ஒரு பிரளயம்
கதையாசிரியர்: மாத்தளை பெ.வடிவேலன்
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,546
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு இலைகளுடன் சேர்ந்து ஒர் அரும்பினைக் கொண்டுள்ள தளிரையே “கொழுந்து என்று கிள்ளி எடுப்பார்கள். தேயிலைச் செடியில் ஒரு கொழுந்தினை எடுத்த பின்னர் எஞ்சி செடியோடுள்ள தண்டின்பக்க வாட்டில் பலகிளைகள் வெடித்துத் தோன்றும். மொசுக் கொட்டை கூட்டுப் புழுக்களாக மொய்த்துக் கிளம்பும் இம் முடிச்சுகளிலும் வாதுகளின்: கிளைகளிலும் புதிய புதிய கொழுந்துகள் தழைத்து, தழைத்து முன்னரை விடவும் வேகமாக வளர்ந்து படரும். அடர்ந்து சிலிர்க்கும்.
கிள்ள… கிள்ள… கிளர்ந்து வளரும் தேயிலைச் செடிகள்
தேயிலைச் செடியில் முகிழ்க்கும் கொழுந்தினது கதை மட்டுமல்ல இது! உரமாகிப் புதைந்து போன தோட்டத்து பிரமாக்களினதும் அவர்களது வாரிசுகளினதும் கதையும் இதுதான்!
கொழுந்து தேசமென்ற இந்த சோக ஓவியத்தின் விதானம் மாத்தளை பகுதியேயாகும்.
மாத்தளை பகுதியின் பூர்வீகத் திருநாமம் பன்னகமம் என்பதாகும். மந்தை மேய்க்கும் சமூக தடத்திலிருந்து நிலையாக நீர்நிலைக்கருகில் விவசாயக் குடியாக அமர்ந்தபோது; பழந்தமிழன் தன்நிலம் என்னும் நல்லாளுக்கும்; வாழும் இடத்துக்கும்; அணியாக; மார்பில் சூட்டிய மணியாரம்தான் பன்னகமம், தமிழன் பண்ணை வைத்து வாழ்ந்த இடம் பன்னகமம்.
முன்பு ஏட்டில்: எழுத்தில் பன்னகமம். வாய்ப் பேச்சில் பன்னாமம். இதெல்லாம் தோட்டம் சீரழிஞ்சது போல இப்பெயரும் சீரழிஞ்ச கதையேதான்.
சோரம் போகாத கவிஞன் ஒருவன் தன்பெயரோடு பன்னாமத்தை இணைத்துக் கொண்டு இமயமாய் உயர்ந்து. இலக்கியத்திற்கு அணியாக நின்றான்.
“மாத்தளை” ‘மாத்தளே; மாத்தலை” என்றெல்லாம் இப்படி எத்தனையோ கதைகள்! இராஜ்ய மணிமுடித்தரிக்கப் புறப்பட்டவர்கள் முதல்; புகலிடம் தேடி ஓடோடி வந்தவர்கள்; வாரிசுரிமை கோரிய வல்லமையாளர்கள் வரை.
“ஏன் என்று கேட்க இங்கு நாங்கள் யார்? உழைப்பதற்கும், இறப்பதற்குமே பிறந்தோம் என்று தம் இறுதி மூச்சுவரை உழைத்துத் தியாகிகளான நம் முன்னோர்கள் வரை; சிந்திய இரத்தம், பன்னகம வரலாற்றின் வரிகளை நனைத்துள்ளது.
குருதி தோய்ந்த இந்த செப்பேடு அட்சரங்களின் ஈரம் உலராமல் இருக்க; மலைகளில் உழைக்கும் நம் மக்களின் போராட்டங்கள் ஊற்றுக்கண்களாக விளங்குகின்றன.
தன் உடலெங்கும் தோட்டங்களை போர்த்திக் கொண்டுள்ள மாத்தளை குன்றுகள்; வரம் வேண்டி ஸ்வரமற்று தவமியற்றும் முனிபுங்கவர்களைப் போல; மேக மூட்டத்தினுள் தலை புதைந்திருக்க பச்சை கம்பளமென படர்ந்த தோட்டங்களில் ; புலரிக் கலைத்து பனி முத்துகள் பன்னீர் சொரிகின்றன.
இந்த தோட்டங்களை தம் சிரசிலும் மார்பிலும் குவித்துக் கொண்டுள்ள; குன்றுகளின் பாத சுவடுகளை சுற்றி வந்து அணைத்துச் செல்கின்றது வடக்கே செல்லும் ‘ஏ நயின்’ பிரதான வீதி.
ராஜ பாட்டையென வடக்கு நோக்கிச் செல்லும் இந்த பிரதான வீதியில்; ஒரு கூப்பிடு தூரம் மட்டில் சென்று, எதிர்படும் முதலாவது முச்சந்தியில் கிழக்காக பிரியும் தார்ப்பாதையில் சுமார் ஏழெட்டு கல் தொலைவு பயணித்தால்; ஒரு தோட்டத்து குட்டி ராஜ்யமெனத் திகழும் இரத்தோட்டை நகரை அடையலாம்.
மாத்தளைக்கும் இரத்தோட்டைக்கும் நடுவில் ‘சுதுகங்கை’! என்ற பெயரில் வெள்ளையற்று மங்கலாக ஓடும் ஆறு, தேர்தல் காலத்தில் மலையக தொழிற்சங்க அரசியல் பிம்பங்கள் ஏற்படுத்தும் சந்தர்ப்பவாத கூட்டு போல அவசர அவசரமாக தெளிவின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது.
அவ்வப் போது ஆட்களை விழுங்கி விடும் இதில் பயங்கர சுழிகளுக்கும் குறைவே இல்லை. பயங்கரமான ஆறுதான். ஆற்றுக்கு குறுக்கே; வெள்ளையரின் காலனித்துவ ஆட்சிக்கு சாட்சியாக படுத்துக் கிடக்கும் கரிய இரும்புப் பாலம்.
“தலை விதியே என்று நொந்து போய்க் கிடக்கும் பாலத்தின் மறு கோடியில்: ஏழு முகமாக காட்சி தந்து அருள் பாலித்துக் காக்கும் அன்னை” யாது மாகிய காளியின் ஆலயம்.
காளிம்மன் கனவில் தோன்றி, காட்டிய குறிப்பிற்கமைய, சிவ கெங்கைச் சீமையிலிருந்து பிடிமண்ணை எடுத்து வந்து, பெரியோர் சுதுகங்கைக் கரையில் தோட்டம் போட்ட காலத்தில் அமைத்த ஆலயம் இதுவாகும்.
சுதுகங்கையில் குளித்து மூழ்கி ஈர உடுப்போடு சூடம் கொளுத்தி; ஒரு சதம் காசு வெட்டி காட்டினால் போதும்; காளி குறை கேட்டு அருள்பாலிப்பாள். குரோதம் கொண்டு கொடுமையினையோ, களவினையோ செய்தோரை ஏழு நாட்களுக்குள் காட்டிக் கொடுத்து தண்டனை அளிப்பாள். அன்று முதல் இன்று வரை அசையாத நம்பிக்கை இது!
நகரங்களில் நாட்டரசன் கோட்டையரின் திருப்பணிக்கு சான்றாக கதிர்வேலாயுதன். இங்கு, காளியின் மரலடியில் தென்னம் பாளையில்: பூவின்றி “வீ யாக: காயாக தேங்காயினை பரிணமிக்கும் அபூர்வம். தளரா வளர் தென்னை காணி அம்மனின் காலடியில் வளர்ந்து அற்புதம் விளைவிக்கின்றது.
பூஞ்சிட்டுவின் வண்ணச் சிறகில் தீட்டிய சித்திரம் போல் சிறகடிக்கும் இரத்தோட்டை நகர் குளு குளு சுகமுடையது. ஊட்டி, கொடைக்கானல், சுகவாசம்; இங்கு நித்தியமானது நகரைச் சுற்றிய மலைத் தொடர்களில் அம்மனும், முருகனும் அரிஇராமரும் கோயில் கொண்டு அருளாசி புரிகின்றனர்:
சாதிக்காய் ஏலம், கராம்பு, மிளகு, கறுவா ஆகிய மோகினிகள் இரத்தோட்டை மலைச் சரிவுகளில் பர்ணசாலை அமைத்து; அராபியர், போர்த்துக்கேயர் ஆகியோரை “சுண்டி இழுத்த” பழம் பெருமை முதலாக ஐரோப்பியரின் இனிய மாலைப் பொழுதுக்கு சுகந்த மூட்டும் இலங்கைத் தேயிலையினதும் தாய் மடியாக விளங்குகின்றது.
மன்னர்களது ஆட்சிக் காலத்தில் மலையிடுக்கில் ஒற்றர்கள் இரகசியத்தைப் பரிமாறிக் கொள்ளும் இடமாகிய விளங்கிய இரத்தோட்டை; இன்றளவும் முக்கியம் பெறும்: இருப்பின் இரகசியமும் இதுவேதான்.
வாசனைத் திரவியங்கள் கடைவிரித்து: மணம் வீசி வருக! வருக!! என மலை இடுக்குளில் கட்டும் பனிப் பதாதைகளை, தேயிலைத் தளிர்களைத் தழுவி இதம் இதமாக வீசும் சீதளக்காற்று; அசைந்து; அசைத்து அழைப்பு விடுகின்றது.
வாசனைப் பயிர்க்களும்; நறும் தேயிலையும் இப்படி ஜெமினியின் இரட்டைக் குழந்தைகளாக, சங்கூதிக்களிக்கும் சங்கொலியில் வெண்முகில்கள் மலைகளுக்கிடையில் கண்ணாமூச்சி விளையாடிக் களிக்கின்றன. வெண்முகில்கள் தூளி கட்டி ஆடும் சீரங்கவத்தை தோட்டத்திற்கு கிழக்கே; புசல்லாவை சந்திக்கும்; செட்டி தோட்டத்திற்கும் இடையில் கராம்புத் தைலமென ஒழுகி ஓடும் ஓடைக்குப் பக்கமாக; ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி தன் குடும்பத்தோடு குடியேறினார் இருளான்டி சேர்வை.
ஐம்பத்தி எட்டில் கலேவெலையில் தமிழர் வீடுகள் பலவும் தீயிடப்பட்டன. கோயில் தலைவர் ஏகாம்பரம் தலைமையில் பலரும் அகதிகளாகி உயிர் தப்ப காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஐம்பத்தி எட்டில் நாலந்தையில் நடந்த இனப்படுகொலையில் குற்றுயிரும்: குலை உயிருமாக தப்பிப் பிழைத்த இருளாண்டி சேர்வை எடுத்த முடிவுதான இது. ஊட்டி கொடைக்கானலின் சுகானுபவத்தை காலடியில் கொட்டும். இத் தோட்ட பிரதேசத்தின் சுகானுபவத்தை, பொருளாதார வளத்தையும் பெரிசு படுத்தாமல் பிள்ளை குட்டிகளின் பாதுகாப்பு என்ற அட்சரத்தையே அடிநாதமாகக் கொண்டுதான் பிரதான வீதியில் இருந்து ஒதுக்குப் புறமான இந்த பகுதியில் வந்து குடியேறினார் சேர்வை.
ஐம்பத்தி எட்டில் இந்திய தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசமப் பிரசாரங்கள்; கட்டவிழ்ந்து விடப்பட்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள்; நாலந்த பகுதியில் “கெடிகேயை” அண்டி வாழ்ந்த தமிழ் குடிகளை நிலை கலங்கச் செய்து விட்டன.
ஸ்ரீ கொளப்பம் ஸ்ரீ கொளப்பம் காட்டுத் தீப்போல் பரவும் கலவரம். விவரம் புரியாத தமிழர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காடுகளின் தஞ்ச மடைகின்றனர்.
ஐம்பத்தி எட்டு இனவாதத் தீயில்: இருளாண்டியின் குடும்பம் காய்ந்த சருகாகக் சிக்கிக் கொண்டது.
“கள்ளத் தோணிகள்” என்ற நாமாவளிப் பிரகடனத்துடன்; தமிழ் எழுத்துகளில் தார்பூசல், என்று ஆரம்பித்த இன வன் செயல்கள்; ஹிங்குரன்கொட, தியேசேனபுர மெதிரிகிரிய பகுதிகளில் தமிழர் கொடுமைக்குள்ளாகி; மாத்தளை வைத்திய சாலையிலும் அம்மன் கோயிலிலும் சேர்க்கப்பட்டனர். நாலாந்த நோக்கியும் அதன் தீ நாக்கும் கரங்களும் நீண்டன.
மெதிரிகிரிய பிள்ளையார் சந்தியில்; சொர்க்கம், கைலாசம் என்பன திறக்கப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மணக்கோலம் அழிந்து பிணக் கோலம் பூண்டனர்.
நாலந்த பகுதி தமிழ் வீடுகள் தீக்குளிக்கும் போது; அங்கு மானப்பாங்கப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் அடி, வெட்டுக் காயங்களுடன்; காட்டு வழியே கருங்காலி தோட்டத்து எல்லையை இரவோடிரவாக வந்தடைந்தனர்.
“சிங்களம் மட்டும் திரையரங்குகளில்:” நவீன ‘லங்காதகனம்’ வெற்றிக் கொடி நாடி ஓடிக் கொண்டிருக்க: இதன் உச்சக் கட்டத்தில் மாத்தளை நகரில் தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு கோஷ்டி தார் பூசி களிக்கின்றது.
கச்சேரி ரோட்டில் ‘கள்ளத்தோணி பைலா’
சாராய வாடையில் எக்காளிக்கின்றது.
‘செட்டி வீதி லத்திப் நானா’ எட்டி விட்ட உதை: தார் வாளியையும் கொட்டி, உருட்டி தார் பூச ஏணியில் ஏறியவனை இடுப்பொடியச் செய்த லாவண்யத்தை: நேரில் கண்ட அன்னலிங்கம்சுருட்டுக்கடை கதிரவேல்பிள்ளை முதளாளி வாயாரச் சொல்லி சொல்லி மகிழும் மாண்புமிக்கது.
ஓடப்பராகி நிற்கும் ஏழையப்பர் உதையப்பாராகிவிட்டால்?
“ஐம்பத்தி எட்டாம் ஆண்டில் நாடெங்கிலும் குழப்பம், ஊர்கள் எல்லாம் தீ, ஆனால், மாத்தளையில் பூரண அமைதி. என்று எழுதிய இந்த கைக்கூலி வரலாற்று திரிபு எழுத்தைக் காணாமலேயே கதிரவேல்பிள்ளை கண்னை மூடிவிட்டார்.
மலையகத்தை நேசித்த அந்த மாமனிதனின் இதை படித்திருந்தால் எப்படியெல்லாம் வேதனைப்பட்டிருப்பார்.
காடையர்களின் வெறியாட்டத்தில் கதி கலங்கி; காட்டுப்பாதை வழியே; தோட்டத்து வயத்திற்கு தஞ்சம் புக வந்த நாலந்த வாசிகளை வெள்ளிப்பூன், பதித்த கருங்காலி சிலம்புத் தடி, அம்மன் கோயில் வெட்டரி வாள்கள், கோவா குண்டும் கருமருந்தும் போட்டு இடித்து இடித்து நிரப்பிய “மசிலோடிங்கன்” சகிதம்; பெண்டு பிள்ளைகளை ஒதுக்குப் புறமாக ஒளிய வைத்துவிட்டு “தோட்டத்திற்கு வந்தா ஒரு கை பார்ப்போம் என்று “எட்டு வீடு கட்டி சிலரவரிசை” செய்து சிலம்பமாடி தற்காத்து நிற்கும் தோட்டத்து ஆண்கள், இவர்களை இன்னார் இவரென அடையாளம் தெரிந்து கொள்ளாமல்; எதிர்த்து தாக்குதல் செய்ய தயாரான போது பசித்து பால் கேட்டு அழும் குழந்தைகளின் வாயில் ஈரத்துணியை வைத்து அடைத்தும்; காட்டு வழியில் முட்கள், துகிலுரிந்து ஏற்படுத்திய ரணங்களுடன்; அரவமின்றி அகதிகள் அடிமேல் அடிவைத்து முன்னேற…
சாவதற்கும் துணிந்து சக்கர வியூகம் வகுத்து லயத்து கோடியில் அணிவகுத்து நிறபவர்களின் நிசப்தத்தை கலைக்கும் வகையில்; சருகுகள் சலசலக்கின்றன…
லயத்தை தாக்க ஒரு கும்பல் வருகின்றதா..? ஒரு பாவமுமறியாத எம்மை ஏன் இப்படி கொல்ல வருகின்றார்கள்?
தாமதித்தால்…
ஒரு கணம் தான் கோவா குண்டுகளும் கரு மருந்தும் போட்டு நிரப்பிய துப்பாக்கி அக்கினியைக் கக்கிக் கொண்டு விசைக் குதிரையை ஏற்றி டக்…க்….. இனி தட்டி விட வேண்டியதுதான் பாக்கி விரலை நிமிர்த்த….. “தொப்புலான் சுட்டுறாத சுட்டுப்புடாத நான் இருளாண்டி வேலு ஐயாமத்த குடும்பங்களோட தப்பி பிழைச்சு வாறோம். நாங்க… நாங்க நாலந்த ஆளுக” கரிய இருளில் இருளாண்டி சேர்வையின் குரல் கண்டசாலாவின் குரலாக கரகரத்து இறைஞ்சி ஒலிக்கின்றது.
நல்ல நேரம் அகஸ் மாத்தாக எதுவுமே நடக்கவில்லை. இப்போது நினைத்தாலும் இரளாண்டி சேர்வைக்கு இரத்தம் உறைந்து போகின்றது.
மூன்று நாட்களின் பின்னர் அகதிகளை மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலுக்கு லொறிகளில் ஏற்றினார்கள்.
இந்த “ஸ்ரீ கொளபத்துக்கு பின்னர் தோட்ட பகுதிகள்தான் பாதுகாப்பனது என்ற முடிவோடு நாலந்தையை மறந்து; இரத்தோட்டை, புசல்லா பகுதியில் காணி வாங்கி; வீடுகட்டி; குடியேறிய; இருளாண்டி “சேர்வைக் கதையின்” முகவுரை இது.
ஐம்பத்தி எட்டில் ஆரம்பமான லங்கா தகன அரங்கில் மேடையேறிய மற்றுமொரு துன்பியல் நாடகம் தான் இந்தியத் தமிழர் தாயகம் திரும்ப வழிவகுத்த தாஷ்கண்ட் ஒப்பந்தம்.
சம்பந்தப்பட்டவர்களின் சம்மதமின்றி இருபக்ககாய் விபரமோ, தகவலோ, தெரிவிக்கப்படாமல் : சகுனியின் தாயம் உருட்டலாக இருபக்க காய் நகர்த்தலில் நடந்தேறிய ‘தாஷ் கண்ட் ஒப்பந்தம்’ மன்னாரில் கால்நடைகளை விரட்டி ஏற்றுவது போல் தொழிலாளர்களை கப்பலேற்றியது.
தோட்டங்கள் சிறுகறுத்த ஜடாயுவாக சிறுத்தன, சிறுபான்ம இனம் மேலும் சிறுபான்மையாக சிதறியது.
சிதறிய மக்களை ‘காணிச் சீர்திருத்தம் என்ற துச்சாதனன்’ வேறு துரத்தி துரத்தி துகிலுரிந்தான். இது எழுபத்தி நான்குகளில் இருளாண்டி சேர்வையின் இடுப்புக் கோவணத்தையும் உரிந்தது போல அவருடைய காணித்துண்டும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டது. பக்கத்திலுள்ள தோட்டங்களும் சுவீகரிக்கப்பட்டு; இரவோடிரவாக தோட்டத்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டனர். முடிவில்லாத கதையின் சோக பாத்திரங்களாக தோட்டத்து மக்கள் ஆகினர். இனியும் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இருளாண்டி சேர்வையும் அவரோடு சேர்ந்த பல குடும்பங்களும் வடக்கு நோக்கி புறப்பட்டனர்.
ஒரு கொழுந்தினை கிள்ளி எடுத்து விட்டால், அதில் இன்னுமொரு கொழுந்து தழைக்கத்தானே செய்கின்றது.!
“இந்த மானங் கெட்ட பொளப்பு இனியும் வேண்டாம். வாழ்ந்தால் தன்மானத்துடன் வாழணும்” நாலந்த தீயினால் சுட்ட புண்ணின் வடு மீண்டும் ஆறாத புரையோடிய புண்ணாக மாறாதிருக்க; பயணம் தொடர்ந்தது.
நம்ம காலத்திற்கு பிறகாவது நம்ம புள்ள குட்டிகளாவது நிம்மதியா வாழணு – சேர்வையின் மனம், திட சங்கற்பம் பூண்டது.
இந்த சபதத்துடன் முல்லைத்தீவில் கள்ளப்பாடு கிராமத்தில் குடியேறினார் இருளாண்டி சேர்வை. வந்தாரை வாழவைக்கும் வன்னி வளநாடு இன உணர்வோடு அரவணைத்து ஏற்றுக் கொண்டது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றது. சேர்வையின் குடும்பம் பனங்கூடலாக வளர்ச்சி கண்டு மகன்மார், மருமக்கள், பேரன், பேத்தியென இப்போது வியாபித்து, விருட்சித்து நிற்கின்றது.
இருளாண்டி சேர்வையின் மனத்தழும்பு மெல்ல மறைந்து வரும் போது; எவருமே எதிர்பாராத வகையில் எண்பத்தி மூன்று இனக்கலவரம் வெடித்து; இதுவரை வரலாறு காணாத வகையில் தமிழர் மானபங்கப்படுத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும்: உயிரோடு எரித்தும்; வெட்டியும்; குத்தியும் அழிக்கப்பட்டனர்.
உடைமைகள் எரியூட்டப்பட்டன. கோயில்களும் தெய்வங்களும் கூட தீயிட்டு கொளுத்தப்பட்டன. இலட்சோப, இலட்ச தமிழ் மக்கள் அகதிகளாக அல்லல் பட்டு: வட கிழக்கு; வன்னி உட்பட; கடல் கடந்து சர்வதேசமெங்கும் தஞ்சம் புகுந்தனர். “இங்கிது பொறுப்பதற்கில்லை. எரிதழல் கொண்டு வா”- என்று அட்டூழியங்களை அடக்க, இளம் இரத்தங்கள் பூவுடன் பிஞ்சுடன் புறப்பட்டன. அணி புதிய புறநானூறு படைத்து நின்றது. ஓட; ஒளிய இடமில்லை. இருளாண்டி சேர்வையின் பேரன் படிப்பை முடிக்கவில்லை. அந்த பிஞ்சு கதையைக் கேட்ட சேர்வை சோகம் கொள்ளவில்லை. தன் பரம்பரைப் பெருமையை நினைத்து நினைத்து பூரித்து போனார்.
குருஷேத்திர போர்க்களமாக; படுகளத் திருவிழாவாக காலவரையின்றி தொடர்ந்து. அவலங்களாகவே விடியும் காலைப் பொழுதுகள்…
டிசம்பர் மாத இறுதித் தினங்கள்…. பாலன் யேசு பிறந்த நத்தார் தினக் கொண்டாட்டங்களை நாளெல்லாம் கொண்டாடி மகிழ்ந்து பொழுது மறைய…. நாளை நல்ல விடியலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் காலை வேளை… வழமை போல் கதிரவனும் எழுந்து வர; கணப் பொழுதில் நிகழ்ந்த மாயம்தான் என்னே…. புரியாத பொழுது காலம் காலமாக காப்பாற்றி வந்த கடல், நொடிப் பொழுதில் சீற்றம் கொண்டு அல்லலுற்று ஆற்றாது அகதிகளாக வாடிச் சோர்ந்த மக்களை அலைகளை வீசி தகர்த்தது!
அழிப் பேரலையின் அலைகள் ஊர் மனைகளில் புகுந்து உயிர்களை காவு கொண்டது! நூற்றாண்டு பழைமைமிக்க நுட்ப மிகு கட்டிடங்கள் நொடிப் பொழுதில் சரிய…. இராட்சத அலைகள் மக்களை ஓட ஓட துரத்தி; உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது.
கள்ளப்பாடு கிராமத்தின் பெரும்பாலானோர் பக்கத்திலுள்ள மாதா கோவிலுக்கு காலை பூஜைக்காக சென்றிருந்தனர்.
இருளாண்டி சேர்வை இதற்கு முந்திய வாரம் தனது இளைய மகளுடைய வீட்டிற்கு விருந்தாளியாக மன்னார் போனார். இன்னமும் திரும்பி வீடு வரவில்லை. அவர் மனைவி ஆவத்தா அம்மாவும்: கடைசி மகள் லெட்சுமியுமே வீட்டில் இருந்தனர். லெட்சுமியின் கணவன் சுப்பரமணியம் கடற்றொழிலுக்குப் போய் இன்னமும் திரும்பவில்லை. அடுப்பை மூட்டி, காலை தேநீருக்காக தண்ணீரை சுடவைத்துக் கொண்டிருந்தாள் லெட்சுமி. வெளியே ஒரே அல்லோல கல்லோலம்.
கடல் நீர் காலனாக விரைந்து வந்து கொண்டிருந்தது. வீடுகளை விட்டு மரண ஓலத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் கிராமத்தவர்கள். “அம்மா கடல் நீர் ஊர் மனைக்குள் வந்திரிச்சி…. வாங்க வாங்க ஓடிடுவோம்.” ஆவத்தா அம்மாவை இழுத்துக் கொண்டு மகள் ஒட எங்குமே அபயக் குரல்கள். புரியவில்லை புது அனுபவம்
பேயலைகள் பிணவேட்டை ஆடி துரத்திக் கொண்டு வருகின்றன. உயிர் தப்பிப் பிழைக்க ஓடிக் கொண்டிருக்கும் தாயினதும், சேயினதும் இடுப்பளவு நீர். மறுகணம் மார்பளவு. சுழன்று, சுருட்டி சுருட்டி நீர்மட்டம் உயர…. மூச்செடுக்க முடியவில்லை. தாயும் மகளும் பனை வடலிலை அணைத்துப் பிடித்து கட்டிக் கொண்டு ஜீவ மரணப் போராட்டம் நிகழ்த்துகையில் நாசிவரை தண்ணீர் ஏறுகின்றது.
“அலை சீறி; சீறி அலைக் கழித்து அடித்து; காவிச் செல்ல துருவித் துருவி இழுக்கின்றது. அலைக்கரத்தின் அரக்கப் பிடியில் சிக்கி…. தவித்து…”
“லட்சுமி என்னால் முடியல, கையைவிடப் போறேன்” தாயின் ஈனக்குரல் அவலமாக கேட்கின்றது.
“அம்மா பிடிகை விட்டுறாதீங்க நீங்க விட்டா நானும் விட்டுறுவேன். தண்ணி வடியுது கெட்டியா பிடிச்சிக்கங்க….”
உயிருக்கான போராட்டம் நம்பிக்கையோடு தொடர்கின்றது. நான் கை விட்டுட்டா மகளும் விட்டிடுவா அவ வாழ வேண்டியவ. மூச்சடைத்து, தலை, சுழன்று, நெஞ்சு வலித்த போதும் ஆவத்தா அம்மாவின் மரத்துப்போன கைகள் பிடியை விடவில்லை.
வடலிலை பிணைத்தது கையா? பாசமென்னும் சங்கிலித்தொடரா….?
“மக நான் புடியை விட மாட்டேன்”
நீர்ச்சுழியில் தவழும் குரல்.
“அம்மா விடாதீங்க. நீர்க்குமிழை ஊடறுக்கும் மொழி”
பிடியைவிடாத “ஈனஸ்வரத்தில் குரல் வளை விரிந்து சுருங்கின்றது.
சில மணி நேர வெறியாட்டத்தின் பின்னர் பேரலை பின்வாங்கி ஓடி விட…!
விடியற் பொழுதில் கள்ளப்பாடு, கடற்பரப்பில் கலங்கள் வந்து பொருட்களை குவிக்கும் வேளையில்; பிண மலை குவிந்துள்ளது.
எங்கும் அவலக் குரல்கள்…
ஆழிப் பேரலை, பேயலையாக பிணம்குவித்த அவலம்…
கடல் காவு கொண்ட ஊரில் எஞ்சித் தப்பியோர் உடன்பிறப்புகளையும் சொந்தங்களையும் ஊராரையும் இழந்து கதறி கதறி அழும் கண்ணீர்க் கதை. தேற்றுவாரின்றி தேம்பி அழுவோர் அஞ்சி நின்று திகைக்க ;
கள்ளப்பாடு முதலான ஊர்களை காவு கொண்ட கடல் பின்வாங்கி ஓடிவிட்டது. அங்காங்கே தப்பிப் பிழைத்தவர்கள் செய்வதறியாது வீழ்ந்து கிடக்க…
மகள் இலட்சுமிக்காக தாய் ஆவத்தா அம்மாளும் : தாயிற்காக மகள் இலட்சுமியும்: ஓட; ஒட; பல காத தூரம் மணல் வெளியில் துரத்தி; துரத்தி; சீறிப் பாய்ந்த இராட்சத அலையுடன் போராடி இறுதி வரை வடலியை பிடித்த கைகளை விட்டு விடாமல்; நம்பிக்கையோடு மணவில் சாய்ந்து கிடக்கின்றனர்.
– தினக்குரல், 25-09-2005.
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |
