கின் அரசர் பிறகு மூன்று குதிரைகளை அனுப்பினார். அவை மூன்றும் ஒரே அளவிலும், ஒரே தோற்றத்திலும் இருந்தன.
‘இதில் எது ஒரு வயதானது, எது இரண்டு வயதானது, எது தாய்? இதற்கு விடை சொல்லிவிட்டால் நல்லது. சொல்ல இயலவில்லை என்றால் உங்களுடைய மகளை எனது மகனுக்கு மணம் முடித்துத் தர வேண்டும்!’
அரசர் தனது அறிஞர் பரிவாரத்தைக் கூட்டி, இதற்கான பதிலைக் கேட்டார். எவராலும் சொல்ல இயலவில்லை.
மாலையில் இளவரசி கனவு காணும் இளைஞனிடம் அதைத் தெரிவித்தாள்.
“குதிரைகள் மூன்றையும் தனித் தனியே அடையுங்கள். காலையில் உப்புப் போட்டு நனைத்த ஒரு கட்டு வைக்கோலை லாயத்தின் கதவுக்கு வெளியே வைக்க வேண்டும். முதலில் வெளியே வரக் கூடியது தாய். இரண்டாவதாக வரக்கூடியது மூத்த குட்டி; மூன்றாவது வரக்கூடியது இளைய குட்டி.”
மறு நாள் இளைஞன் சொன்னது போலவே செய்து புதிருக்கு விடை காணப்பட்டது.
அடுத்த பந்தயமாக ஒரு எஃகு கேடயமும், கோளமும் அனுப்பி, பின்வரும் குறிப்பையும் இணைத்திருந்தார் கிழக்கு மன்னர்.
‘உங்கள் நாட்டு வீரர்களில் யாராவது, ஒரே வீச்சில் இந்தக் கோளம் மூலமாக இந்தக் கேடயத்தைத் துளைத்துவிட்டால் எனது மகளை உங்கள் மகனுக்கு மணம் முடிக்கத் தருகிறேன். உங்கள் வீரர்களால் அதைச் செய்ய இயலாவிட்டால் உங்களின் மகளை எனது மகனுக்கு மணம் முடித்துத் தரவேண்டும்!’
அரசரும் அவரது சபையினரும் தளர்ந்து போயிருந்தனர்.
“கிழக்கு நாட்டு மன்னருக்கு வேறு வேலையே கிடையாதா? இதே பிழைப்பாகத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே! நாம் ஒழுங்காக ராஜ்ய பரிபாலனத்தில் கவனம் செலுத்த முடிவதில்லையே!” சலித்துக்கொண்டார் அரசர்.
“ஆனால் போர், பந்தயம், சவால் என்று வந்துவிட்டால் அவற்றை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்! அதுதானே வீரத்திற்கு அழகு!” என்றார் அமைச்சர்.
நாட்டில் உள்ள எந்த வீரர்களாலும் அந்த எஃகு கோளத்தை ஒரே வீச்சில் வீசி கேடயத்தைத் துளைக்க இயலவில்லை.
இளவரசி அரசரிடம், “கனவு காணும் இளைஞனான சிறைக் கைதி வலிமை மிக்கவன். ஒருவேளை அவனால் இதைச் செய்யக் கூடும்” என்றாள்.
அரசர் அவனை வரச் செய்தார். அவன் ஒரே வீச்சில் கேடயத்தைத் துளைத்துவிட்டான். வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் ஆரவாரித்தது.
அவனது வலிமையையும் வீரத்தையும் மெச்சிய அரசர், ஏற்கனவே அவன் தனக்கு மருமகனாக ஆக வேண்டியவன் என்பது தெரியாமல், “எனக்கு மகன் இல்லை. இவனையே தத்து எடுத்துக்கொள்கிறேன்!” என அறிவித்துவிட்டு முறைப்படி தத்து எடுத்துக்கொண்டார்.
பிறகு, “கிழக்கு நாட்டு அரசரின் கொட்டத்தை அடக்கிவிட்டாய்! இனி சவால்படி அவரது நாட்டுக்குச் சென்று அவரின் மகளை அழைத்து வா! அவளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்!” என அனுப்பி வைத்தார்.
அவன் செல்லும் வழியில் ஒரு மனிதர் தரையில் மண்டியிட்டு தனது காதை நிலத்தில் வைத்துக்கொண்டிருந்தார்.
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”
“உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்ற அவர், “நீதானே கேடயத்தைத் துளைத்த மாவீரன்?” என்று கேட்டார்.
“ஆம், நான்தான்!”
“அப்படியானால் நான் உன் சகோதரன்!” என்ற அவர், அந்தக் கனவு இளைஞனைப் பின்தொடர்ந்தார்.
சிறிய பயணத்திற்குப் பிறகு அவர்கள் ஒரு மலையில் ஒரு காலும், இன்னொரு மலையில் இன்னொரு காலுமாக வைத்தபடி நின்றுகொண்டிருக்கும் மனிதனைச் சந்தித்தனர்.
‘அடேங்கப்பா…! எப்பேர்ப்பட்ட தீரர் இவர்!’ இளைஞன் அசந்துவிட்டான்.
அவர் இவனைப் பார்த்து, “நீதானே கேடயத்தைத் துளைத்த மாவீரன்?” என்று கேட்டார்.
“ஆம், நான்தான்!”
“அப்படியானால் நானும் உன் சகோதரன்தான்!” அவரும் அவனைப் பின்தொடர்ந்தார்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஏழு அடுப்புகளிலிருந்து சமைக்கப்படுகிற அனைத்து உணவுகளையும் சாப்பிட்டும் பசி தீராமல்,
“எனக்குப் பசிக்கிறது! எனக்குப் பசிக்கிறது! இன்னும் உணவு தாருங்கள்!” என்று கேட்டுக்கொண்டிருந்த மனிதரைச் சந்திக்க நேர்ந்தது.
இளைஞன் அவரைக் கண்டு பிரமித்தான். அவரும் அவனிடம் முந்தையவர்கள் போலவே கேள்வி கேட்டு, நானும் உனது சகோதரன் என இணைந்து, அவனைப் பின்தொடர்ந்தார்.
விரைவில் அவர்கள் அனைவரும் பூமியைத் தோளில் சுமந்துகொண்டிருக்கும் மனிதனைக் கண்டார்கள். அவரும் அவ்வாறே அடுத்த சகோதரனாக இளைஞனுடன் இணைந்தார்.
அதன் பிறகு அவர்கள் யூப்ரடீஸ் நதிக்கரையில் படுத்தபடி நதி நீர் முழுவதையும் குடித்துவிட்டு, “எனது தாகம் தீரவில்லை! இன்னும் தாகம் எடுக்கிறது!” என்று சொல்லிக்கொண்டிருந்த மனிதனைக் கண்டனர். அவரும் சகோதரன் எனச் சொல்லி இணைந்துகொண்டார்.
அடுத்ததாக அவர்கள் கொம்பு ஊதிக்கொண்டிருக்கும் இடையர் ஒருவரைக் கண்டனர். அவரது இசையில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள் யாவுமே நடனமாடிக்கொண்டிருந்தன.
அவரும் சகோதரன் என இணைந்தார்.
இப்போது அவர்கள் மொத்தம் ஏழு சகோதரர்கள்.
மற்ற அறுவரும், “இப்போது நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?” என கனவுக்கார இளைஞனிடம் கேட்டனர்.
“கிழக்கு நாட்டின் அரசர் மகளைக் கொண்டு வரச் செல்கிறோம்!”
“சரிதான்! நீ அவளுக்குப் பொருத்தமான ஜோடி!” என்றனர் ஆறு பேரும்.
விரைவில் அவர்கள் கிழக்கு நாட்டின் அரண்மனையை அடைந்தனர்.
கிழக்கு அரசர் தனது பணியாளர்களிடம் ரகசியமாகச் சொன்னார். “அந்த ஏழு பேரும் என்னுடைய மகளை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். அதற்கு விடக் கூடாது. அந்த இளைஞர்கள் வெறித்தனமானவர்கள். அவர்களுக்கு 21 சூளை ரொட்டியும், 21 கொப்பரை சூப்பும் செய்து, அனைத்தையும் அவர்கள் முன்பு வையுங்கள். அவை முழுவதையுமே அவர்கள் ஒரே அமர்வில் சாப்பிட்டுவிட்டால் என் மகளை அவர்களோடு அனுப்புவேன்; இல்லாவிட்டால் அனுப்ப மாட்டேன் என்று தெரிவியுங்கள்!”
கனவு காணும் இளைஞனும் குழுவினரும் அரண்மனைக்கு அப்பால் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தரை வழி கேட்பவர் அரசர் பேசியதைக் கேட்டுவிட்டு இளைஞனிடம் தெரிவித்தார்.
பெரும்பசிக்காரர் சொன்னார், “அந்த உணவு மற்றும் சூப்பைச் சாப்பிடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்!”
அடுத்த நாள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 21 சூளை ரொட்டியையும், 21 கொப்பரை சூப்பையும் அவர் ஒருவரே சாப்பிட்டுவிட்டு, “எனக்குப் பசிக்கிறது. இன்னும் இருந்தால் கொண்டு வாருங்கள்!” என்றார்.
மன்னருக்கு இதைக் கேட்டு ஆத்திரம் பொங்கியது. “அவர்களைக் கொள்ளை நோய் கொண்டு போகட்டும்! ஒருவனையே திருப்திப்படுத்த முடியவில்லை. ஏழு பேரும் இப்படி சாப்பிட்டால் என்ன ஆவது? இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். விருந்தினர் மாளிகையில் அவர்களுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். அந்த மாளிகையைச் சுற்றி நிறைய மரத் துண்டுகளையும், வைக்கோலையும் போட்டு வையுங்கள். நள்ளிரவில் அவர்கள் தூங்கும்போது தீ வைத்துவிடலாம். அவர்கள் ஏழு பேரும் எரிந்து சாம்பலாகட்டும்!”
தரைவழி கேட்பவர் இதைக் கேட்டுவிட்டு கனவு காண்பவனிடம் தெரிவித்தார்.
“அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்றார் நதியைப் பருகுபவர்.
அவர் அருகேயுள்ள நதிக்குச் சென்று நதி நீர் முழுவதையும் குடித்துவிட்டுத் திரும்பி வந்தார். நள்ளிரவில் மாளிகையைச் சுற்றித் தீ வைக்கப்பட்டபோது, தான் பருகிய நீர் அனைத்தையும் நெருப்பின் மேல் உமிழ்ந்தார். அவரது வாயிலிருந்து புறப்பட்ட நதிப் பெருக்கில் நெருப்பு அணைந்தது மட்டுமன்றி, நெருப்பு வைத்தவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக கிழக்கு மன்னர் மேலும் கோபத்திற்குள்ளாகி, “என்ன நடந்தாலும் சரி; என் மகளைக் கொடுக்க மாட்டேன்!” என்றார், வீம்பாக.
“இப்போது என் முறை!’ என்றார் பூமியைச் சுமப்பவர்.
அவர் கிழக்கு நாட்டு அரசரின் ராஜ்யத்தை அடியோடு பெயர்த்து எடுத்துத் தன் தோள் மேல் வைத்துக்கொண்டார். இடையர் கொம்பு முழக்க, அந்த ராஜ்யத்தில் இருந்த மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள் யாவும் நடனமாடத் தொடங்கின. அதனால் நிலநடுக்கம் உண்டானது.
மன்னர் சரணடைந்தார். அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டார்.
“கடவுளுக்காக என்னுடைய ராஜ்ஜியத்தை விட்டு விடுங்கள்! என்னுடைய மகளை அழைத்துச் செல்லுங்கள்!”
பூமி சுமப்பவர் கிழக்கு ராஜ்ஜியத்தைப் பழைய இடத்திலேயே வைத்தார். இடையர் கொம்பு ஓதுவதை நிறுத்தினார். நிலநடுக்கம் நின்றது.
கனவு காணும் இளைஞன் தனது ஆறு சகோதரர்களும் தத்தமது கடமையைச் செவ்வனே செய்ததற்காகப் பாராட்டி, நன்றி கூறி, அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். தான் மட்டும் கிழக்கு நாட்டு இளவரசியை அழைத்துக் கொண்டு மேற்கு நாட்டு அரசரின் தலை நகரத்திற்குத் திரும்பினான்.
திருமண வைபவம் 40 நாள் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கிழக்கு நாட்டு இளவரசியையும், இந்த நாட்டு இளவரசியையும் மணந்து கொண்டான்.
அவன் வெளியூர் சென்றிருந்த சமயம், முதல் மனைவியான இளவரசிக்குக் குழந்தை பிறந்திருந்தது. அந்தக் குழந்தையைக் கைகளில் எடுத்துக்கொண்டு சிம்மாசனத்தில் அவன் அமர்ந்திருக்க, அவனது இரு புறமும் இளவரசிகளான இரு மனைவிகளும் அமர்ந்திருந்தனர்.
அவன் தனது பெற்றோரை வரவழைத்து, “நான் கண்ட கனவை இப்போது சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
“சொல்!”
“என் கனவில் நான் கண்டது என்னவென்றால், எனக்கு வலது புறம் ஒரு சூரியன், இடது புறம் ஒரு சூரியன் இருக்க, பிரகாசமான ஒரு நட்சத்திரம் எனது இதயத்திற்கு மேலே மினுங்கிக்கொண்டிருந்தது.”
“இதுதானா உன்னுடைய கனவு?”
“ஆமாம், அதுதான் என்னுடைய கனவு!”
இந்தக் கதையும் ஒரு கனவுதான்.
சொர்க்கத்திலிருந்து கனவுகளை அனுப்புகிறவர் மூன்று ஆப்பிள்களை அனுப்பினார். முதலாவது, இந்தக் கதையின் மாந்தர்களுக்கு. இரண்டாவது, இந்தக் கதையை எழுதியவருக்கு. மூன்றாவது, இந்தக் கதையை வாசித்த உங்களுக்கு.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |