கடவுள் இருக்கான் குமாரு!




மதுரை , அனுப்பனடி , காலை பொழுது,
மயான அமைதியாக இருந்த ஜோசப் வீடு. ஜோசப் ஆட்டோ ஓட்டுனர். வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறான். இன்று அவனக்கு உரிய நாளாக இருக்க இறைவனை வணங்கி எழுந்தான். மனைவி மேரி “ என்னங்க , எந்திரிங்க. இன்னைக்கு சாயந்திரத்திற்குள்ள பணத்த ரெடி பண்ணனும்.கடன் கொடுத்தவன் எல்லாம் வீட்டுக்கு வந்திருவாங்க. நம்மள அசிங்க படுத்திருவாங்க. என்ன பண்ண போறோம்னு தெரியல.? நீங்க என்னன்னா இன்னும் தூங்கி கிட்டு இருக்கிங்க” என்று மேரி கூறிய போது , சிரித்த படி “எல்லாம் அவன் பார்த்துப்பா” என்று ஏசுவின் படத்தை காட்டியபடி எழுந்தான்.

ஜோசப், மேரி இவர்களுக்கு ஜோன்ஸ் என்ற மகன். அவன் நான்காம் வகுப்பு படிக்கிறான். கணவனும் மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி லட்ச கணக்கில் பணம் கட்டி ஏமாந்து போனார்கள். இவர்கள் மட்டும் இல்ல , அந்த ஏரியா மக்களும் மூன்று மடங்கு வட்டி கிடைக்கிறது என்று நம்பி கோடி கணக்கில் பணத்தை இழந்து உள்ளனர்.அந்த நிறுவனம் திடீர் என்று தலைமறைவு ஆகி விட்டது. போலீசில் கம்ப்ளைன்ட் செய்து தேடி வருகின்றனர். சில மாதம் கழிந்து விட்டது. எந்த பலனும் இல்லை. அதற்காக வெளியில் வாங்கிய கடன் தற்போது கழுத்தை நெருக்கி கொண்டிருக்கிறது. இன்று மாலை வரை ஜோசப்க்கு கெடு கொடுத்துள்ளனர். இன்று மாலைக்குள் நான்கு லட்ச ரூபாய் தர வேண்டிய கட்டாயத்தில் ஜோசப். கையில் பணம் இல்லை. மிகவும் கடினமான சூழலில் ஜோசப் குடும்பம்.
“கர்த்தர் நம்மை கை விடமாட்டார்.மேரி அந்த வசனத்தை பாரு, நீ நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கர்த்தர் உன் வாழ்க்கையை மேன்மையாக மாற்ற போகிறார் , அது நமக்கு தான் “ என்று சிரித்தபடியே ஜோசப் கூற ,
“சும்மா இருங்க. எனக்கு இப்ப நெனச்சா கூட பயமா இருக்கு. சாயந்திரம் என்ன நடக்க போகுதோ தெரியல ? நீங்க என்னன்னா வசனம் பேசிட்டு இருக்கீங்க “ என்று மேரி கவலையுடன் கூறினாள்.
“கவலை பட்டு என்ன பண்ண. நடப்பது எல்லாம் நன்மைக்கே. அதிசியம் நடந்திரும் , நாம பெரிய பணக்காரனா மாறுவோம் என்ற நம்பிக்கைல தான வாழ்க்கைய நகர்த்தி கொண்டு இருக்கோம். இன்னைக்கு அப்படி தான். நான் கெளம்புறேன். “ என்று மனைவி மேரியை சமாதானம் படுத்தி விட்டு மனதில் சற்று கலக்கத்துடன் ஆட்டோவை நகர்த்தினான் ஜோசப்.
வண்டியூர், கோமதி நகர் ,
அமைதியான வீடு. மீனாட்சி சுந்தரம் இல்லம். வீட்டில் மீனாட்சி சுந்தரம் கண்களில் கண்ணீருடன் , தன் மகள் திரௌபதி முன் அமர்ந்து இருந்தார்.
மீனாட்சி சுந்தரம் , விவசாயி. மனைவி இல்லை. ஒரே மகள் திரௌபதி.மகளை கல்லூரி படிப்பை முடிக்க வைத்தார். மகளின் திருமணதிற்கு தன் விவசாய நிலத்தை விற்று தான் செலவுகளை பார்க்க இருக்கிறார். மகள் திரௌபதிக்கோ இந்த விசயத்தில் உடன்பாடு இல்லை. தன் திருமணதிற்கு பிறகு , தந்தையின் நிலைமை யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது என்ற எண்ணதில் திரௌபதி. வாழ போகும் இடத்தில், நகை ,பண பிரச்னை வர கூடாது என்பதற்காக தன் சொந்த வீடு மற்றும் விவசாய நிலத்தையும் விற்று மகளுக்கு திருமணம் செய்ய முனைகிறார் மீனாட்சி சுந்தரம்.
இறுதியில் இருவரின் பிடிவாதத்தில் அப்பாவிடம் தோற்று போனாள் திரௌபதி. விவசாய நிலம் , சொந்த வீடை விற்று அந்த பணத்தை கொண்டு வர சென்ற மீனாட்சி சுந்தரம் அந்த பையை தொலைத்து விட்டு வந்தார். பையில் திருமண பத்திரிக்கை , நகை , பணம் என்று அதன் மதிப்பு சுமார் பத்து லட்சத்தை நெருங்கும்.
“கீழவசல்ல இருந்து ஷேர் ஆட்டோல தான் வந்தேன். கைல அந்த கட்ட பை இருந்துச்சு. அந்த கட்ட பைக்குள்ள தான் இன்னொரு மஞ்சபைய வைத்து பணம், நகை, கல்யாண பத்திரிக்கைய கொண்டு வந்தேன். எங்க விழுந்துச்சுன்னு தெரியல. கட்ட பை மட்டும் தான் கைல இருக்கு. உள்ள இருந்த மஞ்ச பைய காணோம். நானும் வந்த பாதைல தேடி பார்த்துட்டேன் , ஷேர் ஆட்டோகாரன பார்த்து கேட்டேன், அவனும் என் கூட வந்து தேடி பார்த்தான் கிடைக்கல. நான் என் வாழ்க்கைய மட்டும் இல்லாமல் உன் வாழ்க்கைய சேர்த்து தொலைச்சிட்டேன்.” என்று மீனாட்சி சுந்தரம் கண்களில் கண்ணீர் மல்க மகள் திரௌபதி கையை பிடித்து அழுக ஆரம்பித்தார்.
“ஷேர் ஆட்டோல கூட வந்தவங்க எடுத்திருந்தா? என்ன பண்ணுவிங்க. வாங்க போலீஸ்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வருவோம்.” என்று அப்பாவை வேறு வழியின்றி தேற்றி அழைத்தாள் திரௌபதி.
“இல்லம்மா, தெப்பகுளத்தில எல்லாரும் இறங்கிட்டாங்க. அப்போ என் கைல பை இருந்துச்சு. நான் பார்த்தேன். அப்புறமா யாரும் ஆட்டோல ஏறல. நான் ஆட்டோல சாஞ்சு உட்காருவோம்னு ஓரமா உட்காந்தேன். அதுல தான் கட்ட பை சாஞ்சு மஞ்சப்பை கீழ விழுந்திருக்கும் என்று நெனைக்கிறேன்” என்று மீனாட்சி சுந்தரம் பரிதாபமாக கூறினார்.
“சரிப்பா வாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வருவோம். என்ன பண்ண முடியும். உளைச்ச காசு நம்மை விட்டு போகாது.” என்று அப்பாவை தைரியம் கொடுத்து அழைத்து கொண்டு சென்றாள் மகள் திரௌபதி. மனசு ஒடிந்த மாதிரி காட்டிக்கொள்ள முடியவில்லை, அவளால் , அப்பா ரொம்ப ஃபீல் பண்ணிருவாரு, அது அவர் உடம்ப பாதிக்கும் என்ற காரணத்தினால். அவளாலும் இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன செய்ய போகிறோம் என்ற பரிதவிப்பு இருந்தாலும், தன் அப்பாவிடம் அதனை காட்டிகொள்ளாமல் தைரியமாக இருப்பதை போல் காட்டிகொண்டாள்.
மதிய நேரம்,
இன்று சவாரி கூட இல்ல. ஆட்டோ ஸ்டாண்டில் சும்மா தான் உட்கார்ந்திருந்தான். என்றும் இல்லாத அளவு வெறுப்பு.
“கர்த்தரே! சோதனைக்கு மேல சோதனை. ஏதாவது சவாரி வந்தா தான , இன்னைக்கு சோறு. நான் சாப்பிடலனாலும் , என்னை நம்பி இரு ஜீவன் இருக்கு. அவங்கள காப்பத்தனும் “ என்று புலம்பிய படி ஆட்டோவில் அமர்ந்து இருந்தான்.
ஜோசப் மொபைல் சிணுங்கியது. மனைவி மேரி , “என்னங்க , சாப்பிட வாங்க , சாப்பாடு ரெடி “ என்று அவள் கூற , “ இதோ நான் வந்துட்டு இருக்கேன்” என்று வீட்டுக்கு கிளம்பினான்.
ஆட்டோவில் வீட்டுக்கு கிளம்பினான். வரும் வழியில் தெப்பகுளம் பகுதியில் ஆட்டோ நிறுத்தினான். மனம் புலம்ப ஆரம்பித்துள்ளது , என்ன செய்ய போறோம் என்று தெரியவில்லை என்று. ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு, தெப்பகுளம் மதில் சுவரின் மீது அந்த மதிய நேரம் அமர்ந்தான் ஜோசப்.
மனதிற்குள் பயம் வர ஆரம்பித்த நேரம் , இன்னும் சில மணி நேரத்திற்குள் பணம் தயார் செய்ய என்ன வழி என்று யோசிக்க , வாய்ப்புகள் இல்லை என்று தீர்க்கமான முடிவை ஆள்மனது சொல்லியது. இருப்பினும் கடன் தந்தவர்களுக்கு என்ன பதில் கூற போறோம், அவர்கள் யாரும் பதிலை எதிர் பார்த்து வரபோவதில்லை. பணத்தை எதிர் பார்த்து தான் வருவார்கள், என்று மனதில் அலை மோதியது.
அப்போது , அவனை நோக்கி ஒரு நாய் வந்து நின்றது. அவன் அருகில் சென்று உற்று பார்த்தது. ஜோசப் அந்த நாயை விரட்டிவிட்டான். “உனக்கு கொடுக்கிறதுக்கு என்னிடம் எதுவும் இல்லை , ஓடிரு” என்று கையை சும்மா ஓங்கி காமித்தான். அந்த நாய் ஓடியது. ஓடிய நாய் அந்த சகதியில் கிடந்த பையை வாயை வைத்து நக்கியது.
அது ஒரு மஞ்சப்பை. அந்த பையை பார்த்து குரைத்தது.
அந்த நேரம் தான், அந்த மஞ்ச பையை ஜோசப் கவனித்தான். அந்த நாயை விரட்டினான். பையை எடுத்தான்.
பையை எடுத்த ஜோசப்பிற்கு அதிர்ச்சி. மஞ்சப்பையில் பணம் நகை மற்றும் பத்திரிகை இருப்பதை பார்த்தான்.
பணத்தை பார்த்ததும் மகிழ்ச்சி. அந்த நாயை திரும்பி பார்த்து நன்றி சொன்ன படி , வேறு யாரும் பார்க்காத பட்சத்தில் ஆட்டோவை நகர்தின்னான் வீட்டுக்கு ஜோசப்.
ஆட்டோ வீட்டை நோக்கி நகர்ந்தது.
ஜோசப் மனதில் எராளமான எண்ணம் ஓட ஆரம்பித்தது. அடுத்தவர் பொருளுக்கு ஆசை படலமா ? இருப்பினும் என் பணத்தை யாரோ ஒருவன் சுருட்டி ஓடியது மட்டும் நியாயமா ? இல்லை , இந்த பொருளை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் , வேண்டாம் என்று மனதில் குழப்பத்துடன் வீட்டை அடைந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தான் ஜோசப். “என்னங்க சாப்பிடுங்க. அப்புறமா யோசிப்போம் “ என்று மனைவி மேரி கூற .
“மேரி முதல்ல கதவை சாத்து. இந்த மஞ்ச பைய பாரு.” என்று மேரியிடம் பையை காட்டினான் ஜோசப்.
வீட்டின் கதவு சாற்றப்பட்டது.மஞ்சபைய வாங்கி கீழே கொட்டிய மேரிக்கு அதிர்ச்சி.
“என்னங்க , ஏது எந்த பணம் , நகை. எங்க எடுத்தீங்களா இல்ல திருட்டு பெருளா?” என்று மேரி கேட்க ,
“அடியே பைத்தியம், என்னைய பத்தி என்ன நெனச்சிட்டு இருக்க! திருட்டு புத்தியெல்லாம் கிடையாது. தெப்பகுளம் பக்கத்துல கிடைச்சது.” என்று ஜோசப் கூறினான்.
“பணம் , நகை இதுவே பத்து லட்சம் கிட்ட வரும் போல. கர்த்தர் கை விட மாட்டார் என்று காலைல சொன்னிங்க , அது உண்மை ஆய்ருச்சு பார்தீங்களா! இருந்தாலும் அடுதவங்க பொருளுக்கு நாம ஆசை படகூடாதுல” என்று மேரி கூறினாள்.
“ஆமா , நாம திருடுனா தான் தப்பு. நான் திருடல , ரோட்ல கிடைச்சது. இப்போ எதையும் பற்றி யோசிக்காம நம்மை பிரச்சனைய முடிக்க வழி என்னவோ அத பார்ப்போம்” என்று ஜோசப் கூறினான்.
“நம்மை பிரச்சனைக்கு நான்கு லட்சம் போதும். இதுல அதவிட அதிகமா இருக்கு. இருக்கட்டும் நம்மை பிரச்சனைய முழுவதுமாக முடிப்போம். நம்ம பணத்தை ஒருத்தன் திருடியதால் தான , நாம் இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்கோம். அதான் கடவுள் இருக்கான். கடவுளாய் பார்த்து நமக்கு கொடுத்த வாய்ப்பு இது.” என்று மேரி கூறி , அந்த மஞ்ச பையில் அனைத்தையும் போட்டு கர்த்தர் புகை படத்தின் முன் எடுத்து வைத்தாள் மேரி.
“சாயந்திரம் , வர்றவங்களுக்கு இதுல இருந்து பணத்தை கொடுத்து பிரச்சனைய முடிச்சிருவோம். மிச்ச பணத்தை நாம , நம்ம தேவைக்கு வைச்சிக்குவோம் “ என்று ஜோசப் உறுதியாக கூறினான். மேரி சம்மதம் சொன்னாள்.
போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு, வீடு வந்தடைந்தனர் மகள் திரௌபதி மற்றும் அப்பா மீனாட்சி சுந்தரம்.
இருவரின் மனதிலும் போலீசின் பேச்சு திருப்தி தரவில்லை. திரௌபதியே மனம் நொந்தவள் போன்று தெரிந்தாள்.
“அப்பா போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு. அவங்க பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டாங்க. விடுங்க. பார்ப்போம். “ என்று திரௌபதி , அப்பா மீனாட்சி சுந்தரத்திடம் கூறினாள்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்த விஷயத்தை சொல்லவா ? வேணாமா ? என்று கேள்விகணை இருவருக்கும்.
மீனாட்சி சுந்தரமோ, “ மகளே! நான் விசத்தை குடிச்சு செத்து போயிரேன். உனக்கு வாழ்க்கை நல்ல படியா அமைய இத விட்டா வேறு வழி தெரியல. உன் மீது ஏறக்கபட்டு நல்ல படியா மாப்பிள்ளை வீட்டில் பார்த்துப்பாங்க அதான் “ என்று கூறியதும், மகள் திரௌபதியும் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“எதுக்குப்பா , நீ மட்டும் சாகனும். நானும் சேர்ந்து உன்கூடவே செத்து போயிரேன். எனக்கு நீ இல்லா உலகத்தில வாழ பிடிக்கல. உன்னை மாதிரி யாரும் என்னை பார்த்துக்க மாட்டங்க“ என்று திரௌபதி கூறினாள்.
இருவரும் கட்டி அனைத்து அழ ஆரம்பித்தனர். வீடே நிலை குலைந்து இருந்தது.
சாயந்திரம் 6 மணி,
பாலில் விஷம் கலந்து இருவரும் குடிக்க முடிவு எடுத்தனர்.
“பெருமாளே! என் குல தெய்வமே. நீயும் என்னை கை விட்டாய். நான் உழைத்த பணத்தை இழந்து , என் வாழ்க்கையை தொலைத்து நிற்பது உன் கண்ணுக்கு தெரியலையா.? நான் யாருக்கும் எந்த தீங்கும் நெனைச்சது இல்ல. நானும் , எனக்கு மகளாய் பிறந்த காரணத்திற்காக தண்டனையா அவளுக்கும் விசத்தை கொடுத்து சாகபோறோம். நீ அதனை கண் குளிர பார்த்துட்டே இரு! கடவுளே! “ என்று கடவுளை பார்த்து, மீனாட்சி சுந்தரம் கேட்க , விஷம் கலந்த பாலுடன் வந்து நின்றால் திரௌபதி.
விஷம் கலந்த பாலை வாங்கி கொண்டார் மீனாட்சி சுந்தரம். இருவரின் கையில் விஷம் கலந்த பால். கண்களில் கண்ணீர். தற்கொலை தான் முடிவா ? இல்லை என்றால் அவர்களுக்கு முடிவு தான் என்ன ? என்ற கேள்வி அவர்களுக்குள்.
அவர்களின் வீட்டு வாசலில் இருந்து தான் ஹாரன் சப்தம். மனமே இல்லாமல் எட்டி பார்த்தால் திரௌபதி.
வாசலில் ஒரு ஆட்டோ, அதில் இருந்து ஒருவர் இறங்கினார். இறங்கிய நபர் ஜோசப்.
“அம்மா வீட்ல யார் இருக்கீங்க ? திரௌபதி, இல்லனா சுந்தரம் சார் இருக்கீங்களா?” என்று ஜோசப் கேட்ட படி வாசலை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
“அப்பா ஒரு நிமிஷம், இருங்க. யாரோ வந்திருக்காங்க?” என்று சுந்தரதிடம் இருந்த டம்ளரை வாங்கி கீழே வைத்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்தாள் திரௌபதி.
“சார் , வணக்கம். நான் தான் திரௌபதி. நீங்க யாரு?” என்று ஜோசப்பிடம் கேள்வியை கேட்டவாறு வாசலை அடைந்தாள் திரௌபதி.
“தங்கச்சி. நான் ஒரு ஆட்டோகாரன். அனுப்பனடியில தான் என் வீடு. தெப்பகுளம் பக்கத்தில இந்த மஞ்ச பைய பார்த்தேன். அதுல பணம் , நகை பத்திரிகை எல்லாம் இருந்துச்சு. கல்யாணத்திற்கு தேவையான காசும் நகையும் தான் நெனச்சு அந்த பத்திரிகைல இருந்த அட்ரஸ்க்கு வந்திருக்கேன். இது உங்க பை தானா?” என்று ஜோசப் கூற,
ஜோசப்பை கடவுளாய் பார்த்த திரௌபதி. “அண்ணா. அந்த பை எங்கது தான். அப்பா தொலைசிட்டார். இப்போ தான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்தோம். உள்ள வாங்க அண்ணா!” என்று அக்கறையோடு வீட்டுக்குள் அழைத்தாள் திரௌபதி.
“யாரும்மா?” என்று கேட்ட சுந்தர்திர்க்கு , “அப்பா நம் நகை, பணம் கிடைச்சிருச்சு” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் திரௌபதி.
ஜோசப் இருவரிடமும் விவரத்தை சொன்னான். இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
“தம்பி , நீ செய்த உதவி மிக பெரிய உதவி, அதுக்கு நன்றி சொன்னா அர்த்தம் இல்லாம போய்டும்பா. வாழ்க்கைய தொலைச்சிட்டேன் , முடிச்சிக்குவோம் முடிவு எடுத்த போது கடவுளாய் வந்து எங்கள காப்பத்திட்ட” என்று ஜோசப்பின் கையை , பிடித்து கண் கலங்கினார் மீனாட்சி சுந்தரம்.
மஞ்சபையில் இருந்த பணம், நகை பத்திரிகை சரியா இருந்தது.
“அண்ணா, இந்த உலகத்தில உங்களுக்கு கிடச்ச இப்படி ஒரு வாய்ப்பை , நீங்க பயன்படுத்தாம, அத உரியவர்களிடம் கொடுக்கணும்னு நெனச்சதே மிக பெரிய விஷயம்” என்று கூறி ஜோசப்பின் கையை இருக பற்றி கொண்டு இருந்தனர் , திரௌபதி மற்றும் மீனாட்சி சுந்தரம்.
ஜோசப்பின் முகத்தில் சிரிப்பு. சில மணிநேரத்திற்கு முன், தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்தான்.
சில மணிநேரத்திற்கு முன்,
ஜோசப் வீட்டு வாசலில் கடன் கொடுத்தவர்கள் ஆறு பேரும் வந்து விட்டனர்.
ஜோசப், மேரி இருவரும் மஞ்ச பையில் இருந்த பணத்தை கொடுக்க முடிவுடன் இருந்தனர்.
அப்போது , “அப்பா நாம செய்ய போற விசயத்தினால் , நாம மட்டும் தான் தப்பிசிருவோம். ஆனா இதனை தொலைத்தவர்கள் நிலைமை என்னவா இருக்கும்? அவங்க கஷ்ட படுற குடும்பமா இருந்தா? பாவம். நீங்க தான அப்பா சொல்லுவீங்க , அடுத்தவங்க பொருளுக்கு ஆசை பட கூடாது , நம்மால் முடிந்த நல்லதை செய்யணும்னு.” என்று அப்பா , அம்மாவின் பேச்சை கேட்ட படி இருந்த மகன் ஜோன்ஸ் கூறியதும் , இருவருக்கும் , சாட்டையடி விழுந்த மாதிரி இருந்தது.
“செல்லம். கண்டிப்பா நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. அடுத்தவன் பொருளுக்கு ஆசை படகூடாது. நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நல்ல சமயத்தில அப்பா அம்மாக்கு புத்தி மதி கூறி , பாவத்தில இருந்து காப்பத்திட்ட” என்று இருவரும் கூறி ஜோன்ஸ் கன்னத்தில் முத்தம் இட்டனர்.
வாசலில் நின்று இருந்த கடன் கொடுத்தவர்கள் முன் நின்று , வசை வாங்கி கொண்டான் ஜோசப். மீண்டும் ஒரு வாரம் கேட்டான். வந்தவர்கள் அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளை வைத்து கேவலமாக வசை பாடிவிட்டு “அடுத்த வாரம் வருவோம் , பணம் கொடுத்தா தான் போவோம். இல்லனா பார்த்துக்கோ. என்ன நடக்கும் என்று தெரியாது ” என்று கூறி விட்டு சென்றனர். அவர்களின் பேச்சு , அவனை கண் கலங்க வைத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்.
வீட்டிற்குள் நுழைந்ததும், மஞ்ச பையை மேரியும் , ஜோன்சும் அவனை நோக்கி நீட்டினர்.
“கடவுள் இருக்கான் குமாரு!” என்று மனைவி மேரி சிரித்த படி கூறி, ஜோசப்பின் கண்ணீரை துடைத்து விட்டாள்.
“இந்த பைய தகுந்தவர்களிடம் ஒப்படைங்க. இல்லனா, போலீசிடம் சொல்லி கொடுத்து விட்டு வாங்க” என்று கூறினார்கள் , மனைவி மேரி மற்றும் மகன் ஜோன்ஸ்.
இருவரையும் பெருமையாய் நினைத்த படி , வீட்டில் இருந்து கிளம்பினான். மீனாட்சி சுந்தரம் வீட்டின் முன் சென்று நின்றான் ஜோசப்.
தற்போது ,
“என் குலசாமி பெருமாளே ! நேரில் வந்து உதவி பண்ணிய மாதிரி இருக்கு தம்பி. உங்க பேர் என்னப்பா?” என்று மீனாட்சி சுந்தரம் கேட்க , “ ஜோசப் “ என்று கூறியதும் , மதம் கடந்து மனிதநேயத்துடன் நடந்து கொண்ட ஜோசப், அவர்களின் குல தெய்வமாக தெரிந்தார்.
“தம்பி , என் பொண்ணு கல்யாணத்திற்கு நீங்க உங்க குடும்பத்துடன் வரணும். நீங்களும் என் புள்ள மாதிரி தான். உங்கள நிச்சயமாக என் வாழ்க்கைல மறக்க மாட்டேன். “ என்று கூறி பத்திரிக்கை வைத்தார் மீனாட்சி சுந்தரம்.
“கண்டிப்பா நான் இல்லமா நடந்திருமா?” என்று சிரித்த படி பத்திரிக்கையை பெற்று கொண்டு விடை பெற்றான் ஜோசப்.
ஆட்டோவை நகர்த்த முயன்ற ஜோசப்க்கு , செல்போன் சிணுங்கியது.
“ஹலோ , ஜோசப், நான் தெப்பகுளம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசுறேன். நீங்க பண மோசடின்னு கம்ப்ளைன்ட் பண்ண ஆட்களை பிடிச்சாச்சு. பணமும் கிடைச்சிருச்சு. நீங்க வாங்க. அந்த பணம் கட்டுன ரசீதை காமிச்சு உங்க பணத்தை வாங்கிட்டு போகலாம்” என்று கூறி இணைப்பு துண்டிக்க பட்டது.
ஜோசப் மனதில் மகிழ்ச்சி. தன் குடும்ப நிலை மாறபோவதை உணர்ந்தான்.
ஆட்டோ நகர்ந்தது. மனைவியிடம் விபரம் கூறி தெப்பகுளம் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நகர்ந்தான் ஜோசப்.
ஜோசப் தன்னுடைய கடினமான சூழ்நிலையிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசை படாமல் அவர்களிடம் கொண்டு சேர்த்த ஜோசப்க்கு இது கடவுள் கொடுத்த பரிசு.
உழைத்த பணம் வீணாகாது. அடுத்தவர் பணத்திற்கு ஆசை பட வேணாம். பணத்தை உரிய, பாதுகாப்பான முறையில் சேமிக்கவும். அதிக வட்டி கிடைக்கும் என்று ஏமாறாதீர்கள்.
கடவுள் இருக்கான் குமாரு ! நம்முடைய மனித நேயத்தில்……