ஓலம்
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மீனாட்சி பித்துப் பிடித்தவள் போல் ஓடினாள்.
முழுமையாக நான்கு நாட்கள்.
அகதிகள் முகாமுக்குள் கொடுத்த ரொட்டித்துண்டையோ, தேநீரையோ அவள் கை நீட்டி வாங்கவும் இல்லை. வாயில் வைக்கவும் இல்லை.
அவளைத் தெரிந்தவர்கள் ஒரு ‘டம்ளர்’ தேநீரையா வது குடிக்கும்படி வற்புறுத்திப்பார்த்துச் சலிப்படைந்து பின்னர் கேட்பதையே விட்டுவிட்டார்கள்.
இந்த நான்கு நாட்களும் முகாமின் ‘கேட்’டுக்குப் பக்கத்திலேயே கொட்டக், கொட்ட கண் முழித்தபடி உட்கார்ந்திருந்தாள் மீனாட்சி. இரவு, பகலாகத் தூக்க மேயில்லை. உடம்பு பாதியாகி விட்டது.
நான்கு நாட்களுக்கு முன்னர்தான், மதிய வேளைச் சமையலுக்கான ஆயத்தங்களில் மூழ்கியிருந்தாள், மீனாட்சி. வீட்டு வேலைக்கென அமர்த்தப்பட்டிருந்த பெண், இரண்டு கிழமைக்கு முன்னால் சொல்லாமல் கொள்ளாமல் நின்று விட்டாள்; புதிய வேலைக்காரியைத் தேட முடியவில்லை. வீட்டு வேலைகள் அனைத்தும் அவள் தலையில் விழுந்தன.
அந்தப் பெரிய பங்களா போன்ற வீட்டைக் கூட்டித் துடைத்துப் பெருக்க வேண்டும். ஆளுக்கொரு சமையல் பண்ணவேண்டும். கணவன் வேதவனத்துக்குப் பத்தியச் சாப்பாடு. நான்காண்டுகளுக்கு முன்னால் பாரிச வாதத்தினால் படுக்கையில் விழுந்தவர் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எழுந்திருக்கவில்லை. ஒரு பக்கம் பூராவும் செயலிழந்துவிட்டது பேச்சும் சரியாக வராது. பாதி சைகையும், பாதி உளறலும்தான். அன்றிலிருந்து அவருக்குப் பத்தியச் சாப்பாட்டைத் தவிர வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.
மீனாட்சியின் மூன்று பெண்களும் மூன்று ரகம். ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காது. வளர்ந்த பெண்கள்தான். ஆனாலும் அம்மாவுக்கு உதவி பண்ணுவோம் என்கின்ற எண்ணம் கிடையாது. நாள் முழுவதும் டி.வி, அது முடிந்தால் வீடியோ; அதுவும் இல்லாவிட்டால் கதைப் புத்தகம்.
அவர்களை மீனாட்சி கடிந்து கொள்வதுமில்லை; பிள்ளைகளைக் கடிந்தால் வேதவனத்துக்குப் பிடிக்காது. முகத்தைத் திருப்புவார். பெண்களுக்கு அப்படியொரு செல்லம் கொடுத்து வளர்த்திருந்தார். நான்கைந்து அரிசி மில் உரிமையாளரான அவருக்கு அதற்கான வசதியும் இருந்தது.
“சங்கரி! அப்பாவுக்கு ‘ஹார்லிக்ஸ்’ கொடுத்தியா?” என மீனாட்சி தன் மூத்த மகளிடம் இரண்டாம் தடவையாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சமயம்; எவரோ ‘கேட்’டைத் திறந்து கொண்டு உள்ளே ஓடி வருவது சமையலறை ஜன்னலின் ஊடாகத் தெரிந்தது.
‘யாரது? காமினியா?’ ஆச்சரியத்தோடு வெளியே வந்தாள்.
காமினி அவளது வீட்டில் முன்பு வேலைக்கு இருந்தவன். எட்டு வயதில் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தவன், பதினாறு வயதுவரையும் அங்கேதான் இருந்தான்; நன்றாகத் தமிழ் பேசுவான். வயது ஆக, ஆக அவனது போக்கில் மாற்றம் காணவே அவனை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார் வேதவனம். அவனைத் தனியாக ஏதாவது தொழில் பார்க்கும்படி பணமும் கொடுத்தனுப்பினார். அத்தோடு போனவன்தான் அதன்பின் வீட்டுப்பக்கமே தலை காட்டாதவன்; இப்போது ஏன் ஓடிவருகிறான்…?
அம்மே! தெமலு கடவல் ஒக்கம கினிதியனவா தெமலு ஒக்கம மரணவா……!
”அம்மா! தமிழர்கள் கடைகளைத் தீவைத்துக்கொளுத்துகிறார்கள். தமிழர்கள் எல்லோரையும் கொல்கிறார்கள!” என்றான். அவன் குரலில் பதட்டம் தொனிப்பது போலிருந்தது.
“மல்லி!(தம்பி)நான் என்ன பண்ணுவேன்?அவருக்கோ எழும்பி நடக்கக்கூட முடியாதே! பெண்ணுங்க மூன்றும் வயது வந்தவங்க, கடவுளே இது என்ன சோதனை…?”
இந்தத் திடுக்கிடும் செய்தியைக் கேட்டதும் கலங்கிப் போன மீனாட்சி ஒன்றும் செய்வதறியாமல் புலம்பினாள்.
“தங்கச்சிமாருங்களைப் பற்றித்தானே! அவங்களை நான் கூட்டிப்போய் காப்பாத்துறேன். பயப்படாம என்கூட அனுப்புங்க…”
“அம்மா! வேண்டாமம்மா. நடப்பது நடக்கட்டும். நாம யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை’ – மூத்த மகள் சங்கரி மறுத்தாள்.
“என்னோட வரப் பயமா? நான் உங்களுக்கெல்லாம் நல்லா வச்சிருப்பங்’ மீண்டும் காமினி வற்புறுத்தினான்
அவனது நறுக்கு மீசையும், ஒட்ட வெட்டிய கிராப் பும், தடித்த உதடுகளும் மீனாட்சியையும், பிள்ளைகளையும் அச்சுறுத்துவது போல் காணப்பட்டது.
ஒரு காலத்தில் வேலைவாங்கிய பையனா இவன் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.
“முடியாதம்மா. அப்பாவையும், உன்னையும் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டோம், செத்தாலும் ஒன்றாகச் செத்துப் போவோம்” – இளைய மகள் கலா தந்தையின் கட்டிலண்டை நின்றபடியே கூறினாள்.
இவர்களது உரையாடலைப் பாதி புரிந்தும், பாதி புரியாமலும் படுக்கையில் மிரள மிரளப் பார்த்துக் கொண்டு கிடந்த வேதவனம் ஏதோ சைகையில் கூற முயன்றார். அவர் கூறியது ஒருவருக்கும் புரியவில்லை.
காமினியைப் பக்கத்தில் வரும்படி அழைத்தார்.
அதனைக் கண்டும், காணாதவன் போல் நின்ற காமினி, அவர்களுக்கு முன்னாலேயே ‘சிகரெட்’ ஒன்றைப் பற்ற வைத்தான். அவன் பார்வை சங்கரியின் மேலேயே இருந்தது.
“அப்போ நீங்க வர விருப்பங் இல்லை” – சோபாவின் பக்கமாக நின்று கொண்டிருந்த காமினி கேட்டுக் கொண்ட தோரணை மீனாட்சியையும் பிள்ளைகளையும் சந்தேகப்படவைத்தது.
அந்தச் சமயம் வெளியிலிருந்து ஒருவன் “அடே! மச்சங் துந்தெனாம கொஹெம பஹரி கேண்ட ராட்ட கொந்த, வாசிய தமாய்” – சிங்களத்தில் கத்தினான்.
காமினி வெளியே எட்டிப் பார்த்து ஏதோ அவனை அதட்டுவது போல் கண்டித்துக் கொண்டான்.
வெளியே நின்ற காமினியின் நண்பர்கள், “அடே! மச்சான்! மூன்றையும் கொண்டு வா! இரவு நமக்கு நல்ல வேட்டைதான்” எனத் தங்களையே அவர்கள் கேலியாக குறிப்பிடுவதைக் கேட்ட சங்கரி, சினத்துடன் காமினிக்கு. எதையோ சொல்ல வாயெடுத்தாள்.
அவளைப் பேசவிடாது இடையில் குறுக்கிட்ட மீனாட்சி; “மல்லி! நீ கேட்டது சந்தோஷம். நீ இப்ப,போ; அவருக்கு ஏதாவது ஒழுங்கு செய்துவிட்டு நாங்க வருகிறோம்” என்றாள்.
இந்த வேளையில் அவனைப் பகைப்பது பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடும் என்பதை தெரிந்து கொண்டு சமாதானமாகக் கூறினாள் மீனாட்சி.
“சரிங்…க” – ஏதோ தன் வலையில் சிக்கிய மீன்களைத் தற்காலிகமாய் கடலில் விட்டு வைத்திருப்பது போல் சங்கரியை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சென்றான்.
“அம்மா! இவன் தானம்மா நமக்கு எமன்; அவன் மீண்டும் திரும்பி வருவதற்குள் இந்த இடத்திலிருந்து போய் விடவேண்டும்!” என்று கூறியபடி பரபரவென்று அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த பணம், நகை, முக்கிய தஸ்தாவேஜுகள் ஆகியவற்றை எடுத்துத் துணியொன்றில் முடிந்தாள் சங்கரி.
தானாக எழும்பி உட்காரவும் முடியாத வேதவனத்தை எங்கு கொண்டு போவதென்பதுதான் எல்லோரையும் கலக்கத்துக் குள்ளாக்கியது; எதற்கும் அவரை எழுப்பி உட்கார வைக்கலாம் என ‘கட்டிலண்டை’ சென்று அவரை அணைத்துத் தூக்கி படுக்கையில் சாய வைத்தாள் மீனாட்சி. அவரால் சரியாக உட்கார முடியவில்லை. வானத்தை நோக்கி இரண்டு கைகளையும் விரித்தார். கடைவிழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
தன்னை விட்டு விட்டுக் குழந்தைகளைக் கூட்டிச் செல்லும்படி மீனாட்சிக்குச் சைகையில் கூறினார்.
“நான் இப்படியே கிடக்கிறேன்… நீங்கள் ஓடித் தப்புங்கள்” எனத் தன் பெண் கலாவின் நாடியைத்தடவி சைகை பாதி உளறல் பாதியாகச் சிரமப்பட்டுக் கெஞ்சு வது போல் கூறினார்.
“முடியாதப்பா! உங்களை விட்டு விட்டு, எங்கள் உயிர் போனாலும் போகமுடியாதப்பா” – மூன்று பெண்களும் தந்தையை அணைத்தபடி கதறினார்கள்.
‘மரப்பாங்…மரப்பாங்…! தெமலு ஒக்கம காப்பாங் கினி தியப்பாங்…’
வெளியே, தமிழர்களைக் கொல்லு, தீமூட்டு என்ற ஒரே கோஷம்.
இதனைக் கேட்டதும் மீனாட்சி வெலவெலத்துப் போனாள். வேதவனத்தின் உடலோ அச்சத்தில் கிடுகிடென நடுங்கியது வயதானவர் – அத்துடன் நோயாளி வேறு.
பாத்ரூம் ஒன்றிற்குள் ஓடிப்போய் பாயொன்றை விரிக்கும்படி கூறிய மீனாட்சி. மகள் சங்கரியின் உதவியுடன் வேதவனத்தைத் தூக்கிச்சென்று அதற்குள் இருக்கும்படி பணித்தாள்.
சிங்களக் குண்டர்கள் வீட்டுக்குள் புகுந்தாலும், அவர்கள் கண்களில் வேதவனம் பட்டு விடக்கூடாது என்கிற அவசரம்.
“என்னைப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஓடுங்கள், ஓடுங்கள்” என்று கண்களில் நீரோடத் தட்டுத் தடுமாறிக் கூறினார், வேதவனம்.
“அப்பா பயப்படாதீர்கள் ஒன்றும் நடக்காது.கடவுள் இருக்கிறார் அழாதீங்களப்பா. நாங்க தைரியமாக இருக்கிறோம்.” – தந்தையின் கழுத்தை கட்டிப்பிடித்தபடி தைரியம் கூறிய சங்கரியின் காதுகளுக்கு வெளியே கேட்ட கோஷங்கள் – கூச்சல்கள் மிக அருகில் நெருக்கமாகக் கேட்பது போலிருந்தது.
“அம்மா பயமாயிருக்கு” என ஓடிப்போய்த் தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
அடுத்த கணம் அவர்களது இரும்புக் ‘கேட்’டின் மேல் கடப்பாரைகள் மோதும் கணீரென்ற சத்தம் காதைத் துளைத்தது.
மீனாட்சி மூவரையும் இழுத்துக் கொண்டோடினாள். பின்னால் ஓடித் தப்ப எந்த வழியையும் காணவில்லை. ‘பட்’ டென்று பின்னாலிருந்த ‘பாத்ரூம் டிரெயினேஜ்’ஜைத் திறந்து அவர்களை அதற்குள் இறங்கும்படி கூறினாள். அருவருப்பும், அசுத்தமுமான அந்தக் குழிக்குள் மூக்கைப் பிடித்தபடி முதலில் கலா இறங்கினாள். அடுத்து இரண்டாவது பெண் பிரபா. கடைசியில் சங்கரி.
சற்று தாழ்ந்து தலைகள் வெளியே தெரியாத விதமாக குழியின் மூடியை சிறிது இடைவெளிவிட்டு மூடினாள் மீனாட்சி.
திபு திபு வெனக் குண்டர்கள் ‘கேட்’டுக்குள்ளே புகுந்ததைக் கண்டதும், சுவரோடு சுவராக ஒன்றி, தன் வீட்டிலேயே ஒரு திருடனைப்போல் ஒளிந்து மறைந்து, நான்கடி உயரத்திற்குக் ‘கட்’பண்ணி விட்டிருந்த அடுக்குமல்லிகைச் செடிக்கு மறைவில் உட்கார்ந்து கொண்டாள் மீனாட்சி.
அந்தக்கொள்ளையர் கோஷ்டியில் ஒருவனாக வந்திருந்த காமினி வீட்டின் உள்ளே, வெளியேயெல்லாம் ஆவேசமாய் ஓடியோடிப்போய்ப் பார்த்துவிட்டு, எதேச்சையாய் மல்லிகைச் செடியோரம் வந்தான்.
அவனது கழுகுக் கண்களுக்கு மீனாட்சியின் சிவப்புப் புடவை ‘பளிச்’சென்று தெரிந்தது.
‘டோய் இங்கிருக்காங்! அந்தப் பொட்டைங்க எங்க. ஒழிச்சிட்டாங்க சொல்லு’ பலத்த சிரிப்புடன் மீனாட்சியைப் பிடிக்க நெருங்கினான். அவனது கையொன்றில் புல்லு வெட்டும் அரிவாளொன்று தக, தகவென அப்பொழுதுதான் உலைக்களத்திலிருந்து வெளியே வந்தது மாதிரி மினுங்கியபடியிருந்தது.
மீனாட்சியின் வயதான கால்களுக்கு எப்படி அப்படியொரு பலம் வந்ததோ தெரியாது. ‘டேய் நன்றி கெட்ட நாயே’ எனக் கத்தியபடி ‘கேட்’டைத் தள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள். காமினி விடவில்லை, பின்னால் துரத்தினான்.
‘விடாதே பிடி ஓடு’ எனச் சிங்களத்தில் கும்பலில் இருந தவர்கள் அவனுக்கு உற்சாகம் கொடுத்தனர்.
வீதி முனை வரை துரத்திச் சென்றவன்; மீனாட்சி ஒரு வீட்டுக் ‘கேட்’டைத் திறந்து கொண்டு உள்ளே ஓடவும் திரும்பி விட்டான்.
அன்று அகதிகள் முகாமுக்கு வந்தவள்தான் மீனாட்சி. பிள்ளைகளைப்பற்றியோ, கணவனைப்பற்றியோ எந்தத் தகவலுமில்லை. நாட்கள் நாலாகியும் முகாம் வாசலிலேயே பேச்சு மூச்சின்றி உட்கார்ந்திருந்தாள்.
அப்பொழுது தான், “கலவரங்கள் அடங்கிவிட்டன. பாதுகாப்புத் தருகிறோம். எல்லோரும் அவரவர்களின் பழைய இடங்களுக்குப் போய்விடுங்கள். அகதிகள் முகாமை மூடிவிடப் போகிறோம்’ என அறிவிக்கப்பட்டது.
பயந்து நடுங்கி, உணர்விழந்து கிடந்த தமிழர்கள் மீது மீண்டும் தாக்குதல். கும்பலாக உட்கார்ந்திருந்த. காக்கைகளைக் கல்வீசிக் கலைப்பதுபோல் – துப்பாக்கிமுனையில் அவர்களை அவரவர்கள் இருப்பிடங்களுக்குப் போகும்படி விரட்டினார்கள்.
அடுத்த வினாடி மீனாட்சி பித்துப் பிடித்தவள் போல் தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தாள். தனது வீதிக்குள் புகுந்து வீடிருந்த இடத்தை அடைந்தாள்.
வீட்டுக்குப் பதிலாய் சாம்பல் குவியல்கள், இடிந்து, தகர்ந்த செங்கற்கள், கருகித் தொங்கிய விட்டங்கள்…
மடார், மடாரென தன் தலையில் அடித்துக்கொண்டே கதறியவண்ணம் ‘பாத்ரூம்’ இருந்த பகுதிக்கு ஓடினாள். அங்கே அவள் கணவனின் உடல் பாதி எரிந்தும், பாதி எரியாமலும் கட்டையாய் விறைத்துக் கிடந்தது.
“என் ராசா… என் தெய்வமே… இதைப் பார்க்கவா நான் உயிரோடிருந்தேன்…” கருகிக்கிடந்த கணவனின் சடலத்தின் மீது விழுந்து, விழுந்து கதறியவளுக்கு – பிள்ளைகளின் நினைவு வரவே வெறிகொண்டவள் போல் எழுந்து ஓடிப்போய் ‘டிரையினேஜ்’ஜைப் பார்த்தாள்.
அவள் மூடிவைத்திருந்த ‘டிரயின்னேஜ்’ஜின்மேல் வீட்டிலிருந்து சரிந்து விழுந்த பெரிய தூண் ராட்சத உருவில் கிடந்தது. அதனை அகற்ற முயன்றாள். முடியவில்லை.
அத்தூணிலேயே தலையை முட்டி மோதி இரத்தம் சொட்டச் சொட்ட அவள் போட்ட கூக்குரலில் வீதியில் சென்ற சிலர் ஓடிவந்து அவளுடன் சேர்ந்து அத்தூணை அகற்றினர்.
உள்ளே அவ்விளம்பெண்கள் மூவரும் பிணமாகக் கிடந்தார்கள். குழிக்குள் எழுந்த நச்சுவாயு அவர்களைக் கொன்றிருக்கலாமெனக் கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், பித்தாகிப் போயிருந்த மீனாட்சி, அதைக் கேட்க அங்கு இருக்கவில்லை.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 476
