ஓர் ஏழை நாடும் ஒரு பரம ஏழையும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 111 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

…ஆகவேதான் இந்தக் கடிதம் எழுத நேர்ந்தது. நான் மீண்டும் சொல்கிறேன். அன்த்துவான் நிறைய சம்பாதிக்கிறானே என்கிற ஆதங்கமோ, பொறாமையோ எனக்கில்லை. என் சம்பளம், என் செலவுக்குக் காணவில்லை என்பதே என் பிரச்சினை. 

ஐயா, சென்ற வாரம் என் சகோதரி, வார இறுதியை என்னு டன் செலவிட என்று வந்திருந்தாள். அவளுக்கு மீன் குழம்பு பண் ணிப்போட வேண்டும் என்று நானும் என் மனைவியும் ஆசைப் பட்டோம். தப்பில்லையே? 

பெரிய கடை மார்க்கெட்டுக்குப் போய் இருந்தேன். மீன்கள் ஏராளமாக வந்திருந்தன. வௌவால் மீன் விற்றுக் கொண்டிருந்த ஒரு கடைக்காரி மூன்று மீன்கள் பதினைந்து ரூபாய் என்றாள். “என்ன அக்குறும்பு? திம்மா திம்மா மீனா பதினைந்து ரூபாய்?” என்றேன். “வாங்காட்டி வாயை மூடிக்கொண்டு போய்ச் சேரு” என்று சொன்னாள். நாலுபேர் சொல்லி வைத்தாற்போல, என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். நான் கூசிப் போனேன். 

ஐயா, என் நண்பன் அன்த்துவானோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வது தவறாகாது என்றே நம்புகிறேன். ஏனெனில், நான் வீரர் வெளித் தெருவிலும், அவன் பாதர் சாஹிப்புத் தெருவிலும் குடியிருந்தோம். என் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அன்த்து’ என்று உரக்கக் கத்தினால், ‘ஏண்டா’ என்று அவன் கேட்பான். அவ்வளவு பக்கம். நாங்கள் இருவருமே அன்றாடங்காய்ச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவனைக் காட்டிலும் உயரமானவன். பலசாலி, தமிழில் இரண்டாயிரம் வருஷத்து இலக்கியங்களை நேற்று வெளிவந்தவை உட்பட – நான் படித்திருக்கிறேன்; ஆங்கிலத்திலும் எனக்கு ஞானம் உண்டு. அன்த்து வானின் முழுப்பெயரை எழுதச் சொன்னால் அன்னத்துவான் ஆசீர்வதம் என்றே ஒரு வதம் செய்வான். ஆனாலும், அவன் மூவாயிரம் எழுபதுகளின் ஆரம்பத்தில் சம்பாதிக்கிறான். சமூகத்தின் மதிப்பீட்டின்படி அவன் வெற்றி பெற்றவன். என் அப்பா, என்னை அவனுடன் ஒப்பிட்டுத்தான் திட்டுவார். அப்படித் திட்டினால் தான் அவருக்குத் திருப்தி. ‘பார், அவன் பிள்ளையா? நீ பிள்ளையா? ஏதோ படித்தான். வேலைக்குப் போனான். ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கிறான். குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். அவன் பிள்ளை! தென்னம்பிள்ளை ! நீ உதவாக்கரை. குட்டிச்சுவர். அறுந்துவிழுந்த பல்லிவால்!’ 

பிரான்சுக்குப் போய் ஏதேனும் வேலை செய்து, ஓய்வு பெற்று, இங்குத் திரும்பி ஒய்வுத் தொகையை வைத்துக் கொண்டு, சௌகர்ய மாக வாழும் வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியது. ஒன்று என் அப்பாவாலும், மற்றது என்னாலும் தட்டிக் கொண்டு போயிற்று. யோசிக்கையில், எனக்கு அதனால் வருத்தமில்லை. இந்த ஊரில் இருக்கும் பிரஞ்சுப் பள்ளியில்தான் நான் சேர்க்கப்பட்டேன். அங்கு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் அப்பா ஒரு காரியம் செய்தார். அவர் சுதந்தரப் போராட்டக்காரர். பிரஞ்சு ஏகாதிபத்யத்தை எதிர்த்து அவர் போராடிக் கொண்டிருந்தார். எந்தக் காலனி ஆட்சியை அவர் எதிர்க்கிறாரோ அதே காலனிக் காரர்களின் மொழியான பிரஞ்சு மொழியை நான் படிப்பதாவது? அவருக்கு அது இழுக்கானதல்லவா? ஆகவே, என்னைப் பிரஞ்சுப் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி, ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். ஆங்கிலக்காரனும் ஏகாதிபத்யக்காரன்தானே? ஆனாலும், அவன் அவருக்கு நேரான எதிரி அல்லவே! 

கிறிஸ்துவப் பாதிரிமார்கள் நடத்தின பள்ளியில் நான் சேர்க்கப் பட்டேன். பிரஞ்சுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தவன், ஆங்கிலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். எனக்குப் பக்கத்தில் ஓரளவு பெரியவனாக ஒரு பையன் உட்கார்ந்தி ருந்தான். அவன்தான் அன்த்துவான். நல்லது! ஐந்தாம் வகுப்பு படித்த நான், சுமார் பத்து வயதில் ஐந்து வயதுப் பையன்களுடன் முதல் வகுப்பில் அமர்ந்து, ‘ஏ பார் அன்ட்’ படித்தேன். எட்டாம் ஒன்பதாம் வகுப்பு வரும்போது எனக்குக் கருகருவென்று மீசை முளைத்துவிட்டது. அந்த நேரம் பார்த்துதான் எனக்கு நா. பார்த்த சாரதியின், குறிஞ்சி மலர் கிடைத்தது. எனக்குள் அரவிந்தன் குடியேறி, நானே அவன் ஆனேன். அந்த மனோபாவத்தின் பௌதீகக் குறியீடாக நான் ஒன்பதாம் வகுப்பு வரும்போது வேஷ்டி கட்டத் தொடங்கினேன். ஆசிரியர்கள் பலர் என்னிடம் நெருங்கவே தயங்கி என்னைப் புறக்கணித்தனர். பள்ளிக்கூட மாணவர்களிலேயே நான் பெரியவனாக இருந்தேன். என்னை எப்படி நடத்துவது என்பது அவர்களின் பிரச்சினையாக இருந்திருக்கும். 

என் தாயார் வகையறாவில், மிஷேல் மோகனரங்கம் என்ற மாமா ஒருத்தர், இருந்தார். அவருக்கு என் மேல் வாஞ்சை, ஒருமுறை விடுமுறைக்கு வந்தவர், என்னிடம், “வர்றியாடா பிரான்சுக்கு… நான் ஏற்பாடு பண்ணறேன். ரொம்ப சீக்கிரம் பெரிய நிலைமைக்கு வந்திடலாம்” என்றார். ஆச்சர்யம் என்னவெனில் அப்பாவும் மாமாவின் திட்டத்தை ஆமோதித்தார். இந்தியக் குடியுரிமையை மறுத்துவிட்டுப் பிரஞ்சுப் பிரஜையாக மாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் அப்போது இருக்கவே செய்தது. பிரான்ஸ் தேசத்தில் பிரஜைகளுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் இருந்தது என்றும், அது அடிப்படை உரிமை என்றும், வேலை கிடைக்கும் வரை உதவிப் பணம் கூடக் கிடைக்கும் என்றும் என்னிடம் அவர் சொன்னார். மாமா, ஓர் அரை பிரஞ்சுக்காரனாகவே மாறி இருந்தார். ‘இன்னா தோன்’ என்று விளித்துப் பிரஞ்சு மொழியில் அழகாகப் பேசினார். இந்தியர்கள் மோசக்காரர்கள் என்றார். இங்கே காயும் சூரியனைச் சபித்தார். தெகோலைப் (பிரான்ஸ் தலைவர்) புகழ்ந்துரைத்தார். பிச்சைக்காரர்களை வெறுத்து, இந்தியா இதில்தான் முன்னேறி இருக்கிறது என்றார். மாமா சொல்லிக் கொண்டே போனார். “இந்த நாடு உருப்படாதுடா. இங்கே, எம்.ஏ.படி., அதற்கு மேலும் படி. உனக்கு வேலை கிடைக்காது. எத்தனை இலட்சக்கணக்கான பேர் வேலை இல்லாமல் தெருவில் திரிகிறார்கள். நானும் பார்க்கிறேனே! 

“இந்தியர்கள் இந்தியர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள். அரசாங்கம், மக்களுக்கானத் திட்டம் ஒன்றுக்கு நூறு ரூபாய் செலவு செய்கிறது என்றால், அதில் பத்து ரூபாய் கூட மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிகள். போலீஸ்காரர்கள் சமூக விரோதிகள். நாணயஸ்தர்கள் இல்லை. இந்த தேசத்தில் பிறந்த அறிவாளிகளுக்கு முதுகெலும்பு என்பதே இல்லை” இப்படியாக மாமா தேங்காய்ப் பாலில் ஊறவைத்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்ட படியே பேசிக்கொண்டே போனார். அப்பா அவற்றை ஆமோதித்தார். அவர் பிரெஞ்சு இந்திய சுதந்தரப் போராட்ட வீரர். சுதந்தரத்துக்குப் பிறகு நிலைமை சீர்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர். கறுப்பு துரைகள், வெள்ளை துரைகளை விட மோசமானவர்களாக இருக்கக் கண்டு மனம் உடைந்தவர் அவர். 

மாமா சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. நான் அவற்றை ஆமோதித்தேன். 

“ஆகவே, இந்த நிலைமையில், நீ இந்தியாவை விட்டு பிரான்சுக்கு வருவதுதானே மேல்?” என்று கேட்டார் மாமா. 

“இல்லை. இந்த நிலைமையில் நான் இங்கு இருப்பது தான் உத்தமம். நீங்கள் சொன்ன அயோக்கியர்களால் பாதிக்கப் பட்டவர் கள் என் அண்ணன் தம்பிகள். அவர்களுடன்இருந்து அவர்களுக்காக உழைத்தால்தான், நான் மனிதன்’ என்று சொன்னேன். 

“அப்படியானால், அரவிந்தன் மாதிரி ஜிப்பா, வேஷ்டி கட்டிக் கொண்டு, ராத்திரிகளில் வேர்க்கடலை தின்று கொண்டு பசும்பால் குடி. உனக்கு ஒரு போதும் பூரணி கிடைக்கமாட்டாள்.” 

“சரி.'” 

மாமா பிரான்சுக்குப் போக ரயிலேறும் போது, நானும் வழி அனுப்பப் போயிருந்தேன். மாமாவின் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், சிநேகிதர்கள் மற்றும் நான் ஆகிய எல்லோரையும் கட்டி அணைத்து முத்தமிட்டு விடை பெற்றுக் கொண்டு ரயில் ஏறினார் மாமா. ரயில் ஏறும் போதுகூட மாமா சொன்னார். ‘இப்போதுகூடக் காலத் தாமதம் ஆகிவிடவில்லை. நன்றாக யோசி, பிரான்சுக் குடி மகனாக மாறி, ஒரு சுபிட்சமான வாழ்க்கையை அடைந்து கொள்ளத் தயாராக இருந்தால் எனக்குக் கடிதம் போடு. அங்கிருந்தே அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். உன் அப்பா. அருமையான பிரான்சு விரோதி. அவரே ஒப்புக் கொள்கிறார். நீ என்ன கிடந்து ஆடுகிறாய்?” என்றார் மாமா. யோசிப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற மனத்தெளிவோடு” நான் யோசிக்கிறேன் மாமா” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டேன். புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில், பொய் சொல்லல் தவறல்ல! 

ஐயா, 

முதல் விடுமுறையில் பிரான்சில் இருந்து வந்தபோது அன்த்து வான் அவன் அனுபவத்தை எனக்குச் சொன்னான். முதலில் அவனையும் மற்றும் இன்னும் இரண்டு பேரையும் ஓர் அணியாகச் சேர்த்து மைதானத்தில் இருக்கும் சிகரெட் துண்டுகளைப் பொறுக்கச் சொன்னானாம் அவனடைய அதிகாரி. அன்த்துவானுக்கு அது மிகவும் அவமானமாகப் போய்விட்டதாம். 

“இதிலென்ன அவமானம்? இவை எல்லாம் ராணுவ ஒழுங்கில் ஓர் அம்சம்தானே” என்றேன். 

பல நாள்களுக்குப் பின்னால், அது அவனுக்குப் புரிந்ததாம். 

சரி, சிகரெட் துண்டுகளைப் பொறுக்கிச் சமாளித்த அன்த்து வான் மிகவும் ரசித்துச் சொன்னான். ஆளுக்கொரு டப்பாவைக் கையில் ஏந்திக்கொண்டு, மற்ற இருவரும் சிகரெட் பொறுக்கும் போது, அன்த்துவான், நின்றவாக்கில் மொத்தமான சப்பாத்துக் கால் களால், அந்த சிகரெட் துண்டுகளை அழுத்தி நசுக்கிக் காலாலேயே தள்ளி விட்டானாம். சிகரெட் துகள்கள் மண்ணில் கலந்து உருத் தெரியாமல் ஆகிவிட்டதாம். இந்தப் படிக்குக் குனியாமலேயே வேலை பார்த்தானாம் அன்த்துவான். குழுத்தலைவர், ‘உன் டப்பா வில் மட்டும் ஏன் சிகரெட்டுகளையே காண முடியவில்லை’ என்று கேட்டாராம். ‘எனக்குக் கிடைக்கவில்லை, நான் என்ன பண்ணட் டும்’ என்றானாம் அன்த்துவான். ஒழுங்குக்குப் பெயர் போன பிரஞ்சு ராணுவ அதிகாரிகள், அன்த்துவானை எப்படித் தட்டி ஒடுக் கெடுத்து வேலை வாங்கியிருப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 

ஐயா, 

இந்தியர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று நான் சொன்னால், கோபிக்கக் கூடாது. மலைச்சரிவுகளில் குளிரோடும், விஷப் பூச்சி களோடும் போராடி தேயிலை உற்பத்தி செய்யும் ஆட்கள் நாங்கள். ஆனால் எங்களுக்குக் கிடைப்பதோ மூன்றாம் தரத் தேயிலை. அது மாதிரித்தான் இந்த எறாலும். நாங்கள் அதை எறா என்போம். ஒரு காலத்தில் — காலம் என்பது சுமார் இருபது வருஷங்களுக்கு முன் கூட பெரிய பெரிய எறாக்கள் சுலபமாகக் கடைகளில் விற்றதுண்டு. இப்போது பெரிய எறாக்கள் கண்களிலே காணப்படுவதில்லை. இது ஏன் இப்படி நேர்ந்தது? எங்கள் கடலில், எங்களால் பிடிக்கப்பட்டும், எங்களுக்கு உணவாகாமல், யாரோ அவற்றைத் தின்னும்படியாக நேர்ந்தது எப்படி? 

என் தாத்தாவுக்குக் கல்யாணம் ஆனபோது, அவர் வகித்திருந்த கணக்குப்பிள்ளை உத்தியோகத்துக்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம். ஆறு பெண்கள், மூன்று பிள்ளைகள் அவருக்கு. நிம்மதியாக உண்டு உடுத்து, பெண்களுக்குத் திருமணம் முடித்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, ஒரு வீடு வாங்கி அதை ஒழுங்குபெறத் திருத்திக் கட்டி நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார், அவர். 

நான் தங்களைக் கேட்பது இதுதான். பத்து ரூபாய்ச் சம்பளக் காரர் அவ்வளவு திருப்தியாகக் குடும்பம் நடத்தியது சாத்தியம் என்றால், ஆயிரம் ரூபாய்ச் சம்பாதிக்கிற ஒருவன் கடனாளியாக உழல்கிற நிலை எப்படி, ஏன் வந்தது? எனக்குச் சம்பளமாக என் உழைப்புக்குப் பதிலாக ஒரு ரூபாய் தரப்பட்டால், அதன் உண்மை யான மதிப்பு பத்து பைசாவாக இருக்கிறதெனில், மீதியுள்ள தொண் ணூறு பைசாவுக்கு நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதுதானே பொருள்? விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி ஸ்திரப்படுத்தாமல் சம்பளம் என்று வெறும் பேப்பர் நோட்டுகளை வாரி வழங்குவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? நெல்லை உற்பத்தி செய்கிறவ னிடம் ஒரு ரூபாய்க்கு வாங்கி, மூன்று ரூபாய்க்கு விற்கிற, நெல்லோடு சம்பந்தப்படாத ஓர் இடைத்தரகனை, வியாபாரியை வளர்ப்பது எந்த சக்தி? 

எங்கள் தாத்தாவும், ஏன், எங்கள் தாய் – தந்தையரும் வாழ்ந்த வாழ்க்கையை, மானம் கெடாமல், மனம் நோகாமல் நாங்கள் வாழ்வது எக்காலம்? 

ஐயா, 

நாங்கள் கேட்க விரும்புவது இதுதான். 

ஒரே மண்ணில், ஒரே காற்றைச் சுவாசிக்கிற, ஓர் தகுதியை உடைய இருவர், (நானும், அன்த்துவானும்) இரண்டு வேறுபட்ட ஸ்திதியில் ஏன் வாழ வேண்டும்? நான் ஒரு குமாஸ்தா. அவனும் ஒரு குமாஸ்தா. அவன் சம்பளம், இங்கு நாடுவிட்டு நாடு வந்து சேர்கையில் நாலாயிரம் ரூபாய். என் சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய். ஆகவே, அன்த்துவான் மூன்று வௌவால் மீன்களை ஐம்பது ரூபாய்க்கு வாங்க முடிகிறது. நான் அவமானத்தைத் தின்ன வேண்டியிருக்கிறது. 

இதை நான் அனுமதிக்க முடியாது. இது, ஒரு பிரஜைக்கு நீங்கள் செய்யும் துரோகம். 

ஆக, என் பிரச்சினையைத் தங்களிடம் விளக்கி வைத்தேன். தங்கள் மேலான தீர்ப்பை எதிர்பார்க்கிறேன். தங்களன்புள்ள, ஏழை நாட்டுக்காரனான பரம ஏழை. 

பின்குறிப்பு: இது ஏழை தேசமல்ல. மக்கள் ஏழைகள். இந்த தேசத்தின், இந்தத் துணைக் கண்டத்தின் செல்வம் சரிவரப் பயன்படுத்தப் பெறவில்லை. தேசத்தின் செல்வம் வேறு சிலரிடம் சேர்வதால், மக்கள் ஏழைகளாக்கப்பட்டார்கள். 


இக்கடிதம் குமாஸ்தா – தலைமை குமாஸ்தா – சின்ன அதிகாரி பெரிய அதிகாரி – பெரிய பெரிய அதிகாரி – குட்டி மந்திரி மித மந்திரி பெரிய மந்திரியிடம் சென்று சேர்ந்து, பிறகு அதே வரிசையில் கீழ் இறங்கி, கடிதம் எழுதிய சுப்பிரமணி யக்குச் சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு பதில் வந்தது. விலாசதாரர், பிரான்ஸ் தேசத்துப் பிரஜையாக மாறி, பிரான்சுக்குப் போய்விட்டார் என்று சொல்லி, கடிதம் மீண்டும் இரண்டே கால் வருஷம் சென்று மந்திரியிடம் வந்து சேர்ந்தது. அப்போது பழைய மந்திரி மாறிப்போய் இருந்தார். புதிய மந்திரி பதவியில் இருந்தார். கடித விவரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அவர், அதைக் கிழித்துக் குப்பைக் கூடைக்குள் போட்டார். பிறகு, இந்தியாவில் படித்து, வெளிநாட்டில் உழைக்கப் போன தன் மகனுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினார். 

– 1990

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *