கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 84 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிருஷ்ணமூர்த்தி, மாமா வீட்டுக்குள் நுழையும்போது அவர் புத்தகங்களுக்கு உறை போட்டுக் கொண்டிருந்தார். 

ஏப்ரல் மாதம் வந்துவிட்டால், மாமாவுக்கு இந்த உறைபோடும் வேலை வந்துவிடும். மதியம் சாப்பிட்டு விட்டு, நிதானமாக ஒரு கைச் சுருட்டைப் பிடித்து முடித்து விட்டு உட்கார்ந்தாரானால், பத்துப் பன்னிரண்டு புத்தகங்களுக்காவது உறை போட்டு விட்டுத் தான் எழுந்திருப்பார். 

மார்ச் மாதம் தொடங்கியதுமே, மாமா இதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பிப்பார். தெரிந்த பெட்டிக் கடைகளில் சொல்லி வைத்திருந்து, சிகரெட் பண்டில்களின் மேலுறைகளைச் சேகரிப்பார். பக்கோடா, காராசேவ் பொட்டலங்களின் நூல்களைச் சுருட்டிச் சுருட்டிக் கூரையில் செருகி வைப்பார். துருப்பிடித்த பிளேடைக் கூட, ‘எதுக்கும் உதவும்டா’ என்று எடுத்து வைப்பார். 

மேலே மின்விசிறி அசுர வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தாலும், மாமாவின் ஸ்தூல உடம்பு வியர்வையில் குளித்திருந்தது. கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்ததும் ‘வாடா மாப்ளே’ என்று வரவேற்றுவிட்டு, உள்பக்கம் பார்த்து, ‘பசை காய்ச்சி வைக்கச் சொன்னேனே, எங்கேடி?’ என்று சப்தம் போட்டார். 

மாமாவுக்கு எதிரில் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்தான் கிருஷ்ணமூர்த்தி. 

மாமா தமக்குக் கீழே நாலைந்து புத்தகங்களை வைத்துக் கொண்டு அதன் மேல் உட்கார்ந்திருந்தார். புத்தகங்களை அப்படி யுமா உபயோகப்படுத்துவது? 

“என்ன மாமா இது?” என்றான் கிருஷ்ணமூர்த்தி. 

“ஏது?” 

“புத்தகத்தைக் கீழே போட்டுக்கிட்டு…” 

“ப்ச…சும்மா ஒரு வெயிட்டுக்குடா… அப்பத்தானே உறை படியும்..அதெல்லாம் சாமி கோவிச்சுக்காதுடா… மனசுலதான் கல்மி ஷன் கூடாது… சரிதானா?” 

“சரி…” 

அத்தை உள்ளேயிருந்து பசை எடுத்துக்கொண்டு வந்தாள். “வாப்பா மூர்த்தி…. எப்போ வந்தே நீ?” 

“இப்பத்தான்…” 

“இரு…” என்றபடி அவள் உள்ளே போனாள். சாப்பிட ஏதாவது கொண்டு வருவாள். வீட்டுக்கு யார் வந்தாலும், தொண்டை நனைய ஏதாவது கொடுத்தால்தான் அத்தைக்குத் திருப்தி. 

அத்தை தலை மறைந்ததுமே, சுமதி வந்து, கிருஷ்ணமூர்த்தி யைப் பார்த்து, ‘வா மூர்த்தி’ என்றாள். தூங்கிக் கொண்டிருந்தி ருப்பாள் போலும். கண்களில் கொஞ்சம் தூக்கம் ஒட்டிக் கொண்டிருந்தது இன்னும். 

“படுத்துக்கிட்டு இருந்தியாக்கும்” என்றான் மூர்த்தி. 

“சேச்சே, என் பொண்ணாவது, பகல் தூக்கம் போடறதாவது. சும்மா படுத்துக்கிட்டுச் சிந்திக்கிறாளாக்கும். ஷி ஈஸ் எ கிரேட் திங்க்கர், யூர் நோ?” என்றார் மாமா. 

கிருஷ்ணமூர்த்தி அவளைப் பார்த்துச் சிரித்தான். 

“போப்பா… ரொம்பத்தான் கேலி பண்றீங்க” என்று கோபித்துக் கொண்டாள் சுமதி… 

“அடடே… கோபத்துல கூட நீ ரொம்ப அழகா இருக்கியேன்னு, இப்ப, இந்த இடத்துல நீ சொல்லணும்டா சுத்த அசடா இருக்கியே..” என்றார் மாமா. 

“அப்படியா மாமா…” என்று அவன் திரும்புவதற்கும், தோ போய் அம்மாகிட்டே சொல்றேன்” என்று சுமதி ஓடவும் சரியாய் இருந்தது. 

“ஹோ… ஹோ…” என்ற சிரித்தார் மாமா. 

கவலை இல்லாமல் வளர்ந்த அவரின் உடம்பு குலுங்கியது. மாமாவைப் பார்க்கையில் மனசுக்குச் சந்தோஷமாக இருந்தது. 

ஏழாவதிலிருந்து எட்டாம் வகுப்புக்குப் போகும் சீனுவின் புத்தகங்கள், செங்கல் மாதிரி அவர் முன் அடுக்கிக் கிடந்தன. புத்தம் புதிய புத்தகங்கள், இனிய வாசனை வீசுகிற புத்தகங்கள், புதுப் புடவைக்கும், புதுப் புத்தகத்துக்கும் எப்படி ஒரு வாசனை வந்து விடுகிறது? கைப்படாத காரணத்தால் புத்தகங்களின் ஓரம், நர்சுகளின் வெள்ளாடை மாதிரி கண்களைப் பிடுங்கின. 

“ம்ஹூம்” என்று மூச்சை இழுத்தான் கிருஷ்ணமூர்த்தி.

“என்ன…?” என்று கேட்டார் மாமா. 

“புத்தகத்துக்குன்னு என்ன அழகான வாசனை மாமா?” “பூவுக்குத்தான் வாசனை. புத்தகத்துக்குக் கூடவா வாசனை?” “உலகத்துல எல்லாப் பொருளுக்கும் வாசனை இருக்கு மாமா. யோசிச்சா, பொருளோட குணமே அதனோட வாசனைன்னு தோணுது…’ 

மாமா அவனை நிமிர்ந்து பார்த்தார். 

“என்ன என்னமோ புதுசா புதுசா சொல்றே… நல்லாத் தான் இருக்கு கேட்க. என்ன பிரயோஜனம்? ஓர் உத்தியோகத்தைச் சம்பாதிக்க முடியலையே உன்னாலே?” 

மாமா எப்போதுமே இப்படித்தான். பலவீனங்களைக் குறிபார்த்து அடிப்பதில் வல்லவர் அவர். 

கிருஷ்ணமூர்த்தி சுருங்கிப் போய்விட்டான். தம்மால் அவன் தாக்கப்பட்டுவிட்டான் என்பதைப் புரிந்துகொண்டார் மாமா. 

“தப்பா ஏதேனும் சொல்லிட்டேனா? மனசுல வெச்சுக்கா தேடா…” 

“சேச்சே… அதெல்லாம் ஒன்றுமில்லே மாமா…” 

“எனக்கு உன்னைப் பத்தித்தான் கவலை!” என்றவர், உள்பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, கீழ்க் குரலில் சொன்னார். சுமதியை உனக்குத்தான் தரணும்னு எனக்கு ஆசை. ஆனால் உனக்கு வேலை இல்லையேங்கறா உன் அத்தை. அவ சொந்தத்துல யாரோ ஒரு பையனைப் பார்த்து வச்சிருப்பா போல. இந்த வருஷத்துலயே முடிச்சுடணும்கிறா.” 

சட்டென்று, தான் அவமானத்துக்கு உள்ளானது போல் இருந்தது மூர்த்திக்கு. பேசத் தோன்றவில்லை. புத்தகங்களின் மேல் அட்டை வழுவழுப்பைத் தடவிக் கொண்டிருந்தான். அப்புறமாய்ச் சொன்னான். 

“அத்தைக்கு நீங்கள் சொல்லப்படாதா மாமா?” 

அவர் தமக்குக் கீழிருந்த புத்தகங்களை எடுத்தார். மாமாவின் கனத்தில் புத்தகங்களின் உறை, சுருக்கம், கசங்கல் இல்லாமல் பெட்டி போட்டது மாதிரி இந்தது. 

“அது என் வழக்கமில்லேப்பா… குடும்பத்தைக் கூட்டுப் பொறுப்பா நினைச்சு வாழ்ந்துட்டேன். அவ மட்டும் யாரு? இந்தக் குடும்பத்துல அவளுக்கு சரி பொறுப்பும் உரிமையும் இருக்கே…” 

புத்தகங்களைப் பார்த்தவாறே மூர்த்தி சொன்னான்.

“சுமதிக்கு என் மேலே அன்பு இருக்கு மாமா…” 

மாமா, அவனைப் பார்த்தார். தலையை அசைத்தார். 

“அப்படியே இருக்கட்டும். எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்’ என்றவாறு கையை ஊன்றி ‘நாராயணா’ என்றவாறு எழுந்தார். பிறகு உள்பக்கம் திரும்பி, “என்ன பெண்களா? வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு ஒரு வாய்க் காப்பி கூடக் கொடுக்க மாட்டீங்களா? தேவதைகளா?” என்றார். 

சுமதியின் கல்லூரிச் சான்றிதழ்களைப் படி எடுத்தும், கெஜட்டட் அலுவலர் கையெழுத்து வாங்கவும் அலைகிற ஒருநாள் காலையில் அம்மா சொன்னாள். 

“ஏண்டா மூர்த்தி, நீ வேலை இல்லாமே இருக்கியேன்னு பொண்ணு தரமாட்டாங்களாம் அவங்க..அப்புறம் அந்தப் பொண் ணுக்காக எதுக்கு இப்படி வேகாத வெயில்லே அலையறே…?” 

அம்மாவுக்கு ஆதங்கம். அதோடு தான் சிறுமைப்படுத்தப் பட்டோம் என்கிற எரிச்சல், அவள் நியாயம் கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல். பதிலுக்குப் பதில். 

கல்யாணம் செய்துகொள்வாள் என்பதாலா இந்த உழைப் பெல்லாம்? அதற்கும் மேம்பட்ட உறவு, சிநேகம், ஒன்று இருக்க முடியாதா என்ன? இந்த அம்மாவுக்கு இது தெரியவில்லையே. 


சைக்கிளைத் தூக்கி வாசல் நிழலில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் மூர்த்தி. வெயில் வெள்ளையாகக் காய்ந்து கொண்டி ருந்தது. 

“வா… வா… வாப்பா மூர்த்தி!” என்றாள் அத்தை. “இப்படி வேர்த்துப் போயி வந்திருக்கியே… உக்காரு… குளிர்ச்சியா ஏதாவது கொண்டாரேன்.” 

“இருக்கட்டும் அத்தை” என்றவாறு கத்தைக் காகிதங்களை அவளிடம் ஒப்படைத்தான். 

“அந்த ஆபீசில நாளைக்குக் காலைலே வரச் சொல்லி யிருக்காங்க… கடவுள் புண்ணியத்துலே வேலை கிடைச்சுடணும்… பொண்ணு வேலை செஞ்சா போற இடத்துல பெருமை…” 

அத்தை உள்ளே போனாள். 

“அத்தை… காப்பியை கொடேன்… உன் காப்பின்னா வெயிலில் கூடச் சாப்பிடலாம்.” 

அத்தைக்குச் சந்தோஷம். அவள் பல் வரிசை எப்போதும் வரிசையாக, வெண்மையாக, அழகாக இருக்கும். பாராட்டப் பெற்றால் யாருக்குத்தான் சந்தோஷம் வராது. 

தனிமையில் விடப்பட்ட மூர்த்திக்குப் பலப் பல யோசனைகள் தோன்றின. அம்மா, மதியாதார் முற்றம் மிதிக்காதே என்கிறாள். அத்தை, வேலைக்குப் போவது பெண்ணுக்குப் போற இடத்தில் பெருமை என்கிறாள். 

கூடத்தில் சுமதி எம்பிராய்டரி செய்து மாட்டிய துணி ஓவியங்கள் தொங்கின. முத்தம் கொடுத்துக் கொள்ளும் இரண்டு பறவைகள்; இரண்டு கால்களில் நின்று கொண்டு பழம் கொறிக்கும் அணில்; பறக்கக் கிளம்பும் பச்சைக் கிளி. 

சுமதியின் குழந்தைத் தனம் புலப்படுவதாகப் பட்டது. 

அத்தை காப்பியோடு வந்தாள். காபி என்கிற பானம், எப்படியோ அத்தைக்கு ஆகி வந்திருந்தது. கெட்டியாக, நுரை பூத்த, உள்நாக்கில் கசக்கிற, காப்பி மணம் பரவசப்படுத்துகிற அசலான காப்பி. 

மாமா பற்றி விசாரித்தான் மூர்த்தி. 

“கேட்டா சிரிப்பே… யாரோ பொண்டாட்டியைத் தள்ளி வச்சுட்டானாம். இவரு மத்தியஸ்தம் பேசப் போயிருக்கிறா… இந்த வெயிலிலே, இதெல்லாம் தேவையா நமக்கு; சொல்லு. இவ, யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கணும்னு சாப்பிட்டுட்டுக் கிளம்பினா… என்னை மட்டும்தான் இந்த வீட்டுல, ஆணி அடிச்சு வச்சிருக்கு…” 

அத்தையின் வருத்தம் வேறு. இந்த மாமா, அவ்வப்போது, அவள் முந்தானை முடிச்சை அவிழ்த்துக்கொண்டு வெளியே குதித்து ஓடிப் போய் விடுகிறாரே என்பதுதான். 

மூர்த்தி கிளம்பும்போது, அத்தை நடை வரைக்கும் உடன் வந்தாள். சும்மா இருந்திருக்கலாம் அவள், சொன்னாள். 

“சீக்கிரமா உனக்கு வேலை கிடைக்கணும். எங்க வழியிலேயே ஒரு பொண்ணு இருக்கு. ரொம்ப நல்ல இடம். பார்ப்போம், உனக்கு எங்க வாய்ச்சிருக்கோன்னு தெரியல்லையே…” – மூர்த்தி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏறி உட்கார்ந்து மிதித்தான். திடீரென்று மிதிக்க முடியாது திணறினான். உடம்பில் இருந்த பலம் போய்விட்டது போல் உணர்ந்தான். 

இண்டர்வியூவுக்குப் போய் வந்து, தன் அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி. இவளை மாதிரி இருபது பேருக்கு மேல் வந்திருந்தார்களாம். என் முறை ஏழாம் நம்பர். அப்பப்பா! மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டுது. ஒருத்தி… ம்… நீல கலர் சூரிதார்ல வந்திருந்தா. என்ன மாதிரி இருக்காங்கிறே… கோதுமைக் கலர்லே, டிரஸ்ஸுக்கு மேட்சா நீலக் கம்மல், நீலப் பொட்டெல்லாம் வச்சுக்கிட்டு, அம்மா… அவளுக்கு வேலை கிடைச்சுடும்னுதான் எல்லோரும் நினைச்சோம்… என்னவோ எனக்கும், இன்னோர் ஆளுக்கும் கிடைச்சுட்டுது!’ 

சுமதிக்கு வேலை கிடைத்ததில் மூர்த்திக்கும் மிகவும் மகிழ்ச்சி யாகவே இருந்தது. குளிக்க வேண்டும் என்று மாமா தோட்டத்துப் பக்கம் போனார். மத்தியானத்தில் குளித்துச் சாப்பிவது என்பது அவர் பழக்கம். 

“மூர்த்தி….எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணனுமே…” “சொல்லு சுமதி..” 

“ஜெராக்ஸ் எடுத்ததுல, என்னோட கான்டக்ட் சர்டிபிகேட் விட்டுப் போச்சு… அதை நாளைக்குள்ளார எடுத்துத் தரணும்…” 

“ஓ.எஸ்.குடு…’ 

“வா…” 

சுமதி மாடிக்குப் போனாள். மூர்த்தி பின் தொடர்ந்தான். மொட்டை மாடியை ஒட்டிய அறை. சுமதி படிக்கவும், இருக்கவும் எனப் பயன்பட்டது. 

“உக்காரு” என்றுவிட்டு, பீரோவைத் திறந்து ஒரு ஃபைலை எடுத்து, ஒரு பேப்பரை உருவினாள். அழுக்காகாமல் இருக்க, ஓர் உறையில் வைத்து அதைக் கொடுத்தாள். 

“சுமதி… உன்கிட்டே ஒரு விஷயம் கேக்கணுமே…” 

“சொல்லேன்.” 

“கல்யாணம் நிச்சயமாயிட்டுதுன்னு மாமா சொன்னாரே மாப்பிள்ளையைப் பார்த்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா?” 

“ஓ.எஸ்…ஆனால் நேரில் இன்னும் பார்க்கலை போட்டோவைத் தானே பார்த்தேன். நல்ல பர்சனாலிட்டி ஐ.ஏ.எஸ். படிச்சிருக்கார்…. இப்பவே கிளாஸ் ஒன் ஆபீசர். எதிர்காலத்துல ரொம்ப நல்லா வரலாமே…” 

சுமதியின் கண்களில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியதாகப் பட்டது மூர்த்திக்கு. இதன் அர்த்தம், ‘பாதுகாப்பு’ உணர்வு. 

‘அடக்கிக் கொள்’ என்கிற ஓர் உத்தரவு அவனுக்குள்ளிருந்து வந்ததைத் தெளிவாக அவன் கேட்டான். என்னமோ இரைந்து கொண்டே இருந்த கடல் அடங்கியதைப் போல இருந்தது. அமைதி அமைதி என்று மனம் ஜபித்தது. மனம் லேசாகிவிட்டது. புயலடித்து விட்டது போல் இருந்தது மனசு. 

“கங்கிராட்ஸ்” என்றான் மூர்த்தி. 

“ஓ… தேங்க் யூ” என்றாள். பூரணமாக அவள் சிரித்தாள். முழு மனதோடு சிரித்தாள். 

இறங்கி வரும்போது மூர்த்தியிடம் அத்தை சொன்னாள். “உனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பிரஸ் வச்சிருக்காருன்னு சொன்னியே… ஒரு காரியம் பண்ணுப்பா… நல்ல அழகான, டிசைனா நாலைஞ்சு கல்யாணப் பத்திரிகை சாம்பிளுக்கு வாங்கிக்கிட்டு வா… நாம் அப்புறமா ஒன்று தேர்ந்தெடுத்துக்குவோம்.” 

“சரி அத்தை” என்றுவிட்டு வாசலுக்கு வந்தான், மூர்த்தி. மாமா குளித்துவிட்டு வந்தவர் தலையைத் துவட்டியபடியே உடன் தெருவுக்கு வந்தார். அவரிடமிருந்து சந்தனச் சோப்பு வாசனை வீசியது. 

சைக்கிளின் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொண்டு மாமா சொன்னார். 

“மேல மேல உனக்குச் சூடு போடறா அத்தை இல்லியா, மூர்த்தி? உன்னை நினைக்கையிலே எனக்குக் கஷ்டமா இருக்குடா..” 

பல்லைக் கடித்துக்கொண்டு, சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதித்தான். மாமா அப்படிச் சொன்னதுதான், எங்கோ உடைத்து விட்டது மாதிரி ஆகிவிட்டது அவனுக்கு. 

பொங்கிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டான். எனினும் கண்களில் இருந்து ரணம் வழியத்தான் செய்தது. 

– 1991

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *