கடமை ஆற்றுதல்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீட்டு வேலைக்கென்றோ, வயல் வேலைக்கென்றோ, தொழிற்சாலை வேலைக்கென்றோ, தன் உடல் நலத்துக் கென்றோ ஒருவன் இன்னொருவனை ஊதியத்துக்கென்று அமர்த்திக் கொண்டால், வேலைக்கு உடன்பட்டவன் அதனைச் செம்மைபெறச் செய்து முடிப்பானென்று அவன் நம்பி விடுகின்றான். அத்தொழிலாளி அவ்வேலையை அவ்வாறு செவ்வையாகச் செய்துமுடிக்காமல் ஊதியத் தைக் குறைவின்றிப் பெற்றுக்கொள்வானானால் அவ்வூதியம் அவன் உழைப்பெடுத்துப் பெற்றதாகாது. மேலும், அத் தொழிலாளி தன்னை அமர்த்திக்கொண்டவனை வஞ்சித்த வனாகின்றான். இஃதேயன்றி ஒருவன் எட்டுமணி நேர வேலைக்கு இவ்வளவு கூலியென்று ஒத்துக்கொண்டு வேலை யின்மேல் ஒருமணி நேரம் சோம்பியிருந்து முழுக்கூலியும் பெற்றுக்கொள்வானானால், அவன் அவ்வரைக்கால்வாசிப் பணத்தைத் திருடிக்கொண்டவனாகின்றான். ஒருவன் நல்ல வேலைக்காரன் என்று பிறரால் மதிக்கப்பட வேண்டுமானால், அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செம்மைப் படச் செய்து முடித்துத் தீரவேண்டும்.

இன்னும் நாம் ஒரு கூட்டத்தாருக்கோ, பொதுவாக நாட்டாருக்கோ இறுக்கவேண்டிய கடமைகளும் உண்டு. அவைகளில் நாம் நம்முடைய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு அக்கடமைகளை யெல்லாம் உண்மைக்கு மாறு படாமல் பொ துநன்மையையே நோக்கமாக எண்ணிச், செய்துமுடிக்கவேண்டும். அரசியல் நடாத்துவோர் அலு வல்களுக்கு ஆட்களை அமர்த்தும்போது அவ்வாட்களின் செய்திறனேயன்றி மற்றெதனையும் மனத்தின்கண் நோக்க மாக வைத்துக்கொள்ளக்கூடாது. நீதியாளர்கள் பொது நன்மையையே கோரி, பயம்பற்றில்லாமல் நடுநிலையையே பாராட்டவேண்டும். நம் நண்பர் எவரைப்பற்றியாவது நம்முடைய உட்கோளை யறியவேண்டினால், நாம் அவ ருடைய நோக்கத்துக்கு யாதொரு பழுதுமுண்டாகா தபடி நமது மனச்சான்றுக்கு ஒத்த கருத்தையே அவருக்கு, எடுத்துச் சொல்லவேண்டும்.
- ஜியார்ஜ் வாஷிங்டன்
ஜியார்ஜ் வாஷிங்டன் ஐக்கிய நாடுகளின் தலைமை ஏற்றிருந்த போது, அவனுக்கு அணுக்க நண்பன் ஒருவன் இருந்தான். அவன் வாஷிங்டனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தபோதிலும், அவ ருடைய அரசியல் அலுவல்களில் தலையிட்டுக் கொள்வதில்லை. அவ்விருவர் நட்பும் வீட்டுடனேயே நின்றுவிடும். அவன் நல்ல தன்மையனாக இருந்தபோதிலும், அலுவற் பொறுப்புக்களைத் தாங்கி நடத்துவதில் அவ்வளவு திறமை வாய்ந்தவன் அல்லன்.
இப்படியிருக்கையில் அரசியல் துறையில் முதன்மைப்பட்ட ஓர் அலுவலுக்கு ஓராள் வேண்டியதாக இருந்தது. அவ்விடத் தைப் பெறத் தலைவருடைய வீட்டு நண்பர் அரசியலாருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பிவைத்திருந்தார். அவ் வேலைக்கென்றே. மற்றொரு விண்ணப்பமும் அலுவலகத்துக்கு வந்திருந்தது. அதற் குரியார் யாரென்றால், வாஷிங்டனுக்கு எதிர்க் கட்சியிற் சேர்ந் தவர். அவர் சிற்சில செவ்விகளில் தலைவருக்கு நேருக்கு நேராகச் சில ஊறுபாடுகளும் செய்துள்ளார். ஆகவே, அவ்வலுவல் தலைவருடைய வீட்டு நண்பருக்கே கிடைக்குமென்று யாவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குமாறாக அவ்வலுவல் மற்ற விண்ணப்பத்தாருக்கே அளிக்கப்பட்டது.
அரசியல் நண்பரொருவர் அதனைப்பற்றிக் கேட்டபோது, வாஷிங்டன் சொன்னதாவது:- ‘ஐயா நீர் சொல்வது சரியே; நண்பருக்கு உதவிசெய்ய வேண்டியதுதான். அவ்வலுவல் என் னுடைய வீட்டலுவலன்று, அரசியலலுவல். என் நண்பர் நற்குண நற்செய்கை உடையவரே, ஆனால் அவருக்கு அரசியல் துறையில் அவ்வளவு திறமை போதாது. மற்றவரோ எனக் கெதிரியாயினும் அவ்வேலைக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்; மிக்க திறமைசாலி. ஆதலால் அவரை வேலைக்கு அமர்த்தியவர் தலைவர் வாஷிங்டன். என்பவரே. ஜியார்ஜ் வாஷிங்டன் அன்று,” என்பதாம்.
- நீதியாளர் காஸ்கோனி
இங்கிலாந்து நாட்டினை ஆண்டுவந்த நான்காம் ஹென்ரியின் முதல்மகன் (உவேல்ஸ் இளவரசர்) நல்ல படிப்பாளியன் றியும் நீதி முறைகளும் நன்கு அறிந்தவர். ஆனாலும் அவர் சிறிது வெகுளி கொண்டவராக இருந்தார். ஒரு தடவை அவருடைய நண்பனொருவன் குற்றவாளியாக்கப்பட்டு நீதியாளர் காஸ்கோனியால் தண்டிக் கப்பட்டான். அஃதறிந்த இளவரசர் சினமூண்டு, நீதி மன்றத் துக்கு விரைந்துவந்து சட்டென மேடையின் மீதேறி அந்நீதி யாளரைக் கையாலறைந்தார். உடனே காஸ்கோனி அவரைக் குற்றவாளியாக்கித் தண்டித்துவிட்டார். இளவரசர் அறிவாளி யாதலால், தம் தவறுக்குக் கழிவிரக்கங்கொண்டு சினமா றித் தண்டனைக்குட்பட்டார்.
இதனையறிந்த மோசர் சொன்னதைக் கேளுங்கள்: “நீதி செலுத்துவதில் உளத்திட்பங்கொண்ட ஒரு நீதியாளர் எனக் கிருப்பதை நினைக்க என் மனம் மகிழ்ச்சியடைகின்றது; நாட்டுச் சட்டத்துக்குட்பட்டு நடந்துகொண்ட இளவரசரைப்பற்றி என் மனம் மேன்மேல் மகிழ்கின்றது,” என்றார்.
- நேர்மைத் தேர்வுரிமையாளர்
1807ஆம் ஆண்டில் காத்துலாந்தில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்நாட்டுக் கோட்டமொன்றில் அப்போது இரண்டு மக்கள் தேர்தலுக்கு நின்றனர். அவர்களில் ஒருவருக்காக ஒரு கூட்டத்தார் உதவிசெய்ய எண்ணங்கொண்டனர். அவருக்கு தேர்வுச் சீட்டொன்று குறைவாக இருந்தது. அதற்காகத் தேர்வுரிமையாளனாகிய ஒரு கம்மியனை அக்கூட்டத்தார் அதனை யளிக்க வேண்டிக் கொண்டனர். அக்கம்மியன் தேர்தலுக்கு நின்ற மற்றவனுக்கே தன்னுரிமையை யளிக்க எண்ணங்கொண் டிருந்தான். அவன் மனநோக்கத்தை மாற்ற அக்கூட்டத்தார் நூற்றுக்கணக்கான பொற்காசு (பவுன் ) கொடுப்பதாக வாக்களித் தனர். அவர்களைப் பார்த்து அக்கமமியன், “ஐயன்மீர் அடியே னுடைய தேர்தலுரிமையை எனக்காக அன்று, என்னுடைய நாட்டு நன்மைக்காக அன்றோ பயன்படுத்த வேண்டும்? என் மனச்சான்றுக்கு மாறாக யான் ஒன்றுஞ் செய்ய முடியாது, என்று சொல்லி அவர்தம் வேண்டுகோளை உறுதியாக மறுத்து விட்டான். அக்கூட்டத்தார் கொடுக்கக்கருதிய தொகையோ அவனுடைய ஆயுள் முழுமையும், அதற்கு மேலும் அவன் குடும்பத் துக்குப் போதுமானதொன்று. ஆயினும் நேர்மை கருதி மறுத்து விட்டான்.
க. நீதியளிக்கும்போது ஓரங்காட்டாதே; தாழ்ந் தோனுக்கும் உயர்ந்தோனுக்கும் நடுநிலையாக இரு; மனித னுடைய முகம் பார்த்து அச்சங்கொள்ளாதே; நீதியளிப்பு ஆண்டவனுடையது. -விவில்லியம்.
உ. தீமையாளனை நீதிமான் என்று சொல்லு கின்றவன் மக்களின் வசவைப் பெறுகின்றான்; மேலும் உலகம் அவனைக் காண நடுங்கும். -பழமொழிகள்.
ங. உண்மையுடையவனே அறிவாளி; அவனுக்கு எப்போதும் அச்சமென்பதில்லை; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு எதுவும் கைகூடி வரும். -சர் வால்ட்டர் ராலே.
ச. அறஞ்செய விரும்பு. -ஔவையார்.
ரு. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
க. அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை, அதனை மறத்தலி னூங்குஇல்லை கேடு.
எ. ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். -திருவள்ளுவர்.
அ. நடுநின்ற நல் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடுக. -உருத்திரங்கண்ணனார்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |