ஒழுங்கை




(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்றாவது தலைமுறையின் கடைக்குட்டிப் பெண் ணுக்கும் சீதனம் தேடிவைக்கும் யாழ்ப்பாண மண் ணிலே, தப்பிப் போய் முளைத்த காளான் என்று நல்ல தம்பியைச் சொல்வது, அவன் வரையிலே பெருமை தரத்தக்க விஷயந்தான். அடுத்த நேரக் கவலைக்குக்கூட இடமில்லாத வகையில் அவன் வாழ்க்கை உருண்டு கொண்டிருந்தது.
ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவன் பாத்தி யதை கொண்டாடத் தொடங்கி, பாரம்பரிய உரிமை காரணமாகத் தனக்குச் சொந்தமாகி, ஈட்டுக்காரன் கையிலே இழுபறிப்படுங் காணியிலே அவன் ‘இராசா” மாதிரி இருந்து வருகிறான்.
தெருவுக்கும் நல்லதம்பியின் காணிக்குமிடையே, சாதி, இன, வர்க்கப் பிரிவுகளின் ஏற்றத் தாழ்வை எடுத்தியம்புவதுபோல, மேட்டுப் பள்ளப் பிரச்சினை அன்றிருந்து இன்றுவரை அழியா மேனியாய் நிலவி வருகின்றது; மழைக்காலத்திலே ஊர்காவற்றுறையின் கடற்கோட்டைபோல வெள்ளக் கடலிலே அவனது ‘அரண்மனை’ மிதந்துகொண்டிருக்கும். கோடை நாள் கள் கொஞ்சம் மேல். இரட்டை இந்திரக் கண்கள் போல், குடிசைக் கூரையின் இரண்டாயிரம் துளைகளி லும் சூரிய ஒளி ஊடுருவிப் பாயும்போது, நல்லதம்பி யின் வம்ச விளக்குகள் புறங்கையால் அந்த ஒளிப் பொட்டுகளை மறைத்துக்கொண்டு ‘எக்ஸ்ரே’ பிடிக்கும் காட்சி மறக்க முடியாதது.
அந்தப் பதினாறடிக் குச்சினுள்ளே அந்தப்புரமும், அத்தாணி மண்டபமும், அட்டிற்சாலையும் அமைத்துக் கொண்டு வாழ்வதற்கு நல்லதம்பியின் பட்ட மகிஷி’ பழக்கப்பட்டிருந்தாள் என்றால், அதற்கு நல்லதம்பியின் அதட்டல், மிரட்டல், அடியுதைகள் மாத்திரம் காரணமல்ல. ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடாத அந்தப் பெட்டைப் பண்பையுந்தான் கூற வேண்டும். அவள் இலங்கைச் சனக் கணிப்புக்கு ஒரு சவால். பூர்வ ஜென்மத்திலே பன்றியாகவோ, பூனை யாகவோ பிறந்திருப்பாளோ? அந்த வாசனாமலம் இந்தப் பிறவியையும் தொடராதிருந்தால், ஒற்றையும், இரட்டையுமாக வருடந் தவறாது ‘போட்டு’க்கொண் டிருக்க முடிந்திராது. ‘மருத்துவ மனைகளிலே பாத பங்கயங்களைப் பதித்திடும் பாவையர் வரிசையிலே அவ ளது பெயர் இடம்பெறாமைக்குக் காரணம், மகப்பேற் றையும் அவள் அவசிய கருமங்களிலே ஒன்றைப்போலக் கருதி நடத்தி வந்ததாக இருக்கலாம். இப்பொழுதும்…
நல்லதம்பியின் குழந்தைச் செல்வங்களால் காற் றைத் தவிர மற்ற எதையும் சாப்பிட்டுச் சீரணிக்கவும் முடியும். காற்றுக்கு வடிவம் இல்லாமல் இருந்ததோ, அது தப்பியதோ ! இல்லாவிட்டால் மாதத்தில் பத்து நாள்கள் சுருட்டுச் சுற்றி ஐம்பதோ, அறுபதோ உழைத்து எழுபது, எண்பது ரூபாவிற்குத் ‘தாகசாந்தி’ செய்யும் தந்தைக்கு அவர்களால் ஈடு கொடுக் முடிந் திராது.
நல்லதம்பியின் மூத்தவனுக்கு வயது பதின்மூன்று. ரண்டாமவனுக்குப் பதினொன்று. இருவரின் தொடை களும் கன்றிப்போகிற நாட்களிலேதான் வீட்டிலே அடுப்பு புகையும். அவர்கள் அன்று சுருட்டுக்கு நூல் சுற்றி அடிகள் ஏச்சுக்களுக்கிடையில்- ஒன்றோ, அரையோ கொண்டுவந்து ‘கூப்பன் அரிசி’ வாங்கிவிட் டார்கள், என்பதுதான் அதன் அர்த்தம்.
நல்லதம்பிக்கு இதைப்பற்றியெல்லாம் அக்கறை யில்லை. அவன் ஒரு ஞானி. ‘தாமரை இலைத் தண்ணீர்’, புளியம்பழ ஓடு’ என்பவையெல்லாம் இந்த நிஷ்காமிய கர்மிக்காகவே ஏற்பட்ட உவமைகள். ‘சோறு கண்ட நாளே திருநாள்’ என்று சல்லாரி தட்டிச் சங் கூதிப் பாடாத குறை ! மனைவியின் பன்னாடைச் சேலைக் கும், நல்லதம்பியின் சேல’ வேட்டிக்கும், பெரும் பான்மை வாரிசுகளின் பிறந்தமேனிக் கோலத்திற்கு மிடையே பருவகாலங்கள் வந்து வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
நல்லதம்பி கன்னித்தமிழ்’ போல இருந்தபடியே இருந்து வருகின்றான்.
(2)
நல்லதம்பியின் வீட்டிற்குக் கிழக்குப் பக்கமாக ஒரு குச்சொழுங்கை. அதற்கு இரண்டு பக்கங்களிலும் பெரிய பனங்காணிகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குடும்பம் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றது.
இவர்களிலே வீதியோரக் காணிகளில் வசித்துவரும் நல்லதம்பியும், சின்னப்புவும் அதிர்ஷ்டம் செய்தவர் கள். மற்றவர்களுக்குப் போக்குவரத்து எப்பொழுதும் கஷ்டந்தான். ஆறே அடி அகலமான ஒழுங்கையான படியால் காரோ, மாட்டு வண்டியோ அதற்குள் வந்த தென்ற சரித்திரமே இல்லை!
ஆனால், கலியாண வீடுகளோ, மரண வீடுகளோ, நோய் நொடிகளோ வராமல் இருக்கின்றனவா?… அந்த காலங்களிலேதான் தொல்லை.
நல்லதம்பியின் பின்வளவுக்காரனான செல்லையா, தன் மனைவி பிரசவ வேதனை வந்து துடித்துக்கொண் டிருந்தபொழுது, அவள் கதறக் கதறக் குண்டுக் கட் டாய்த் தூக்கிவந்துதான் தெருவிலே காரில் ஏற்ற வேண்டியிருந்தது. சின்னப்புவின் இரண்டாவது வளவு உரித்தாளியான கந்தசாமி இறந்தபொழுதும் இப்படித் தான். கந்தசாமி தூலதேகி; யானைப்பாரம்! அந்தப் பாரிய சடலத்தைப் பெட்டிக்குள் வைத்துத் தெருவரை தூக்கி வந்தது ஒரு பெரிய சாதனை. பிரேதப் பெட்டி யைச் சுமந்தவர்களில் ஒருவன் இராசையா. அவனுக்கு அன்று பிடித்த ‘நாரிப்’ பிடிப்புத்தான் ; இன்றும் அது அவனை விடாப்பிடியாக அலைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படித் தலைமுறை தலைமுறையாகப் பல கஷ்டங் கள் என்றாலும் ஒழுங்கையைப் பெருப்பிக்க வேண்டும் என்று ஒரு ஈ, காக்கை கூட எண்ணிப் பார்த்ததில்லை. எப்பொழுதோ ஒரு நாளுக்கு ஏற்படுகிற கஷ்டம் பற்றிக் காலமெல்லாம் யோசிக்கவும், தீர்க்கதிருஷ்டியோடு செயற்படவும், அவர்களுக்கு ஓர் அரசியல்வாதி ‘யின் மூளை தேவைப்பட்டது போலும்!
(3)
இந்தச் சூழ்நிலையிலேதான் செல்லையாவின் காணி விலைக்குப் போயிற்று. ஏதோ ‘பிஸினஸ்’ செய்யப் போவதாகப் பாவனை பண்ணிக்கொண்டு கிடைத்த காசுக்குக் காணியைத் தள்ளிவிட்டு, அவனுங் குடும்பமும் ரெயிலே றிவிட்டார்கள்.
அந்தக் காணியின் புதிய உரிமையாளரான கி. க. மு. நாகலிங்கம்பிள்ளை பெரிய பணக்காரர். கெக்கிராவையி லும், கொழும்பிலும் அவருக்குச் சுருட்டுக் கடைகள் உண்டு. எட்டு வயதிலே ஊர்மண்ணைத் தட்டிவிட்டு, அநாதையாக எங்கெல்லாமோ சுற்றித் திரிந்த ‘சந்நாசி’ நாகலிங்கம், ஊருக்கு நாகலிங்கம் பிள்ளை யாகத் திரும்பிப் பெரிய இடத்திலே விவாகம் செய்து கொண்டு, இன்று இலட்சம் இலட்சமாகப் புரட்டுகின் றார்.
அவருக்குக் காணிகள் வாங்கி வீடுகள் கட்டுவது ஒரு கலையாகி, யோகமாகி இன்று வெறியாகவே மாறியுள் ளது. காணிகளை மலிவாகத் தட்டுவதிலே மனிதன் புலி தான்! பணத்தையும் நிலத்தையும் நிறுத்துப் பார்த்து, எதிர்காலத்தில் நிலத்தின் நிறையே கூடும் என்பதை உணர்ந்தவராய், எங்கெல்லாம் காணி கிடைக்கும் என்று மோப்பம் பிடித்துத் திரிந்தவருக்குச் செல்லையா கிடைத்தான்.
வெளியிடங்களிலே வியாபாரஞ்செய்து ஆயிரம் ஆயிரமாய்க் குவிக்கலாமென்று சங்கக்கடை சேல்ஸ்மன்’ செல்லையாவை இந்த அறுபத்து மூன்றாம் ஆண்டிலுங்கூட ஆசைகாட்டி, மூட்டை முடிச்சுகளோடு அனுப்பிவைத்த பிள்ளையின் திறமையே அலாதியானது தான்!
(4)
பிள்ளை காணியை வாங்கினார். அடுத்த கட்டம் வளவின் பெறுமதியைக் கூட்டுவது. ” அதற்கு வழி…? ஒழுங்கையைப் பெருப்பித்தால்…? அதற்குப் பிறகு ஓர் அமெரிக்கன் பாஷன் வீடு கட்டி …. அதையும் மிக விரைவாகச் செய்யவேண்டும். காலம் போகிற போக் கில் வாடகைக்கு விடுவதிலேயே ஆயிரக் கணக்கில் ‘அப்பி’ விடலாம். யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வரும் சிங்கள உத்தியோகத்தர்கள் இருக்கவே இருக்கி றார்கள்… அவர்களுக்கு ஒன்றுக்குப் பத்தாய் வாடகை சொல்லிக் கண்ணைக் கட்டி அடிக்கலாம்… நேற்றைக்குக் கூடக் கல்விக் கந்தோர்க் ‘கிளாக்’ பெரேரா- கெக்கி – ராவையில் பிள்ளையின் வாடிக்கைக்காரன் வீடு விசாரித்தான். அவரின் கெட்டகாலம் ! ஒரு கிழமைக்கு முன்புதான் அவருக்குச் சொந்தமான, ‘வைமன் ரோட்டு’ வீடு குறைந்த வாடகைக்குத் தூரத்து உறவினன் ஒரு வனுக்குக் கொடுக்கப்பட்டது.
‘அது இருந்தால்…?”
‘பரவாய் இல்லை… இந்த வளவும் ‘டவுணு’க்குக் கிட்டத்தான். வீடும் ஒழுங்கையும் சரியென்றால் இரண்டு மாதத்திலேயே ‘பறத்தி’விடலாம்; பார்ப்போம்.’
நாகலிங்கம் பிள்ளை திட்டம் தீட்டுவதிலே ‘நெப் போலியன்’ தான்! பிறகென்ன? பக்கத்து வளவுக்காரர் களுக்குப் பசையடித்து ஒழுங்கையைப் பெருப்பிப்பதன் அவசிய அவசரம் பற்றி வலியுறுத்தத் தொடங்கிவிட் டார். ஏதோ அவர்களுக்காகத்தான் சொல்வதுபோல வும் தமக்கொன்றும் அவசியமில்லை என்ற மாதிரியும் அவர் கதைத்தார்.
ஆரம்பத்திலே அவருடைய தூது தோல்வியைத் தான் காண நேரிட்டது. யாழ்ப்பாணத்து மண் அல்லவா? ஒருவரிடமும் அவரின் பாச்சா பலிக்கவில்லை. ” போங் காணும்” என்று உதறி எறிந்துவிட்டார்கள். ஒவ் வொரு காணிக்காரரும் தமது வேலிகளிலிருந்து மூன்றடி தூரம் நிலம் விட்டால் எல்லாருக்கும் வசதியான ஒழுங்கை அமையுமே!” என்று பிள்ளை கெஞ்சாத குறை யாகக் கேட்டபோது, “மூன்றடி என்ன, மூன்று அங்குலங் கூட விடமுடியாது” என்று அவர்கள் முரண்டு பண்ணி னார்கள். பூர்வகால அசுரர்களின் உயிர்கள் கிளி, மைனா போன்ற பறவைகளின் உடல்களுக்குள்ளே பாதுகாக்கப் பட்டனவாம். யாழ்ப்பாண வாசிகளின் உயிர்களோ அவர்களின் வளவு நிலங்களுக்குள்ளேதான் ஒளித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்! நிலத்தை விடும்படி கேட்டபொழுது அவர்கள் துடித்த துடிப்பு !
ஆனால், பிள்ளை சோர்ந்து போய்விடவில்லை. கிராமச் சங்கத் தலைவரையும், அங்கத்தவரையும், அவரையும் இவரையும் கூட்டிக்கொண்டு ‘ஞானோபதேசம்’ செய்ய லானார். சிறிது சிறிதாக நாகலிங்கப் பரமாத்மாவின் கீதோபதேச வலையிலே, அந்த ஒழுங்கைப் பார்த்திபர் கள் ஒவ்வொருவராய் விழுந்து கொண்டிருந்த வேளையிலே…
நல்லதம்பி மாத்திரம் அழுங்குப்பிடி பிடித்துக் கொண்டேயிருந்தான்…
எதையுமே அக்கறைப்படுத்தாத அவன், இந்த விஷயத்திலே மாத்திரம் இவ்வளவு பிடிவாதம் பிடிப்பது ஏன்?
யாருக்கும் விளங்கவே இல்லை.
ஆச்சரியமாக இருந்தது.
(5)
விரலிடுக்குகளுக்கிடையே பாலைப்பழங்களின் வடிவில் குமிழி கட்டியிருந்த கொப்பளங்களை, நகங்களாலே குத்தி, பாய்ந்தோடுகிற சீழின் அழகிலே தன்னை மறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் நல்லதம்பியின் கடைக் குட்டி இராசாத்தி. கொட்டிலுக்கு முன்புறத்திலே காலைப்பரப்பி நீட்டியபடி தொடையிடுக்கிலே, நல்லதம்பி முதனாள் வாங்கிவந்த ஊசிப்போன சுண்டலைக் கிழிந்த குஞ்சு ‘ப் பெட்டியிலிருந்து எடுத்தெடுத்துக் கொறித் துக்கொண்டு எங்கோ ஞானக்கொலுவில், சாயங்கால மயக்கத்தோடு மயக்கமாய் ஒன்றிக் கிடந்தது, ஆறாவது குருத்து. முதலாம், இரண்டாம் இலக்கங்கள் இன்னும் சுருட்டால் திரும்பவில்லை. கால்முளைத்த மூன்றும், நாலும், ஐந்தும் பின்வளவுக் கொய்யா மரத்திலே ஏறிக் குரங்காட்டம் ஆடிக்கொண்டிருந்தன:
கொட்டிலுக்குள்ளே அப்புவும் ஆச்சியும் பிடிக்கும் சண்டையைப்பற்றி அங்கிருந்த ‘ஜூனியர்’ ஒன்றுக்குக் கூட அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதும், இரவு வருவதும் போவதும், பட்டினி கிடப்பதும் சாப்பிடுவதும் எல்லாம், அப்பு ஆச்சியின் ஊடலும் கூடலும் போன்றவைதாம் என்று நினைத்துப் பழக்கப்பட்டவை, அவை. குதித்துக் குதித்து ஓடிவரும் பசுக்கன்று பூமியை இடித்துக் கொம்புக்கு மண் எடுப்பதுபோல, ஏதோ ஒரு துன்ப இன்பானுபவ நிலையிலே அங்குமிங்குமாகக் குறாவிக்கொண்டு நின்றுங், கிடந்தும், ஓடியும், பாடியும் விளையாடின : விளையாடிக் கொண்டே இருந்தன.
இஞ்சை பாருங்கோ, அயலோடை கொழுவிக் கொண்டு அச்சமில்லாமல் இருக்கலாமே ? நாகலிங்க மையாவும், கிராமச்சங்க நொம்பரும் திரியாமல் திரி யுதுகள். எல்லாருக்கும் போலை தானை எங்களுக்கும் ? ஒழுங்கை வந்தால் எங்கடை காணியையும் மூண்டு நாலாய்ப் பிரிச்சுப் பிள்ளையளுக்கு ஒரு காலத்திலை குடுக்கலாம்… உம்… எண்டைக்கோ ஒருநாளைக்கு அது களும் வாழத்தானே வேணும்?”
நல்லதம்பி சிரிக்கிறான்… “போடி மடைச்சி ! அவை திரிஞ்சால் என்னவாம்? என்ரை மூதாதையள் ஆண் டனுபவிச்ச நிலம் இது: இதிலை ஒரு ஊசி குத்துற டத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டன். ஓ ! நான் ஆர் தெரியுமே? கறுப்பற்றை காசியர் பரம்பரை… உவங்கள் நேற்றைக்கு வந்தவங்கள் உவங்கடை சொல் லுக்கு நான்… நான்…. இந்த நல்லதம்பி கட்டுப்படு றதோ ? ஒருக்காலும் நடவாது. நல்லதம்பி நெஞ்சிலே தட்டித் தட்டிப் பேசும்போது, வெறியேறிச் சிவந்த கொள்ளிக் கண்களிலே ஆணவம் நெறிகட்டி நிற்கிறது.
‘பட்டமகிஷி ‘ சாந்தமாகப் பதிலளிக்கிறாள். ”ஏனணை? உங்கடை காணியை ஈட்டுக்காரன் எடுத்துக் கொண்டால் என்ன செய்வியளாம் ?”
நல்லதம்பிக்குப் பொறுக்கக்கூடவில்லை. எல்லை கடந்த ஆத்திரத்திலே அவனது உதடுகள் வலிகார னுடையவை போலக் கோணிக்கோணி இழுக்கின்றன தட்டியிலே செருகியிருந்த கொடுவாக்கத்தியை உருவி யெடுத்துப் பத்திரங்காட்டியபடி பல்லை நெருமுகிறான். ”என்ரை காணிக்கை எந்தக் கொம்பனடி கால்வைக் கப் போறவன் ? கரிக்குடல் எடுத்துக் கையிலை குடுப்பன் … ஓ!”
சிறிது மெளனம்… பட்டமகிஷி செருமிக் கொண்டு, “ஏதோ ஐம்பதை நூறைத் தருகினமாம். விட்டுக் கொடுத்தால்…” என்று அவள் தொடுத்த வார்த்தை கள் வாயிலிருந்து விடுபடவே இல்லை… அங்கு இரத்தம் குபுகுபு என்று பாய்கிறது. இரத்தம்… நல்லதம்பியின் கைவண்ணம் அது…
அத்தோடு அவன் நின்றுவிடவில்லை. அவனது கால் வண்ணம் எக்கச்சக்கமாகப் படாத இடத்திலே பட்டு அவள் சரிகிறாள்…
வழக்கம்போல ஒப்பாரி பிள்ளைகள் ஓடிவந்து கலுமுலுவென்று கத்துகின்றன… அதையும் விஞ்சியபடி, ந ல்லதம்பி வீரமுழக்கம் செய்துகொண்டு வெளியே கிளம்புகிறான்…
“உந்தப் பயல் நாகலிங்கத்தின்ரை ஐம்பதையும் நூறையுமே நான் நம்பியிருக்கிறன்? என்ரை ஆச்சி வழிச்சுக் குடுக்கத் திண்ட எச்சிக்கல்லை, நாலு சேம் உளைச்சு இரண்டு வீட்டைக் கட்டினால் எனக்குப் பயமோ ? இல்லைக் கேக்கிறன்… என்ரை உசிர் போனாலும் அவ னிட்டைக் கை நீட்டுவனோ ? உது நடவாது.”
(6)
நல்லதம்பி வீடு திரும்பியபோது அழுகையும் புலம் பலுமாகப் பிள்ளைகள் அவனை வரவேற்றார்கள். ஒரு நாளுமில்லாத திருநாள்… ‘ஏன்? எதற்கு?…’ என்ற கேள்விகளுக்கே இடமில்லாது உள்ளே இருந்து வெளி வந்த அனுக்கம், ‘பட்டமகிஷி’யின் நிலைலய எடுத்துரைத்தது.
கச இருட்டுக்குள், நெருப்புக் குச்சியின் மின்மினி ஒளியிலே வழி தடவிக்கொண்டு அவளுக்கருகே அவன் போனான். அவள் கிடந்த கிடை… இரத்தச் சகதியிலே, வேதனையில் நெளிந்தபடி… ஐயோ !
அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது… அவனுடைய ஒன்பதாவது வாரிசு உலகத்தைப் பார்க்காமலே, திரும் பிச் சென்று… அதனால்…
‘பட்டமகிஷி’ உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு எழுந்திருக்கப் பார்த்தாள். முடியவில்லை…
நல்லதம்பி போத்தல் விளக்கை ஏற்றிவிட்டு அவள் பக்கத்திலே வந்து உட்கார்ந்தான்… பிள்ளைகள் புலம் பிக்கொண்டே இருந்தார்கள்…
‘ஆச்சி ! ஆச்சி! ஆச்சி ! எங்கடை ஆச்சி.’
நல்லதம்பியின் நெஞ்சின் அடித்தளத்திலே தூங்கிக் கிடந்த பாச உணர்விலே ‘அந்தச் சொற்கள்’ முட்டி எதிரொலித்தன.
பதினைந்தாண்டுகளின் ஊமைத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பாசத்தளை அவனை முறுக்கிப் பிழிந்தது. அநாதைத்தனத்தை முகத்திலே எழுதி ஒட்டிக்கொண்டு நின்ற பிள்ளைகளின் விம்மலோடு விம்மலாய்க் கண்ணீரோடு கண்ணீராய் கரைந்துகொண்டிருந்தான் அவன்.
ஒரு நாள்… இரண்டு நாள்… மூன்று நாள்… நான் காம்…
அந்த நாள் நல்லதம்பியின் பட்டமகிஷிக்கு விடியவே யில்லை. அவளின் பாரம் அனைத்தும் நல்லதம்பியின் தலை யிலேதான் விடிந்தது…
ஐந்தாம் நாள்…
படலைப்பக்கம் போதாதென்று ஒழுங்கை மூலைப் பக்கத்தால் வேலியை வெட்டி, அந்த வழியாலே ‘பட்ட மகிஷி’ தனது நெடும்பயணத்தைத் தொடங்கினாள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு அவளின் அந்தியேட்டிக் கிரியைகள், ஒழுங்கையை விஸ்தரித்த நாகலிங்கம்பிள்ளை தந்த நூறு ரூபாக் காசிலே, சுற்றமித்திரர் சூழச் சிறப்பாக நடந்தேறின.
– தினகரன், 1965-11-14.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.