ஒரு மழை நாளில்…






ஜெகன் வீட்டில் இன்று வழக்கமான நாள் போல இல்லை. வெளியே புயல் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. கரண்ட் இல்லாமல் எல்லா இடமும் இருளில் மூழ்கி இருக்க ஜெகன் வீட்டில் மூன்றாவது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான்.
குழந்தைகள் இருவரும், சண்டை போடாமல் ஏதோ ஸ்கூல் கதையை பேசிக் கொண்டிருந்தனர்.
காபி குடித்துக் கொண்டிருந்த மனைவி சுதாவிடம் அவளது காபியை ஜெகன் பாராட்டிப் பேச ஆச்சரியத்துடன் புன்னகைத்தாள்.
இன்னிக்கு உனக்கு ரெஸ்ட் சுதா என்று பொழுது கழியாமல் படுத்திருந்த அப்பாவை எழுப்பி சுறுசுறுப்பாக சமையல் வேலையில் இறங்கினான் ஜெகன்.
மழை வலுத்து குளிரடித்தது. சுதா குழந்தைகளுடன் வார்த்தை விளையாட்டு தொடங்க அவர்கள் உற்சாகமானார்கள். ஆரவாரம் வீடெங்கும் எதிரொலித்தது.
பிறகு அரைகுறையாக சமைத்த சாப்பாட்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுற்றி உட்கார்ந்து கிண்டல் செய்தபடி எல்லோரும் சாப்பிட்டனர்.
அப்பா ஆரம்பிக்க ஆளுக்கொரு கதையை பேச சிரித்தபடி பொழுது போனது.
மழை சற்று மட்டுப்பட, திடிரென்று கரண்ட் வந்து வீட்டில் வெளிச்சம் பரவியது.
மெழுகுவர்த்தி அணைந்தது.
அடுத்த சில நொடிகளில் குழந்தைகள் தங்கள் வீடியோ கேமை தேடி ஓடினர். அப்பா டீவியை ஆன் செய்தார். ஜெகன் ஆபிஸ் வேலைக்காக லேப்டாப்பை உயிர்ப்பித்தான். சுதா செல்போன் சார்ஜ் போட்டபடி பேச ஆரம்பித்தாள்.
ஆளுக்கொருவராக தனியே சென்றவுடன் வீடு வழக்கமான நிலைமைக்கு திரும்பியது.