குட்டி குட்டி சுண்டெலி!







கதைப் பாடல்:
குட்டி குட்டிச் சுண்டெலி
குள்ளமான சுண்டெலி
பட்டு மாமி வீட்டிலே
பதுங்கியிருந்த சுண்டெலி
குவிச்சு வச்ச லட்டுவை
கொறிக்க வந்த சுண்டெலி
அவிச்சு வச்ச நெல்லையும்
அடுக்கி வச்ச முறுக்கையும்
எடுத்து எடுத்துச் தின்றது
இன்னல் தந்து வந்தது!
ஒடுக்க எடுத்த முயற்சிகள்
ஒன்றுமின்றிச்செய்தது
வாங்கி வந்த பூனையை
வாயில் கடித்துக் கொன்றது
ஏங்கி நின்ற ரம்மியா
எடுத்து வச்சா கணினியை
சொடுக்கி கணினி மவுசுக்கு
சொல்லித் தந்தாள் ஓர்கலை
துள்ளி ஓடும் எலியது
சொடுக்கியதால் மவுசினை
காட்டியது ஓர்படம்
கணினி யதன் திரையிலே
கருப்பு நிறப் பூனையும்
கண்கள் மின்ன மிரட்டிட
கண்ட எலியும் அஞ்சியே
காற்றைக் கிழித்து மறைந்தது
அன்று முதல் அவ்விடம்
அண்டவில்லை அவ்வெலி!
படத்தில் வந்த பூனையும்
பாவம் போலி என்பதை
படிக்கவில்லை அவ்வெலி
பழைய காலச் சுண்டெலி
கால மாற்றம் தன்னிலே
கணினி யுகத்தின் மகிமைகள்
கற்றுக்கொண்டு உயர்வதே
கல்விக் கழகு ஆகுமாம்!