ஓவற்ரைம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 353 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு மூன்று மாதங்களாகச் சப்பாத்துக்குப் பொலிஸ் பண்ணாததினால் தூசிபடிந்து, ஏற்னவே கிழிந்து நாலைந்து இடங்களில் தையல் போட்டு, அறுந்து முடிந்த ‘லேஸ்’ இனால் கட்டப்பட்டிருந்தது முருகேசரின் சப்பாத்து அந்தச் சப்பாத்திற்கு ஏற்றதாகவோ என்னவோ அவர் போட்டிருந்த ‘லோங்ஸ்’சும் மழையில் நனைந்ததைப் போல் மடிப்புக்கள் எல்லாம் குலைந்து, சில இடங்களில் தையல்களும் அறுந்து இரண்டு பக்கங்களிலும் இறுக்கிப் பூட்டுவதற்காகத் தூங்கும் ‘பாண்டு’ களையும் இருக்கிறதோ இல்லையோவென்ற நினைவை இழந்ததைப்போல் சற்றும் கவனிக்காமல் அவைகளை அப்படியே தூங்கவிட்டுக்கொண்டு அவரது தலைமயிரும் அங்கும் இங்கும் சிதறி இருக்க பரிபாலன அதிகாரியின் அறைக்குக் கிட்ட வந்து, கதவை மெல்ல நீக்கி, அங்கு யாரும் இருக்கின்றார்களோ என்று பார்க்கின்றார். 

பரிபாலன அதிகாரி, யாரோடு கதைத்துக்கொண்டு இருந்ததைக் கண்டுவிட்டு, திறந்து கதவைத் திறந்ததைப் போல மெல்ல மூடிவிட்டு, வெளியில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்த ‘பைல்களை’ புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். பரிபாலன அதிகாரியின் ‘மினிற்’றைப் பார்க்கப் பார்க்க அதற்கு என்ன எழுதுவதென்றே தெரியாமல் அவரிடமே நேரே சென்று கதைத்து, தனது பிழைக்கு மன்னிப்புக் கோரலாமென்ற எண்ணத்தோடுதான் வந்திருக்கின்றார் முருகேசர். முருகேசர், பதினைந்தோ இருபது வருடங்களுக்கு முதல் எட்டாம் வகுப்பு இங்கிலீஸ் படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தும் அவரால் முடியாமையால், யாரையோ பிடித்து, கிளறிக்கலில் கொளுவி, அதன்பின்பு, இந்த வேலையில நிரந்தரமானதும், ஒரு கலியாணத்தையும் முடித்து, ஏழு பிள்ளைகளையும் பெற்றிருக்கின்றார். இவருக்கு இப்பொழுது முப்பத்தாறு முப்பத்தேழு வயதிருக்கும். இவர் அரசாங்க சேலையில் பதினேழு வருச சேவை செய்திருக்கின்றார். 

பரிபாலன அதிகாரியோடு கதைத்துக் கொண்டிருந்தவர் வெளியேறியதும், முருகேசர் உள்ளே நுழைந்தார். நுழைந்த முருகேசரைப் பார்த்த அதிகாரி, 

“யேஸ் மிஸ்டர் முருகேசு, இந்த பைல்களெல்லாம் என்னத்திற்காக இவ்வளவு தாமதம் செய்தனீங்கள். உங்களுடைய ‘லீவ் றெக்கோட்’ கூட மிகவும் மோசமாக இருக்கின்றது. நீங்கள் வேலையில் அவ்வளவு கவனமாக இருக்கிறதாகத் தெரியவில்லையே”. 

“…” – முருகேசர் தனது தவறை அப்படியே ஆமோதித்துக்கொண்டு அதற்கு மன்னிப்புக்கோருவதா அல்லது தனக்கு இருக்கும் ‘டிபிக்கல் ரீசை’ அதிகாரிக்குச் சொல்லி, தனது தாமதம் தன்னால் ஏற்பட்டதென்றாலும் தவிர்க்க முடியாத தென்று கூறிவிடலாமென்றும் யோசித்து, தனது ‘டிபிக் கல்ரீஸ்’ தனது வீட்டு விசயங்ளோடு மிகவும் தொடர்புடைய தென்றபடியால் அதை அதிகாரிக்குச்சொல்ல அவருக்கு மனம் கூசியது. எனவே, இனிமேல் தான் ‘பைல்’ களைதாமதம் செய்யமாட்டனென்று சொல்லி, ஏற்கனவே ஏற்பட்ட தாமதம் திற்கு மன்னிப்புக் கோரிக் கொண்டு, அதிகாரியின் அறையை விட்டு வெளியில் வந்தார். வெளியில் வந்த முருகேசர் தனது ‘சீற்’றை நோக்கிச் சென்று கொண்டிருக்க, இடையில் யாரோ அவரை ‘மிஸ்டர் முருகேசு’ என்று அழைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். திரும்பிப் பார்த்த முருசேசருக்கு நெஞ்சு ‘பக்’கென்றது. போன மாதம் அடுத்த கிழமை ‘ஓவற்றைம்’ செய்து தருவதாக வாங்கிய ஒரு ரூபாயைத் தான் கேட்பதற்கு அந்த ‘டிஸ்பச்’ கிளாக் கூப்பிடுகின்றாரோ என்று எண்ணிப் பயந்து பயந்து, சென்ற முருகேசர் ‘உங்களுக்கொரு கடிதம் வந்திருக்கு’ என்றதின் பின்புதான் மனம் ஏதோஒரு நிலைக்கு வந்து, கடிதத்தை வாங்கிக்கொண்டு தனது இடத்திற்குப் போகின்றார். கடிதத்தைப் படித்த முருகேசர், தனது கடைசிக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திற்குச் சேர்ப்பதற்கு, அவருடைய மனைவி இந்த முறைச் சம்பளத்தோடு இன்னும் ஒரு இருபத்தைஞ்சு ரூபா ‘ஓவட்டைம் செய்து அனுப்பும்படி எழுதியிருந்தாள். அதை மேலோட்டம் விட்ட முருகே சர் அதில் இருபத்தைந்துரூபா என்று எழுதியிருந்ததைக் கண்டதும், மேலே படிக்க ஏற்கனவே அவரது மனதில் இருந்த கஷ்டங்கள் இடம் கொடுக்காமையால் அப்படியே மடித்து தனது காற்சட்டைப் பைக்குள் அடியில் வைத்து விட்டு, தனது வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

(2)

நாளைக்குப் ‘பப்ளிக் கொலிடே’ என்றதை முற்றாக மறந்திருந்த முருகேசர், தனக்கு அருகில் இருக்கும் வீரசிங்க, தனக்கு அடுத்த நாள் ‘ஓவற் ரைம்’ வேலை செய்ய அனுமதி தரும்படி எழுதிப் போட்டதைக் கண்டு விட்டு, தனக்கும் வேலை செய்ய அனுமதி தரும்படி எழுதிப் போட்டு விட்டு பதிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார். தனக்கு அனுமதி கிடைத்தால், அடுத்தநாள் வந்து வேலை செய்து ‘டபிள் ஓவட்டைம்’ எடுக்கலாம் என்ற எண்ணம் தான் முருகேசருக்கு. இவர் நினைத்தபடி வேலை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள தென்று அதிகாரி எழுதி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் முருகேசருக்கு நல்ல சந்தாசம். அன்று இரவு அவருக்கு நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே தனது கையொப்பத்தை முதன் முதல் வந்து வைத்து விட்ட பெருமையோடு, தனது சீற்றில் வந்திருந்து கொண்டு தான் ‘டிலே’ பண்ணின பைல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தார். இடையில், தனது மனைவிக்கு தான் ‘ஓவட்டைம்’ செய்வதாகவும் இரண்டு மூன்று நாட்களில் அந்த இருபத்தைந்து ரூபா அனுப்பி வைப்பதாகவும் எழுதி முடித்து, என்பலப்பிற்கு அங்கும் இங்கும் தேடிப் பார்த்து விட்டு, கடைசியில் தனக்கு முன்பு வந்த என்பலப் பொன்றை, மறுபக்கம் திருப்பி ஒட்டி, அதற்குள் கடிதத்தை வைத்து விலாசமிட்டு, தான் சாப்பிடப் போகும் பொழுது போடலாமென்று சேட்டுப் பைக்குள் வைத்து விட்டு மேலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். 

வேலை மும்முரமாகச் செய்து கொண்டிருந்ததினால் நேர போனது கூடத் தெரியாமல், இரண்டு மணிக்கு எழுந்து தனது வழக்கமான எக்கவுண்ட்’ கடைக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இவருக்கு வழக்கமாகச் சாப்பாடு போடும் கந்தசாமி, “என்ன சேர் இண்டைக்கு ‘பப்ளிக் கொலிடே’யிலும் வேலை செய்யிறியளோ, உங்களுக்கென்ன ‘ஓவற்றைம்’ ஆக்கும்,” என்று சொல்ல முருகேசரும், “நாங்கள் கிளாக்மார் இப்படித்தானே உழைக்கவேணும், ‘ஓவற்றை’மும் இல்லையெண்டால் நாங்களும் குடும்பம் நடத்தலாமே. மெய்யே கந்தசாமி சொல்லு பாப்பம்…” என்று சொல்ல, அதற்குள் கந்தசாமியும், “ஓம் சேர், புள்ளைகுட்டிக்காரர் அப்புடித்தானே செய்து ஒரு மாதிரிக் காலத்தைக் கொண்டு போக வேணும்…” என்று முருகேசருக்குத் துணையாகக் கதைத் தான். இப்படிக்கதைத்து சாப்பிட்டு விட்டு, முருகேசர் திரும்பவும கந்தோருக்கு வந்து தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். கைகளும் உழைந்து நேர எடுக்க இரண்டு கைவிரல்களுக்குள்ளும் ஒன்றை யொன்றுக்குள் சொருகி நெட்டி முறித்து விட்டு, நாரியை நிமிர்த்தி சுவரில் இருந்த மணிக்கூட்டைப் பார்த்தார். மணி ஏழு ஆகிவிடவே ‘பைல்’களை எடுத்து அடுக்கி வைத்து விட்டு, கந்தோரைப் பூட்டித் திறப்பைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து நேரத்தையும் போட்டு விட்டு, தனது போடிங்குக்குச் சென்று விட்டார் முருகேசர். 

(3) 

பரிபாலன அதிகாரி, தனது இன்’றேக்குள் கிடந்த ‘பைல்’ களைக் கவனித்து கொண்டு போகும் பொழுது, முருகேசின் கையெழுத்தில் ஏதோ எழுதிக் கிடந்ததைக் கண்டு எடுத்து வாசித்தார். அதில் தனக்கு ‘பப்ளிங் கொலிடே’யில் வேலை செய்ய அனுமதி ஏற்கனவே தந்ததாகவும் அதன்படி தான் வந்து காலை 6 மணி கொடங் மாலை 7 மணி வரை வேலை செய்ததாகவும் அதற்கு ‘ஓவற்றைம்’ தரும்படியும் அதற்காய ‘வவுச்சர்’ இணைத்திருப்பதாகவும் எழுதியிருந்தது. அதைப் படித்துப் பார்த்த அதிகாரி, உடனே அந்த ‘வவுச்சரில்’ மிஸ்டர் முருகேசுக்கு, பப்ளிக் கொலிடேயில் வேலை செய்ய உத்தரவு கொடுத்தது’ உண்மையென்றும் அது, அவரது வேலைகள் ஏற்கனவே கவனிக்கப்படாமல் இருந்தமையால், அதைக் கவனித்து, ‘அப் ருடேற்’ ஆக்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டது. அப்படிக் கவனிக்காமல் இருந்த வேலைகளுக்கு இவரே பொறுப்பென்றும், இவர் அடிக்கடி ஊருக்கு போவதற்காக லீவு எடுத்ததே அதற்குக் காரணம் என்றும் அதனால் அவருக்கு ‘ஓவற்ரைம்’ கொடுக்க முடியாமைக்கு வருந்துவதாகவும் எழுதிக் கையொப்பமிட்டுத் தனது ‘அவுட்’ றேக்குகள் போட்டு விட்டார்.

தனது ‘வவுச்சரை’க் காணவில்லை யென்று காத்துக்கொண்டிருந்த முருகேசர். மெல்ல எழுந்து சென்று அதிகாரியின் ‘பீயோனை’ப் பிடித்து தனது ‘வவுச்சரின்’ நிலைமையைப் பார்த்துச் சொல்லச் சொன்னார். பீயோன், அதிகாரியின் ‘அவுட் றே’யைக் கிளறி, முருகேசின் வவுச்சரைக் கொண்டு வந்து கொடுத்தான். 

பீயோன் கொண்டுவந்த வவுச்சரைப் பார்த்த முருகேசரின் இதயம் கிழித்து சிதற, அதை ஏழெட்டாக மடித்துக் கிழித்து ஊத்தைக் கூடைக்குள் போட்டு விட்டு, தனது வெப்பியாரத்தை பீயோனுக்குக் காட்டிக் கொடுக்காதவராக து ஒரு ‘சிம்பிள் மற்றர்’ என்பதைப் போல் கன்ரீனுக்கு, ஒரு பிளேன்ரீக்கு படிகளில் இறங்கிப் போகின்றார். அவரது இதயத்தில், அதிகாரி எழுதிய ‘றிக்றெற்’ என்ற ஆறு ஆங்கிலச் சொற்களும் ஈட்டிகளாக இன்னும் குத்திக் கொண்டு தான் நிற்கின்றன. 

– வசந்தம், நவம்பர் 1965.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *