கடமையில் சிறந்தவள்
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 4,487
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விஷ்ணுபுரத்துக் கோட்டையில் உள்ள அரச மாளிகையின் ஓர் அறையில் வெற்றி வாகை சூடி வரும் மன்னனை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள் அரசி சந்திரப் பிரபா. மங்கள தீபங்கள் சுடர் விட்டன. ஒரு தட்டில் மன்னருக்கு அணிவிக்க வேண்டிய நறுமண மாலை இருந்தது. ஏலம், கர்ப்பூரம் கலந்த வாசனை நீர் ஒரு கலத்தில், மற்றொன்றில் தண்ணிய சந்தனக் குழம்பு. அரசி முகத்தில் புன்னகை தவழ வாசல் படியண்டை வந்து வந்து வழியை நோக்குவாள். எதிரே இருக்கும் பூங்கா வூடே அவள் கண்கள் நிலைக்கும்; மன்னர் ஏனோ இன்னும் வரவில்லையென்று கலக்கம் கொள்வாள். கூட இருக்கும் தோழிப் பெண்கள் ‘உலு உலு’ என்று ஊதும் மங்கள சங்கத்தின் மகிழ்ச்சி ஆரவாரம் அரசியின் ஏக்கத்தைப் பின்னும் கிளறி விடும்.
ஹுக்ளிப் போரில் வெற்றி அடைந்து அன்று காலையிலேயே அரசர் ரகுநாத சிம்ஹன் நகர் எல்லைக்குள் வந்து விட்டார் என்ற செய்தியைச் சத்திரப் பிரபா அறிவாள், கோட்டையில் நகார் கானாவில் பேரிகையும் எக்காளமும் வெற்றியின் அறிகுறியாக ஒலித்தன. விஷ்ணுபுரமெங்கும் ஒரே கொண்டாட்டம் என்பது அரசிக்குத் தெரியும். வர்த்தமான் ராஜா ராமகிருஷ்ணன் படுதோல்வி யுற்று உயிரையும் துறந்தானென்றும், அவனுடைய மகன் ஜகத்ராம் பெண் வேடம் பூண்டு புறங்காட்டி ஓடியதாகவும், தில்லி டாக்கா ஸுல்தான்களையே நடுங்க வைத்த சோபா சிம்ஹனின் கொற்றத்தையும் ஒடுக்கி, ஹுக்ளியை விட்டே அவனுடைய ஆட்சியை மல்லராஜாவான ரருநாதன் அடியோடு கெல்லியதாகவும் எங்கணும் பேச்சு. மேதினி புரத்தைச் சேர்ந்த சந்திரகோணா நாட்டின் குறுநில மன்னனான சோபாசிம்ஹன் தில்லியின் மொகலாயர்களையே பல்லைப் பிடித்துப்பார்த்தவன். ஆலம் கீர் என்ற புகழ்ப் பெயருடன் விளங்கிய அவுரங்கஜேபே அசைந்து போனான். வங்காள ஸுபேதார் (மாகாணத் தலைவன்) இப்ரஹிம்கானுக்கு உள்ளுக்குள் உதைப்பு: ஹுக்ளியின் போஜ்தார் (படைக் காவலன்) கோழையான நூருல்லாகானுக்குத் தொடை நடுங்கியது.
புரட்சியாளனான சோபா சிம்ஹனுக்குத் துணையாக நின்றவன் பட்டானிய ரஹிம்கான், மொகலாயருக்குத் தலை குனியும் எல்லாச் சிற்றரசர்களையும் ஒடுக்கி, மேதினிபுரத்தையும் வர்த்தமானையும் தன் குடைக்குள் கொண்டு வந்தான் சோபா சிம்ஹன். தில்லியின் பாதுஷாவுக்குத் தூக்கமே இல்லை. எந்தப் பக்கம் பார்த்தாலும் சதிகள், புரட்சிகள், கலகங்கள்; தன் கண் முன்பே விசாலமாளமொகல் சாம்ராஜ்யம் சீர்குலைவதைக்கண்டு கிழப் பாதுஷா கண்ணீர் வடித்தான், வங்காளந்தான் மிகத் தொல்லை தந்தது. புதுப் படையுடன், வங்கத்தின் புதிய ஸுபேதாராக அவுரங்கஜேபின் பேரன் ஆஜிம் உஸ்ஸேன் வந்தான்.
ஆஜிம் உஸ்ஸேனின் படை அப்போது மூங்கேர் வரைக்கும் வந்து ஓரிடத்தில் இளைப்பாறப் பாடி இறங்கியது. வர்த்த மானை வளைத்துக்கொண்டு வெற்றி வெறி மூண்ட ரோபா சிம்ஹன் ஹுக்ளியின் படைத் தலைவன் நூருல்லாவை, வெறும் மிரட்டல் உருட்டலிலேயே அடக்கி விட்டு, ஹுக்ளி கோட்டையை வசப்படுத்திக் கொண்டான். மொகலாயருக்கு உதவியாக நிற்க வேண்டிய சில சிற்றரசர்கள் மெல்லத் தலைமறைந்து விட்டனர். விஷ்ணுபுரத்தின் மல்ல அரசன் ரகுநாதன் ஹுக்னியிலிருக்கும் உலாத்தா நாட்டு (டச்சு) அதிகாரி இவர்கள் உதவியை நம்பியே மொகலாயப் படை முன்னேறிக் கொண்டிருந்தது. உலாந்தாக் காரர்களின் பீரங்கிகளும், ரகுநாதனின் குதிரை வீரர்களும் ஹுக்ளி கோட்டையில் இருக்கும் சோபா சிம்ஹனைக் கலக்கினர். நள்ளிரவில், கோட் டையின் ஒரு ரகசியத் திட்டி வழியாகத் தன் மெய்க்காப்பாளருடன் ஓட்டம் எடுத்தான் சோபா சிம்ஹன். ஆனால் மல்லர் அரசன் ரகுநாதன் விடவில்லை. அவனுடைய வீரர்கள் ஓடுபவர்களைத் துரத்திச் சிதறடித்தனர். உயிர் தப்ப ஓடும் சோபா சிம்ஹனின் கூட்டத்தார், உடன் எடுத்துச் சென்ற நிதியங்களையும் அரும் பொருள்களையும் வழியிலேயே விட்டுச் சென்றனர்.
வெற்றியுடன் திரும்பிய ரகுநாதனுடன் எத்தனையோ பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த வண்டிகள் விஷ்ணுபுரத்துக் கோட்டையை அடைந்தன. ஜய கோஷத்தினால் கோட்டையின் கல் மதிள்களே அதிர்ந்தன. அந்த முழக்கத்தைக் கேட்டு அரசி சந்திரப் பிரபாவின் முகம் ஒளிர்ந்தது. அவள் முகத்தில் சிரிப்பு உலவியது.
சமருக்குப் புறப்படுவதற்கு முன் சந்திரப் பிரபாவிடம் விடைபெறுவதற்கு வந்த ரகுநாதன், “ராணி! நீ விரும்பும் பொருள் என்ன சொல்லு? உனக்குக் கொண்டு வந்து தருகிறேன்”‘ என்று கேட்டான்.
“தாங்கள் உயிருடன் திரும்பி வருவதே தான் அடையும் பெரிய பரிசு!” என்றாள்.
“வாகைமாலை அணிந்து வரும் கணவனிடமிருந்து நீ பெறக்கூடியது ஒன்றுமே இல்லையா?” என்றான் ரகுநாதன்.
மௌனமா யிருந்தாள் சந்திரப் பிரபா. சிறிது நேரங்கழித்து, ஒரு மண் பாண்டத்தைக் கொண்டு வந்து அரசனின் கையில் கொடுத்தாள், “புனித கங்கையின் நீரை இதில் கொண்டு வாருங்கள்!” என்றாள்.
இதைக் கேட்டு ரகுநாதன் மகிழ்ச்சி எய்தினான். புறப்படுவதற்கு முன் சத்திரப் பிரபா தந்த மண் பாண்டத்தை ஞாபகமாக எடுத்துக்கொண்டு, “மறக்க மாட்டேன், ஆருயிரே! உனக்காகப் புண்ணிய தீர்த்தமான கங்கை நீரைக் கட்டாயம் எடுத்து வருவேன்!” என்றான்.
அரசன் திரும்பி வந்து விட்டான். அவன் வந்தும் வெகு நேரமாகிறது. வெற்றி முழக்க மெல்லாம் நின்று விட்டன. தன் அந்தப்புர வாயிலில் சந்திரப் பிரபா நின்று கொண்டிருந்தாள் அரசன் வரவை எதிர்நோக்கி. பூங்காவி னூடே அவன் தென்படுவான்; கையில் அந்தப் புனித கங்கை நீர் உள்ள கலசமிருக்கும்: மறக்காமல் தன்னிடம் வருவான் என்று நினைத்தாள். மாணிக்கமோ, ரத்தினப் பூண்களோ எதுவும் அவள் கேட்கவில்லை. சிறிதளவு கங்கை நீர்தான். கணவனுடைய அன்புடன் கலந்த அந்தத் தூய புனலைத் தலை மீது தெளித்துக் கொண்டால், தனக்குச் சௌபாக்கியம் இன்னும் வருமென்று அப்பேதை நினைத்தாள். இதைவிட வேறு என்ன வேண்டுவாள் அந்தப் பதிவிரதை!
அரசன் வருவானோ வருவானோ எனக் காத்து நின்றாள் சந்திரப் பிரபா. இளங் கதிரவன் உச்சிக்கு ஏறிவிட்டான். கோட்டை எங்கிலும் ஒலியடங்கி விட்டது. அந்த மரக் காவினூடே வடிவழகனான கொழுந் னுடைய நிழல் கூடப் படவில்லை, கோட்டை வாசலுக்கு வந்தாள் ராணி, பரபரப்படைந்து. அதற்கு வெளியிலும், சற்றுத் தொலைவு வந்து நின்றள். செந்நிறப் பட்டுத் திரை மூடிய வண்டியொன்று கோட்டைக்குள் புகாமல் வேறு வழியாகச் செல்வதைக் கண்டாள்.
அருங்கலங்கள் அணித்த மெல்லியலாள் மலர் சூடிய கூந்தலாள் ஒருத்தி, அதனுள் மறைந்திருப்பது யாருக்குமே தெரியாது. சந்திரப்பிரபா வண்டியைத்தான் பார்த்தாள், ‘அரசன் யாருக்காக இந்தப் பரிசை அனுப்புகிறானோ’ என்று ராணி நினைத்தாள்.
ராணியின் கண் முன்பே ரகசியம் நிரம்பிய அந்தச் சகடம் மெல்ல நகர்ந்து சென்றது. தொலைவில் கிருஷ்ணசூடா மரத்தின் பக்கத்தில் புதிதாகக் கட்டியிருக்கும் மாளிகையை நோக்கி அது போவதைக் கவனித்தாள்.
சற்றுப் பொறுத்து அரசியின் பணிப் பெண்கள் அவரைத் தேடிக் கொண்டு ஓட்டமாக வந்தனர். வேலையாட்கள் ராணி எங்கோ புறப்படுகிறாள் என்று எண்ணிச் சிவிகையைக் கொண்டு வந்தனர். அதில் ஏறியதும் அரசி, ”அதோ, அந்த மாளிகைக்குச்செல்லுங்கள்!” என்றாள், சிவிகை சுமப்போரை விளித்து.
சிவிகை சிறிது தொலைவு சென்றதோ இல்லையோ, இரு கூரிய கணைகள் வந்து குத்தியது போன்ற பெரு வேதனையுடன் சந்திரப் பிரபா விதிர்த்திட்டாள். சிவிகையைச் சட்டென்று நிறுத்தி, தன் கண்ணாலேயே பார்த்தாள், தன் கணவனுடன் ஒப்பற்ற அழகி ஒருத்தி திரை வண்டியிலிருந்து இறங்குவதை, மலர்ப் பிணையலில் கட்டுண்ட கருநாகக் கூந்தலுடன் விளங்கினாள் அந்த மடந்தை, ரகுநாதன், ஆதரவுடன், அவள் கைப்பற்றி மாளிகைக்குள் நுழைந்தான். பாதி வழியிலேயே சிலிகையைத் திருப்பச் சொல்லி ராணி சந்திரப்பிரபாவும் தன் இடத்துக்கு வந்தாள்.
கங்கை நீரும் இல்லை, ஆசை ராணிக்கான எந்த அருமையான பரிசும் இல்லை. ரகுநாதன் தனக்காக ஒரு பொருளைத் தேடிக் கொண்டு வந்திருந்தான். சோபாசிம்ஹனுடைய காமக் கிழத்தியான அழகுக்குப் பெயர் போன லால்பாயி என்பவளே அந்த விந்தைப் பொருள். ஹுக்ளிதுர்க்கத்திலிருந்து இருட்டில் சென்ற மூடிய பல்லக் கொன்றைத் தடுத்தபோது, தீவட்டி வெளிச்சத்தில் பல்லக்கின் திரை இடுக்கிலிருந்து தொங்கிய கரு நிறச் சுரிதழல் தென்பட்டது. ரகுநாதனின் உறுதியான நெஞ்சமும் நிலைதடுமாறியது. உள்ளே பதுங்கியிருப்பவள் யாரெனத் தெரிந்தது. கட்டழகி லால்பாயி! இந்தத் துருக்க தங்கையின் இன்குரலையும் நடமிடும் போது அவள் சதங்கை ஒலியையும், அவள்கயற்கண் பிறழ்வையும் கண்டுவானத்து அம்புலிகூட மெல்லத்தான் தாழுமாம். இத்தகைய காமர் வனப்பினாளைத் தளக்காக ரகுநாதன் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து விட்டான். சந்திரப்பிரபா எதிர்பார்த்த கங்கை நீர்க் கலசம் எங்கு உருண்டு கிடந்ததோ யாருக்குத் தெரியும். இந்தப் புது மோகத்தில் அவள் விரும்பிய பொருளை மறந்து போனது அதிசயமே இல்லை. அந்தத் துருக்கப் பெண்ணின் கூந்தல் வலைவில் அவன் அறிவு சிக்குண்டு விட்டது.
கரைத்து வைத்த ஆரத்தி அப்படியே கிடந்தது. மங்கள விளக்கு எரிந்து எரிந்து அவிந்து புகை விட்டது. ராணியே தன் கையால் மிடைந்த அலங்கல், தட்டில் வாடி வதங்கியே போயிற்று, மாலை வெய்யில் கிருஷ்ணகுடா மரத்தின்மீது படிந்தது. அந்தி தெருங்கி இருளும் சூழ்ந்தது. அழகு நிறைந்த அரசியின் அறையில் விளக்கே இல்லை.
துயர் மிகுதியில் வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, சந்தியா பூசனைக்காகப் பூக்கொய்யத் தன் உத்தியானத்துள் நுழைந்தாள் சந்திரப் பிரபா. வழி பாட்டைமுடித்துக்கொண்டு தன் அறையின் சாளர முகப்பில் வந்து நின்றாள். தொலைவில் அந்தப் புது மாளிகை ஒரே தீபாலங்காரமாகத் தென்பட்டது. உள்ளே நடக்கும் ஆடலும் பாடலும், ‘ஜல் ஜல்’ என்ற சதங்கை ஒளியும் மெல்லக் கேட்டன அவள் செவிக்கு.
சந்திரப் பிரபா புரித்து கொண்டாள், சிறைப் பிடித்து வந்த அந்த வேசி லால்பாயியின் அழகில் தன் கணவன் மயங்கி விழுத்து விட்டானென்று. அவனுடைய கையிலிருந்து அக்கங்கையின் நீரைப் பெறும் பாக்கியமும் அவளுக்கு இல்லாமல் போயிற்று. இது என்ன சாபக்கேடோ? அவளால் பொறுக்க முடியவில்லை; ஆனாலும் சகித்துக் கொண்டாள், வேதனையெல்லாம் உள்ளத்துள் சுரந்து, கண்களில் அதன் வாட்டம் வெளிப்படாமல் வளைய வந்தாள், மங்கள விளக்கை அவிந்த நிலையில் வைக்கக் கூடாதென்று உறுதி கொண் டாள். அன்று தொட்டு ஒரு மாத காலம் வரை நோன்பு கைக்கொண்டாள். கணவன் சாகாமல் வெற்றியுடன் திரும்பினால், இதை அனுஷ்டிக்க அவள் எண்ணியிருந்ததை மறக்கவில்லை. சிரித்த முகத்துடனேயே அதை நோற்க முனைந்தாள், கணவனுக்கு யாதொரு தீங்கும் நேரிடக் கூடாதென்பதே அவள் வேட்டல். தன்னுடைய துயரைக்கூட அவள் பொருட் படுத்தவில்லை.
நாட்கள் சென்றன; சந்திரப் பிரபாளின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வீணாகிக் கொண்டே வந்தது. அரசன் ஒரு நாள் கூட அவளை நினைந்து வரவில்லை. அவனுடைய குரலைக் கேட்கும் பாக்கியம்கூட அவளுக்குக் கிட்டவில்லை.
இருந்தும் உயிருடன் இருக்கும் வரையில் அவனுடைய நன்மைக்காகவேதான் இந்தக் கடினமான விரதத்தைத் தொடங்கி நடத்த வேண்டுமெனத் துணித்தாள். சேடியரை அனுப்பி ராஜாவை தன் அந்தப்புரத்தினுள் அழைத்துக் கொள்ள அவள் முயலவில்லை.
அவரைச் சூழ இருப்போர். “தேவி! நீங்கள் இப்படி இருக்கக் கூடாது; துளித் துளியாக இளைத்துப் போகிறீர்கள்” என்றனர், “நான் எப்படிப் போனால்தான் என்ன? என்னால் யாருக்கும் கஷ்டம் இல்லையே” என்றாள் சந்திரப்பிரபா.
ஆனால் ராணியை உருக்குலைத்த கேடு, விஷ்ணுபுரத்தையே விழுங்கக் காத்திருப்பதை யாரால் மறைக்க முடியும்? திடுமென ஒரு நாள் ராணிக்கு அவ்விஷயம் தெரிய வந்தது. அந்திப் பொழுது மங்கியதும், தன் அறையின் சாலேக வாயிலிலிருந்து நோக்கினாள். புது மாளிகையில் இன்பம் கரைபுரண்டோடியது. அங்கே தெரியும் விளக்கொளி அவள் கண்களை உறுத்தியது. இனிமேல் தன்னால் தாங்க முடியாது போல் அரசிக்குத் தோன்றியது.
அன்றைக்கு அவள் கேள்விப்பட்ட செய்தி அவளை உலுக்கி விட்டது. கோட்டைக்குள் இருக்கும் ஆலயத்தில் பூஜையை அரசன் நிறுத்தி விட்டான்! சந்திரப் பிரபாவுக்கு வெளிச்சமாகியது. தன் கணவனை வளைத்துக் கொண்ட அந்தத் துருக்கி மினுக்கி தர்மத்தையும் அழிக்கப் பார்க்கிறாளென்று, அவளுடைய ஊடலைத் தணிப்பதற்கு ரகுநாதன் இஸ்லாம் மதத்தைத் தழுவ இருப்பதாகவும் தெரிந்தது.
இது உண்மையா? இது நடக்கக் கூடியதா? ஒரு வேசியின் விழிவலையில் சிக்கி இப்படிக் கூட வீர ஹம்மிரனின் வமிசத்தில் வந்த ரகுநாதன் மதி இழப்பான்? மதன கோபால சுவாமியின் கோயிலில் இனி மேல் விளக்கு எரியக்கூடாதா? கண்ணன் சன்னிதி முன்பு மிருதங்க ஒலி கூடாதா? இப்படியும் விஷ்ணு புரத்தின் புகழ் மிருந்த வரலாறு கடைசியில் ஒரு பரத்தையின் விளையாட்டுக்கு இலக்காகி மாசுபட்டு அழிந்து போகுமோ?
தோழியர் தொடர, ராணி சிவிகையில் ஏறிக் கோட்டைக்கு வெளியே வந்து ரகுநாதனுடைய கேளிக்கை மாடத்துக்கு வந்தாள். அந்த இடத்துக்கு அணித்தாகவே உத்தியான வனத்திலிருக்கும் குளத்தின் படிமீது தன் கணவனும், அந்தத் துருக்கப் பெண்ணும் அமர்ந்திருப்பதைக் கண்டாள் சந்திரப்பிரபா.
சிவிகையிலிருந்து இறங்கி, நடந்தே அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கினாள். மயலாகி அரசன் அந்த மோகக்காரியிடம் பிதற்றும் ஒரு பேச்சு சந்திரப்பிரபாவின் செவியில் விழுந்தது. ஒரு மரத்தின் மறைவிலிருந்து கொண்டே கேட்டாள்.
அந்த விதேசி மடத்தையின் கருநீலமான கண்களில் தன் நிழல் விழ அரசன், அவக் கேடான சபதம் செய்வது அவள் செவியில் விழுந்தது. ”லால்பாயி, இதோ கை அடித்துச் சொல்கிறேன். இஸ்லாமிய தர்மத்தைத் தழுவுவேன். நான் மட்டுமன்று. என் மனைவி, என் மந்திரி, என் ஆட்கள், என் குடிகள் யாவரும் இந்தப் புனித இஸ்லாமில் புகச் செய்வேன். உன் உள்ளத்தைத் திருப்தி செய்வதே என் வாழ்க்கைப் பணி.”
உற்சாகம் கொண்டு, லால்பாயி, ”இப்பொழுதுதான் தெளிந்தேன். என்னுடைய பூவான மேனியை நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்கள்…. எனக்கு இனி என்ன குறை? நான் சாகும் வரை உங்களுக்குத் துணைவியாவேன் ” என்றாள்.
சந்திரப்பிரபா திரும்பி விட்டாள். அன்று அவள் நோன்பின் இறுதி நாள். மங்கள விளக்கைச் சுடர்விடச் செய்தாள், இரவெல்லாம் பூஜை நடத்தினாள். பின் இரவாயிற்று. துயிலெழும் பறவையின் குரல் கேட்டது. பூஜையிலிருந்து எழுந்தாள் சத்திரப்பிரபா. விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தாள், கோட்டையினுள் இருக்கும் தடாகத்தின் குளிர் நீரில் குளித்துவிட்டுத் தன் அறைக்குள் அவள் நுழையும்பொழுது விடிவெள்ளியும், உதய ஒளியில் மறைந்தது.
ரத்தச் சிவப்பான சேலையை அணித்து கொண்டாள் ராணி, கண்ணாடி முன் நின்று தன் வகிர்ப் பிரிவிலும், நெற்றியிலும் குங்குமம் இட்டுக் கொண்டாள். பாதங்களுக்குச் செம்பஞ்சு ஊட்டினாள். மல்ல ராஜாவான தன் கணவனோடு அவள் முதன் முதல் மங்கள கலசத்தைத் தொட்ட அந்த மணக் கோலத்துடன் விளங்கினாள். ஞாபக மறதியினால் அவள் இவ்வாறு செய்தாளோ என்னவோ?
அன்று பொழுது விடிய விடிய, விஷ்ணுபுரக் கோட்டையைச் சுற்றிலும் ஓர் அதிசயமான பரபரப்பு கண்டது. ராஜா, ரகுநாதன் இஸ்லாமிய மதத்தில் புகும் நாள் அது, அவனுடைய தூண்டுதலின் பேரில் சிலர் அவனுடன் புது மதம் தழுவத் துணிந்தனர். அந்தத் துருக்கப் பெண் லால்பாயியின் உத்தரவுப்படி மதமாற்றமானவர்களுக்கு விசேஷ விருந்து உபசரணை செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. படைத் தலைவர்கள் இந்த விபரீதத்தைக் கண்டு திடுக்கிட்டனர். அமைச்சர்கள் திகைப்புற்றனர்.
அறையினுள் வைத்திருக்கும் மந்திரக் கலசத்தைத் தொட்டு ராணி புறப்படத்தயாராக இருந்தாள். மந்திரியை வரவழைத்தாள்.
“விஷ்ணுபுரம் இப்படியும் சீர்குலைந்து போவதை நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே?” என்றாள்.
தலைகுனித்தவாறு அமைச்சரும், “உங்களுக்காகத்தான் பார்க்கிறோம். தாயே! எங்களால் பொறுக்க முடியவில்லை” என்றார்.
“இதன் அர்த்தம் என்ன?”
“நீங்கள் கண்ணீர் விடும்படி நேரிடுமே என்றுதான் நாங்கள் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறோம்” என்றார் அமைச்சர்.
“என்ன செய்வதாக இருந்தீர்கள்?”
“முடிவாக இதைத் தீர்ப்பதென்று….”
“அப்படியே செய்யுங்கள். இதற்காக என் கண்கள் நீர் சிந்துவதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்” என்றாள் அரசி.
இதை நம்பாமலோ அல்லது வியப்பின் மேலீட்டாலோ, அமைச்சர் ராணியின் முகத்தையே நோக்கினார். ஆகா!என்ன பயங்கரமான துணிவு கொண்டாள் ராணி அம்மாள்? அவள் வாயிலும் இப்படி வந்ததே? அவள் நெற்றியில் சிவப்புப் பொட்டு ஒளிர்ந்தது. தன் வாயில் வந்த சொல்லுக்குரிய பொருளை அரசி உணரவில்லையோ?
“பிரமையல்ல மந்திரி, அவநம்பிக்கை கொள்ளாதீர் என்னிடம். என் நெற்றியில் குங்குமம் அழிந்து போவதாயிருந்தாலும் விஷ்ணுபுரத்தை, நாட்டின் கௌரவத்தைக் காத்தே தீருவேன்” என்றாள் அரசி.
புது மணக்கோலத்துடன் திகழும் சந்திரப் பிரபாவின் விழிகளில் அழல் தோன்றியது. மந்திரி சற்று நேரம் அசையாமல் நின்றார். அவர் தலை வணங்கி, ”உத்தரவு தாரும் அம்மணி. அவ்வாறே செய்கிறேன்” என்றார்.
“உத்தரவு தந்தேன்” என்றாள் அரசி.
படைக்கலம் ஏந்திய, நம்பிக்கையான சில வீரர்கள் அரசன் இருக்கும் புது மாளிகைப் பக்கம் விரைந்தனர். சிறிது பொழுதுக் கெல்லாம் விகாரமான கூச்சல் கோட்டை எங்கும் எதிரொலித்தது. அரசி சந்திரப்பிரபா கோட்டையின் கோபுரத்தின் மீது நின்ற வண்ணம், நிழல் போல் பலர் அரசனுடைய விடுதியில் நுழைவதைப் பார்த்தாள்.
வாட்கள் மின்னின; அரசன் ரகுநாதனும் அந்தத் துருக்கப் பெண் லால்பாயும் அலறும் குரலை, கிருஷ்ணசூட மரம் மோன சாட்சியாக நின்று இத்தனை நாள், அங்கே நடந்த பல அட்டூழியங்களைக் கவனிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்றது. அரசி, தன் காதைப் பொத்திக் கொண்டாள்; அவள் கண்களைக் கொட்டவும் மறந்தாள். கற்பனையில் அங்கே நடத்ததை ஊகித்துக் கொண்டாள், கிங்கரர்கள் தன் கணவனையும் அவனை மயக்கியவளையும் தீர்த்துவிட்டு அந்த வேசியின் உடலைக் குளத்தில் எறிந்துவிட்டிருப்பார்கள்; அதன் நீர் ரத்தச் சிவப்பாக மாறிப் போயிருக்கும்.
அரசன் ரகுநாதனுடைய உடலை, அந்தப் புது மாளிகையிலிருந்து சுமந்து வந்து கோட்டையின் கோயில் எதிரே வைத்தனர். பின்னர் மாளிகையிலிருக்கும் குலதேவதையின் சந்நிதி முன்பு கொண்டு வந்தனர். ராஜபுரோகிதன் இறந்த அரசனுக்குச் சந்தனத்திலகமிட்டான். ராணி தன் அறையிலிருந்தே பார்த்தாள். அரசனுடைய சடலத்தை ‘ஹரி’ கோஷத்துக் கிடையே கோட்டை வாயிலைக் கடந்து மயானத்துக்குத் தூக்கிச் சென்றனர். ராணி, இதைக் கண்டு சற்றும் கலங்கவில்லை.
சிதை அடுக்கி ஆயிற்று, சந்தனக் கட்டைகளால். ராஜ புரோகிதர் அரசன் சடலத்தருகில் வந்து நின்றார். படை வீரர்கள் மௌனமாகச் சுற்றிலும் கவிந்து இருந்தனர், ஓவ்வொருவர் முகத்திலும் துயரின் நிழல்; ஆனால் மரித்த அரசன் மீது அனுதாபமே இல்லை.
சிதைக்கு நெருப்பிடப் புரோகிதர் ஆட்களை ஏவும்பொழுது அவர் திடுக்கிட்டு நின்றார். புதுமணப் பெண்போல் அரசியே தன் கணவனுடைய சிதையின் பக்கலில் வந்து நின்றாள்.
“நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள், அம்மா?” என்றார் மந்திரி.
சந்திரப்பிரபா சிரித்தாள்: “இங்கே வராமல் நான் எங்கே செல்வது?”
மந்திரிக்குப் புரியவில்லை அவள் கருத்து: தன் கணவனையே கொல்லத் தூண்டி, கைம்மை பூண்ட இக் கடின நெஞ்சினள், வாழ்க்கை முழுவதும் அவ்வாறே காலங் கழிக்கட்டுமே! அவளுக்கு இங்கே என்ன வேலை?
“நான் பதியைக் கொன்ற பாதகிதான். ஆனால் கணவனுடன் உடன் கட்டை ஏற எனக்குப் பூரண உரிமை உண்டு” என்றாள்.
புரோகிதர் வியப்புற்று, “உண்டு” என்றார்.
அரசனுடைய கால்களைத் தன் தலை மீது வைத்து வணங்கினாள் அரசி, “எனக்கு விடை தாருங்கள். பதியைக் கொன்ற மாபாவியை அனுப்புங்கள்” என்றாள்.
சிதை மீது ஏறி, சந்திரப்பிரபா தன் கணவன் பக்கலில் படுத்தாள். அழுகுரலுடன் வந்தவர்கள் நாற்புறமும் சிதைக்கு நெருப்பு வைத்தனர். புகை கருண்டெழுந்தது. சுடர் விட்டெரிந்ததும் சாம்பராகியது.
அதே கிருஷ்ண சூட மரம் இந்த அதிசயத்துக்கு மௌன சாட்சியாக நின்றிருந்தது. எரிந்து சாம்பரான கடலை அருகில் அகல் விளக்கு ஒன்று அந்தி வேளையில் யாரோ ஏற்றி வைத்தனர். அதன் ஒளி அணைந்ததும் கோட்டையில் பேரிகை முழங்கியது. விஷ்ணுபுரத்தின் புதிய அரசன் கோபாவ சிம்ஹன் அரியணை ஏறும் ஆனந்த விழாவின் ஒலியே அது.
அந்த மயில் கொன்றை மரம் இன்று அந்த இடத்தில் இல்லை. பதியைக் கொன்ற அந்தப் பத்தினியை விஷ்ணுபுரத்தில் இன்றுங்கூட யாரும் மறக்கவில்லை. அந்த அழகிய துருக்கப் பெண் லால்பாயியின் உடல் முங்கிய அக் குளத்து நீர் வற்றி யாருமே பார்த்ததில்லை. அன்றைய நிகழ்ச்சியின் நினைவுகள் காற்றுவீசும் போதும், சிற்றவைகளாக அதன் நீரில் வெய்யிலிலும், நிலவிலும் அசைந்து பளபளக்கும்.
– வங்காளிக் கதை: சுபோத கோஷ், மொழிபெயர்ப்பு: த.நா.குமாரசுவாமி.
– 1957-05-05, கல்கி.