ஒரு முகம்
(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த முகம் –
அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்?
சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக.
குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு பூக்கும் பழச்சுளை உதடுகள். அழகான மோவாய். நீண்ட வெள்ளிய அணிகள் ஊஞ்சலிடும் காதுகள். சிரிக்கும் முகம் –
சந்திரன் உள்ளத்தில் நிலை பெற்றிருந்தது. எங்காவது அந்த முகம் அவனுக்கு எதிர்ப்பட்டிருக்க வேண்டும். எங்கே? எப்போது? அதுதான் அவனுக்குத் தெளிவாக நினைவில்லை.
நெருக்கடி மிகுந்த பஸ் நிலையத்தில் இருக்கலாம். ரயிலில் பார்த்திருக்கலாம். முக்கிய ரஸ்தாவில் இருந்த சினிமா தியேட்டர் எதுக்காவது அவசரமாகச் சென்று கொண்டிருந்த அலங்காரி களில் எவளாவது அந்த முகத்தின் சொந்தக்காரியாக இருக்கலாம்….
அவளை அவன் போகிற போக்கில் கவனித்திருக்கலாம். காலம் மனப் பதிவை நிழல் உருவாக மாற்றியிருக்கும். மறதிப் புழுதி அந்த நிழல் மீது படிந்து விட்டது, என்றாலும் அந்த முகம் மட்டும் சிறிது அழுத்தமாகவே பதிந்திருந்தது என்று தோன்றியது.
அதனால் தான் அந்த எழில் முகம் அவனை நினைவாகவும் கனவாகவும் தொல்லைப் படுத்தியது.
கனவுகளில் மிக அழுத்தமாக, மிகத் தெளிவாக…..
– சந்திரன் பஸ் நிலையத்தினுள் அடி எடுத்து வைக்கிறான். புறப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிற ஒரு பஸ்ஸின் ஒரு சன்னல் கட்டத்தில் ஒரு முகம். மிக அறிமுகமான முகம் போல. அவனைப் பார்த்ததும் விழிகள் சுடரிட, இமைகள் படபடக்க, உதடுகள் சிறுநகையாக நெளிய, பளிரெனத் தென்பட்டது. நெருங்கி வந்த பஸ்சோடு முகமும் கிட்டக்கிட்ட வர, அம்முகத்தின் சந்தோஷ வெளிச்சம் அதிகம் பிரகாசமுற்றது. திரும்பாமல் அவனையே பார்த்திருக்கும் அந்த முகம் அவன் முகத்திலும் மகிழ்வின் ஒளி படரவைத்தது. பேச விரும்புவது போல – பேசி விடுவது போல – சமீபத்தில் காட்சி தந்த அழகு முகத்தை எடுத்துச் சென்றது பஸ். அவன் பார்வையிலிருந்து மறைந்தது. மறைந்து சென்றது.
அது யாருடைய முகம்? அதை அவன் இதற்கு முன் எங்கே பார்த்திருந்தான்?
சந்திரனின் உள்ளத்தில் ஓயாத தவிப்பாக அலைபாய்ந்தது.
– நாகரிக அலைகள் பலரக வேகவாகனங்களாக அப்படியும் இப்படியும் இயங்குகிற பிரதான நெடுஞ்சாலையில், குறுக்கே கிடந்த தண்டவாளங்களுக்கு வேலியாக நின்ற லெவல் கிராசிங் கேட்டுகள் அடைபட்டிருந்த நேரம். ஒரு புறத்தின் கேட் அருகே சந்திரன் நின்றான். கனவில் தான். கடந்து செல்லும் ரயில் வண்டித் தொடரின் ஒரு சன்னலில் அந்த முகம். அவனை காந்தப் பார்வை பார்த்தபடி செல்கிறது. எங்கோ எப்போதோ கண்ட தெரிந்த முகமாகத் தோன்றுகிறதே! யாருடைய முகம் அது?
இந்தக் கேள்வி குறுகுறுக்க அவன் விழிப்புற்றான். அந்த முகம் நேரில் பார்த்தது போல் அப்பவும் பளிச்சென்று கண்முன் நின்றது. அதை அவனால் மறக்க முடியவில்லை.
அந்த முகம் அவனுக்குப் பித்தேற்றியது. எங்கோ அவளைப் பார்த்திருப்பதாக அவன் மனம் சொன்னது – எங்கே என்று தான் புரியவில்லை. யார் அவள் என்பதும் விளங்க வில்லை.
ஏன் அந்த முகம் திரும்பத் திரும்பப் பசுமையாகத் தோன்றி அவனை அலைக்கழிக்க வேண்டும்? தூக்கத்தில் கனவா விழிப்பு நிலையில் நினைவுச் சித்திரமாக.
அவன் அவனது எண்ணக் கட்டுப்பாட்டையும் மீறி அந்த முகத்தை வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தான். இது பிறர் முறைப்பிலிருந்து, முணுமுணுப்பிலிருந்து, பரிகாசப் பார்வையிலிருந்து, கேலிச் சிரிப்பிலிருந்து, கிண்டல் சொல் உதிர்ப்பி லிருந்து, மெது மெதுவாகத்தான் அவனுக்குப் புலனாயிற்று.
தெருக்களில் நடக்கிற போது எதிர்ப்படுகிற பெண்களை, பஸ் நிறுத்தங்களில் காத்து நிற்கும் மகளிரை, ஒட்டலுக்குள் வருகிற – அங்கிருந்து வெளியேறுகிற – சுந்தரிகளை, சினிமா தியேட்டர்களின் கும்பல் மத்தியில் பளிச்சிடுகிற சிரித்த முகங் களை அவன் கூர்மையாக கவனிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். மற்றவர்கள் பார்வையில் உறுத்துகிற விதத்தில்.
அவனுடைய நண்பர்கள் கிண்டல் பண்ணலானார்கள். “சந்திரனுக்கு கலர் தாகம் அதிகமாயிட்டுது!” “வரவர டைவா (வாடை) ஜாஸ்தியாகுதே! “பொம்பிளை காந்தம் தீவிரமா இழுக்குது போலிருக்கே!”
அதுமாதிரி சமயங்களில் சந்திரன் அசட்டுச்சிரிப்பு சிரித்தான். இனி இப்படி பலருக்கும் தெரியும்படி கேணத்தனமாக முழிச்சுக்கிட்டுத் திரியக் கூடாது என்று தனக்குள் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டான.
அது வெகு விரைவிலேயே மங்கிப்போகும். பைத்தியமோ என்று பிறர் நினைக்கக் கூடிய விதத்தில் அவன் சிலசமயம் நடந்து கொள்வதும் உண்டு.
நெடுஞ்சாலை. முன்னே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பின்புறத் தோற்றம் அவன் பார் வையை சுண்டி இழுத்தது. இவளாக இருந்தாலும் இருக்கலாம் என்று அவன் மனம் குறுகுறுத்தது.
அவள் முகத்தை பார்க்கவேண்டும் – பார்த்தே ஆக வேண்டும் – இவள் முகமே அந்த முகமாக இருக்கலாம்….
அவன் வேகமாக நடந்தான். வழியில் குறுக்கிட்டவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு. சிலரது முறைப்பையும் ஏச்சுக் களையும் பெரிது படுத்தாமல் விரைந்தான். வேகமாக அவள் அருகில் போய் திரும்பி நோக்கி; இன்னும் முன்னே சென்று திரும்பிப் பார்த்து, அவள் அவனைக் கடந்து செல்லும் வரை உற்றுப்பார்த்து….
அவள் வாய் நிறைய எச்சிலைத் திரட்டி, அவன் மூஞ்சியில் துப்பாத குறையாகக் காறி முன்னே துப்பியபடி, “தூ! மேறையும் மூஞ்சியும் கம்மனாட்டிக் கழுதை!” என்று முணமுணத்தபடி நடந்தாள்.
அவன் காதில் அது தெளிவாக விழுந்தது. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. இவள் முகம் அந்த முகமாக இல்லாது போயிற்றே என்று தான் வருந்தினான். மிகுந்த ஏமாற்றம் அவனுக்கு.
ஒரு நாள் சந்திரன் யாரையோ எதிர்பார்த்து ரயில் நிலையம் போயிருந்தான். எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அவன் பெட்டி பெட்டியாக உற்று நோக்கி நகர்கையில், ஒரு பெட்டியினுள் ஒரு முகம் பளிட்டது. முழு நிலவை மறைக்கும் மேகம் போல் இதர பயணிகள் அதை மறைத்தது அவனுக்கு எரிச்சல் மூட்டியது. அந்த இடத்திலேயே அவன் நின்று விட்டான். ஒவ்வொருவராக, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுகளுடன் இடித்து நெருக்கி இறங்கும் போது, ஊடே தென்படப் போகிற அந்த முகத்தை எதிர்பார்த்து ஆர்வத்தோடு கண்களை வாசலிலேயே நிறுத்தி நின்றான். உறுத்து நோக்கியவாறு நின்ற அவன் முகத்தை ஒவ்வொரு பயணியும் ஏறிட்டுப் பார்த்து, யாரையோ எதிர்பார்த்து நிற்கும் எவனோ என ஒதுக்கிவிட்டு, பரபரப்பாக நடந்தபோது, அவர்களில் ஒருத்தியாய் அவளும் இறங்கினாள். அலட்சியப் பார்வை ஒன்றை அவன் மீது போட்டு விட்டு, கும்பலோடு கலந்தாள். சே, இவள் இல்லை என்ற ஏமாற்றம் அவனுக்கு சோர்வு தந்தது.
அந்த ஏமாற்ற உணர்வோடு தயங்கி நின்ற போது, “என்னடே இங்கேயே நின்னிட்டே? நான் பின்னாலே ஒரு கேரியேஜிலேல்லா இருந்தேன்” என்று உற்சாகமாகக் கூறியபடி அவன் தோள்மீது கைவைத்தான் நண்பன்.
சந்திரன் திகைத்துத் திடுக்கிட்டான். தான் இவனை சந்திக்கத் தான் ரயிலடிக்கு வந்திருந்தோம் என்ற விஷயமே அவனுக்கு மறந்து போயிருந்தது. இப்போது சமாளித்துக் கொண்டு ஏதோ ஞஞ்ஞமிஞ்ஞ வார்த்தைகளைக் கொட்டி ஒப்பேற்றி நண்பனோடு நடந்தான்.
இப்படி எத்தனையோ ஏமாற்றங்கள். எனினும் அவன் அந்த முகத்தைப் பிடிக்க பார்வைத் தூண்டிலை கண்ட இடமெல்லாம் வீசி எறிவதை நிறுத்தவில்லை.
எதிர்பாராத ஒரு நேரத்தில், எதிர்பார்க்க முடியாத ஓர் இடத்தில், அந்தமுகம் சந்திரனுக்கு நிஜவடிவமாய் காட்சியாயிற்று.
கவியரங்கம் ஒன்றில் பங்கு பெறப் போயிருந்த இடத்தில் சந்திரன் அந்த முகத்தையும் அதன் சொந்தக்காரியையும் காணநேரிட்டது. அந்த முகத்தை, அந்த சுந்தரியை, வியப்புடன் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த உணர்ச்சிப் பெருக்கில் அவன் கவியரங்கத்தில் நன்கு சோபிக்காமலே போனான். இவள் யார்; இவளும் கவிபாட வந்தவளோ என்ற கவலையே அவன் மனசில் தறியடித்துக்கொண்டிருந்தது. வேறொரு கவிஞனோடு அவள் இழைந்து குழைந்ததையும், சிரித்துக் களித்ததையும் காணக்காண சந்திரனுக்கு வேறு வகை ஏமாற்றமும் எரிச்சலும் உண்டாயின.
அந்த ஜோடி சீக்கிரமே வெளியே போய் விட்டது. அவனால் அவர்களை பின்தொடர இயலவில்லை. இதுவும் அவனுக்கு வருத்தம் அளித்தது.
அதன் பிறகு சந்திரன் உள்ளம் வேறுவிதப் பிரச்னைகளைப் பின்னிக்கொண்டு அவற்றிலேயே சிக்கி அவதிப்பட்டது; அவள் யார்? எங்கே இருக்கிறாள்? அந்தக் கவிக்கும் அவளுக்கும் என்ன உறவு? கல்யாணம் செய்து கொண்டார்களா? காதலர்களா? அவர்கள் எங்கு வசிக்கிறார்கள்?
விதி, அல்லது காலம், அல்லது வாழ்க்கையின் விசித்திர சக்தி, – அல்லது என்ன இழவோ ஒன்று – தன்னோடு விளையாடுவ தாக சந்திரன் மனம் குமையலானான் இப்போது.
முன்பு அந்த முகத்தை அவன் தேடித்திரிந்த போதெல்லாம் அது தென்படவேயில்லை. தற்செயலாக அந்த சுந்தர முகத்துக்காரி அவன் பார்வையில் நன்றிாகவே பட்டு அவனது வயிற்றெரிச்சலைக் கிளறி விட்டதற்குப் பிறகு அடிக்கடி அவள் தரிசனம் கிடைத்துக்கொண்டேயிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது உள்ளத்தின் எரிச்சலும் கோபமும் அதிகரிக்கும் படியாகவே அமைந்தன அவன் பார்வையில் பட்ட தோற்றங்கள்….
ஒரு நாடகத்தின் போது அவள் காட்சி தந்தாள். நடிப்பவளாக அல்ல. நாடகம் காணவந்த ஒரு உல்லாசியின் நெருக்கத் தோழியாக.
வேகமாக மோட்டார் சைக்கிளில் சவாரி போன ஒரு டம்பப் பேர்வழியின் பின்னால், அவனை கட்டிப்பிடித்தபடி அமர்ந்து, அவன் தோள் மீது தலை சாய்த்து, சிரிக்கும் முகத்தோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசியவளாக.
நாகரிக ஒட்டல் ஒன்றில், செல்வச் செழிப்போடு விளங்கிய ஒரு தடியனோடு, ஒரு ஜாங்கிரியைப் பிட்டு ஒரு துண்டை அவன் வாயில் அவள் கொடுப்பதும், ஒரு துண்டை அவன் அவளுக்கு ஊட்டுவதும், அவன் விரலை அவள் உதடுகளால் கவ்வி பொய்யாய் கடிப்பதும், அவன் விரலை எடுத்து வலியால் தவிப்பவன் போல் நடிப்பதும், அவள் சிரித்துக் குலுங்குவது மான நிலையில்,
இப்படிப் பல.
அவளை அவன் இனம் புரிந்து கொண்டான். காலமும் பணமும் பசியும் மனமும் துணிவும் கொண்ட வசதிக்காரர்களுக்கு துணைசேரத் தயங்காத சாகசக்காரி, அவர்களை சந்தோஷப்படுத்தி தனது தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்து கொள்ளத் துணிந்த நவநாகரிகத் தொழிற்காரி இவள்.
சீ என்றாகி விட்டது சந்திரனுக்கு.
வெட்கம் கெட்ட – தன்மானம் இல்லாத – இந்த சுந்தரிக்கு இவ் இனிய, அழகிய, கவிதை வடிவ – களங்கமற்ற மலர் போன்ற – முகம் ஏன் வந்தது? சுலபத்தில் பிறரை மயக்கவா, வசீகரிக்கவா, ஏய்க்கவா? தன் எண்ணங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியான சாதனம் தானா அந்த முகம்?
இப்பவும், விடைகாண முடியாத பல கேள்விகளை வளர்த்துக் குழம்பினான் சந்திரன். அவன் மனசில் அந்த முகம் – ஆதியில் என்றோ எங்கோ வசிய ஒளியோடு மிளிர்ந்து, அவன் உள்ளத்தில் நிலையாகப் பதிந்து விட்ட அந்த முகம் – எப்பவும் அவனை அலைக்கழிக்கும் ஒரு பிம்பமாகத்தான் மிதந்து கொண்டிருந்தது.
– பயணம் 1984
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.