கக்கத்துச் செய்தித்தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 6,919 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

வட்டாரத்துல அவனுக்கு ஒரு பெயர் இருந்தது.

யாரும் அதை வாயெடுத்துச் சொல்லல.

‘அவர்’ —

அவ்வளவுதான்.

இஸ்திரி மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை.

ஒரு அங்குலக் கரை வைத்த வேட்டி.

சட்டைப் பாக்கெட்டில் மங்கலாகத் தெரியும் கட்சித் தலைவர் முகம்.

மற்றும் —

எப்போதும் கக்கத்தில் ஒரு செய்தித்தாள்.


அந்தச் செய்தித்தாளை ‘அவர்’ சற்று நெருக்கினான்.

பத்து வருஷத்துக்கு முன்னால

ஒரு நாள் —

தாலுகா அலுவலகம்.

வெயில் தார்ச்சாலையை மெதுவா உருக்கிக்கிட்டிருந்த நேரம்.

அவன் கையில ஒரு கோப்பு.

மூணு மணி நேரம் காத்திருந்தான்.

உள்ளே அழைத்தார்கள்.

மேஜை மேல பெயர்ப்பலகை. அதன் பின்னால் அதிகாரி.

“சார்… இந்த மனு…”

அதிகாரி மேலே பார்க்கல.

“நீ மொதல்ல வெளியில போய்யா.”

அறையில் யாரோ சிரித்தார்கள்.

மெல்ல.

அவன் கையில் இருந்த கோப்பு கீழே சரிந்தது; எடுக்கவில்லை.

அன்று மாலை அலுவலக வாசலில் இருந்த குப்புசாமியின் டீக்கடையில் ஒரு செய்தித்தாள் வாங்கினான்.

அதை கக்கத்தில் வைத்தான்.

அதுக்கு பிறகு,

அவன் கையில் இருந்து அது பிரியவே இல்ல.


குப்புசாமியின் டீக்கடை.

தொலைக்காட்சிக்கு முன்னே, ஃபேன் காற்று நேராகப் படுற அந்த ஒரே மூலை. ‘அவர்’ உள்ளே நுழைஞ்சதும் அங்கே உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தான். வேற எங்கயும் போகல — நின்னான்.

‘அவர்’ உட்கார்ந்தான். செய்தித்தாளை சற்று சரிசெய்தான். கக்கத்தில் நன்றாகத் தெரியும் மாதிரி.

பாலின் அடர்த்தி பத்தி பேச்சு வந்தபோது, ‘அவர்’ சிரித்தான்.

“குப்புசாமி… ஊர்க்காரங்களுக்கு நீ எம்மாம் வேணா தண்ணி ஊத்திக்கோ. ஆனா அந்தத் தாலுகா சர்வேயர் வந்தா மட்டும் பாலை அப்படியே ஊத்து. அவன் கண்ணுல ஏதாவது பட்டுச்சுன்னா… அடுத்த வருஷ பட்ஜெட்ல உன் கடை இருக்காது பாத்துக்க.”

குப்புசாமி ஒரு கணம் ஜன்னல் வழியா தாலுகா அலுவலகத்தை பார்த்தான்.

அதன் சுவரிலிருந்து ஒரு நீண்ட நிழல் தரை முழுக்க பரவியிருந்தது.

அவன் கையில் இருந்த டம்ளர் சற்று நின்றது.


மறுநாள்.

தாலுகா அலுவலகம் போகும் வழி.

அரசு வீடு கிடைத்த பெண்ணின் வீட்டு முன்னால் ‘அவர்’ நின்றான்.

சிமெண்ட் சுவர் புதுசு. வெயிலில் கண்ணைக் குத்தியது.

அவள் வாசலில் ஒரு உடைந்த குடம் இருந்தது.

“வரிப்பணம்…”

முணுமுணுத்தான்.

“எல்லாம் வரிப்பணம்…”

அந்தப் பெண் தன் நைந்த சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கிட்டாள். அவளது குழந்தை ஓடிவந்து கால்களைக் கட்டிக்கிட்டது.

அவள் சொன்னாள்:

“அண்ணே… மழை பெய்ஞ்சா அடுப்பு அணையாம இருக்க ஒரு கூரை… அவ்வளவுதான்”

‘அவர்’ குரல் உயர்ந்தது. “படிச்சவன் தெருவுல அலையுறான். உனக்கு ஈஸியா வீடு கிடைக்குது. இங்க தராசு தப்பா நிக்குது!”

செய்தித்தாளின் ஓரம் வியர்வையால் நனைந்தது.

பெண் இப்போ நேரா நின்னாள்.

“அண்ணே…

நீங்க சொல்ற தராசுல — ஒரு பக்கம் இந்த ஊர் சாக்கடையை சுத்தம் பண்ணப் போய் உசுர விட்டாரே என் புருஷன்…

அவர் வச்சுட்டுப் போன கடன்… இந்தப் பிள்ளைகளோட பசி…

இன்னொரு பக்கம் இந்த ஒத்த அறை வீடு…

இப்ப சொல்லுங்கண்ணே?”

‘அவர்’ பேசல.

செய்தித்தாள் அவன் மார்போடு ஒட்டியது.

திரும்பிப் பார்க்காம நடந்தான்.


டீக்கடையில் அன்று ஒரு சலசலப்பு.

ஊர் பெரிய மனிதர் மகனுக்கு அரசு வேலை கிடைச்சிருந்தது.

“நல்ல மார்க் வாங்குனவங்க எத்தனையோ பேர்…” யாரோ முணுமுணுத்து முடிக்கும் முன்னே,

‘அவர்’ கக்கத்திலிருந்த செய்தித்தாளை எடுத்து மேஜை மேல படாரென்று அடித்தான் — மடிப்பு சற்றுத் திறந்தது.

“தகுதிங்கிறது வெறும் மார்க்ல இல்லப்பா… அது அந்த வீட்டுக்குத்தான்.”

குப்புசாமி கேட்டான்: “அதுக்காக ஒழுங்கா படிக்காதவனுக்குப் போயி…”

‘அவர்’ சிரித்தான். “இதெல்லாம் உங்களுக்குப் புரியாது!”

குப்புசாமி திரும்பவில்லை.

தெருவில் ஒரு நிழல் நகர்ந்தது.

அந்தப் பெரிய மனிதரின் கார் தெருவில் வந்து கொண்டிருந்தது.

‘அவர்’ எழுந்தான்.

கார் அருகே வந்தது. அவன் கையை உயர்த்தினான். கார் வேகம்கூட்டிக் கடந்து போனது.

பின்புறம் தூசி எழுந்தது.


வீட்டை நோக்கி நடந்தான்.

போகும் வழியில்,

பேருந்து நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் ஒரு முதியவர்.

கால்கள் வீங்கிப் போய், நைந்த கோவணத்துடன் படுத்திருந்தார்.

நிழல் இல்லை—அதனால் அங்கே இருந்தார்.

‘அவர்’ செய்தித்தாளை சரிசெய்தபடி வந்தான்.

“யோவ்! கைகால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு?

சும்மா இங்க பப்ளிக் சொத்தை ஆக்கிரமிக்காம, நாலு ஜல்லி உடைக்கப் போனா என்ன?”

முதியவர் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தார்.

“தெம்பிருந்தா நான் ஏன் சாமி இங்க கிடக்கப்போறேன்?

காலம் பூராம் உழைச்சதுல முட்டி தேஞ்சு போச்சு.”

அருகே இருந்த நாய் ஒன்று ‘அவர்’-இன் செய்தித்தாளின் நிழலில் வந்து படுத்துக்கிட்டது.

‘அவர்’ தொடர்ந்தான்:

“ஒழுங்கா உழைச்சிருந்தா இன்னைக்கு நீ நாலு பேருக்குப் பிச்சை போடுற இடத்துல இருந்துருக்கணும்.”

முதியவர் இப்போ முழுசா சிரித்தார்.

“உழைச்சவன் எல்லாரும் முதலாளின்னா இந்த உலகமே முதலாளிதான் சாமி…”

சிறிது நேரம் பேச்சில்லை.

தாரில் தேங்கிய நீரிலிருந்து ஆவி மேலெழுந்தது.

“நான் உழைச்ச காலத்துல யாரோ ஒருத்தன் மேஜை மேல பேப்பர வைச்சுட்டு ‘சட்டம்’ன்னு சொன்னான். இப்போ நீங்க அதையே கக்கத்துல வைச்சுக்கிட்டு ‘நியாயம்’ன்னு சொல்றீங்க.

நடுவுல என் வாழ்க்கை மட்டும்— அப்படியேதான் இருக்கு.”

‘அவர்’ கக்கத்தை ஒரு நொடி பார்த்தான்.

செய்தித்தாளின் ஓரத்தில் —

“வீட்டு வாடகை பாக்கி – கடைசி நோட்டீஸ்” என்ற சிவப்பு எழுத்துக்கள்.

செய்தித்தாளை மடித்தான்.

நோட்டீஸ் மீண்டும் கக்கத்தின் உள்ளே போனது.

வீட்டுக்குள் நுழைந்தான்.


அன்றிரவு கதவு தட்டும் சத்தம்.

மின்விளக்கு மஞ்சள் நிறத்தில் துடித்தது. வெளியே காவல்துறை.

‘அவர்’ கதவு முன் நின்றான் — செய்தித்தாளை கையில் கசக்கிப் பிடித்தபடி.

“சார்… நோட்டீஸ் கொடுக்காம இப்படி வர முடியாது…”

கான்ஸ்டபிள் ஒரு காகிதத்தை திறந்து காட்டினார். சிரிக்கவும் இல்ல, கோபப்படவும் இல்ல.

“உத்தரவு வந்துருச்சு. நாளைக்குள்ள காலி பண்ணுங்க.”

கக்கத்திலிருந்த அந்தச் செய்தித்தாள் தரையில் விழுந்தது.

மடிப்புகள் பிரிந்தன.

அவன் கையை கக்கத்தில் வைத்தான்.

ஒரு நொடி

அப்படியே வைத்திருந்தான்.

அதை எடுத்துக்கொள்ளவில்லை.

அங்கே —

காற்று மட்டும் இருந்தது.


மறுநாள் காலை.

டீக்கடையில் தொலைக்காட்சி சத்தம் வழக்கம்போல ஓடியது.

ஃபேனும் சுழன்றது.

‘அவர்’ வரல.

ஊர்க்காரர்கள் ‘அவர்’ வீட்டின் வழியே சென்றபோது — பிடுங்கப்பட்ட வேலி அப்படியே கிடந்தது.

‘அவர்’ வீட்டு திண்ணையில் அந்த முதியவர். அழுக்குத் துண்டுடன் வெற்றிலை போட்டுக்கிட்டிருந்தார். நிழலில்.

திண்ணையோரத்தில் கிடந்த செய்தித்தாளின் மேல் எறும்புகள். “வாடகை பாக்கி” என்ற சிவப்பு எழுத்துக்களின் மேல் — முட்டைகளை சுமந்து சென்றன.

“அவர் இருக்காரா?”

யாரோ ஒரு குரல் காற்றில் மிதந்து வந்தது.

முதியவர் வெற்றிலையை துப்பாமல் உள்ளே கை காட்டினார்.

உள்ளே இருட்டில் — சுவரோடு சுவர் ஒட்டி, சட்டையில்லாத உருவம். பக்கத்தில் தரையில் வெள்ளைச் சட்டை சுருண்டு கிடந்தது. பாக்கெட்டில் கட்சித் தலைவர் முகம் மங்கலாகத் தெரிந்தது.

‘அவர்’ கை கக்கத்தைத் தொட்டது.

ஒரு நொடி நின்றது.

அங்கே — எதுவும் இல்லை.

முதியவர் மெதுவாகச் சொன்னார்: “அவர் உள்ளதான் இருக்காரு…ஆனா…”

வாசல் வெளியே, ஒருவன் செய்தித்தாளை கக்கத்தில் சொருகிக்கொண்டான் — மடிப்பைச் சற்று சரிசெய்தபடி.

திண்ணையோரம், செய்தித்தாளின் மேல் எறும்புகள்.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *